Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2006

ஒவ்வொரு நாளும் சிலுவையில்

கவிஞர் பல்லவன்

இயற்கை
Mariyal மனிதனுக்கு
சூட்டிய
மகுடம்தான்
தலைமுடி!

அது
மனித முகத்தை
அழகுப்படுத்திக்
கொண்டிருக்கிறது!

எத்தனை ஒப்பனைகள்
எவ்வளவு அலங்காரங்கள்
ஏராளமான பொருட்செலவுகள்
எல்லாமே கூந்தலுக்காக!

முடி கொஞ்சம்
கலைந்தால் போதும்
மனம் ஒடிந்துவிடும்
இவர்களுக்கு!

இருக்கும் இடத்தில்
இருந்தால் மட்டுமே
மரியாதை
மயிருக்கும்
மனிதர்களுக்கும்!

தலையின் இழிந்த
மயிர்போலத்
தரையில் விழுந்தே
கிடக்கிறது
முடிதிருத்தும்
தொழிலாளர்
வாழ்க்கையும்!

இவர்களின்
ஒருசாண்
வயிற்றுக்குச்
சிரசே பிரதானம்!

நம் தலையில்
கைவைத்தால்தான்
சோற்று இலையில்
கை வைக்க முடியும்
இவர்களால்!

அழகுபடுத்த
இவர்கள் மட்டும்
இல்லாமல் போனால்
காட்டுமிராண்டிகளாகவே
திரிவார்கள் மனிதர்கள்!

இதோ
வறுமை துரத்த
வாழ்க்கை விரட்ட
இந்தப் பெண் மேரி
முடிதிருத்தும்
தொழிலுக்கு
வந்துவிட்டாள்!

ஆண்கள் செய்யும்
தொழிலைப்
பெண்களும்
செய்யலாம்தான்!
பிரச்சினைகள்தாம்
அதிகம்!

கிறித்துவ தேவாலயத்தில்
முடிகாணிக்கை
செலுத்த வருபவர்கள்
இவளிடம்
முண்டியடித்துக்
கொண்டு வருவார்கள்
தலைகளைக் கொடுக்க!
குடிகாரர்கள்
கொடுக்கும்
தொல்லைகளோ
கொஞ்ச நஞ்சமல்ல!

இங்கு வரும்
மனங்கொத்தி
மனிதர்களின்
காமப் பார்வைகள்
இப்பெண்ணைக்
குத்திக் கிழிக்கும்!

சந்தேகக் கழுகுகள்
எப்போதும்
வட்டமிட்டுக்
கொண்டே இருக்கும்
இவள்
தலை மீது!
“கண்ட ஆம்பளைங்க
உடம்புல
கைவைக்கிறாளே
கூச்சமே இருக்காதா
இவளுக்கு?’’

“பொம்பளைன்னா
கூட்டம்
அதிகம் வரும்
அப்பதானே
சம்பாதிக்க முடியும்.’’

இவள்
காதுபடவே
நெருப்பு வார்த்தைகளைக்
கொட்டி நெஞ்சை
ரணமாக்குவார்கள்
சேலைகட்டிய
மாதர்கள்!

அழுகை, ஆவேசம்
ஆத்திரம்
ஆரம்பத்தில்
இவளுக்கு
வரத்தான் செய்தன!

இப்பொழுதெல்லாம்
பழகிவிட்டது!

கண்ணீரைத்
துடைத்துக் கொண்டு
தாங்கிக் கொள்கிறாள்
எல்லா
அவமானங்களையும்
அசிங்கங்களையும்
குழந்தைகளுக்காக!

கர்த்தரின் விசுவாசிகளிடம்
பறிக்கும்
கட்டணத் தொகையில்
மிகச் சொற்பக்
காசுகளே
இவளிடம் வீசி
எறிவார்கள்
குத்தகைக் கொள்ளையர்கள்!

மேரிமாதா
கண்முன்பாகவே
இந்த ஏழைப்பெண்
மேரியின் உழைப்பு
கொள்ளை
அடிக்கப் படுகிறது!

பெண்ணென்றால்
பேயும் இரங்கும்!
இந்தப்
பெண்ணுக்கு
இழைக்கப்படும்
அநீதி கண்டும்
பேசா மடந்தையாகவே
இருக்கிறாள்
அன்னை மரியாள்!

முடியைத் திருத்திக்
கொள்வதில்
அக்கறை காட்டும்
மனித சமூகம்
தனது
மனதைத் திருத்திக்
கொள்ளும் போதுதான்
பெண்களின்
கைவிலங்குகள்
ஒடியும்!
கண்ணீர்க் கதைகள்
முடியும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com