Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்டு 2007

இலர் பலர்

இரா.இளங்குமரனார்

``இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்''

என்பது தவம் என்னும் அதிகாரத்தின் இறுதிக்குறள் (270).

இலர் என்றவுடன் இல்லாதவர் எனப் பொருள் கொண்டனர். இல்லாதவர் எவர் என்றால், பொருள் இல்லாதவர் - வறியர் - எனத் தெளிவு கொண்டு விட்டனர். வழக்கமாகப் பரப்பப்பட்ட, “புண்ணியத்தால் செல்வம் சேரும்; பாவத்தால் வறுமை சேரும்'' என்னும் பார்வை வந்து குந்திக் கொண்டது!

‘இலர்பலர்' என்னும் இக்குறள் பொருள் செயல்வகை. நல்குரவு என்னும் அதிகாரங்களில் இடம் பெற்றிருந்தால் ஒருகால் பொருள் மயக்கம் ஏற்படலாம்! பொருள் மயக்கம் அறவே ஏற்படுவதற்கு இடமில்லாத ‘தவம்' என்னும் அதிகாரத்தில் இருந்தும் மயங்குவானேன்?

நூற்றிருபது மணிநேரம் விடாமல் மிதிவண்டி ஓட்டிப் போட்டியிட்டவனைக் கீழே இறக்கிப் போட்டாலும், கால் சுற்றுதல் விடாது!

மலையில் இருந்து விரைந்து இறங்கிய கால்கள் நிலத்தில் படிந்து நடையிடச் சிறிது பொழுதாகும்!

இப்படித்தான் எண்ணமும்! பழகிவிட்ட பார்வை! பழகிவிட்ட பொருள்! உரையாளர் மேல் கொண்ட மதிப்பு! - இவையெல்லாம் பொருளல்லாப் பொருள் காணச் செய்து விடுகின்றன.

இலர் என்பதோடு அதிகாரப் பெயரை ஒட்டினால் கிட்டுகிறது அல்லவா மெய்யாய பொருள்! ‘தவம் இலர்' என்பதுதானே அது! தமக்கு வந்த துயரைத் தாங்குதல்; பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையாகியது தவம்.

“இத்தவத் தன்மை இல்லார் பலராகக் காணப்படுகிறாரே, காரணம் என்ன?'' என்பது வினா!

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு''

என்னும் குறளில் நோன்றல் என்னும் சொல்லாட்சி உள்ளது காண்க. நோல், நோற்றல், நோன்பு என்பவை உறுதிப்பாடு, கட்டமைதி, மனத்திண்மை என்பவற்றைக் குறிக்கும் சொற்கள்.

தமக்கு வந்த துயரைத் தாங்கிக் கொள்ள மனவலிமை இல்லாமல் முடியுமா? பிறர் துயர் செய்தாலும் அவர்க்கு மீளத்துயர் செய்யாதிருக்க எத்தகைய மனத்திண்மை வேண்டும்!

தம் துயரையே தாங்க மாட்டாதவர், பிறர் துயரைத் தீர்க்கும் ஆற்றலுடையவராக இருப்பாரா?

தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் வாழ்வினர்க்கும், அவருள்ளும் தம்முயிர் ஈகம் புரிவதற்கும் தயங்காதவர்க்கும் மட்டுமே அமைவது வள்ளுவர் கண்ட தவநெறி. கோலம் கொள்வது அன்று தவம்!

கொள்கை தவறா உறுதிப்பிடியில் உள்ளதே வள்ளுவத் தவம்.

ஆதலால். வள்ளுவர் காட்டிய தவத்தை மேற்கொண்டு வாழ்பவர் அரியர். அவ்வாறு இருக்கக் காரணம் என்ன என்றால், “மன உறுதியுடையார் சிலர்; மன உறுதியில்லாதவர் பலர்'' என்பதேயாம்.

“மன உறுதியுடையவர் சிலராகவும், மன உறுதி இல்லாதவர் பலராகவும் இருப்பதால்தான் தவவாழ்வினர் சிலராகிவும் அவ்வாழ்விலார் பலராகவும் உள்ளனர்'' என்பதே ‘இலர்பலர்' என்னும் இக்குறள் பொருளாம்.

தவம் செய்பவர் சுடச்சுடரும் பொன் போன்றவர்.

தவம் செய்பவர் தம்முயிரையும் தமக்கெனக் கொள்ளாதவர்.

மனத்திண்மையால் சாவையும் சாகடிக்க வல்லவர்.

அவர் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்!

கூடா ஒழுக்கத் தவத்தரைக் கண்டு கண்டு, குறளுக்குக் கொள்ளக் கூடாப் பொருள் கொள்ளுவதைத் தவிர்ப்பது தவமாம்.

(தொடர்வோம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com