Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2006

எல்லாமே அதுதான்

இளவேனில்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்தார் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி. பதவி இழந்த உறுப்பினர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் சோம்நாத் சட்டர்ஜிக்கு அறிக்கை அனுப்பியது. சட்டர்ஜி அதை ஏற்க மறுத்தார். பதில் தரப்போவதுமில்லை என்று அறிவித்தார்.

Somnath chatterjee லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக பிரச்னையை மேலாட்டமாகப் பார்த்தால் இவ்வாறு சுருக்கிவிடலாம். ஆனால் இது சோம்நாத் சட்டர்ஜியின் நடவடிக்கையைக் கொச்சைப்படுத்துவதாகும்.

சோம்நாத் சட்டர்ஜி தனக்கு உள்ள அதிகாரத்துக்கு வானமே எல்லை என்று சர்வாதிகார மனப் போக்கில் பேசுகிறவரோ, நடந்து கொள்கிறவரோ அல்ல. நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி அவர்களின் இசைவுடன் எடுத்த முடிவின்படிதான், லஞ்சம் பெற்ற எம்பிக்கள் பதவி நீக்கச் செய்யப்பட்டார்கள்.

சோம்நாத் சட்டர்ஜியின் நடவடிக்கை குறித்து தினமணி போன்ற பத்திரிகைகள் அவரது பாத்திரத்தைச் சிதைக்கும் விதத்தில் எழுதுகின்றன.

மக்களவைத் தலைவரின் ஜனநாயக ரீதியான முடிவை எதிர்த்து லஞ்சம் பெற்ற எம்பிக்கள் வழக்குத் தொடர்ந்தபோதே இது மக்களவையின் உரிமையில் தலையிடுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்திருந்தால் உச்சநீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் மோதல் என்று சித்திரிக்கும் நிலையே வந்திருக்காது.

“எம்.பிக்களை நாடாளுமன்ற அவைத்தலைவர் பதவி நீக்கம் செய்துள்ள நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அமைந்திருக்கிறதா அல்லது மீறி இருக்கிறதா? இந்த நாசூக்கான பிரச்னையில் சட்ட நுட்ப அடிப்படையில் அரசியல் சட்டப் பார்வையோடு தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பு உச்சநீதி மன்றத்துக்கே உண்டு என்பதை எப்படி ஒதுக்கித் தள்ளி விடமுடியும்? எனவே நாடாளுமன்ற உரிமையில் நீதிமன்றம் தலையிடுவதாகப் புகார் கூறுவதற்கு முகாந்திரம் இருப்பதாகத் தோன்ற வில்லை. அப்படியிருக்க இப்பிரச்னையில் நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும் எதிரும் புதிருமாக நிற்கும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும்’’ என்கிறது தினமணி.

தமிழ்நாட்டில் பி.எச்.பாண்டியன் என்றொரு பேரவைத் தலைவர் இருந்தார். அவர் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட்டு பத்திரிகை ஆசிரியர்களைப் பேரவைக்கே அழைத்து, தனியாகக் கூண்டு செய்து அதில் நிறுத்தி, அவமானப்படுத்தி தண்டனை தந்தார். பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஒரு மாநில சட்டப் பேரவைத் தலைவர் தண்டனை வழங்க முடியுமா? பேரவைத் தலைவர் நீதிமன்றத்துக்கே அந்தப் பிரச்னையை அனுப்பியிருக்கவேண்டும் என்று அப்போது யாரும் சொல்லவில்லை.

கேரளத்தில் முதல் முதலாக பதவி ஏற்ற கம்யூனிஸ்ட் அமைச்சரவை கவிழ்க்கப்பட்டது. அது சரியா, தவறா? என்று எந்த நீதிபதி சிந்தித்துச் சிந்தித்து நெற்றி பொசுங்கிப் போனார்? என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை. ‘நெருக்கடி நிலை’ பிரகடனம் செய்யப்பட்டது. அது அரசியல் சாசன, ஜனநாயக விதிகளுக்குப் புறம்பானதுதான். எந்த நீதிபதி ‘மிசா’வைத் தவறு என்று அறிவித்து மிசாக் கைதிகளை விடுதலை செய்தார்? என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை.

‘பொடா’ சட்டம் வந்தது. அரசியல் பழிதீர்க்கும் வாய்ப்பாகப் பலர் கைது செய்யப்பட்டார்கள். மறுபடியும் புதிய நாடாளுமன்றம் கூடி அதை ரத்து செய்ததே தவிர எந்த நீதிபதி ‘பொடா’ தவறு. அதை கண்டித்து வழக்கை தள்ளுபடித் தள்ளுபடி செய்தார்? என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை. கலைஞர் தலைமையிலான அரசு இருமுறை கலைக்கப்பட்டது. ‘சட்ட நுட்ப அடிப்படையில்’ எந்த நீதிபதி குரல் எழுப்பினார்? என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை.

நீதிமன்றங்களுக்குச் சில உரிமைகள்; நாடாளுமன்றத்துக்கும் சில உரிமைகள். ஒன்றில் மற்றொன்று தலையிட முடியாது என்பது பொதுவான கருத்து. ஆனால் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் ‘ஆதிக்க சக்தி’ என்றொன்று உண்டு. அதுவே இந்த நாட்டின் சட்டம், நீதி, நாடாளுமன்றம் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

உண்மையில் நீதித்துறையும் அதுதான்; நாடாளுமன்றமும் அதுதான். ஆதிக்க சக்திகளுக்கு அதிருப்தி வரும்போது சில நேரங்களில் நீதித்துறை கண்டிக்கப்படும். சில நேரங்களில் மக்களவை கண்டிக்கப்படும்.

சோம்நாத் சட்டர்ஜி நடைமுறையிலுள்ள சமூக அமைப்பு மாற்றப்படவேண்டும் என்கிற கருத்துடையவர். பொது உடைமைக்கு ஆதரவளர். அதனால் சனாதனிகளும், ஆதிக்க சக்திகளுக்கும் அவர்மீது எப்போதுமே எரிச்சலுண்டு. அந்த எரிச்சலைத் தீர்த்துக் கொள்ளும் அரிப்பில்தான், இப்போது நீதித்துறையை ஆதரிப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள்.

ஒரு கற்பனை. அத்வானி மக்களவைத் தலைவராக இருந்து, இதே லஞ்சப் பிரச்னை, பதவிபறிப்பு, வழக்கு, நீதிமன்றத் தலையீடு என்று வந்திருந்தால், அப்போது இதே ஏடுகள் நாடாளுமன்றத்தின் பக்கம் நின்று நீதித்துறையின் எல்லைதாண்டிய அத்துமீறலைக் கண்டித்திருக்கும். சட்டம் சரியாக இருக்கலாம். ஆனால் நீதிபதிகள் எல்லோருமே சரியானவர்களா? நீதிபதியே லஞ்சம் வாங்கிக் கொண்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கைது செய்ய ‘வாரண்ட்’ பிறப்பிக்கவில்லையா? நீதிபதிகள் நீதிமான்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று இந்த ஏடுகள் எழுதாவோ?

சாதிக்கொரு நீதி

“எந்தக்கட்சி மத்தியில் ஆட்சி புரிந்த போதிலும் அதனால் நியமிக்கப்படும் ஆளுநர்களில் சிலர் மத்திய அரசின் போக்குக்கு உகந்த விதத்தில் நடந்து கொள்வதையே கடமையாக நினைத்துக் கொள்வது உண்டு. அதிலும் குறிப்பாக பூட்டாசிங் போன்ற சராசரி அரசியல்வாதிகள் இத்தகைய உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய நடவடிக்கைகளில் அரசியல் கலந்திருப்பது தவிர்க்க முடியாததாகும். எனவே நியமிக்கும் பொழுதே- அரசியலுக்கு அப்பாற்பட்ட, நேர்மையோடு கண்ணியமும் மிக்க பொறுப்பு வாய்ந்த பெருமக்களையே

தேர்ந்தெடுப்பதை மத்திய அரசு கடமையாகக் கொள்ள வேண்டும்.

-தினமணி 26.1.2006 (தலையங்கம்)

அரசியல் என்றால் கட்சி, கொடி, முழக்கங்களுடன் வெளிப்பட்டு, அதிகாரம் செய்வது, கொள்ளையடிப்பது, சட்டங்களை வளைப்பது... என்கிற முறையில் வளரும் கும்பல் கலாச்சாரம் என்றே பொதுவான கருத்து உருவாக்கப்படுகிறது. என்றபோதிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றொருவர் உண்டா?

அரசியல் வேண்டாம்; அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களே ஆட்சிக்கு வரவேண்டும் என்று எழுதுவதும் ஒருவித அரசியலே! ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின், சமூகப்பிரிவின், முத்திரை பதிந்தே இருக்கிறது. நமது சமூகத்தில் நிலவும் பொய்மை, பொறாமை, கொள்ளை, திருட்டு, ஏமாற்று, இச்சகம், லஞ்சம், ஊழல்... ஆகிய அனைத்து இழிவுகளுக்கும் மூலகாரணம் எது? தனிச் சொத்துரிமைதான்.

“தனிச் சொத்துரிமையை ஒழிக்கலாமா?’’ கூடாது; கூடாது. அது கம்யூனிச அபாயத்தைக் கொண்டு வந்து விடும். தனிச் சொத்துதான் சுதந்திரம்; சொத்துதான் விடுதலை; சொத்தில்லாமல் என்ன செய்ய முடியும்? சோவியத் யூனியனால் நீடிக்க முடிந்ததா? - என்று எகத்தாளம் பேசுவார்கள் இந்த ‘மேன்மக்கள்’.

“புதிய சிந்தனைகளை - பகுத்தறிவை - வளர்க்கலாமா?’’ பெரியார் சொன்னதுதானே? எடுபட்டதா? பக்தி இல்லாத அறிவு பயன்படாது. ஞானத்தின் அடையாளம் இறைவனுக்குப் பயப்படுதலே என்று கூச்சலிடுவார்கள். கடவுள் இல்லாத உலகை எண்ணிப்பார்க்கவே இவர்கள் அஞ்சுவார்கள். இவர்களுக்கு அடிப்படை மாறுதல்கள் தேவை இல்லை. அவலங்களை மறைத்தால் போதும். மருத்துவர்களை மாற்றிவிட்டால் நோய் தீர்ந்துவிடும் என்பது இவர்கள் வாதம்.

இவர்கள் எதிர்பார்க்கும் சமூக மருத்துவர்கள் - அதாவது தலைமைக்கு, அதிகாரத்துக்கு வருகிறவர்கள் – ‘புனிதர்களாக’ இருக்க வேண்டும். யார் அந்தப் புனிதர்? சத்தியமூர்த்தி, ராஜாஜி... என்று ஒரு பட்டியல் தருவார்கள். பரம்பரைப் பணக்காரர்(!)களும்; சாதியால் ‘உயர்ந்தவர்களும்’ புனிதர்கள்! அப்படித்தானா?
சத்தியமூர்த்திதான் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப் பணம் பெறுவதில் தவறில்லை என்று அறிவித்த முதல் நபர்.

இந்தியாவின் ‘புகழ் பெற்ற’ ஊழல் டி.டி. கிருஷ்ணமாச்சாரியின்’ முந்திரா ஊழல்தான். இராஜகோபாலச்சாரியின் அதிகார துஷ்பிரயோகங்களையும், நாணயக்கேடுகளையும் விவரிக்கலாமா? மாஜி குடியரசுத் தலைவர் யோக்கியர் வெங்கட்ராமனின் சென்னை மாளிகையே அவர் தமிழக அமைச்சராக இருந்தபோது செட்டிநாட்டிலிருந்து பெற்ற லஞ்சம்தான்.

இவர்களையெல்லாம் அவதார புருஷர்கள்போல் சித்திரிப்பது இங்கே வெகுகாலமாய்த் திறம்பட நடந்து வருகிறது.ஆனால் பூட்டாசிங் போன்றவர்கள்தான் இவர்கள் பார்வையில் ‘சராசரி அரசியல்வாதிகள்’, ஊழல் செய்யத் தயங்காதவர்கள், நேர்மையற்றவர்கள். தாழ்த்தப்பட்டோர், சூத்திரர்தான் குற்றம் புரிவார்கள் என்று சத்தியம் செய்கிறவர்களை எப்படித்தான் திருத்துவது?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com