Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்ட் 2006

தந்திர மோகனும் கேரளப் போலீசும்

ஆனாரூனா

சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையில் மது வாசம், மாது வாசம், கஞ்சா வாசம், கடத்தல் வாசம் வருவதாக சோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர் அறிவித்தார்.

இவ்வாறு அறிவிப்பதற்கு சோதிடமோ, உளவுத் துறையோ தேவை இல்லை. கோயில்களில் வேறு என்னதான் நடக்கமுடியும்?

உழைப்பில்லாமலேயே தின்று கொழுத்த உடம்பும், மத அங்கீகாரமும், மக்களின் மூட நம்பிக்கையும் இருக்கும் போது சாமியார்கள் `அப்படி இப்படித்தான்' இருப்பார்கள். அம்மன் சிலையையே ஆலிங்கனம் செய்த அர்ச்சகர்களும் உண்டு.

அர்ச்சகரையே அம்மணியாக வைத்திருக்கும் அறங் காவலர்களும் உண்டு.

கவுண்டமணியின் சொற்களில் சொல்வதானால், ``ஆன்மீகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!''

குரு பீடம் எவ்வளவு குரூரம் நிறைந்தது என்று சோதிடர்களும், சோதிடர்கள் எவ்வளவு மோசடிப் பேர்வழிகள் என்று குருமார்களும் நன்றே அறிவார்கள்.

ஆனாலும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை. பக்திப் பரவசம், தேவப் பிரசன்னம் எல்லாமே
`ஆன்மீகத் தொழிலுக்கு' அவசியமல்லவா!

ஆனாலும் பணிக்கர் உளறிவிட்டார்.

பணிக்கர் சொல்வது பொய். அப்படி நடந்திருக்கவே முடியாது. இது ஐயப்பன் கோயிலுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி என்று தேவசம் போர்டு முதலில் விழி சிவந்து வெடித்தது.

கன்னட நடிகை ஜெயமாலா `ஆம்; ஐயப்பனை நான் தொட்டு வணங்கினேன்' என்று ஒப்புதல் அளித்தார்.
கோயில் நிர்வாகம் வசூல் போய்விடுமோ என்று கலங்கித் தவிக்கையில் பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி வெளியாகிறது.

சபரிமலையின் தலைமைத் தந்திரி கண்டரரு மோகனரு விபச்சார விடுதிக்கு அடிக்கடி சென்று உல்லாசமாய் இருந்து வருகிறார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறது. கோயில் நிர்வாகம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறது.

ஆனாலும் கோயிலின் புனிதத்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று தன் செல்வாக்கைப் பயன் படுத்துகிறது.

தந்திரி மோகனரு, தன் வீட்டுக்கு முன் பந்தல் போடுவதற்கு வேலையாள் தேடி அழகிகள் வாழும் சோபாவின் வீட்டுக்குப் போனதாகவும், அங்கே சிலர் தன்னை கட்டாயப்படுத்தி நிர்வாணமாகப் பெண்களுடன் இருப்பது போல் படம் பிடித்தார்கள்.

பிறகு ரூபாய் ஒரு கோடிகேட்டு மிரட்டினார்கள் என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியும், காவல்துறையில் புகாரும் கொடுக்கிறார்.

தந்திரி நன்றாகவே பந்தல் போடுகிறார்.

சோபாவும் அவருடன் வேறு இரு பெண்களும் கைது செய்யப்படுகிறார்கள்.

தந்திரி மோகனரு ஒரு காமக்குரூரன், பல விலை மாதருடன் தொடர்புடையவன் என்பது மறைக்கப்பட்டு, அப்பாவியான ஒரு தந்திரியை பணத்துக்கு ஆசைப்பட்ட ஒரு பெண், அவரை ஆபாசப் படம் எடுத்து `பிளாக் மெயில்' செய்ததாக வழக்கு திசை மாறுகிறது.

பல இரவுகளில் என் வீட்டுக்கு வந்து புதிய புதிய பெண்களை தனக்குத் தரவேண்டும் என்று தந்திரி மோகனரு என்னை மிரட்டுகிறார்.

இந்தத் தொழில் செய்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். மறுத்தால் என் செல்வாக்கைப் பயன்படுத்தி உன்னை நாசம் செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துகிறார்.

இந்தக் கடவுள் பக்தனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று நான் புகார் கொடுத்தால் அதைக் காவல்துறை வாங்க மறுக்கிறது என்று சோபா சொன்னால் அது பொய்யாகி விடுமா?

தந்திரி யோக்கியர்; சோபா குற்றவாளி என்கிற மாதிரியே ஜோடனைகள் நடப்பது ஏன்? பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமைத் தந்திரி மோகனரு புனிதமானவரா?

மோகனரு தலைமைத் தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதே, இந்த நபர், தவறு செய்யக் கூடியவர்தான் எவ்வளவு முயன்றாலும் அதை மறைக்க முடியாது என்கிற தவிர்க்க முடியாத நிலையில்தானே! கோயில் நிர்வாகமே கைவிடத் தயாராக இருக்கும் ஒருவரை காவல் துறை காப்பாற்ற நினைப்பது ஏன்?

தந்திரி மோகனரு குறித்து ஐயப்பனின் வம்சத்தினரான பந்தள ராஜா குடும்பத்தின் இன்றைய வாரிசான ராமவர்ம ராஜா தரும் தகவல்களும் அதிர்ச்சியூட்டுகின்றன.

ஐயப்பனுக்கு ஆராதனை செய்வதற்காக எங்கள் பந்தள ராஜா குடும்பத்தினர் ஆந்திர நாட்டிலிருந்து சில தந்திரிகளை அழைத்து வந்தார்கள்.

இவ்வளவு காலமாக பெரிய அளவில் புகார் எதுவும் இல்லை. இன்றோ நடப்பதெல்லாம் அசிங்கம். சொல்லக் கூசும் காரியங்கள்! என்று புழுங்குகிறார் ராம வர்மா.

மகேஷ்வரருவின் மகன் தான் இந்த மோகனரு. இவர் சிறுவயது முதலே ஒழுக்கக் கேடானவர் என்று எனக்குத் தெரிந்ததால் இவரைத் தலைமைத் தந்திரியாக நியமிக்கக் கூடாது என்று நான் சொன்னேன்.

யாரும் கேட்கவில்லை. இதனால்தான் எல்லாவிதத் தவறுகளும், குற்றங்களும், ஆசாரக்கேடுகளும் நடக்கின்றன. ஆசார சீலர்கள் என்று நம்பப்படுகிறவர்களே அயோக்கியத்தனம் செய்யும்போது பாவம் பக்தர்கள்!

ஐயப்பன் பெயரால் ஒரு கூட்டுக் கொள்ளை நடக்கிறது.

இந்தக் கொள்ளைக் கூட்டம் எங்களை ஒரு தொந்தரவாகக் கருதுகிறது. ஐயப்பனிடமிருந்து எங்களையே பிரிக்க முயன்றார்கள். இப்போது ஐயப்பனே அவர்களைத் தண்டிக்கிறான்.

ஐயப்பன் விழாவின் போது திரு ஆபரணங்களை நாங்கள் எடுத்துவரும்போது எங்களை வரவேற்க பதினெட்டுப் படிகளின் கீழ் எங்கள் பாதங்களைக் கழுவி மரியாதை செய்வது மரபு. இது ஐயப்பனே செய்த ஏற்பாடு.

தந்திரிகள் ஐயப்பனுக்கும் அவன் சந்ததியாருக்கும் பணிவிடை செய்ய நியமிக்கப்பட்ட ஊழியர்களே.

ஆனால் இப்போது இந்த மரபை மாற்றச் சொல்கிறார்கள். காரணம் கௌரவிக்கப்பட வேண்டியவர்களாகிய நாங்கள் சத்திரியர்கள், கௌரவிக்க வேண்டியவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் சத்திரியர்களுக்குப் பணிவிடை செய்யலாமா?

மரபு, சம்பிரதாயம், ஆகமவிதி எல்லாவற்றையும் மதிக்காமல் பார்ப்பன அதிகாரத்தை நிலை நாட்டப் பார்க்கிறார்கள்.

ஆண்டவன் சன்னதியில் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாதவராவது. அடுக்குமா? தர்மத்தைக் கொன்றவர்கள் இப்போது தவிக்கிறார்கள்.

-இது ராமவர்ம ராஜாவின் குற்றச்சாற்று.

ராஜாவின் விளக்கத்தினைக் கூர்ந்து கவனித்தால், ஐயப்பன் கருவறைக்குள்ளேயே தந்திரி மோகனரு பல பெண்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்று புரிகிறது.

இவ்வளவுக்குப் பிறகும், நடிகை ஜெயமாலாவைக் கைது செய்வோம்; சோபாவைக் குற்றக் கூண்டில் ஏற்று வோம் என்று காவல்துறை கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது ஏன்?

இந்தக் குற்றங்களில் கேரள காவல்துறையும் சம்பந்தப் பட்டிருக்கிறதோ? ஐயப்ப பக்தர்களே சந்தேகிக்கிறார்கள்!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com