Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2006

எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான்

இளவேனில்

பயனற்ற வாதங்களால் பொழுதழிக்கும் வேலையற்றதுகளின் போக்கை `மயிர் பிளக்கும் வாதம்’ என்று மக்கள் எள்ளலாய்க் குறிப்பிடுவார்கள். உடலும் பொருளும் தேய்ந்துபோன 'மைனர்’களுக்குத்தான் இம்மாதிரியான மயிர் பிளக்கும் வாதங்கள் உற்சாகம் தரும் என்றில்லை. புலமைப் பகட்டர்களுக்கும் இதில் போதை ஏறுவதுண்டு. சித்தினி பத்தினியாக இருக்க முடியுமா? 'இலை’ வடிவம் எம்மாதிரியானது? என்கிற ஆராய்ச்சியில் மைனர்களுக்கு உற்சாகம் என்றால், பெரியார் தாடியில் எத்தனை மயிர்? திராவிட இயக்கம் என்பது விஞ்ஞான வகைப்பட்டதா? என்பன போன்ற வாதங்களில் புலமைப் பகட்டர்களுக்கு உற்சாகம். இவர்கள் `அறிவுப் பூர்வமாகவும்’ ‘ஆதாரப் பூர்வமாகவும் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? `திராவிட மாயை’யிலிருந்து தமிழர்களை விடுவித்து, தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்தெடுத்து, விடுதலை பெற்றதொரு புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்களா?

Periyar E.V.Ramasamy ஏறத்தாழ எண்பது ஆண்டுகளாக அதாவது திராவிடர் கழகம் என்றோர் அமைப்பு தோன்றிய நாள் முதலாகவே இம்மாதிரியான திராவிட இயக்க எதிர்ப்புக் குழுக்களும் விவாதங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது போலவே அப்போதும் திராவிட இயக்கத்துக்கு எதிராகத் தமிழை நிறுத்திய பலரும் இறுதியில் திராவிட இயக்கத்தின் கருணைக்கு ஏங்குகிறவர்களாகவே உயிர் விட்டார்கள்.

திராவிட இயக்கத்திலிருந்து தமிழையோ, தமிழிலிருந்து திராவிட இயக்கத்தையோ பிரிக்க முடியாது. பிரித்தால் எஞ்சுவது பூஜ்யமே என்று எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும், ஆனால் புலமைப் பகட்டு சும்மா இருக்க விடுவதில்லை. திராவிட இயக்கத்தை எதிர்ப்பதற்கு இனி மேல் புதிய ஆதாரமாக நடிகர் விஜயகாந்தின் கட்சியையும் திராவிடக் கட்சி என்று குறிப்பிடுவார்கள்.

நடிகர் ராஜேந்தர், கல்வி வர்த்தக சபைத் தலைவர் என்று அறியப்பட்ட பி.டி. குமார் என்று இன்னும் பலரும் கூட திராவிடக் கட்சிக்காரர்களாகவே பேசப்படுகிறார்கள். திராவிடக் கட்சிகளின் எண்ணிக்கை பெருகுவதால், தந்தை பெரியாரின் கருத்துக்கள் பல முனைகளில் பரவுகிறது என்று யாரும் கருதவில்லை. உண்மையில் திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களும் கூட 'திராவிட’ அடைமொழிகளுடனும் அலங்காரத்துடனுமே வருகிறார்கள். திராவிட இயக்க எதிர்ப்பாளர்களுக்கு இந்த 'திராவிடக்’ கட்சிகளும் தேவைப்படுகின்றன.

இந்தியத்தின் பெயரால், தமிழின் பெயரால், திராவிடத்தின் பெயரால், புரட்சியின் பெயரால், தலித் என்கிற பெயரால், திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்கள் புறப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பத்திரிகை நடத்த முடிந்தாலே கட்சி கட்டி விட்டதாகவும், தனது கருத்துக்களால் நாடே கிளர்ந்தெழுந்து விட்டதாகவும், 'திராவிட மாயை’ இனி எடுபடாது என்பதாகவும், பெரியாரின் இடத்தில் இனி 'உலகம்’ தன்னையே அமர்த்தப் போவதாகவும் புலமைப் பகட்டர்களுக்கு ஒரு புல்லரிப்பு.

'திராவிடம் என்ற சொல் வடவர் தந்தது. திராவிடம் என்பது தமிழரைக் குறிக்காது. திராவிடர் என்று தமிழரை அழைப்பது அவமானம். திராவிடம் என்பது தேசியம் ஆகாது' என்று நூறுவிதமான மயிர் பிளக்கும் விவாதங்கள் வெகுகாலமாய் இங்கே காதைக் கிழிக்கின்றன.

இந்த வாத - பிரதிவாதங்களுக்கு அப்பால் அரசியல் - சமூக - தத்துவ - மக்கள் பார்வையில், திராவிட இயக்கம் என்றால் பெரியார் கட்சி அல்லது பெரியார் கருத்துக்களை ஏற்கும் இயக்கம்; அவ்வளவுதான்.

பெரியார் தன் இயக்கத்துக்குத் திராவிடம் என்ற சொல்லை ஏன் தேர்ந்தெடுத்தார்? திராவிடம், திராவிடன் என்கிற சொல் திருஞான சம்பந்தனுக்கு ஒரு விதமாய்ப் புரிந்திருக்கலாம். கால்டு வெல்லின் ஆய்வில் திராவிடத்துக்குப் பிறிதொரு பொருள் விரியலாம். ஆனால், பெரியாரின் 'திராவிட’ இயக்கம் என்பது புதிய உள்ளடக்கம் கொண்டது. நிற - இன (வர்ணாஸ்ரம தர்மத்தை) வெறியை எதிர்ப்பது. பகுத்தறிவை வளர்ப்பது. தனிமனித சுயமரியாதையிலிருந்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை வரை பொதுநலம் கெடாத சுதந்திரத்தை அனுமதிப்பது. மத மூடநம்பிக்கையிலிருந்து மனித குலத்தை மீட்பது. சமூக மாறுதலை முன்னிறுத்திப் போராடுவது. விஞ்ஞான சோஷலிசத்துக்குச் சமூகத்தை அழைத்துச் செல்வது என்று பெரியாரின் ‘திராவிட’த்துக்குப் பன்முகத் தன்மை உண்டு என்றபோதிலும் பாசிச (மனுதர்ம) எதிர்ப்பு என்கிற வரலாற்றுத் தேவையே இந்த இயக்கத்தைப் படைத்தளித்ததனால் பாசிச எதிர்ப்பு (பார்ப்பனிய எதிர்ப்பு) என்கிற அம்சம் முதன்மை பெற்றது.

பாசிசம் - பார்ப்பனியம் - என்கிற சமூகக் கொடுமைக்குப் பலியான மக்களையே அதற்கெதிரான படையாக நிறுவுவது என்கிற அம்சத்தில் பெரியாரின் இயக்கம் தனித்தன்மை பெற்றது. சுயமரியாதை இயக்கமாய் அரும்பிய இந்தநிறுவனம் மார்க்சியத்தின் முகடு வரை தொட்டபோதிலும் சமதர்ம இயக்கம் என்றோ வேறு எந்தப் பெயரோ ஏற்காமல் திராவிடர் கழகம் - இயக்கம் என்று அறிவித்தது ஏன்? இம்மாதிரியான ஒரு கேள்வி 1848-இல் மார்க்ஸ் - எங்கெல்சுக்கு முன்னேயும் எழுந்தது. எந்த ஓர் இலட்சியமும் உறுதியான ஓர் அமைப்பையும் தலைமையையும் கொண்டிருக்கவில்லையென்றால் அது மனவெளிகளிலேயே அலைந்து மறையும் என்பதால் 'தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை முன்னிபந்தனையாகக் கொண்ட ஓர் அமைப்பை அவர்கள் கட்டுகிறார்கள். அதற்கான அறிக்கை ஒன்றையும் தயாரிக்கிறார்கள். அப்போது தான் அந்தப் பிரச்சினை எழுகிறது.

தங்களது அறிக்கைக்கு என்ன பெயர் சூட்டுவது?
சோஷலிஸ்ட் கட்சி அறிக்கையா?
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையா?
'அறிக்கை'க்குச் சூட்டப்பட்ட பெயரின் தேர்வு குறித்து எங்கெல்ஸ் எழுதுகிறார்:

"தற்போது சோஷலிச இலக்கியங்கள் யாவற்றிலும் 'அறிக்கை’ மிகவும் பல்கிப் பரவி, அதிக அளவுக்கு அகிலம் தழுவிய வெளியீடாக இருக்கிறது. என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானு கோடித் தொழிலாளி மக்களால் பொது வேலைத் திட்டமாய் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதிலும் அய்யப்பாட்டுக்கு இடமில்லை. ஆயினும் அது (அறிக்கை) எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோஷலிஸ்ட்டு அறிக்கை என்று பெயர் சூட்ட முடியவில்லை.

1847-இல் சோஷலிசம் மத்திய தரவர்க்க இயக்கமாய் இருந்தது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்க இயக்கமாய் இருந்தது. சோஷலிசம் 'கண்ணியவான் மனப்பாங்கு’ கொண்டதாய் இருந்தது. கம்யூனிசம் அதற்கு நேர்மாறானதாய் இருந்தது.

ஆரம்பத்திலிருந்தே எங்கள் கருத்தோட்டம் "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும்’’ என்பதாய் இருந்ததால், 'சோஷலிசம்’, 'கம்யூனிசம்’ என்கிற இவ்விரு பெயர்களில் நாங்கள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இருக்கவில்லை. அன்று முதலாய் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்கிற பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.’’

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பல மொழிகளில் வெளியிடப்பட்டபோதும் முன்னுரைகளில் இதை மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார் எங்கெல்ஸ். தமிழகத்தில் நிலவிய அரசியல் சமூகப் பின்னணியில் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், மார்க்ஸ் - எங்கெல்ஸ் எடுத்த அதே முடிவுக்குத்தான் வர முடிந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது இந்தியாவில் சோஷலிசம் என்கிற பெயர் மாத்திரமல்ல, கம்யூனிசம் என்கிற பெயரும் கூட அதிகம் படித்தவர்களின் மத்தியிலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. தோழர் ஜீவாகூட மத்தியத் தலைமைக்கு இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். பெரியாரோ சமூகத்தின் அதலபாதாளத்தில் உள்ள மக்களைப் பற்றிச் சிந்தித்ததால் அவர்களுக்கான அமைப்பு என்பது அதன் பெயரிலேயே தெரியவேண்டும் என்று விரும்பினார்.

இவை எல்லாமே இந்த இயக்கத்தின் இயல்பும் இலட்சியங்களும்தான். ஆனால் பாசிச (மனுதர்ம) எதிர்ப்பு என்கிற வரலாற்றுத் தேவையே இந்த இயக்கத்தைப் படைத்தளித்தது. அதனால் பாசிச எதிர்ப்பே இயக்கத்தின் முன்னிபந்தனையாக விதிக்கப்பட்டிருக்கிறது. பாசிசம் அதிகார முழக்கங்களோடு வந்தாலும், இதிகாச விளக்கங்களோடு வந்தாலும் திராவிட இயக்கம் அதை எதிர்த்தே நிற்கும். அடக்குமுறைகளும் மதவகைப்பட்ட போதனைகளும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை என்பதை மறந்துவிடவேண்டாம்.

இந்த இயக்கத்துக்குக் கம்யூனிஸ்ட் கட்சி என்றோ, தமிழர் கழகம் அல்லது தமிழியக்கம் என்றோ பெயரிடாமல் திராவிடர் கழகம் - திராவிட இயக்கம் என்று அறிவித்தது ஏன்?

தமிழியக்கத்தின் தமிழுணர்வோடும், நீதிக்கட்சியின் சமூக நீதியோடும் சுயமரியாதை இயக்கம் இசைந்து செல்ல முடியும். ஆனால் முரண்படும் அம்சங்களோ பல உண்டு. ஓர் அரசியல் கட்சி என்கிற முறையில் நீதிக்கட்சி 'சமூக நீதி’யுடன் நிறைவு கொண்டு விட்டது. ஆனால் பெரியாரும் அண்ணாவும் இந்த எல்லையோடு நின்று விடவில்லை. சுயமரியாதை, தேசியம், பகுத்தறிவு, சோஷலிசம் என்று பரந்த அளவில் தமது போராட்டங்களை நடத்தினார்கள். சுயமரியாதை இயக்கத்தின் தொடர்பு எங்கே கொண்டு செல்லுமோ என்று நீதிக்கட்சியினர் அஞ்சினார்கள். பெரியாரை அப்புறப்படுத்தவே எண்ணினார்கள். வரலாற்றுப் புகழ்மிக்க 'அண்ணா தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதும் 'போதும் பொது வாழ்க்கை’ என்று ஒதுங்கிக் கொண்டார்கள். நீதிக்கட்சி தனது வரலாற்றுக் கடமையை முடித்துக் கொண்டு அரங்கிலிருந்து மறைந்து போனது.

Marks தமிழியக்கம் என்பது சமயப் பற்றுள்ள புலவர் குழுவாக இருந்தது. 'பாமர மக்களின் கொச்சைத் தனத்திலிருந்து’ தமிழைத் தனிமைப்படுத்தித் தூய்மைப்படுத்த விரும்பியது. சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தது. அதன் தமிழுணர்வு இதற்கு மேல் வளர முடியாதிருந்தது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கண்டு அது கசப்புற்றது. தமிழியக்கத்திற்கும் பெரியார் இயக்கத்திற்கும் ஒரு மௌன யுத்தம் தொடர்ந்து நடந்தது. பெரியாரின் இயக்கம் ஆரிய வேதங்களையும் அநீதிகளையும் மாத்திரம் கேள்வி கேட்கவில்லை. 'தமிழ் மறை’களையும் விசாரணைக்குக் கொண்டு வந்தது.

'தமிழும் சைவமும்’ என்கிற முழக்கத்துடன் எண்ணாயிரம் தமிழறிஞர்களை - அவர்கள் புத்தர்களாகவும், சைனர்களாகவும், நாத்திகர்களாகவும் இருந்த ஒரே காரணத்துக்காகக் - கொன்று குவித்தவர்களை அறிவின் மேடையில் பெரியார் இயக்கம் விசாரணை செய்த போது பல 'தமிழறிஞர்கள்’ இங்கே மனத்துள் புழுங்கினார்கள். பொதுவில் தமிழியக்கம் பார்ப்பனர்களை அப்புறப்படுத்தி விட்டு 'அந்த இடத்தில்’ தன்னை வைத்துப் பார்த்தது. பெரியாரோ வர்ணாசிரம தர்மத்தின் அமைப்பு முறையையே மறுத்தார்.

தமிழியக்கம் 'மேலோர்’ சார்ந்த இயக்கமாய் இருந்தது. பெரியார் இயக்கமோ ஒடுக்கப்பட்டோரின் இயக்கமாய் வளர்ந்தது. தமிழியக்கத்தின் தமிழுக்குப் பின்னே 'இறையியல்’ நின்றது. பெரியார் இயக்கத்தின் தமிழுக்குப் பின்னே 'அறிவியல்’ நின்றது.

பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்த நேரத்தில் கம்யூனிசம் என்பது அதிகம் படித்தோர் இயக்கமாகவும், நீதிக்கட்சி என்பது பார்ப்பனர் அல்லாத செல்வந்தர் கட்சியாகவும், தமிழியக்கம் என்பது புலவோர் இயக்கமாகவும் இருந்தது. அதேசமயம் திராவிடர் என்றால் தீண்டப்படாதார், இழிந்தோர் என்றே அரசு ஆவணங்கள் கூறின. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அந்தப் பெயரே தங்கள் இயக்கத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. சமூகத்தின் கடைக்கோடி மக்களின் கட்சி என்று அறிவிப்பதற்காகவே திராவிடர் கழகம் என்னும் பெயரைத் தெரிவு செய்தார்கள்.

திராவிடர் கழகம், திராவிட இயக்கம் பண்பும் பயனும், சாரமும் சரித்திரமும் இதுதான். புலமைப் பகட்டர்களின் மயிர்பிளக்கும் வாதங்களுக்கும், பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி விமர்சனங்களுக்கும் அப்பால் திராவிட இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவையாய் எழுந்தது.

இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் தங்கள் ஆடைகளையே கிழித்துக் கொள்கிறார்கள். என்பதை வரலாறு உணர்த்தும். திராவிட இயக்கம் திசை திரும்பலாமா? என்று கேளுங்கள். அதன் வேகமும் போதாது என்று குறை சொல்லுங்கள். தன் வரலாற்றுக் கடமையை உணராத எந்த இயக்கமும் வீழ்ச்சியுறும் என்று எச்சரியுங்கள். ஆனால் பூமியின் முகத்தை அழகுபடுத்த நினைக்கும் யாரும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைப் புறந்தள்ளி விடமுடியாது.

திராவிட இயக்கம் என்கிற பெயரே எனக்குப் பிடிக்கவில்லை என்று முகம் சுளிக்கிறவர்களைத் திருத்தவே முடியாது. அது ஒரு மேட்டுக்குடி மனோபாவம். 'பாவங்களிலேயே’ மிக மோசமானது அது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com