Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2008

கச்சத்தீவு: இந்திய இலங்கை ஒப்பந்தம்
ம.மு. தமிழ்ச்செல்வன்

இந்திராகாந்தியின் பங்கு:

இந்திராகாந்தி, 24-01-1966இல் இந்தியத் துணைக் கண்டத் தலைமை அமைச்சர் ஆனார். 25-06-1975இல் நெருக்கடி நிலையை அறிவித்தார். 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் 23-03-1977இல் பதவி இழந்தார். 34 மாதங்கள் மகுடம் துறந்த இராணியாய் இருந்தார். மீண்டும் எழுந்தார். 1980 தேர்தலில் நின்றார்; வென்றார். 14-01-1980இல் மீண்டும் பதவியில் அமர்ந்தார். அன்று முதல் குண்டடிப்பட்டு மரணமடைந்த 31-10-1984வரை இந்திராவே இந்திய நாட்டின் தலைமை அமைச்சராய் இருந்தார்.

29-10-1964இல் சிரிமாவோ பண்டார நாயக்கா, சிரிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் மூலம் பத்து இலட்சம் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தார். பத்து ஆண்டுகளுக்குப் பின் 26-06-1974இல், அதே பண்டார நாயக்கா, இந்தியாவுடன் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம், தமிழீழத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் பிரித்தார்! இரு நாட்டு உறவுகளை அறுத்தார்.

01-03-1968 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பி.ஆர். பகத் அவர்கள், “கச்சத் தீவு இந்தியாவுக்கு உரியதல்ல. கச்சத்தீவு ஒரு பாறைத் தீவு, அது ஒரு பொட்டல் காடு” என அறிவித்தார்.

1974ஆம் ஆண்டின் கச்சத்தீவு உடன்பாடு தமிழாக்கம்:

26சூன் 1974.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில், இரு நாடுகளுக்கிடையேயான எல்லையினையும் அதன் தொடர்பான சிக்கல்களையும், நீதியாகவும் சமமாகவும் தீர்த்துக்கொள்ள இரு தரப்பினரும் செய்து கொண்ட உடன்பாடு. இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கும் எண்ணத்துடன் சிக்கல் முழுவதையும், எல்லாக் கோணங்களிலிருந்தும் வரலாறு உட்படப் பிற ஆதாரங்களுடன் சட்ட முறைகளையும் எடுத்து நோக்கி பின்னர், இந்திய அரசும் சிங்கள அரசும் பின்வரும் உடன்பாட்டுக்கு வருகின்றன.

விதி1: சேது அணையிலிருந்து, வடக்கே பாக்கு நீரிணை வரையுள்ள வட கடலில், பின்வரும் நிலைகளில் அதில் கொடுத்துள்ள ஒழுங்குக்கு அமைய, நெடுங்கோட்டாலும் கிடைக்கோட்டாலும் சுட்டிய நிலைகளை ஒட்டிய பெரும் வட்டங்களின் இணைப்புக் கோடே, இந்திய இலங்கை எல்லைக் கோடாகும்.

விதி 2: விதி 1இல் வரையறுக்கப்பட்ட புவியியல் பெருவட்ட நிலைகளையும் இவற்றை இணைக்கும் நேர்க் கோடுகளையும் இரு அரசுகளின் நில அளவையாளர்கள் ஏற்றுக்கொண்டு ஒப்பமிட்டுள்ளனர். எனவே, இரு அரசுகளால் வரையறுக்கப்பட்ட புவியியல் தொடர்ச்சியான நேர் வரை கோட்டின் நிலைகள் உறுதிப்படுத்தப்பட்டதாகும்.

விதி 3: நீர்ப்பரப்பிலும் கடற்படுகையிலும் மேற்கூறிய நிலைகள், எங்கெங்கு உள்ளன என்பதை, இரு அரசுகளின் நில அளவையாளர்கள் ஒருங்கிணைந்து தீர்மானிப்பார்.

விதி 4: மேற்கூறியவாறு உறுதி செய்யப்பட்ட எல்லைக்கோட்டில், அந்தந்த நாடுகளின் பக்கம் உள்ள நீர்ப்பரப்பு, தீவுகளின் பரப்பு, கண்டமேடை, கடலின் அடிப்பரப்பு ஆகியவற்றை அந்தந்த நாடுகள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், இறையாண்மை செலுத்தவும் உரிமை கொண்டவை.

விதி 5: மேற்கூறிய 4ஆம் விதிக்கமைய, இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு, இது நாள்வரை வந்து போனது போல் வந்து போகவும், கச்சத் தீவை அனுபவிப்பதற்கும் முழு உரிமை உடையவர்கள் ஆவார்கள். இதற்காக, சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.

விதி 6: இந்திய இலங்கைப் படகுகளும், கப்பல்களும் கச்சத் தீவுக்குச் சென்று வர என்றும் உள்ள மரபு வழி உரிமைகள் தொடர்ந்து நீடிக்கும்.

விதி 7: இப்பகுதிக் கடலினுள் பெட்ரோலியம், இயற்கை வாயு, மற்றும் வேறு வகையான உலோகங்களும்; கடல் பூமிக்குள் மணல், கனிமம் போன்றவைகளும் கண்டுபிடிக்கப்பட்டால், அவ் வளங்கள், எல்லையின் இரு பகுதிகளிலும் இருந்தால், அவற்றை எடுப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் அவற்றின் மூலம் கிடைக்கின்ற வருவாயினைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்திய அரசும் சிங்கள அரசும் உடன்கூடி, கலந்து பேசி உடன்பாடு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகே அந்த வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை இரு நாடுகளுக்கும் உரித்தாகும்.

விதி 8: இந்த இரு நாடுகளிடையே உறுதிப்படுத்தப்பட உடன்பாடு உறுதிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். உடன்பாடு கையெழுத்தான நாளிலிருந்தே அது செயற்படுத்தப்படும்.

26-6-1974இன் உடன்பாடு விதி 5இல் “இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு விசா இல்லாமல் எப்பொழுதும்போல் சென்று வரலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் என்ன பொருள்? “இந்தியத் தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடிக்கும் தொழிலை முன்னிட்டு கச்சத் தீவு சூழ் கடலுக்குச் சென்று வரலாம். மீன் பிடிக்கும் வலைகளை அங்குக் காய வைக்கலாம்” என்பதே அதன் பொருள்.

அதே போல், இறைவழிபாடு செய்வோர் கச்சத் தீவுக்குக் கடவுச்சீட்டு இல்லாமல் எப்போதும்போல் சென்று வரலாம் என்றால் என்ன பொருள்? கச்சத் தீவிலுள்ள புனித அந்தோணியார் கோவில் விழாவினை எப்பொழுதும்போல் எழிலாக நடத்திடவும், பக்தர்கள் சென்று வணங்கிடவும் உரிமை உண்டு, என்பதே அதன் பொருள்.

இன்றென்ன காண்கின்றோம்?

23-3-1976இல் ஏற்பட்ட உடன்பாட்டிலும், மேற்படி உரிமைகள் மறுக்கப்படவில்லை. நீக்கப்படவும் இல்லை. இதுநாள் வரை, 1974ஆம் ஆண்டு உடன்பாட்டில் கண்டுள்ள இந்திய மீனவர்களின் உரிமைகள், கச்சத் தீவுக்கு வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் இவற்றிற்கு மாற்றாகவோ முரண்பாடாகவோ இலங்கையுடன், இந்தியா எவ்வித உடன்பாடும் செய்துகொள்ளவில்லை. ஆனால் நடை முறையில், சேது கடல் பாக்கு நீரிணை ஆகிய கடல் பகுதி முழுவதும் சிங்கள அரசின் கடற்படை ஆதிக்கத்துக்கு உட்பட்டே உள்ளது.

நாகப்பட்டினம் முதல் தனுஷ்கோடி வரையிலான “தமிழக நாட்டுரிமைக் கடல்” தனில், சிங்களக் கடற்படை சுதந்தரமாக உலவி வருகிறது. அக்கடலில் மீன் பிடிக்கும் தமிழின மீனவர்களைக் குருவிகளைச் சுடுவதுபோல், சிங்களப் படையினர் சுட்டுத் தள்ளுகின்றனர். இராமேசுவரம் தீவு வரை வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களையும், படகுகளையும் சிங்களப் படையினர் களவாடிச் செல்கின்றனர். இது, உடன்பாட்டுக்கு முரணானது. சிங்களவரின் ஆதிக்கம் ஏற்பட்ட நாள் முதலாய், தந்தை செல்வாவின் காலம் தொடர்ந்து இன்றுவரை, நெருக்கடி வருகின்றபோது சிங்கள அரசினர் உடன்பாட்டுக்கு வருவர். ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இடுவர். ஆனால், கையொப்பமிட்ட மை காய்வதற்குள்ளேயே உடன்பாட்டை மீறுவர். ஒப்பந்தத்தை கொளுத்துவர். இது, சிங்கள அரசுக்கு வாடிக்கை.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com