Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2007

திருவள்ளுவர் படித்த கல்லூரி
பேராசிரியர் இரா.மதிவாணன்

திருவள்ளுவர் எந்தக் கல்லூரியில் படித்தார்? என விசயகாந்தனார் வினா தொடுத்துள்ளார். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதற்காகத் தான் திராவிட இயக்கங்கள் தோன்றின. சற்றேனும் இனப்பற்றும் தன்மானமும் இல்லாமல் சூத்திரர்கள் என்னும் இழிவைப் பொறுத்துக் கொண்ட தமிழனைக் காட்டுமிராண்டி எனப் பெரியார் குறிப்பிட்டார். தமிழர் அனைவரையும் அவர் அவ்வாறு குறிப் பிடவில்லை.

ஆரியத்துக்கு அடி பணிபவர் தம்மைத் தமிழர் என்றோ திராவிடர் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது என்பதே பெரியார் கருத்து. ஆரிய நாகரீகக் கலப்பை எதிர்த்துத் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டிய திருவள்ளுவரைத் தமிழின மீட்பராகப் பெரியாரும் ஏற்றுக் கொண்டார்.

தே.மு.தி.க.வின் தலைவராகிய விசயகாந்தனாருக்கு உண்மையான வரலாறு அவர் பார்வைக்கு தெரியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. மொழி பண்பாடு வரலாறு மூன்றும் பிரிக்க முடியாதவை. இவற்றை ஒதுக்கிவிட்டு வாழ்வியலை மட்டும் அரசியலாக்கிக் கொண்டால் தமிழன் முன்னேறலாம். ஆனால் தமிழினம் உலக அரங்கில் தலைநிமிர முடியாது.

திருவள்ளுவர் ஒரு மதத்தை உண்டாக்கவில்லை. உலகமே வியக்கும் அறிவுச் செல்வத்தை விட்டுச் சென்றிருக்கிறார். புத்தர் இயேசு நபிநாயகம் போன்ற பெருமக்கள் உயர்ந்த அறநூல்களை விட்டுச் சென்றிருக்கின்றனர். இராமபிரான் விட்டுச் சென்ற அறநூல் எதுவுமில்லை. ஒருநூறு படங்களில் நடித்தால் கல்லாத மக்கள் மனதில் அவர் உருவம் பதிவாகி விடுகிறது. ஒரு நடிகைக்குக் கூட ஒருவர் கோயில் கட்டினார்.

ஒரு கதையை ஓராயிரம் முறை சொன்னால் அது தெய்வத் தன்மை பெற்று விடுகிறது. அந்தக் கதை ஏழை எளிய மக்களின் ஏற்றத்திற்கு உதவுகிறது அல்லது குறிப்பிட்ட மேட்டுக் குடியினரின் மேன்மைக்கு மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறதா என்பதுதான் உழைக்கும் பாட்டாளிகள் கேள்வி.

இதைக் கருத்தில் கொண்டே பொது நலனுக்காக அமைக்கப்படும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மதப் போர்வையணிந்து தடை செய்ய வேண்டாம் என்பதற்காகத் கலைஞர் இராமரைப் பற்றிய உண்மை வரலாற்றைச் சொல்ல நேர்ந் தது. அதற்கு நேரடியான மறுமொழி சொல்லலாம். அப்படியில்லாமல் திருவள்ளுவர் படித்த கல்லூரியின் முகவரி கேட்பது பொருத்தமாக இருக்காது. திருக்குறளை ஊன்றிப் படித்தால் அந்த முகவரியைத் தெரிந்து கொள்ளலாம்.

அரசியலையும் பொருளியலையும் பேசவந்த திருவள்ளுவர் பொருளதிகாரத்தில் இறைமாட்சிக்கு அடுத்த முதல் தலைப்பாக கல்வியை வைத்திருக்கிறார். நாட்டில் படிக்காதவர்களே இருத்தலாகாது எனும் நிலை உருவாக வேண்டும் என்பதால் கல்லாமை அதற்கடுத்து வைத்திருக்கிறார். கல்லாத மக்கள் ஒரு சிலர் இருந்தாலும் அவர்களுக்கும் கேள்வி வாயிலாக (கதை, நாடகம் இலக்கியம்) அறிவுச் செல்வம் எட்ட வேண்டும் என்பதற்காகவே கேள்வியை அதன்பின் வரிசைப்படுத்தினார். பொதுமக்கள் நூற்றுக்கு நூறு கல்விகற்கவேண்டும் எனும் உயர்ந்த கருத்து சமற்கிருத நூல்கள் எவற்றிலும் மருந்துக்குக் கூட காண முடியாது.

மலையில் வாழ்ந்த குற மகள் இள எயினியும் மட்பாண்டம் செய்யும் குயமகள் வெண்ணிக்குயத்தியும் பாண்டியன் தமிழ்க் கழகத்தில் புறநானூறு பாடிய புலவர்களாக வீற்றிருக்க முடிந்தது என்றால் அது கல்லூரிக் கல்வியாலா அல்லது திண்ணைப் பள்ளிக் கூட மேம்போக்கு எழுத்தறிவாலா என்று நினைத்துப் பார்க்கவேண்டும். பாரத திராமாயணக் காலங்களில் கல்வியறிவு பொது மக்களுக்குத் தடை செய்யப் பட்டது.

கல்வி கற்று மெய்யுணர்வு (ஞானம்) பெறத் தவம் செய்த கீழ்க் குலத்துச் சம்புகனை இராமன் கொன்றுவிட்டான். சம்புகன் அணுக் குண்டா செய்தான்? மற்ற சாதிகள் முன்னேறக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினான். வால்மீகியின் கதையை உள்ளபடி எடுத்துச் சொன்னால் எரிச்சல் கொள்வது ஏன் என்பதே நடுநிலையாளர் கேட்கும் கேள்வி.

உயர்கல்வி

திருமணம் செய்து கொண்ட பிறகு கூட உயர் கல்வி கற்பதற்காக ஒரு தமிழன் மூன்றாண்டுகள் மனைவியைப் பிரிந்து செல்லலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. பலநாடுகளுக்குச் செல்லுங்கள். பல புதிய நூல்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இறக்கும் வரை படித்துக் கொண்டே இருங்கள் என்னும் கருத்தை

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு''

என்னும் குறளில் திரு வள்ளுவர் தெளிவு படுத்தியிருக்கிறார். வெறும் திண்ணைப் பள்ளிக் கூடத்தோடு தமிழ்ப்படிப்பு நிற்கவில்லை. கணிதம், வானநூல், கட்டடக்கலை, மருத்துவம் என மிகவும் விரிந்த பலதுறைக் கல்வி வளர்ந்திருந்த காலம் அது.

64 கலைகள் பாடத் திட்டமாக நிலவியதைப் புத்தரின் வரலாற்றிலும் காணமுடிகிறது. சட்டாம் பிள்ளை கல்விமுறை ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நன்கு செயற்படுவது கண்டு வெள்ளைக்காரர்களும் அக்காலத்தில் அதை இங்கிலாந்தில் செயற்படுத்தினார்கள். சோழர்களின் நில அளவை முறைகளின் நுட்பங்கண்டு ஆங்கிலேயர் வியப்பால் வாயடைத்துப் போயினர். உயர்கல்விக்காகத் தமிழ் நாட்டில் மூன்றாண்டுக் காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அது தான் திருவள்ளுவர் படித்த கல்லூரி.

தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வியைச் செயற்படுத்து வதற்காகவே பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

“உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று.

என ஆணையிட்டான். எவ்வளவு செலவானாலும் சரி, மேன்மேலும் படித்து முன்னேறு என்றான்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர் காலத்தில் சமற்கிருதத்துக்கு மட்டும் பற்பல கல்லூரிகள் நிறுவப்பட்டன. தமிழ்க்கல்விக்குச் சிறிதும் ஊக்கம் தரப்படவில்லை. ஒரே ஒரு தமிழ்க் கல்லூரியைக் கூட பல்லவர்களோ சோழர்களோ உருவாக்கவில்லை. வெள்ளையர் காலம் வரை தமிழ்க் கல்விக்கு எவரும் துணைநிற்கவில்லை. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் சமற்கிருதப் படிப்புக்கு வழிவகை செய்தார்.

இந்திய நாட்டுக்குரிய தாய் மொழிகளில் கல்வி பயில ஆதிசங்கரர் எள்ளளவும் முயற்சி செய்யவில்லை. மற்ற சாதியினராகிய உள்நாட்டு மக்கள் படித்து முன்னேறக் கூடாது என்னும் ஆரியக் கொள்கை இராமாயணக் காலம் முதல் அப்பன் தொழிலை மகன் கற்க வேண்டும் என்பதற்காகக் குலக்கல்வி கொண்டு வந்த இராசகோபாலச்சாரியார் காலம்வரை நீடித்திருப்பதை எவரும் எளிதாக உணரலாம். இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கல்வியறிவு பறிக்கப்பட்ட நிலையில் வறுமை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரத்துடிக்கும் கோடிக்கணக்கான ஏழைகளின் சார்பில் அவர்களுடைய ஏற்றத்துக்காகக் குரல் கொடுக்கக் கடமைப்பட்டவர் விசயகாந்த்.

தமிழ்மொழி பண்பாடு வரலாறு ஆகியவற்றைக் கவனிக்காத அரசியல் கட்சிகளால் நாட்டுக்கு நிலையான முன்னேற்றம் ஏற்படாது. சமற்கிருதத்தை வளர்த்துக் கொண்டதால் அந்தச் சாதியினர் உயர்ந்தவராக அறிவித்துக் கொண்டார்கள் ஒரே ஒரு தாஜ்மகால் முகமதிய பண்பாட்டை உலகறியச் செய்துவிட்டது. சீனச்சுவர் வரலாற்றில் இடம்பெற்று விட்டது.

கடவுள் வழிபாடு என்பது தனிமனிதனின் உரிமை. அந்த உரிமை பொது நலனுக்குக் கேடாக இருந்தால் அரசியல் தலைவர்கள் கண்டிக்க வேண்டும். அதனை மதத்தில் தலையிடுவதாகவோ மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாகவோ கருதலாகாது. சககமனம் என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் வடநாட்டில் இருந்தது. அந்த மாற்ற முடியாத நம்பிக்கையை இராசாரம் மோகன்ராய் அகற்றவில்லையா? இது விசயகாந்தனாருக்குத் தெரியாத செய்தியன்று.

இராமன் வாழ்ந்த காலத்தில் இலங்கையும் தமிழ்நாடும் ஒரே நிலமாக இணைந்திருந்தது. அங்குக் கடலே இல்லை. கி.மு.2387 இல் ஏற்பட்ட கடல் கோளின் போது இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்பட்டன என்று டென்னட் என்பவர் இலங்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

கடலே இல்லை பாலம் எப்படி வந்தது?

இராமர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடலே இல்லை. இராமர் எப்படிப் பாலம் கட்டியிருக்க முடியும்? வால்மீகி குறிப்பிடும் இலங்கை என்பது நில நடுக்கோட்டுக்கு அருகில், அதாவது குமரிமுனைக்குத் தெற்கேயுள்ள தியாகோ கார்சிகா என்னும் சூரியத் தீவுப்பகுதியைச் சார்ந்தது தான் என அறிஞர் பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வால்மீகியும் 100 யோசனை (500மைல்) தொலைவில் இலங்கை இருந்ததாகச் சொல்கிறார். இன்றைய இலங்கை வெறும் 30 மைல் தொலைவில் உள்ளது. குமரிக்குத் தெற்கே கடல் கொண்ட மகேந்திர மலையிலிருந்து வான்வழி யாகக் கடலைத்தாவிச் சென்றான் என்றே இராமாயணம் கூறுகிறது. வரலாற்றை மறைத்துப் புராணம் எழுதியவர்களால் ஏற்பட்ட குழப்பத்தையும் தீங்குகளையும் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழன் விட்டுக்கொடுத்துக் கெட்டுப் போனவன்

நேற்றைய வரலாற்றைப் படிக்காமல் நாளைய வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள முடியாது. ஆரிய இனம் பிழைக்க வந்த இடத்தில் உழைக்காமல் உயர்ந்து வாழத் திட்டம் தீட்டி வெற்றி பெற்று விட்டது. தன்னுடைய மொழி பண்பாடு ஆகிய வற்றை விட்டுக் கொடுக்கா மல் காப்பாற்றவும் தெரிந்து கொண்டது. எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்துக் கெட்டுப் போனவன் தமிழன். இந்தியாவில் எல்லா மாநில மொழியினரும் ஏமாந்து போனபோது இவனும் ஏமாந்து போனான்.

தம்மைத் தாழ்த்துபவர்களை உயர்த்திப் பேசும் பேதையாகி விட்டான். இன்று அரசியல் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சமூகச் சீர்திருத்தம் தொடர்பாகப் பேசுபவர்கள் இல்லை. இந்திய அளவில் சமூக சீர்திருத்தம் பேசும் அரசியல் தலைவர்கள் உருவாகும் வரை இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாடு முன்னேற்றம் ஆகியவற்றில் சீரான வளர்ச்சியைக் காண முடியாது.

முதலில் இம்மண்ணுக்கே உரிய மொழி பண்பாட்டில் உறுதி வேண்டும். வடநாட்டுக் கதைக்காக நம் திருவள்ளுவரை நாமே போட்டிக்கு அழைக்கக் கூடாது. அரசியல் தலைவர்களே! சாதிக்கு ஒரு நீதி கூறும் சமற்கிருத நூல் கருத்துக்களை எதிர்த்துப் பேசி எல்லோருக்கும் சமவுரிமை கிடைக்கச் செய்யுங்கள். கர்ணனைத் தேரோட்டியின் மகன் என இகழ்ந்த மகாபாரதச் சாதி வெறிக்குப் பாதுகாப்பு அளிக்கவே கண்ணன் பகவத் கீதையில் நானே நான்கு வருணங்களைப் (சாதிப்பிரிவுகளை) படைத்தேன் என்கிறான். இது சமவுரிமை வழங்கும் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அரசியல் தலைவர்கள் ஏன் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள்?

திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என முழங்கினாரே. அந்த முழக்கத்திற்கு ஊக்கம் தரும் அரசியல் தலைவர்களால்தான் இந்தியா ஒருமைப்பாட்டுக்குரிய பெருமை பெறும். திருவள்ளுவர் பெற்ற கல்வியறிவின் சிறப்பும் புலப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com