Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2008

புகைநற்கல் (ஒகேனக்கல்) பிரச்சனை: தமிழர்களை அடித்தால் திருப்பி அடிப்போம்!
முனைவர் அருகோ

ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டம் என்பது காலையில் வரைபடம் தீட்டி மாலையில் அறிவிக்கப்பட்ட திட்டமல்ல. பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில், சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோதே அந்த மாவட்ட மக்களின் கோரிக்கையாக எழுந்ததாகும். ஆனால், காங்கிரசு ஆட்சி அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக்கப்பட்டபோது அந்த மாவட்ட மக்களும் ஒக்கேனக்கல் குடிநீர்த் திட்டத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டனர்.

அதிலிருந்து ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டம் என்பது இரண்டு மாவட்ட மக்களின் கோரிக்கையாயிற்று. காரணம், தெற்கே இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைப் போலவே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களும் தமிழ்நாட்டில் வறட்சிமிகுந்த பகுதிகளாகும். இன்னும் சொல்லப் போனால், ஆழ்துளைக் கிணறுகள் மிக அதிகமுள்ள மாவட்டங்களாக தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களே திகழ்கின்றன, அதிலும் தருமபுரி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் கிடைக்கும் தண்ணீர் குடிப்பதற்கே ஒவ்வாததாகி, வேறு வழியில்லாமல் மாவட்ட மக்கள் அதையே குடிப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிப் படும் துன்பம் சொல்லுக்கடங்காததாகும். அந்நீரில் குளித்தாலே பல்வேறு நோய்கள் வருகின்றன என்னும்போது, அதையே குடித்தால் என்ன ஆகும்?

இக்கொடுமை காரணமாக இம்மாவட்டத்தில் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது 10 நாளைக்கு ஒருமுறையோ ஒக்கனேக்கலுக்குச் சென்று ஒட்டு மொத்தமாகத் துணிகளைத் துவைத்து எடுத்துக் கொண்டு, குளித்துவிட்டு வரும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. எனவே, அந்த ஒக்கனேக்கலிலிருந்து, குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மக்கள் குரல் கொடுப்பதும், அதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தது.

தமிழக அரசுக்கு அதை நிறைவேற்ற வேண்டுமென்ற அக்கறை இருந்தாலும், கருநாடக அரசாங்கத்தின் ஒத்துழைப்பும், நடுவணரசின் ஆதரவும் கிட்டாததால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் பெங்களூர் பெருநகருக்குக் காவிரியாற்றிலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்றக் கருநாடக அரசு முயன்று நடுவணரசின் ஒப்புதலை நாடியபோது, நடுவணரசு அதுபற்றித் தமிழக அரசின் நிலையைக் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பெங்களூருக்கு முன்பே ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டக் கோரிக்கை இருந்தபோதும் அதைக் கண்டுகொள்ளாத இந்திய மத்திய அரசு, தென்னிந்தியாவில் அதன் செல்லப்பிள்ளையான கருநாடக அரசு பெங்களூருக்குக் காவிரியிலிருந்து குடிநீர்த் திட்டம் என்று சொன்னவுடனேயே சுறுசுறுப்பாகச் செயலில் இறங்கியது. பெங்களூர் - ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டங்கள் பற்றி இரு மாநிலங்களும் கலந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு கருநாடக தமிழக அரசுகளை வற்புறுத்தியது.

பெங்களூர் குடிநீர்த் திட்ட நிறைவேற்றத்தின் நிமித்தம் 1998 ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசு ஒக்கனேக்கல் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, தமிழக அரசுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அப்போதும் கலைஞர் அவர்கள்தான் தமிழக முதலமைச்சராக இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அப்போதே ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால், இப்போது அதற்கு 1334 கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்களே, அதில் நான்கில் ஒரு பங்குதான் செலவாகியிருக்கும். இருந்தாலும் அப்போது 756 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், இப்போது ஒன்றுபட்ட காங்கிரசுக் கட்சியுடன் மட்டுமின்றி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ம.க. போன்ற கட்சிகளுடனும் பலமான கூட்டணி கண்டு தி.மு.க. ஆட்சியில் இருப்பதைப் போல அன்றில்லை. அப்போது காங்கிரசிலிருந்து விலகிநின்ற ஜி.கே. மூப்பனார் அவர்களின் தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரசுக் கட்சியின் கூட்டுடனேயே தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அதே நேரம் தி.மு.க.வின் தனிப்பட்ட பலம் இன்றிருப்பதைவிட அன்று அதிகமாகவே இருந்தது.

அத்துடன் சந்தன வீரப்பனாரின் தனி வன ராஜ்யம் கர்நாடகத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் கலைஞர் காலில் விழுந்து எழ வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆம், ஒட்டுமொத்தக் கன்னட இனவெறியின் இலக்கினையாகக் கன்னடர்கள் கொண்டாடும் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று தன் காலடியில் கிடத்தி வைத்திருந்தார். மத்திய - மாநில அதிரடிப் படை கள் எவ்வளவோ முயன்றும், மலைவாழ் மக்களையெல்லாம் அதன் பொருட்டுக் கொடுமைப்படுத்தியும்கூட கன்னடக் கதாநாயகனை வனராஜா வீரப்பனிடமிருந்து விடுவிக்க முடியாததால், அதற்காக அனைத்துக் கன்னடர்களுமே கலைஞரைச் சரணடைந்தனர்.

ஏனெனில், அப்போது சந்தன வீரப்பனார், ராஜ்குமாரை விடுவிக்கத் தன் சொந்த இலாப நோக்கோடு எதையும் கோரவில்லை. கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்குமுள்ள பிரச்சினைகளில் காவிரி நதிநீர் உரிமை உட்பட தமிழகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே நிபந்தனையாக விதித்தார். இன்னும் சொல்லப் போனால் இலங்கைத் தமிழர்களின் இன்னலை நீக்க இந்திய மத்திய அரசு ஏற்புடையதைச் செய்ய உறுதியளிக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்டார். அவையனைத்தும் அரசியல் அடிப்படையிலான நிபந்தனைகளாக இருந்ததனாலேயே, இன்று தில்லி மேலிடத்தைப் பயன்படுத்திக் கலைஞரைப் பணியச் செய்து விட்டதாகப் பூரித்து நிற்கும் எஸ்.எம். கிருஷ்ணா உட்பட்ட கர்நாடகத் தலைவர்கள் அத்தனை பேரும் ராஜ்குமாரை விடுவித்துத் தரும்படி கலைஞரின் காலடியில் ‘தேவுடு காத்தனர்’.

அப்போது கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தகுந்தபடி பயன்படுத்திக் கொண்டிருந்தால், கர்நாடகத்துடனான அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்திற்குச் சாதகமான தீர்வுகளைக் கண்டிருக்க முடியும். ஆனால், மாநில உரிமைகளைவிட மனிதாபிமானமே முக்கியம் என்று கருதியதால் நெடுமாறன், கொளத்தூர் மணி, நக்கீரன் கோபால் போன்றோர் அடங்கிய குழுவை வனராஜாவிடம் தூதனுப்பி, நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கச் செய்து, நற்புகழ் தேடிக் கொள்ளப்பட்டது. கேவலம் பெங்களூரில் 1991ஆம் ஆண்டு தொட்டு மூடிக் கிடக்கும் கலைஞர் தீட்டிய குறளோவியத்தின் ஆசான் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைப்பதற்குக் கூட அந்த வாய்ப்புப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.

பெருந்தன்மையால் கெட்ட பேயன் தமிழன் என்ற உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் பாடல் வரிகளுக்கு எடுத்துக்காட்டாகவே அந்த ஏற்றமிகு வாய்ப்பு கோட்டை விடப்பட்டது.

தமிழகத்தைப் பிடித்த சாபக்கேடு ஒரு கட்சியின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தை அடுத்த கட்சி ஆட்சி ஏறிட்டுப் பார்ப்பதோ, தொடங்கப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து முடிப்பதோ அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு இல்லை என்றாகி விட்டது. அறிஞர் அண்ணா ஒருவர்தான் பெருந் தலைவர் காமராசர் ஆட்சிக் காலத் திட்டங்களை - மதுவிலக்கு உட்பட மக்களுக்குப் பயனுடைய திட்டங்களை, அவர்களைத் தோற்கடித்துத் தானே ஆட்சிக்கு வந்தோம் என்று தூக்கியெறியாமல் தொடர்ந்து நிறைவேற்ற முனைந்தார்.

உள்ளபடி தி.மு.க.வின் முதலாவது ஆட்சியில் போடப்பட்ட வீராணத்திலிருந்து சென்னை நகருக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை 1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் தூக்கியெறியாமல் தொடர்ந்து நிறைவேற்றியிருப்பாரானால், காவிரியில் கருநாடகம் கைவிரிக்கும் நிலையே தோன்றியிருக்காது. ஏனெனில், குடி நீர் என்பது அன்றாடத் தேவை. பாசனத்துக்கான நீரை பார்ப்பது போல் அதை மறுக்க முடியாது. பன்னாட்டு மனச்சான்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டுமிருக்காது. இருந்தும் 1972ல் இந்திராகாந்தி பேச்சை நம்பி காவிரி வழக்கைத் திரும்பப் பெற்று, எம்.ஜி.ஆரும் அதே தவறைச் செய்ய வழி காட்டினார் கலைஞர்.

எனவேதான் அன்று இந்தியத் தலைமையமைச்சராக இருந்த இந்திராகாந்தி, கருநாடகத்தில் காங்கிரசு ஆட்சியைக் காலூன்றச் செய்ய வேண்டும் என்பதற்காக - காவிரியை அவர்களுக்கே சொந்தம் என்றாக்குவதன் மூலம் காருள்ள அளவும், கடல்நீருள்ள அளவும், இந்தப் பாருள்ள அளவும், காங்கிரசின் பாசறை தான் கருநாடகம் என்று நிலைநாட்டும் நோக்கத்துடன், காவிரியிலிருந்து சென்னைக்குக் குடிநீர் என்ற திட்டத்தைக் கை விடச் செய்து, கிருஷ்ணா நதியிலிருந்து கொண்டு வரும் தெலுங்கு கங்கை திட்டமாக மடை மாற்றி எம்.ஜி.ஆரை அதற்கு இணங்க வைத்தார். எம்.ஜி.ஆரும் ஏமாந்தார்.

கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு ஒழுங்காக வருகிறதா என்பது, அந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு(அப்படி ஒருவர் இருந்தால்)த்தான் வெளிச்சம்! உண்மையில் மழை பெய்தால் மட்டுமே அந்நீர் அக்கால்வாய் வழியாக சென்னைக்கு வருகிறது. ஆனால், ஆந்திராவின் வறண்ட இராயலசீமா பகுதிக்கே அத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதிநீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

வீராணம் திட்டத்தை முறியடித்ததைப் போலவே தமிழகத்தின் ஒகனேக்கல் திட்டத்தையும் முறியடித்து விடலாம் என்ற நோக்கிலேயே கன்னடர்கள் காயை நகர்த்துவது நன்றாகத் தெரிகிறது. ஆம்; பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒகனேக்கல் திட்டத்தை 1998ல் ஒப்புக் கொண்ட கர்நாடக அரசியல்வாதிகள் பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி முடித்துவிட்டதாலும், ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி முடிக்காததாலும், இப்போது ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, ஒகனேக்கல்லே தங்களுக்குச் சொந்தமானது என்ற புதிய போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

ஒகனேக்கல்லை மட்டுமா? ஓசூரை, தளியை என்று தமிழ்நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடுவதைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள் கன்னடர்கள். வாட்டள் நாகராஜ் என்னும் ஒரு பேட்டை ரௌடி தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு உட்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களையே கருநாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறான். தமிழர்களால் பிரதமராக்கப்பட்ட முன்னாள் கர்நாடக முதலமைச்சர் தேவகவுடா, அதற்காக தளி, ஊட்டி, கோத்தகிரி என்று கருநாடகாவிலிருந்து கன்னடர்களை உடன் அழைத்துக் கொண்டு வந்து மாநாடு நடத்துகிறார். கருநாடகத்துடன் சேர்க்க வேண்டும் என்று தீர்மானமும் போட வைக்கிறார்.

இத்தனைக்கும் அடிப்படை என்ன? கருநாடகத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்துடன் சேர்க்க நாம் கோரவில்லை என்பதுதான்; தமிழக அரசு அந்தத் திசை நோக்கிக் காயை நகர்த்தவில்லை என்பதுதான். மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட நேரத்தில், நம்முடன் இருந்த தென் கன்னடம், பெல்லாரி என்கிற இரு முழு மாவட்டங்களையும் கொள்ளே காலம் முழு வட்டத்தையும் அப்படியே கருநாடகத்துடன் சேர்க்கத் தூக்கிக் கொடுத்து விட்டோம் என்பதுதான்.

அதேவேளை அங்கு முற்றுமுழுதாகத் தமிழ்ப் பகுதிகளாக இருந்த பெங்களூர், கோலார் மாவட்டங்களையும் சாம்ராஜ்பேட்டை மற்றும் மைசூர் மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று நாம் கோரவில்லை என்பது தான். அது மட்டுமல்ல, காவிரி உற்பத்தியாகிற கன்னடம் பேசாத வெள்ளையராட்சியின்போது, மத்திய ஆட்சிப் பகுதியாக இருந்த, கூர்க் (குடகு) மொழி பேசுகிற குடகு மாவட்டத்தை நாம் நம்முடன் சேர்க்க வேண்டும் என்று கோராததுடன் கருநாடகத்துடன் இணைப்பதையும் எதிர்க்கவில்லை. அந்த மக்கள் எங்களைக் கருநாடகத்துடன் இணைக்காதீர்கள் என்று கோரி நடத்திய போராட்டங்களையும் ஆதரிக்கவில்லை என்பது தான்.

இத்தனைக்கும் கருநாடகத்தின் மக்கள் தொகையில் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டோர் 50 விழுக் காடு கூட இல்லை; 49.04 விழுக்காடு மட்டுமே. அப்படிக் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டுதான் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 84 விழுக்காடாக இரும்புக் கோட்டையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசுவோராகிய நம்மீது அவர்கள் கல்லெறிகிறார்கள்.

எருதே! எருதே! யாரைக் கடாவுகிறாய்? என்றால், அது தண்ணியும் தவிடும் போடுகிறவனை என்னுமாம் என்று, மதுரை மாவட்டத்தில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல் இன்றைய கருநாடகா ஒரு தனி மாநிலமாக வாழ்வதற்கு இன்றியமையாத பகுதிகளைத் தந்த நம்மைத்தான் அவர்கள் எந்த ஊர்? வந்துபார்! என்று மிரட்டுகிறார்கள்.

தென்மேற்கில் மலையாளிகளுடன், வடமேற்கில் மராத்தியருடன், கிழக்கில் தெலுங்கர்களுடன் எல்லைச் சிக்கலும் இன்ன பிற சிக்கல்களும் கன்னடர்களுக்கு பெரிய அளவில் இருந்தாலும் தமிழர்கள் என்றால்தான் அவர்கள் தாவிக் குதிக்கிறார்கள்; சண்டைக் கோழிகளாகச் சீறுகிறார்கள் என்றால், ஓடுகிறவனைக் கண்டால் விரட்டுகிறவனுக்கு இளக்காரம் என்பதாகவே இது உள்ளது.

அத்துடன் மொழிவழியில் தமிழகம் என்று அமைந்ததோ அன்றே தமிழக ஊர்களின் பெயர்கள் அனைத்தையும் தமிழாக மாற்றியிருக்க வேண்டும். இந்த ஒகனேக்கல்லையே எடுத்துக் கொள்வோம். அதன் பெயர் புகையெழுங்கல், புகைநற்கல், உகுநீர்க்கல் என்றெல்லாம் தமிழில் வழங்கப்பட்டிருக்கிறது. “புகை’ கன்னடத்தில் ஹொக் என்றாகும். அதனடிப்படையில்தான் ஒகனேக்கல் என்ற கன்னடப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. இடையில் புகுந்த அந்தக் கன்னடப் பெயரை மாற்றி, ஏற்கெனவே இருந்த தமிழ்ப் பெயரைச் சூட்டாததாலேயே இன்று கன்னடர்கள் அதைத் தங்கள் பகுதி என்கிறார்கள்.

உள்ளபடி மாதேசுவரன் மலை முதல் நந்தி மலை வரையிலும், பெங்களூர் முதல் தங்கவயல் வரையிலும் 17 ஆயிரம் சதுரக்கல் பரப்பளவுள்ள தமிழ் நிலம் இன்று கருநாடகத்தில் இருக்கிறது. இலங்கையில் 8,580 சதுரக்கல் பரப்பளவு கொண்ட தமிழீழத்திற்காக இன்று அங்குள்ள தமிழர்கள் உயிர் கொடுத்துப் போராடுகிறார்கள். நாமோ அது போல் இரண்டு மடங்கு தமிழ்நிலத்தைக் கருநாடகத்திடம் விட்டு விட்டு, அவர்கள் இன்றைய தமிழகத்தின் பகுதிகளையும் எல்லை தாண்டி வந்து எம்முடையது என்று உரிமை கொண்டாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்திற்கு அருகில் உள்ள ஆனால் இன்று கருநாடகத்தில் மாட்டிக் கொண்டு இருக்கும் கொள்ளேகாலம், சத்திகாலம், கோபிநத்தம், செங்கம்பாடி, சம்புருட்டு, அப்புக்காம்பட்டி, மாறுகொட்டாய், மாட்டள்ளி, மாதேசுவரன்மலை, இராமபுரம், ஒட்டர் தொட்டி, ஊக்கியம், நெல்லூர் போன்ற தமிழூர்களில் நடக்கும் தமிழர்களுக்கெதிரான கொலை, கொள்ளை, தீவைப்பு, கற்பழிப்பு போன்ற கன்னட வெறியர்களின் காட்டுவிலங்காண்டித்தனங்களைக் கூடத் தலையிட்டுத் தடுக்க வக்கற்று வெறுமனே வெம்பிப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஏதோ தமிழகத்தில் கன்னடர்களே இல்லாதது போலவும், கருநாடகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் பிழைக்கப் போனவர்கள் என்பது போலவும், தமிழகத்தில் ஒரு மாயை உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்குக் கன்னட வெறியர்கள் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் கண்டு கொள்ளக் கூடாது; கண்டு கொண்டால் கருநாடகத்தில் உள்ள தமிழர்கள் பழி வாங்கப்படுவார்கள் - பலி கொள்ளப்படுவார்கள் என்று பீதிகிளப்பப்படுகிறது.

காட்டரசன் வீரப்பன் இருந்தவரை எல்லை தாண்டி வந்து தமிழ் மண்ணுக்கு உரிமை கொண்டாடும் துணிச்சல் கன்னடர்களுக்கு ஏற்பட்டதுண்டா? அவனை முடித்தவர்கள் எல்லைப் பாதுகாப்புக்கு என்ன செய்தார்கள்? கருநாடகத் தமிழர்களைப் பாதுகாப்பற்றவர்களாகச் செய்த பரிதாபத்தைத் தவிர. எல்லையில் உள்ள தமிழூர்களில் பள்ளிகளை மூடி, பேருந்துப் போக்குவரத்தை நிறுத்தி, அவர்களை அடித்துத் துரத்திவிட்டு, அங்கெல்லாம் கன்னடர்களைக் குடியேற்றும் சதி திட்டமிட்டே நிறைவேற்றப்படுகிறதே தடுக்க என்ன வழி?

வீரப்பன் கொள்ளைக்காரன் அதனால் அவனை முடித்தோம் என்கிறார்கள். சரி; இன்றைக்கு அவன் ஆதிக்கத்தின் கீழிருந்த பகுதிகளில் உள்ள கன்னடர்கள் எல்லோரும் கொள்ளைக்காரர்களாக மாறியிருக்கிறார்களே! தமிழர்களுக்கு எதிராகக் கொடுமை செய்கிறார்களே! அதிரடிப்படை எங்கே போனது? என்ன செய்து கொண்டிருக்கிறது? கருநாடகம் இந்தியாவில் இல்லையா? கருநாடகத் தமிழர் உயிர்களையும், உரிமைகளையும் காக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இல்லையா? கருநாடகத்தில் தமிழர் களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளின் எதிரொலியாகத் தமிழகத்தில் எது நடந்தாலும் தமிழகக் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்கிறது. சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்கிறது. வழக்குத் தொடுக்கிறது. ஆனால், கருநாடகக் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதே அது எப்படி? சட்டம் ஒழுங்கு என்பது தமிழகத்திற்கு மட்டும்தானா? கருநாடகத்திற்குக் கிடையாதா?

நடுவணரசின் ஆணைகளையும், உச்சநீதி மன்றத் தீர்ப்புகளையும் உதாசீனம் செய்தும் அங்கு தலையிடாத மத்திய அரசு, தமிழகத்தில் மட்டும் இருமுறை மாநில அரசைக் கலைத்ததே அதுதான் இந்திய ஒருமைப்பாடா? ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது தான் இந்திய தேசியமா? கருநாடகத் தேர்தல் முடியும்வரை தமிழகத்தை ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளும் தில்லித் தலைமைப் பீடம், அத்தேர்தல் முடியும் வரை அங்கு எவ்விதப் போராட்டமும் கூடாது என்று கருநாடக அரசுக்குச் சொல்லி, கன்னட இனவெறிக் காடையர்களையெல்லாம் வெளியில் நடமாடவிடாமல் உள்ளே பிடித்துப் போடச் செய்யலாம் தானே? ஏன் செய்யவில்லை?

நடுவணரசுக் கூட்டணியில் தி.மு.க., பா.ம.க. போன்ற 40க்கு 40ம் வென்ற தமிழகக் கட்சிகள் இருந்தும்கூட கன்னடர்களுக்காகத் தமிழகத்தை அடங்கிப் போகச் சொல்லும் காங்கிரசுத் தலைமை, ஏன் கருநாடகம் காங்கிரசை அடக்கி வாசிக்கும்படிச் சொல்லக் கூடாது?

கலைஞரை இந்தியாவின் மூத்த தலைவர் என்று புகழ்ந்து கொண்டே அவரை எஸ்.எம். கிருஷ்ணாவிடம் வீழ்ச்சி காணுமாறு செய்வது என்ன யோக்கியத்தனம்? என்ன இந்தியத்தனம்? ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் பற்றித் தமிழகச் சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட தீர்மானத்தை இயற்றிய பிறகு, தன்னிச்சையாகக் கலைஞர், கருநாடகச் சட்டமன்றத் தேர்தல் வரைக் கிடப்பில் போடுவதாக அறிவித்தது எப்படி? அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வருமே அதற்காகவும் ஒகனேக்கல் திட்டம் ஒத்தி வைக்கப்படுமா? இது அவருடைய தனிப்பட்ட பிரச்சினையா?

கருநாடகத்தில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு வந்தால் தமிழகத்தின் ஒகனேக்கல் திட்டம் நிறைவேற கருநாடக அரசு ஒத்துழைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? யார் கொடுத்த உத்தரவாதம்?

பழைய காங்கிரஸ்
இந்திரா காங்கிரஸ்
ஜனதாதளம்
மதச்சார்பற்ற ஜனதாதளம்
காங்கிரஸ் - ஜனதாதளக் கூட்டணி
என எந்தக் கட்சி கருநாடகத்தில் ஆட்சிக்கு வந்த போதும் - முதலமைச்சர் யாரானாலும் - வீரேந்திர பாட்டீல், தேவராஜ் அர்ஸ், வீரப்ப மொய்லி, எஸ்.ஆர். பொம்மை, எச்.எம். பட்டேல், தேவகவுடா, தரம்சிங், குண்டுராவ், எஸ்.எம். கிருஷ்ணா என எவர் கருநாடக முதலமைச்சராக இருந்த போதும், தமிழகத்தினுடைய உரிமைகளை மதிக்க - தமிழகத்தோடு ஒத்துழைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்கள் முன் வந்ததுண்டா?

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் - அ.தி.மு.க. ஆட்சி நடத்தியபோது தான் என்றல்ல; காங்கிரசுக் கட்சியே ஆட்சி நடத்திய போதும், இராசகோபாலாச்சாரி, காமராசர், பக்தவச்சலம் போன்றோர் முதலமைச்சர்களாக இருந்தபோதும் கருநாடகம் தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கிலேயே நடந்து கொண்டிருக்கிறது. ஏன்? இராசகோபாலாச்சாரி வழக்கறிஞராக இருந்தபோது அவரிடம் ஜூனியராகப் பயிற்சி பெற்று, அரசியலிலும் அவரைக் குருவாகக் கொண்டு வளர்ந்து மைசூர் முதலமைச்சரான (அப்போது கருநாடகம் என்ற பெயர் சூட்டப்பட வில்லை) அனுமந்தையா, அதே இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோது (அப்போது தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படவில்லை) தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் நடந்து கொண்டுள்ளார்.

மத்திய மேலிடமும் அனுமந்தையாவுக்கே துணையாக, இராசகோபாலாச்சாரிக்கு எதிராக அதாவது கருநாடகத்திற்குச் சாதகமாகவும், தமிழகத்திற்குப் பாதகமாகவுமே நடந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இராசகோபாலாச்சாரி அன்று பிரதமராக இருந்த நேருவுக்கும் மூத்த தலைவர். இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக இருந்த இந்தியர். காந்தியாரின் சம்பந்தி. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவையே கட்டி உருட்டும் பூணூல்காரர். அப்படியிருந்தும் கருநாடகம் அவர் காலத்திலேயே தமிழகத்திற்கு எதிராகவே நின்றதென்றால், கலைஞரை மட்டும் எப்படி மதித்து நடந்து கொள்ளும் என்று அவர் நம்புகிறார் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.

கலைஞர் அவர்களே! தமிழ் உணர்வாளர்கள், தமிழ் மக்கள் உங்களை ஐந்தாவது தடவையாகவும் அரியணையில் ஏற்றி வைத்து, அழகு பார்க்கிறார்கள் என்றால், நீங்கள் போனால் முதலமைச்சர் இருக்கையில் உட்காரப் போகிறவர் ஜெயலலிதாவாக இருப்பாரே! அவர் தமிழ் என்றாலே தீவிரவாதி என்று பொடாவையும், தடாவையும் நடைமுறைப்படுத்தியவர்; அரசு ஊழியர்களைக் கூடப் பந்தாடிப் பழிவாங்கியவர்; அவர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். தமிழாய்ந்த தமிழ் மகனே தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும் என்ற பாவேந்தரின் கனவை நனவாக்குவதற்காகத் தான்.

தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் உங்களுக்கு உதவுகிற கட்டுமரமாக நான் வருவேன். தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைச் சிதறு தேங்காயாக உடைத்துப் போட்டாலும் உங்கள் உணவுக்குச் சட்டினியாக நான் வந்து உதவுவேன் என்று, 13 ஆண்டுப் பதவியில்லாத காலத்திலும் பண்ணார் தமிழில் பொன்னே போல் புகன்றீர்களே அதன் பொருட்டுத்தான் இடையில் சிலரை முதலமைச்சர் இருக்கையில் அமர வைத்திருந்தாலும், அடுத்தடுத்தும் உங்களையே அதில் அமர வைத்து அன்னைத் தமிழே அமர்ந்திருப்பதாக அண்ணாந்து பார்க்கிறார்கள் தமிழ் மக்கள்.

அப்படிப்பட்ட உங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் இழந்ததையெல்லாம் மீட்க முடியாவிட்டாலும், இருப்பதையேனும் பறிபோகாமல் காத்துக் கொடுப்பீர்கள் என்றே தமிழ்மக்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை, கருநாடகம் ஒகனேக்கல்லைக் கொத்திக் கொண்டுபோகக் கங்கணங்கட்டி நிற்கும் இந்த நேரத்தில் கனவாகி விடாமல் நனவாக்கி வைப்பீர்கள் என்று நம்புகிறோம். தள்ளி வைப்பைத் தள்ளி வைத்து ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிற்காமல் நிறைவேற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com