Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்ட் 2006

தமிழா நீ புழுவா? மனிதனா?

பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன்

ஆறு ஆண்டுகளுக்கு முன் - 4-6-2000 நாளிட்ட கல்கி இதழொன்று என் கைக்குக் கிடைத்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியை நேரில் சந்தித்து, அவருக்குத் தொடர்புடைய சுற்றுப்புறக் கிராமங்களிலும் விசாரித்து, ஒரு செய்திக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியைப் பற்றி கல்கி எழுதுமளவிற்கு என்ன நடந்தது?
சிதம்பரம் சிவாலயத்தில், இறைவன் முன் சிவபக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடிச் சாந்திபெற விரும்பினார் சிவபக்தர் ஆறுமுகசாமி.

ஆலயத்துள் நுழைந்து பாடத் தொடங்கியதுமே எதிர்பாராத தாக்குதல், சில குண்டர்கள் சூழ்ந்து இழுத்துப் போட்டு மிதித்து அடித்து நொறுக்குகிறார்கள். தாக்கியவர்கள் அனைவரும் நீறுபூத்த நெற்றியுடன் காணப்படுகிறார்கள். தீட்சிதர்களாம். தீட்சிதர்கள் என்றால் தீட்சை தருகிறவர் என்று பொருள் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

தீட்சை என்றால் என்ன? தோழர் சின்னக்குத்தூசியிடம் கேட்டேன். ஒரு மாணவன் அல்லது சீடன் முழுத் தகுதி பெற்றிருக்கிறான் என்று சான்று - அங்கீகாரம் - ஏற்று அளிப்பதுதான் ‘தீட்சை’ என்றார் சின்னக்குத்தூசி.

“அப்படியானால் தீட்சிதர்?’’

“அறிவை அங்கீகரிப்பவர் என்று பொருள் இல்லை. தீட்சைக்கும் தீட்சிதருக்கும் சம்பந்தமே இல்லை. தீட்சிதர் என்போர் ஒரு சாதிப் பிரிவினர் அவ்வளவுதான். அரைகுறையாய் என் தொலைபேசி உரையாடலைக் கேட்ட ஒருவர் போகிற போக்கில் சொன்னார்: “போக்கிரிகள், ரௌடிகள் என்று புரிந்து கொள்ளலாம் ஐயா!’’ சிவபக்தர் ஆறுமுகசாமியைச் சிதம்பரத்தில் தாக்கியவர்கள் மீது கொண்ட சினமேறிய விளக்கம் அது என்று புரிந்தது.
ஆறுமுகசாமியின் கதையை கல்கியில் மறுபடியும் படித்தேன். அதில் ஆறுமுகசாமியின் ஒவ்வொரு சொல்லும் இதயத்தை உலுக்கியது.

ஆறுமுகசாமி சொல்கிறார்: சிதம்பரம் கோயில் ‘அம்பலத்தில்’ தமிழில் பாடுவது என்பது தீட்சிதராலும் முடியாது என்பதால் - “நாமே ஒரு சிவாலயம் கட்டி தேவாரம் இசைப்பது என்ற முடிவோடு எனது கிராமத்திலேயே (குமுடி மூலை) பசுபதீஸ்வரர் ஆலயம் கட்டி ஒரு கால பூஜை செய்து வந்தேன். ஆனாலும் மனசுக்குள் புழுக்கம்... ‘எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய்? என் ஆலயத்திற்கு வா... எத்தனை சோதனை வந்தாலும் தயங்காதே’ என்று பரம்பொருள் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பது போல இருந்தது. எனவே எனது நண்பர்களோடு, கடலூர் மாவட்ட நீதிபதி சிங்காரவேலுவைச் சந்தித்து, அம்பலத்தில் நின்று தேவாரம் இசைத்தபடி இறைவனை தரிசிக்க அனுமதி கேட்டேன். அவர் இரண்டு அதிகாரிகளையே உடன் அனுப்பி எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்.

“அந்த அதிகாரிகள் முன்னிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி அம்பலத்தில் பாடினேன். மறுநாள் அதிகாரிகள் இன்றி பாடச் சென்றபோது என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்! அதன்பிறகு அதே மாதம் 18 ஆம் தேதி சிதம்பரம் நகர காவல்துறையின் பாதுகாப்புடன் சபையில் பாடினேன். மறுநாள் 19 ஆம் தேதி பாடியபோது பத்துக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூறி, ஜாதியின் பெயரையும் சொல்லி என்னைக் கீழே பிடித்துத் தள்ளி விட்டனர். இறையன்பர்கள் சிலர் அருகில் இருந்ததால், என்னைக் காப்பாற்றி அழைத்து வந்தார்கள். அதன் பிறகு நான் மானசரோவர் யாத்திரை சென்று விட் டேன்.

“மறுபடியும் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மே மாதம் எட்டாம் தேதி, காலை பத்து மணிக்கு அம்பலத்தில் தொண்டர்களுடன் தேவாரம் இசைக்கப் போனேன். அம்பலம் ஏறி ஆறு வரிகள்தான் பாடினேன்... சுப்ரமண்ய தீட்சிதர் என்பவர் அங்கிருந்த பிற தீட்சிதர்களையும் அழைத்துக் கொண்டு, என்னை மிகக் கேவலமாகத் திட்டியபடி ‘இவனை அடிச்சு தள்ளுங்க’ என்று சத்தம் போட்டதும், என்னை அம்பலத்தில் இருந்து கீழே தள்ளி எல்லோரும் இடுப்பு, கழுத்து, வயிறு பகுதிகளில் மிதித்தார்கள். நிலைமை மோசமானதை அடுத்து உடன் இருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனாலும், இதுவரை யாரையும் ஒரு வார்த்தைகூட விசாரிக்கவில்லை.

ஆனால் என் உடம்பில் உயிர் இருக்கும் வரை அம்பலத்தில் திருவாசகம் இசைத்து தில்லை திருத்தலத்தில் இருக்கும் தீண்டாமைப் பேயை விரட்டப் பாடுபடப் போகிறேன்’’ என்கிறார் ஆறுமுகசாமி. இந்த ஆறுமுகசாமி யார், எப்படிப்பட்டவர் என்பதை அறிய அவரது குமுடிமூலை கிராமத்திற்குச் சென்றோம்.

“காடா இருந்த ஊருக்கு பஸ் வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை கொண்டு வந்தது உட்பட, அதிகாரிகளைப் போய்க் கேட்டுப் பல வசதிகள் செஞ்சு கொடுத்திருக்கார். மூணு கிராமங்கள்ல கோயில் கட்டிக் கொடுத்திருக்கார். கொஞ்சம்கூட சுயநலம் இல்லாதவர். அவரும் பல வருஷமா போராடித்தான் பார்க்கறாரு. ஆனா, தொடர்ந்து அவருக்கு அடியும் உதையும் அவமானமும்தான் சிதம்பரம் கோயிலில் கிடைக்குது’’ என்கிறார் குமுடி மூலை கிராமவாசியான சௌந்தர்ராஜன்.

சிதம்பரம் நகர காவல் நிலையத்தை அணுகினோம். தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற இரண்டு பெயர்களைக் கேட்டதும், எஸ்.ஐ. எல்லா விவரமும் தருவார் என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் குப்புசாமி அவசரகதியில் ஜீப் ஏறி மறைந்தே போனார். கடந்த எட்டாம் தேதி ஆறுமுகசாமி தாக்கப்படக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் சுப்ரமண்ய தீட்சிதர் என்ன சொல்கிறார்?

“அம்பலத்துல நின்னு பாடறதுக்குன்னுதான் நாங்க இருக்கோமே... இங்கே எதுக்கு ஆறுமுகசாமி...? அம்பலத்துக்குக் கீழே நின்று பாடினா பகவான் ஏத்துக்க மாட்டாரா? ஆறுகால பூஜை நேரம் போக பக்தர்கள் யாரு வேணும்னாலும் சன்னதியில் - அம்பலம் தவிர எங்க வேணுமானாலும் நின்னு பாடிக்கலாம். இதுக்கு நாங்க தடை சொல்றதில்லே! எங்க உரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இவ்விஷயத்தில் ஜாதி ஒரு பொருட்டே அல்ல!’’ என்று அடித்துச் சொல்கிறார்.

அதற்குமேல் நாம் கேட்ட எதையும் அவரோ, தற்போது தலைமை தீட்சிதராக இருக்கும் கனகசபை தீட்சிதரோ காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. இவையெல்லாம் கல்கி எழுதியவைதாம். (இந்தச் செய்தியை வெளியிட்டதற்காகக் கல்கியைப் பாராட்டுகிறோம். எப்படி வெளியிட்டது என்று வியக்கிறோம்.)

இது நடந்து ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. இந்த ஆண்டிலும் - 2006 ஜூலை மாதத்திலும், அதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ஆசையில் அதே தமிழில் இறைவனைப் பாட வருகிறார். இம்முறையும்,
அதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ரௌடிகளால் அதே மாதிரித் தாக்கப்படுகிறார். காலம் மாறியிருக்கிறது. ஆனால், ஆறுமுகசாமியின் தேவாரத் தமிழ்க் கனவும் அரங்கேறவில்லை. தீட்சிதர்களின் தமிழ் விரோதப் போக்கும் குறையவில்லை!

நந்தனை எரித்த நெருப்பு இன்னும் சிதம்பரம் தீட்சிதர்களின் நெஞ்சில் அணையவில்லை. உயிரே எரிந்தாலும் எம் உணர்வு அடங்காது என்பது போல் புதிய புதிய நந்தன்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சாத்திரம், சம்பிரதாயம், ஆகமவிதி என்று அறிவுக்குப் புறம்பான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில், தமிழர்கள் எழுப்பிய கோயிலில், ‘தென்னாடு (தமிழ்நாடு) உடைய சிவனே’ என்று போற்றப்படும் கடவுளை, தமிழில் பாடி வணங்கக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுக்கிறது. அதைக் காவல் துறையும் ஏற்றுக் கொள்கிறது. நீதித்துறையும் ஒப்புக் கொள்கிறது. எவனை வணங்கத் தமிழெடுத்துச் சென்றாரோ, அந்தச் சிவனும் இந்த அக்கிரகாரத்து அக்கிரமங்களைக் கண்டு கொள்வதில்லை.

சம்பிரதாயம், ஆகமம் என்கிற சங்கதிகளெல்லாம் வசதிபடைத்த மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட பாதுகாப்பான ஏற்பாடுகள்தாம். நிரந்தரமான, மாற்றக் கூடாத விதி என்று எதுவும் கிடையாது. அடிமைகள் எஜமானருக்குமுன் பணிவாக நடக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயம்தான். ஆண்டான் அடிமை என்கிற சமூக அமைப்பே கூடாது என்று புதிய சிந்தனை எழும்போது சம்பிரதாயங்கள் சமாதிகளாகி விடுகின்றன. மன்னர்களின் மணிமுடிகள் நொறுங்குகின்றன. முதலாளித்துவம் முடிசூடிக் கொள்கிறது. சகல சம்பிரதாயங்களுடனும் குடைநிழலில் குஞ்சரம் ஊர்ந்த நேபாள மன்னன் மக்கள் எழுச்சிக்கு முன் காணாமல் போனான். நடைமுறையிலுள்ள சமூக ஏற்பாட்டால் நன்மையடைகிறவர்களே சம்பிரதாயங்களில், சட்டங்களில் மாறுதலே கூடாது என்கிறார்கள்.
கூடாது என்று எத்தனை கூச்சல்கள் எழுந்தாலும் அரசியல் சாசனங்கள்கூட காலங்கள் தோறும் தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

அரசியல் சாசனங்கள் மாற்றப்படலாம்; ஆலய சம்பிரதாயங்கள் மாற்றக் கூடாதவை. ஏனென்றால், அவை ஆண்டவனால் அளிக்கப்பட்டவை என்று, ஆச்சாரியார்களும், மதகுருமார்களும் விரிவுரை செய்யக் கூடும்.
ஆண்டவனே மனிதனின் படைப்புத்தான் என்கிற சிந்தனைகள் மலர்கிற காலத்தில் ஆண்டவனைச் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது.

ஆண்டவனைத் துணைக்கழைப்போருக்கு ஒரு கேள்வி:

“ஆண்டவன்தான் எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய்? வா, வந்து பாடு என்று எனக்கு ஆணையிட்டான்’’ என்று சிவபக்தர் ஆறுமுகசாமி சொல்லும்போது தீட்சிதர்கள் அதை ஏற்க மறுப்பது ஏன்?
இங்கே - சிதம்பரத்தில் - ஆண்டவன் கட்டளையை விட ஆரிய விருப்பமே மேலானது என்று ஒவ்வொரு தீட்சிதனும் நம்புகிறான்.

பிரபஞ்சம் இயற்கைக்குக் கட்டுப்பட்டது. இயற்கை கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது. ஆதலினால் பிராமணன் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவன் என்று உரிமை பாராட்டுகிறான். ஆறுமுகசாமி போன்ற சிவனடியார்களோ, ‘நீ மந்திரம், கடவுள், இயற்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் உரிமை பெற்றிருக்கலாம்; ஆனால், எம் தமிழைக் கட்டுப்படுத்த யாரடா நீ?’ என்று பொங்கி எழுகிறார்கள். இறைவழிபாட்டில் இடைத்தரகர்களான அர்ச்சகர், தீட்சிதர்களின் சனாதன தர்மங்கள் முக்கியமா, பக்தனின் உணர்வு முக்கியமா? - கேட்கிறார்கள் ஆறுமுகசாமிகள்.

வேடன் கண்ணப்பனின் கதை என்ன? சிவபெருமானின் விக்கிரகத்தில் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு துடிக்கிறான் கண்ணப்பன். தன் கண்களைப் பறித்து சிவனுக்குப் பொருத்துகிறான். எப்படி? தன் கண்களைப் பறித்துக் கொண்ட பின் சிவனின் கண்ணிருக்கும் இடத்தைப் பார்க்க முடியாது என்பதால், அந்த இடத்தில் தனது கால்விரலால் மிதித்து அடையாளம் ஏற்படுத்திக் கொண்டுதான் சிவனுக்கு ‘கண் ஆபரேஷன்’ செய்கிறான்.

ஆசாரம் காக்க நினைக்கும் யாருக்கும் கண்ணப்பனின் உணர்வு ஆசாரக் கேடானது. இறைவனின் கண்ணருகே காலால் மிதிக்கலாமா? மிதித்தவனை மிதிக்காமல் விடலாமா என்று தோன்றும். பக்தனின் பக்தியை மெச்சும் யாரும் இறைவனின் துயரத்தைப் போக்குவதற்காகத் தன்னையே குருடாக்கிக் கொண்ட கண்ணப்பனின் உணர்வு கண்டு மெய்சிலிர்த்துக் கசிந்துருகுவார். இறைவனுக்காகத் தன் கண்களையே பறித்துக் கொடுத்த பக்தனின் உணர்வு போற்றத் தகுந்ததா? இறைவனைக் காலால் மிதித்துவிட்டான் பாவி என்று கத்தும் தீட்சிதரின் ஆசார சீலம் போற்றத் தகுந்ததா?

அறிவியல் நோக்கில் கண்ணப்பன் ஓர் அசடன்; தீட்சிதர் ஒரு கயவன். பக்தி என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உளவியல் சிக்கல் என்பதால், இங்கே ‘ஆன்மீக அளவுகோலின்படி’ உணர்வு வெற்றி பெறுகிறது; ஆசாரம் அர்த்தமற்றதாகி விடுகிறது. தீண்டாமையும் உடன்கட்டை ஏறுதலும்கூட மதவாதிக்குப் புனிதமான ஆசாரங்களே!
புதைகுழியில் சிக்கித் தவிக்கும் தீட்சிதரைப் புலையன் கைபிடித்துத் தூக்குகிறான்; ஆசாரம் கெட்டு விட்டதே என்று புலையனைத் தண்டிப்பதா? தீட்சிதரைத் தண்டிப்பதா?

ஆசாரம் காப்பதற்காக சிதம்பரத்திலே ஒரு தீட்சிதர் செத்தால் அவருடைய மனைவியையும் அதே சிதையில் போட்டுக் கொளுத்தலாமா? வேதம் ஓதுதலையும் யாகம் வளர்த்தலையும் விட்டுவிட்டு, மருத்துவராய், நீதிபதியாய், பொறிஞராய், முதல்வராய், பிரதமராய்த் தொழில் செய்து பிழைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதமானதல்லவா? புனித ஆசாரங்களுக்கு எதிரான பாவமல்லவா? இவ்வாறு தர்மத்தைத் தொலைத்து ஆசாரம் கெட்ட ‘பிராமணக் கழிசடைகளை’ சிதம்பரம் தீட்சிதர்கள் செருப்பால் அடிப்பார்களா?

அப்படிச் செய்வார்களானால், ஆசார சீலர்களான தீட்சிதர்கள் ஆறுமுகசாமியை ‘அம்பலத்தில்’ நுழையாதே என்று தடுப்பதுகூட, ‘தர்மப்படி’ சரி யென்று ஒப்புக் கொள்ளலாம். இந்த அடிப்படை ‘நாணயம்’கூட இல்லாத தீட்சிதர்கள் எந்த முகாந்தரத்தைச் சொல்லி, ஆறுமுகசாமிகளைத் தடுக்கிறார்கள்? நீதிமன்றத்தின்மூலம் தடையுத்தரவு பெறுகிறார்கள்? அதற்கு எந்த நீதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது? சிதம்பரம் அம்பலத்தில் ஏறாதே; தமிழில் பாடாதே என்பதை இறைவனே ஏற்க மாட்டான். நீதிபதி ஏற்றது எப்படி?

சிதம்பரத்தில் ஆசாரமும் காப்பாற்றப்படவில்லை; அறிவியல் பார்வையும் காப்பாற்றப்படவில்லை; அரசியல் சாசன விதிமுறைகளும் காப்பாற்றப்படவில்லை. ஆசாரம் கெட்ட தீட்சிதர்கள் தாங்களும் கெட்டு, சட்டத்தையும் வளைக்கிறார்கள். ஆறுமுகசாமிக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் அடிமுடியை அலசி ஆய்ந்தால் தெரியும் உண்மை இது தான்: தமிழன் தீண்டத்தகாதவன்; தமிழ்மொழி ‘நீசபாஷை’ என்கிற அக்கிரகாரத்து வக்கிரத்துக்கும், தமிழைப் பழித்தோர்க்குச் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கெனும் மான உணர்ச்சிக்குமான ‘பரம்பரை யுத்தமே’ சிதம்பரத்தில் நடக்கிறது!

தமிழா நீ புழுவா, பூச்சியா? ‘ஆம்’ என்றால், நாசமாய்ப்போ! மனிதன் என்றால் எழு; உன்மீது பூசப்பட்ட களங்கத்தைக் கழுவு!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com