Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்ட் 2006

ஆரியர் அந்தணர் அல்லர்

குருவிக்கரம்பை வேலு

நான் முப்பது ஆண்டுகளாக ‘ரிக்' வேதத்தைப் படித்து அதன் உண்மைப் பொருளை முடிந்தவரை உணர்ந்துள்ளேன். திரு. சம்புநாத அய்யரின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தான் முதலில் படித்தேன். அந்த மொழி பெயர்ப்பில் கலந்துள்ள ஆரியச் சொல் பலவற்றிற்கு உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ள விரும்பி, திரு. எச்.எச்.வில்சன், திரு.கிரி பித் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். எச்.எச்.வில்சன் 1850-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அந்தப் பதிப்பில் ஆரிய மொழியாலான ரிக்கின் சுலோகங்களும் இணைந்தே உள்ளன. கிரிஃபித் 1859-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அய்நூறு ஆண்டுகளுக்கு முன் சாயனாச்சாரியார் என்பார் ஆரியத்திலுள்ள வேதங்களுக்கு ஆரியத்திலேயே உரை எழுதியுள்ளார்.

இவர் விசய நகர மன்னன் வீரபுக்கராயனின் முதலமைச்சராயிருந்த மாதவ ஆச்சாரியரின் உடன் பிறந்தவர். இவருடைய உரையைத் தழுவியே வில்சன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலும், தனக்கு முன்பே வேதங்களின் சில பகுதிகளை, வேறு பல மொழிகளிலும் மொழி பெயர்த்துள்ள, ஜெர்மன், பிரஞ்சு மொழிபெயர்ப்பையும், மாக்சு முல்லரின் ஆங்கில மொழிபெயர்ப்பையும், பக்கத்துணையாக வைத்துக் கொண்டுள்ளார். பெரிதும் சாயனரின் அடியொட்டியே செல்லுகிறார் வில்சன். கிரிஃபித்தும் சாயனரையொட்டியே செல்லுகிறார். தேவைப்படும்போது, வில்சனையும் துணைக்குக் கூப்பிடுகிறார். சாயனர் மொழிபெயர்த்த காலம் அய்நூறு ஆண்டுகளுக்கு முந்திய காலம்.

எப்போது ஆரியர் சிந்துவெளிக்குள் நுழைந்தனரோ அன்றே சிந்துவெளி மக்கள் ஆரியரின் படை எடுப்பை முழுமூச்சாக எதிர்கொண்டனர். இந்தப் படையெடுப்பை முறியடிக்கும் போர் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்தன. இதற்குள் ஆரியர் சிந்துவெளி மக்களின் செம்மொழியான தமிழை நன்கு கற்றுத் தேர்ந்தனர். ஆரியர் படையெடுப்பின் போது, சிந்துவெளியின் இலக்கியங்களுக்கும், அந்த நகரங்களுக்கும் வயது இரண்டாயிரத்திற்கும் மேலிருக்கும். சிந்துவெளித் தமிழர், எல்லா வகையிலும் உச்சியிலிருந்தனர் என்பதை நூலினுள்ளே அறிவீர்கள்.

அந்த ஆரியர்கள் தொகுத்த, துதித்த, துதிப்பாடல்களின் தொகுப்பைத்தான் வேதம் என்கிறார்கள். இந்த நூல், சிந்துவில் வாழ்ந்த மக்களை எவ்வாறெல்லாம் கொடிய முறையில் ஆரியர் கொன்றுள்ளனர் என்பதை அறிவிக்கின்றது. இதைப் படிக்கும் போது, இதனைத் தொகுத்தவர்களைக் கூண்டோடு கொன்றுவிட வேண்டும் என்ற மனப்பான்மையைத் தூண்டுகிறது.

புத்தர் பிறப்பதற்கு முன்பு, சற்றேறக்குறைய, அய்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் ‘வேதம்' தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரின் கருத்து. ஆங்கில மொழிபெயர்ப்பாளரான வில்சனும் அவ்வாறுதான் கருதுகிறார். வேதம் தொகுக்கப்பட்டு இரண்டாயிரம் அல்லது இரண்டாயிரத்து அய்நூறு ஆண்டுகள் கழித்துத்தான் சாயனர் உரை எழுதுகிறார் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

வடபெருங்கடல் தென்குமரி வரை இருந்த பெருந்தமிழகத்தை, இன்றுள்ள தமிழகமாகக் குறுக்கிய பெருமை, ஆரியர்களையும், அவர்களுக்குத் துணையாக இருந்த தமிழர்களையும் சாரும். தெளிவான உரையும், எழுத்து வடிவமும் இல்லாதிருந்த வேதத்திற்கு அய்நூறு ஆண்டுகளுக்கு முன்பு உரையெழுதிய சாயனர், அவர் உரையெழுதத் தொடங்கிய காலத்திற்கு முன்பு நடந்த, ஆரிய எதிர்ப்புகளுக்கும், மதக் கொள்கைகளுக்கும் ஏற்ப எல்லாச் சமயங்களுக்கும், அனைத்து மொழிகளுக்கும், விஞ்ஞான அறிவுகளுக்கும் பிறப்பிடம் வேதமே என்று சொல்ல வேண்டுமென்று கருதி, சொற்களை மாற்றியும் செருகியும் உரையெழுதிவிட்டார். அந்த உரையை நம்பித்தான் வில்சன் போன்றோரும் ஆங்கிலத்திலும், மற்ற மொழியினரும் மொழி பெயர்த்துள்ளனர்.

வேதக்கருத்தை சைன இலக்கியங்களும், பவுத்த இலக்கியங்களும், சித்தர் பாடல்களும் வன்மையாக எதிர்க்கின்றன என்பதற்கு நமது தமிழ் இலக்கியங்களே தக்க சான்றாக உள்ளன. சைவ இலக்கியங்கள் அதற்கு எதிராக உள்ளன. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி போன்ற தமிழ் நூல்கள் ஆரியத்தை எதிர்க்கின்றன. காவிரிக் கரையில் பிறந்த சாயனர் இவற்றையெல்லாம் படித்திருப்பார். சமணர்களைக் கழுவில் ஏற்றிய நிகழ்ச்சிகளையும் அறிந்தவர் தான் சாயனாச்சாரியார்.

இவரின் உரையையும் வில்சன், கிரிஃபித்தின் ஆங்கில மொழி பெயர்ப்புக்களையும் நம்பித்தான், நானும் வேதத்தின் உண்மைப் பொருள்களை ஓரளவு புரிந்து வைத்துள்ளேன். அந்த அறிவைக் கொண்டு 1989-ல் ‘இதுதான் வேதம்' என்ற நூலையும், 1992-ல் 'அரப்பாவில் தமிழர் ஆட்சி', ‘சிந்துவெளித் தமிழகம்', 2001-ல் அரப்பாவில் தமிழர் நாகரிகம்' என்ற நூல்களையும் எழுதினேன்.

சில மாதங்களுக்கு முன்பு ‘இதுதான் வேதம்!' என்ற நூலை மீண்டும் பதிப்பிக்க வேண்டி என்னிடம் நண்பர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் அவர்கள் கேட்டார். நானும் ஒத்துக் கொண்டு, மேலும் பல சுலோகங்களைச் சேர்க்க எண்ணி ‘ரிக்கை' மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

என் உள்ளத்தில், நீண்ட நாளாக ஒரு நெருடல் இருந்து வந்தது. அது என்ன? சிந்துவெளியினருக்கு ஒரு நெறி - சமயம் - மதம் இருந்திருக்க வேண்டும் என்பதே அந்த நெருடல். ‘ஆண்குறியை வணங்குகிற அசிங்கமானவர்' என்ற வரிகள் ரிக்கில் மூன்று இடங்களில் வருகின்றன. சைவர்களும், சிந்துவெளியினர் சிவபெருமானை வணங்கியவர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இதனை முழுவதுமாக நம்புவதற்கு எனது உள்ளம் மறுத்தது. மேலும் சைவர்கள் வேதத்தை ஆதரித்ததும் சைன, பவுத்தத்தை எதிர்ப்பதும் ஏன் என்ற எண்ணமும் அடிக்கடித் தோன்றும்.

இப்படிப்பட்ட தருணத்தில் ரிக்கில் மேலும் கிடைத்த உண்மைச் செய்திகளைத் தாங்கித்தான் இந்நூல் வெளிவருகிறது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு, மிகவும் பக்கபலமாய் இருந்தது வால்மீகி ராமாயணம். என்னுடைய பார்வையில், சிந்துவெளியினரின் மிகப் பெரும்பான்மையினர் ‘சமணர்'கள்தான். அவர்களைத்தான் அந்தணர் என அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

ரிசபதேவரின் தொண்டர்களும், ‘ஆண்குறியை' வணங்கியவரும் வாழ்ந்த நாடுதான் சிந்துவெளி நாடு என்பதை விட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இமயம் முதல் குமரி வரை இருந்த தமிழகம் என்பதே பொருந்தும். அவரவர் குலதெய்வம் இவற்றுக்குள் அடங்கி விடும். இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு சிறு செய்திக்குக் கூடத் தக்க சான்றுகள் ரிக்கில் கிடைக்கின்றன.

ரிக்வேதம் நடந்த உண்மையைத் தனக்குச் சார்பாக மிகைப்படுத்திக் கூறுகிறது. ராமாயணம் அச்செய்திகளைக் கதையாகவும், சைன, பவுத்த நெறிகளுக்கு எதிராகவும், சைவ சமயத்திற்குச் சார்பாகவும் புனையப்பட்டதாக இருந்தாலும், சிந்துவெளித் தமிழர்களின் ஒரு சில உண்மையான வரலாற்றையும் உள்ளடக்கி வைத்துள்ளது. ‘எங்களுடன் வாதிடும் அந்த ஓநாய்கள் - கருத்த தோலர்கள் கொல்லப்படட்டும்' என்று ரிக்வேதம் வெறுக்கிறது. ‘அந்தத் தஸ்யுக்கள் - திருடர்கள் நம்மை ஆடுமாடுகளைக் கொன்று விருந்து வைக்காதீர்கள்' என்று தடுக்கிறார்கள் எனச் சமணரைத் திருடர்கள் என ஆரியப் பாடகர்கள் பாடுகிறார்கள்.

ஆரியர் மிகப் பெரிய இனப் படுகொலையே நடத்தியுள்ளனர் என்பதை ரிக்வேதமே பதிவு செய்து வைத்திருக்கின்றது. ‘இயல், இசை, நாடகம், போன்ற கேளிக்கை போன்றவற்றை வெறுப்பவர்கள் சமணர்களும், பவுத்தர்களும்' என்ற தவறான நச்சுக் கருத்துக்களையும் ஆரியப் பார்ப்பனர்களும் அவர்களுடைய அடிவருடிகளும் அடிக்கடி கூறி வருகின்றனர். அப்படிக் கூறுகின்ற அதே நேரத்தில் இளங்கோவடிகளின் ‘சிலம்பை' எடுத்து ஆட்டுகின்றனர். ‘அதிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு ஒலியும் வெவ்வேறான பண்களைக் குறிப்பன' என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். நாடகம் என்ற சொல் சீவக சிந்தாமணியில் அவ்வப்போது வந்து நடிக்கின்றது. சீவகன் வீணையில் விளையாடுகிறான். இவ்வாறான செய்திகளை வேண்டிய அளவுக்கு மேற்கோள் காட்ட முடியும். இந்தக் கலைகளும் சிந்துவெளியினருக்குத் தெரியும்.

‘இந்திரா, கருப்பர்களின் கலைக்கூடத்தை அனலாக்கு' என, ‘அனல்' என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்திய ரிக்வேதப் பாடல்கள் பலவுள்ளன. சிந்துவெளி ஆய்வில் வெளிவந்த, ‘நடனமாடும் பெண்' சிலையாக நம்முன் வந்து நிற்கிறாள். அதனைக் காணும் நாமும் சிலைபோல் நம்மை மறந்து நிற்கின்றோம்.

சமண வணிகர்களின் முத்திரையான ‘எருதும்', ‘ஓம்புதல்' என்ற பொருள் தரக்கூடிய குறியீடு - முத்திரையாகிய ‘ஸ்வஸ்திகம்' அருகர் சிலை போன்றவை சிந்துவெளி அகழ்வு ஆய்வில் கிடைத்துள்ளன. விரிவான செய்தி நூலினுள் வருகிறது. அதே தருணத்தில் அரப்பன் நகர் புதையுண்ட இடத்தில் கல்லாலான ‘ஆண் குறி'களும் கிடைக்கின்றன. அணைக்கட்டு ஒன்றை ஆரியர்கள் பார்க்கும்போது, - அது அவர்களுக்கு குட்டை போல் தோன்றுகிறது. குட்டையை ஆரியம் ‘சரசு' என்று செல்லமாகக் குறிப்பிடுகிறது. அதன்படி அந்த நீர்த்தேக்கத்தைப் பார்த்த ஆரியப்பாடகர், ‘சரசுவதியே! உனது பெருத்த உடம்பிலுள்ள முலைக்காம்பைச் சப்ப விரும்புகிறோம். எங்களைச் சப்ப விடு' என்று கவிஞர்களுக்கே உரிய கவி நயத்தோடு பாடிய பாடல்களும் நிறைந்தவைதான் வேதங்கள்.

அணையின் மதகைத்தான் முலைக்காம்பு எனப் பாடுகிறார் பாடகர். சரசுவதியைச் சப்பியே வறண்டுவிடச் செய்தவர்கள், அந்தச் சரசுவதி தற்போது மறைந்து விட்டது என்று ஆரியர்களாகிய அவர்களே கூறுகிறார்கள். ‘அங்குள்ள கலைகள் எங்களுக்கு உரியது என்று' நாம் சிறிது விழித்துக் கொண்டவுடன் கதை விடுகிறார்கள். நமது காதில் பூச்சுற்றுகிறார்கள்.

ஆரியர்கள் சரசுவதியை மட்டிலும் சப்பவில்லை, சிந்துவெளித் தமிழர்களுடைய கலைகளை (இலக்கியம், கட்டடக்கலை, மருத்துவம், வானிலை ஆய்வு போன்றவைகள்)யும் சப்பி உறிஞ்சிவிட்டார்கள் உஞ்ச விருத்திகள். தமிழர்களுடைய ஆயுதக் கலையை மட்டிலும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை. சிந்துவெளிக் கலைகளைக் கற்றுத் தேர்ந்த ஆரியர்கள் இமயம் தொடங்கி, குமரி வரையில் தங்களுடைய மனுதர்மத்திற்கு அடிமையாக்கியதோடு, தமிழ்மொழி பேசியவர்களை, அந்த மொழியையும் சிதைத்து வேற்றுமொழிக்காரர்கள் என்று மிச்சமுள்ள தமிழர்களையும் நம்ப வைத்ததுடன், வெறுக்கவும் செய்துவிட்டனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com