Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2006

அச்சுதானந்தனின் எதிர்காலம்

ஆனாரூனா

கேரளத்தைத் தமிழர்கள் எப்போதும் தனி நாடாகவோ, தனி மாநிலமாகவோ எண்ணுவதில்லை. சேரர் வாழ்ந்த சிறப்பிடம் என்கிற நினைவே இன்றளவும் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் இதயங்களிலும் நிலைத்து நிற்கிறது.

பழந்தமிழகத்தின் சேர மன்னர்களையும் சேர நாட்டுப் புலவர்களையும் நம்மவர்கள் என்றே சோழ-பாண்டிய நிலப்பரப் பின் மக்கள் உறவாடியது போலவே, மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போதும் அந்த உறவு முறையை இந்த மக்கள் அறுத்துக் கொண்டதில்லை.

கேரளத்திலிருந்து வந்த எத்தனையோ இளைஞர்கள் இங்கே மாபெரும் தலைவர்களாக ஏற்கப்பட்டு அரசியல் அரங்கிலும் தொழிற்சங்க அரங்கிலும் போற்றிப் புகழப்பட்டார்கள். அவர்களிலே பலர் இறந்து விட்டார்கள். ஆனாலும் தமிழர்களின் இதயங்களில் வாழ்கிறார்கள்.

மாதவன் நாயர், அனந்த நம்பியார், வி.பி.சிந்தன் கே.ரமணி, ராமுண்ணி பி.ஆர்.பரமேஸ்வரன், ஏ.கே. பத்மநாபன், எம்.ஜி.ஆர். என்று பல தலைவர்கள் இங்கே சுடர்விடும் மணிகளாய் ஒளிர்கிறார்கள்.

ஈ.எம்.எஸ், ஏ.கே.ஜி. கோவிந்தப்பிள்ளை, கேசவ தேவ், பொன்குன்னம் வர்க்கி, பொற்றே காட், லலிதாம்பிகா அந்தர்ஜனம், வரலாற்றுப் பேராசிரியர் கே.எம். பணிக்கர், தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர். இவர்களெல்லாரும் மலையாளிகள், வேறு மாநிலத் தவர் என்ற எண்ணமே இது வரை தமிழர்க்கு வந்ததில்லை.

இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரகாஷ் காரத் சென்னையில்தான் படித்தார் என்பதால் அவரும் எங்கள் தோழரே என்றே பலரும் `உரிமை' கொண்டாடுகிறார்கள்.

தனிமாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு விட்ட பிறகும்கூட இந்தச் சொந்தம் முறியாமல் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம், மார்க்சிய இயக்கமும் திராவிட இயக்கமும் வேறு வேறு என்று இங்கே யாரும் கருதுவதில்லை.

ஆனால், இன்றைய முதல்வர் அச்சுதானந்தன் தமிழர்களின் எதிரி என்று முகம் சுழிக்கும் அளவுக்கு ஒரு `போக்கிரியாய்' உருவெடுத்திருக்கிறார். (போக்கிரி என்ற சொல்லாட்சி அவர் தந்த கொடையே!)

இவர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக ஏற்கப்பட்டார் என்றே பலர் வியக்கிறார்கள்.

அச்சுதானந்தனுக்கு முதல்வர் பதவியை மார்க்சிஸ்ட் கட்சி மனநிறைவோடு வழங்கிவிடவும் இல்லை. சில `அசம்பாவிதங்களைத்' தவிர்ப்பதற்காக இந்த ஆளே இருந்து தொலைக்கட்டும் என்கிற கசப்புடனேயே அவர் முதல் வராக்கப்பட்டார்.

`பாவம் மூத்த தோழர்' என்கிற பரிவு அவருக்குச் சாதகமாக இருந்தது.

மூப்பு என்பது தகுதியல்ல. வயதாவதற்கு பெரும் முயற்சியோ பயிற்சியே தேவை இல்லை. சும்மா இருந்தாலே வயதாகிவிடும் என்று அவர் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட போதே பல தோழர்கள் கிண்டலடித்ததும் உண்டு.

பதவி ஏற்றுக் கொண்டபோதே, எந்த நேரமும் கட்சி தன்னைக் கழற்றி விட்டுவிடும் என்கிற உணர்வு அச்சுதானந்தனுக்கு ஏற்பட்டுவிட்டது.

பதவி மோகம் சில `கதா நாயகர்களை' `வில்லன்' களாக்கிவிடுவதுண்டு. சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் தலைமைக்கு வந்தபோது பல கம்யூனிஸ்ட் தோழர்களும் தலைவர் களும் `இந்த ஆள் ஆபத்தானவர்.

பதவியில் இவர் நீடித்தால் இரண்டு மூன்று ஆண்டுகளில் உலகுக்கொரு புதுமையாய் - மண்ணிலே சொர்க்கம் ஒன்று மலர்ந்தது என்று கவிஞர்கள் வாழ்த்திய - சோவியத் யூனியனே தகர்ந்துவிடும்' என்று எச்சரித்தார்கள். அப்போது பலராலும் அதை நம்ப முடியவில்லை. ஆனால் `அது' தான் நடந்தது.

கேரள முதல்வர் அச்சு தானந்தனும் கோர்பச்சேவ் ரக மனிதரே! தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் தன்னை வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சியையே தடை செய்தவன் கோர்பச்சேவ், இனிவரும் நாட்களில் அச்சுதானந்தனிடமும் இம் மாதிரியான போக்கிரித் தனங்களை மார்க்சிஸ்ட் கட்சி சந்திக்க நேரலாம்.
ஆனால் கேரளத் தோழர்கள் ஏமாளிகள் அல்ல.

கட்சியில் தன்னால் பெற முடியாத ஆதரவையும் செல்வாக்கையும் வேறு வழியில் வேறு வேறு முகாம்களில் திரட்டிக் கொள்வது என்பதுதான் அச்சுதானந்தனின் இப்போதைய நிலை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் வேறு யாரையும் விட நானே உண்மையான, உறுதியான மலையாளி என்கிற சித்திரத்தை உருவாக்க நினைக்கிறார் மாண்புமிகு போக்கிரியார்.

முற்போக்குச் சிந்தனையோ, மார்க்சிய அறிவோ இல்லாத ஒரு மனிதர் பாமரர்களை வசீகரிப்பதற்கு ஒரு சாவனிஸ்ட்டாகக் காட்சியளிப்பது கொஞ்சம் பலனையும் தரலாம். பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ் போன்ற பிற்போக்குச் சக்திகளுக்கு அது அழைப்பாகவும் மாறலாம். இதுதான் அச்சுதானந்தனின் எதிர்கால அரசியல் வியூகம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அச்சுதானந்தனின் ஒவ்வொரு அசைவும் இவர் யோக்கியர் அல்ல என்பதையே உறுதி செய்கிறது.

``போக்கிரித்தனமான வாடகைதாரர் போலத் தமிழக அரசு நடந்து கொள்கிறது'' என்று தடித்த வார்த்தைகளால் செய்த விமர்சனம் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
``வகிக்கும் பதவிக்கு இழிவு தரும் வகையில் வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்'' என்று தோழர் பிரகாஷ்காரத் பதைப்புடனும் வெறுப்புடனும் அச்சு தானந்தனுக்கு அறிவுறுத்தினார். அதே சமயம் தமிழக முதல்வர் கலைஞரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுதானந்தனின் விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

சேரவம்சத்தின் மீதும், மார்க்சிய இலட்சியங்கள் மீதும் தமது இளமைக் காலம் முதலே வளர்த்துக் கொண்ட பாசத்தால், தோழர்கள் ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாத், வி.பி.சிந்தன், அனந்தன் நம்பியார் போன்ற தலைவர்களின் பண்பும் பழகு முறையும் இன்றையத் தலைவர் தோழர் பிரகாஷ்காரத்திடமும் இருப்பது கண்ட நெகிழ்வால், அச்சுதானந்தனின் போக்கிரித்தனமான விமர்சனத்தையும், தாதா நடவடிக்கைகளையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

அணையில் வைக்கப்பட்டிருந்த நீர்மட்ட அளவு கோலைத் திருட்டுத்தனமாக வந்து ஒடித்து போட்ட அச்சு தானந்தனின் `அடியாட்களைக் கலைஞர் நினைத்திருந்தால் சுட்டுத் தள்ளியிருக்க முடியும். அணையைச் சோதனையிடப் போகிறோம் என்று தோணிகளில் வந்த கப்பற் படையினரின் உண்மையான நோக்கம் சோதனையிடுவதா? ரகசியமாய் வெடி குண்டு வைப்பதா? எதுவாக இருந்தாலும் தமிழக அரசின் அனுமதி பெறாமல் நுழைந்ததற்காக அச்சுதானந்தன் பாணியில் அவர்களைக் கைது செய்து பயங்கரவாதிகள் என்ற பெயரில் சிறையில் அடைத்திருக்க முடியும்.

உணவுப் பொருள்களோ, மின்சாரமோ கேரளத்துக்குச் செல்லாமல் தடுக்க முடியும்.

கேரளத்து மருத்துவக் கழிவுகளைத் தமிழகத்தில் கொட்டச் செய்து நோய் பரப்பும் போக்கிரி என்று குற்றம் சாற்றி அச்சுதானந்தனைக் கைது செய்து வழக்குப் போடமுடியும். (அச்சுதானந்தன் போன்ற முதல்வர்கள் மீது வழக்குப் போட முன் அனுமதி பெறத் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் வேறு அறிவித்திருக்கிறது)

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் இலட்சக்கணக்கான கேரள மக்களுக்கு ஆபத்து நேரும் என்ற அச்சுதானந்தனின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக நீர்மட்டத்தை உயர்த்தா விட்டால் இங்குள்ள மலையாளிகளுக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன் என்று கலைஞரும் அறிவிக்க முடியும்.

ஆனால், கலைஞர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் பண்பாட்டுப் பாசறையில் வளர்ந்தவர் என்பதால் அச்சுதானந்தன் எடுக்கும் `ஆயுதங்களை' எடுப்பதில்லை; மதிப்பதில்லை.

இரு முதல்வர்களின் அணுகுமுறைகளையும் மார்க்சிஸ்ட் தலைமை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பொறுப்புள்ள தலைவர்கள் என்னதான் அறிவுறுத்தினாலும் அச்சு தானந்தன் திருந்துவதாக இல்லை.
டெல்லி பேச்சுவார்த்தையின் போது கடுகடுத்த முகத்துடன் கலைஞருடன் கைகுலுக்கவும் விருப்பமில்லாமல் அச்சுதானந்தன் நின்ற தோரணை செய்தியாளர்களையும், ஒளிப்படக்காரர் களையும் திகைப்படையச் செய்தது. பத்திரிகைகளில் படங்களைப் பார்த்த நாகரிக மனிதர்கள் அனைவருமே அச்சுதானந்தனுக்கு அவருடைய சொல்லாலேயே ஆரம் சூட்டினார்கள்.

யார் என்ன சொன்னாலும், கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என்பது தான் அச்சுதானந்தனின் முடிவு.
மார்க்சியவாதி என்பவனுக்கு முதல் தகுதியும் நிபந்தனையும் மனிதாபிமானம் தான். மனிதாபிமானத்திலிருந்தே மார்க்சியம் வளர்கிறது. மனிதனாகவே இருக்க முடியாதவன் மார்க்சியவாதியாகி விடமுடியாது.

மாஸ்கோவில் மழை பொழிந்தால் மதுரையில் குடைபிடிப்பார்கள் என்று கம்யூனிஸ்ட்டுகளைக் கிண்டல் செய்வார்கள். இந்தக் கேலியும் கிண்டலும் தான் அவர்களின் வீரார்ந்த இலட்சியத்துக்குச் சான்றிதழ்கள். வியத்நாமின் துயரம் இவர்களின் விழிகளில் வழியும். ஆப்பிரிக்காவின் வறுமை கம்யூனிஸ்ட்டின் இதயத்தை உலுக்கும். எங்கே விலங்குகளும் வேதனையும் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் சிந்தும் இரத்தம் தனது இரத்தம் என்றே துடிப்பவன் கம்யூனிஸ்ட்.

நதிநீர், தேசிய இனப் பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட்டுகளின் பார்வையும் அணுகு முறையும் தனித் தன்மை பெற்றவை. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அமெரிக்க மக்களுக்கு எதிரான வைராக்கியம் அல்ல. அமெரிக்க மக்களுக்கு ஒரு துயரம் என்றால் காஸ்ட்ரோ கலங்குவார். இதுதான் கம்யூனிஸ்ட் அடையாளம்.

அச்சுதானந்தன் மனிதனாகவும் இல்லை; கம்யூனிஸ்ட்டாகவும் இல்லை என்பதால்தான் தமிழ் நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அச்சுதானந்தனின் போக்கைப் பகிரங்கமாகக் கண்டிக்கிறது.
இருமாநில உறவுகளைப் பாதித்துவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராசன் இதமாகக் கூறுவதிலுள்ள மன அழுத்தத்தை இதயம் இருந்தால் மாத்திரமே அச்சுதானந்தனால் உணர முடியும்.
விரைவில் மார்க்சிஸ்ட் கட்சி அவரைப் பதவியிலிருந்து இறக்கும். அல்லது அச்சுதானந்தனே ஆட்சியைக் கவிழ்ப்பார். முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கருணாகரன் வழியில் கட்சியை உடைக்கவும் தயாராவர்.

கருணாகரனும், அச்சு தானந்தனும் கூட்டணிகூட அமைக்கலாம்.
ஆசை வெட்கமறியாது. அச்சுதானந்தனுக்கு அது தேவைப்படாதது.


போக்கிரியின் பொய்!

``முல்லை - பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. இந்த அணையைக் கட்டிய பென்னி குயிக் அணையின் வாழ்நாள் 50 ஆண்டுகள்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றெல்லாம் அச்சுதானந்தன் சொல்கிறாரே?''

``அணையின் ஆயுள்காலம் 50 ஆண்டுகள்தான் என்று பென்னிகுயிக்கோ, வேறு எந்தப் பொறியாளரோ எங்கும் எப்போதும் சொன்னதே இல்லை!

50ஆண்டுகள்தான் அணை இருக்கும் என்றால் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடுவார்களா? பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை இன்னும் இருக்கிறதே! பெரியாறு அணை கட்டப்பட்ட காலத்தில் உலகின் பல நாடுகளிலும் அணைகள் கட்டப்பட்டன. அவை எல்லாமே பெரியாறு அணைபோல் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டவையே.

அவற்றில் எதுவும் சேதமடையவில்லையே!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com