Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்ட் 2006

தெருக்கோடியில் ஒரு சிவப்புக் கொடி

கவிஞர் தணிகைச்செல்வன்

புரட்சியின் வரலாற்றில் கப்பல்களே புரட்சியின் முதல் வெடிமுழக்கத்தைத் தொடக்கி வைத்திருக்கின்றன.

Che and Fidel ஜார் மன்னனின் மாரிக்கால அரண்மனையின்மீது தாக்குதல் தொடுத்திடக் கம்யூனிஸ்ட் செஞ்சேனைக்கு ஆணையிட்ட முதல் குரல் ‘அரோரா' என்ற ரஷியப் போர்க்கப்பலின் வெடி முழக்கமே. இந்தியக் கடற்படை எழுச்சி 1946-ல் மும்பையில் வெடித்தபோது ‘தல்வார்' என்ற கப்பல்தான் கப்பல்படையின் கடல்தளமாகச் செயல்பட்டது.

கியூபா விடுதலைப் புரட்சியின் தொடக்கவிழா நடந்ததே ஒரு சிறு கப்பலில்தான். மெக்சிகோவிலிருந்து கியூபாவுக்கு பிடல் கேஸ்டிரோ, சேகுவேரா உட்படக் கியூபாப் புரட்சியாளர்களை ரகசியமாகச் சுமந்து சென்று காஸ்டிரோயிசத்தைக் கியூபா மண்ணில் விதைத்த அக்கப்பலின் பெயர் ‘கிரண்மா'.

12 பேர் மட்டுமே அமரக் கூடிய கிரண்மாவில் 82 பேர் பயணம் செய்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். கப்பலின் பளுவைக் குறைக்கத் தாங்கள் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளையெல்லாம் கடலில் தூக்கி எறிந்தனர். அதன் பின்னும் அவர்களுக்கு வேறு தடைகள் வேறு வடிவங்களில் வந்தன.

கடல் பயணம் செய்து பழக்கமில்லாத அத்தனைப் பேருக்கும் ‘கடல் சீக்கு' வந்ததால் வாந்தியெடுக்க ஆரம்பித்தார்கள்; அதையும் தாங்கிக் கொண்டாலும் கப்பலின் மாலுமியே ஒரு அலை வீச்சில் கடலில் விழுந்துவிட்டார். அவரைக் கடலில் தேடிக் கண்டுபிடித்துக் கப்பலில் சேர்ப்பது பெரும்பாடாகிவிட்டது. போதுமான கம்பளி உடை இன்மையால் பனியிலும் குளிரிலும் விறைக்கத் தொடங்கிய தோழர்களுக்குக் கைகளால் தேய்த்துச் சூடேற்றி அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடுஞ்சோதனை.

அனைத்துக்கும் மேலாக புரட்சித் தலைவர் சேகுவேராவின் உடன்பிறந்த நோயான ஆஸ்த்துமா வழக்கம்போல் பனிக்காலத்தில் வந்துவிட்டது. மூச்சுத் திணறலால் அவர் வேதனைப்பட் டார். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு துவண்டு போய்க் கிடந்த தோழர்களிடம் ஜோக் அடித்துச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

இவையெல்லாம் புரட்சி கோரும் சின்னச்சின்ன விலைகள். எதிரியால் தரப்படும் களச்சாவுகள், மரண தண்டனை, ஆயுள் தண்டனை என்பவைதாம் பெரிய விலைகள்.

1956 நவம்பர் 25 அன்று புறப்பட்ட கிரண்மா ஏழு நாள் பயணித்து டிசம்பர் இரண்டாம் தேதியன்று கியூபாவின் ஒரியண்டே மாநிலம் நிக்கரோ மாவட்டம், கேப் கிராஸ் என்ற கடல் முனையில் வாஸ் கொலரடாங் என்ற இடத்தை அடைந்தது.

நின்ற இடம் கடல். அங்கிருந்து கரையை அடையப் படகுவேண்டும். கிரண்மாவில் இருந்த ஒரே படகும் ஏற்கெனவே கடலில் மூழ்கி விட்டது. எனவே புரட்சியாளர்கள் அந்தப் பின்னிரவில் பனிக்கடலில் நீந்தியே கரையை அடைந்தார்கள். இவ்வளவு இடுக்கண்களுக்கு இடையிலும் ஆயுதங்களை மட்டும் அவர்கள் இழக்கவில்லை; ‘தோள் கொண்டார் தோளே கொண்டார்' என்னும்படி துப்பாக்கிகள் அவர்கள் தோள்களைப் பற்றிக் கொண்டிருந்தன.

‘‘டிசம்பர் நாலாம் நாள் இரவு ஒரு கரும்புத் தோட்டத்தில் மறைந்திருந்து பசியையும் தாகத்தையும் தணிக்கக் கரும்பைத் தின்று சக்கைகளை எறிந்தோம். பகைவர்களுக்கு இந்தச் சக்கைகள் கூட எம் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று எண்ணினேன். உண்மையில் கரும்புச் சக்கைகள் எமக்குத் துரோகம் செய்யவில்லை. எங்களுக்கு அமைந்த வழிகாட்டியே அந்த வேலையைச் செய்து விட்டான். கரும்புத் தோட்டத்திலேயே பாடிஸ்டா அரசின் படைவீரர்களால் நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டோம்.'' - என்று சேகுவேரா தன் நினைவுக் குறிப்பில் எழுதுகிறார்.

சிலர் மாண்டார்கள்; பலர் காயமுற்றார்கள்; இருபது பேர் கைதானார்கள். சிறைபட்ட தோழர்கள் சித்திரவதை பட்டார்கள். பின்னர் பலர் சுடப்பட்டு இறந்தார்கள்.

உயிர் பிழைத்தவர்கள் சியாராமேஸ்ட்ரா என்ற மலையடிவாரத்தில் ஒன்று சேர்ந்தார்கள் ‘‘ஒரு கொரில்லா யுத்தத்துக்கு மிகப் பொருத்தமான களம் உலகிலேயே சியாரா மேஸ்ட்ரா போல் எங்கும் அமையாது'' என்கிறார் குவேரா.

கடற்பயணத்திலிருந்து விடுதலைப் பயணம் வரை ஒரு முணுமுணுப்போ மனச் சலிப்போ இல்லாமல் கடைசிவரை கிரண்மாவின் போராளிகள் உறுதியேற்றிருந்த வஞ்சினமும், உரமேறப் பேணிய நெஞ்சுரமும், நெஞ்சிலே தாங்கிய செந்நிறமும் தேச விடுதலை - வர்க்க விடுதலை - சமூக விடுதலை என்ற மூன்றின் மீதும் அவர்கள் கொண்டிருந்த மூர்க்கமான காதலுக்குச் சான்றுகளாகும்.

1959 ஜனவரி முதல் தேதி காஸ்ட்ரோவின் தலைமையில் கியூபா புரட்சி வெற்றி பெற்று புதிய அரசு பொறுப்பேற்றது. அமெரிக்காவின் அட்லாண்டிக் கடல் முனையில் உள்ள மியாமி கடற்கரையிலிருந்து 140கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தீவுதான் கியூபா. ஐரோப்பாவின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படும் கியூபாவின் முதன்மைத் தொழிலே கரும்பு வேளாண்மைதான். அதை ஒட்டிய சர்க்கரை ஆலைகள், அவற்றிலிருந்து அவதரித்த சாராய ஆலைகள் என்ற அளவில் மட்டுமே கியூபா பொருளாதாரம் கீழ்மட்டத்தில் கிடந்தது புரட்சிக்கு முந்திய பாடிஸ்டா கொடுங்கோலனின் பரிபாலனத்தில்.

காஸ்ட்ரோவின் பொது உடைமை அரசு பொறுப்பேற்ற பின் கியூபாவின் பொருளாதார முகமே புரட்சிகரமாகத் திருத்தப்பட்டுவிட்டது. சோவியத் அறிவியலும் சீனத்தின் தொழிலியலும் கியூபாவின் கரும்பு வயல்களை இரும்பு வயல்களாக மாற்றிவிட்டன. கல்வி கற்றோர் தொகை நூறு விழுக்காடானது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை முற்றிலும் இலவசமே. கல்வி, மருத்துவம், தொழில்துறைகளில் தனியாருக்கு அனுமதியில்லை. வேலையில்லை என்ற பேச்சே இல்லை.

அண்மையில் வெனிசுலா, பிரேசில், சிலி போன்ற லத்தீன் அமெரிக்கா நாடுகளும் காஸ்ட்ரோவைப் பின்பற்றத் தொடங்கிவிட்டதால் அமெரிக்க புஷ், தனக்கு ஆதரவு திரட்டக் கூட்டிய தென்அமெரிக்க நாடுகளின் கூட்டம் தோல்வியில் முடிந்தது. அந்தக் கூட்டத்தில் வெனிசுலா அதிபர் சாவேஸ் எழுந்து அமெரிக்க ஆதிக்கப் போக்கைக் கண்டித்து வீர உரையாற்றிவிட்டு வெளிநடப்புச் செய்தார். டாலர் வலைக்குள் சிக்கவைக்க புஷ் தயாரித்து வந்த திட்டங்கள் எல்லாம் பொடிப்பொடியாகச் சிதறின. தென் அமெரிக்கர்களுக்கு இனி வாஷிங்டன் அல்ல, ஹவானாவே தலைமைப் பீடம் என்ற நிலை முதிரத் தொடங்கிவிட்டது.

கியூபாவைத் தோற்கடிக்கும் திட்டத்தை அமெரிக்கா 1961ஆம் ஆண்டிலேயே துவக்கிவிட்டது. புரட்சி வெற்றி பெற்று பொதுவுடைமை அரசு பூத்த இரண்டாம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வெறிப்பார்வை கியூபா மீது படிந்துவிட்டது. தன் கொல்லைப் புறத்தில் ஒரு தீவாக இருந்த தேசம், பொதுவுடைமை மணக்கும் பூவாக மலர்ந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை அமெரிக்க வல்லரசால். கென்னடியின் ஆசியுடன் 1961-ல் கியூபாவின் பிக்ஸ் வளைகுடாவில் இறங்கிக் கியூபா அரசைக் குலைப்பதற்கான வல்லடிப் போரைத் துவக்கினார்கள் கியூபாப் புரட்சியால் நாடு விட்டு ஓடிய நில உடைமையாளர்கள். அமெரிக்க ஆயுதங்களும் அமெரிக்கப் படைகளும் அவர்களுக்கு ஆதரவளித்தன. இருப்பினும் பிக்ஸ் வளைகுடாப் போரில் அகதி முகமூடி அணிந்த அமெரிக்க பினாமிகள் தோற்றோடினார்கள்.

இருப்பினும் தன் தெருக்கோடியில் ஒரு சிவப்புக் கொடி பறப்பதை சகிக்க முடியவில்லை அமெரிக்காவால். புரட்சி வெற்றி பெற்று காஸ்ட்ரோ பதவி ஏற்ற 1959 முதல் கடந்த 47 ஆண்டுகளாகக் கியூபா மக்களின் வெல்லற்கரிய பெருந்தலைவனாக, தென்னமெரிக்க நாடுகளின் பெறற்கரிய பிதாமகனாகச் சுடர் வீசி வருவதைக் காணக் கண் கூசுகின்றனர் கென்னடி முதல் - கிளிண்டன் உட்பட புஷ் ஈறாக அதிபர்களாகியிருக்கும் அத்தனை வல்லரசு வல்லூறுகளும்.

கியூபாவைக் கவிழ்க்க கியூபா மக்கள் உதவ மாட்டார்கள் - அவர்கள் காஸ்ட்ரோவின் காதலர்களாகி விட்டார்கள் - என்பதை உணர்ந்த அமெரிக்க வல்லரசு காஸ்ட்ரோவைத் தீர்த்துக் கட்டுவதைத் தவிரக் கியூபாவைக் கைப்பற்ற வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தது.

எனவே காஸ்ட்ரோவைக் கொலை செய்யும் பொறுப்பு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 47 ஆண்டுகளாக சி.ஐ.ஏ காஸ்ட்ரோவைக் கொலை செய்ய எடுத்த முயற்சிகள் குறித்து ‘கார்டியன்' என்ற பிரித்தானிய இதழில் டங் கன் கேம்ப்பெல் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவுடைமை எதிரிகளையும் கதிகலங்க வைக்கும். திகிலூட்டும் ஜேம்ஸ்பாண்டு நாவல்கூட வெட்கித் தோற்கும்படி அமைந்துள்ளன காஸ்ட்ரோ மீது சி.ஐ.ஏ. நடத்திய கொலைவெறி முயற்சிகள் என்கிறார்.

டங்கன் கட்டுரையை இந்து நாளிதழ் (4-8-2006) மறுபிரசுரம் செய்திருக்கிறது. டங்கன் கூறும் தகவல்கள் எவரையும் அதிரவைப்பதாயிருக்கின்றன. அவற்றில் ஒன்று.

பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவுத் துறை 638 முயற்சிகளைச் செய்து பார்த்தது - என்பதாகும்.

காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டிலே வெடிமருந்து பொதித்து சுருட்டு புகைக்கும் போது அதை வெடிக்க வைத்து ஆளைக் கொல்வது முதல் காஸ்ட்ரோவின் காதலியையே கையாளாக்கி அவள் மூலம் குளிர்பானத்தில் விஷமிட்டு மாய்ப்பது வரை - இத்தனை ஆண்டுகளாகச் செய்த அத்தனை சூழ்ச்சிகளையும் முனைந்து முன் உணரும் அறிவுத் திறனோடும், தனக்கு மெய்க் காவலர்களாக அமைந்தவர்களின் அளப்பரிய ஆற்றலோடும் எதிர்கொண்டு தோற்கடித்திருக்கிறார் என்பது இருபது - இருபத்தொன்று ஆகிய இரண்டு நூற்றாண்டுகளிலும் இவருக்கு இணையாகக் கூற யாருமில்லை என்பதற்குச் சான்றாகும்.

அழிக்கப்பட முடியாத தலைவர் காஸ்ட்ரோ என்பதைக் கூற பல நகைச்சுவை உரையாடல்களையும் எழுதுகிறார்களாம் இலக்கியவாதிகள். அவற்றுள் ஒன்று:

நூறு ஆண்டு வாழக் கூடிய ஒரு ஆமைக்குட்டியை காஸ்ட்ரோவுக்குப் பரிசளிக்க முன்வந்தார் ஒருவர். காஸ்ட்ரோ கூறினார்: ‘அல்பாயுசில் இறந்து போகக் கூடிய இதை ஏற்பதில் எனக்கு உடன்பாடில்லை.'

இதுதான் அந்த ஜோக். இதன் பொருள் என்னவென்றால் - காஸ்ட்ரோ மீது எத்தனை தாக்குதல் நடத்தினாலும் அவர் சாகமாட்டார். அவர் ஆயுள் கெட்டி. அவர் நூறாண்டுகளையும் தாண்டி வாழ்வார். எனவே நூறு வயது ஆமை அவருக்கு அல்பாயுசாகப் படுகிறது.

இந்த ஜோக் வந்த இதழ் ‘தி நியூயார்க்கர்' என்பதாகும். அமெரிக்கர்கள் நகைச்சுவைக்காகக் கூறலாம். நாம் இதய நிறைவோடு கூறுகிறோம். ஆகஸ்ட் 13-ல் எண்பதாம் பிறந்த நாள் காணும் பிடல் அவர்களே, நீங்கள் பாராண்ட தத்துவத்தை அமலாரிக்க நூறாண்டு வாழவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com