Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2007

வட்டமிடும் கழுகுகள்

இளவேனில்

கலைஞர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ‘எதைக் கொண்டு’ இந்த ஆட்சியை அசிங்கப்படுத்தலாம்; அப்புறப்படுத்தலாம். என்று ஆதிக்க சக்திகள் தீவிர சிந்தனையிலும் செயலிலும் இறங்குவதுண்டு.

‘அவசர நிலை’ அறிவிக்கப்பட்டிருந்தும் கூட, ஜனநாயகத்துக்கு ஆதரவாளர் களையெல்லாம் சென்னைக்கு வரவழைத்துப் பேச வைத்தார் என்கிற கோபத்தில் முதலில் ஆட்சி கலைக்கப்பட்டது. தம்மை ஒரு திரையாகப் பயன்படுத்தி ஆதிக்க சக்திகள் நடத்திய திரைமறைவு வேலைகளைப் புரிந்து கொண்ட இந்திரா அம்மையார் ‘அவசர நிலை’க் காலத்தில் நடந்த அத்துமீறல்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஆளுநர் பரிந்துரையோ, சட்ட விதிமுறைகளோ தேவையில்லை. ‘அதர்வைஸ்’ - அதாவது எனக்குப் பிடிக்க வில்லை. என்று தனது சொந்த விருப்பத்தை, அதி காரத்தைப் பயன்படுத்தி மறு முறை ஆட்சியைக் கலைத்தார் யோக்கியர் வெங்கட ராமன். அதை நியாயப்படுத்துவதற்காகத் தேடிப்பிடித்து வெகு நாட்களுக்குப் பின் சொல்லப்பட்ட காரணம், ‘ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் கலைஞரைச் சந்தித்தார்’ என்பதுதான்.

‘அகதி’ யாகத் தமிழகம் வந்த கவிஞர் காசி ஆனந்தன் தனது மகளின் படிப்புக்கு உதவ முடியுமா? என்று கேட்கவே கலைஞரைச் சந்தித்தார்.

ஆனால், காசி ஆனந்தன் கலைஞரைச் சந்தித்ததால் அவர் மூலம் இந்தியாவின் ரகசியங்களெல்லாம் இலங்கைக்குக் கடத்தப்பட்டிருக்கும் என்று ஆதிக்க சக்திகளின் மூளைகளெல்லாம் பொய்விரித்தன.

இப்போது அதே காசி ஆனந்தனின் கவிதைகளை, பேட்டிகளை, காதல் விவ காரங்களை, அவருடைய மகள் திருமண நிகழ்ச்சியை ஆதிக்க சக்திகளின் ஏடுகள் ஆரவாரத்துடன் வெளியிடுகின்றனவே, இம்முறை ஈழத்து ரகசியங்களையெல்லாம் இவர்களுக்குக் கடத்திக் கொண்டுவந்து தந்தாரா? இந்த ஏடுகளின் நாடகம் நமக்குப் புரியாததல்ல.

எத்தனை முறை கவிழ்த்தாலும் மீண்டும் மீண்டும் இந்தச் ‘சூத்திரன்’ வெற்றி பெறுகிறானே... விடலாமா? இம்முறை எத்தனையோ, புனைவுகள்! ஐந்தாவது முறையாகக் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார் என்று தெரிந்த நாள் முதலே புதிய புதிய பொய்கள் போர் தொடுக்கும் வியூகங்கள் அதன் தொடர்ச்சியாகத் தான் நீதிபதிகளை ஆர்க் காடு வீராசாமி விமர்சித்தார்; கலைஞர் அதை வர வேற்கிறார். இந்த ஒரு கார ணத்தை வைத்தே சூத்திரன் ஆட்சியை ஒழித்து விடலாம் என்று அதிக்க சக்திகளின் மூளைகளெல்லாம் கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கின்றன.

நீதிபதிகளைக் கஞ்சா வழக்கில் சிக்கவைக்கலாம்; காரைவிட்டு மோதவிடலாம், எங்களுடன் மோதினால் தீர்ப்புரைப் போருக்கும் இதுதான் கதி என்று. எச்சரிப்பதுபோல் கல்லூரி மாணவிகளைப் பேருந்திலேயே பூட்டி வைத்து உயிருடன் எரிக்கலாம், காவல் துறையைப் பயன்படுத்தி நீதிபதி மீது வழக்கு போட் டுக் கைது. செய்ய முடியுமா என்று ஆலோசிக்கலாம்... இவ்வாறு எத்தனையோ ஜனநாயக முறையிலான, சட்டபூர்வமான சாத்வீக மான, ஆரோக்கியமான வழிமுறைகள் இருக்கும் போது நீதித் துறையின் மீது அதிருப்தி தெரிவித்து ஆர்க்காடு. வீராசாமி பேசலாமா?

கருத்துச் சுதந்திரமா?

அதைப் பயன்படுத்த சூத்திரர்களுக்கு அருகதை உண்டா?

அவாள் ஏடுகள் எல்லாம் துள்ளிக் குதிக்கின்றன.

ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அதிகாரம் பெரிதா?

ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டத்தின் ஆட்சி தான் என்பதைப் புரிந்து கொண்டு சட்டங்களையும் நீதிமுறைகளையும் காப்பாற்றும் பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ள நீதிமன்றங்களின் உரிமைகள் பெரிதா? வெகுகாலமாகவே இப்படியொரு அதிகாரப் போட்டி அமைதியாகவும் உறுத்தல்களுடனும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தியா பல தேசிய இனங்களையும் பண்பாட்டு முறைகளையும், கொண்ட நாடு என்பதால் ‘ஆயுதங்களே வலிமை வாய்ந்ததவை என்பதை அறியாத அற்பர் கள். நாங்கள் நினைத்தால்...’’ என்கிற அதிகார ஆசை பாதுகாப்புத் துறைகளுள்- ராணுவத்துக்குள்- வலிமை பெறாமல் போய்விட்டது.

யோசித்துப் பார்த்தால்,
1. முடிவெடுக்கும் அதிகாரம்
2. அதனை மக்கள் நம்பும் விதத்தில் நடைமுறைப்படுத்தும் சாதுரியம்
3. சாதுரியம் சாத்தியமாகாத போது மூர்க்கமான முறையில் அடக்கும் ஆயுத பலம்.
இந்த மூன்றும் சேர்ந்த பலாத்கார நிறுவனம்தான் அரசு என்பது.

பல நூற்றாண்டுகளாக இந்த மூன்று ‘அணிகலன்’ களோடும் ‘முடியரசு’ அரியணையில் இருந்தது. வாரிசுரிமை, தெய்வீக உரிமை என்கிற பெயரில் அரசனே எல்லாமுகமாக இருந்தான்.

காலம் மாறியது. வாளின் இடத்தை செல்வம் பற்றியது. பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை முதலாளித்துவம் மெய்ப்பித்தது.

இப்போது மூலதனத்துக்கு முன் எல்லாத் திறமை களும் பணிப்பெண்களே! மார்க்சின் சொற்களில் சொல்வதனால் - ‘‘எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ; அங்கெல்லாம் அது மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. இது காறும் போற்றிப் பாராட்டப்பட்டு பணிவுக்கும் பக்திக்கும் உரியதாய்க் கருதப் பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது.

மருத்துவரையும், வழிக்கறிஞரையும், சமய குருவையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர் ஆக்கிவிடாது.’’

ஒரு கோடீஸ்வரன், இங்கே நான்தான் ராஜா என்று முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உண்மையில் அவனே ‘குடி யரசின்’ வேந்தன். நாடாளு மன்ற ஜனநாயகம், சட்டத் தின் ஆட்சி, சட்டம் ஒழுங்கு, ஆன்மீகம், அரசியல் எல்லாமே மூலதனத்துக்கு முன் கூலி அடிமைகளே!

சரியாகச் சொல்வதனால் இங்கே உண்மையான ஜனநாய கம் இருக்க முடியாது. சுதந்திரமான நீதித்துறை இருக்க முடியாது. கட்டுப் பாடுள்ள ராணுவம் கூட இருக்க முடியாது.

இது ஒரு பொது விதி என்றாலும், இந்திய சமூகக் கட்டமைப்பில் முதலாளித்துவ உள்ளடம்கூட இதர நாடுகளிலிருந்து தனித் தன்மை பெற்றிருக்கிறது.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறராகவே இருந்தாலும் இந்திய வரலாறு என்பது கூடுதல் பரிமாணமாகத் திராவிட ஆரியப் போராட்டங்களின் தொகுப்பாகவே இருக்கிறது.

சுதந்திர(!) இந்தியாவின் அரசியல் சாசனத்தை விடவும் மனுதர்மமே இன்றும் இங்கே மதிப்பு வாய்ந்ததாய், செல்வாக்கு மிகுந்ததால், ஆதிக்கம் செலுத்துவதாய் இருக்கிறது.

இங்கே தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவராக முதல் குடிமகன் என்கிற இடத்தில் அமரமுடியும். ஆனால் அவர் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ஆரிய சனாதன சாத்திரங்களுக்குக் கட்டுப்பட்டவரே! காசிப் பல்கலை நிறுவனர் சிலையை ஜெகஜீவன்ராம் திறந்தால் சனாதன தர்மமே தீட்டாகிவிட்டதாய்த் துடித்த பிறபோக்குவாதிகள் அவர் சிலையைக் கழுவி வேதமந்திரங்களால் புனிதப் படுத்தினார்கள். காந்தி சிலை ‘புனிதமான’ அன்று முதல் குடிமகனின் மானமும் தகுதியும் இழிவு செய்யப்பட்டதே! மனுதர்மத்துக்குமுன் அரசியல் சாசனம் தலை குனிந்து நின்றதே!

எனக்குச் சமமாக அதே விமானத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் பயணப் செய்வதா என்று ஓர் ஆரியப் பெண்மணி சினந்த பொழுது அந்த மத்திய அமைச்சர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார்.

தீண்டாமைச் சட்டம், மத்திய அமைச்சருக்கான, பாதுகாப்பு எல்லாம் இருந்தும் எப்படி இந்தக் கொடுமை நடந்தது? வானத்தில் பறக்க வாய்ப்பளித்தாலும் சூத்திரனும் பஞ்சமனும் பணிந்து நிற்கவேண்டியவர்களே என்பதை மறந்துவிடக் கூடாது என்று மனுதர்மம் ஆணையிடுகிறது. அரசியல் சாசனம் பகிரங்கமாகமான பங்கம் செய்யப்படுகிறது.

நந்தன் காலத்திலிருந்து இன்று வரை சிதம்பரம் கோயிலுக்குள் உழைக்கும் மக்கள் நுழைய முடியவில்லை. தமிழன் கட்டிய கோயிலில் தமிழில் ஆராதனை செய்ய முடியவில்லை. கிளர்ந்தெழும் மானமுள்ளோர் தாக்கப்படுகிறார்கள். அரசியல் சாசனத்தின் உறுதி மொழிகள் எல்லாம் மாய மாய் மறைந்து விடுகின்றன. ஏன்? ஏனென்றால் மனுதர் மத்தைப் பகைத்துக் கொள்ளும் அளவிற்கு அரசியல் சாசனம் ஒன்றும் பாமரத்தனமானது அல்ல.

இந்த நாட்டில் எரியும் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதன் பின்னணியில் மனுதர்மத்துக்கும் மனித தர்மத்துக்குமான போராட்டமே மறைந்திருக்கும்.

மூன்று சதவிகிதமே உள்ள ஒரு பிரிவினர் முழு தேசத்தையே முடக்கிவைக்க முடியுமா? என்று கேட்கலாம். எவ்வளவுதான் அறிவும் ஆற்றலும் உள்ள இனமாக இருந்தாலும் அது பண்பாடுள்ள இனமாக இருந்தால் எதிரிகள் அதை எளிதில் வெற்றி கொண்டுவிடுவார்கள் என்பதுதான் வரலாறு.

வரலாற்றாசிரியரும் தத்துவ மேதையுமான ராகுல சாங்கிருத்தியாயன் எழுதுகிறார்.

‘‘முரடர்களும் சண்டைப் பிரியர்களுமான ஜெர்மானியர்கள், நாகரிகமும் பண்பாடும் மிகுந்த ரோமானியர்களையும் கி.பி. நாலாம் நூற்றாண்டில் அழித்து விட்டார்கள். அதைப் போலவே ஆரியர்களும் சிந்து நதி தீரத்தில் வாழ்ந்திருந்த மக்களைத் தோற்கடித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்தினர்.’’

இதோ நேரு எழுதிய ‘உலக சரித்திரம்’ நம் கண் முன்னே விரிகிறது.

‘‘ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அது ஏற்கனவே நாகரிகம் வாய்ந்த நாடாக இருந்தது. மொகஞ்ஜோதாரோவில் நமக்குக் கிடைத்திருக்கும் சான்றுகளிலிருந்து ஆரியர்களின் வருகைக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இந்தியாவின் வட மேற்குப் பாகத்தில் திராவிடர்களின் நாகரிகம் மிகவும் சிறப்புற்றிருந்தது என்று தெளிவாகத் தெரிகிறது. ஆரியர்கள் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல் ஆசியாவின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டுப் பரவினார்கள்.

‘‘இந்திய ஆரியர்களையும் கிரேக்க ஆரியர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் ஒருவித ஜனநாயகம் இருந்தது.

ஆனால் இந்த ஜனநாயக உரிமைகள் ஆரியர்களுக்கு மட்டுமே என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவர்களின் (ஆரியர்களின்) கீழ் அடிமைகளாக இருந்தவர்களுக்கும் அவர் களால் தாழ்ந்த சாதிகள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் ஜனநாயகமோ, சுதந்திரமோ கிடையாது.

‘‘தாங்களால் வெற்றி கொள்ளப்பட்ட மக்களிட மிருந்து பிரிந்து வாழ்வதற்காக சாதி முறையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆரியர்கள் தங்களைத் தவிர மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கருதி இறுமாப்பும் வீண் பெருமையும் கொண்டிருந்த தோடு, மற்றவர்களோடு தாங்கள் கலப்பதையும் விரும்பவில்லை...’’

நேரு மேலும் எழுதுகிறார்: ‘‘தங்களை ஆளும் அரசர்கள் ‘தவறி’ நடக்க அவர்கள் (ஆரியர்கள்) விடுவதில்லை. தவறு செய்யும் மன்னன் உடனே நீக்கப்படுவான்...’’

சரி; அரசர்களின் ‘சரி’ ‘தவறு’களை முடிவு செய்வது யார்? அவர்கள்தான்.

அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்தும் உரிமை தனக்கு உண்டு என்றே அவர்களில் ஒவ்வொருவரும் நம்புகிறான்.

இந்த நம்பிக்கையோடு அவன் அரசியலைக் கண்காணிக்கிறான்.

கலைஞரை அவனுக்குப் பிடிக்கவில்லை; உடனே கழக அரசு கலைக்கப்படுகிறது.

வி.பி. சிங்கை அவனுக்குப் பிடிக்கவில்லை; அவ்வளவு தான்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுகிறது. தேசமே தீப்பற்றி எரிகிறது.

இன்று போல் அன்றும் தான். பல தமிழ் மன்னர்கள் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார்கள். மனுதர்மத்துக்குப் பயந்து ஒருவன் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான். இன்னொரு மன்னன் தன் கையையே வெட்டிக் கொண்டான்.

‘நீதி’ காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தன்னையும் தன் வம்சத்தையும் வருத்திக் கொண்டவர் வரலாறுதான். திராவிடர்களின் தமிழர்களின் வரலாறு.

தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, தனக்கு எது வெற்றியைத் தருகிறதோ அதுதான் ‘சரி’, அதுதான் ‘நீதி’ என்று சாதிப்பதுதான் மனுவாதிகளின் வரலாறு.

சாணக்கியனின் சந்தர்ப்ப வாதங்களும், சதிகளும் ராஜ தந்திரம் அர்த்த சாஸ்திரம் - என்று கொண்டாடப்படு கிறதென்றால் அவர்களின் நீதி நேர்மை பற்றிய உச்சாடனங்களுக்கு என்ன பொருள்?

ஈராயிரம் ஆண்டுகளுக்கும், மேலாக நடக்கும் இந்தக் கருத்து முரண்பாடுகளின், இனப் போராட்டங்களின் உள்ளடக்கத்தை இந்திய சமூக அமைப்பின் ஒவ்வொரு, அம்சத்திலும், ஒவ்வொரு அசைவிலும் பார்க்கலாம். இப்போது ‘நீதிபதிகளின் கௌரத்துக்காகக் குரல் கொடுக்கும் ஏடுகளும் போராட்டங்களும் கூட ‘வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவையே!

நீதித்துறை விமர்சனத்து அப்பாற்பட்டது என்கிற பார்வை கூட சனாதன தர்மத்தைக் காக்கும் முயற்சியே! அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் விமர்சனம் நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று வாதிடுகிறவர்கள் நீதி மன்றங்களின் புனிதத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றப் புறப்பட்டவர்கள் என்று பொருளல்ல. உண்மையில் நீதிபதிகளை மயக்குகிறார்கள்; வஞ்சகவலை விரிக்கிறார்கள்; அந்தச் சூத்திரர்களைப் பழிவாங்கு என்ற உசுப்பி விடுகிறார்கள் என்று குற்றம் சாற்றினால் அது தவறா?

நீதித்துறைமீது ஒரு விமர்சனம் எழுந்து, அது தொடர்பாக ஏடுகள் கருத்துகளைப் புனைந்துருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீதிமன்ற, நடைபாதையில் நீதிபதிகளுக்கு மலர்ப்படுக்கைபோட்டு வரவேற்புத் தருவது நீதிபதிகளை வளைத்துப் போடும் குற்ற நடவடிக்கையாகாதா?

வம்பர்களின் கொம்பு சீவும் நரித்தனத்துக்கு ஆதரவாக ஆர்க்காட்டாரின் மீதும் கலைஞர் மீதும் கடுமை காட்டும் பல முன்னாள் நீதிபதிகளும் ‘புகழ் பெற்ற’ வழக்கறிஞர்களும் ‘சோ’ குருமூர்த்தி போன்ற சட்டவியல் அறிஞர்களும் ‘மலர்க் கம்பளம்’ விரித்து நீதிபதிகளை மயக்கும் இந்தப் ‘மோகனாஸ்திரம்’ குறித்து விமர்சிக்காதது ஏன்?

ஆர்க்காட்டாரின் விமர்சனத்துக்கும், போட்டியாளர்களின் மாய்மாலத்துக்கும் அப்பால், சிந்திக்கத் தெரிந்த சாதாரண மக்களின் கேள்வி இதுதான்!

‘‘ஆர்க்காடு வீராசாமி ஒரு மனுவாதியாக இருந்தால் அவருடைய பேச்சு ஏடுகளாலும் எடுபிடிகளாலும் இந்த அளவுக்கு எதிர்ப்புக்கு இலக்காகியிருக்குமா?’’

ஆர்க்காட்டார் ‘அவாளாக’ இருந்திருந்தால் நீதித் துறை தாக்கப்பட்டிருக்கும்.

முன்பு அளவுக்கு அதிகமாகத்தான் வீட்டிற்கு நாற்காலி வாங்கிப் போட்டார் என்பதற்காக ஒரு நீதிபதி ஏளனத்துக்கும் கண்டத்துக்கும் ஆளானார். அவர் பொதுப் பணத்தை விரயம் செய்தார் என்பதற்காக அல்ல, சூத்திரர் என் பதற்காகவே ‘கண்ணிய வான்கள்’ கூட்டத்தால் கண்டிக்கப்பட்டார்.

நாட்டில் நடக்கும் சம்பவங்களிலிருந்து அறியப்படும் உண்மை என்னவென்றால், நடைமுறையில் உள்ள சமூக அமைப்பில் மார்க்ஸ் சொல்வதுபோல் நீதித்துறைப் பணியாளர்களும் கூலி உழைப்பாளர்களே!

நீதிபதி என்பது ஒரு குணச்சித்திரம் - ‘கேரக்டர்’ - அல்ல; அது ஊதியம் தரும் ஒரு மேட்டிமைத்தனமான தொழில்...

முரண்பாடுகளும் போராட்டங்களும் மிகுந்த ஒரு சமூக அமைப்பில் ‘மேட்டிமைத்தனமான தொழில்’ என்பது அபாயகரமானதே. இதில் மனுவாதி மாத்திரமல்ல, அடிமட்டத்திலிருந்து வரும் சூத்திரன்கூட புனிதனாக இருக்க முடிவதில்லை.

‘‘மார்க்ஸ் எழுதுகிறார்: ‘‘பழைய சமுதாயத்தின் அடி மட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய ‘அபாயகரமான வர்க்கம்’ பாட்டாளி வர்க்கப் புரட்சியால் (நாம் ‘சூத்திர எழுச்சியால்’ என்றும் சொல்லலாம் - கட்டுரையாளர்) எங்கேனும் ஒரு சில இடங்களில் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சக்தியின் கைக் கருவியாய் லஞ்சம் பெற்று ஊழியம் புரியவே. மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றன’’ (மார்க்ஸ் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)

மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் அடிமை நிலையானது. பாட்டாளிகளை மாத்திரமல்ல, மருத்துவவரையும், மதகுருக்களையும், கவிஞர்களையும் கூட ஆசையின் பின்னே ஓடு கிறவர்களாய் மாற்றிவிடுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான ‘பணப்பட்டு வாடா’வைத் தவிர வேறு ஓட்டுமில்லை உறவும் இல்லை என்று ஆக்கிறது.

சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பரப்பு ஆகிய ‘புனிதப் பேரானந்தங்களை’ எல்லாம் தன் னலக் கணிப்பெனும் உறை பனிக்குளிர் நீரில் மூழ்கடித்துவிட்டது... சுருங்கச் சொல்வதெனில் சமயத்துறைப் பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலும் மூடி மறைக்கப்பட்ட, சுரண்டலுக்குப் பதிலாக வெட்க உணர்ச்சியற்ற அம்மண மான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.

வெட்க உணர்ச்சி தேவையற்ற ஒரு சமூகத்தில் யாரையும் விலைக்கு வாங்கலாம். நீதிபதிகளும் இதற்கு விலக் கானவர்கள் அல்லர்.

இங்கே லஞ்சம் கொடுத்தால் நீதியை விலைக்கு வாங்கலாம் என்று நிரூபணம் ஆகியிருக்கிறதே! ரூபாய் முப்பதாயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்ட ஒரு நீதிபதி இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே கைது செய்யும் படி ஆணை பிறப்பித்தாரே! இந்த லஞ்ச விவகாரம் நாடெங்கும் கேவலமாய்ப் பேசப்பட்டு காறித் துப்பப்பட்டதே! நீதியின் காவலர்கள்’ புனிதப் போராளிகள் - யாரும் வெட்கித் தலை குனிந்து தற்கொலை செய்து கொள்ளவில்லையே!

லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு நீதிபதி குடியரசுத் தலைவரைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிப்பது இவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வு. நீதித்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வெளிவரக் கூடாத அசம்பாவிதங்கள்; அவ்வளவுதான்.

இதுபோன்ற சம்பவங்களில் ரகசியம் காப்பாற்றப்பட்டு திடும்என ஒரு நாள் கைது செய்யப்பட்டிருந்தால் நமது உளவுத்துறை, காவல் துறை, நீதித்துறை அனைத்துக்கும் விழா நடத்தியிருப்பார்கள். அடடா, எத்தனை ஏமாற்றம்!

இந்து சாம்ராஜ்யம், ராம ராஜ்யம், அகன்றபாரதம் என்றெல்லாம் இவர்தம் பரிவாரங்களுக்கு எத்தனை கனவுகள்! இந்தக் கனவுகளைக் குத்திக் கிழிக்கும் முட்களாக எத்தனை தொந்தரவுகள்!

மனுதர்மத்துக்கும், சாணக்கியன் சபதத்துக்கும் விரோதமாகக் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் இருக்கலாமா?

‘‘எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், எத்தனை முறை ஆட்சியைக் கவிழ்த்தாலும் இந்த இராவணன் கலைஞர் பீனிக்ஸ் பறவையாய் எழுகிறானே...’’ இந்த ஆற்றாமைக் குரூரத்திலிருந்து கிளம்பும் சனாதனக் சகிப்பின்மை தான் இவர்களின் எழுத்தில், பேச்சில், பொங்கி வழிகிறது.

அவர்கள் அறியாததா?

நமது நீதித் துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் மனநிறை வுடன்தான் இருக்கிறார்களா?

தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறையாவது நீதித் துறையின்மீது கண்டனம், அல்லது வருத்தம், அல்லது திருப்தி தெரிவிக்காத நீதிபதி உண்டா?

நீதித்துறையில் ஊழல் மலிந்துவிட்டது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே வருந்தியிருக்கிறார்கள்.

முல்லை பெரியாறு நதிநீர் வழக்கில், காவிரி நதிநீர் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்குரியதானது; பகிரங்கமாக மீறப்பட்டது. அந்த நீதிபதிகளின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. நீதி மன்றத்தில் என்ன செய்ய முடிந்தது? போக்கிரிகள் நினைத்தால் நீதித்துறையை மீற முடியும் என்று நிரூபிக்கிறார்கள்.

வலுத்தவன் ஜெயிப்பான் என்பதுதான் ‘கட்டப் பஞ்சாயத்தின்’ விதி.

இம்மாதிரியான போக்குகள் தலைதூக்குமானால், நீதிமன்றங்களுக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கும் வித்தியாசம் இருக்காது. நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்தின் நிலைக்கு மாறக் கூடாது என்பது தவறா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com