Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

பென்னி குயிக்கும் திருவாங்கூர் அரசரும் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் என்ன?

எழுகதிர் அருகோ

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மூண்டுள்ள முட்டு கட்டைகளை நீக்குவதற்காக உச்ச நீதிமன்ற யோசனைக்கேற்ப 29-11-2006 அன்று, தில்லியில் மத்திய அரசின் முன்னிலையில் தமிழக-கேரள முதலமைச்சர்கள் சந்தித்துப் பேசியது தெரிந்ததே.

அங்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையின் சாரம் 2-12-2006 அன்று நாளேடுகளில் தமிழக அரசின் அறிக்கையாக வெளிவந்திருந்தது. கேரள அரசு என்ன நினைத்ததோ தெரியவில்லை. தில்லி சந்திப்பில் மாண்புமிகு கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சு தானந்தன் அவர்கள் ஆற்றிய உரையின் சாரத்தை 8-12-2006 அன்றைய தமிழ்நாளேடுகளிலும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

பொதுநலனும் தனிநலனும்

கலைஞர் பேச்சின் தலைப்பு “நட்புணர்வு அடிப்படையில் சுமுகத் தீர்வு காண்போம்'' என்பது, அச்சுதானந்தன் பேச்சின் தலைப்பு “தமிழ்மக்களுக்குத் தண்ணீர், கேரள மக்களுக்குப் பாதுகாப்பு, அதுவே எங்கள்தீர்வு'' என்பதாகும்.

அதாவது சரித்திர காலந்தொட்டு, தமிழகத்திற்கும் மலையாள மக்களுக்கு முள்ள உறவுகளையே கலைஞர் முதன்மைப்படுத்த, அந்த உறவுகள் எப்படியோ போகட்டும்; அந்த உறவுகளின் அடிப்படையில், முல்லைப் பெரியாற்றிலும், அது அமைந்திருக்கும் தேவிகுளம் - பீர்மேட்டுப்பகுதியிலும் தமிழ்மக்களுக்குள்ள உரிமைப் பங்கைக் கைவிட்டு, அந்த உரிமைப் பங்கை நினைவுறுத்திக் கொண்டிருக்கும் திருவாங்கூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்குமிடையிலான ஒப்பந்தத்தை மறந்து, இன்றைய கேரளாவுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டு, முல்லைப் பெரியாற்று நீர் முற்றிலும் கேரளாவுக்கே சொந்தமானது - அது அளிக்கத் தமிழகம் பெறுவது என்பதை ஒப்புக் கொண்டு, புதிய அணைக்கட்டைக் கட்டி, கேரளத்தின் உரிமையை உத்தரவாதம் செய்யுங்கள் என்பதே அச்சுதானந்தன் எடுத்து வைக்கும் வாதத்தின் அடிப்படையாகும். முல்லைப் பெரியாறு அணை பற்றி 999 ஆண்டு மூல ஒப்பந்தத்தைப் படித்தால் இது பளிச்சென்று புரியும்.

மூல ஒப்பந்தம் வழங்கும் முழுஉரிமை

1886ஆம் ஆண்டு அக்டோபர் 29 கொல்லம் ஆண்டு 1062 துலா (ஐப்பசி) மாதம் 14ஆம் நாள் அன்றைய பிரிட்டீஷ் இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே ஏற்பட்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தம்' 8 பிரிவுகளில் கீழ்க்காணும் உரிமைகளைச் சென்னை மாகாணத்திற்கு வழங்கியுள்ளது.

(அந்தக் காலகட்டத்தில் திருவாங்கூர் மன்னர் பரம்பரை பெரும்பாலும் தமிழ்ச் சார்பு கொண்டே இருந்தது என்பதும், 1949ஜூலை 9ஆம் நாள் கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்து, திருவாங்கூர் கொச்சி இராச்சியமாக மாறிய பிறகே அது மலையாளமயமானது என்பதும், அதுபோலவே நமது தமிழ் நாடும் மொழிவழியில் பிரித்தமைக்கப்படாத சென்னை மாகாணத்தின் ஒரு கூறாகவே இருந்த தென்பதும், ஆகவேதான் மொழி வழி மாநிலப் பிரிவினையின் போது இந்த முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள தேவிகுளம் - பீர்மேடு உட்பட 2000 சதுரமைல் பரப்பளவைத் திருவாங்கூர் கொச்சி இராச்சியத்திலிருந்து தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் போராடினார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆம்; முல்லைப் பெரியாறு பகுதி என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட கேரளப்பகுதி தான் என்று அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது.

8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு

1. பெரியாறு நீர்த்தேக்கம் கட்ட உத்தேசித்துள்ள இடத்திலிருந்து அணைகட்டி நீர் தேக்கும் பகுதியில் 155அடி நிலமட்டம் வரையுள்ள நிலமனைத்தும் (8000 ஏக்கர்) பயன்படுத்த உரிமை.

2. இப்படி அளிக்கப்பட்ட 8000 ஏக்கர் நிலப் பரப்புக்கு அருகே ஏனைய கட்டுமானங்களுக்காக 100 ஏக்கர் நிலம்.

3. இந்த 8100 ஏக்கர் நிலத்தில் அணைகட்டுவதற்கும், அதன் தொடர்பான இதர பணிகளை மேற்கொள்ளவும் உரிமை.

4. இந்த நிலப்பரப்பின் மேல்விழும் மற்றும் ஓடும் தண்ணீர் முழுதும் பயன்படுத்தும் உரிமை.

5. இந்த நிலப்பரப்பில் தற்போதுள்ள மரங்கள், காடுகள், ஒப்பந்த காலத்தில் புதிதாக வளர்க்கப்படும் மரங்கள் அனைத்திற்கும் உரிமை.

6. இந்த நீர்த்தேக்கத்திலும், குளம், குட்டைகளிலும் மீன்பிடிக்கும் உரிமை.

7. இந்தப் பகுதிகளில் அணைகட்டும்போதும், அதன் பின்பும் ஆட்கள் வாகனங்கள் போக்குவரத்திற்காகச் சாலைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை.

8. இந்த ஒப்பந்தப்படி 999 ஆண்டுகளுக்குப்பின் மற்றொரு 999 ஆண்டு களுக்கு இதைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு தெளிவாக உள்ள இந்த ஒப்பந்தத்தில் திருவாங்கூர் சமஸ்தானம் பிறகு பின் வாங்கி விடக் கூடாது என்பதற்காகவே “இதுபற்றி நீதி மன்றத்திற்குச் செல்லக்கூடாது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே யொழிய சென்னை மாகாணத்திற்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கேரளாதான் நீதிமன்றம் செல்லக்கூடாதேயொழிய, தமிழ்நாடு செல்லத் தடையில்லை.

ஆனால், இன்றைய கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள் உச்சநீதி மன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யும் நோக்கோடு “ஒப்பந்தப்படி நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது'' என்று கூறுகிறார்.

“நாங்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று சொல்லவில்லை; இந்த அணை பழுதடைந்து விட்டதால், புதிதாக வேறு அணைகட்டிக் கொள்ளலாம் என்றே சொல்கிறோம்'' என்று, வரலாற்று ரீதியான தமிழக உரிமைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பார்க்கிறார்.

பசல் அலி கமிஷன் செய்த பாதகம்

ஆம்; மாநிலங்கள் மொழி வழியாகப் பிரித்தமைக்கப்பட்ட போது “தகராறுக்குரிய ஒரு பகுதியில் 70 விழுக்காடு ஒரு மொழிபேசுகின்ற மக்கள் வாழ்ந்தால், அப்பகுதி அம்மொழி வழிமாநிலத்துடனேயே சேர்க்கப்பட வேண்டும்'' என்று நடுவனரசு கொள்கை அறிவிப்புச் செய்திருந்தது.

ஆனால், தேவிகுளம் - பீர்மேட்டில் 98 விழுக்காடு தமிழ்பேசும் மக்களே வாழ்ந்திருந்தும், அன்றைய திருவாங்கூர் கொச்சி இராச்சியத்தின் முக்கிய ஆறுகள் எல்லாம் அப்பகுதியிலேயே உற்பத்தியாகின்றன; அம் மாநிலத்திற்கான நீர்மின் நிலையங்களும் அப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றன; அவ்விரு தாலுகாக்களும் இல்லையென்றால் திருவாங்கூர் - கொச்சி ஒரு தனிமாநிலமாக வாழமுடியாது என்ற காரணத்தைக் காட்டித்தான் - நடுவணரசின் கொள்கையறிவிப்பில் ஒரு விதிவிலக்கைக் கோரிப் பெற்றுத்தான் கே.எம்.பணிக்கர் என்ற மலையாளியின் செல்வாக்கில் செயல்பட்ட பசல்அலி எல்லை நிர்ணயக் குழு, அப்பகுதி தமிழ்நாட்டுடன் சேரவேண்டியதன் நியாயத்தைத் தவிர்த்தது. கேரளத்துடன் சேர்த்தது.

தமிழகப் பகுதியாவதே தேவை

அந்த நியாயமறுப்புக்கு மேலும் ஒரு வலுவைச் சேர்த்துக் கொள்வதற்குத் தான் புதிய அணைகட்டிக் கொள்ளலாம் என்ற யோசனையைக் கேரளா முன் வைக்கிறது.

உள்ளபடி இன்றைக்கும் தமிழர்களே மிகுதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தேவிகுளம் - பீர்மேட்டைத் தமிழகத்துடன் இணைப்பதே நியாயமாகும். அது ஒருபுறமிருக்க, முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தையேனும் உடனடியாகத் தமிழகத்தின் பகுதியாக அறிவிப்பதே கேரளத்தினுடைய தலைவலியைப் போக்குவதற்கு வழிசெய்வதாகும்.

ஆம்; இப்போதேகூட அந்த அணைக்கட்டுப்பகுதியின் 20 விழுக்காடு ஒப்புக் கொள்ளப்பட்ட தமிழக எல்லையில்தான் உள்ளது. மீதியுள்ள 80 விழுக்காட்டு அணைக்கட்டுப் பகுதியையும் தமிழகத்துடன் இணைத்து விடுவது நடுவணரசுக்கு ஒன்றும் பெரிய காரியமல்ல.

பச்சைப் பொய்

ஏனெனில், முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கினால் கேரளாவிற்கு ஆபத்து; அந்த அணை உடைந்து, வரும் வெள்ளத்தில் கேரளாவில் 5 மாவட்டங்கள் மூழ்கி விடும் என்று அது செய்து வரும் பிரச்சாரம் துளிகூட உண்மைக் கலப்பற்ற பொய்யாகும்.

ஆம்; உண்மையாகவே முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும்கூட கேரளாவில் ஒரேயொரு கிராமம்கூடப் பாதிக்கப்படப் போவதில்லை. காரணம், பெரியாறு மிகமிகப் பள்ளத்தில், கரடுமுரடான மலைப்பகுதி வழியாகவே ஓடிக் கடலில் கலக்கிறது. வெள்ளத்தில் மூழ்கும் என்று கேரள அரசு சொல்லும் பகுதிகள் அனைத்துமே மேட்டுப்பாங்கில் அந்த ஆறுபாயும் பள்ளப்பகுதியிலிருந்து 20 அல்லது 30 அடி உயரத்திலேயே அமைந்துள்ளன.

இடுக்கிக்காகவே இடிக்கிறது

உடைத்துச் சொல்வதாயின் முல்லைப் பெரியாறு அணைக்கும் கீழே அமைந்திருக்கும் இடுக்கி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி, அதன் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தை முடக்கிவிட நினைக்கிறது கேரளா.

பெரியாற்று நீரை இடுக்கிக்குக் கொண்டு செல்லக் கடப்பாரை, மண்வெட்டிகள், சகிதம், 2ஆயிரம் பேரைத்திரட்டி வண்டிப் பெரியாறியலிருந்து 4-12-2006 அன்று அவர்கள் முல்லைப் பெரியாற்று அணை நோக்கி ஊர்வலமாகச் சென்றதே இதைப் புலப்படுத்தும், அப்போது அவர்கள் முழங்கிய முழக்கம் “முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கமும் அளவை 116 அடியாகக் குறை'' என்பதாகும். அதாவது படிப்படியாகக் குறைத்து, முடிவில் இல்லாமலே ஆக்கிவிட வேண்டும் என்பது கேரளாவின் திட்டமாகும்.

மலையாளிகளும் தமிழர்களும்

தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக ஆதரிக்கிற போது, தேவிகுளம் பீர் மேட்டில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தும் மூச்சவிடக் காணோமே என்றால், பொருளாதாரத்திலும் படிப்பிலும் பின்தங்கிய உழைக்கும் மக்களாகவே அவர்கள் வைக்கப்பட்டிருப்பதும், அவர்களிடையே படிப்பில் பதவியில் பணத்தில் உயர்ந்தும் நிற்கும் மலையாளிகள் அவர்களை அச்சச் சூழ்நிலையில் அழுத்தி வைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்திற்குச் சாதகமாக இருப்பதால் முல்லைப் பெரியாறு மூல ஒப்பந்தப்படி நீதிமன்றம் தலையிட முடியாது என்று இன்று கேரளா சொல்கிறது. ஆனால், அன்றைய சென்னை மாகாண அரசுடன் அந்த ஒப்பந்தம் போட்ட திருவாங்கூர் சமஸ்தானம்தான் முதலில் நீதி மன்றம் சென்றது என்பதை அச்சுதானந்தன் அறிய வேண்டும்.

அச்சுதானந்தன் அறிவாரா?

ஆம்; விவசாயத்திற்குத் திருப்பிவிட்ட பெரியாற்று நீரை அன்றைய சென்னை அரசு மின்உற்பத்திக்கும் பயன்படுத்திக்கொள்ள விரும்பியபோது 1940இல் திருவாங்கூர் அரசு அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தது.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சர். டேவிட் தேவதாஸ் திருவாங்கூர் அரசின் முன்னாள் திவான் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு இதனை விசாரித்தும், இருவரும் இருவேறு கருத்தைக் கூறியதால், நீதிபதி சர்.நளினி ரஞ்சன் சட்டர்ஜியின் தீர்ப்புக்கு விடப்பட்டது. அவர் 1941 மே 12 அன்று அளித்த தமது தீர்ப்பில்-

1. பெரியாற்று நீரை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தலாம். 2. விவசாயம் தவிர வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது. 3. விவசாயம் தொடர்பான தேவைகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று கூறினார். எனவே நீதிமன்றத் திற்குத் தமிழகமும் போகலாம் என்பதற்கு வழி செய்ததே திருவாங்கூர் அரசுதான் என்பதை அச்சு தன் மறைக்க முயலக்கூடாது.

மூலஒப்பந்தத்தில் ஊன்றி நிற்பதென்றால் 999 ஆண்டுகள் கேரளா முல்லைப் பெரியாற்றின் பக்கமே தலை காட்டக்கூடாது. ஆனால் 1970இல் அணை உடையப் போகிறது என்ற பீதியைக் கிளப்பி, கேரளமக்களைக் கிளர்ச்சிகளில் ஈடுபடச் செய்து, தமிழகத்தைப் புதியதொரு ஒப்பந்தத்திற்கு வரச் செய்து கேரளா அந்த ஒப்பந்தத்தின் கீழேதான்-

1. முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்திலும், குளம் குட்டைகளிலும் தமிழகத் திற்கிருந்த மீன்பிடிக்கும் உரிமை கேரளத்திற்குக் கைமாறியது. பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் கேரளம் பங்குபெற வகை செய்யப்பட்டது. இதில் வெட்கக்கேடு என்னவென்றால், அந்தக் கேரள அதிகாரிகளுக்கும் தமிழகமே சம்பளம் வழங்கும் என்பதாகும்.
இன்னும் கொடுமை முத லில் 8 பேராக இருந்த அவர் களின் எண்ணிக்கையை கேரளா தன்னிச்சையாக 25 பேராக உயர்த்திக் கொண்டது. அவர்களுக்கும் தமிழக அரசு சம்பளம் தருகிறது. ஆனால், அவர்களோ, தமிழக அரசிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு, கேரள அரசு சொன்னபடியே நடக்கின்றனர்.

2. மூல ஒப்பந்தத்தில் ஏக்கருக்கு ரூ.5 என்று இருந்த குத்தகைத் தொகை ரூ.30 ஆக உயர்த்தப்பட்டது. அதுவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் புதிய குத்தகைத் தொகை நிர்ணயிக்கவும் ஒப்புக் கொண்டது.

கொடுமையிலும் கொடுமை

இதிலே மேலும் கொடுமை என்னவென்றால் கேரளாவுக்கும் தமிழகத்திற்குமிடையே 29-5-1970இல்தான் கையெழுத்தானாலும் 13-11-1954இல் இருந்தே நடை முறைக்குவரும் என்று ஏற்கப்பட்டதாகும்.

இதில் நிகழ்ந்துள்ள கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், மூல ஒப்பந்தத்தில் உள்ள 8000 ஏக்கர் பரப்பைக் கேரள 4677 ஏக்கர் குறைந்திருப்பதும், மீதமுள்ள 3323 ஏக்கர் பரப்பைத் தமிழக அரசு விட்டுக் கொடுத்திருப்பதுமாகும்.

இப்படி, தமிழகத்தை மிரட்டியே மீன்பிடிப்பதில் ருசி கண்ட கேரளா, முல்லைப் பெரியாற்றில் தற்போதைய அணைக்குப் பதில் புதிய அணை என்ற பொறியிலும் தமிழகத்தைச் சிக்கவைத்து விடலாம் என்றுதான் 29-11-2006 அன்று தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.சைஃபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக முதல மைச்சருடன் கேரள முதலமைச்சர நேரடிப் பேச்சு வார்த்தை என்ற நாடகத்தைப் பிரதமர் மூலமும், உச்சநீதிமன்ற யோசனை என்ற பெயரிலும் அரங்கேற்றியது.

கலைஞரின் தலைமை

நல்லவேளையாக நம்முடைய முதலமைச்சர், நடக்கவிருக்கும் இரு மாநில அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தையிலும் தமிழக அரசு அசைந்து கொடுத்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டு கோளாகும்.
ஏனென்றால், “கேரள மக்களின் அச்சத்தைப் போக்கவும் (அவ்வச்சம் போலியாக உருவாக்கப்பட்டதே.) தமிழகத்தின் தண்ணீர்த் தேவை. மின் தேவையைக் கணக்கில் கொண்டும், தமிழகத்தால் விட்டுக் கொடுக்கப் பட்ட 3323 ஏக்கர் நிலப் பரப்பில் இரண்டாவது முல்லைப் பெரியாறு அணை கட்டலாமே! தற்போதைய அணையில் 136 அடிக்கு மேல் கிடைக்கும் உபரிநீரையும், கடலில் கலந்து வீணாகும் கனமழை நீரையும் புதிதாகக்கட்டப் படவுள்ள அணைக்கு எடுத்துச் செல்லவும், புதிய நீர்மின் நிலையம் அமைத்துக் கொள்ளவும் கேரள அரசு ஆட்சேபனை எதையும் தெரிவிக்கக் கூடாது. மத்திய அரசின் முன்னிலையில் புதிய ஒப்பந்தத்தின் மூலம் இருமாநில அரசுகளும் இதில் கையொப்பமிட வேண்டும் என்று, தமிழக ஏடுகளில், தமிழர்களே மடல்கள் எழுதும் அளவுக்குக் கேரளா ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயபல்சின் குணம்

“ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அதுவே உண்மையாகி விடும்'' என்ற தந்திரத்தைக் கேரள அரசு கடைப்பிடிக்கின்றது. ஏற்கெனவே, காவிரியில் கருநாடகம் அத்தந்திரத்தைக் கையாண்டு, பெருமளவுக்கு வெற்றிகாண இடம்கொடுத்து விட்டோம். அதைப் பார்த்துத்தான் பாலாற்றில் அணைகட்டி மறிக்க ஆந்திரமும் முற்படுவதாகத் தெரிகிறது.

ஆகவே, முல்லைப் பெரியாற்றில் தமிழக உரிமையை முனைமுறியாமல் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று முத்தமிழறிஞரைக் கேட்டுக் கொள்கின்றோம்.

அச்சுதானந்தன்கள் நம்மை அச்சுறுத்தி ஆனந்தம் பெற அனுமதித்து விடக் கூடாது என்பது முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி உழவர்களின் வேண்டு கோளாகும்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com