Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

மரணப் படுக்கையில் தாய்மொழிகள்
கோவி.லெனின்

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்கிறார் கவிஞர். ஒரு மனிதனின் சராசரி பயன்பாட்டிற்கு 200, 300 சொற்கள் போதும், எனில், சொல்லாமல் தேங்கிக் கிடக்கும் சொற்களுக்கான அவசியமும் மதிப்பும் என்ன?

‘இரு குரங்கு சாறெடுத்து' அருந்தினால் கடும் நோயும் குணமாகும் என்கிறது சித்தர் பாடல். அத்தகைய பாடல்களில் புது ஈடுபாடு கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் வெளியில் சொல்ல முடியாத தனது நோயை குணப்படுத்துவதற்காக காடு மேடுகளில் குரங்களைக் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் புரியவில்லை. ‘இரு குரங்கு' என்ற சொல்லின் உள்ளர்த்தம் மந்தி, வானரம், கவி என குரங்கை பலவித மாக அழைக்கும் தமிழ் வழக்கத்தில் உள்ள மற்றொரு சொல், ‘முசு' இந்தத் சொல்லை அறியாத நண்பர், ‘இரு குரங்கு'களுக்காகக் காடுகளில் தாவிக் கொண்டிருக்கிறார்.

ஒரு குரங்கு என்றால் முசு. இரு குரங்கு என்றால் ‘முசு முசு', இந்தப் பெயரில் ஒரு தாவரமும் இருக்கிறது என்பதை நண்பர் அறியமாட்டார். இருகுரங்கு சாறெடுத்து என்று சித்தர்கள் பூடகமாகச் சொல்வது இந்த ‘முசுமுசு' செடியிலிருந்து சாறெடுத்துச் சாப்பிட்டால் கடும் நோயும் குணமாகும் என்பதைத்தான் சொல்லின் அர்த்தம் புரியாத நண்பரோ சைவப்புலியாக இருந்த போதும் குரங்குகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

பயன்பாடின்றி அழிந்து வரும் சொற்களால் அனுபவப் புதையல்களும் அறிவியல் உண்மைகளும் மண் மேடாகிக் கொண்டிருக்கின்றன. காலத்தின் கரங்கள் கொடூரமானவை. தேவையற்றவைகளை தயவு தாட்சண்யமின்றி கசக்கி எறிந்துவிடும் சொல்லோ, மொழியோ அதற்கு ஒரு பொருட்டன்று தேவையை உணர்த்தும்போதுதான் காலம் அதைத் தன் பெட்டகங்களில் பாதுகாத்து வைக்கும்.

அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியாலும் சுருங்கி வரும் உலகத்தில் இரு வாரங்களுக்கு ஒரு மொழி மரணமடைகிறது என்கிற பயங்கரத்தை நம்மில் பலர் உணர்ந்திருக்கவில்லை. செப்பு மொழி பதினெட்டுடையாள் என்று பாரத மாதாவை பாரதி பாடினாலும் அவளது மொழிக் குழந்தைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை அனாதையாக விடப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

1961-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1652 மொழிகள் இருப்பது பதிவானது. ஆனால், 1991-ல் 114 மொழிகள் மட்டுமே பதிவாகின. 8வது அட்டவணையில் 22 மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக்குவதற்கு முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் தேசிய இனங்கள்.

சமஸ்கிருதம், இந்தி எனும் இருமொழிகளை மட்டுமே பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பாரத மாதா மற்ற மொழிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவதால் மொழிகளின் அகால மரணம் நிகழ்ந்தபடியே இருக்கிறது.

பொருளாதார ரீதியிலான தேடல்களுக்குப் பயன்பாடில்லாத தாய்மொழியைப் பேசத் தயங்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளது சுதந்திர இந்தியா. போலிக் கவுரமும் பொருளாதார வாய்ப்புகளும் உள்ள மொழிகளை நாடிச் செல்பவனே புத்திசாலி என்கிறது இந்தச் சமுதாயம். மனிதன், சமுதாய விலங்காக இருப்பதால் அவன் ஆட்டு மந்தை போல பயணிக்க வேண்டியதாகிறது.

ஜார்கண்ட்-சட்டீஸ்கர் மாநிலங்களில் குரூக்ஸ் என்ற மொழி பேசிய இனம் தன்னுடைய பொருளாதார வாய்ப்புகளுக்காக வேறு இடங்களை நோக்கிச் சென்றதால் தாய்மொழியை அந்த இனம் மெல்ல மெல்ல கைவிட்டுவிட்டது. அந்த இனத்தில் உள்ள 50 விழுக்காட்டினர் தற்போது தங்கள் தாய்மொழியை அறிந்திருக்கவில்லை.

நகரம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களும், பூர்வக் குடிகள் மீது பாராமுகமுமே அரசுகளின் செயல்பாடுகளாக இருப்பதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. மனித குலத்தின் ஆதிக்குடிகளின் வழிவந்தவர்கள் என அறியப்படுபவர்கள் அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியினர்.

‘கிரேட் அந்மதமானீஸ்' என்று அழைக்கப்படும் இனத்தில் இன்று அந்த மொழியை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் வெறும் ஏழே பேர்தான். ஓங்கே என்ற அந்தமான் பழங்குடி மக்களின் மொழி 100 பேரிடமும், ஜாரவா பழங்குடியினரின் மொழி 250 பேரிடமும் மட்டுமே மிஞ்சியுள்ளது. அடுத்த தலைமுறைகளில் இந்த மொழிகளை அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதுதான் தற்போதைய நிலைமை.

ஒரு மொழி மரணமடையும்போது, ஓர் இனம் அழிவதுடன் அந்த இனத்தின் கலாச்சாரமும் அறிவுச்செல்வமும் புதையுண்டு போகிறது. சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கிய போது இந்தியாவில் முதன் முதலில் பாதிப்புக்குள்ளான பகுதி அந்தமான் - நிகோபார் தீவுகள்தான். அங்கிருந்த ராணுவத்தினர், அதிகாரிகள், வணிகத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் எனப் பலரும் ஆழிப்பேரலைக்கு பலியாயினர்.

அந்தமானின் பூர்வகுடி மக்களான பழங்குடியினர் என்னவானார்கள் என்பதை அறிய இந்திய அரசு ஹெலி காப்டரை அனுப்பியது பழங்குடிகள் வாழும் பகுதிக்கு மேலே அந்த ஹெலிகாப்டர் பறந்த போது, ஏதோ ஒரு புதிய சக்தி தங்களை தாக்க வருகிறது என நினைத்து, ஹெலிகாப்டரை நோக்கி அம்புகளை விட்டார்கள் அந்தப் பழங்குடியினர்.

ஆழிப்பேரலையின் கோரத் தாக்குதல்களிலிருந்து இவர்கள் தப்பித்தது எப்படி என வல்லுநர்கள் ஆய்வு செய்தபோது, இயற்கைப் பேரிடரை வாழ்வனுபவத்தின் வாயிலாக முன் கூட்டிய அறிந்துகொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருப்பதாகவும், அதனால் ஆழிப்பேரலைத் தாக்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே மேடான பகுதிக்கு இவர்கள் சென்று விட்டார்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

ஆழிப்பேரலை என்பது இந்திய கடற்பகுதி சந்தித்த புதிய ஆபத்து அதனை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஓர் இனம் இந்த மண்ணில் இருக்கிறது என்கிறபோது, அதன் அறிவினைப் பாதுகாக்க வேண்டியது அறிவியல் பூர்வமான அணுகுமுறையாகும். அந்த அறிவினைப் பாதுக்க வேண்டுமெனில், அவர்களின் மொழியும் அதில் உள்ள சொற்களும் பாதுகாக்கப்படவேண்டும்.

பொருளாதார வசதிகளுக்காகப் பிறமொழிகளைத் தேடிச் சென்றவர்களை ஆழிப்பேரலை தன் பகாசுர வாய்க்குள் சுருட்டிக் கொள்ள, தாய்மொழிக் கலாச்சார வழியிலான அறிவைப் பெற்றிருந்தவர்கள் மட்டுமே மொத்தமாக உயிர் தப்பியிருக்கிறார்கள் என்பது மொழிகள் குறித்த புதிய சிந்தனைகளை விதைக்கிறது.

ஏற்றத்தாழ்வற்ற நிலையில் எல்லா மொழிகளுக்கும் உரிய மதிப்பையும் வாய்ப்புகளையும் அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அரசுக்கு உணர்த்துகிறது.

“அழிந்து வரும் மொழிகள் எவை என்பதை முதலில் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தவும், அதனை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையத்தின் தலைவர் இலங்கையன். “அரசு ஆதரவளித்தால் இந்தியாவில் உள்ள பலவித மொழிகளையும் பாதுகாத்து அதன் கலைச்செல்வங்களை மீட்டெடுக்க முடியும்'' என்கிறார் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்பான லிவ் விங் டங்ஸ் (பேசும் நாக்கு) நிறுவனத்தின் இயக்குநர் கிரிகரி ஆண்டர்சன்.

அரிய வகைத் தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள், கடலுயிரிகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் இயக்கங்கள் வலுப்பெற்றிருப்பதுபோல, மரணப் படுக்கையில் உள்ள மொழிகளைக் காப்பாற்றுவதற்கான இயக்கங்கள் இந்தியா முழுவதும் வலுப்பெற வேண்டிய தருணம் இது. தாய்மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளைக் கொண்ட பெருமைமிகு தமிழ் மண்ணிலிருந்து இது வீறுகொள்வது பொருத்தமாக அமையும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com