Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்ட் 2006

தீவிரவாதமும் தடைச்சட்டமும்

இளவேனில்

தீவிரவாதம் ஒரு கோழைத் தனமான காரியம்!

எந்தப் பிரச்னைக்கும் வன்முறை மூலம் தீர்வுகாண முடியாது!

நாகரிக சமுதாயத்தில் பேச்சு வார்த்தை மூலமே தீர்வு எட்டப்பட வேண்டும்!

தீவிரவாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்!

தீவிரவாதிகளின் தாக்கு தல் நடக்கும்போதெல்லாம் இம்மாதிரி `அமைதி வழித் தீர்வு’ குறித்து ஆளும் தரப்பிலிருந்து பல குரல்கள் எழுவதுண்டு.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கும்போது `இந்த இளைஞர்கள்’ ஏன் முரட்டுத்தனமாக மோதி அனாதைகளைப் போல் சாகிறார்கள்? என்று அமைதியை விரும்பும் மக்கள் யோசிக்கும் வேளையில் -
தீவிரவாதத்தை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவை!

பொடாவை ரத்து செய்தது தவறு!

`பொடா’ சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர வேண்டும்!

என்றும் சமாதானப் பிரியர்களிடமிருந்து உரத்தக் குரல்கள் எழும்.

யோசித்துப் பார்த்தால் உலக அளவில் எங்கேயும் பேச்சு வார்த்தைகள் மூலம் பரிகாரம் கிடைத்ததில்லை.
அதுபோலவே `பொடா’ போன்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களாலும் தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியவில்லை.

இணங்கிப் போகமுடியாத பகையுணர்ச்சியின் வெளிப்படையான அடையாளச் சின்னம்தான் அரசு எந்திரம்.
அரசு என்பதே ஒரு பலாத்கார நிறுவனம்தான்.

சட்டங்கள், நவீனரகத் துப்பாக்கிகள், தூக்கு மரங்கள், சிறைகள், காவலர்கள், தரையிலே, கடலிலே, வான்வெளியிலே எங்கிருந்தும் தாக்கும் ராணுவ வீரர்கள் என்று இத்தனை பரிவாரங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் ஓர் அரசு ஏதுமற்ற எளிய மக்களிடம் உண்மையோடும் பரிவோடும் பேசும் என்பதை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு கூட நம்பாது.

மூல ஆரம்பத்தில் எளிய மனிதர்களின் தீனக் குரல்களை, உணர்வுகளை ஓர் அரசு மூர்க்கமான முறையில் புறந்தள்ளியதின் எதிர் விளைவுதான் தீவிரவாதம்.

வளர்ந்துவிட்ட இந்தத் தீவிரவாதத்தைக் கடுமையான சட்டத்தின் மூலம் அடக்கிவிட முடியுமா?

முடியும் என்றால்
என்.எஸ்.ஏ.,
மிசா
தடா
பொடா

என்று ஒன்றன்பின் ஒன்றாகக் கடுமையான சட்டங்கள் பிறப்பது ஏன்?

ஒவ்வொரு சட்டத்துக்குப் பிறகும் தீவிரவாதம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறது.

கடுமையான சட்டங்கள் திறமையான குற்றவாளிகளையே உருவாக்குகின்றன.

சாவுக்கு அஞ்சாதவனே தீவிரவாதியாய்க் களமிறங்குகிறான். எதிரியால் கொல்லப்படுவதற்குமுன், என்னை நானே அழித்துக் கொள்வேன் என்று, கழுத்திலே சயனைட் குப்பியையும், வயிற்றிலே வெடிகுண்டுகளையும்,
கட்டிக் கொண்டு திரிகிற தீவிரவாதியைக் கடுமையான சட்டங்களாலும், நவீனரகத் துப்பாக்கிகளாலும் அடக்கி விட முடியுமா?

தீவிரவாதிக்கு முன் சட்டம் தோற்றுவிடுகிறது. சட்டத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அரசாங்கம், தன் அரசியல் பங்காளிகளைப் பழிவாங்கவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஏவி விடுகிறது.

தீவிரவாதி ஏளனமாய்ச் சிரித்துக் கொள்கிறான்:

``வேட்டைக்காரர்கள் வேட்டைக்காரர்களாலேயே வேட்டையாடப்படுகிறார்கள்!’’

தீவிரவாதம் தவறா?

இல்லை!

தன் கருத்துக்களின் மீது ஒருவன் பற்றும் உறுதியும் கொள்வது தவறில்லை.

தனது கருத்துக்கள் நியாயமானவை என்றும்; செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்கிற பேரார்வமும் ஒருவனைப் போராளியாக மாற்றுகிறது.

ஆனால், எவ்வளவு உயர்ந்த கருத்தாக இருந்தாலும் அது மக்களைப் பற்ற வேண்டும். கருத்துக்கள் மக்களைப் பற்றும்போது அது பௌதீக சக்தியாக மாறுகிறது.

மக்களின் எழுச்சியே தனது கருத்துக்களுக்கு அங்கீகாரம் என்பதைத் தீவிரவாதி அலட்சியம் செய்கிறான்.
ஆர்வக் கிளர்ச்சி அவனைக் காத்திருக்க விடாமல் துரத்துகிறது.

வேகம் விவேகத்தை இழக்கிறது. மக்கள் வெறும் மந்தைகள். வரலாற்றைச் சில தனி நபர்களே தீர்மானிக்கிறார்கள்.

இப்போது நமக்குத் தேவை ஆயுதங்களே என்று அவசர முடிவெடுக்கிறான்.

மெல்ல மெல்ல மக்களிடமிருந்து விலகிச் செல்கிறான்.

முதலில் தனக்குத் தெரிந்த ஒரு கொடுமைக்காரனைத் தீர்த்துக் கட்டுகிறான்.

முதல் `வெற்றி’ அவனுக்கு உற்சாகம் தருகிறது.

தன்னைப்போலவே கொடுமைக்கு ஆளான மக்களும் கிளர்ந்தெழுந்து அநீதியையும் அக்கிரமங்களையும் எதிர்த்துப் போராட வேண்டாமா?

எதுவும் நடக்கவில்லையே!

பாமரத்தனமான மக்கள்; பயந்து நடுங்கும் அற்பர்கள்!

அடக்குமுறைகளாலும் ஆயுதங்களாலும் அரசு தன்னை அழிக்கத் துடிக்கிறதென்றால்,

இந்த எளிய மக்களோ, தனது `உயர்ந்த’ நோக்கங்களைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத மடையர்களாய் அசமந்தத்தில் உறைந்து கிடக்கிறார்கள்.

``அரசின் அடக்குமுறை மாத்திரமல்ல, மக்களின் பாமரத்தனமும் `புரட்சிக் காரனுக்கு’ எதிரானதே!’’
அடக்குமுறைக்கும் பாமரத்தனத்துக்கும் எதிராகப் போராடாமல் இலட்சியம் நிறைவெய்தாது.
திசையெங்கும் பகைவர் கூட்டம்.

கொத்திச் செல்லக் காத்திருக்கிறான் போலீஸ்காரன்.

காட்டிக் கொடுக்கத் தயாராகிறான் கூடப்படித்தவன்.

சொந்தங்களே கதவைச் சாத்துகின்றன.

அருகில் நடக்கும் `தோழன்’ கூட உளவு சொல்வானோ?

யாரைத்தான் நம்புவது?

திகைத்துக் குழம்பி நம்பிக்கை இழந்து எல்லாரிடமிருந்தும் அன்னியமாகி, தனது `இலட்சியங்களே’ பாரமாய் அழுத்த, அழலாமா என்று யோசிக்கிறான் அந்த இளைஞன்!

அழுதால் ஆறுமா? அழுவதற்காகவா இத்தனை ஆவேசத்துடன் புறப்பட்டாய்? சினந்தெழு! அச்சுறுத்து; அழவை!
அழிக்காமல் ஆக்க முடியாது.

அப்புறம் என்ன? நாச வேலைகளில் ஆசை வருகிறது.

மரண ஓலங்களைக் கேட்கும்போது மனசுக்கு இதமாய் இருக்கிறது.

கொல்லப்படுகிறவர்கள் எல்லோருமே தனக்கு எதிரிகள்தாமா? நிதானமாய் யோசிப்பதற்கு நேரமில்லை.
அடுத்த தாக்குதலுக்கு ஓடுகிறான்.

ஓர் இலட்சியவாதியாய் நிமிர்ந்து எழுந்தவன் பயங்கரவாதியாய்ப் பதுங்கித் திரிகிறான்.
``பதுங்குவது பாய்ச்சலுக்குத்தான்’’ - சொடக்கு போட்டுக் கொள்கிறான்.

மாலை ஏடுகளில் பதை பதைக்கும் செய்திகள்.

``கல்லூரிகள், சிறைச் சாலைகளில் தொடர் குண்டு வெடிப்பு!’’

``500 பேர் மரணம்.’’

இரத்த வெள்ளத்தில் தலைநகர்.

சுதந்திரதின விழாவைச் சீர்குலைக்கச் சதி!

``தீவிரவாதிகள் கோழைகள், அப்பாவி மக்களைக் கொல்லும் இந்தக் கோழைத் தனமான கொலைகளுக்கு தேசம் பணிந்து விடாது!’’ தலைவர்களின் உணர்ச்சி மிகு உரைகள்.

``குண்டு துளைக்காத கூண்டுக்குள் பத்திரமாக இருந்து கொண்டு இதென்ன பேச்சு?’’ - மெலிதாய் முனகிச் செல்கிறார்கள் மக்கள்.

மக்களுக்கு அன்னியமான அரசு. மக்களிடமிருந்து விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள். இருவராலும் கைவிடப்பட்ட மக்கள். நிம்மதி இழந்த தேசம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com