Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2008

தேசபக்தியும் தெய்வபக்தியும்
ஆனாரூனா

மலைகளில், மரங்களில், கழிப்பறைச் சுவர்களில், மற்றும் பல பொது இடங்களில் தங்கள் பெயரை எழுதி `அழகு' பார்ப்பதில் சிலருக்கு ஆனந்தம் ஏற்படுவதுண்டு. இது ஒரு விதமான ஆற்றாமைக் குரூரம். தங்கள் இருத்தலை நாலு பேருக்கு அறிவிக்கும் மலிவான முயற்சி இது.

kushpoo தனக்கோ, தன் குடும்பத்துக்கோ, ஒரு தெருவுக்கோ, ஊருக்கோ பயன்படும் விதத்தில் ஏதாவது செய்யலாம் என்றால், என்ன செய்வது? நல்லவனாகவோ, வல்லவனாகவோ, சாதனையாளனாகவோ பெயரெடுப்பது என்பது எளிதல்லவே!

ஆனாலும் தன் பெயர் வெளிப்படவேண்டும் என்றால் என்ன செய்யலாம். பயனற்ற மனிதர்களின் புகலற்ற ஆசை கழிப்பறைக் சுவர்களில் கரிக்கோடு கிழிப்பதில் முடிகிறது. இம்மாதிரியான முயற்சி பாமரத்தனமானது என்று எண்ணும் படித்த சோம்பேறிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு வேறு சில முயற்சிகளில் இறங்குகிறார்கள். அவற்றில் ஒன்று - `பொது நல வழக்குத் தொடுத்தல்!'

‘பொது நல வழக்கு’ தொடுக்கிறவர்கள் பெரும்பாலும் சனாதனிகளாகவும், பழமை விரும்பிகளாகவும், சமூக முன்னேற்றத்தில் அக்கறையற்றவர் களாகவும், சுயதம்பட்டப் பேர்வழிகளாகவுமே இருக்கிறார்கள்.

கூட்டு முயற்சியும், கட்டுக்கோப்பான இயக்கமாகச் செயல்படும் பண்பும்தான், பொதுநல வாதியின் அடையாளமாக இருக்க முடியும்.
ஆனால், தன்னில் முளைத்து, தன்னில் திளைத்து, தன்னில் மயங்கி, தன்னில் உறைந்தோர்க்கு `தான்' எனும் கர்மம் மாத்திரமே மிஞ்சுகிறது.
தனது ஆசையை, தனது வழியில் தீர்த்துக் கொள் வதற்கு அவருக்குள்ள தனி முயற்சி என்பது `பொது நல வழக்கு' தொடுப்பது தான்.

தான் தேர்ந்தெடுக்கும் பொது நல வழக்கு என்பது உண்மையில் சிரிப்பதற்குக் கூட வாய்ப்பில்லாத மலிவான உத்தி என்பது அவருக்குப் புரிவதில்லை. ஒரு திரைப்படத் தொடக்க விழாவில் கடவுள் உருவங்களுக்கு அருகில் நடிகை குஷ்பு கால்களில் செருப்பணிந்து அமர்ந்திருந்த காட்சியை ஒரு பத்திரிகையில் படமாகப் பார்த்தாராம் ஒருவர். உடனே பொதுநல வழக்கு - குஷ்பு மீது தொடுத்துவிட்டார்.

வழக்கில் தொடர்புடைய திரைப்படத் தொடக்க விழாவில் குஷ்புவுடன் அமர்ந்திருந்த எல்லா நடிகைகளும், விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் கால்களில் செருப்புடன்தான் அமர்ந்திருக்கிறார்கள். இந்தக் காட்சியும் பத்திரிகைகளில் படமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
படவிழாவில் செருப்புடன் அமர்ந்திருந்தவர்களில் குஷ்புமாத்திரம் குற்றவாளியாகத் தெரிவதும், அது விசாரணைக்கு உரியதுதான் என்று ஏற்கப்படுவதும் ஏன்?

குஷ்புவை ஒரு இஸ்லாமியப் பெண்ணாகப் பார்க்கிறார் இந்த ‘வாதி'. இந்துமதக் கடவுள் வழக்கு அருகில் இந்து நடிகைகள், செருப்புடன் அமர்ந்திருக்கலாம். ஒரு இஸ்லாமியப் பெண் எப் படி அமர்ந்திருக்கலாம்? இதுதான் இந்த `விதி'யின் வாதம். நாம் இதை ஒரு வழக்காகப் பார்க்காமல் அறிவு பூர்வமாகப் பார்ப்போம்.

சம்பந்தப்பட்ட திரைப்படத் தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த கடவுள் உருவங்கள் மாத்திரமல்ல, கோயில்களில், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் சாமி படங்கள் சிலைகள் என வழிபடப்படும் அத்தனை உருவங்களும் உண்மையில் கடவுள்கள் தாமா? எங்காவது, யாராவாவது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? கடவுளால் ஏற்படும் பயன்பாடு என்ன? சிந்திக்க முடியாதவரின், அல்லது விரும்பாதவரின் `நம் பிக்கை'யைத் தவிர கடவுள் பிரச்னையில் தடயம் ஏதாவது உண்டா?

தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் நம்பிக்கை குறையும்போது ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை வந்து விடுகிறது. ஏமாற்றமடைந்த பலவீனமான ஓர் இதயம் இருப்பதை நம்புவதை விட, இல்லாததை நம்புவதில் ஆறுதல் கொள்கிறது. அனைவருமே கைவிட்டு விட்டாலும் ஆண்டவன் கைவிடமாட்டான் என்று ஒருவர் நம்புகிறார் என்றால், அது ஆண்டவன் இருக்கிறான் என்பதற்கு அடையாளமல்ல.

மாறாக அந்த மனி தனுக்கு வாழ்க்கை மீது இன்னும் ஆசையிருக்கிறது. நாளையப் பொழுது நல்லவிதமாய் விடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்பது மட்டுமே மெய். ஆனால் அந்த நம்பிக்கை நனவாவது எப்படி? வசப்படுவது எப்படி? நிதர்சனமாவது எப்படி? அவரால் சிந்திக்க முடிவதில்லை. யாராவது வந்து தன்னை ரட்சிக்க வேண்டும் என்கிற அடிமை மனோபாவத்தைத் தவிர அவரிடம் எதுவும் இல்லை.

கடைசியில் கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரின் சொந்த விருப்பம், ஆர்வம், என்றாகிவிடுகிறது. ஒருவரின் சொந்த விருப்பம் அவரது சொந்த அகத்திலும், அறையிலும் அனுமதிக்கப்படலாம். அது வீதிக்கு வரலாமா? தனது சொந்த விருப்பத்தை, நம்பிக்கையை ஒரு சமூகத்தின் மீது திணிக்கலாமா? கடவுள் இருக்கிறார் என்று நம்புவது ஒருவரின் தனியுரிமையாக இருக்கலாம். அதுமாதிரியே, கடவுள் இல்லை என்று நம்புவதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டா, இல்லையா?

கடவுளைத் துதிப்பதற்கு உள்ள உரிமை, நிந்திப்பதற்கும் உண்டு. கடவுள் உண்டு என்று பிரச்சாரம் செய்வதற்கு உரிமை உண்டு என்றால், கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. ஆனால், மூடத்தனமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகவுமைப்பில், மடையர்களுக்கு உள்ள உரிமை சிந்தனையாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. இது தான் வெகு காலமாய் நடக்கிறது.

பொது உரிமையை விடத் தனியுரிமையும், பொது நலத்தைவிட, தனிமனித நலமே இங்கே அதிகாரம் செலுத்துகிறது. இறுதிப் பரிசீலனையில், தனியுரிமை, தனி மனித நலம், என்பனவெல்லாம் தனிச் சொத்துரிமையின் பலத்தில் நிற்கின்றன. தனிச் சொத்துரிமை தரும் தனிச் சலுகைதான், - பொதுநல வழக்கு.

பொது நல வழக்கு என்கிற பெயரில் இந்த சமூகத்தின் தனிச் சொத்துரிமை பாதுகாக்கப்படுகிறது. அதனால்தான் கால விரயம் செய்யப்படுகிறது என்று தெரிந்தும் இம்மாதிரியான வழக்குகள் நீதிமன்றங்களில் ஏற்கப்படுகின்றன.

நடைமுறையிலுள்ள சமூக அமைப்பினால் நன்மை அடைகிறவர்களுக்கு கடவுள் நம்பிக்கை பாதுகாப்பளிக்கிறது. எந்த அளவுக்கு கடவுள் நம்பிக்கையுள்ள மடையர்கள் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு தனிச் சொத்துரிமைக்கு வலிமை ஏற்படுகிறது. தனிச் சொத்துரிமைக்குத் தலைவணங்குவதே இங்கே தேசபக்தி என்று வலியுறுத்தப்படுகிறது.

எந்த அளவுக்கு ஒருவர் சொத்து வைத்திருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் தேசபக்தராக இருப்பார். எந்த அளவுக்கு ஒருவர் தேசபக்தராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் தெய்வ பக்தி உள்ளவராகவும் இருப்பார். `தேசபக்தி'க்கும் `தெய்வ பக்தி'க்கும் பின்னால் `சொத்து பக்தி'தான் `விஸ்வ ரூபம்' கொண்டு நிற்கிறது.

தேசபக்தியும் தெய்வ பக்தியும் ஒருவரின் சொத்தைப் பாதுகாக்கிறது. ஆனால், தலையில் முளைத்த முடியைத் தவிர ஏதும் இல்லாதோர்கு. தேசபக்தி இருக்க முடியுமா? தெய்வ பக்தி இருக்க முடியுமா? சொத்து இல்லாதவன் தேசபக்தியுள்ளவனாகவும், தெய்வ பக்தியுள்ளவனாகவும் இருக்கிறான் என்றால், அவன் சந்தேகத்துக்குரியவனே! சான்றோர்கள் தேசபக்தியை வலியுறுத்துவது இந்த போலிதேசபக்தர்களை ஒழிப்பதற்காகத் தான்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com