Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்டு 2007

தேசம் என்றால் என்ன?

இளவேனில்

தேசம் என்பது முதலாவதாக ஒரு சமுதாயம்; குறிப்பிட்ட மக்களைக் கொண்ட சமுதாயம் ஆகும்.

இந்தச் சமுதாயம் நிற அடிப்படையிலானதோ அல்லது பழங்குடிகள் என்பது போன்றதோ இல்லை. ரோமானியர்கள், டியூட்டேனியர்கள், எட்ரூஸ்கனியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் இன்னும் இவர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானதுதான் இன்றைய நவீன இத்தாலி தேசம் ஆகும்.

காலியர்கள், ரோமானியர்கள், பிரிட்டானியர்கள், டியூட்டேனியர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானதுதான் பிரெஞ்சு தேசமாகும். இதே போன்றுதான் இங்கிலாந்து, ஜெர்மன் இன்னும் மற்ற தேசங்கள் எல்லாமே பல்வேறு இனங்கள் மற்றும் பழங்குடிகளிடமிருந்து உருவானதாகும். எனவே, தேசம் என்பது இன அடிப்படையிலோ அல்லது குடி அடிப்படையிலோ அமைந்தது அல்ல.

மாறாக வரலாற்று அளவிலே அமையப்பெற்ற மக்கள் சமுதாயமாகும். அதே நேரத்தில், சிரஸ், அலெக்ஸாண்டர் போன்றவர்களின் பேரரசுகளைத் தேசம் என்று அழைக்க முடியாது என்பது சந்தேகத்திற்கிடமற்ற ஒன்றாகும். இந்தப் பேரரசுகள் சரித்திர ரீதியாக அமையப் பெற்றாலும், பல்வேறு இன, மற்றும் குடி மக்களைக் கொண்டிருந்தாலும் இவைகள் தேசங்களாக முடியாது.

ஏனெனில் இப்பேரரசுகள் சாதாரண முறையில் எந்தவித பிடிப்புமின்றிச் சேர்க்கப்பட்ட பல்வேறு குழுக்களின் சேர்ப்பாகவே இருந்தன. மற்றும் இந்தச் சேர்ப்பு என்பது, போரில் ஒரு குறிப்பிட்ட அரசனுக்கு ஏற்படும் வெற்றி அல்லது தோல்வியைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செய்தது. எனவே தேசம் என்பது சாதாரண முறையிலோ அல்லது நிலையற்ற முறையிலோ அமைந்திருக்கக்கூடிய சேர்ப்பு அல்ல; மாறாக, தேசம் என்பது நிலையான மக்கள் சமூகமாகும்.

ஆனால், ஒவ்வொரு நிலையான சமூகமும் தேசமாகிவிட முடியாது. ஆஸ்திரியாவும் ரஷ்யாவும் நிலையான சமூகங்கள்தாம். ஆனால், அவைகளை யாரும் தேசங்கள் என்று அழைப்பதில்லை. ஒரு தேசிய சமூகத்திற்கும் ஒரு அரசு சமூகத்திற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? தேசிய சமூகம் என்பது ஒரு பொதுவான மொழியில்லாமல் இருக்க முடியாது. ஆனால், அரசு சமூகத்திற்கு அவ்வாறு பொது மொழி என்ற ஒன்று அவசியம் இருந்தாக வேண்டியதில்லை.

ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் ஆஸ்திரியாவில் உள்ள செக்தேசமும், ரஷ்யாவில் உள்ள போலந்து தேசமும் தங்களுக்கென்று ஒரு பொது மொழியை வைத்திருக்காவிடில் அவை தேசங்களாக இருக்க முடியாதவையாகும். அதே நேரத்தில் ரஷ்யாவிலும் ஆஸ்திரியாவிலும் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன என்ற காரணத்தால் அவைகளின் ஒருமைப்பாடு பாதிக்கப்படுவதில்லை. இங்கு பல்வேறு மொழிகள் என்று குறிப்பிடுவது மக்களின் பேச்சு மொழிகளையே ஆகும்; அரசின் உபயோகத்தில் இருக்கும் மொழிகளை அல்ல.

இவ்வாறு பொதுமொழி என்பது ஒரு தேசத்தின் பிராதன அம்சமாகும். அதே நேரத்தில், இதன் காரணமாகப் பல்வேறு தேசிய இனங்கள் எப்போதும், எல்லா இடத்திலும் பல்வேறு மொழிகளைப் பேச வேண்டுமென்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுகின்ற எல்லோரும் ஒரு குறிப்பிட்ட ஒரு தேசத்திற்குள்ளே அமையவேண்டும் என்றோ கருதத் தேவையில்லை. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பொதுமொழி. ஆனால், பல்வேறு தேசங்களுக்குப் பல்வேறு மொழிகள் தாம் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.

ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய ஒரே தேசம் என்பது இருக்க இயலாது; ஆனால், இதன் காரணமாக இரண்டு தேசங்கள் ஒரே மொழியைப் பேசக்கூடாது என்பதல்ல. உதாரணமாக ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் ஒரே மொழியைத்தான் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் தேசமாக அமைந்திருக்கவில்லை. இதே உண்மை நார்வேஜினியர்களுக்கும், டேனிஸ்காரர்களுக்கும் மற்றும் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிஷ்காரர்களுக்கும் பொருந்தும் எனலாம்.

அமெரிக்கர்களும், ஆங்கிலேயர்களும் ஒரே மொழியைப் பேசினாலும், ஏன் அவர்கள் ஒரே தேசத்தில் அமைந்திருக்கவில்லை? முதலாவதாக அவர்கள் ஒன்றாக வாழவில்லை. அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள். ஒரு தேசம் என்பது மக்கள் தலைமுறை தலைமுறையாக ஒன்றாக வாழ்ந்து அதன் மூலம் ஏற்படும் ஒரு நீண்ட நெடிய மற்றும் முறையான கலப்பின் மூலமாகவே உருவாகிறது.

தங்களுக்கென்று ஒரு பொதுவான பகுதி இல்லாத வரையில் மக்கள் நீண்ட காலம் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாது. ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் ஆரம்பத்தில் ஒரே பகுதியில் வாழ்ந்தனர்; இங்கிலாந்து என்ற ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தனர். பின்னர் இங்கிலாந்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியினர் வெளியேறி அமெரிக்கா என்று அழைக்கப்படும் புதிய பகுதியை அடைந்தனர். நாளடைவில் அந்தப் புதிய பகுதி அமெரிக்கா என்ற புதிய தேசமாயிற்று. எல்லைப் பகுதிகளில் ஏற்படும் மாறுதல்கள் புதிய தேசங்களுக்கு வழி வகுக்கக் காரணமாயிற்று. இவ்வாறு பொதுவான வாக்கைப் பகுதி என்பது ஒரு தேசத்தின் பிரதான அம்சமாகிறது.

ஆனால், இது இருந்தால் மட்டும் ஒரு தேசம் உருவாகி விடுவதில்லை. பொதுவான வாழ்க்கைப் பகுதி என்பது மட்டுமே ஒரு தேசத்தை உருவாக்கிவிட முடியாது. இதற்கும் மேலாகத் தேசத்தின் பல்வேறு பகுதிகளை ஒன்றிணைத்து அவற்றை முழுமையாக்கும் அளவிற்கு உள்நாட்டுப் பொருளாதாரப் பிணைப்பு இருக்க வேண்டும். இது மாதிரியான ஒரு பிணைப்பு அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இல்லை. எனவே அவை தனித்தனி தேசங்களாக விளங்குகின்றன. ஆனால், அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே ஒரு தேசம் என்று அழைத்துக் கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். காரணம் உழைப்புப் பங்கீடு மற்றும் தொடர்பு சாதன வளர்ச்சி இவை காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள் பொருளாதார ரீதியாக முழுமையாக்கப்படவில்லை.

உதாரணத்திற்கு ஜியார்ஜியர்களை எடுத்துக் கொள்வோம். புனரமைப்பிற்கு முன்பு அவர்கள் ஒரே பகுதியில்தான் வாழ்ந்தனர். ஒரே மொழியைத்தான் பேசினர். ஆயினும் அடிப்படையில் பார்க்கும்போது அவர்கள் ஒரு தேசமாக அமையப் பெற்றவர்களாக இல்லை. காரணம் அவர்கள் பல்வேறு சிறுசிறு அரசுகளாகத் தொடர்பற்று இருந்தனர். அவர்களுக்கென்று ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு இல்லை. மேலும் அவர்கள் பல நூற்றாண்டுகளாக ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டும், கொள்ளையடித்துக் கொண்டும், பார்ஸியர்களையும் துருக்கியர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட்டுக் கொண்டும் இருந்தனர்.

சில சமயங்களில் வெற்றிபெறும் மன்னர்கள் இந்தச் சிற்றரசுகளைச் சாதாரணமாகவும், நிலையற்ற முறையிலும் ஓரளவு ஒருங்கிணைத்து ஒரு மேலோட்டமான நிர்வாக ஒழுங்கமைப்பைக் கொண்டு வந்தாலும், அந்தந்தச் சிற்றரசர்களின் மனப்போக்கு காரணமாகவும், விவசாயிகளின் விருப்பு வெறுப்பு காரணமாகவும் அந்த ஒருங்கிணைப்பு வெகு வேகமாகச் சீர்குலையத் தொடங்கியது. இதன் காரணமாகவே ஜியார்ஜியா பொருளாதார ரீதியாக ஒருங்கிணையாத பகுதியாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பண்ணை அடிமைத்தனத்தின் வீழ்ச்சியும், நாட்டின் பொருளாதார வாழ்க்கையின் வளர்ச்சியும், தொடர்பு சாதன வசதியில் ஏற்பட்ட முன்னேற்றமும், முதலாளித்துவ வளர்ச்சியும் ஜயார்ஜியாவில் உழைப்புப் பங்கீட்டை பல்வேறு பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தியது. இதனால், பொருளாதார அளவில் தனித்திருந்த பல்வேறு சிற்றரசுகள் உருக்குலையத் தொடங்கி இவை ஒரே முழுமையாக உருவெடுக்க கட்டாயப்படுத்தப்பட்டது. இதன் பின்பே ஜியார்ஜியா ஒரு தேசமாக உருவெடுத்தது.

இதேபோன்றே நிலப்பிரபுத்துவக் கட்டத்தின் வழியாக முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தையடைந்த பல்வேறு தேசங்களைப் பற்றிச் சொல்லலாம். இவ்வாறு ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு, பொருளாதார ஒன்றிணைப்பு என்பவை ஒரு தேசத்திற்கான பிராதன அம்சங்களாகும்.

மேலே சொன்னவை மட்டுமே ஒரு தேசத்திற்குப் போதுமானவை அல்ல. இவை மட்டுமின்றி இன்னொன்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு தேசமாக உருவாகின்ற மக்களின் குறிப்பிட்ட ஒழுக்கம் நிலைப்பண்பை மனதில் கொள்ள வேண்டும். தேசங்கள், வாழ்க்கை நிலையில் மட்டும் மாறுபடவில்லை. இந்த ஒழுக்க நிலைப் பண்பே அவர்களின் தேசீயக் கலாச்சாரத்தின் குறிப்பிட்ட தன்மைகளாக விளங்குகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஒரே மொழியைப் பேசினாலும் அவை தனித்தனி மூன்று தேசங்களாக விளங்குகின்றன. அவர்கள் தமது வாழ்க்கை நிலைமையில் உள்ள சீரற்ற நிலைமைகளினால் தலைமுறை தலைமுறையாகத் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட மனோபாவத்தினால் குறிப்பிட்ட மூன்று தேசத்தினராக இருக்கின்றனர் என்பது சாதாரண ஒன்று அல்ல.

இந்த மன இயல்பு அல்லது வேறுவிதமாகச் சொன்னால் “தேசியத் தன்மை” என்று சொல்லக் கூடிய ஒன்று, தனியாகப் பார்க்கும் பட்சத்தில் அவ்வளவாக விளக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், இதுவே ஒரு தேசத்திற்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த பொது கலாச்சாரத்தைத் தருகின்ற பட்சத்தில் இது விளக்கப்பட முடிந்ததாகவும், தவிர்க்க முடியாததாகவும் ஆகிறது.

இந்தத் “தேசியத் தன்மை” என்பது எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது வாழ்க்கை நிலையில் அவ்வப்போது ஏற்படுகின்ற மாறுதலுக்கேற்ப மாறுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தேசியத் தன்மை ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருப்பதால் அது தனது முத்திரையை அந்த தேசத்தின் புறஇயல்பில் பதித்து விடுகிறது.

இவ்வாறு ஒரு பொதுவான கலாச்சாரத்தைத் தரக்கூடிய ஒரு பொதுவான மன இயல்பு என்பது ஒரு தேசத்தின் பிரதான அம்சமாகும். நாம் இப்போது ஒரு தேசத்திற்குரிய எல்லாப் பிரதான அம்சங்களையும் பார்த்து விட்டோம். ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்.

எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் போலவே, தேசமும், மாற்றல் விதிக்குட்பட்டது என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய ஒன்றாகும். அது அதற்கேயுரிய வரலாற்றையும், தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருக்கும். மேலே கூறப்பட்ட அம்சங்களில் எதையும் தனியாக எடுத்துக் கொண்டு ஒரு தேசத்தை விளக்க முடியாது. மேலும் மேலே சொன்னவற்றில் ஏதாவது ஒரு அம்சம் குறைந்தாலும் தேசம் என்பது தேசமாக இருக்க முடியாது. பொருளாதார வாழ்விலும், வாழும் பகுதிகளிலும் பேசுகின்ற மொழியிலும் வேறுபாடு இருப்பினும், ஒரே ‘தேசியத் தன்மை' கொண்ட மக்களை அந்த ஒரு காரணத்திற்காக ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ரஷ்யர்கள், அமெரிக்கர்கள், ஜியார்ஜியர்கள் மற்றும் காகேஷியர்கள் ஹைலேண்ட் யூதர்கள் ஆகியோர் நம் கருத்துப்படி தனித் தேசமாக அமையப் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

ஒரு பொதுவான வாழும் பகுதி பொதுவான பொருளாதார வாழ்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடிய மக்கள் ஒரு தனித் தேசத்தை உருவாக்க முடியாது என்பது உணரக் கூடிய ஒன்றே. ஏனெனில், அவர்களுக்குப் பொதுவான மொழியோ, பொதுவான “தேசியத் தன்மையோ” கிடையாது. உதாரணத்திற்கு ஜெர்மனியையும், பால்டிக் பகுதியிலுள்ள லெட்ஸ்ஐயும் கூறலாம்.

இறுதியாக இன்னுமொரு எடுத்துக்காட்டைக் குறிப்பிடலாம். நார்வேஜியர்களும் டேனியர்களும் ஒரே மொழியைத்தான் பேசுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் ஒரு தேசமாக அமையவில்லை. காரணம், ஒரு தேசத்துக்குரிய மற்ற அம்சங்கள் இல்லாததாகும். மேற்சொல்லப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும்போதுதான் நாம் ஒரு தேசத்தைக் காண முடியும்.

‘தேசியத் தன்மை' என்பது தேசத்திற்குரிய சாதாரணமான ஒரு அம்சம் அல்ல; அதுவே, தேசத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஒரே அம்சமாகும்; மற்ற அம்சங்கள் எல்லாம் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கான நிலைப்பாடுகளேயன்றி அவையே தேசத்திற்குரிய அம்சங்கள் அல்ல என்பன போன்ற கருத்துகள் நமக்குத் தோன்றலாம். உதாரணமாக ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சமூக ஜனநாயக தத்துவ அறிஞர்களான ஆர்.ஸ்பிரிங்கர் மற்றும் ஓ.பேர் ஆகியோரின் கருத்துக்கள் இப்படித்தான் உள்ளன.

தேசம் குறித்த அவர்களின் கூற்றுகளை நாம் ஆராய்வோம்.

ஸ்பிரிங்கரின் கூற்றுப்படி “தேசம் என்பது, ஒரே மாதிரியாகச் சிந்தித்து ஒரே மாதிரியாகப் பேசும் மக்களின் கூட்டிணைப்பே ஆகும்.” தேசம் என்பது “சொந்த மண் என்ற பந்தத்தை எப்போதோ விட்டு விட்ட நவீன மக்களின் கலாச்சார ரீதியான சமூகமே யாகும்.”

இவ்வாறு, ஒரே மாதிரியாகச் சிந்தித்து, ஒரே மாதிரியாகப் பேசும் மக்கள் தொடர்பற்றவர்களாயினும் சரி அல்லது எந்த இடத்திலும் வாழ்ந்தாலும் சரி அவர்கள் ஒரு தேசமாகிறார்கள்.

ஆனால், ஓ.பேர் இதற்கு இன்னும் மேலே போகிறார். “தேசம் என்பது என்ன?” அவர் கேட்கிறார்; “மக்களைத் தேசமாக்குவது, அவர்கள் பேசும் பொது மொழியா? ஆனால், ஆங்கிலேயர்களும், அயர்லாந்தினரும் வெவ்வேறு மக்களாக இருந்தாலும் ஒரே மொழியைப் பேசுகிறார்கள்; யூதர்களுக்கோ ஒரு பொது மொழி இல்லை. இருந்தாலும் அவர்கள் ஒரு தேசமாகிறார்கள்.”

அப்படியானால் தேசம் என்பது என்ன?

“தேசம் என்பது ஒரே தன்மை கொண்ட தொடர்புடைய சமூகம்.”

ஆனால் இந்தத் தன்மை அதாவது இங்கு தேசியத் தன்மை என்பது என்ன?

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com