Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்ட் 2006

ஓர் உளவாளி - சில பேரங்கள்

ஆனாரூனா

பெருமைக்கு ஓர் அறைகூவல் (A Call to Honour) என்கிற பெயரில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் புத்தகம் ஒன்று எழுதுகிறார்.

அதில், நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, அவரது அலுவலகத்தில் மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க உளவாளியாகச் செயல்பட்டார். அவர் மூலம் இந்திய அணு ரகசியங்கள் அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்பட்டன என்று ஒரு மாமக் கதையை வெளியிடுகிறார்.

“அந்த உளவாளி யார்? அவர் பெயரென்ன?'' - செய்தியாளர்களும் காங்கிரஸ்காரர்களும் கேட்கிறார்கள்.

“அதைப் பிரதமரிடம் தான் சொல்வேன்!''

“ஜஸ்வந்த் சிங்கிற்குத் துணிவிருந்தால், நேர்மையுணர்ச்சி இருந்தால் அந்த உளவாளி யார் என்று சொல்லட்டும்!'' மன்மோகனும் கேட்கிறார்.

“பிரதமர் நேரம் ஒதுக்கித் தந்தால் எல்லா ஆவணங்களையும் அவரிடம் கொடுப்பேன்!'' என்கிறார் ஜஸ்வந்த், அவ்வாறே, பிரதமருக்கு சில காகிதங்களை அனுப்பி வைக்கிறார்.

“ஜஸ்வந்த் சிங் அனுப்பிய ஆவணங்கள் போலியானவை. அவர் ஆதாரம் காட்டும் கடிதத்தில் பெயர் கூட இல்லை!''

“பிரதமரை நேரில் சந்தித்தால் சொல்வேன்!''

“அணு ரகசியம் பற்றிய முக்கியமான பிரச்னையில் தொடர்புடைய உளவாளி குறித்து என்னிடம் ரகசிய மாக ஏன் சொல்ல வேண்டும்?
அருகிலுள்ள காவல் நிலையத்திலேயே சொல்லலாம்!''

செய்தியாளர்கள் ஜஸ் வந்த்திடம் மறுபடியும் கேட்கிறார்கள்: “அந்த உளவாளியின் பெயர் என்ன?''

“மறந்துவிட்டது. பிரதமர் முயன்றால் கண்டுபிடித்து விடலாமே!''

பரபரப்பான ஒரு மர்மக் கதை சுவாரஸ்யமான வசனங்களுடன் விறுவிறுப்பாகத் தொடர்கிறது.

ஆனால் மிக முக்கியத்துவமான ஒரு பிரச்னையை இரு சிங்குகளும் மலிவான தந்திரங்களுடன் மூடி மறைக்கவே விரும்புகிறார்கள் என்பதை சிந்திக்க முடிகிற எவராலும் புரிந்து கொள்ள முடியும்.

உளவாளி பற்றி ஜஸ்வந்த் சிங் முன்பின் யோசிக்காமல் உளறிவிட்டதாக அவரே இப்போது திகைத்து நிற்கிறார். அதனால் பெயர் சொல்ல விரும்பவில்லை!

நரசிம்மராவ் காலத்திலிருந்து பிரதமர்களே உளவாளிகள் மாதிரித்தான். இதில் தனியாக உளவாளி வேண்டுமாக்கும்.

பிரதமரே உளவாளியைக் கண்டுபிடிக்கட்டும் என்று இந்த ஆள் என்ன நம்மையும் வம்பில் மாட்டிவிடுகிறாரே என்று மன்மோகனும் மலைத்து நிற்கிறார். உளவாளி யார் என்று தெரிந்து கொள்ள அவரும் ஆர்வம் காட்டவில்லை.

ஜஸ்வந்த் சிங் எழுப்பியிருக்கும் பிரச்னை அற்பமான ஒன்றல்ல. இந்தியாவைப் பல வழிகளிலும் பாதிக்கும் ஆபத்தான பிரச்னை. இதில் என்ன இத்தனை அலட்சியம்?

நரசிம்மராவ் ஆட்சியின் போது பிரதமர் அலுவலகத்தில் அமெரிக்க உளவாளியாக ஒருவர் செயல்பட்டார் என்று தெரிந்திருந்தும் அதை இத்தனை ஆண்டுகளாக ஜஸ்வந்த்சிங் மறைத்தது ஏன்?

நரசிம்மராவ் பதவி முடிந்து வாஜ்பேயி பிரதமரானார். அப்போது ஜஸ் வந்த் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போதும் அந்த உளவாளி ரகசியத்தை மூடி மறைத்தது ஏன்? எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

அந்த உளவாளி பா.ஜ.க வுக்கு - ஜஸ்வந்த்சிங்குக்கு மிக நெருக்கமானவர். அந்த உளவாளி மூலம் ஜஸ்வந்த் பல ஆதாயங்களைப் பெற்று வந்தார்.

அதனால்தான் உளவாளியைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறார் என்று சந்தேகம் எழுந்தால் அது தவறா?

உளவாளி பற்றி ஜஸ்வந்த் சிங் பிரச்னை எழுப்பியதும் மன்மோகன் சிங் அரசு துடிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

ஜஸ்வந்த் சிங்கிடமிருந்து உண்மையை வரவழைக்க அவரைக் கைது செய்தேனும், போலீஸ் காவலில் எடுத்து `காவல்துறை பாணியில்' விசாரணை நடத்தியேனும் மறைக்கப்பட்ட ரகசியத்தைக் கண்டுபிடித்து, உளவாளியையும் அவனுக்கு உதவியாகச் செயல்பட்டவர் களையும் சட்டத்துக்குமுன் நிறுத்தியிருக்க வேண்டும்.

மன்மோகன் சிங் அதைச் செய்யாதது ஏன்?

தேன் கூட்டைக் கலைத்து விட்டு ஏன் கொட்டுப்பட வேண்டும் என்று அஞ்சுகிறாரா? அல்லது எப்போதும் போல் பா.ஜ.கவைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லையா?

ஓர் உளவாளி மீது ஜஸ்வந்த் சிங் மாத்திரமல்ல, மன்மோகன் சிங்கும் மெத்தனப் போக்கைக் கடைப் பிடிப்பது பலவிதமான யூகங்களை ஏற்படுத்துகிறது.

நரசிம்மராவ் இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்றது திரைக்கதை பாணியில் அமைந்த திருப்பமும் அதிசயமும் ஆகும்.

அன்று நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன், குறிப்பாக ராஜீவ் காந்தியுடன் கருத்துவேறுபாடு கொண்டு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார் நரசிம்மராவ்.

தேர்தல் பணிகளை ராஜீவ்காந்தி விறுவிறுப்பாக முடுக்கி விடுகிறார். ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராவதை அமெரிக்கா விரும்பவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு.

இன்றைய அமெரிக்க அதிபர் புஷ் மாதிரியே அவருடைய தகப்பனார் புஷ் அதிபராக இருந்தபோதும் ஈராக் மீது போர் தொடுத்திருந்த நேரம்.

அப்போது இங்கே சந்திர சேகர் பிரதமராக இருந்தார். இந்திய நாடாளுமன்ற அவையில் ராஜீவ்காந்தி ஒரு பிரச்னையை எழுப்பினார்.

“ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததை இந்தியா ஆதரிக்கிறதா? ஆதரிக்கவில்லை என்றால் அமெரிக்கப் போர் விமானங்களுக்குப் பெட்ரோல் நிரப்பிக்கொள்ள அனுமதித்தது ஏன்?''

ராஜீவ் காந்தியின் இந்த எதிர்ப்பினால் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல் நிறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் வாஷிங்டனில் பிரதிபலிக்கிறது. தகப்பன் புஷ்ஷிடம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள்: “அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல் தருவதை ராஜீவ் காந்தி எதிர்த்து நிறுத்தி விட்டாரே...?''

“இதை அமெரிக்கா கவனத்தில் வைத்துக் கொள்ளும்!'' - இதுதான் அதிபர் புஷ்ஷின் பதில்.

அன்றைக்கே அமெரிக்கா முடிவெடுத்து விட்டது. “ராஜீவ்காந்தியை விடக் கூடாது!''

ராஜீவ்காந்தியின் அத்தியாயத்தை எங்கே முடிப்பது? தமிழகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இருந்தால் திட்டம் நிறைவேறுவது எளிதல்ல என்பதால் கலைஞர் ஆட்சி கலைக்கப்படுகிறது.

தேர்தல் பணிகள் தீவிரமடைகின்றன. திருப்பெரும் புதூர் பிரச்சாரத்துக்கு வருகிறார் ராஜீவ். (அந்தக் கூட்ட ஏற்பாடே ஒரு மர்ம நாடகமாக நீடிக்கிறது) மேடைக்குச் செல்லும் வழியிலேயே சொல்லப்படுகிறார்.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுகிறது. வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப் பினர்களில் ஒருவர், அல்லது கட்சிக்கு விருப்பமான ஒருவர்தான் பிரதமராகப் பதவி ஏற்கமுடியும், ஆனால் நடந்து முடிந்த அந்தத் தேர்தலில், போட்டியிடாமலும், அரசியலிலிருந்து ஒதுங்கியும் இருந்த நரசிம்மராவ் பிரதமராகிறார்.

அதுவரை இந்திய அரசியலுக்கு அறிமுகமே இல்லாத மன்மோகன்சிங் நிதியமைச்சராகிறார்.

இப்படியெல்லாம் நடக்க முடியுமா? பல நாடுகளில் பல ஆட்சிகளைக் கவிழ்த்தும், பொம்மை அரசுகளை உருவாக்கியும் சதிவலை பின்னுவதில் முதிர்ச்சிபெற்ற அமெரிக்கா நினைத்தால் எதுவும் நடக்கும்.

இந்தப் பின்னணியில் இந்தியப் பிரதமராகிய நரசிம்மராவ் ஆட்சியின்போது பிரதமர் அலுவலகத்தில் அமெரிக்க உளவாளி இருந்ததாக ஜஸ்வந்த் சிங் சொல்வது பொய்யாக இருக்க முடியாது.

உளவாளியின் நடவடிக்கைகளைத் தெரிந்திருந்தும் அதை ஜஸ்வந்த் சிங் மூடிமறைத்தது ஏன்?

நேரு பரம்பரை ராஜீவுடன் முடிந்து விட்டதால், காங்கிரஸ் பலவீனமடைந்துள்ள சூழல் சங்கப் பரிவாரங்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது. நரசிம்மராவ் பிரதமராக இருக்கும்போதே தனது நீண்டநாள் கனவுக்கு செயல் வடிவம் கொடுக்க நினைக்கின்றன பரிவார் அமைப்புகள். வெகுகாலமாய் இந்துமத - ஆரிய வெறியர்களுக்கு `தேசிய அவமானமாய்' நெஞ்சில் ஒரு முள்ளாய் விளங்கிய பாபர் மசூதியைத் தகர்க்கவும், பரிவார் அமைப்புகளுக்குப் பலமான தளம் அமைக்கவும் நரசிம்மராவ் காலம்தான் சரியான நேரம் என்று தீர்மானிக்கிறார்கள். பிரதமர் அலுவலகத்தில் உளவாளி இருப்பது பா.ஜ.க. வுக்குத் தெரியும் என்கிற செய்தி நரசிம்மராவுக்குத் தெரிவிக்கப்படுகிறது. கலங்கிப் போகிறார் நரசிம்மராவ்.

“நாங்கள் இந்த உளவாளி விஷயத்தை மறைத்து விடுகிறோம். உங்கள் பதவியைக் காப்பாற்றுகிறோம்.

அதற்குக் கைமாறாக நீங்கள் எங்களுக்கு (சங்கப் பரிவாரங்களுக்கு) உதவ வேண்டும்!''

“பாபர் மசூதியைத் தகர்க்கப் போகிறோம். அந்த `தேசிய அவமானத்தைத்' தகர்க்கும் போது எந்தத் தொந்தரவும் தரக்கூடாது!''

இப்படி ஓர் ஒப்பந்தத்தின் பேரில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இடிப்போருக்குப் பாதுகாப்பாக இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டது என்று மன் மோகன்சிங்கால் நிரூபிக்க முடியாதா?

இந்தத் திசையில் விசாரணை போகுமானால் அது அமெரிக்காவின் சதி வேலைகளையும் அம்பலப்படுத்தி விடுமோ?

தன்னையும் அது பாதிக்குமோ? - என்று மன்மோகன்சிங் பயப்படுகிறார்.

அதனாலேயே இந்தியாவுக்கு எதிரான - தேச விரோத - காரியத்தில் ஈடுபட்ட உளவாளி விவகாரத்தை அலட்சியப்படுத்துகிறார் என்று நட்வர்சிங் ஆதரவாளர்கள் குரல் எழுப்ப முடியாதா?

எல்லா வாய்ப்புகளும் இருந்தும் அமெரிக்க உளவும் சதியும் மிகத் திறமையாக மூடி மறைக்கப்படுகிறது.

ஜஸ்வந்த் சிங் தனது நூலில் ஒரு உளவாளியைப் பற்றித்தான் அறிவித்தார். ஆனால் அறிவிக்கப்படாத எத்தனையோ உளவாளிகள் இங்கே இருக்கிறார்கள் என்று சராசரி இந்தியன் தன் நினைவில் குறித்துக் கொள்கிறான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com