Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2006

ஆலம்பாடி மாடுகளும் அழகான குழந்தைகளும்

ந.நஞ்சப்பன்

ஆலம்பாடி மாடு தரமான சிறப்பு வாய்ந்த வகைகளில் ஒன்று. இந்த வகை மாடுகள் சுறுசுறுப்பானவை, கடுமையாக உழைக்கக் கூடியவை. பசுக்கள்கூட ஏர் உழவும், கபிளைக்கும் பயன்படுத்துவது, கர்னாடக, தமிழகப் பகுதியில் உண்டு. மாட்டு வகைகளிலேயே அழகான லட்சணமான முக அமைப்பும், எடுப்பான கொம்புகளையும், மிடுக்கான தோற்றத்தையும் கொண்டது. இந்த வகையான மாடுகள் செதுக்கி வைத்தாற்போல் கட்டான உடலமைப்புக் கொண்டது. தொடர்ந்து பசுக்களையும், வேலை வாங்குவதால் இதன் தரம் அண்மைக் காலமாகக் குறைந்து வருகிறது. இந்தரக ஆலம்பாடி மாடுகள் வறட்சியான பகுதியிலும் தாக்குப் பிடித்து வாழும் பக்குவத்தைக் கொண்டது. இந்த வகை மாடுகள் தமிழகத்தில் தருமபுரி, கிருட்டிணகிரி, கர்னாடகாவில் கொல்லே கால் மற்றும் இரு மாநில எல்லைப் பகுதியில் அதிகம்.

இந்த ரகமான மாடுகள் தமிழகத்தில் ஒகேனக்கல் அருகே பண்ணைப்பட்டியிலும், காவல்நத்தத்திலும் பாரம்பரியமான வளர்ப்பிடமாக வனத்தில் இருந்து வருகிறது. இந்த வகையான மாடுகள் பிறந்து வளர்ந்த அற்புதமான நிகழ்ச்சி ஒன்றை இந்தப் பகுதியில் கதையாக வழங்கி வருகிறார்கள். இந்த வரலாற்றை திரு.மு.முனுசாமி அவர்கள் நாடகமாக எழுதியுள்ளார். எங்கள் ஊரைச் சார்ந்த பெரியவர்கள் நடித்துப் புகழ் பெற்ற நாடகமாகப் பல முறை நடந்தேறியுள்ளன.

Maruthi's paintings ஆலம்பாடியில் தமிழ் அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். சிற்பி ஒருவன் மன்னனின் அன்புக்குப் பாத்திரமான நண்பன். சிறந்த சிவ பக்தனாக இருந்தாலும், மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற அரங்கநாதர் கோயிலில் இவரது சிற்பங்களால் அலங்கரிக்கச் செய்தான். சிற்பி தன் கை வண்ணத்தால் பல சிற்பங்களை உருவாக்கினான். அரங்க நாதர் கோயிலையே இவரது சிற்பங்கள் அலங்கரித்தன.

கோயிலை ஒட்டிய பகுதியிலும், கல்லில் கலை வண்ணம் கண்டான். குளித்து கூந்தலில் உள்ள தண்ணீரை வழியச் செய்யும் பெண்ணின் அழகே அழகு. இது போல் எத்தனையோ சிற்பங்கள் கடவுளில் இருந்து மனிதர்கள், விலங்குகள் வரை உயிரோட்டமாக செதுக்கி வைத்தான். அவன்மீது அரசனுக்குத் தனி மரியாதை, மக்களும் பெரிதும் போற்றினர். அரங்கநாதர் கோயிலில் நிற்கும் துவார பாலகர்கள் எவ்வளவு கம்பீரமான தோற்றத்துடன் நிற்கிறார்கள்!

சிற்பியின் இருப்பிடம் ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அதை ஒட்டிதான் நீர்த்துறை. ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் இங்கே தான் நீர் எடுக்க வருவார்கள். நாட்கள் பல உருண்டோடின. அந்த ஊரில் பிறக்கும் பல குழந்தைகளின் முகச் சாயல் சிற்பி போலவே இருந்தது.

ஊரில் உள்ளவர்கள் பெரும் ஐயமும், குழப்பமும் அடைந்தனர். அது கோபமாக வடிவமெடுத்தது. சிற்பியின் தகாத நடவடிக்கையால் அவரது சாயலிலே குழந்தைகள் பிறக்கின்றன என்று எண்ணினார்கள். ஆனால் சிற்பியோ அரசனின் அன்பிற்குரியவன். எனவே, அவனை எதிர்க்கத் துணிவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அரசனின் கவனத்திற்குக் கொண்டு போனார்கள். அரசன் அதிர்ச்சி அடைந்தான். தன் நண்பன் சிறந்த ஒழுக்கசீலன் என்றல்லவா எண்ணினோம். குடி மக்களின் கோபத்திற்கு ஆளாகும் வகையில் ஒழுக்கம் கெட்டவனா?

விசாரணைக்கு உத்தர விட்டான் மன்னன். விசாரணையில் தான் நிரபராதி-குற்றம் ஒன்றும் புரியவில்லை. என்று மன்றாடினான் சிற்பி. ஆனாலும் சிற்பியின் தகாத உறவால் பிறந்த குழந்தைகளின் முகச் சாயலை மன்னனுக்குக் காட்டினார்கள் மக்கள். ஒரு சாதாரண சிற்பி அரசனின் அன்புக்கு பாத்திரமாகி விட்டானே. தனக்கு முக்கியத்துவம் இல்லையே என எண்ணிப் பகைத்தவர்கள் இந்தப் பிரச்சனையில் வரிந்து கட்டிக்கொண்டு பேசினார்கள். சிற்பிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றார்கள். சிலர், கைகால்களை வெட்டிவிட வேண்டும் என்றார்கள்.

நல்லெண்ணம் கொண்ட சான்றோர்களும், அரசனும் அற்புதக் கலைகளை உருவாக்கிய கைகளையா வெட்டுவது என்று வெதும்பினார்கள். நெஞ்சம் நொந்தது. சிற்பி கள்ளங்கபடமற்ற நண்பனாகவே இருப்பான் என்று உறுதியாக நினைத்தாலும் சிற்பிக்கு எதிராகக் கிளம்பியுள்ள பெரும் புயலை அடக்க முடியவில்லை. எனவே, தண்டனை வழங்குவதைவிட வேறு வழி இல்லாமல் போயிற்று. தண்டனை வழங்குவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

சிற்பியோ என்னைக் கொன்றாலும் அதற்கு நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், அபாண்டமான இழிபழியை சுமத்துகிறீர்களே அதற்காக வருந்துகிறேன்.

அரசே நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள். கால அவகாசம் தாருங்கள் என்றான். சரி நீ நிரபராதி என்று நிரூபிக்கும்வரை ஊர்ப் பக்கம் வரக்கூடாது, எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது என தடைவிதித்தான்.

சிற்பி ஒரு அழகான காளையைச் செதுக்கினான். (இந்த வரலாற்றுக் கதையை கூறுவதால் நீண்டு நாம் எழுத வேண்டியது பாதிக்கப்படக் கூடாது. என்பதற்காகச் சுருக்குகிறேன்) கம்பீரமான அந்த நந்தியை மாடுகள் நீர்குடிக்க வரும் நீர்த் துறையில் இருந்த பாறையில் நிறுத்தினான். தாகம் தீர ஆற்றுநீரைக் குடிக்கும் பசுக்களும், காளைகளும் கம்பீரமாக நிற்கும் நந்திச் சிலையையே பார்த்துவிட்டுச் செல்வது வாடிக்கையாகி விட்டது. சில பசுக்களும், காளைகளும் புணரும் போதும் நந்திச் சிலையையே பார்த்துச் சென்றன.

காலம் சென்றன. அந்த ஊரில் பிறக்கும் கன்றுகள் எல்லாம் நந்திச்சிலை போலவே பிறந்தன. என்ன விந்தை உயிரற்ற அந்தச் சிலைக்கு எப்படி கன்றுகள் பிறக்க முடியும்? காலக்கெடு முடிந்தது. அரசன் அவையைக் கூட்டினான். சிற்பிக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது. தான் குற்றமற்றவன் என்பதை அவன் நிரூபிக்க வில்லை. எனவே, அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென பலர் வற்புறுத்தினார்கள். சிற்பி அமைதியாக தெளிந்த முகத்தினனாகச் சொன்னான். மன்னா நம் ஊரில் பிறந்துள்ள மாட்டுக் கன்றுகள் எல்லாம் கொண்டுவர உத்தரவிடுங்கள். நான் குற்ற மற்றவன் என்பதை நிரூபிக்கிறேன் என்றான்.

இந்தச் சிற்பி குழப்பத்தை உண்டாக்கி தப்பிக்கும் வழியைத் தேடுகிறான். விடக் கூடாது என்று குரல் எழுப்பினார்கள் சிலர், ஆனால், அமைச்சர் ஒருவர் எழுந்து குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கத் தேவையான வாய்ப்பினைத் தருவதே நீதி. எனவே சிற்பியின் கோரிக்கையை ஏற்கவேண்டுமென அரசனை வேண்டினான்.

அமைச்சரின் ஆலோசனைப்படி அரசன் சிற்பியை நோக்கி கன்றுகளைக் கொண்டு வரலாம். வேறு ஏதேனும் கூறவிரும்புகிறாயா? என்றான். சிற்பி, `மன்னா! நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டும் என எண்ணுவதே இந்த மண்ணை ஆளும் எமது அரசர் ஆட்சியில் நீதி கெட்டுவிட்டது. ஒழுக்கமும், நெறிமுறையும், அறமும் மங்கிவிட்டது. என்று பழி வந்துவிடக் கூடாதே என் பதற்காகத்தான். வேறு நோக்க மில்லை. இந்த வாய்ப்புக்குப் பிறகு எனக்கு என்ன தண்டனையும் கொடுங்கள். உங்கள் ஆணையை சிரமேல் ஏற்பேன்’ என்றான். அதோடு கன்றுகளையும், பசுமாடுகளையும் நீர்த்துறையில் உள்ள நந்திக்கு முன்னால் நிறுத்த வேண்டுகிறேன்’ என்றான். அதை ஏற்று நாளை அனைத்து கால்நடைகளையும் நீர்த்துறைக்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார் மன்னர்.

அரசனும், அமைச்சரும் தனியே ஆலோசனை நடத்தினார்கள். சிற்பி காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார். ஏதோ முக்கியத்துவம் அடங்கியுள்ளது என்பதை யூகித்துக் கொண்டார்கள். அடுத்தநாள் அரசன், அமைச்சர் பரிவாரங்களோடு நீர்த்துறைக்குச் சென்றார்கள். சிற்பியின் வேண்டுகோள்படி நந்திச்சிலையை அமைப்பதற்கு முன் பிறந்த கன்றுகளையும், நந்திச்சிலை அமைக்கப்பட்டபின் பிறந்த கன்றுகளையும் தனித்தனியாகப் பிரித்து நிறுத்தினார்கள்.

அங்கு வந்திருந்த பசுக்களும், காளைகளும் நந்திச் சிலையையே பார்த்தவண்ணம் இருந்தன. கன்றுக் குட்டிகளும் அந்த நந்தியைப் பார்த்துக் கொண்டே நின்றன. இந்த விந்தையை அரசன் கண்டு அமைச்சரை நோக்கினான். அமைச்சரும், அரசனும் புன்முறுவல் பூத்தவர்களாக அரசியை நோக்கினார்கள். அரசி மிக அறிவுக் கூர்மையானவர். அவரது விசாலமான பார்வை இந்த காட்சியைக் கண்டு தீர்ப்பு முடிந்துவிட்டதாகவே பார்வையில் வெளிப்படுத்தினாள்.

அரசன் சிற்பியைப் பார்த்து எதற்காக இங்கு கன்றுகளைக் கொண்டுவரக் கோரினாய் என்றார். `அரசே! நந்திச்சிலை அமைக்கப் பட்டபின் கருக்கொண்டு பிறந்த கன்றுக்குட்டிகள் கற்சிலையான நந்தி போலவே இருக்கின்றன. அதற்கு முன்பு பிறந்த கன்றுகள் வேறு வேறு விதமாக இருக்கின்றன.

இதற்குக் காரணம் நந்திச் சிலை அல்ல. அந்த நந்தியைப் பார்த்து மகிழ்ந்து பூரித்துப்போன மாடுகள் அந்த நந்தி நினைவாகவே அச்சில் வார்த்ததுபோல் கன்றுகளை ஈன்றுள்ளன.

அதுபோலத்தான் நம் ஊரில் பிறந்திருக்கும் குழந்தைகளும் காதல் உணர்வோடு, காம உணர்வோடு நோக்கி, உள்ளத்தில் ஊன்றிய சிந்தனை இருப்பினும் அது உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் எந்த நினைவோடு இருந்ததோ அந்த பாதிப்புடன் விளைவுகளை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல மிக உயர்ந்த பாசமிகுதியாலோ, பக்தியாலோகூட மனரீதியான பதிவை ஏற்படுத்தி இருக்கலாம். அந்த உணர்வோடு - நினைவோடு இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நினைவில் நின்றவர்களின் பதிவையே உருவாக்கலாம். என்னைப் பொறுத்தவரை இரண்டாம் வகையைச் சேர்ந்தவன். இந்த ஊரில் உள்ள சகோதரிகளுக்கு நான் அன்புச் சகோதரன். நான் வடிக்கும் சிற்பத்தைக் கண்டு பாசம் மேலோங்கி, பக்தியாக முதிர்ந்து போனவர்களும் உண்டு. அந்த வகையான பாதிப்பால் எனது தங்கைகளுக்கு ஏற்பட்ட உள்ள உணர்வு அவர்கள் குழந்தைகளுக்கும் உண்டாகி இருக்கலாம். இது உளவியல் ரீதியான பாதிப்பால் விளைந்ததே தவிர எனது குற்றம் இல்லை மன்னா!’ என்றான்.

சிறிது நேரம் ஒரே அமைதி நிலவியது. சிற்பியின் கருத்தை ஏற்பதே சரி என்றார் அமைச்சர். அரசர் ஓடி சிற்பியைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

இந்த வகையில் உருவானதுதான் ஆலம்பாடி வகை மாடுகள் என்ற வரலாறு உண்டு. ஆலம்பாடி ரக மாடுகள் இன்றைக்கும் உயர் வகையைச் சேர்ந்தது. ஆற்றுநீர்த் துறையிலிருந்த பெரிய நந்திச்சிலையை பெருவெள்ளம் அடித்துப் போய்விட்டது.

ஆற்றில் உள்ள கற்பாறையில் உள்ள சிறிய நந்தி மட்டுமே தற்போதும் உள்ளது.

இந்தப் பகுதியும் காவிரி ஆற்றங்கரையில் இருப்பதால் கர்னாடகாவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இந்தப் பகுதி கர்னாடகாவிற்கு தொடர்பே இல்லாத வனப் பகுதியாகும்.

- ந.நஞ்சப்பன், 'புகைக்கல்லில் ஒரு புகைச்சல்' என்ற நூலிலிருந்து...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com