Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

என்ன நடக்கிறது மலேசியாவில்?
- திரு.வீரபாண்டியன்
(சன் டி.வி.அரசியல் விமர்சகர், சிங்கப்பூர் வானொலி நிலைய முன்னாள் தயாரிப்பாளர்)

இந்தியாவைப் போலவே மலேஷியாவும் பிரிட்டிஷ் கலானி நாடாயிருந்து, 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலாயாவுக்கு (மலேஷியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும்போது ஆங்கிலேயர்கள் ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்தனர். `உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி மக்களுக்கும் பூர்வீக மலாய் மக்களைப் போல குடியுரிமை வழங்க வேண்டும்' என்பதுதான் அந்த நிபந்தனை. மலாயாவின் அன்றைய தேசியத் தலைவர்கள் இதனை மனமுவந்து ஒப்புக் கொண்டனர். அதன்படி சுதந்திரத்துக்கு முன்னர் யார், யாரெல்லாம் மலாயாவில் வாழ்ந்து வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் இனப் பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் ஏராளமான உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும், மேம்பாடுகளையும் அடைந்து மேன்மையோடு வாழத் தலைப்பட்டனர். அந்த நாட்டின் பூர்வீகத் தாய்மொழியான மலாய் மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறவியிலேயே மொழி வல்லமை மிக்குடையவர்களான தமிழர்கள் (Born Linguists) மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்து பூர்வீகக் குடிகளோடு இரண்டறக் கலந்தனர்.

பள்ளிகளில் சீனமொழியும், தமிழும் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப்பட்டது. சிறுபான்மைச் சமுதாயமான மலாய் அல்லாதார் தங்கள் மொழியை ஒரு பாடமாகப் பயில அனுமதிக்கப்பட்டனர். தமிழ் வானொலியும், தொலைக்காட்சியும் இருபத்து நான்கு மணிநேரமும் இன்னிசை முழங்கி இன்பத்தில் ஆழ்த்துகின்றன. திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. தமிழ்நாட்டுக் கலைஞர்களும், பேச்சாளர்களும், அடிக்கடி அங்கே சென்று பைந்தமிழ் முழங்கிப் பரவசப்படுத்தி விருந்துண்டு வெற்றியோடு திரும்புகின்றனர்.

இந்தியத் தமிழர்கள் ஏராளமானோர் இப்போது மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அந்த நாட்டின் மிகச் சிறந்த கல்விமான்களில் பலர் தமிழர்கள் என்பது உலகறிந்த உண்மை. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வார்த்தையில் சொல்வதாயிருந்தால், “தாய்நாட்டுத் தமிழனை விட மலேஷியத் தமிழன் மகிழ்ச்சியாயிருக்கிறான்'' அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வெளிவரும் தமிழ்நாளிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 3, தமிழ் வார இதழ்கள் ஆறும், மாத இதழ்கள் ஏழும் வெளிவருகின்றன. மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 14க்கு மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படுகின்றன. நாடு முழுவதும் ஏறத்தாழ 30 அரங்குகளில் தமிழ்ப் படங்கள் வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மலேஷியத் தமிழர்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் மலேஷிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா.) இதன் புகழ் பூத்த தலைவராயிருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு, அந்த நாட்டின் கேபினெட் மந்திரியாயிருக்கிறார். இவரோடு திரு.பழனிவேலு போன்ற மேலும் மூன்று பேர் துணை அமைச்சர்களாயிருக்கின்றனர். இவர்களையல்லாமல் 3 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருக்கின்றனர். சிற்றூர்களிலும், நகராட்சிகளிலும் பல முக்கியமான பொறுப்புகளைத் தமிழர்கள் வகிப்பது கண்கொள்ளக் காட்சியாகும். அந்த நாட்டின் தலைமை நீதிபதியாகவே ‘அஜித் சிங்’ என்னும் இந்தியர் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் பலர் நீதிபதிகளாக இப்போதும் பணியாற்றுகின்றனர். நாடாளுமன்ற செயலர்களாக நம்மவர்கள் பலர் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்.

1965ஆம் ஆண்டு வரை ஒரு மாநிலமாயிருந்த சிங்கப்பூர், தனி நாடாகப் பிரிந்து சென்றது. அது முதல் உலக வரைபடத்தில் சிங்கப்பூர் குபேரபுரியாகக் கோலோச்சத் தொடங்கியதைக் கூறக் தேவையில்லை. சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகார மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. நாணயத்தில் தமிழ் பொறிக்கப்பட்டது. `சீனர்களுக்கு மட்டுமல்ல; எல்லா இன மக்களுக்கும் பொதுவான நாடு' என்று சிங்கப்பூர் பிரதமர் சொல்லி மகிழ்ந்தார். ஆனால், மலேஷியா தனது மலாய் மொழியையே ஆட்சி மொழியாக்கி அழகு பார்த்தது, அந்த மொழியைக் கற்றவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கும், அரசுப் பதவிகளுக்கும் வர முடியும் என்ற நிலை வந்தது.

மலேஷியாவின், மண்ணின் மைந்தர்கள் (பூமி புத்ரா) எனப் பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்கள்,

1. பரம்பரை, பரம்பரையாக மலேஷியாவில் வாழ்வோராயிருக்க வேண்டும்.
2. மலாய் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும்.

இந்த விதிகளுக்குள் வருவோர் மட்டுமே, `பூமி புத்ரா என அழைக்கப்படுவர். இந்த விதிகளை வகுத்ததோடு மட்டுமின்றி, மலேஷிய அரசாங்கம், தங்களுடைய நாட்டை ஓர் இஸ்லாமிய நாடு எனப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்ட பூர்வமான மத வழிப்பட்ட இஸ்லாமிய நாட்டில் அரசாங்கத்தின் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளதுதான்.

நிலைமை இவ்வாறிருந்தும் பூர்வீகக் குடிமக்களான மலாய் மக்கள் மத்தியில் மன நிறைவு இல்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமூக மக்கள் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில் மீன்பிடித் தொழிலைச் செய்து படிப்பும், முன்னேற்றமுமில்லாமல் வாழ்ந்ததுதான். இயற்கையிலேயே ஊக்கம் மிகுந்த சமூகமான சீனர்களும் இந்தியர்களும் வர்த்தகத்திலும், வேலை வாய்ப்பிலும் மிக முன்னணிக்கு வரத் தொடங்கினர். பொதுத் தேர்தல்களில் நகரப் புறங்களில் சீனர்களே வெற்றி பெற்றனர். இவற்றைக் கண்ட மலாய் சமூகத்தினரை தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட்கொண்டது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வேண்டுமெனப் போராடினர்.

1969ஆம் ஆண்டு மே 13 அன்று மலேசியாவில் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மை மலாய் மக்களுக்கும், சீனர்களுக்கும் ரத்தவெறி கொண்ட யுத்தம் நடந்தது. தெருவெல்லாம் பிணங்கள் விழுந்தன. இறுதியில் அரசாங்கம் மலாய் மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செய்தது. 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் எட்டு விழுக்காட்டினராயிருக்கும் இந்தியர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் ஒதுக்கியது மலேசிய அரசு. கலவரம் நடந்த நாளை இன்று வரை மலேசிய வரலாற்றி “கறுப்பு நாள்'' என்று அழைக்கின்றனர்.

போராட்ட உணர்ச்சியோடு, போர்க்கோலம் பூண்ட பூர்வீகக் குடிமக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்த மலேசிய அரசு, இந்திய சீன சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் வழங்கித்தானிருக்கிறது. இலங்கையைப் போலவோ, ஏனைய உலக நாடுகளில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவோ `இன ஒதுக்கல்' எதுவும் அங்கே நடைபெறவில்லை. திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற நமது தமிழர்கள் இன்று வரை இங்கே வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். சம்பாதிக்கிற செல்வத்தைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில்தான் சொத்துக்களை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர், கடையநல்லூர், தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் தமிழ் மண்ணுக்கு ஏராளமான வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றனர். அந்த நாட்டில் சம்பாதிப்பதை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்கிற எந்த நிபந்தனையையும் மலேசிய அரசு விதிப்பதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

இதுதான் மலேஷியாவின் பூர்வ கதை. இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனி நாம் சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

மலேஷியாவின் பிரதானமான தொழிலாய் இருந்த ரப்பர் தோட்டங்கள் லாபகரமாய் இல்லாததால், அவை இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. பல தனியார் தோட்டங்கள் அரசுடைமையாக்கப்படுகின்றன. அவ்வாறு அரசுடைமையாக்கப்படும்போது அங்கே குடியிருப்பு வசதிகளை அரசே செய்து கொடுக்கிறது. அந்த இடத்தில் இருந்த கோவில்களோ, பள்ளிவாசல்களோ அகற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. புதிய குடியிருப்புகளில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியது. பத்து கோவில்கள் இருந்த இடத்தில் ஒரே ஒரு கோவிலுக்கு இடம் கொடுப்பதாக அரசு சொல்கிறது.

உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. `செந்தூல் முருகன்' கோவிலும், `பத்துமாலை முருகன் கோவிலும் தைப்பூசவிழா கொண்டாடி மகிழ்கின்றன. நாடெங்கும் ஏராளமான சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களும் பரந்து காணப்படுகின்றன. 59 சதவீத மலாய் முஸ்லீம்கள் இருக்கும் நாட்டில் 4000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் 8 சதவீத இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோவில்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்பது உன்னதமான வரலாறு அல்லவா? (அரசாங்கமே நிதியுதவி கொடுத்துக் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்திப் பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை இந்தக் கட்டுரையாளரே பார்த்து ரசித்திருக்கிறார்) இதற்கிடையில் அரசாங்கத்தின் பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டப்படும் கோவில்களை அரசு அப்புறப்படுத்தத்தானே செய்யும்? அவ்வாறு அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களும் பள்ளிவாசல்களும் ஆயிரக் கணக்கில் அப்புறப்படுத்தப்பட்டதைக் கடந்த காலம் கண்டிருக்கிறது.

நூற்றுக் கணக்கான ஆண்டுகளாய் அங்கே வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள் இதுநாள் வரை இதைப் பிரச்சினை ஆக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் கணினி விற்பன்னர்களாகவும், உயர் தொழில் நுட்பக்காரர்களாகவும் அங்கே சென்ற இந்தியர் சிலர் இந்துக் கோவில்களுக்கு ஆபத்து என்கிற விஷ விதையை ஊன்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது இந்தக் கருத்தின் உள்நோக்கம் புரியாத பூர்வீகத் தமிழர்களும் இதற்குப் பலிகடா ஆகியிருப்பதுதான் பரிதாபமான செய்தி. மலேஷிய பல்கலைக் கழகத்தில் இந்தியப்பிரிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே `தமிழ் மொழிப்புலம்' செயல்பட்டு வருகிறது. அதில் தமிழ், கலை, இலக்கியத்திற்கே இதுகாறும் முக்கியத்துவம் தரப்பட்டு மேம்பாடு காணப்பட்டது.

அங்கே அண்மைக் காலத்தில் `பாரதீயப் பண்பாட்டு விழா' என்கிற விழாவை ஏற்படுத்தி அதில் இந்துத்துவச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தத் தொடங்கினர். `பாரதீயம்' என்கிற வார்த்தை எத்தகைய பூர்வீகம் கொண்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கடந்த 2006ஆம் ஆண்டில் இப்படிப்பட்ட ஓர் விழாவை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டிலிருந்து இந்துத்துவச் சிந்தனையாளர்கள் சிலரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் போயிருக்கின்றனர்.

தமிழகத்திலிருந்து போனவர்கள் `சமஸ்கிருத ஸ்லோகம்' - பஜனை - ஆன்மீகப் பயிற்சி என்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ்.பாணியில் விழாவை நடத்தியிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியாவிலிருந்து தமிழர்கள் சிலரைக் கலாச்சாரப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லித் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கே அவர்கள் நடத்திய வகுப்புகளில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டுக் கெதிரான ஆரியத்தின் கூறிய ஆயுதங்கள் என்பதைக் கண்டு கொண்ட மலேஷியத் தமிழர்கள் வகுப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மலேஷியா திரும்பிவிட்டனர். (பெயர்களைச் சொல்வது நல்லதல்ல என்பதால் விடுகிறோம்.)

இந்தியர்கள் நலனுக்காகப் போராடுவதாகக் கிளம்பியிருக்கும் இவர்கள் தங்கள் அமைப்புக்கு வைத்திருக்கும் பேர் என்ன தெரியுமா? `ஹிண்டராப்' என்பதுதான். (Hindu Tigths Action Fortce) அதாவது, “மொழிவழி மக்களான தமிழர்களுக்கான போராட்டமெனில் `தமிழர் கோரிக்கைக் குழு' எனப் பெயர் சூட்டியிருக்கலாம் அல்லது `இந்தியர் நலம் நாடும் சங்கம்' எனச் சொல்லியிருக்கலாம். இடையில் `ஹிந்து உரிமை' எங்கிருந்து வந்தது? ஓர் இஸ்லாமிய நாட்டில் இந்து மதத்தின் பெயரால் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால் ஓர் தேசிய அரசு அதை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்?

துபாய் போன்ற அரபு நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்பு ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா என்பதை எண்ணிப்பாருங்கள். தென் கிழக்கு ஆசியாவிலேயே மதத்தின் பேரால் ஆளும், மிகச் சிறந்த ஜனநாயக நாடு என மலேஷியா பேர் பெற்றிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது பிரிட்டிஷ் தூதரகத்திடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துப் போராடுகின்றனர். தங்கள் மூதாதையர்களைத் தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் உழைப்புக் கூலிகளாக அழைத்து வந்து பிரிட்டிஷ் அரசு ஏமாற்றிவிட்டது என்றும், அதற்காக ஒரு தமிழருக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மலேஷியாவை விட்டுப்போய் அரை நூற்றாண்டாகிவிட்டது. இப்பொழுது இப்படியொரு வினோதமான கோரிக்கை; உலகநாடுகள் இதைப் பார்த்து எள்ளி நகையாடாதா? இந்தக் கோரிக்கையோடு இங்கிலாந்து தூதரகத்திற்கு ஊர்வலம் புறப்பட்ட போதுதான் மலேஷியக் காவல்துறை, அவர்களைத் தடுத்து நிறுத்தியது. கலவரம் வெடித்தது. முன் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஓர் அரசு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்? கடந்த தீபாவளிக்கு முதல் நாள் (2007 - அக்டோபர்) அத்து மீறிக் கட்டப்பட்ட ஒரு கோவில் - ஒரு பள்ளி வாசல் - முப்பத்திரண்டு வீடுகளை அரசு அப்புறப்படுத்தியது. இது குறித்தும் `ஹின்ட்ராப்' அமைப்பு ஆத்திரப்படுகிறது.

அன்னிய மண்ணில் வாழப் போனவர்கள் அந்த அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். அத்துமீறினால் அல்லல்தான். இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்யும் கொடுமையைப் போன்றதல்ல மலேஷிய நிலை. இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டமும், போர்ப்பாட்டும் தொடருமானால் எதிர்காலத்தில் இந்தியர்கள் யாருக்கும் அங்கே விசாவோ குடியுரிமையோ கிடைக்காமல் போகலாம். இது கொள்ளிக்கட்டையைத் தலையில் எடுத்துச் சொறிந்து கொள்ளும் முயற்சி.

நன்றி ‘ஜனசக்தி’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com