Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

பயங்கராவாதத்தின் ஊற்றுக்கண்


தனது உயிரினும் மேலாய் இந்திய விடுதலையை நேசித்த யாராவது இப்போது உயிருடன் இருப்பாரானால், “இதுவல்ல நாங்கள் காண விரும்பிய இந்தியா இதற்காகவா போராடினோம்; இதற்காகவா இரத்தம் சிந்தினோம்...'' என்று சித்த சுவா தீனமிழந்த மனிதரைப்போல் சுதந்திர இந்தியாவைச் சபித்துக் கொண்டே வீதிகளில் ஓடுவார்.

கூலிக்குச் சீருடை அணிந்த ஒரு காக்கிச் சட்டைக்காரன் பயங்கரவாதி! பாகிஸ்தான் உளவாளி' என்று அவரைக் கைது செய்வான்.

“பொடடோ'' சட்டத்தின் அவசியத்தை இப்போதாவது எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். என்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சமற்ற தன்மையை எல்.கே. அத்வானி விரிவாக அறிவிப்பார்.

பயங்கரவாதத்தின் சர்வதேச அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா கவலை தெரிவிக்கும். உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என்று வாஷிங்டன் எச்சரிக்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான விவாதங்கள், அறிக்கைகளுக்கு மத்தியில் இன்னும் கல்வியின் வெளிச்சமே படாத பொட்டல் காட்டில் நின்று கொண்டு எளிய மனிதர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள் “நல்ல சுதந்திரம்டா. ஒரு நல்ல நாளு, திருவிழான்னு வந்துட்டா ராணுவத்துக்கு மத்தியிலே நின்னு நடுங்குறாங்க. மந்திரிங்களே கண்ணாடிக் கூண்டுக்குள்ள நின்னு கொடியேத்துற நாட்டில் சுதந்திரமாவது குடியரசாவது...''

இந்தியாவிலே நீர்வளம் நிலவளத்துக்குக் குறைச்சலில்லை. குறைந்த கூலிக்கும் உழைக்கத் தயங்காத மக்கள் இங்கே போல் உலகில் எங்கேயும் இல்லை. தேச பக்தியில் குறைந்தவர்களா தெய்வபக்தியில் குறைந்தவர்களா? மாற்றிக் கட்டுவதற்கு வேட்டி இருக்கிறதோ இல்லையோ தலைக்கு நாலைந்து கடவுள்கள் தாராளமாய்க் கிடக்கின்றன. சடங்கு, சாத்திரங்கள், மடங்கள், மந்திரங்கள், ராணுவம். விஞ்ஞானம் எல்லாமே ஏராளம் ஆனாலும் இங்கே தரித்திரம் வாட்டுகிறது; பயங்கரவாதம் அச்சுறுத்துகிறது.

கல்லாலும் உலோகத்தாலுமான சிலைகளாய் நிற்கும் தேசத்தலைவர்கள், அந்த உறைநிலையிலிருந்து விடுபட நேர்ந்தால், தங்கள் பீடங்களிலிருந்து இறங்கி, குற்றம் செய்துவிட்ட உணர்வில் குறுகிச் சிறுத்தவர்களாய்த் தலைகவிழ்ந்து நிற்பார்கள்.

இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம்? பயங்கரவாதம், பயங்கரவாதம் என்கிறார்களே இந்தப் பேரபாயத்தின் ஊற்றுக்கண் எது?

இந்தியாவில் பின்னடைவுக்கும் நிம்மதியின்மைக்கும் அடிப்படைக் காரணம் ஆதிக்கம் செலுத்தும் இந்து மதமும், பார்ப்பனியமும் தான் என்பதைச் சிந்திக்கத் தெரிந்த எவரும் உரத்த குரலிலேயே சொல்வார்கள். பாசிசம் என்பதன் இந்திய வெளிப்பாடுதான் பார்ப்பனியம்.

வரலாற்றரங்கில் எப்போதோ தோன்றி, இன்னும் தனது இருந்தலுக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இனங் களில் திராவிடர்கள் அல் லது தமிழர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் ஆரியர்கள் என்போர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

ஆதி நாளிலேயே நாகரிகச் செழிப்புடன் ஓருலகச் சிந்தனையை உலகுக்கு வழங்கியவர்கள் தமிழர்கள் “எல்லா ஊரும் எனது ஊர்; எல்லா மக்களும் எனது உறவினர்'' - (யாவரும் கேளிர்) இதுதான் தமிழர் நெறி. மனித நேயத்தை உயர்த்தும் இவர்கள் கடவுள். மத நம்பிக்கையற்றவர்கள் பகுத்தறிவின் ஆதரவாளர்கள். இதனால் இயல்பாகவே இவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள்.

யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மத அடிப்படையிலும், இதிகாச அடிப்படையிலும் தீர்க்கப்படாத வழக்கொன்று யூதர்களால் ஆபிரகாம் என்றும், இஸ்லாமியர்களால் இப்ராகிம் என்றும் அழைக்கப்படும் மாமனிதரின் காலத்திலிருந்து நிலுவையில் இருக்கிறது.

ஆபிரகாம் - ஷாரா தம்பதியர்க்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. வயோதிகம் நெருங்கிய காலத்தில் அந்தக் குறை ஒரு வருத்தமாகவே உறைந்தது. ஆபிரகாமின் துயரை நீக்கி அவருக்குச் சமாதானம் வழங்க இறைவன் சித்தமானான்.

“ஆபிரகாம், கலங்காதே. உனக்கொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையின் மூலம் உனது இனம் பல்கிப் பெருகும் அந்தக் குழந்தை இரட்சிக்கப்பட்ட குழந்தை என்பதற்கு அடையாளமாய் `கன்னத் செய்வாயாக...'' என்று அருள் பாலித்தார்' கடவுள்.

ஷாரா தனக்கொரு குழந்தையை இதுவரை பெற்றுத் தரவில்லை ஆனாலும் தனது வம்சம் வளரும் என்கிறார் கடவுள். கடவுள் சித்தம் எதுவோ என்று யோசிக்கிறார் ஆபிரகாம், ஷாரா விடமும் ஆலோசித்தபின் ஷாராவின் தோழியான கஹர் என்னும் பெண்ணை மணக்கிறார் ஆபிரகாம் கஹர் ஓர் ஆண் குழந்தையைப் பெறுகிறார். அதற்கு இஸ்மாயில் என்று பெயர் சூட்டப்பட்டு கன்னத்தும் செய்யப்படுகிறது.

ஆபிரகாம், ஷாரா, கஹர் வாழ்வில் இஸ்மாயில் மூலம் இன்பமும் குதூகலமும் பொங்கி நிற்கையில் மறுபடியும் (பைபிள்படி) கடவுள் வந்து, மறுதிட்டம் வழங்குகிறார்.

“ஆபிரகாம், உனது முதல் மனைவியின் மூலம் பிறக்கும் குழந்தை பற்றியே நான் குறிப்பிட்டேன்...'' என்கிறார். இதன்பிறகு ஷாராவுக்கு ஐசக் என்கிற ஆண் குழந்தை பிறக்கிறது.

இப்போது பிரச்னை, கடவுளால் இரட்சிக்கப்பட்டது ஐசக்கின் வம்சமா, இஸ்மாயிலின் வம்சமா என்பதுதான். இந்தப் பிரச்னையில் இஸ்லாமியர்களின் தரப்பில் எழுப்பப்படும் கேள்வி அர்த்தமுடையது.

கடவுள் ஒருமுறை சொன்னால் சொன்னதுதான். முதலில் சொன்னதை மறுத்து மறுபடி ஒன்றைச் சொல்வது மனித இயல்பாக இருக்கலாம். கடவுள் அப்படிச் செல்லமாட்டார் யஹூதிகள் (யூதர்கள்) தேவ வசனத்தைத் திருத்திவிட்டார்கள் என்பது இஸ்லாமியர்களின் குற்றச்சாற்று.

கடவுள் ஆபிரகாமுக்கு முதலில் ஒன்றைச் சொல்லி விட்டு, பிறகு வேறொன்றைச் சொன்னது மாத்திரமல்லாமல் பைபிள்படி வேறொரு தவறும் செய்கிறார்.

ஆபிரகாமின் இரண்டாவது மனைவி கஹ்ரையும் குழந்தை இஸ்மாயிலையும் பாலைவனத்திலே கொண்டு போய் விட்டுவிட்டு வரும் படியும் சொல்கிறார். அதன் படி கஹரும் இஸ்மாயிலும் பாலைவனத்திலே நிராதர வாய் விடப்படுகிறார்கள்.

ஒருபாவமும் அறியாத கஹரையும் இஸ்மாயிலையும் இவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் கடவுள் தண்டிப்பாரா? இது ஷாரா கும்பலின் சூழ்ச்சி என்பது இஸ்லாமியர்களின் வாதம்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com