Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2007

வைகுண்டரும் வள்ளலாரும்
- ஆய்வாளர் ப.சரவணன்

19-ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தைச் சீர்திருத்தங்களின் உதயகாலம் என்றே கூறிவிடலாம். ஏனெனில் இந்தக் கால கட்டத்தில்தான் தனிமனிதர்களைச் சார்ந்தும் அரசு சார்ந்தும் பல சீர்திருத்த இயக்கங்களும் சட்டங்களும் உருபெறத் தொடங்கின. கிருத்துவ மதத்தின் தாராளவாதத்துக்கும் சேவை மனப்பான்மைக்கும் அடித்தள மக்கள் குறிப்பாக நாடார், பரதவர், பறையர், பள்ளர் போன்றோர் ஆட்பட்டு வரும் தருணத்தில் இந்து மதம் அதனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கிருத்துவ சமயம் தமது `சேவை நிறுவனங்களின்' வாயிலாகக் கல்வி, உணவு, மருத்துவம் முதலியவற்றை வழங்கித் தீண்டாமையை நடைமுறையாகக் கொள்ளாமல் இயங்கி வந்ததைச் சாதிய இறுக்கத்தில் வாழ்ந்து வந்த சனாதனிகளால் ஜீரணிக்க முடிய வில்லை.

ஆனால் இந்து மதத்தின் கட்டுக்கோப்புக்குள்ளேயே இருந்த சில ஆன்மீக மறுமலர்ச்சியாளர் ள் இவற்றை எதிர் கொண்டழைத்தனர். ஆங்கிலக் கல்வியினூடாக வந்த புதிய சமூகப் பொருளாதார மேலைத்தேயச் சிந்தனை மரபை உடன்பாடாகவோ/ எதிர்நிலையிலோ எதிர் கொள்ள வேண்டிய அவசியம் இந்தியச் சிந்தனையாளர்களுக்கு இருந்தது. இதன் விளைவாகத் தமது சிந்தனை மரபை புனருத்தாரணம் செய்ய வட இந்தியாவில் பிரமசமாஜம் (1828) முதலிய பண்பாட்டு இயக்கங்கள் தோன்றின. அதே நேரத்தில் இம்மறு மலர்ச்சிச் சிந்தனைக்கு நேரடியாக ஆட்படாத இயக்கங்களும் தென்னிந்தியாவில் தோன்றின. இவற்றைத் தோற்றுவித்தவர்கள் கேரளத்தில் வைகுண்ட சாமிகளும் (1809-1851) தமிழகத்தில் இராமலிங்க சாமிகளும் (1823-1874) ஆவர்.

இவ்விருவரின் சிந்தனைகளையும் ஒப்பிட்டுக் காட்டுவதாக அமைகிறது இக்கட்டுரை.
வள்ளலாரின் வாழ்க்கை வரலாறும் - அவரது தத்துவங்களும் பெரும்பாலும் அனைவரும் அறிந்தவையே என்பதால் அதனை விடுத்து வைகுண்டரின் வரலாற்றுச் சுருக்கத்தை ஒருவாறு நோக்குவோம்.

வைகுண்டசாமிகள்
ஓர் அறிமுகம்:

`தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' என்னும் தத்துவத்தை முன்மொழிந்த வைகுண்டசாமி என்கிற முத்துக்குட்டிசாமி 19-04-1809-இல் தென்திருவிதாங்கூருக்கு உட்பட்ட குமரி மாவட்டம், தாமரைக் குளம் - சாஸ்தான் குட்டிவிளை (இதன் இன்றைய பெயர் சாமித்தோப்பு) கிராமத்தில் சான்றோர் (சாணார்) குலத்தில் வெயிலாள் அம்மை - பொன்னுமாடன் தம்பதியினரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். வைகுண்ட சாமிக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் முடிசூடும் பெருமாள். அவர்ணர்கள் (கீழ்வருணத்தார்) இப்படி உயர்சாதிக்கு உரிய பெயரினைச் சூட்டியதைச் சுவர்ணர்கள் (மேல் வருணத்தார்) எதிர்த்தனர். எனவே வேறு வழியின்றி முடிசூடும் பெருமாள் முத்துக்குட்டியானார்.

தென்திருவிதாங்கூருக்கேயுரிய பாரம்பரியக் கல்வியான ஏடு எழுதுதல், ஏடு வாசித்தல் போன்றவற்றை அவரது சமூகம் அவருக்கு வழங்கியது. இவற்றோடு தாமரைக் குளம் கிருத்துவப் பள்ளியிலும் அவர் கல்வி கற்றார் என்பார், திரு. பொன்னு. தமது பதினேழாவது வயதில் கணவனால் கைவிடப்பட்ட திருமால் அம்மாள் என்னும் பெண்ணை அவர் மணந்தார். தமது 22-ஆம் வயதில் கடுமையான நோய் ஒன்றினால் துன்புற்ற வைகுண்டரை அவரது பெற்றோர்கள் திருச்செந தூருக்குத் தூக்கிச் சென்ற னர். இங்கு அவரது வாழ்வில் ஓர் அதிசயம் நிகழ்ந்ததாக `அகிலத் திரட்டு' கூறுவது வருமாறு:

வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் மூழ்கி மூன்று நாள்கள் தவமிருந்தார். அங்கு திருமால் அவருக்குப் பல்வேறு உபதேசம் புரிந்தார். அதன் பின்பு வெளி வந்த அவர் மீண்டும் சாஸ்தான்கோயில் விளைக்குத் திரும்பி மக்கள் குருவானவர். இங்கு வந்த பின் 6 ஆண்டுகள் தவம் மேற்கொண்டார். இதில் முதலிரு ஆண்டுகள் கடுமையான மௌன தவத்தைச் கடைப்பிடித்தார்.

வைகுண்டர் ஆறு ஆண்டுகாலத் தவத்திற்குப் பின் தனது 32-ஆவது வயதில் (1840-இல்) சேவை வாழ்க்கையைத் தொடங்கினார். கலியுகம் நீங்கித் தர்மயுகம் தோன்றவும், சாதிக் கொடுமை அழியவும், பெண்களின் இழிநிலை மாறவும் அவர் பாடுபட்டார். தமது இனம் அனுபவித்தக் கொடுமை களைக் கண்ட வைகுண்டர் சாதி இந்துக்கள், கலிநீசன் (திருவிதாங்கூர்மன்னன்), அனந்த நீசன் (திருவிதாங்கூர் ஆட்சியாளர்கள்), வெண்ணீசன் (வெள்ளைக்காரர்கள்) ஆகியோரைப் பழிவாங்க அறவழியில் போராடினார். அதனால் திருவிதாங்கூர் மன்னன் சுவாதித்திருநாள் கோபத்துக்கு ஆளாகி 1836-இல் கைதானார். 112 நாள்கள் திருவானந்தபுரத்துக்கு அருகேயுள்ள சிங்காரத் தோப்பில் சிறைவைக்கப்பட் டார். தமது 42 ஆவது வயதில் இறையடி ஏகினார்.

வைகுண்டரும் வள்ளலாரும்:-

வள்ளலாரின் பல சீர் திருத்தங்களுக்கு வைகுண்டர் முன்னோடியாக இருந்திருக்கிறார், என்பது நிதர்சனமான உண்மை. ஆயினும் இதனைச் சான்றாதாரங்களோடு ஆய்வாளர் எவரும் விவரித்ததாகத் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சுட்டிக் காட்டப்பட்டுள்ளன அவ்வளவே. உருவ வழிபாட்டிற்கு மறுதலையான ஒளிவழிபாட்டைப் பரப்பியது தொடங்கிப் பல்வேறு சமூகச் சீர்திருத்தங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வைகுண்டரிடமிருந்தே வள்ளலார் பெற்றிருக்கிறார் எனலாம். ஒற்றுமைக் கூறுகள் இவ்விருவரிடையே ஏராளமாகக் காணப்படுகின்றன. வேற்றுமைக் கூறுகளைக் கண்டறிவது சிறிது சிரமமானதே.

ஆன்ம நேய ஒருமைப்பாடு:-

ஆன்மாக்களை நேசிப்பதன் மூலம் பிற உயிர்களிடத்தும் இறைவனிடத்தும் ஒன்றுபடலாம் என்பதே ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதன் பொருளாகும். இதற்கு அடிப்படை ஜீவ காருணியம். அன்பு என்னும் ஆயுதத்தால் அனைத்து உயிர்களையும் வசப்படுத்துவதே ஜீவகாருணியம்.

தென் திருவிதாங்கூரில் தாழ்ந்த குலத்தில் பிறந்து இயல்பாகவே பல கொடுமைகளை அனுபவித்த வைகுண்டர் தொடக்கக் காலத்திலேயே அவற்றைக் களைய விரும்பினார். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்தார், என்பதை அவரது வாழ்க்கைக் கூறுகள் சுட்டு கின்றன. காவி நிறத்தில் வெள்ளை தீபச் சுடரைத் தாங்கி ஒரு கொடியைக் கண்டு அதற்கு “அன்புக் கொடி'' என்றே பெயரிட்டத்திலிருந்தும், தன்னைப் பின்பற்றுவோரை “அன்புக் கொடி மக்கள்'' என்று அழைத்ததிலிருந்தும் வைகுண்டரின் ஆன்ம நேயம் புலப்படுகிறது.

“அன்புமலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வீர்,'' என்பதே அய்யா வழிபாடு.
வள்ளலாரும் ஆன்ம நேயத்திற்கு அடிப்படையான அன்பை, தயவை தமது அருட்பாவிலும், உரை நடைப் பகுதியிலும் பரக்கப் பேசியுள்ளார். “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்/தம்முயிர் - போல் எண்ணி உள்ளே/ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்... (திருவருட்பா 5297) உள்ளமே எம்பெருமான் நடம்புரியும் இடம் என் கிறார்.

“சீவகாருணிய ஒழுக்கத் தினால் கடவுள் அருளைப் பெறக் கூடுமல்லாது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக் கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும். (உரை நடைப் பகுதி - ஜீவகாருணிய ஒழுக்கம்) என்பது வள்ள லார் வாய்மொழி சீவகாரு ணியத்திற்கு வள்ளலார் தரும் வரையரை வைகுண் டரையும் ஒருபடி தாண்டிச் செல்கிறது. “ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப் படுமென்று அறிந்தபோதும் மற்றொரு சீவனுக்கு உருக்க முண்டாவது பழைய ஆன்ம உரிமை என்று அறிய வேண்டும்.''

ஓர் உயிர் துக்கப்படும் என்று முன் கூட்டியே அறிந்து மற்றோர் உயிர் துக்கப்படுவது என்பது உயிர் இரக்கக் கோட்பாட்டின்படி இதுவரை எந்த ஞானியும் கூறாத ஒன்று எனவேதான் “அன்புடையவரே எல்லாம் உடையவர்'' (5438) என்றும் “தயவுடையவர்களே புண்ணிய தேசிகன் என்றும் வள்ளலார் குறிப்பிடுகிறார்.
அன்பு, தயவு, கருணை இவற்றைக் கொண்ட ஒரு மனிதன் மற்ற உயிர்களிடத்தும் அதை அப்படியே செலுத்துவது என்பது இயல்பான ஒன்று தானே. எனவே தான் கோயிலில் உயிர்ப் பலியை வைகுண்டர் நிராகரித்தார்.

“எனக்காரும் பேர்கள்
ஆடுகடாய் கோழி அறுத்துப் பலியிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்''
என்று தமது அன்பர் களுக்குக் கட்டளையிட்டார் அவர். தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமின்றிப் புலால் உண்ணுகிறார்கள். தீண்டாமைக்கு இது ஒரு காரணம் என்று உயர்த் தட்டு மக்கள் கூறியதனாலேயே வைகுண்டர் இப்படிக் கூறினார் என்றும் ஒரு கருத்து உண்டு. ஆனால் சீவகாருணியமே அவரை அப்படிப் பேச வைத்தது. இதையே வள்ளலாரும் தமது பாடல்களில் குறிப்பிடுகிறார். சிறுதெய்வ வழிபாட்டினையே அவர் கண்டிக்கிறார். காடன், மாடன், முனி முதலிய சிறு தெய்வங்களுக்குக் கட்டாயம் உயிர்ப் பலி இடுவதால் தான் அத்தகு வழிபாட்டு முறையே வேண்டாத ஒன்று என்கிறார் வள்ளலார்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com