Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2006

குடியரசு வேந்தர்களில் ஒருவர்

மாக்சிம் கார்க்கி

அமெரிக்க நாட்டின் உருக்கு அரசர்களும், எண்ணெய் அரசர்களும், மற்றும் உள்ள பல அரசர்களும் எப்போதும் என் சிந்தனையைக் குழப்பிக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவ்வளவு அதிகமாகப் பணம் படைத்த அந்த மனிதர்கள், சாதாரண மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று சொன்னால் என்னால் கற்பனை பண்ணவே முடியவில்லை.

Gorky மேற்சொன்ன ஒவ்வொரு அரசருக்கும் குறைந்த பக்ஷம் மூன்று வயிறுகளும், சுமார் நூற்றைம்பது பற்களும் இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது. இப்படிப்பட்ட ஒரு கோடீஸ்வரப் பிரபு காலை ஆறு மணியிலிருந்து, நள்ளிரவு வரையிலும் இடைவிடாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார் என்று நான் கருதினேன். மேலும் அவர், மிகவும் அதிக விலையுள்ள சாப்பாட்டு வகைகளை - வாத்துகள், வான்கோழிகள், பன்றிக் குட்டிகள் முதலியவற்றின் மாமிசத்தையும், வெண்ணெய் சேர்த்த முள்ளங்கியையும், மேலும் பல வகைத் தித்திப்புப் பண்டங்களையும் - ஏராளமாகச் சாப்பிடுவார் என்றும், சாயங்காலமாகி விட்டால் அவருடைய தாடைகள் விறைப்பேறி அசைவதற்கு லாயக் கில்லாமல் போய்விடும் என்றும், அதனால் தம்மிடம் உள்ள நீக்ரோக்காரர்களை அழைத்துத் தமக்காக அந்தச் சாப்பாட்டை நன்றாக மென்று தரும்படி ஆக்ஞாபித்து, பிறகு அவற்றை அப்படியே வாங்கி விழுங்கி விடுவதுதான் அவருடைய வழக்கம் என்றும் எண்ணினேன். அதன்பின், அவர் ஒன்றுமே செய்ய முடியாமல் அலுத்துப்போய் வியர்வை கொட்டப் பெருமூச்சு விடும்போது, அவரைப் படுக்கைக்குச் சுமந்து செல்லுவார்கள் எனவும், மறுநாள் காலையில் ஆறு மணிக்கு அவர் படுக்கையை விட்டு எழுந்து இதே நித்யானுசாரத்தைக் கடும் பிரயாசையுடன் அனுஷ்டித்து வருவார் எனவும் கருதினேன்.

ஆனால் இவ்வளவு கடுமையான பிரயத்தனத்தின் பேரிலும், அவரால் தம் மூலதனத்திலிருந்து வரும் வட்டியில் பாதியைக் கூடச் சாப்பிட முடியவில்லை.

இது மிகவும் சிரமமான வாழ்க்கை அல்லவா? இதற்கு என்ன பரிகாரம் செய்வது? சாதாரண மனிதன் சாப்பிடுவதைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட இயலவில்லை என்றால், கோடீஸ்வரனாக இருந்தும் பயன் என்ன?

இந்தக் கோடீஸ்வரரைப் பற்றி மேலும் என் கற்பனைக்குத் தோன்றியதாவது:

தங்க இழைகள் பின்னிய பட்டினால் ஆனவை இவருடைய உள்-ஆடைகள்; தங்க ஆணிகள் அடித்த பூட்ஸுகளைத்தான் இவர் போட்டுக் கொள்ளுவார்; தலையில் தொப்பி வைத்துக் கொள்ளாமல், வைரமிழைத்த ஒரு அலங்கார அணியையே தரித்துக் கொள்ளுவார், இவருடைய சட்டைத்துணி மிக உயர்ந்த விலை மதிப்புடைய பட்டாகத்தான் இருக்கும்; சட்டையின் நீளம் குறைந்த பக்ஷம் ஐம்பது அடியாக இருக்கும்; அதில் தங்கத்தினால் செய்த பொத்தான்கள் 300-க்குக் குறையாமல் இருக்கும். விடுமுறை தினங்களில் இவர் ஒன்றுக்கு மேல் ஒன்றாக எட்டுச் சட்டைகளையும், ஆறு கால் சட்டைகளையும் அணிந்து கொள்ளுவார். ஆனாலும், இப்படி அணிந்து கொள்ளுவார். ஆனாலும், இப்படி அணிந்து கொள்ளுவது மிகவும் விகாரமாகவும் சங்கடமாகவும் தான் இருக்கும்... அதற்காக, இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் மற்றவர்களைப் போல உடை தரித்துக் கொண்டிருக்க முடியுமா?

இந்தக் கோடீஸ்வரரின் சட்டைப்பை என் கற்பனைக்கு எப்படித் தோன்றியது தெரியுமா? அது மிகப் பெரிய பை; பெரிய சுரங்கம் மாதிரி இருக்கும். ஒரு கோவிலையும், அரசாங்க மாளிகையையும், மற்றும் அவ்வப்போது தேவைப் படக்கூடிய பல திறப்பட்ட சரக்குகளையும் சர்வ சாதாரணமாக அதில் வைத்து விட முடியும்...

இவருடைய வயிற்றுக்குள், ஒரு கப்பல் கொள்ளும் படியான சாமான்களைப் போட்டு வைக்க முடியும்; இவை இப்படியிருந்தால், இவருடைய கால்களின் நீளத்தையும், கால் சட்டைகளின் நீளத்தையும் என்னால் கற்பனை பண்ண முடியுமா? ஆனாலும், இவர் படுத்துறங்கும் மெத்தை எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி விட்டேன். அது ஒரு மைல் சதுரத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இவர் மிகவும் உயர்ந்த ரகப் புகையிலையே போடுவார்; ஒரு நேரத்துக்கு, ஒன்று அல்லது இரண்டு பவுண்டு புகையிலை போடுவார். பொடிப் போட்டாலோ, ஒரு தடவைக்கு ஒரு பவுண்டு பொடியை ஒரே சிட்டிகையாக எடுத்துப் போட்டுவிடுவார், பணம் இருப்பது எதற்காக? செலவழிக்கத் தானே?...

இவருடைய விரல்களுக்குப் பிரமாதமான ஸ்பரிசசக்தி உண்டு; அத்துடன் அவற்றிற்கு நம்ப முடியாதவாறு ஒரு அற்புதச் சக்தியும் உண்டு. எப்படி என்றால், அவர் நினைத்த படியெல்லாம் அவருடைய விரல்கள் நீளும். உதாரணமாக, ஸைபீரியாப் பிரதேசத்தில் ஓரிடத்தில் ஒரு பணங்காய்ச்சிச் செடி முளைக்கிறது என்பதை நியூயார்க் நகரத்திலிருந்தே இவர் பார்த்து விட்டால், இவருடைய கை நீண்டு வளரத் தொடங்கி விடும். அது பேரிங் ஜலசந்தியைத் தாண்டிப் போய், ஸைபீரியாவில் முளைத்த செடியை அப்படியே பிடுங்கிக் கொள்ளும். இவ்வளவும் இவர் இருந்த இடத்திலிருந்து அசையாமலே நடந்துவிடும்.

இவ்வளவு விஷயங்களையும் கற்பனை பண்ணிப் பார்க்க முடிந்தாலும், இந்தப் பூதாகாரமான பிறவியின் தலை எப்படி இருக்கும் என்பதை மட்டும் என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. இது ஒரு ஆச்சரியந்தான். ஆனால், இவருடைய தலையில் முழுக்க முழுக்க இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் சதையும் எலும்பும், ஒரே ஒரு ஆசையினாலேயே - ஒவ்வொன்றையும் பிழிந்து தங்கத்தை எடுக்கும் ஆசையினாலேயே - இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தோன்றியது. மொத்தத்தில், கோடீஸ்வரரைப் பற்றிய என் கற்பனைச் சித்திரம் அவ்வளவாகத் தெளிவு இல்லாமல்தான் இருந்தது. எல்லாவற்றையும் காட்டிலும் ஒரே ஒரு விஷயம்தான் பிரதானமாக என் கற்பனைக்குப் புலனாகிறது. அதாவது இவருடைய கைகள் மிக நீளமானவை; இஷ்டப்படி வளையக் கூடியவை. இந்த இரண்டு கைகளும் உலகக் கோளத்தையே அணைத்துப் பிடித்துத் தூக்கி வருகின்றன; அப்புறம் இருள் மண்டிய குகை போன்ற வாய்ப்புறத்தில் கொண்டுவந்து அதை வைக்கின்றன.

உடனே வாய் உலகத்தை விழுங்குகிறது; நாம் வாழும் இந்தக் கிரக கோளத்தையே அந்த வாயானது மென்று அரைக்கிறது; ஏதோ சூடாக இருக்கும் உருளைக் கிழங்கைச் சுவைப்பது போல, நாக்கில் ஜலம் சொட்ட, இந்த உலகத்தை அது சுவைத்துக் கொண்டிருக்கிறது...

அடுத்த இதழில்.....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com