Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2007

வேண்டாம் வீண் பெருமை

ஆனாரூனா

விசித்திரமும் வேடிக்கையும் விபரீதமும் நிறைந்த வரலாறு, இந்திய வரலாறு. புன்னகையும், கண்ணீரும், விழுமியங்களும், அவலங்களும், தியாகங்களும், துரோகங்களும் நிறைந்த காட்சிகள் இந்திய வரலாற்றில் ஏராளம். ஆனால், இந்தியா என்பது ஒரு திட்டவட்டமான, ஒரு தேசியப் பின்னணி கொண்ட நாடுதானா?

தொன்மை ஏடுகளும், இதிகாச புராணங்களும், இலக்கியச் சான்றுகளும் இந்தியா என்கிற ஒரு நாடு பற்றிப் பேசவே இல்லை. சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும், நிலப்பிரபுக்களும், பொதுவில் குல-கணத் தலைவர்களின் ஆளுமையின் கீழேதான் வெகு காலம் கடந்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்தியா என்று எந்த ஒரு பகுதியும் அறியப்படவில்லை.

பல குழுக்கள் ஆற்றோரங்களில் நிலைபெற்றும், பல குழுக்கள் புலம்பெயர்ந்தும், வேறு சில குழுக்கள் தொலைதூரங்களிலிருந்து நாடோடிகளாகவும் வந்து, கலக்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல், பொங்கிப் புழுங்கி சகித்துச் சமாளித்து எப்படியோ வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள். ஆனால், பல குழுக்களைச் சேர்ந்த மக்கள் இங்கே நிலைத்தும், அலைந்தும், வாழ்வாதாரங்களுக்காகப் போராடி வந்தாலும், இந்தக் குழுக்களால் வந்தேறிகளான ஒரு கூட்டத்தை மட்டும் எப்போதும், நிரந்தரப் பகை இனமாகவே கருதி வந்திருக்கிறது. அந்த கலக்க முடியாத கலக்க நிலை இன்றுவரை தொடரவே செய்கிறது.

இந்தப் போக்கினைத் தான் வரலாற்றறிஞர்களும், சமூகவியலாளர்களும் “ஏடறிந்த இந்திய வரலாறு” (?) அனைத்தும் திராவிட - ஆரியப் போராட்டங்களின் வரலாறே.’’ என்று குறிப்பிடுகிறார்கள். ‘இப்போது’ எழுதப்படும் இந்திய வரலாற்றுப் புனைவுகளில் மௌரிய அல்லது அசோக சாம்ராஜ்யம் மாத்திரமே வடக்கில் பேரரசாகவும், ராஜராஜசோழனின் சோழ சாம்ராஜ்யம் மாத்திரமே தெற்கில் பேரரசாகவும் விளங்கியதாக விளக்கப்படுகின்றன. (இந்தப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்னணியிலும், திராவிட - ஆரியப் பிரச்னை பெரும்பங்கு வகிக்கிறது. அதிகார மையங்களில் சாதுரியமாக நுழைந்து, ‘வரம் கொடுத்தவன் தலையிலேயே கால் வைக்கும் காரியங்களைத் திறம்பட நடத்தினார்கள் ஆரியர்கள்.)

அசோக சாம்ராஜ்யமோ, சோழப் பேரரசோ இந்திய உணர்வை ஏற்படுத்தவில்லை. அசோகன் காலத்திலும், அவனது பாட்டன் சந்திரகுப்தன் காலத்திலும் படையெடுத்து வந்த அலெக்சாண்டரும், அவனைத் தொடர்ந்து வந்த தளபதிகளும், மெகஸ்தனிசின் குறிப்புகளும் வடக்குப் பகுதியை சிந்து நதிப் பிரதேசம் என்று குறிப்பிடுவதற்காக - சிந்தஸ் அல்லது இந்தஸ் என்று வழங்கினார். இந்த ‘இந்தஸ்’ என்பதன் திரிபே இந்தியா என்று விரிந்தது. பின்னர் வந்த பிரிட்டிஷ்காரர்கள்தான் பல்வேறு குறுநில மன்னர்களின் ஆட்சியில் கிடந்த பகுதிகளையெல்லாம் வென்று, இந்தியா என்கிற பெயரைச் சூட்டினார்கள்.

பெயர் ஒன்று சூட்டப்படுவதாலேயே ஒரு பூ அல்லது ஒரு பொருள், அல்லது ஒரு நாடு - எதுவும் அதன் இயல்பான தன்மையிலிருந்து மாறி புதிய பெயருக்குத் தகுந்த தன்மையைப் பெற்று விடுவதில்லை. ‘ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், ரோஜா ரோஜாதான்.’ பெயர் மாற்றப்படுவதால் புலி புழு வாகிவிடாது; புழு புலியாகி விடாது.

பிரிட்டிஷ்காரர்களால் பிடிக்கப்பட்ட நாடுகளின் மொத்தப் பகுதிக்கும் இந்தியா என்று பெயர் சூட்டிவிட்டாலும், இந்தப் பகுதிகள் எப்போதும் இந்தியத் தன்மை பெற்று விடவில்லை. பெயராவது நிலைத்ததா என்றால் அதுவும் இல்லை. பிரிட்டிஷ் இந்தியாவின் நீள அகலம் வேறு, ‘சுதந்திர’ இந்தியாவின் நீள அகலம் வேறு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியா என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதி ‘இல்லை; நாங்கள் இந்தியர்கள் இல்லை’ என்று பகிரங்கமாக அறிவித்து, வெளியேறிவிட்டது. பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உருவாகிற்று.

பாகிஸ்தானைத் தொடர்ந்து பலபகுதிகளும் பிரிந்துவிடக் கூடாதே என்கிற பயத்தில் தான் ‘சுதந்திர இந்தியா’வில் அதிகாரம் பெற்றவர்கள், பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பிரிவினைத் தடைச் சட்டம் என்றொன்று இருப்பது, பிரிவினைக்கான வாய்ப்புகளும் காரணங்களும் இருக்கின்றன என்பதைப் பகிரங்கமாக ஒத்துக் கொள்வதையே வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனமும் ‘இந்திய யூனியன்’ என்றே நாட்டைக் குறிப்பிடுகிறது. ஆம், இந்தியா என்பது பல தேசங்களின் தேசிய இனங்களின், குலங்களின், கோத்திரங்களின் கூட்டமைப்புதான். இங்கே சட்டபூர்வமான தேசியம் என்பது சரித்திரப்பூர்வமான குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஒரிசா, வங்கம் என்பது வரலாற்றுப் பூர்வமாக ‘தேசியத் தன்மை’ கொண்ட பகுதிகளைக் குறிக்கும். இந்தியா என்பது பல தேசங்களைக் கொண்ட பெரும் பரப்பு - அல்லது ‘மாநிலம்’ என்பதைக் குறிக்கும்.

ஆனால் இங்கே உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய், தேசம் மாநிலமாகவும், மாநிலம் தேசமாகவும் குழப்பத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களில் ‘நேஷனாலிட்டி’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் தமிழியன், அல்லது, கேரளியன், அல்லது வங்காளி என்றே குறிப்பிடப்படவேண்டும். இது தான் அறிவுப்பூர்வமானது; சரித்திரப்பூர்வமானது. ஆனால் ‘நேஷனாலிட்டி’ என்றால் ‘இந்தியன்’ என்றே குறிப்பிடும்படி நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. அதே போல், தமிழ்நாடு, அல்லது கேரளம் போன்ற நாடுகளை ‘மாநிலம்’ என்று குறிப்பிட்டு மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். மாநிலம் என்றால், பெருநிலப்பகுதி. பெருநிலப் பகுதி என்பது ‘இந்தியா’வைக் குறிக்குமே தவிர, தமிழ்நாடு, கேரளம், வங்கம் போன்ற ‘மாநிலத்துக்குள்’ அடங்கிய பகுதிகளைக் குறிப்பிடாது.

எப்படியோ, ‘நேஷனாலிட்டி’ - தேசிய இனம் - என்பதில் காணப்படும் குழப்பம், ஆதிக்க சக்திகளின் ‘நடுக்கத்தை’யே காட்டுகிறது. விடுதலைப் போருக்கு முன்னால் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள், வெள்ளையரை வெளியேற்றும் வரை பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பல தேசிய இன மக்களும் ஒன்று சேர்ந்து விடுதலை என்கிற ஒரே நோக்கில் போராடுவோம். அதன் பிறகு விருப்பத்தின் அடிப்படையில் இந்தியக் கட்டமைப்பில் இருக்கலாம். விரும்பாத பட்சத்தில் பிரிந்து போகலாம் என்று பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். ‘சுதந்திர இந்தியாவில்’ அதிகாரம் கிடைத்த பிறகு நேருவே தமது கருத்தை மாற்றிக் கொண்டார்.

நேரு ஓர் ஃபேபியன் சோஷலிஸ்ட் ஃபேபியின் சோஷலிஸ்ட்டுகள் உட்டோப்பியர்களே. மன வெளி மனிதர்களே. அவர்கள் மனம் விசாலமானது தான். இந்தியா மாத்திரமல்ல உலகமே ஒன்றாக சமாதானமாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் ஆசைப்படுகிறவர்கள். ஆனால் அவர்களுடைய எண்ணத்துக்கும் எதார்த்தத்துக்கும் நெருங்கவே முடியாத இடைவெளி உண்டு என்பதைத் தங்கள் கற்பனை சுகத்தில் மறந்துவிடுகிறார்கள்.

இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்படுகிறவர்களுக்கும் ‘ஏக இந்தியா’ - ஒரே இந்தியா - என்பது உற்சாகமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரமான மிருகம் பல சமயங்களில் அவர்களையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது. பிரிவினைத் தடைச் சட்டத்தை ஆதரிக்கிற பலரும் இங்கே பிரிவினைத் தடைச் சட்டத்தை உடைக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.

‘பொடா’ போன்ற கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று பேசுகிறவர்கள் உண்மையில் ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய காரியங்களையே செய்து கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் அதிக பட்ச அளவுகோல் சட்டத்தின் ஆட்சிதான் என்பார்கள். சட்டத்தை உருவாக்கும் பணி நாடாளுமன்றத்துக்கும், அதைப் பராமரிக்கும் பொறுப்பு நீதி மன்றங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. (என்று நம்புவோம்).

நீதிக்குத் தலை வணங்க வேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று உபதேசிக்காத தலைவர் யார்? ஆனால் இங்கே நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும்கூட மயக்கத்திலேயே கிடக்கின்றன. நதி நீர் பிரச்னை ஒன்றே இவர்களை அடையாளம் காட்டிவிடுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஏற்க மறுக்கிறார். தமிழ்நாடு மறுத்தாலும் சரி, உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் எதிர்த்தாலும் சரி பேரியாற்றின் குறுக்கே புதிய அணைகட்டியே தீருவோம் என்கிறார் அச்சுதானந்தன். அதே பாணியில்தான் ஆந்திர முதல்வரும் பேசுகிறார்.

உச்ச நீதிமன்றம், மத்திய அரசு எதுவும் எங்களைக் கட்டுப்படுத்தாது. கட்டுப்பட முடியாது என்று எப்போதோ காட்டிவிட்டது கர்னாடகம். ஆனால் இவர்கள் எல்லோருமே ‘இந்தியர்கள்’ தான். இந்திய ஒருமைப்பாட்டின் கண்டிப்பான போர்வீரர்கள்தான். உண்மையில், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று குற்றம் சாற்றப்பட வேண்டியவர்கள் இவர்களே!

அதிகார பீடங்களில் அமர்ந்து கொண்டு சதி ஆலோசனையில் ஈடுபடும் இவர்களை என்ன செய்யலாம்? ஆனால், இவர்களின் போக்கிலிருந்து ஒன்று தெரிகிறது; என்னதான் முயன்றாலும் இவர்களாலும், யாராலும் இந்தியர்களாக இருக்க முடியாது என்பதுதான் அது. இந்தியர்களாக இருப்பதில் இவர்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை தமிழர்களுக்கு மாத்திரம் ஏன்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com