Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

தாய்மொழியில் கல்வி

ரவீந்திரநாத் தாகூர் / தமிழில்: பாரதியார்

நம்முடைய தாய் பாஷையில் உயர்தரக்கல்வி கற்பித்து அக்கல்வியை முழுவதும் நம்ம தாக்கிவிட வேண்டும் என்று சொல்லும் தைரியம் நமக்கெப்போதுமே வாராது போகுமா?

ஜப்பான் தனக்கு வேண்டியதை மேற்குத் திசையிலிருந்து பற்றிக் கொண்டதன் காரணம் யாது? அதுவும் சீக்கிரத்தில்? அவள் மேற்குக் கல்வியைத் தனது பாஷையில் சிறைப்படுத்திக் கொண்டாள்.

ஜப்பானிய பாஷை நம்முடைய பாஷையை விட சொல்வளம் உடையது என்று நினைக்கிறீர்களா? புதிய, புதிய பதங்கள் புனைந்து கொள்வதில் வங்காளி பாஷைக்கிருக்கும் சக்தி அநந்தம். தவிரவும் ஐரோப்பிய சாஸ்திரம் ஜப்பானியருக்கு எத்தனை அந்நியமோ அத்தனை நமக்கன்னியமன்று.

ஆனால், ஜப்பான் பிரதிக்ஞை, செய்து கொண்டாள் - ``நமது பாடசாலைகளில் ஐரோப்பிய சாஸ்திரத்தை நிலை நிறுத்தக் கடவோம்!'' என அங்ஙனம் அவள் சொல்லியது மட்டுமன்று, செய்துகாட்டினாள். பயனை நுகர்கிறாள். உயர்தரக் கல்வி நமது பாஷை மூலமாகக் கல்வி நமது பாஷை மூலமாகக் கொடுக்க வேண்டுமென்றும் அப்படி கொடுத்தால் மாத்திரமே, அக்கல்வியால் நமது நாட்டுக்குப் பயனுண்டாகு மென்றும் சொல்லக்கூட நமக்கு இன்னும் தைரியம் பிறக்கவில்லை.

``நாம் இங்கிலீஷ் பாஷையும் படிக்க வேண்டும் என்று கூறுதல் மிகை. அதுவும் கேவலம் ஜீவனார்த்தமாக மாத்திரம் செய்யக் கூடாது. இங்கிலீஷ் மாத்திரமேன்? பிரெஞ்சு பாஷையும், ஜெர்மன் பாஷையும் படித்தால் இன்னும் விசேஷம்.

``வீரத்தனமுடைய ஸர் ஆக தோஷ் முகர்ஜி அங்ஙனம் சற்றேயத்தனம் செய்து கொஞ்சம் தேச பாஷைக் கப்பியை உள்ளே நுழைத்திருக்கிறார். ஸர் ஆசுதோஷ் முகர்ஜி செய்து வைத்த காரியம் `யாதெனில் எந்த வங்காளியும் இங்கிலீஷ் எவ்வளவு படித்திருந்தாலும் வங்காளி பாஷையில் பாண்டியத்யமில்லாவிடில் பூர்ண பண்டிதனாகக் கருதப்படமாட்டான்' என்று செய்து வைத்தார். இது இங்கிலீஷ் தெரிந்தவருடைய படிப்பை ஸம் பூர்ணப்படுத்தும் வழியாயிற்று.

`வங்காளி மாத்திரம் தெரிந்து இங்கிலிஷ் தெரி யாதவருடைய கதி என்ன? அவர்களுக்கு வங்காளி ``யூனிவர்ஸிடி'' (சர்வகலா சாலை) என்ன சொல்லுகிறது? இங்ஙனம் கொடுமையான அஸம்பாவிதம் பாரத தேசத்தைத் தவிர வேறெந்த தேசத்திலேனும் உண்டென்று நினைக்கிறீர்களா?

``கவித்தனம் பேசினதிலே பயனில்லை. நடக்கிற வார்த்தை சொல்ல வேண்டும். ஒரேயடியாக அதிகம் எதிர் பார்த்து விடக் கூடாது'' என்று என்னிடம் சிலர் சொல்லக் கூடும். அதிகம் எதிர் பார்க்கிறேனா? நடக்கிற காரியத்தை மாத்திரம் சொல்லத் தொடங்கினால் பேசவே இடமில்லை. எவர் மனத்திலாவது எனது வார்த்தைகளினால் சிறிது சலனம் ஏற்பட்டால் அதுவே எனக்குப் போதும். அந்தச் சலனம் என்னை வைதல் அல்லது அடித்தல் என்ற ரூபமாக வந்தாலும் சரியே.

`உபாத்தினமத் தொழிலனுபத்தில் நான் தெரிந்து கொண்ட விஷயம்யா தெனில், மாணாக்கரில் பலருக்கு பாஷைகள் கற்றுக் கொள்ளும் திறமை இயற்கையிலேயே குறைவு. அப்படிப்பட்டவர்கள் இங்கிலீஷ் சரியாகத் தெரியாமல் மிகவும் சிரமப்பட்டுப் பிரவேசப் பரீட்சை தேறுவார்கள்.

மேற்படிகளிலே நொறுங்கிப் போவார்கள். வங்காளிப் பிள்ளைகளில் பெரும்பகுதி இங்கிலீஷ் பாஷையை வசப்படுத்த முடியாமலிருப்பதற்கு வேறு காரணம் உள. வங்காளிகளுக்கும் முதலாவது அந்த பாஷை மிகவும் கடினமானது. உடைவாளின் உறைக்குள்ளே இங்கிலீஷ் கத்தியை போட முயல்வது போல இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கத்தக்க வாத்தியார்களின் தொகை குறைவாதலால் சரியான இங்கிலிஷ் போதனை சில பிள்ளைகளுக்குத்தான் கிடைக்கும்; ஏழைகளின் பிள்ளைகளுக்குக் கிடைக்காது.

ஆதலால், தான் தேடி வந்த மருந்து இன்னதென்று தெரியாமல் மலையோடு தூக்கிப்போன ஹனுமானைப் போலவே இந்தப் பிள்ளைகள் அந்த பாஷையை நேரே உபயோகிக்கத் தெரியாமல் புஸ்தகம் முழுவதையும் குட்டி உருப்போடும்படி நேருகிறது. அஸாத்திய ஞாபக சக்தி உடையவர்கள் கடைசிவரை படிக்கிறார்கள்.
சாதாரணமாகப் புத்தியுள்ள பிள்ளைகளாலே இயலவில்லை. பாஷைத் தடையின் கதவுகளை இவர்களால் திறக்கவும் முடியாது. ஏறிக் குதிக்கவும் வழியில்லை.

ஜன்மக் குறையாலோ வேறு எந்தக் காரணத்தாலோ இங்ஙனம் இங்கிலீஷ் பாஷையில் தேர்ச்சி பெற ஸாமர்த்தியமில்லாத பிள்ளைகளை நாம் பிரம்மாண்டமான குற்றவாளிகளாகக் கருதி ஸர்வகலா சாலைக்குள் எக்காலத்திலும் புகக் கூடாதென்ற உத்தரவு போடுதல் நன்றா? இங்கிலாந்தில் ஒரு காலத்தில் ஸாதாரணத் திருடரைத் தூக்கிலிட்டுக் கொல்லுவது வழக்கம். ஆனால் இந்தத் தண்டனை விதி அதனினும் கொடுமையாக இருக்கிறது.

அன்னிய பாஷை படிப்பதில் ஸாமர்த்தியமில்லாத பிள்ளைகள் அத்தனை பேருக்கும் உயர்தரக் கல்வியில்லாது செய்து அவர்களுக்குள்ள புத்தியையும் படிக்க வேண்டுமென்ற ஆவலையும் விழலாக்குவது தேசத்திற்கு பயங்கரமான பெரிய நஷ்டமன்றோ.

எதிர் விவகாரம் என்ன சொல்வார்களென்பதை நான் அறிவேன். ``வங்காளி பாஷையில் உயர்தரக்கல்வி கொடுக்க வேண்டுமென்று சொல்கிறீரேங் காணும்!

அந்த பாஷையில் பாடப் புத்தகங்கள் இல்லையே'' என்று கேட்பார்கள். அந்தப் பாஷையில் பாடப் புத்தகம் இல்லையென்பதை நான் அறிவேன்.

ஆனால் அந்த பாஷையில் உயர்தரக்கல்வி கற்பிக்கத் தொடங்காவிட்டால் பாடப் புஸ்தங்கள் எங்கிருந்து வரும்? அவை ரஸங்களைக் கருதி ரஸிகர்களாலே பயிர் செய்யப்படும் அலங்காரச் செடிகளல்லவே! கேவலம் ப்ராண பலத்தாலே பூமியை வந்து மேவுகிறகளைப் பூண்டுகளும் அல்லவே!

உயர்தரக் கல்விப் பாடப் புஸ்தகத்திற்காகக் காத்திருந்தால் தழைக்குப்பின் நான் தோன்றுவேனென்று மரம் காத்திருக்கும். கரைக்குப்பின் நான் தோன்றுவேனென்று நதி காத்திருக்கும்.

வங்காளி மட்டும் தெரிந்தவர்களுடைய அறிவுப் பசியை நீக்க ஒரு போதும் வழியேற்படாதா?

ஜெர்மனியிலும், ப்ரான்சிலும், அமெரிக்காவிலும், ஜப்பானிலும், மனுஷ்யருடைய புத்தியைப் பக்குவப்படுத்தும் பொருட்டு நவீன ஸர்வ காலசாலைகள் தோன்றியிருக்கின்றன.

அவை ஜனங்களின் அறிவையும் குணத்தையும் விருத்தி செய்து தமது நாடுகளைப் புதுமை செய்து கொண்டு வருகின்றன. அந்த விதமான புதிய ஸ்ருஷ்டி அன்யபாஷை மூலமாகச், செய்ய முடியாது.

இங்கே, நமது கல்வி நிஷ்ப்ரயோஜனமாகப் போவதின் முக்கிய காரணம் யாதெனில் நாம் சம்பாதிக்கும் அறிவினால் நமது பாஷை செழிப்படையவில்லை.

எப்போதும் உயர்ந்த மதிக்குப் புறத்தே தள்ளப்படுவதால் நமது பாஷை நம் அறிவு முதிர்ச்சியுடன் தொடர்ந்து வளர இடமில்லாமல் போகிறது.''



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com