Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2006

சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்

இளவேனில்

சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்?

China Wall ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள்.

அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு மன்னன் ஷின்ஷி குவாங்தி மயங்கிப் போய்விடவில்லை. ஏனென்றால், வாழ்த்திய புலவர்கள் ஷின்ஷி குவாங்தியை வாழ்த்தும்போது அவனுக்கு முந்திய பல அரசர்களின் பெருமைகளைச் சொல்லி, அந்த வரலாற்றின் வாரிசே வாழ்க என்றார்கள்.

மன்னனுக்கு அது பொறுக்க வில்லை. வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் இந்த மண்ணில் தகுதி பெற்றவன் நான் ஒருவன் மட்டுமே. எனக்கு முன்னேயும் புகழுக்குரிய மன்னர்கள் இருந்தார்கள் என்று சொல்வது எனக்கு எதிரான சதியேதான். மனிதர்கள் நினைவிலும், வரலாற்றுக் குறிப்பிலும் ஒரே மன்னனாகத் தன் பெயர் மட்டுமே இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், காவியங்கள், சிந்தனையைத் தூண்டும் படைப்புகள் என அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.

நாடெங்கும் உள்ள நூல்களெல்லாம் சிப்பாய்களால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒரு பெரும் சதுக்கத்தில் போட்டு தீவைத்தார்கள். அந்த நெருப்பு அணையாமல் ஆறு மாதங்களுக்குமேல் எரிந்தது.

ஆனாலும் வரலாற்றை அழிக்கவிடோம்; அறிவின் கொடைகளை நெருப்பிலிடச் சம்மதியோம் என்று நூல்களைத் தரமறுத்தவர்களும் இருந்தார்கள். அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்ட அறிவின் ஆதரவாளர்கள் இருபது லட்சத்துக்கும் அதிகமாயிருந்தார்கள்.

அறிவை நேசித்ததற்காக, வரலாற்றைப் பாதுகாப்பதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற அந்த லட்சக்கணக்கான அடிமைகள் கட்டியதுதான் அழியாத வரலாற்றுச் சின்னமாய் உலக அதிசயமாய் விளங்கும் சீனத்து நெடுஞ்சுவர். சீன நெடுஞ்சுவர் நினைவுக்கு வரும்போதெல்லாம், வரலாற்றையும் அறிவியலையும் பாதுகாப்பதற்காக ஆக்கினைக்கும் அடக்கு முறைக்கும் அஞ்சாத அந்த அறிவார்ந்த போராளிகளே நினைவுக்கு வருவார்கள். அவர்களுடைய தியாகம் சீனத்தின் வரலாற்றையும் அறிவுக் களஞ்சியத்தையும் மாத்திரமல்ல பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கும் பாதுகாப்பரணையும் வழங்கியிருக்கிறது.

எத்தனை கொடுமைகள் எதிர்வந்தாலும், கொடுங்கோலன் ஆட்சி நடத்தினாலும், அந்தச் சீனத்துக்குச் சென்றேனும் அறிவைத்தேடு என்பதுதான் உயிர்த் துடிப்புள்ள மனித இனத்தின் அறிவுரை; அறை கூவல்!

சீனத்தில் நடந்ததை விடக் கொடுமையான முறையில் அறிவுக்கும் மனித நாகரிகத்துக்கும் எதிரான கொடுமைகள் நடந்த வேறொரு நாடும் உண்டு.

சீனத்திலே ஒரே ஒரு ஷின்ஷி குவாங்தி தான் இருந்தான். இந்த நாட்டிலோ ஆயிரக்கணக்கான அறிவின் எதிரிகள் இருந்தார்கள். அது இந்தியாதான். சீனக் கொடுங்கோலன் வரலாறே என்னிடமிருந்துதான் தொடங்கவேண்டும். நான்தான் ஆதி; நான்தான் அந்தம்; என்னையன்றி வணக்கத்துக்குரிய மன்னன் வேறெவனும் இருக்கக் கூடாது என்றான்.

அதே கருத்தை இங்குள்ள ஆரியர்கள் வேறு சொற்களில் சொன்னார்கள்.

பிரபஞ்சம் இயற்கைக்குக்
கட்டுப்பட்டது.
இயற்கை கடவுளுக்குக்
கட்டுப்பட்டது,
கடவுள் மந்திரத்துக்குக்
கட்டுப்பட்டவர்
மந்திரம் பிராமணனுக்குக்
கட்டுப்பட்டது

என்பது இவர்களின் நம்பிக்கை. பார்ப்பனனே மந்திரங்களுக்கும், கடவுளுக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்துக்கும் அதிபதி. பார்ப்பனரே உயர்ந்தோர். அவர்களே உலகையும் வாழ்வையும் நிச்சயிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். மற்ற இன மக்கள் அனைவரும் இழிந்தவர்கள்; சூத்திரர்கள். பார்ப்பனர்க்குப் பணிவிடை செய்வதே பார்ப்பனர் அல்லாதாரின் கடமை; தர்மம்; விதி; கதி என்றார்கள்.

ஆரியரே அனைத்து மக்களிலும் மேலானோர்; ஆரிய இனமே ஆளப் பிறந்த இனம் எனும் ஆணவச் சிந்தனை இட்லரை வெகுவாய்க் கவர்ந்தது. அந்த ஆரிய வெறியில்தான் அவன் உலகப் போரைத் தொடங்கினான். இட்லரின் நாஜிகள் முதலில் போலந்தைக் கைப்பற்றினார்கள். அப்போது கோயரிங் எழுதினான்; “போலந்திலே பெண்களைத் தவிர ஆண்கள் அனைவரையும் தீர்த்துக் கட்டுங்கள். போலந்துப் பெண்களை நமது படைவீரர்கள் கற்பழிக்கட்டும். நாஜி படைவீரர்களுக்குப் பிறந்த குழந்தைகள் உயர்ந்த இரத்தத்துக்குப் பிறந்தவர்கள் என்பதால் அந்தக் குழந்தைகளே வாழும் தகுதி பெற்றவர்கள், அவர்கள் மூலம் போலந்தின் ‘தீட்டு’ கழியட்டும்’’ என்பதுதான் கோயரிங்கின் உபதேசம்.

இந்த ஆரிய வெறிக்கு கோடிக்கணக்கான மக்கள் பலியானார்கள். பூமியே இரத்தச் சேறாகியது. இந்த இனவெறிக் கொள்கைக்கு ஜெனேட்சை குற்றத்துக்கு பாசிசத்துக்கு இந்தியப் பார்ப்பனியே வித்தாகும். இங்கே ஒரு ஷின் ஷி குவாங்தி இல்லை; ஒரு இட்லர் இல்லை; ஒவ்வொரு அக்கிரகாரத்திலும் வீட்டுக்கொரு இட்லர் இருக்கிறான்.

இவர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இந்திய வரலாற்றையே அழித்தார்கள். இந்திய மொழிகள்; இந்தியத் தத்துவங்கள், இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் மறைத்தார்கள்; திரித்தார்கள்; அனல் வாதம் புனல் வாதம் என்கிற பெயரில் சூழ்ச்சியினால் அழித்தார்கள்.

இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்த பகுத்தறிவு இயக்கமாம் புத்தம், தேடித் தேடி அழிக்கப்பட்டது. புத்த விகார்கள் நாசமாக்கப்பட்டன. அவை ஆரியச் சின்னங்களாக மாற்றப் பட்டன. மங்கை உருவில், மகான் உருவில் பாண்டிய மன்னனை ஏமாற்றி எண்ணாயிரம் தமிழ்ச் சிந்தனையாளர்கள் கழுவிலேற்றப்பட்டார்கள்.

முத்துக்களை எடுத்துப் பன்றிகளுக்கு முன் போடக் கூடாது என்பார்கள். தமிழர்களோ முத்துக்களை விடவும் மேலான தங்கள் இதயத்தையே அவர்களுக்குத் திறந்து வைத்தார்கள். ஆனால் பன்றிகள் எவ்வளவோ உயர்ந்தவை என்று ஆரியர்கள் நிரூபித்தார்கள்.

பஞ்சையாய்ப் பாராரியாய் நாடோடிகளாய் வந்த ஆரியர்களுக்காகத் திராவிடர்களின் இதயம் உருகிற்று.

நண்பர்களே வீடுதருகிறோம்; நிலம் தருகிறோம்; எம் சகோதரராய் உங்களை அணைத்துக் கொள்கிறோம் நிம்மதியாய் வாழுங்கள் என்று வளமான பகுதிகளையெல்லாம் ‘மங்கலங் களாய்’த் தானம் தந்தார்கள்.

Periyar தமிழரின் பண்பாடே அவர்களுக்கு விலங்காயிற்று. நாகரிக இனத்தைப் பண்பாடற்ற போக்கிரிகள் எளிதில் வெல்வதுதான் வரலாறு எங்கிலும் காணக் கிடைக்கும் செய்தி. இங்கேயும் அதுதான் நடந்தது.

தமிழினம் ஏமாற்றப்பட்டது. அவர்களின் சரித்திரம் மாற்றப்பட்டது. அழிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் போக எஞ்சியவற்றுள் ஆரியச் சிந்தனைகள் புகுத்தப்பட்டன. புகழ் பெற்ற புலவர்கள் கலைஞர்களை ஆரிய மயமாக்கினார்கள். குறைந்த பட்சம் ஆரியருக்குப் பிறந்த சூத்திரரே அறிவாளிகள் ஆக முடியும்; திருவள்ளுவர், அகத்தியர் போன்றோர் அப்படித்தான் அறிஞராய்ப் பிறந்தவர்கள் என்று கதை கட்டினார்கள். ஆரியக் கறைபடாத தமிழ் இலக்கியமே இல்லை என்கிற அளவுக்கு இலக்கிய - வரலாற்று மோசடிகள் நடந்தன. இதை எதிர்த்தவர்கள், தமிழினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க நினைத்தவர்கள், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்.

பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர், ஆசைத் தம்பி, சிற்றரசு, குத்தூசி குருசாமி என்று நூற்றுக்கணக்கான திராவிட இனச் சிந்தனையாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய நூல்கள் தடைசெய்யப்பட்டன. இந்த அறிவின் ஆதரவாளர்கள், சிறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளான போதிலும் சீன நெடுஞ்சுவரை விடவும் உறுதியான நெடுஞ்சுவர் ஒன்றைத் தம் இனத்துக்காகக் கட்டி எழுப்பிவிட்டார்கள். அந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுத்தறிவுக் கோட்டை தான். திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம்தான் தமிழினத்தின் வரலாற்றையும் சிந்தனைக் கருவூலத்தையும் பாதுகாத்து, ஆரிய ஆணவத்தையும் எதிர்த்து நிற்கிறது. இந்த அறிவியக்கக் கோட்டையைக் கட்டிய அடித்தள - அஸ்திவாரக் கற்களில் ஒன்றுதான் புலவர் குழந்தையின் இராவண காவியம்...

(-சென்னைச் சிந்தனையாளர் மன்றம் நடத்தும் தமிழ் அறிஞர் சிலம்பொலியாரின் இராவண காவியம் தொடர் சொற்பொழிவின் நான்காம் பொழிவில் இளவேனில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து ஒரு பகுதி.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com