Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்டு 2007

கதர் அணிந்த காலத்தில்: பெரியார்


உபாத்தியாயர் வீட்டில் நடக்கும் கல்யாணம், கார்த்திகை, நன்மை, தீமை முதலிய சடங்குகளுக்கு அவ்வப் போது பெற்றோர்களும், பையன்களுடைய சுற்றத்தார்களும் தாராளமாகக் கொடுத்து நடத்தி விடுவார்கள்.

Periyar பையனுடைய வகுப்புக்கு உபாத்தியாயர் ஜவாப்தாரியாகவும், உபாத்தியாயர்களுடைய காலட்சேபத்திற்குப் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஜவாப்தாரிகளாகவும் பரஸ்பரம் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவார்கள். ஒரு பையன் வீட்டில் ஏதாவது குற்றஞ் செய்துவிட்டாலும், அவன் படித்ததாகச் சொல்லும் பாடங்களில் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லாவிட்டாலும், உபாத்தியாயருக்குக் கொடுப்பதில் குறைத்து விடுவார்கள். உபாத்தியாயர்கள் பெயரைச் சொன்னால் பையன்கள் நடுங்குவார்கள்.

தாங்க முடியாத செலவுகள்

சாப்பாட்டுக் கவலையென்பதே உபாத்தியாயர்களுக்குத் தெரியவே தெரியாது. உபாத்தியாயர் வீட்டுப் பெண்களோடு குடும்பக் கவலை நின்று விடும். எவ்விதத்திலும் அவைகள் உபாத்தியாயர் காதுக்கு எட்டவே எட்டாது. அக்காலத்தில் படிப்புச் செலவு இப்போதைய செலவுகளில் பதினாறில் ஒரு பங்கு கூட இருக்காது.

இப்பொழுதோ பிள்ளைகள் கொடுக்கிற பணம் கணக்கு வழக்கில்லை. புத்தகம், காகிதம், பேனா, பென்சில், சித்திர சாமான், விளையாட்டுக் கருவி, இரசாயன சாமான், பெஞ்சு, நாற்காலி, மேசை, கட்டடங்கள் இவைகளுக்காகும் செலவுகளோ மக்கள் தாங்கமுடியாததாகப் போய்விடுகிறது.

இதன்மேல் உபாத்தியாயர்களுக்குக் கொடுப்பதும் தாங்க முடியாததாகவே ஏற்பட்டு விடுகிறது.

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்போருக்குக் கொடுக்கப்படும் சம்பளம் சில ஆபீஸ்களில் பியூன்களுக்கும், போலீஸ் காரர்களுக்கும் கொடுக்கப்படுவதை விடக் குறைவாகத்தானிருக்கிறது. குழந்தை குட்டிகளோடு வாழ்கிற ஒரு குடும்பத்திற்கு 30 ரூபாயாவது (1927-இல்) இருந்தால்தான் கவலையில்லாமல் தன் காரியத்தைக் கவனிக்க முடியும். அதுகூட இல்லாமல் கஷ்டப்படுகிறதைப் பார்க்கும்பொழுது நமக்கு மிகவும் பரிதாபகர மாகத்தானிருக்கிறது.

பசுவைக்கொன்று செருப்பு தானம்

‘பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்வது போல்' நமது அரசாங்கத்தார்கள், சாராயத்தை விற்று அதில் வரும் இலாபத்தை எடுத்துக் கல்விக்காகச் செலவு செய்கிறார்கள். ஆகவே, இன்னும் கொஞ்சம் கல்விட சவுகரியமும், சம்பளச் சவுகரியமும் வேண்டுமானால் இன்னுங் கொஞ்சம் அதிகமாகக்கள், சாராயம் குடித்து, அதனால் அதிக வரும்படியை உண்டாக்கும் பொறுப்பை நம் தலையில் வைத்திருக்கிறார்கள். இம்மாதிரிக் குடியில் வரும் இலாபத்தினால்தான் படிப்புக்குச் செலவு செய்ய வேண்டும் என்று ஏற்படுமானால், நம் மக்கள் படிக்காமல் தற்குறியாக இருந்தாவது, உபாத்தியாயர் களெல்லாம் தெருவில் கல்லுடைத்து ஜீவனம் செய்து கொண்டாவது, கள் குடியை நிறுத்துவதே மேலானதென்பது என் அபிப்பிராயம்.

இம்மாதிரிப் படிப்பு வலுத்ததின் பலனாய் படிப்பின் அவசியமில்லாமல் வேறு வழியில் வாழக்கூடிய பெருத்த குடும்பங்களெல்லாம் பாழாகிப் போய்க் கொண்டே வருகின்றன.

எவ்வளவுக் கெவ்வளவு உயர்தரப் பள்ளிக்கூடங்களென்பது அதிகமாகிக் கொண்டு வருகிறதோ அவ்ளவுக்கவ்வளவு அதில் படித்த பெரும்பான்மைப் பிள்ளைகளின் குடும்பங்கள் கெட்டுக் கொண்டே வருகின்றன.

உதாரணமாக, பூமிகளின் சொந்தக்காரர்களின் பெயர்களைக் காட்டும் `செட்டில் மெண்ட் ரிஜிஸ்டர்' என்னும் பதிவுப் புத்தகத்தை வாங்கிப் படித்தீர்களானால், அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 40, 50 வருஷங்களுக்கு முந்திய செட்டில்மெண்ட் ரிஜிஸ்டரிலுள்ள பூமிக்குச் சொந்தக்காரரின் பெயர்களை 10 வருஷத்துக்கு முன்னுள்ள புத்தகத்தைப் பார்ப்பீர்களானால் 100-க்கு 75 பாகம் மாறிப் போய்த் தானிருக்கும். அக்காலத்தில் கவுண்டர், நாயக்கர், பிள்ளை, படையாச்சி, ரெட்டி, நாயுடு என்றிருப்பது போய், இப்பொழுது அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், செட்டியார் முதலிய உத்தி யோகஸ்தர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் ஆகியவர்கள் பெயருக்கே மாறியிருக்கும்.

காரணமென்னவென்றால் உயர்தரப் பள்ளிக்கூடம் வந்தவுடனே எல்லாப் பிள்ளைகளும் அதில் படிக்கச் சேர்ந்து விடுகிறார்கள். குடியானவர்களும், தங்கள் பிள்ளைகளை அதிலேயே சேர்த்து விடுகிறார்கள்.

படித்துத்தான் ஜீவனம்

அந்தப் பிள்ளைகளுக்குப் படித்துத்தான் ஜீவனம் செய்ய வேண்டுமென்கிற அவசியமில்லாததாலும், `இந்தக் கூட்டங்களும் படித்துவிட்டால், உத்தியோகங் கொண்டே வாழ வேணடியவர்களாகிய நம்ம கூட்டத்தார் வாயில் மண் விழுந்து விடுமே' என்கிற பயங்கொண்ட உபாத்தி யாயர்களாலும், இப் பிள்ளைகள் சரியாகப் படிக்க முடியாமல் 5, 6 வருஷம் பெஞ்சுக்கு வாடகை கொடுத்ததோடு தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும், சிகரெட், பீடி பிடித்துக் கொண்டும், வேடிக்கை உடைகள் தரித்துக் கொண்டும், பொறுப்பும் ஒழுக்கமுமற்ற சம்பாஷணைகள் பழகிக் கொண்டும், உல்லாசமாய்த் திரிந்து 2, 3 தடவை பரீட்சையில் தோல்வியுற்றுக் கடைசியாய், “இனி படிப்பு வராது'' என்கிற முடிவுடன் வீடு போய்ச் சேருகின்றார்கள்.


பாழ்படுத்திய பட்டண வாசம்

இந்தப் பட்டணவாசப் பள்ளிப் பழக்கமானது பட்டிக்காட்டு வாசத்துக்குச் சவுகரியமில்லாமல் வீடு, வாசல்களும், விவசாயப் பண்ணைகளும் தங்களுக்குப் பிடித்தமில்லாததாகி, நோக்கமெல்லாம் பட்டணங்களிலேயே கொண்டு போய் விடுகிறது.

அல்லது, சிலருக்குப் பட்டிக்காட்டிலேயே பட்டணங்கள்போல் வீடுவாசல் கட்டிச் சுகமனுபவிக்க ஆசை ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் தங்கள் விவசாயம் கெடுவதோடும் தங்களுக்குக் கிரமமாய் வரும் பொருள் வருவாயும் கெடுவதோடு அதிகச் செலவும் ஏற்பட்டு அதன்மூலம் கடன்காரர் களாகி வீண் விவகாரங்களில் ஈடுபட்டுக் கடைசியாய் இக்குடும்பச் சொத்தானது விவகாரத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தின் மூலமாகவும், வக்கீல்களுக்குப் ‘பீசி'ன் மூலமாகவும், லேவாதேவிக்காரர்களுக்கு வட்டியின் மூலமாகவும் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

பட்டா மாறிய பூமி

இந்தக் காரணங்களால் இவர்கள் பூமிகள் அவர்கள் பேருக்குப் பட்டா மாறுவதும் அல்லது அவர்கள் விலைக்கு வாங்குவதுமாய் முடிந்து விடுகிறது. இனியும் ஒரு 50 வருஷத்திற்கு இக் கல்வி முறை இப்படியே இருக்குமானால், நமது பூமிகளெல்லாம் உத்தியோக வக்கீல் கூட்டத்தாருக்கும் லேவாதேவிக் கூட்டத்தாருக்குமே போய்ச் சேர்ந்து விடும். இப்பொழுதுள்ள மிராசுதாரர்களின் பிள்ளைகளெல்லாம் அந்தக் கூட் டத்தாரிடம் பண்ணை யாட்களாகவும் குடிவாரக்காரர்களாகவும் போய்ச்சேர வேண்டியதுதான்.

ஆசிரியர்களை கேவலமாக மதிக்கிறார்கள்

அரசாங்கத்தாரும் கல்விக்காகக் கோடிக்கணக்கான ரூபாய்ச் செலவு பண்ணுகிறார்கள். அவ்வளவும் உபாத்தியாயர்களுக்குப் போவதாயிருந்தால் உபாத் தியாயர்களுக்குக் கஷ்டமே இருக்காது.

பணத்தையெல்லாம் கல்வியின் பெயரால் மேற் சொன்னபடி சாமான்யர்களுக்கும், கட்டடங்களுக்கும் மற்றும் பாதிரிமார்களுக்கும் உயர்ந்த சம்பளம் பெறும் உபாத்தியாயர்களுக்கும், இவற்றை மேற்பார்வை பார்ப்பது என்பதாகப் பல பெரிய பெரிய சம்பளமும் உத்தியோகஸ் தர்களுக்குமே போய்விடுகிறது.

இவ்வளவு செலவுகளையும் அனாவசியமாகச் செய்துவிட்டு ஆரம்ப ஆசிரியர்களையும் பட்டினிப் போட்டுவிட்டு இந்த ஆசிரியர்களை ஆடுமாடுகளை விடக் கேவலமாகவும் மதிக்கிறார்கள்.

ஜனப்பிரதிநிதிகள் என்கிற சட்டசபை அங்கத்தினர்கள் முதலிய அரசியல் வாழ்வுக்காரர்களோ உங்களிடம் வரும்போது உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபம் உள்ளவர்கள்போல் காட்டிக் கொணடு, உங்களுக்குச் சம்பளம் 40 ரூபாய் வேண்டும். 50 ரூபாய் வேண்டும்! என்ற ஆசை வார்த்தை சொல்லி உங்களை திருப்தி செய்து உங்களால் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டு போய்விடுகிறார்கள்.

பொது ஜனங்களிடம் போகும்போது அவர்களைப் பார்த்து, சர்க்கார் அதிக வரிவசூல் பண்ணுகிறது. அனாவசியமாய் அதிகமான ஆள் அம்புகள் வைத்து அரசாங்கச் செலவைப் பெருக்கி விட்டது. நாங்கள் போய்ச் சம்பளத்தையும் செலவையும் குறைத்து உங்களுக்கு வரி யைக் குறைக்கிறோம் என்று மேடைமேல் நின்று பேசி விடுகிறார்கள்.

உங்களிருவரையும் ஏமாற்றி, சட்டசபையில் போய் உட்கார்ந்துகொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் திருப்தி ஏற்படும்படியாக ஏதோ இரண்டு கேள்வி கேட்டதாகப் பாவனை காட்டிவிட்டு உங்களையும், பொது ஜனங்களையும் வஞ்சிக்கிற காரியங்களுக்காகச் சர்க்காருக்கு உள் உளவாய் இருந்து தங்களுக்குப் பெருமையும், உத்தியோகங்களும், பதவியும் கிடைப்பதற்கும் தங்கள் சொந்தக் காரியங்கள் ஏதாவது சாதித்துக் கொள்வதற்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

உத்தியோகங்களும் சம்பளங்களும்

வரி குறைப்பதும், சம்பளம் கூட்டுவதும் ஒன்றுக் கொன்று பொருந்தாத விஷயம். வரியையும் குறைத்து, உங்கள் சம்பளத்தையும் உயர்த்த வேண்டுமானால், பெரிய உத்தியோகஸ்தர்களுடைய சம்பளத்தையும் குறைக்கும்படி சொல்லுவதற்கு இவர்களுக்குத் தைரியம் வேண்டும். இவர்களே மாதம் ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000 (1927 இல்) சம்பளம் வாங்கிக் கொண்டு மந்திரி, தலைவர் முதலிய பதவிகளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு, இவர்களே இப்பேர்ப்பட்ட பதவிகளை மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களை ஆதரித்தும் அதன் மூலம் தாங்கள் பிழைக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டும், இவர்களுடைய செலவுக்கே தினம் 10, 15, 40, 50 வேண்டுமென்று சர்க்காரை கேட்டுக் கொண்டு, இவர்கள் போக்குவரத்துக்கே முதலாவது, இரண்டாவது வகுப்பு, இரட்டைப் படிகள் வாங்கிக் கொண்டும், இவர்கள் நடவடிக்கை நடத்தும் கூட்டங்களுக்கே 2 இலட் சம், 3 இலட்சம், 2 கோடி, 4 கோடி அனுமதித்துக் கொண்டு இராஜபோக மனுபவிப்பவர்கள், வேறு யாருடைய எந்தச் செலவைக் குறைத்து, வரி உயர்த்தாமல், உங்களுக்குச் சம்பளத்தை அதிகப்படுத்தக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

உண்மையான ஆரம்ப ஆசிரியர் ஆகுக

ஆகவே இவ்வித அரசியல் புரட்டுகள் நமது நாட்டிலுள்ள வரையிலும், உங்களைப் போன்றவர்கள் இவர்களை ஆதரித்து இப் புரட்டர்களை மரியாதை செய்கிற வரையிலும் உங்களுக்கு மாத்திரமல்ல; இந்த நாட்டுக்கே விமோசனம் இல்லயென்பதுதான் என் அபிப்பிராயம். இனியாவது இந்த அரசியல் புரட்டர்களின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பு வீர்களென்று எதிர்பார்க்கின்றேன்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளறக் கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மாநாட்டைப் பொறுத்த வரையிலும் இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப்படுகிறேன்.

உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது.

ஆனால், அந்நோக்கங்களையும், கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

கல்வி விஷயத்தில் நமது நாட்டுக்கு ஏற்பட வேண்டிய திருத்தத்தில் உங்களுடைய உதவியும், தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலியவற்றின் உதவியும் ரொம்பவும் வேண்டியிருக்கிறது.

உண்மையான தேசாபிமானக் கண்ணோடு பார்ப்பீர்களானால், உங்களுக்கு இவைகளெல்லாம் விளங்காமற் போகாது.

நாட்டுக்கு ஏற்பட வேண்டிய திருத்தம் ஆசிரியர் பங்கு இங்கு விஜயம் செய்திருக்கும் தாலுக்கா, ஜில்லா போர்டு அங்கத்தினர்களையும் தலைவர்களையும் இவ்விஷயங்களையெல்லாம் கவனித்து உங்களுக்கு அனுகூலமாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

என்னை நீங்கள் ஒரு பொருட்டாக மதித்துத் தலைவனாகத் தேர்ந்தெடுத்ததற்கு என் மனதில் சரியென்று பட்டதை உங்கள் முன் கொஞ்சமும் ஒளிக்காமல் பேசியிருக்கிறேன்.

இவற்றுள் கொள்ளத் தக்கதும், தள்ளத் தக்கதும் இருக்கலாமென்றே நினைக்கிறேன். ஆதலால் உங்களு டைய அறிவையும், ஆற்றலையும் இவைகளுள் செலுத்தி, தள்ளத் தக்கதைத் தள்ளி, கொள்ளத் தக்கதைக் கொண்டு அமலில் கொண்டு வர வேண்டுகிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com