Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்டு 2007

அறிவின் ஒளி

ஆனாரூனா

“விண்வெளியில் நடந்தபோது, மேலேயிருந்து விநாயகர் என்னைக் கண்காணிப்பதுபோல் உணர்ந்தேன்.’’

Sunitha williams ஆறு மாதங்களுக்கு மேலாக விண்வெளி ஓடத்தில் தங்கி பிரபஞ்சவெளி பற்றி ஆய்வு நடத்திய இந்திய வம்சாவளிப் பெண் விஞ்ஞானி சுனிதா கூறிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இது.

“மூடருக்கும் மனிதர்போல முகம் இருக்குதடா’’ என்று எழுதினார் கண்ணதாசன். இது அறிவியல் மேதைகள் என்று நாம் நம்புகிற பலருக்கும் கூடப் பொருந்தும். “ஆணுக்குப் பெண் இளைத்தவள் அல்ல’’ என்று எண்ணும்போது இந்த அறிவியல் பெண்மணியின் துணிச்சல் பாராட்டத் தகுந்ததே! துணிவு என்பது வேறு; அறிவு என்பது வேறு; என்பதை அவரும் நிரூபித்து விட்டார்.

நிலா என்பது பரமசிவன் தலையில் சூடியிருக்கும் அழகு சாதனப் பொருள் என்று ஆதி மனிதன் கற்பனை செய்திருக்கலாம். மத வகைப்பட்ட நம்பிக்கைகள் அதற்குப் பல இதிகாசக் கதைகளை உருவாக்கியிருக்கலாம். கவிதைப் பாங்கான கற்பனைகளின் தொகுப்பு என்கிற முறையில் இதிகாசங்களைக்கூட ரசிக்கலாம். ஆனால், மத நம்பிக்கைகள், இதிகாசக் கதைகள், அனைத்தையும் கடந்த பயனுள்ள தேடல் பற்றிய அறிவுதான் மனித குலத்தைக் குகைகளிலிருந்து விண்வெளிக்கு - நிலவின் மீதும், இதர கோள்களின்மீதும் கால் பதிக்கும் அளவுக்கு - மனிதனை உருவாக்கியது.

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறும் மனிதர்களே வரலாற்றை, உலகத்தின் விதியை மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். இயற்கையின் மர்மங்களைப் புரிந்து கொள்ள முடியாத பருவத்தில் மனித குலம் நிலவு பற்றி, சூரியன் பற்றி, பிரபஞ்சவெளி பற்றி, மழை பற்றி, நெருப்பு பற்றி பலவிதமான கற்பனை கலந்த கதைகளை நம்பலாம். இதிகாச புராண மத நம்பிக்கைகளைக் கடந்த அறிவியல் துறை சார்ந்த பெண்மணி விண்வெளியில் தன்னை விநாயகன் கண்காணித்ததுபோல் உணர்ந்ததாகக் கூறிலாமா? இது அறிவியல் கணிப்பா? உளவியல் சிக்கலா?

வான்மண்டலம் ‘தேவர்களின்’ சாம்ராஜ்யம் என்றால், அதனுள் மனிதர்கள் ஏவும் விண்கலங்கள் நுழைவது அசுரர்களின் படையெடுப்பல்லவா? கடவுள்களுக்கு எதிராக மனிதர்கள் செயல்படலாமா? இதற்கு சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போன்ற பெண்மணிகள், ஏன் மத நம்பிக்கையுள்ள எந்த மனிதனும் விஞ்ஞானி வேடம் தரித்துக் கொண்டு விண்வெளிக்குச் செல்லச் சம்மதிக்கலாமா?

“பக்தி வந்தால் புத்தி போய்விடும்
புத்தி வந்தால் பக்தி போய்விடும்’’ என்றார் தந்தை பெரியார்.

இன்றுள்ள விஞ்ஞானிகளோ, பக்தியுள்ளவர்களாகவும் இல்லை; புத்தியுள்ளவர்களாகவும் இல்லை. அறிவியல் - விஞ்ஞானம் - என்பது இன்று வெறும் தொழில் முறை சார்ந்த படிப்பு அவ்வளவு தான். அறிவியல், மருத்துவம், சட்டம், நீதி, கலை, இலக்கியம் எல்லாமே இன்றுள்ள சமூக அமைப்பில் வயிற்றுப் பிழைப்புக்கான, கூலி பெறுவதற்கான ஏற்பாடுகளே!

இந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் பாத்திரம்தானா? இகத்தை மறந்தவர்கள், ஆசை துறந்த ஆன்மீகவாதிகள், ஜகத் குருக்கள் என்று போற்றப்படுகிற கூட்டத்தாரும் திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கத் தெரிந்த பக்தி வியாபாரிகளே! பணத்துக்கு முன் அறிவியல் ஆன்மிகம் எல்லாமே பணிந்து தொழுது பயந்து கிடக்கின்றன.

மாவீரர் சகாப்தம், பிரபுத்துவ சகாப்தம், முதலாளித்துவ சகாப்தம் என்று ஆதிக்க சக்திகளும், அதிகார மையங்களும் மாறி மாறி வந்தாலும், அறியாமை, மூடநம்பிக்கை, பக்திப் பரவசம் போன்ற மயக்கங்களில் மக்கள் வீழ்ந்து கிடப்பதை இந்த ஆதிக்க சக்திகள் போற்றியே வளர்க்கின்றன. எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லாப் பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமாந்தாரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது.

மனிதனை ‘இயற்கையாகவே’ மேலானோருக்குக் கீழ்ப்படுத்திக் கட்டிப் போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்து விட்டு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரவு உணர்ச்சியில்லாப் பணப் பட்டுவாடாவைத் தவிர வேறு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றாக்கி விட்டது.

சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராற்றலின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய ‘புனிதப் பேரானந்தங்களை’ யெல்லாம், தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர் நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது.

சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாக, வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரம் எனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தியிருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில் சமயத்துறைப் பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.

இதுகாறும் போற்றிப் போராட்டப்பட்டு, பணிவுக்கும் வணக்கத்துக்கும் உரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையையும் முதலாளித்துவ சமூக அமைப்பு மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும், நீதிபதியையும், சமய குருவையும், கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர்களாக்கி விட்டது. ‘கூலிக்கு மாரடிக்கும்’ விஞ்ஞானிகளிடம் அறிவார்ந்த தேடல்களையோ, விளக்கங்களையோ எப்படி எதிர்பார்க்க முடியும்?

விண்வெளியில் தன்னை (சுனிதா வில்லியம்சை) விநாயகர் கண்காணித்தார் என்றுதான் சொல்ல முடியும்.


‘குறிஞ்சிப்பாட்டு’ என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்று.

குறிஞ்சிப்பாட்டு என்றால் என்ன?

‘தமிழ்’ என்றாலும், ‘பண்பு’ என்றாலும், ‘தமிழர்’ என்றாலும், அறவழி நிற்றல்’ என்ற நடைமுறை வாழ்வையே காட்டும். இச்சீர்மிகு தமிழின் மேன்மையை அறியாத பிரகதத்தன் என்னும் ஆரிய அரசனுக்கு எடுத்துக் கூறுவதற்கே இந்நூல் ஆக்கப் பெற்றதென்று வரலாறு கூறுகிறது.
மணி, பொன், முத்து ஆகியவற்றாலான விலையுயர்ந்த அணிகலன் குறைவுற்றால் நிறைவு செய்துவிடலாம். ஆனால், ஒருவனுடைய பண்பு சிதைவுற்றால் நிறைவு செய்துவிட முடியாது. இதுவே வாழ்வு நெறி. ஆரியர், அந்தணர், கானவர்க்கான கடமைகளையும் இந்நூலில் காணலாம். பண்டைத் தமிழர் பண்பாட்டை அறிய உதவும் ஓர் உரைகல்லாகக் குறிஞ்சிப் பாட்டு திகழ்கிறது. திகழும் அதே போதில் ஆரியர்கள் அறவழி நிற்பதில் அக்கறையற்றோராய் இருந்தனர் என்பதையும் குறிஞ்சிப்பாட்டு அறிவிக்கிறது.

தமிழரின் வாழ்வு முறைக்கு ஆரியர் அன்னியப்பட்டிருந்த போதிலும் நாடற்றோராய், கழைக்கூத்தாடிகளாய் (ஆரியக்கூத்து) உழைப்பின் மேன்மை அறியாதோராய் வந்தேறிய போதிலும் தமிழர்கள் அவர்களை வெறுத்தொதுக்கவில்லை. அவர்களும் மனிதர்களே என்ற அகன்ற இதயத்துடன் தங்க இடம் கொடுத்து, வாழ்வுக்கு வழி செய்து கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ‘மங்கலம்’ என்ற பெயர் கொண்ட ஊர்கள் இருக்கின்றனவோ அந்த ஊர்களெல்லாம் பராரிகளாய் வந்த பார்ப்பனர்களுக்குத் தமிழ் மன்னர்கள் அளித்த கொடைகளே!

உ.வே.சாமிநாதன் பிறந்த ஊரான உத்தமதானபுரம் உருவான கதை வித்தியாசமானது. எத்தனை ஆண்டுகள் தமிழர்களோடு வாழ்ந்தாலும் பார்ப்பனர்களால் குரூர புத்தியை விட்டுவிட முடியாது என்பதையே உத்தமதானபுரத்தின் ‘தல புராணம்’ கூறுகிறது. சாமிநாதரே ஒப்புக் கொள்ளும் வரலாற்று உண்மை இது.

தனது நாட்டு நிலவரம் அறியப் பரிவாரங்களுடன் புறப்பட்ட சோழ மன்னன் பாபநாசத்துக்கு அருகில் ஓரிடத்தில் முகாமிடுகிறான். உணவுக்குப்பின் வெற்றிலை போடும் பழக்கமுடைய மன்னன் வழக்கப்படி தாம்பூலம் தரிக்கிறான். அரசனுக்கு ஆலோசகனாய் விளங்கிய பார்ப்பனன் இன்றைய சோதிட நிலவரப்படி மன்னர் வெற்றிலை போட்டுக் கொண்டது பல அபசகுனங்களையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்துமே என்று பதைக்கிறான். (என்ன நடிப்பு!)

பயந்து போன மன்னனோ தோஷத்துக்குப் பரிகாரம் கேட்கிறான். வெற்றிலை போட்ட ‘பாவத்திற்குப் பரிகாரமாய் 108 பார்ப்பனர்களைக் கெஞ்சி வரவழைத்து, மாடு, மனை, தோட்டம், துரவுகளுடன் தானமாகத் தரப்படுகிறது. அந்த ஊர்தான் உத்தமதானபுரம். அதாவது பிராமண உத்தமர்களுக்குத் தானம் செய்யப்பட்ட ஊராம். சோதிடத்தின் பெயரால் அரசனை ஏமாற்றிய பார்ப்பனர்கள் உத்தமர்களாம். இவ்வாறு ஏமாற்றுக்காரர்களிடம் தமிழ் நிலம் பறிபோன சோகக் கதைகளையே, உத்தமதானபுரமும், நாடெங்கும் தமிழர்களின் ஏமாளித்தனத்தைப் பார்த்து நகைக்கும் ‘மங்கலங்களும்’ நமக்குத் தெரிவிக்கின்றன.

‘மனுநீதி’ தவறாத மன்னர் என்று பார்ப்பனர்களால் பாராட்டப்பட வேண்டும் என்கிற ஆசையாலும் அறியாமையாலும் சோழமன்னர்களே அதிகமாய் ஏமாந்திருக்கிறார்கள். எவ்வளவுதான் தானம் செய்தாலும், எப்படித்தான் அரவணைத்தாலும், வாய்ப்புக் கிடைத்தால் வரம் கொடுத்தவன் தலையிலேயே கால் வைக்கும் பழக்கத்தைப் பார்ப்பனர்களால் விட முடிவதில்லை என்பதை வரலாறு நெடுகிலும் பார்க்கலாம்.
வரலாற்றின் சில ஏடுகளைப் புரட்டுவோமா?

தமிழக வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் சிறப்புடன் விளங்குகிறான் இராசராசன். இராசராசனின் இயற்பெயர் அருண்மொழி. சுந்தரன் (இரண்டாம் பராந்தகன்) என்னும் சோழ மன்னனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் குந்தவை. இரண்டாமவன் ஆதித்த கரிகாலன். மூன்றாமவன் அருண் மொழி.

மாவீரனாக விளங்கிய சுந்தர சோழனின் இறுதி நாட்கள் துன்பமும் அவலமுமாய் இருந்தன. அவனுடைய அருமை மகனும் அடலேறு போல் விளங்கியவனுமான ஆதித்த கரிகாலன் வஞ்சனையால் கொலை செய்யப்பட்டான். இந்த நிகழ்ச்சி சுந்தரனைச் சோகத்தில் ஆழ்த்தியது. முதுமையும் அதிர்ச்சியும் அவனை வீழ்த்தியது. அவன் காஞ்சி மாநகரிலிருந்த ‘பொன் மாளிகையில் உயிர் துறந்தான். கணவன் இறந்த பிரிவாற்றாது கணவனை எரித்த தீயிலேயே தாவிப் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள் அருண் மொழியின் அன்னை வானவன் மாதேவி.

இளமையிலேயே தாய் தந்தையரை இழந்த அருண்மொழியை அவனுடைய பெரிய பாட்டியான செம்பியன் மாதேவி அருவணைத்துக் காத்தார். தமது இரு தம்பியரில் ஒருவனை - ஆதிகக கரிகாலனை - இழந்த குந்தவையார் எஞ்சிய ஒரு தம்பி அருண்மொழியின் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார்.

அன்பில் அன்னையாகவும், பரிவில் தமக்கையாகவும், பண்பாட்டை வளர்ப்பதில் ஆசானாகவும், அரசியல் அரங்கில் மதிநுட்பம் வாய்ந்த அமைச்சராகவும், அருண்மொழியை வார்த்தெடுத்த பெருமை குந்தவைப் பிராட்டியாருக்கே உரியதாகும். அருண்மொழி வளர வளர அவனது உள்ளத்தில் தனது அண்ணன் வஞ்சனையால் கொல்லப்பட்ட துயரத்தில் மூண்ட நெருப்பும் வளர்ந்து கொண்டே வந்தது.

சுந்தரசோழன் இறந்த பிறகு செம்பியன்மாதேவி விருப்பப்படி அவரது மகனான மதுராந்தகனே முடிசூட்டிக் கொள்ள வாய்ப்பளித்தான் அருண் மொழி. இத்தனைக்கும் அருண்மொழியைவிட வயதில் மிகச் சிறியவன் மதுராந்தகன். மதுராந்தகன் பட்டம் சூட்டிக் கொண்டதற்குச் செம்பியன் மாதேவியின் விருப்பம் மாத்திரமே காரணமாய் இருந்துவிட வில்லை. அரசவையில் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்களின் தந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

மதுராந்தகனிடம் அரசியலை விடவும் பக்தியே ஆளுமை செலுத்தியது. கடவுள் பக்தியிலும் மூட நம்பிக்கைகளிலும் விழுந்து கிடக்கும் அரசையே பார்ப்பனர்கள் விரும்புவதில் ஆச்சரியமில்லை. மணிமகுடத்தின் மீது மதம் ஆதிக்கம் செலுத்தும்போது நெறிமுறைகள் மீறப்படும், அறம் பிறழும், பார்ப்பனியம் தனது இச்சைகளைப் பூரணமாய் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மதுராந்தகன் ஒரு மதவாதி. மடையன். அவனை ஆட்சிக்குக் கொண்டு வந்து விட்டால், ‘மங்கை உருவில், மகான் உருவில் இந்த மண்ணை வளைத்து விடலாம்’ என்று திட்டமிட்டே வந்தேறிகள் சிலர் வஞ்சகமாய் ஆதித்த கரிகாலனைக் கொன்று விட்டார்கள் என்பதை அருண்மொழி அறிந்தே இருந்தான்.

ஆரியத்தின் மடியில் வீழ்ந்து விட்ட மதுராந்தகன் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியது. பூசனைகளாலும் வேள்வி களாலும் புரோகிதம் வளரலாம்; பொருளாதாரம் வளராது. பிரார்த்தனைகளால் காலத்தை ஒழிக்கலாம்; ஆனால், நரைத்த ஒரு முடியைக்கூடக் கருப்பாக்க முடியாது என்று அறிந்த மக்கள் மதுராந்தகனை வெறுக்கத் தொடங்கினார்கள். நிலைமையைப் புரிந்து கொண்டு மதுராந்தகனும் அருண்மொழிக்கு வழி விட்டு அரியணையிலிருந்து விலகிக் கொண்டான். அருண்மொழிக்கு முடி சூட்டப்பட்டது.

அண்ணன் ஆதிக்க கரிகாலனை வஞ்சமாய்க் கொன்ற மர்ம மனிதர்களைத் தேடத் தொடங்கினான் ராசராசன் என்கிற அருண்மொழி. இந்தத் தீவிரத் தேடலில் நான்கு குற்றவாளிகள் தப்ப முடியாதவாறு கண்டறியப்பட்டார்கள். அவர்கள் நால்வரும் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த பார்ப்னச் சகோதரர்களே!

வீரநாராயணன் என்பது பராந்தகச் சோழனைக் குறிப்பதாகும். ஆரியர் கொண்டாடும் நாராயணனுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எங்கள் பராந்தகச் சோழ மன்னனே கண்கண்ட நாராயணன் என்று மக்கள் கொண்டாடியதால் பராந்தகன் வீர நாராயணன் என்று வழங்கப்பட்டான். அவன் பெயரால் பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊரே வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம். வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீரநாராயணன் ஏரியும் பராந்தகச் சோழனின் பெருமை கூறுவதே!

Anaruna சோழமன்னர்களின் தயாளத்திலும் தானத்திலுமே வயிறு வளர்த்த பார்ப்பனர்களே சோழ, சாம்ராஜ்யத்தைச் சூழ்ச்சியால் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை இராசராசன் கண்டுபிடித்தான். ரவிதாசன், அவனது தம்பியான பரமேஸ்வரன், இன்னொரு தம்பிசோமன், மலையனூரானான ரேவதாசன் ஆகிய நான்கு பார்ப்பனர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த நான்கு பார்ப்பனர்களோடு இந்தச் சதியில் இவர்களுக்குப் பின்னே இவர்களுக்குப் பெண் கொடுத்த - பெண் எடுத்த - ஒரு பெருங்கூட்டமே இருப்பது தெரிய வந்தது. இவர்கள் அத்தனை பேரையும் சோழ நாட்டிலிருந்து வெளியேற்றினான் இராசராசன். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் சதி புரிந்த கொலைக் குற்றவாளிகளைக் கூட நூற்றுப் பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்து, அவர்களைக் கோபம் கொண்ட மக்களில் யாரும் தாக்கிவிடக் கூடாதே என்கிற கருணையோடு தனது படைவீரர்களைப் பாதுகாப்புக்கும் அனுப்பி, சேர நாட்டு எல்லையில் விட்டு வருமாறு செய்தான் இராசராசன்.

துரோகிகளுக்கு இவ்வளவு பாதுகாப்பா? இரக்கமா? ஆம், பார்ப்பனர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை தரக் கூடாது என்று போதிக்கும் மனு தர்மத்துக்கு மதிப்பளித்த மடத்தனத்தின்படி நேர்ந்தது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட இடம் இன்று காட்டுமன்னார்குடி என்றழைக்கப்படும் உடையார் குடிச்சிவன் கோயில் மண்டபம்.

இராசராசன் கொலைகாரப் பார்ப்பனர்களுக்கு வழங்கிய தீர்ப்பு குறித்து காட்டுமன்னார்குடிக் கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று இன்றும் சரித்திரத்துக்குச் சாட்சியாக நிற்கிறது. அந்தக் கல்வெட்டு இவ்வாறு தொடங்குகிறது:

“ஸ்வஸ்தி ஸ்ரீகோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2-வது வடகரை பிரம்மதேயம்
ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரஹ்மாதி ராஜனும், இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடிச் சோழபிரஹ்மதி ராஜனும், இவர்கள் உடன் பிறந்த மலையூரானும் இவர்கள் தம்பிமாறும் இவர்கள் மக்களிதும் இவர் பிராஹ்மணிமார் பேராலும்...’’ என்று தொடர்கிறது இந்தக் கல்வெட்டு.

இந்த வரலாற்று நிகழ்வு குறித்துப் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதுகிறார்:

“யார் துரோகி? யார் கூடயிருந்து குழி பறிக்கிறானோ அவன்தான் துரோகி. எதிரியைவிட கேவலமானவன். எதிரியைவிடக் கேவலமானவனை ஏன் இராஜராஜன் விட்டு வைத்தார்...? பிராமணர்களைக் கொன்றால் பாவம் ஒட்டிக் கொள்ளும் என்ற பயமா...? நாங்கள் அந்தக் கல்வெட்டு முழுவதும் தடவித் தடவிப் படித்தோம். கோவில் வெளிப் பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டோம். இருநூறு பேர் ஆண்கள் - பெண்கள் - வயதானோர், குழந்தைகள் - வெறும் கட்டிய துணியோடு அந்தண(!) வம்சத்தினர் உடையார்குடி என்கிற ஊரைவிட்டு மெல்ல மெல்லத் துக்கத்தோடும், வெட்கத்தோடும், குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஊர் மக்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... கோவிலை விட்டு வரவே முடியவில்லை. அங்கேயே வெகு நேரம் கிடந்தோம்.

“சோழ மண்ணை நேசிப்பவர்கள் இராஜராஜனைக் காதலிப்பவர்கள் இந்த இடத்திற்கு ஒருமுறை போய் வரவேண்டும். அந்த உடையார்குடி கல்வெட்டைத் தடவிப் பார்க்க வேண்டும். இராஜராஜன் பதவியேற்றதும் செய்த முதல் காரியம் இது. மிகப்பெரிய ஓர் அரசியல் சூழ்ச்சிக்கு அவன் எடுத்த முக்கியமான நடவடிக்கை இது. சோழ தேசத்தின் மீது காதலுள்ளவர்கள் உடையார்குடி என்ற அந்தக் காட்டு மன்னார் கோவிலுக்குப் போய் வரலாம். அங்குபோய் ஆதித்த கரிகாலன் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு அந்தச் சிவன் கோயிலில் ஒரு நெய்விளக்கு ஏற்றிவிட்டு வரலாம்!’’

பாலகுமாரனின் நெய் விளக்கு பரிகாரம் குறித்து அடுத்த இதழில்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com