Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

செந்தமிழ்நாடு காத்த தென்னெல்லைப் போராட்டம்

இளவேனில்

தென்னெல்லைப் போராட்டம் என்பது செந் தமிழ்நாடு காத்த பைந்தமிழ்ப் போராட்டமாகும்.

அதன் காரணமாகத்தான் குமரிமுனை என்பது இன்று தமிழகத்தின் தென்முனையாக இருக்கிறது. இந்தியாவில் தென்முனையாக விளங்கித் தமிழகத்தின் இருப்பை உலகத்திற்கெல்லாம் எடுத்துக் காட்டிக்கொண்டேருக்கிறது. `இலமூரியா' என்னும் குமரிக் கண்டம் பண்டைய தமிழகமே என இன்றைய தமிழகத்திற்கு ஏற்றம். தந்து கொண்டிருக்கிறது.

``வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம்...''

என்று, இடைக்காலத் தமிழகத்தைச் சுட்டும் தொல் காப்பியத்திற்கான பனம் பாரனார் பாயிரப்பாடல், அன்றைய தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளைக் குறிப்பிட்டதைப் போலக் கிழக்கு மேற்கு எல்லைகளைக் குறிப்பிடாததற்குக் காரணம், அவ்விரு பக்கமும் கடலே எல்லைகளாக இருந்ததுதான்.

அப்படியானால், ``தெற்கிலும் கடலே எல்லையாக இருக்க, குமரியைக் குறித்தது ஏன்?'' என்ற கேள்வி எழலாம். அதற்குவிடை அங்கு குமரிக்கண்டம் இருந்து கடல்கோள்பட்டதால், அதை நினைவு கூரும் வகையில் குமரிஎல்லை குறிக்கப்பட்டது எனலாம்.

ஆனால், இன்று தமிழ் இலக்கியங்களால் `தொன்று முதிர்பௌவம்' என்று குறிப்பிடப்படும் அரபிக்கடலுக்கும், பொதியில்' என்று குறிப்பிடப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பழந்தமிழ்ச் சேரநாடு' மொழி திரிந்து மலையாளம் பேசும் கேரள நாடாக' மாறி விட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் தமிழகத்துடன் சேர்ந்திருக்க வில்லையென்றால், அரபிக் கடலோரம் தமிழ்மண் இல்லை என்றே ஆகியிருக்கும்.
அப்படி ஆகாமல் காத்த பெருமை தென்னெல்லைப் போராட்டத்திற்கே உண்டு. அந்தப் போராட்டத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழகமும் அன்று ஆதரவு கொடுத்திருக்குமானால், இன்று முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம் உட்பட கேரளாவில் பாயும் பெரும்பாலான ஆறுகளின் நீர் உரிமைக்காகக் கேரளம் தமிழகத்தைக் கெஞ்சியாக வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கும். தமிழகம் அந்த வாய்ப்பைத் தூங்கித் தொலைத்து விட்டது.

தென்னெல்லைப் போராட்டம் எழவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?

1) தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டு, பெரும்பாலும் தமிழ்ப் பகுதிகளையே உள்ளடக்கியிருந்த திருவாங்கூர் (திருவதங்கோடு) சமஸ்தானத்தை நம்பூதிரிப் பிராமணர்கள் மெல்லமெல்ல மலையாள மயமாக்கி, அந்த சமஸ்தான மக்களை, நம்பூதிரிட நாயர் - நாடன் எனப் பிரித்து, மூன்றாவது குறிக்கப்பட்ட மக்களைக் ``காணாக் கொடுமைக்கும்'' ஆளாக்கிக் கசக்கிப் பிழிந்ததாகும். இதற்கு அந்த மக்கள் மலையாளத்திற்கு மாறமறுத்து, தொடர்ந்து தமிழ்பேசி வந்ததும் ஒருகாரணமாகும்.

2) அந்த மக்களிடையே ``வைகுந்தசாமி'' ஐயா போன்ற சமூகப் புரட்சியாளர்கள் தோன்றி தந்தை பெரியாரைப்போல அவர்கள் மத்தியில் சுயமரியாதை உணர்வை ஊட்டி, சாத்ய ஒடுக்கு முறைகளை எதிர்த்துத் தகர்க்கும் தன்மானச் சுடரொளியை ஏற்றியதும் ஒரு காரணமாகும்.

3) அன்றிருந்த சென்னைத் தலைமாகாணத்தை (Madras Residency) மொழி வழியாகப் பிரித்தமைத்து, அம்மாகாணத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளை ஒன்றாக்கி ``விசாலஆந்திரா'' அமைக்க வேண்டும் என்று, 1912ஆம் ஆண்டு குண்டூரில் நடந்த `ஆந்திர மகா சபை' கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற, அதன் எதிரொலியாகக் கன்னடசமிதி ``சம் யுத்த கர்நாடகா'' என்றும், கேரள சமாஜமும் நாயர் சங்கமும் ``ஐக்கிய கேரளா'' என்றும் குரல் எழுப்ப, அதன் தாக்கம் அன்றிருந்த பன்மொழி மாநிலங்களை ஐக்கியமாகாணம், பம்பாய் மாகாணம், கல்கத்தா மாகாணம், டில்லிமாகாணம் போன்றவற்றிலும் எதிரொலிக்க, இந்நிலையில் காங்கிரசின் தலைமைப் பொறுப்பேற்ற காந்தியார், ``மொழி வாரியாகக் காங்கிரஸ் கட்சியின் மாகாணக் கமிட்டி களைத் திருத்தியமைத்தால் தான், காங்கிரஸ் கட்சியை மக்கள் இயக்கமாக மாற்ற முடியும் என்பதுடன், எல்லா மொழிபேசும் மக்களையும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ய முடியும்'' என்பதை உணர்ந்து, 1919ஆம் ஆண்டு காங்கிரசைத் `தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டி' என்றும், `ஆந்திரப்பிரதேச காங்கிரஸ்கமிட்டி' என்றும், `கேரளப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி' என்றும் இந்தியா பூராவும் மொழிவழியாக மாற்றியமைத்தார்.

அதன் எதிரொலியாக அன்றைக்குத் திருவாங்கூர் கொச்சி இராச்சியத்தில் வாழ்ந்த தமிழர்கள், மொழி வழியாகத் தங்களைத் தமிழ் நாடு காங்கிரசில் இணைத்துக் கொள்ளுமாறுகோர, அவர்களுடைய கோரிக்கையை அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ஏற்க மறுக்கவே ``திருவாங்கூர் கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ்'' என்ற பெயரில் அவர்கள் தனிக்கட்சி கண்டனர்.
தென்னெல்லைப் போராட்டத்தின் பாசறை இவ்வாறு வரலாற்று நிர்பந்தத்தால் அமைந்தது என்று சொல்லலாம்.

4) ``எங்கள் இராச்சியத்திலிருந்து கொண்டே எங்களோடு இணைய மறுப்பதா?'' என்று அன்றைய கேரளப்பிரதேச காங்கிரஸ் நெருக்கடி கொடுக்கவே, ``அப்படியானால் எங்கள் இராச்சியத்தோடு (தமிழ் நாட்டுடன்) நாங்கள் இணைந்து கொள்கிறோம். எங்களைவிட்டு விடுங்கள்'' என்று, திருகொச்சி தமிழ் நாடு காங்கிரசை உருவாக்கி, காந்திராமன், நத்தானியேல், பி.எஸ்.மணி, நூர்முகம்மது, குஞ்ஞன் நாடார், மார்ஷல் நேசமணி போன்ற தலைவர்கள் பதிலடி கொடுத்து, அதற்கான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிர்பந்ததைக் கேரளப் பிரதேச காங்கிரசே ஏற்படுத்தியது.

5) அதனால் திருவாங்கூர் - கொச்சி (கேரளா) இராச்சியத்தில் இருந்த தமிழ்ப் பகுதிகளை 1)கொச்சின் சித்தூர், 2) தேவிகுளம், 3) பீர் மேடு, 4) உடும்பன் சோலை, 5) செங்கோட்டை, 6) நெய்யாற்றின் கரை, 7) வளவன் கோடு, 8) கல்குளம், 9) அகஸ்தீஸ்வரம் 10) தோவாளை ஆகிய வட்டங்களை (தாலு காக்களை)க் கொண்ட 2000 சதுரமைல் பரப்பளவு என்று கணக்கிட்டு, அவற்றைத் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோரிப் போராட்டத்தில் இறங்கினர்.

6) இதற்குக் கேரளப் பிரதேச காங்கிரஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையும் காரணம் என்று கொள்ளலாம். (இந்த அறிக்கை பின்னர்த் தமிழ் நாடு கேரள எல்லைகளை முடிவு செய்வதற்காக நடு வணரசால் அமைக்கப்பட்ட பசல்அலி கமிஷனிடம் கேரள பிரதேச காங்கிரசின் சார்பில் மனுவாகவும் தரப்பட்டது). அந்த அறிக்கையில்-

``தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் தோட்டத் தொழிலே அதிகம். இங்கு நிலையான குடிகள் கிடையாது. தோடங்களை ஒரு வாரம் மூடினால் கூட இப்பகுதியில் நூற்றுக்கு ஒருவர்கூடத் தங்கியிருக்கமாட்டார்கள். இவ்விரு தாலுகாக்களும்தான் எதிர் காலக் கேரளத்திற்கு மலை வாசஸ்தலங்களை அளிக்க வல்லனவாகும். இராச்சியத்தின் எல்லா முக்கிய ஆறுகளும் இங்குதான் உற்பத்தியாகின்றன. இவற்றில் தான் எமது இராகசிய ஹட்ரோ மின்சார அலுவலகமும், பவர்ஸ்டேஷன்களும் உள்ளன.
எனவே, இவற்றையும் இவற்றுடன் தென்கன்னடம், காசர் கோடு, குடகு, மலபார் மாவட்டம் (கொச்சின் சித்தூர் உட்பட) கூடலும் (நீலகிரி) உதகமண்டலம், கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தற்போதைய (தமிழ்த் தாலுகாக்கள் உட்பட) திருவாங்கூர் கொச்சி தாலுகாக்கள், இலட்சத் தீவுகள், மாலத்தீவுகள் அடங்கிய ஐக்கிய கேரளத்தை நிறுவியே ஆகவேண்டும்'' என்று கூறியது. (இவற்றில் மாலத்தீவு' இன்று தனி நாடாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆகவேதான் தமிழர் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த திருவாங்கூரை, 1949 ஜூலை 1-ஆம் நாள்
கொச்சி இராச்சியத்துடன் இணைத்து மலையாள மயப்படுத்தியதைப்போல, அத்திருவாங்கூர் கொச்சி இராச்சியத்திலுள்ள, மொத்தத் தமிழ்ப்பகுதிகளையும் விழுங்க விட்டுவிடக் கூடாது என்ற அக்கறையுடன் அத் திருவாங்கூர் கொச்சி அரசில் ஒரு பெரிய அதிகாரியாக இருந்த மார்ஷல் நேச மணி அவர்கள் அப்பதவியைத் தூக்கியெறிய அவர் தலைமையில் தென்னெல்லைப் போராட்டம், இன்றைய தமிழீழப் போராட்டம் போல் வீரம்விளைவித்தது.

பட்டம் தாணும்பிள்ளை தலைமையில் இருந்த அன்றைய திருவாங்கூர் - கொச்சி அரசு, அப்போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முற்பட்டது. அது நடத்திய துப்பாக்கிச் சூடு ஒன்றில் 22 தமிழர்கள் அந்த இடத்திலேயே சவமானார்கள் என்றால், அப்போராட்டத்தில் பறிக்கப்பட்ட உயிர்கள் உடைமைகள் எவ்வளவாக இருந்திருக்குமென்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஆனால், இன்றைய ஈழத் தமிழர் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள ஆதரவு அளவுக்குக்கூட அன்று தாய்த் தமிழகத்திலிருந்து இத்தென்னெல்லைப் போராட்டத்திற்கு ஆதரவு திரளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமே.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், பொதுவுடைமை இயக்கத்திலிருந்து தோழர். ப.ஜீவானந்தம் போன்றோர், நாடகவுலகிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்கள், திரைப்படவுலகிலிருந்து கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் முதலானோர், இலக்கிய உலகிலிருந்து பன்மொழிப் புலவர் கா.அப்பாத் துரை போன்றோர்தான் அதற்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், ம.பொ.சி.யைத் தவிர, மற்றவர்கள் நாஞ்சில் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதை மறப்பதற்கில்லை.

அதே நேரத்தில் ம.பொ.சி.யின் முயற்சியால் பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட இயக்கங்கள் உட்பட அனைத்துக் கட்சி ஆதரவுடன் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினைக்காகத் தமிழகத்தில் ஓரிருமுறை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள் நடைபெற்றன என்பதையும் மறுக்க முடியாது.

இருந்தாலும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசர், காங்கிரசுக்கட்சி முழு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்பதுடன், காங்கிரசிலிருந்து ம.பொ.சி.யையும், அவருடைய தமிழரசுக் கழகத்தையும் வெளியேற்றி, தமிழக ஆட்சி திருவாங்கூர் கொச்சித் தமிழர்களின் கோரிக்கைக்கு எதிராகவே இருக்கிறது என்று காட்டிக் கொண்டது. தேவிகுளம் - பீர்மேடு பறிபோகக் காரணமாகி விட்டது என்றால் மிகையாகாது.

ஆம்; 10-10-1955-இல் வெளியான பசல்அலி கமிஷன் பரிந்துரையில்-

``சென்னை மாகாணத்திலுள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளாவோடும், தென் கன்னடம் மாவட்டத்தைக் கர்நாடகாவோடும் சேர்க்க வேண்டும்.

திருவாங்கூர் - கொச்சி இராச்சியத்திலுள்ள கல் குளம் விளவங்கோடு தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையின் பாதி ஆகிய தாலுகாக்களைத் தமிழ்நாட்டோடு சேர்த்துத் தனி இராச்சியம் அமைக்க வேண்டும். அதன் பெயர் சென்னை ராஜ்யம் என்றே இருக்க வேண்டும். சென்னை ராஜ்யம் - ஆந்திர ராஜ்ஜியச் சிக்கலை அதற்கென நியமிக்கப்பட விருக்கும் எல்லை கமிஷன் கிராம அடிப்டையில் தீர்த்து வைக்க வேண்டும்.

தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள் விஷயத்தில் மொழிவாரிக் கொள்கையை இக்கமிஷன் முக்கியமாகக் கருதமுடியாது. பல்வேறு பொருளாதாரக் காரணங் களையும் மற்றக் காரணங்களையும் உத்தேசித்து அவை கேரளத்தில்தான் இருக்கவேண்டும்'' என்று கூறியுள்ளது.

இதற்கு அக்கமிஷனில் உறுப்பினராக இருந்த கே.எம்.பணிக்கர் என்ற மலையாளி பெரும்காரணம் என்றால் மிகையாகாது. ஆம்; 1954-இல் 3பேரை உறுப்பினர்களாகக் கொண்டு நடுவணரசால் அமைக்கப்பட்ட அக்கமிஷனில் தலைவர் பசல்அலி பீகார்க்காரர்.
எச்.என்.குன்ஸ்ரு இந்திக்காரர். தமிழர்களுக்கும் மலையாளிகளுக்குமான எல்லைப் பிரச்சினையில் ஒரு மலையாளிக்கு இடமிருந்தது தமிழருக்கு இடமளிக்கப்படவில்லை. அதுவும் அந்த எல்லைக் கமிஷன் அமைக்கப்படுவதற்கு முன்பே தேவிகுளம் பீர் மேடு கேரளாவுக்குத்தான் சொந்தம்'' என்று வாதாடி வந்தவர் கே.எம். பணிக்கர்.

அதை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தும் அன்று நடுவணரசில் சட்ட அமைச்சராக இருந்த எச்.வி. பட்டஸ்கர், கே.எம். பணிக்கரை பசல் அலிகமிஷன் உறுப்பினராக நியமித்தார் என்றால், நடு வணரசுயாருக்குச் சாதகமாக நடந்து கொண்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பின்னர் அதே பட்டஸ்கர் தலைமையில் அமைந்த கமிஷன்தான் தமிழகத்திற்கும் ஆந்திராவுக்குமிடையிலான எல்லைகளை நிர்ணயித்தது என்பதைப் பார்க்கும்போது, சென்னைத் தலைமாகாணம் மொழிவழியாகப் பிரிக்கப்பட்டபோது நடுவணரசு திட்டமிட்டே தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க உதவி செய்யவில்லை என்பது புலனாகும்.

அதன்விளைவாகத் தென்னெல்லைப் போராட்டத்தின்போது கேரளாவிலிருந்து தமிழகத்து இணைக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட 2000 சதுரக்கல் பரப்பளவில் 600 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே தமிழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 1400 சதுரக்கல் பரப்பளவு கொண்ட தமிழ் மண் இன்னும் கேரளாவில் தான் உள்ளது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமான எல்லையில் 40 விழுக்காடுதான் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிற தேயல்லாமல், இன்னும் 60 விழுக்காடு தெளிவாக வரையறை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனாலேதான் கண்ணகி கோட்டம் தமிழக எல்லைக்குள்ளாகவே இருந்தும் கேரளா உரிமை கொண்டாடுகிறது. தமிழக அமைச்சரையே அங்கே செல்ல விடாமல் கெடுபிடி செய்கிறது.
இருந்தாலும் தென்னெல்லைப் போராட்டத்தின் பயனாகத்தான் ஒருகாலத்தில் கேரளாவின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டம் இன்று தாய்த் தமிழகத்தோடு இணைந்திருக்கிறது. என்பதைச் சொல்லத் தேவையில்லை.
அன்று அத்தென்னெல்லைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காத, கர்மவீரர் காமராசர் அவர்கள் விருதுநகரில் தேர்தலிலே தோற்று வேதனையுற்றபோது, அத்தென்னெல்லைப் போராட்டத்தால் வந்த கன்னியாகுமரிதான் கைகொடுத்துத் தூக்கி நிறுத்தியது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அந்தக் கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளைக் கொண்டாடுவது என்பது, தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சேய்களையெல்லாம் மீண்டும் தாய்மடியில் சேர்க்க வேண்டும் என்ற உணர்வினை ஊட்டும் உன்னதப் பெருவிழாவாகும்.

அந்தவகையில் தென்னெல்லைப் போராட்டத் தியாகிகள் தமிழ்கூறு நல்லுலகிற்கே வழிகாட்டும் ஒளி விளக்குகள் ஆவர்.
வாழ்க அவர்கள் புகழ்! வெல்க தமிழினத்தின் ஒற்றுமை!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com