Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2006

உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை

- பேராசிரியர் வாசுகி பெரியார்தாசன்

தியோ: உண்மையில் நாடகம் ஒரு கருத்து வளர்ச்சியை படிப்படியாக உண்டாக்கி இறுதியில் பண்டைய கடவுள்களை - இறை தன்மையை, தெய்வங்களையும், மனிதர்களையும் ஆட்டி வைத்த விதியையும் தகர்த் தெறிந்தது. ஆனால் மீண்டும் இதிலிருந்து உலகுதழுவிய ஒரு இயற்கை விதி என்ற கருத்துக்கு வழிவகுத்தது. இந்த நிலை தத்துவ ஞானிகளால் கொண்டு வரப்பட்டது. அறிவின் வளர்ச்சி இயற்கை விளக்கங்களை ஆராயத் தொடங்கியது. மனிதன் முதலில் சாதாரண நிகழ்வுகளையும், பின்னர் வியக்கத்தக்க இயற்கை நிகழ்வுகளையும் இறுதியில் உலகு தழுவிய நிகழ்வுகளையும் ஆராயத் தொடங்கினான். சாக்ரடீசுக்கு முற்பட்ட உயர்ந்த தத்துவ ஞானிகள் வானுலகில் வாழ்ந்த தெய்வங்களை நீக்கிவிட்டு அவ்விடத்தில் தண்ணீரையும், காற்றையும், தீயையும் நிரப்பினர். சோபிஸ்டிக் சீடர்கள் மனிதர்களுக்கு எதையும் ஆராயும் அறிவாராய்ச்சிக் கலையைக் கற்றுக் கொடுத்து இயற்கைத் தன்மையைக் கையாண்டார்கள். இதனால் மிக விரையில் விவரம் அறிந்த பிள்ளைகள் அனைவரும் நாத்திகர்களாக மாறினார்கள். பிளேட்டோவின் காலம் வரும் பொழுது கிரேக்கத்தின் மூல மதம் உடைந்தது. பிளேட்டோ தன்னுடைய விதிகளில் கூறுகிறார்: ``மனிதர்கள் பலர் கடவுள் நம்பிக்கை இழந்ததிலிருந்தே, தெய்வப் பழ மொழிகள் காலங் கடந்து விட்டதிலிருந்தே, வழக்கு மன்றங்களில் ஏற்பும் மறுப்பும் போட்டியிடத் தொடங்கின.’’

Temple க்ளா: அமெரிக்காவில் நாங்கள் ஏறத்தாழ இந்நிலையை நெருங்கி விட்டோம். இன்னும் சில அரை குறை அறிவுடையவர்களே முன்னேற்றத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

பவுல்: நீங்கள் ஒன்றை விட்டு விட்டீர்கள் தியோடர்; ஏராண்மஸ் அழைத்தது போல் - துறவி சாக்ரடீஸ் ஒரு கடவுட் கோட்பாட்டு மதத்தை உண்டாக்கி கடவுள் மீது தனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தன்னுடைய `மன்னிப்பி’ல் (Apology) வெளிப்படுத்தினார்.

தியோ: ஆமாம்! பிளேட்டோ விடத்தில் ஒரு ஆழமான மதத் தத்துவம் இருந்தது. ஆனால் சாக்ரடீசின் கடவுள் கடவுளுக்கு எதிரான சாத்தானே. அரிஸ்டாட்டிலின் கடவுள் தற் புகழ்ச்சியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற கல் நெஞ்சுடைய கடவுள்.’ எபிசியூரசின் கடவுள்கள் மனிதனின் தேவைகளில் ஈடுபடாத மனிதனிடமிருந்து அன்னியப் பட்ட கடவுள்கள்.

ஏரி: இத்திறந்தவெளி விவாதம் நிறைவு பெறும் நேரம் நெருங்கி விட்டது.

தியோ: நான் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதை எவ்வளவு நாசுக்காகச் சொல்லி விட்டீர்கள் ஏரியல். இன்னும் ஒரு சில நிமிடங்கள் தருவீர்களா? பைரோவின் காலத்திலும், செப்டிக்சின் காலத்திலும் கிரேக்கக் கடவுள்கள் கீழ்த்தட்டு மக்களிடத்தில் தவிர மற்ற மக்களிடத்தில் அழிந்து விட்டன. அலெக்சாண்டருக்குப் பின் ஏற்பட்ட கிரேக்க இன மொழிப் பண்பாடுகள் உலோகாயதவாதமாக இருந்தன. அது எதையும் விலகியிருந்து பார்க்கவும், உண்மையில் நாட்டம் கொள்ளவும் செய்து கலையின் இன்பத்தையும், இன்பத்தை அடையும் கலையையும் கற்றுக் கொடுத்து, அழியும் உலகத்தின் அற்புதமான அழகில் இன்பம் பெறும் கலையைக் கற்றுக் கொடுத்தது. ஒரு வகையில் இது கிரேக்க வரலாற்றின் பொற்காலம் எனலாம். கற்றறிந்த வகுப்பினர் அனைவரும் தாமஸ் ஹார்டி, ஜார்ஜ் மெரிடித், ஜார்ஜ், கிளிமன்சு, அன டோல் ஃபிரான்சு ஆகிய அறிஞர்களின் அறிவு முதிர்ச்சியைப் பங்கிட்டுக் கொண்டது போலிருந்தது.

பவுல்: தத்துவ ஞானிகள் வெற்றி வாகை சூடி விட்டார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வெற்றியில் ஒன்றை மறந்துவிட்டார்கள். இறைநிலை அங்கீகாரங்கள் அற்றுப்போன நீதிக் கோட்பாடுகள் நாடுகளில் அதிகார நிலைபேற்றிற்கு அவசிய மான தன்னடக்கத்தை போதிக்குமா என்பதைப் பரிசீலிக்க அவர்கள் தவறிப் போனார்கள். இந்தச் சூழ்நிலை நம் காலத்திய உலக நிலைபோல் - அதாவது ஒழுக்கக் கேடும், தனிமனிதக் குழப்பங்களும், ஊழலும், குற்றங்களும், தற்கொலைகளும் மிகுந்த ஒரு சூழ்நிலையின் தோற்றுவாயில் முடிந்தது.

தியோ: என்றாலும் மக்களிடத்தில் மதம் ஒரு புதிய வடிவில் தோன்றியது. தோல்வியுற்ற நாடுகளின் எதிர்பார்ப்புகள் நிறைந்த வறுமையில் வாடிக்கொண்டிருந்த மக்களிடையே டெல்பி, டெலாஸ் ஆகிய இடங்களில் இருந்த தெய்வ வாய்மொழியர்களுக்கும், எலுசில் என்ற இடத்தில் நடைபெற்ற ரகசிய சமயச் சடங்குகளினாலும், அலெக்சாண்டரின் படையெடுப்பைப் பின் தொடர்ந்து கிரேக்கத்தில் உட்புகுந்த கீழைநாட்டு நம்பிக்கைகளினாலும் ஓர் ஆறுதல் ஏற்பட்டது. பண்டைய கீழுலகம், மேலுலகம், ஆவியுலகம், நரகம் போன்ற கிரேக்கப் புராண தத்துவங்களின் வெளியேற்றத்தினால் ஆர் பியசின் சமயக் கோட்பாட்டு முறைகள் செழித்தோங்கின. இழப்பு நிலைகளான இருட்டுத் தன்மைகளே அனைத்தையும் விழுங்கி விடுவதில்லை. நல்லவர்கள் சொர்க்க மயமான எலிசிய சோலைகளுக்குச் செல்லலாம். தீயவர்களும் கூட அவர்களின் சந்ததியின் பூசாரிகளின் கைகளை பணத்தினால் நிரப்புவதன் மூலம் மீட்படையலாம். பிளேட்டோ கூறுகிறார்: `கள்ளத் தீர்க்கதரிசி கள் பணக்காரர்களின் வாயிற்படிகளுக்குச் சென்று அவர்களின் பாவங்களுக்கான அல்லது அவர்களின் முன்னோர்களின் பாவங்களுக்கான பரிகாரங்களைச் செய்கிற சக்தி தமக்கு இருப்பதாக வற்புறுத்துவார்கள். இதை மந்திர ஒலிகள், பலிகள், களியாட்டங்கள், விளையாட்டுக்கள் போன்ற வற்றின் மூலம் செய்ய முடியும் என்பார்கள். மியூசியஸ், ஆர்பியஸ் போன்ற தேவதைகளால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிற வேதப் புத்தகங்களைத் தயாரிப்பாளர்கள் அவைகளின் குறிப்புப்படி சடங்குகளைச் செய்வதோடு தனிமனிதர்களை மட்டு மல்லாமல் முழுநகரங்களையே பாவங்களுக்கான பரிகாரத்திற்காகத் தங்கள் வசப்படுத்துவார்கள். இப் பணியை வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் சமமாகவே பாவிப்பார்கள். பிந்தியதை மறைபொருள் என்பார்கள். நகரத் துன்பத்திலிருந்து நம்மை விடுவிப்பதாகச் சொல்வார்கள். ஆனால் நாம் அவர்களை நிராகரித்தால் நமக்கு என்ன நடக்குமோ தெரியாது.

மனித இனத்தின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம் கடவுளுக்கு எதிராகப் புரட்சி செய்த அசுரர்களின் தீவினையே என்று ஆர்பியசின் மதம் போதித்தது. இந்த பாவத்திற்குக் கழுவாயாகவே உயிரானது சிறைக்குள் இருப்பது போன்று உடலுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடு மிக்க பக்தி முறையாலும், பொறுமையான சமயச் சடங்குகளாலும், மட்டுமே இதை வெளியே கொண்டுவர இயலும். உலகில் தங்களுக்கும் நல்லவைகள் ஏற்படும் என்ற நம்பிக்கையற்ற மக்கள் இப்புதிய சமயக் கோட்பாட்டை ஏக்கத்தோடு கவனித்தார்கள். நகரங்களில் அன்றைக்கு இருந்த பண்டைய பக்திநெறி முறைகள் அழிந்து, மக்கள் தங்கள் ஒவ்வொருவரின் முக்தியைப் பற்றியும், இப்பூவுலகின் தீமைகளிலிருந்து விடுதலை பெறுவதைப் பற்றியுமே சிந்தித்தார்கள். பூமியில் கடந்த கால தோல்விகள் நிறைந்த தோற்றங்களைக் காட்டிலும் மேலுலகம் என்பது மெய்யானதாகத் தோன்றியது. இவ்வாறு கடவுட்பற்றும் நம்பிக்கையும் மிகுந்த உலகில் கிறித்துவம் நுழைந்தது. கிரேக்கத்தின் உயிர்நாடி கீழை நாடுகளின் நம்பிக்கைகளின் நுழைவால் ஆக்கிரமிக்கப்பட்டது.

ஏரி: நன்றி தியோடர். சர் ஜேம்ஸ் மதத்தின் தோற்றத்தை விளக்கினார். நீங்கள் அதன் அழிவையும், மறு மலர்ச்சியையும் விளக்கினீர்கள். வாருங்கள்! விருந்து உட்கொண்டே தெய்வங்களின் விதியைப் பற்றி ஆராய்வோம்.

கன்பூசியசிலிருந்து கிறித்து வரை:

குங் : அருமை நண்பர் தியோடர் அவர்களே, உங்களுடைய தீர்வு எங்கள் நாட்டை பழிப்பதாக உள்ளது. கீழை நாடுகளைப் பற்றிய மேற்கத்திய கண்ணோட்டம் மிக மிக மேம் போக்கானது என்று நான் சொல்வதற்கு மன்னியுங்கள். ஆசியாவின் பரப்பளவைக் கூட நீங்கள் உணரவில்லை. ஐரோப்பாவின் மாண்பும் உயர்வும் மண் குதிர் போல பொய்மையானது; நிலையற்றது என்பதை நீங்கள் உணரவில்லை. ஆசியாக் கண்டம் உங்கள் மதங்களுக்கு மட்டு மல்லாமல் உங்கள் மொழிகளுக்கும், இனங்களுக்கும் கூட விளை நிலமாக இருந்திருக்கிறது. ஆசியா எவ்வளவு பரந்து விரிந்துள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்களானால், அதைப் பற்றி பொதுவான ஒரு கருத்து கொள்வது எவ்வளவு தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஒரு மாபெரும் கண்டத்தைப் பற்றிக் குறுகிய கண்ணோட்டத்தில் குறை சொல்ல முடியாது.

ஏரி: சபாஷ்! மேலே சொல்லுங்கள்!

குங்: மொத்தத்தில் நான்கு ஆசியாகள் இருக்கின்றன. முகமதிய ஆசியா கிழக்கிற்கு அருகில் இருக்கும் போர்க் குணம் வாய்ந்த ஆசியா. அமைதியைக் கொண்டு வருவதற்காக அல்ல கலகத்தை உண்டு பண்ண வந்த மதத்தின் இருப்பிடம், இருந்தாலும் அங்கும் கூட மனித இனத்திலும், குணத்திலும் எத்தனை ஒற்றுமை.

துருக்கியர்கள், செமிட்டிக் அராபியர்கள், யூதர்கள் (இச்சகோதரர்களும் கூட வேறுபாடு உடையவர்கள்) பார்சிகள், ஆப்கானியர்கள், காக்கசஸ்காரர்கள், ஆர்மீனியர்கள் - இப்படி எத்தனை வகையான மக்கள் அங்கு கலந்துள்ளனர்! அடுத்து ஆன்மீக ஆசியா! மிகப் பெரிய தீபகற்ப இந்தியா! அதைப்பற்றி அங்கிருந்து வந்துள்ள சித்தா நமக்கு விளக்குவார் என்று நம்புகிறேன். பிறகு சைபீரியா இருக்கிறது. மங்கோலியர்களும் ரஷ்யர்களும் கொரியர்களும் - ஜப்பானியர்களும் கூடி வாழும் ஆசியா: நிறுவப்பட்ட மதச்சட்டம் எதையும் தகர்த்தெறிந்து தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்திக் கொள்பவர்கள். பிறகு சீனா - உலகின் பழமையான ஆனால் மெருகு குறையாத நாடு. சீனா ஐந்தாயிரம் ஆண்டுகளாக இருக்கும் போது இருநூறு ஆண்டுகளாகவே நாகரிகம் பெற்றிருக்கும் அமெரிக்காவைப் பற்றி நாம் எப்படிப் பேசலாம்? மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றத்திற்கும், கிழக்கத்திய நாடுகளின் பிற்பட்ட தன்மைக்கும் உள்ள சாதாரண வித்தியாசம் எளக்கு வேடிக்கையாக இருக்கிறது. சீன வர லாற்றின் நாகரிக வளர்ச்சிக் கட்டங்களிலும், `இடை’க் காலங்களிலும் எத்தனை முறைகள் முன்னேற்றம் பற்றிய சர்ச்சை மூண்டிருக்கிறது தெரியுமா? சீனா எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுச் செயல்படுத்த முயற்சித்து சற்றுத் தளர்ந்து கொண்டிருக்கிறது. பல் வேறு சமய மரபுகளை ஆராய்ந்து பார்த்து ஒவ்வொன்றின் குறை நிறை களைப் பரிசீலித்து நெடிய ஆய்வுகள் செய்த புரோட்ட கோரஸ் எல்லாச் சமயங்களும் அவைகளின் கோட் பாடுகளும் அடிப்படையில் எந்த வேறுபாடும் அற்ற வையே என்று கண்டு அவற்றைப் பின்பற்றியது போல சீனாவும் மதக்கோட்பாடுகளில் நடந்து கொண்டது. அதுவரை நீங்கள் உழைப் பின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், பணத்தின் மீதும் எங்களின் மோகத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தீர்கள். சீனர்களாகிய நாங்கள் எங்கள் மரபுகளை மீறாமலும், ஆரவாரமில்லாத அமைதியும் உள்ளவர்களாக இருந்தோம். தத்துவ ஞானிகள் நம்புவது போல் முன்னேற்றம் என்பது ஒரு மேற்போக்கான மாற்றமானால் சீனா சரியாகத்தான் இருக்கிறது. எவையெல்லாம் நல்ல மரபுகளோ அவை யெல்லாம் அங்கு நிலைத்திருக்கின்றன. கடும் உழைப்போடு கூடிய விவசாய வாழ்க்கை, தொழில்களும், வியாபாரங்களும் நிறைந்த கவலைகள் நிறைந்த வாழ்க்கையை விட நல்ல வாழ்க்கையே. வயல்களைச் சார்ந்து வாழும் சாதாரண உழவர்களும், முன்னோர்களின் புதை விடங்களைப் பாதுகாக்கும் மத நம்பிக்கையுள்ள மக்களும் மனிதர்களால் சூழப்பட்ட இப்பூமியில் மற்ற எந்த இடத்தையும் விட அதிக மகிழ்ச்சியுடையவர் களாகவே இருக்கிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com