Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2006

'அரசியலற்ற' அரசியல்

ஆனாரூனா

Pablo Neruda அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் நேர்மையாக ஆட்சி நடத்துவார்கள் என்று ஒரு கருத்து பரவலாக உருவாக்கப்படுகிறது. இதுதான் சாதுரியமான - ஆபத்தான - அரசியல்.

அரசியல் - பாலிடிக்ஸ் - என்பது, பாலிசி, கொள்கை, இலட்சியம் என்பதிலிருந்து பெறப்பட்டதே! தனக்கென்றொரு கொள்கை, இலட்சியம் இல்லாதவர்கள் அதிகாரத்துக்கு வருவது தான் மிகவும் மோசமான சமூகத் தீமையாகும். ‘அரசியலுக்கு அப்பாற்பட்ட’ நபர்களைக் கொண்டுதான் ஏகாதிபத்தியவாதிகள் பல நாடுகளை அடிமைப்படுத்தினார்கள்; சுதந்திரத்தை அழித்தார்கள்; கொள்ளையடித்தார்கள். இந்தியா பிரிட்டிஷ் காலனியானது அரசியல் உணர்வற்ற கைக்கூலிகளால்தான்!

அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களின் துணை யுடன்தான் பல அரசியல் படுகொலைகள் அரங்கேற்றியிருக்கின்றன. சிலியில் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாலும் அமெரிக்க சி.ஐ.ஏ.யாலும் கவிஞர் பாப்லோ நெரூடா படுகொலை செய்யப்பட்டார் .

இந்திய அரசியலை மனுதர்மம்தான் வழிநடத்துகிறதா?

“சிபு சோரன், ஜகதீஷ் டைட்லர், நட்வர் சிங், இதோ, இப்போது பூட்டா சிங்... பா.ஜ.க. யார் யாரையெல்லாம் தனக்குப் பிடிக்கவில்லை என்று கை நீட்டுகிறதோ அவர்களையெல்லாம் வீழ்த்தும் பொறுப்பை அற்புதமாகச் செய்து முடிக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.

ஆனாலும்... பாஜகவின் - பொதுவாகச் சங்கப் பரிவாரங்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் பக்தி மிகுந்த அனுமனாக எவ்வளவுதான் உண்மையாகவும் உறுதியாகவும் நடந்து இதயத்தைக் கிழித்துக் காட்டினாலும்- மன்மோகன் சிங்மீது பரிவாரங்களுக்கு இன்னும் பரிவு ஏற்படவில்லை.”

Anaruna ‘பலவீனமான பிரதமர்’என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது அவர் மனம் என்ன பாடுபடும்! பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட தனது நெஞ்சில் ஒரு முள்ளாய் உறுத்தும் அந்தச் சோகத்தைச் சொல்லி முணு முணுத்துக் கொண்டாரே!”

“நான் ஒன்றும் பலவீனமானவன் அல்ல; எனது செயல்கள் தீர்ப்பளிக்கும்” என்று அவர் அளித்த சுயவிமர்சனம் எவ்வளவு உருக்கமானது!”

“அமெரிக்காவின் நம்பிக்கையைப் பெறுவதற்குக் கூட அவர் இவ்வளவு சிரமப்பட்டிருக்கமாட்டார்.”

“சீதையையே - அதாவது அத்வானியையே ‘அக்கினிப் பிரவேசம்’ செய்ய வைத்தவர்கள் மன்மோகன் சிங்கை அவ்வளவு எளிதில் நம்பி விடுவார்களா? சீதை மீது இராமனுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம்; ஆனால் விபீடணன் மீது அவனுக்குத் துளியும் சந்தேகம் வந்ததில்லையே! காரணம் அந்த இராமனுக்கு இலங்கேஸ்வரனின் தேசத்தைக் கைப்பற்றும் நோக்கம் இல்லை. இந்த இராமராஜ்யவாதிகளுக்கோ இந்தியாமீது ஆசை வந்து விட்டதே!”

“அப்படியானால் ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் நம்பிக்கையைப் பெற மன்மோகன்சிங் என்னதான் செய்யவேண்டும்?”

Butta Singh “புரியாதது மாதிரிக் கேட்டால் எப்படி? சோனியா காந்தியை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அடிச்சுவடே இல்லாது செய்ய வேண்டும்!”

“இதற்குக் காங்கிரஸ்காரர்களே போதாதா? மன்மோகன் சிங் எதற்கு?”

“அமெரிக்காவுக்கே ஒரு கோர்பச்சேவ் தேவைப்பட்டதே!”

“பாவம், கோர்பச்சேவ். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எவ்வளவு உண்மையாக நடந்து கொண்டார். ஆனால் அவரை இப்போது எல்லோரும் மறந்து விட்டார்களே!”

Shibu Soren “குதிரைகள் சவாரிக்குப் பயன்படலாம்; சம்பாதிக்கப் பயன்படலாம். ஆனால் குதிரைகளை ஒருபோதும் எஜமானர்கள் தூக்கிச் சுமக்கமாட்டார்கள்!”

நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தேர்தல் என்பது ‘பொறுக்கித் தின்னிகளின்’ போட்டிக்களமாகும். இந்தப் போட்டியில் ஈடுபடுகிறவன் யோக்கியனாக இருக்கச் சூழலும் விடுவதில்லை; நெஞ்சுறுதியும் இருப்பதில்லை - என்பது தந்தை பெரியாரின் கருத்து. இதனாலேயே தமது கழகத்தை ஒரு தேர்தல் அரசியல் கட்சியாக இல்லாமல், சுயமரியாதை, பகுத்தறிவு - சோஷலிசக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சார இயக்கமாகத் தொடங்கினார்.

பிரபுத்துவ, முதலாளித்துவ நாடாளுமன்றங்களைக் குறித்து மார்க்சிய விமர்சனமும் இதுதான். நாடாளுமன்றங்களின் நாற்றத்தைத் தாங்க முடியாமல் “பார்லி மென்ட்டைவிடப் பன்றித் தொழுவம் மேலானது” என்கிற சொற்றொடர் மொழிகளைக் கடந்து பிரபலமானது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொய் முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றங்களைப் பயன்படுத்தலாம் என்கிற அளவில் சிலர் அங்கே நுழைந்ததுண்டு. நுழைந்து பார்த்தபோது “எந்த யோக்கியனும் இங்கே வந்தால் சீரழிந்து போவான்” என்று தோழர் ஏ.கே. கோபாலன் மாதிரி வெட்கத்திலும் வேதனையிலும் புகைந்ததும் உண்டு. தனிச் சொத்துரிமையின் தாலாட்டில் வளரும் எந்த நாட்டின் ஜனநாயகமும், நாடாளுமன்றமும், அப்படித்தான் இருக்க முடியும்.

இந்திய ஜனநாயகத்தில், மூலதனத்தின் வக்கிரங்களுடன் பாசிஸ்ட்டுகளின் (அதாவது ‘மனுதருமவாதிகளின்) ஆதிக்கமும் உண்டு. சரியாகச் சொல்வதானால் மூலதனக் கோபுரத்தின் மீது முடிவெடுக்கும் அதிபதியாக அமர்ந்திருப்பது மனுவாதி தான். இந்தப் பின்னணியில் பீகார் பக்கம் திரும்புவோம்.

Natwar Singh பீகார் ஆளுநராக இருந்த பூட்டாசிங் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கண்டனத்தைத் தொடர்ந்து பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். பதவிதான் பூர்ஷுவாக்களின் உயிர் என்பதால் பதவிபறிப்பு என்பது படுகொலைக்குச் சமமானதே. ஆனால் ஒரு படுகொலை மரணமாக மாற்றப்பட்டது. அதாவது ‘எனது மரணத்துக்கு யாரும் பொறுப்பல்ல’ என்பது மாதிரி அவரிடம் ‘ராஜினாமா’ கடிதம் எழுதி வாங்கப்பட்டிருக்கிறது.

பூட்டாசிங் படுகொலை செய்யப்பட்ட அல்லது பதவி விலகிய கதையின் பின்னணி என்ன? கடந்த ஆண்டு (2005) பீகாரில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. நாட்கள் கடந்தனவே தவிர ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை. எந்தக் கட்சியிலிருந்தும் யாரும் விலை பேசப்படலாம்; கடத்தப் படலாம்; தாவலாம்; தடுமாறி விழலாம் என்கிற வர்த்தகச் சூதாட்டமும் அரசியல் அநாகரிகமும் நீடித்தது.

உண்மையில் பீகாரில் வெற்றி பெற்ற வேட்பாளர்களிடம் அதற்கான அடையாளச் சீட்டு இருந்ததே தவிர அவர்களில் யாரும் பதவிப் பிரமாணம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. சட்டப் பேரவையே கூடவில்லை.

இந்தச் சூழலில் “பேரம் நடக்கிறது என்று பகிரங்கமாகத் தெரியவருகிறது. ஆர்.ஜே.டி. (லாலுகட்சி) அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்கிற தொனியில் மத்திய அரசுக்கு அறிக்கை தருகிறார் ஆளுநர் பூட்டாசிங். மத்திய அரசு கூட்டப்படாத சட்டப் பேரவையைக் கலைக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்கிறது. அவருடைய ஒப்புதலுடன் சட்ட மன்றம்(!) கலைக்கப்படுகிறது.

tytler பீகார் சட்டமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்று வெற்றிபெற்ற வேட்பாளர்களில் சிலர் வழக்குத் தொடுக்கிறார்கள். உச்சநீதிமன்றம் அந்த வழக்கின் சாரம் குறித்து பரிசீலித்துக் கொண்டேயிருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீவிரப் பரிசீலனையில் ஆழ்ந்து தோய்ந்து இருக்கும்போது தேர்தல் ஆணையம் மறுதேர்தலுக்கு நாள் குறித்துப் பிரகடனம் செய்கிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைகிறது. இந்நாள் பிரதமர், முன்னாள் பிரதமர், கட்சித் தலைவர்கள் என அனைவருமே பிரச்சாரத்தில் இருக்கும்போது கலைக்கப் பட்ட சட்டமன்றத்துக்குத் தனது இரங்கலைத் தெரிவிக்கிறது உச்சநீதி மன்றம்.

பீகார் சட்டமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்றும் விரிவான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஓர் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

‘கலைக்கப்பட்டது’ தவறு என்று அறிவித்த நீதிமன்றம், இறுதித் தீர்ப்பு வரும்வரை தேர்தல் நடத்தக்கூடாது என்று மறுதேர்தலுக்குத் தடை விதிக்கவில்லை. தேர்தல் நடத்தலாம் என்றே கூறுகிறது. “பீகார் சட்டமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்றால் மறுதேர்தலுக்கு அவசியமில்லை. மறுதேர்தல் நடத்தலாம் என்றால் கலைக்கப்பட்டது சரி என்றாகிறது! தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது, நீதிமன்றம் இவ்வாறு இடைக்காலத் தீர்ப்பு வழங்குவது வாக்காளர் மத்தியில் எங்களைப் பற்றித் தவறான அபிப்பிராயத்தை உருவாக்காதா? எதிர் தரப்புக்கு அது ஆதரவு நிலை ஆகாதா? உச்சநீதிமன்றமே யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சாடை காட்டுவதுபோல் ஆகாதா?” என்று லாலு தரப்பில் எழுந்த மெல்லிய குரல்கள் மீடியாக்களின் ஆரவாரத்தில் அமுங்கிப் போய் விடுகின்றன.

Manmohan Singh (நீதிமன்றத் தீர்ப்பை வீதியில் விசாரணைக்கு எடுத்து, தீர்ப்புரைத்த நீதிபதிகளை நாடு கடத்தவேண்டும் என்று தீர்மானம் போடுமளவுக்கு எந்த அரசியல்வாதியும் இங்கே பெரியார் போல் யோக்கியனல்ல என்பது வேறு விஷயம்.)

மறுதேர்தலில் நிதிஷ்குமார் கட்சியும் பாஜ கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தன. பா.ஜ.க.வின் நெடுநாள் ஆசை நிறைவேறியது. புதிய ஆட்சி அமைந்த நிலையில், நிலுவையில் இருந்த பழைய சட்டமன்றக் கலைப்பு தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிடுகிறது. இந்தத் தீர்ப்பில்தான் பீகார் ஆளுநர் பூட்டாசிங்கின் செயல்பாடுகள் மீது கண்டனம் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம்.

“இந்த வழக்கில் ஆளுநர் செய்தது சரியா என்று ஆராய்வதைவிட ஆளுநர் செய்யத் தவறியது என்ன என்றே நீதிமன்றம் ஆராய்ந்திருக்கிறது” என்று கன்சர் வேட்டிவ் பத்திரிகைகள் கூடக் குறிப்பிட்டிருக்கின்றன. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட ஆயத்தின் மூன்று நீதிபதிகள் ஆளுநர் பூட்டா சிங்குக்குக் கண்டனம், மத்திய அரசுக்கு ‘குட்டு’ என்று செய்திகள் வெளியாகின்றன.

உச்சநீதிமன்ற ஐம்பேராயத்தின் மூவர் குழு (தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் அகர்வால், அசோக் பால்) ஆளுநர் பூட்டா சிங் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டார் என்று உணர்த்துகிறது. தேர்தல் நடந்து, எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவுமானால் இடைக்காலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பது, அணிகள் மாறுவதற்கும் புதிய சூழல் உருவாவதற்கும் போதிய கால அவகாசம் தருவதற்காகத் தான். அணிகள் மாறுவதும் புதிய சூழல் உருவாவதும் எந்த முறையில் நடக்கிறது என்றோ, அது சட்டப்படி தவறா சரியா என்றோ ஆளுநர் முடிவு செய்ய முடியாது என்று கூறும் நீதிபதிகள், இந்த அடிப்படையில்- “நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் வகையில் ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார்” என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Modi ஆனால் மற்ற இரு நீதிபதிகள் (கே.ஜி.பாலகிருஷ் ணன், அரிஜித் பசாயத்) மூவர் குழுவுக்கு மாறான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். “பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியதற்கு ஆதாரமாக ஐக்கிய ஜனதா தளமும் (நிதிஷ்குமார் கட்சி) பாரதீய ஜனதாகட்சியும் எந்த விதமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே பேரவையைக் கலைக்குமாறு ஆளுநர் பரிந்துரை செய்ததை நிதிஷ்குமார் ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கும் - தீய நோக்கத்துடன் எடுத்த நடவடிக்கை என்று கூற முடியாது.

அதே போல் பேரவையைக் கலைத்துவிட மத்திய அரசு முடிவு செய்ததிலும் தவறு ஏதும் இல்லை. ஏனென்றால் ஆளுநரின் அறிக்கையின் மீதே மத்திய அமைச்சரவை அந்த முடிவை எடுத்துள்ளது. பீகார் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2005 மார்ச் மாதத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. எந்தக் கட்சியும், எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க முன்வராததால் பேரவையைக் கலைத்துவிட.2005 மே, 21ஆம் நாள் முடிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு மாத கால இடைவெளியில் - இவ்வளவு அவகாசம் தந்தும், எந்தப் புதிய சூழ்நிலையும் உருவாகிவிடவில்லை. இந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் ஆளுநரின் நடவடிக்கையில் தீய நோக்கம் எதுவும் இருக்கவில்லை - என்று நீதிபதிகள் அறிவிக்கிறார்கள்.

பீகார் சட்டமன்றக் கலைப்பு வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒரே முடிவுக்கு வரமுடியவில்லை. மூன்று நீதிபதிகள் ஆளுநர் பூட்டாசிங் செய்தது தவறு என்கிறார்கள். இரண்டு நீதிபதிகள் சரி என்கிறார்கள். இந்த நிலையில் எவ்வாறு தீர்ப்பளிப்பது? பெரும்பான்மை அடிப்படையில் பூட்டாசிங் குற்றவாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்புகூட வாக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது விசித்திரமானதுதான். மறுவாக்கெடுப்புக்கு, அதாவது மறுவிசாரணைக்குப் போகும் போது தீர்ப்பும் மாறலாம் அல்லவா? மத்திய அரசு - குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் - மேல் முறையீட்டுக்குப் போகவில்லை. அதற்கு இருவிதமான காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று சர்வதேசப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர், அரசியல் கடந்த சீர்திருத்தச் செம்மல் போன்ற பாசுரங்களால் ஆதிக்க சக்திகள் நடத்தும் ஆராதனையில் மயக்கம்; மற்றொன்று பா.ஜ.க. போன்ற மனுதர்மவாதிகளின் நம்பிக்கையைப் பெறும் முயற்சி. உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது என்பதற்காக ஒரு மாநில ஆளுநர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறார். நன்று. நரேந்திர மோடி போன்ற பல மாநில முதல்வர்களும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இலக்காகியிருக்கிறார்கள். அவர்களுடைய பதவி ஏன் பறிக்கப்படவில்லை?

Karunanidhi சிபு சோரன், ஜகதீஷ் டைட்லர், நட்வர்சிங் போன்றோர் மீதான வழக்குகளில் மட்டும் பா.ஜ.கவின் ‘உத்தரவுக்கு’க் கட்டுப்பட்டு இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். ‘குற்றப் பின்னணி உள்ளவர்கள் பதவி விலக வேண்டும் என்கிற புத்தி, நியாயம், தர்மம், நெறி எதுவும் அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுஷ்மா போன்றவர்கள் விஷயத்தில் மறந்தே போனது ஏன்? இ.பி.கோ.வில் இதற்கு விடை கிடைக்காது.

மனுதர்மம் கறாராகச் சொல்கிறது. “அதிகார பீடத்தில் த் திரர்களை அனுமதிக்கக் கூடாது!” அரசியல் சாசனத்தின்படி ஆளுநர், குடியரசுத் தலைவரின் உரிமைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் யோக்கியர் வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த போது ஆளுநரின் புகாரோ, அறிக்கையோ இல்லாத நிலையில் கலைஞரின் ஆட்சியைக் கவிழ்த்தார்.

மாநில ஆளுநரின் அறிக்கைகூட இல்லாமல் ஒரு மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியுமா? சட்டப்படி இது சரியா? தர்மமா? என்று கம்யூனிஸ்ட்டுகளைத் தவிர வேறு எவரும் கேட்கவில்லை. குடியரசுத் தலைவரின் சொந்த விருப்பு வெறுப்புகளில் யாரும் குறுக்கிட முடியாது என்கிற நிலையில் தி.மு.க.வும் வழக்குத் தொடுக்கவில்லை. காரணம் கூற முடியாமல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு ஒரே காரணம் கலைஞர் சொன்னதுதான்: “சூத்திரன் ஆட்சி; கலைத்து விட்டார்கள்!”

ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் உரிமைகளில் நீதிமன்றம் அப்போது தலையிடாததற்கும், இப்போது ஆளுநர் பூட்டாசிங்கின் உரிமையில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநருக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அவர் பதவி பறிபோவதற்கும் இடைக்காலத்தில் என்ன நடந்தது?

சட்டம் ஓர் இருட்டறைதான்! ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது; இந்திய அரசியல் சாசனத்தை விடவும் மனு சாத்திரம் வலிமை வாய்ந்தது. இந்தியா பல சமயங்களில் இதனைக் கண்டிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com