Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

நீதிமன்றத்தில் தமிழ் ‘அவர்களின் குரூர சிந்தனைகள்’

இளவேனில்

அறிவைத் திரட்டும் ஆர்வத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரிகன் ஹியூன் சாங் (Jiuen Tsang) ஒரு வேடிக்கையான காட்சியைக் கண்டதாக எழுதுகிறான்;

கர்ண சொர்ணம் என்னும்பட்டணத்துக்கு ஒருவன் வந்தான். அவன் தன் இடுப்பிலே செப்புத் தகடுகளைக் கட்டிக் கொண்டும், தலையிலே தீப்பந்தத்தை வைத்துக் கொண்டும், கையிலுள்ள கோலைப் பெருமிதத்துடன் ஊன்றியபடியும் திரிந்தான். ஏன் இந்தக் கோலம்? என்று கேட்டால், `என்னுடைய அறிவின் பெருக்கத்துக்கு அளவே கிடையாது. செப்புத்தகடுகளைக் கட்டிக் கொள்ளாவிட்டால் அறிவின் கொந்தளிப்பால் என் வயிறு வெடித்தே விடும். அறியாமை இருட்டிலே உழலும் அற்ப மனிதர்கள் மீது கொண்ட இரக்கத்தால் தலையில் ஒளியைத் தூக்கிச் சுமக்கிறேன் என்றானாம் அந்த விகித்திர மனிதன்.

ஹியூன் சாங் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த அறிவாளி வேடம்தரித்த கோமாளி நிச்சயமாய் ஓர் அக்கிரகாரத்து மன நோயாளியாகத்தான் இருக்க முடியும்.

தான் ஒரு பார்ப்பனனாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காகப் பார்ப்பனர்களே உயர்ந்தோர். அவர்கள் பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள்; என்று பெருமையடித்துக் கொண்டவன் மனு.

அவ்வாறே, நானே அறிவாளி; அதனால் சாப்பாட்டில் எனக்கே முதலிடம் என்று நந்தர்களை வம்புச் சண்டைக்கிழுத்தவன் சாணக்கியன்.

இப்போதும் கூட ஓர் அக்கிரகாரத்துப் பெண், நான் ஆங்கிலம் படித்த அறிவாளி. நெப்போலியனைப்போல் நினைவாற்றல் உள்ளவள் என்று பெருமையடித்துக் கொண்டதில்லையா?

தன் பெயரையே ஞாநி என்று மாற்றிக் கொண்ட சங்கரனும் அக்கிரகாரத்துப் பிள்ளைதான்.

`ராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை; மூளை முழுவதும் சிந்தனை' என்று அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள். அந்தச் சொற்றொடரைக் குத்தூசி குருசாமி இவ்வாறு நிறைவு செய்தார்:

``ஆம்; அவருக்கு உடம்பெல்லாம் மூளை; மூளை முழுவதும் சிந்தனை; சிந்தனை முழுவதும் வஞ்சனை!''

பொதுவில் தாங்களே உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள். அவர்களே ஆளப்பிறந்தவர்கள் என்கிற ஆழமான சித்தப் பிரமை கொண்டவர் பார்ப்பனர்கள்.

வேத காலத்திலிருந்து வேதா காலம் வரை, இட்லரிலிருந்து உஞ்சவிருத்திவரை இந்தக் கர்வம் அவர்களுக்கு உண்டு.

சர்.சி.பி. ராமசாமி அய்யரும் சிங்கார வேலரும் சிறுவயதில் நன்கு அறிமுகமானவர்கள். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். சிங்கார வேலரின் கையில் அப்போது தடிமனான ஒரு புத்தகம் இருந்தது.

``என்ன சிங்காரம்; பெரிய பெரிய புத்தகமெல்லாம் படிக்கிறாய்ப் போலிருக்கு? இது என்ன புத்தகம்?'' என்று ராமசாமி அய்யர் கேட்டார்.

``சட்டப்புத்தகம்'' என்றார் சிங்கார வேலர்.

``மீன் பிடிக்கிறவனுக்குச் சட்டப்புத்தம் படிச்சு என்ன ஆகப்போறது?''

``தர்ப்பைப் புல் பிடிக்கிறவன்களே சட்டப் புத்தம்படிக்கிறபோது மீன் பிடிக்கிறவன் படிக்கக் கூடாதா என்ன?''
அகம்பாவத்தின் முகத்தில் ஓங்கி மிதித்தார் சிங்காரவேலர்.

குத்தூசி குருசாமியின் கல்லூரி நண்பர் ஒருவர் பார்ப்பனர். அவர் குத்தூசியாரிடம் ஒருநாள் சொன்னாராம்; ``குருசாமி, நாங்கள் பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள். அதனால் சிந்திப்பது எங்களுக்கு இயல்பானது!''
சட்டென்று குத்தூசியார் சொன்னார்; ``உங்கள் கருத்துப்படி நாங்கள் காலில் பிறந்தவர்கள். தலைக்கனம் கொண்டவர்களை மிதிப்பதற்காகவே!''

எத்தனை மிதிபட்டாலும் சிலர் தங்களின் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. அறிவாளி வேடம் கட்டிக்கொண்டு திரிகிறவர்களின் வரிசையில் வந்த சோவான வரும் நாட்டின் எந்தப் பிரச்னைக்கும் சர்வரோக நிவராணியாய்த் தன் மண்டைச் சுரப்பை அள்ளித் தெளிக்கத் தவறுவதில்லை.

நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ் ஆரியச் சூழ்ச்சிகளாலும், ஆதிக்க சக்திகளாலும் வீழ்த்தப்பட்ட நிலையில், `தமிழ் நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று கவிஞர் நெஞ்செலாம் தகித்த சூழலில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் முழக்கத்தை எழுப்பினார் கலைஞர்.

ஆட்சித் துறையில் தமிழ், ஆலயத்தில் தமிழ் கல்வியில் தமிழ், கலை இலக்கியத்தில் தமிழ் நீதி மன்றங்களில் தமிழ் வேண்டும்; வேண்டும் என்று தமிழ்ச் சான்றோர்கள் வெகுகாலமாய்ப் போராடி வந்தார்கள்.

தமிழர் வரலாற்றில் புதிய தொடக்கமாய், சென்னை மாகாணத்துக்கு `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார் அண்ணா இப்போது தமிழர்களின் கனவுகளுக்கும் ஏக்கங்களுக்கும் விடியலாக ஒவ்வொரு திட்டங்களாக அறிவித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரில் நீதிமன்றங்களில் தமிழ் எனும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அறிவிப்பை வெளியிட்டார் கலைஞர்.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட அனைவருமே இந்த அறிவிப்பை ஆர்வக் கிளர்ச்சியோடு வரவேற்றார்கள்.

சோவானவர்களுக்கு மாத்திரம் நீதிமன்றத்தில் தமிழ் என்கிற அறிவிப்பு, நெருப்பை மிதித்து விட்டது போன்ற தகிப்பு.

``தமிழனை ஒரு வழிசெய்து விடுவது என்று தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. `ஆங்கிலம்' அறிந்து கொள்வதே ஒரு இழிவான செயல் என்பதுபோல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததோடு திருப்தியடையவில்லை. மாணவர்கள் தமிழிலேயேதான் எல்லாவற்றையும் கற்கவேண்டும் என்று முழங்கி வந்ததும் கூட முழுத்திருப்தி அளிக்கவில்லை. இப்போது உயர் நீதிமன்றத்தில் இனி, தமிழ்தான் என்ற தீர்மானத்தை முதல்வர் அறிவித்து விட்டார்...

`நீதிமன்றத்தில் தமிழ்' என்ற கோஷத்திற்கு முன்பெல்லாம் ஒரு காரணம் கூறப்படும். `கட்சிக்காரருக்கு தன் வழக்கு எப்படி நடத்தப்படுகிறது என்பது தெரியவேண்டாமா? அதனால் எல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். சட்ட சம்பந்தமான எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தினால் கட்சிக்காரருக்குக் குழப்பம்தான் மிஞ்சும். இப்போதுள்ள தெளிவு கூட இருக்காது.

சரி, சம்பந்தப்பட்டவருக்குப் புரிவதற்காகத் தமிழ் என்றால், மருத்துவ விஷயம் எப்படி? டாக்டர் சொல்வது எல்லாம் நோயாளிக்குப் புரிய வேண்டாமா? ஆங்கிலத்தில் சொன்னால் நோயாளிக்கு என்ன தெரியும்?... ஆகையால் மருத்துவப் படிப்பையும் தமிழிலேயே நடத்திவிட வேண்டியதுதானே?...

தமிழகத்தில் கல்வி பெறுகிறவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி தங்களுடைய எண்ணங்களைத் தெரிவிக்கிற திறன் குறைந்து வருகிறது என்ற புகார் இப்போதே பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை இன்னமும் கடுமையாக்கித் தமிழ் இளைஞர்களைக் கிணற்றுத் தவளைகளாக்கிவிட இந்த அரசு முனைந்து விடும் போலிருக்கிறது...''
(துக்ளக் 6-12-2006)

சோவானவருக்குத்தான் தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து எத்தனை அக்கறை? சோ போன்றவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்! என்று மொழி குறித்து எழும் முழக்கங்கள்; தீர்மானங்கள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாமே தமிழர்களின் பிரச்னைகள். தமிழனாய் இல்லாத ஒருவனால் தமிழர்களின் தவிப்பையும் துடிப்பையும் பெறவும் முடியாது; உணரவும் முடியாது.

தனக்கென்றொரு தேசம் இல்லை; தனக்கென்றொரு மொழி இல்லை. இனி அதற்கு வாய்ப்பும் இல்லை என்கிற எதார்த்தம் பலரை மனநோயாளிகளாகவும், சிலரை எதிர்வினை புரியும் வக்கிரபுத்தி கொண்டவர்களாகவும், இன்னும் சிலரைத் தாய்மொழி, தாய் நாடு என்று அன்பு செலுத்துகிறவர்களையே அழித்து விட வேண்டும் என்கிற குரூர வெறியர்களாகவும் மாற்றிவிடுகிறது.

சோ போன்றவர்கள் இன்னும் `வேதகாலத்திலேயே' வாழும் விசித்திரப் பிறவிகள் ஆன இவர்களுக்கென்றொரு மொழி இல்லை. தங்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிக் கொள்ளவும் இவர்களால் முடியவில்லை. இந்த வரலாற்று உண்மை இரக்கத்துக்குரியதுதான். இரக்கத்துக்குரியவன் என்பதால் ஒருவன் பிறரை இழிவு செய்வதற்கு உரிமை பெற்றவனாகிவிட முடியுமா?

நாடற்றவர்களாய், அகதிகளாய், உலகில் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்றும், தங்களுக்கென்றொரு நாடுவேண்டும் என்றும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாடோடிகள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் என்று ஏளனமாய்ப் பார்க்கப்படும் இனத்தார்கூட தங்களுக்கான உரிமைகளுக்காகச் போராடுகிறார்கள்.

உலகிலேயே தங்களை ஒருதேசிய இனம் என்று உணர முடியாதவர்களாய், தங்களுக்கென்றொரு நாடு வேண்டும். என்று போராட முடியாதவர்களாய் இருப்பவர்கள் சோவானவர்கள் மட்டுமே!

சுயத் தன்மைக்காகவும், சுய நிர்ணய உரிமைக்காகவும் உலகின் எல்லாத் தேசிய இனங்களும் இன்று போராடுகின்றன.

சுயமரியாதையும் போர்க்குணமும் பிரிக்க முடியாதவை. சுயமரியாதையும் மனிதாபிமானமும் இணை பிரியாதவை. சுயமரியாதை உள்ளவன் சகமனிதனை மதிக்கத் தெரிந்தவனாகவும் இருப்பான்.
சுயமரியாதைக்காரன் பிறருக்காகவும் போராடுகிறவனாக இருப்பான். சுயமரியாதை இல்லாதவன் சாகசக்காரனாக இருப்பான்.

சதிகாரனாக இருப்பான். குற்றங்களின் உறைவிடமாக இருப்பான். ஒரு சமூகத்தின் சுயமரியாதைப் பிரச்னைதான் தேசிய இனப் போராட்டங்களாக வடிவெடுக்கின்றன. சோ போன்றவர்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று அறிவிக்க ஏலாதவர்களாய்.

தங்களுக்கென்று ஒரு நாடுவேண்டும் என்று போராட முடியாதவர்களாய் இருப்பதற்குக் காரணம்-
சுயமரியாதையின் இடத்தில் இவர்கள் `சுகஜீவனத்தை' வைக்கிறார்கள். போராட்டங்கள் இடத்தில் சாகசங்களையும் சூழ்ச்சிகளையும் வைக்கிறார்கள்.

மாதுவின் குரல் இவர்களை உற்சாகப் படுத்துகிறது. அறிவியல் வளர்ச்சியும் சூத்திர எழுச்சியும் இவர்களைக் கலக்கமுறச் செய்கின்றன. ஆற்றாமைக் குரூரம் அலைக்கழிக்கிறது. தமக்கொரு தாய்மொழி இல்லாததால் தாய்மொழி பற்றிப் பேசுகிறவர்கள் மீதெல்லாம் ஆத்திரம் வருகிறது.

தமக்கொரு தாய்நாடு இல்லாததால் தாய்நாடு பற்றிப் பேசுகிறவர்களெல்லாம் பயங்கரவாதிகளாகத் தெரிகிறார்கள். வெளியில் சொல்லமுடியாத இந்த மனோவியாதியின் குரூர வெளிப்பாடுதான் சோ போன்றவர்களின் தமிழ் எதிர்ப்பு வக்கிரங்கள்.

நீதிமன்றத்தில் தமிழ் என்று கலைஞர் அறிவித்ததும் சோபோன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்(!) அக்கறையுடன் பரிசீலிக்க அருகதையற்றவை என்ற போதிலும், இம்மாதிரியானவர்களை அறிவாளிகள் என்றே நம்பிவிடும் தமிழர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சில விளக்கங்கள்.

விடுதலைப் போர் என்பதும், மொழிவழி மாநிலங்களின் உதயம் என்பதும் தேசிய இனங்களின் வளர்ச்சிக்கும், தாய்மொழியின் மலர்ச்சிக்காவுமான செயல்திட்டங்களே.

இந்தியா விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையிலும், மொழிவழி மாநிலங்கள் அமைந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும், தேசிய இனப்பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படவில்லை என்பதும், தாய்மொழிக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதுதான் வெட்கப்பட வேண்டிய விஷயம்!

தமிழரின் நூற்றாண்டுக் கனவைக் கலைஞர் மெய்ப்படுத்துகிறார் என்பதை மானமும் அறிவும் உள்ள எவரும் பாராட்டவே செய்வார். சோக்கள் சுருங்குவது பிறவிக் குணம்.

``தமிழகத்தில் கல்வி பெறுகிறவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசித் தங்களுடைய எண்ணங்களைத் தெரிவிக்கத் திறன் குறைந்து வருகிறது'' என்று கவலைப்படுகிறார் சோ. தமிழ் நாட்டில் தமிழில் தெளிவாகப் பேசுவும் எழுதவும் முடியாதவர்கள் இருக்கிறார்களே என்று நாம் கவலை கொள்ளும் நேரத்தில், இவர்கள் ஆங்கிலம் அழகாகப் பேசுவது குறித்துக் கவலைப்படுகிறார்கள்.

இவர்களுக்குத் தெரியுமா? இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தும் கூட ஆங்கிலத்தில் சரளமாகப் பேசமுடியாதவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திலோ, பிறமொழிகளிலோ சரளமாகப் பேசுதல் என்பது வேறு; அறிவுத் திறன் என்பது வேறு.

ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும்தான் நீதிமன்றங்களின் வெற்றிபெறும் என்றால் அங்கே நீதி செத்துவிடுகிறது என்று பொருள். இன்றைய சமூக அமைப்பில், எதார்த்த வாழ்வில் ஒரு வழக்கில் வெற்றிபெறச் சட்ட நுணுக்கங்களோ, மொழிப் புலமையோ, பேச்சாற்றலோ தேவை இல்லை. சில நீதிபதிகளுக்கு வாதம் செய்கிற வழக்கறிஞர்களையே பிடிக்காது. பணம் இருந்தால் நீதிமன்றத்தில் எதையும் சாதிக்கலாம்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதியைக் கூட நாடு கண்டிருக்கிறது. இதைச் சாதித்தது சரளமான ஆங்கிலப் பேச்சா? கைமாறிய லஞ்சப் பணமா? எனவே, நீதிமன்றத்தில் தமிழ் என்கிற முடிவு, சோ போன்ற ஆங்கிலப் புலமையும் சட்ட நுணுக்கங்களும் அறிந்த `மேதை'களுக்கு வேலை வாய்ப்புத் தருவதற்காக அல்ல; தமிழுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக.

நீதிமன்றத்தில் தமிழ் என்றால் ``மருத்துவ விஷயம் எப்படி?... மருத்துவப் படிப்பையும் தமிழிலேயே நடத்திவிட வேண்டியதுதானே? என்று வக்கணை பேசுகிறார்கள்.

மருத்துவப் படிப்பில் மாத்திரமல்ல அறிவில் துறை அனைத்திலும் தமிழ் என்பதுதான் எங்கள் இலட்சியம். சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அந்தமாணவருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று கூட நடைமுறை இருந்தது? மருத்துவத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்த சோவும் எப்போதும் கேள்வி எழுப்பியதில்லை. ஏனென்றால் சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும்போது பார்ப்பனர்களுக்கே அந்த உயர்கல்வி கிடைக்கிறது என்பதால்தான்.

நாங்கள் தமிழை முன்னிறுத்துவது தமிழர்களின் உயர்வுக்காகத்தான். தமிழர்கள் உயர்வது மனிதர்களுக்கு எதிரானதுதான். சோவானவர்களின் புலம்பல் புரிகிறது.

கலைஞர் தமிழை முன்னிறுத்துவதும் சோவானவர்களுக்குப் பிடிக்காது. தமிழர்களே, ஆங்கிலம் படியுங்கள் வீட்டிலே கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள் என்று பெரியார் சொன்னதும் இவர்களுக்குப் பிடிக்காது.
``வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்'' என்று கலைஞர் சொல்வதும்,
ஆங்கிலம் படியுங்கள்; ஆங்கிலத்திலே பேசிப் பழகுங்கள் என்று பெரியார் சொன்னதும்,
ஒரே திசையில் எய்யப்படும் அம்புகளே!

பார்ப்பன பாசிசத்துக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் நாங்கள் எந்த ஆயுத்தையும் எடுப்போம்!

மற்றொரு செய்தியையும் தெரிவிப்போம்! எங்கள் தமிழ்ப்பற்று எந்தமொழிக்கும் எதிரானதல்ல. ஆங்கிலத்தை மாத்திரமல்ல, இந்தியைக் கூட நாங்கள் எதிர்ப்பதில்லை. உலகப் பார்வை, தேசிய ஒருமைப்பாடு என்கிற உச்சாடனங்களுடன் யாரும் ஆதிக்கம் செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

``ஒருமைப்பாடு என்பது சொர்க்கமாகக் கூட இருக்கலாம். ஆனால் சொர்க்கத்துக்கே ஆனாலும் சாட்டையால் அடித்து அனுப்புவதை எதிர்கிறோம்'' என்று லெனின் சொன்னாரே அதுதான் எங்கள் மொழிக் கொள்கை.

இன்னும் சொல்வோம்; `நீதிமன்றத்தில் தமிழ்' என்கிற நாங்கள், நீதிமன்றங்களுக்கே தேவையில்லாத ஒரு சமூகத்துக்காகவும் போராடுகிறோம்.

கடவுள்களோ, நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ, மருத்துவர்களோ, பாவிகளோ, குற்றங்களோ, நோய்களோ இல்லாத ஒரு சமூகம் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். அந்தப் புதிய சமூக மாற்றத்துக்கு இன்றைக்கு எமக்குத் தேவை எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்!நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com