Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2006

பூமி இன்னும் அழகானதாக இருப்பது ஏன்?

ஆனாரூனா

ஷியாமளி. ஒரிசாவைச் சேர்ந்த இளம்பெண். எம்.ஏ.பட்டதாரி. தந்தை சரத்சந்திரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தாய் விஜய லட்சுமி.

Asssam ஷியாமளிக்கும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இராணுவ அதிகாரி (கேப்டன்) சஞ்சய்க்கும் 2003 மே 11-இல் திருமணம் நடை பெற்றது.

8ஆவது கூர்க்கா ரைபிள் பிரிவைச் சேர்ந்த சஞ்சய் 2004 டிசம்பர் 11 இல் எல்லையில் நடந்த சண்டையில் மரணம் அடைந்தார்.

திருமணமான பதினெட்டாவது மாதத்திலேயே கணவர் மரணம் அடைந்து விட்டாரே என்று தளர்ந்து விடாமல், தானும் தன் கணவரைப் போலவே இராணுவத்தில் சேர்ந்து அவர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தார், ஷியாமளி.

சென்னை பரங்கிமலையில் உள்ள இராணுவ அதிகாரிகள் அகாதெமி நடத்திய சிறப்பு நுழைவுத் தேர்வில் பங்கேற்றுப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 வாரங்கள் கடும் பயிற்சிக்கும் பிறகு லெப்டிணன்ட் நிலையில் இராணுவ அதிகாரிகள் 2006 மார்ச் 18 சனிக்கிழமை பதவி ஏற்றார் ஷியாமளி. அன்று அவரது குழந்தைக்கு இரண்டாவது பிறந்த நாள்.

இராணுவப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஷியாமளி மிடுக்குடன் இராணுவ நடை போட்டதை அவரது மாமனார் - மாமியார் பார்த்துவிட்டு, உணர்ச்சி வயப்பட்டு கண் கலங்கினர். தங்களது மகனே மருமகளின் வடிவில் நடை போடுவதாக எண்ணி நெகிழ்ந்தனர் என்கின்றன பத்திரிகைச் செய்திகள்.

அதேபோல் இந்த ஒத்திகையைக் காண வந்திருந்த ஷியாமளியின் பெற்றோர் தங்கள் மகளின் துணிவைக் கண்டு பெருமிதம் அடைந்தனர். ஒத்திகையைப் பார்த்தவர்கள் ஷியாமளியின் மன உறுதியை வெகுவாகப் பாராட்டினர் என்றும் பத்திரிகைகள் கூறுகின்றன.

பெண்ணின் மன உறுதிக்கும், ஆணுக்கும் பெண் இளைத்தவர் அல்ல என்பதற்கும் ஷியாமளியின் இராணுவப் பதவி ஏற்பைச் சான்றாகக் கூறலாம்; பாராட்டலாம் என்றால் `திக்’ என்று நெஞ்சு வலிக்கிறதே!

ஷியாமளியைப் போலவே இப்போது இராணுவத்தில் பெண்கள் அதிகமாகவே பங்கேற்கிறார்கள். பெண்கள் இம்மாதிரி இராணுவ உடையில் ஆயுதம் தூக்குகிறவர்களாக மாறுவது உண்மையில் வரவேற்கத் தகுந்ததுதானா?

``எல்லா இடங்களிலும் தான் இருந்து அன்பும் கருணையும் செலுத்த முடியாது என்பதாலேயே கடவுள் பெண்களைப் படைத்தார்’’ என்று இத்தனை நாள் காவியங் பாங்கில் பேருரை நிகழ்த்தியதெல்லாம் பொய்தானா?

``அடப்பாவிகளே, கருணை வடிவான பெண்களையும் கூடக் கொலைக் காரர்களாக மாற்றி விட்டீர்களே!’’ என்று அந்த இராணுவ அணிவகுப்பைப் பார்த்துக் கலங்க அங்கே ஆரோக்கியமான ஒரே ஒரு மனித இதயம் கூடவா இல்லாமல் போயிருக்கும்?

உண்மையில் தன் கணவனைப் போல் தானும் இராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்காக(!) போர் செய்யவேண்டும்; எதிரி (?)களைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தது நிச்சயமாக ஆரோக்கியமான முடிவு அல்ல. கொலை செய்வது சத்திரியனின் தர்மம் என்று இதிகாசங்கள் கூறலாம். நேர்மைத் திறமுள்ள இதயம் சொல்லாது.

பாண்டவர்கள் இழந்த தங்கள் சொத்தை மீட்பதற்காகப் போரிட்டால் அது புரிகிறது. ஆனால் பாண்டவர்களுக்காகவும் துரியோதனர்களுக்காகவும் அந்தச் சொந்திலோ, சுகத்திலோ எந்தப் பங்கும் பெறாத ஆயிரக்கணக்கான சிப்பாய்களைப் போரிலே தள்ளிக் கொன்றவன் பரமாத்மாவாக இருக்க முடியுமா?

கடைசிக்கும் கடைசியில் யோசிக்கும் வேளையில், தேசம் என்பதும் தேசபக்தி என்பதும், போர் என்பதும், வீரம் என்பதும் சொத்துடன் தொடர்புடையவையே!

ஒருவன் எந்த அளவுக்குச் சொத்து வைத்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் தேச பக்தனாகவும் இருக்கிறான்.

அதிகமான சொத்து அளப்பரிய தேசபக்தியின் அடையாளம். அப்படிப்பட்ட `உயர்ந்த’ தேச பக்தர்களாலேயே `மகாத்மா’க்களையும் தேசப் பிதாக்களையும் உருவாக்க முடியும்.

``என்னை மனிதனாக்குவதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்ட இறை தூதர்களில் ஒருவர்தான் பிர்லா’’ என்று காந்தியடிகள் குறிப்பிடுவது வெறும் பேச்சல்ல.

Iraq சொத்து அதிகமாகும் போது தேசபக்தி மாத்திர மல்ல தேசத்தின் பரப்பளவும் அதிகமாக வேண்டாமா? அதனால்தான் பணக்காரர்கள் பக்கத்து நாட்டின் மீதும் ஆசை கொள்கிறார்கள்.

பணக்காரர்கள் ஆசைப்படுவது சுய நலத்துக்காக அல்ல; தேசநலனுக்காக. தேசம் பெரிதாக வேண்டாமா?

இங்கிலாந்து இந்தியா வரை கை நீட்டி அணைத்துக் கொண்டது.

பிரான்ஸ் வியத்நாம் வரை விம்மிப் புடைத்தது.

இட்லரின் ஜெர்மனி உலகையே தனது தாய் நாடாகமாற்ற முனைந்தது.

``எந்த நாடு சுதந்திரமாக இருக்கிறதோ அந்த நாடு எனது தாய்நாடு’’ என்று அமெரிக்க அதிபர் ஜெபர்சன் சொன்னது அவருடைய `சுதந்திரமான’ ஆசைகளின் கவித்துவ வரிகளே. அது பொய்யில்லை. இன்றுவரை அமெரிக்கா சுதந்திரமாயுள்ள ஒவ்வொரு நாட்டையும் தனது தாய் நாடாகவே கருதி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிக்கிறது. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது கூட அமெரிக்கக் கோடீஸ்வரர்களின் தேச பக்தியால்தான்.

ஆனால் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் ஈராக்கைவிட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

அது, ஏன்? ஏனென்றால் அவர்களுக்குத் தேசபக்தி கிடையாது. உழைத்துப் பிழைக்கும் கூட்டத்துக்குத் தேசபக்தி எப்படி இருக்க முடியும்? சொத்துதான் - அது மேலும் மேலும் கொழுக்கவேண்டும் என்பதுதான் - தேசபக்தியின் அடையாளம்; அடியாழம். இது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் புரிகிறது.

யாரோ சில கோடீஸ்வரர்களின் சொத்தைப் பெருக்குவதற்காக எங்கள் பேரப் பிள்ளைகளை அந்தப் பாலைவனத்திலே போரிட்டுச் சாவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். புஷ்ஷே, அமெரிக்கப் பிசாசுகளே உங்கள் பேராசைக்குப் பலியான எங்கள் குழந்தைகளைத் திரும்பத் தருவீர்களா? என்று வெள்ளை மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரக் கணக்கான மக்களின் குரல் `தேசபக்தி’க்கு முன்னால் எடுபடவே இல்லை.

இந்த அப்பாவிகளுக்குச் சில அடிப்படை நியாயங்கள் புரிவதில்லை. செல்வம் பெருகப் பெருக தேச பக்தியும் கூடுகிறது. தேச பக்தி பெருகப் பெருக அவன் புனிதனாகவே பொலிவு பெறுகிறான். கீழ்த்தரமான உணர்வுக்கோ காரியத்துக்கோ அவன் இறங்குவதில்லை.

பல கொலைவழக்குகளில் - உதாரணமாக, கீழ்வெண் மணியில் 45 விவசாயக் கூலிகள் உயிரோடு கொளுத்தப் பட்ட வழக்கில் - குற்றம் சாற்றப்பட்ட நிலப்பிரபு பெரும் செல்வந்தர். அப்படிப்பட்ட ஒரு மனிதர் இம்மாதிரிக் கீழ்த்தரமான காரியம் செய்வாரென்று இந்த நீதிமன்றம் நம்பவில்லை என்றுதான் தீர்ப்பெழுதப்பட்டது.

பணக்காரர்களுக்குக் கொள்ளையடிக்கவோ, கொலைசெய்யவோ நேரமில்லை. வாழ்க்கையில் அவர்கள் அனுபவிப்பதற்கு எவ்வளவோ சுகானுபவங்கள் இருக்கின்றன. அதுவும் இல்லாமல் அவர்களுடைய உடலும் உள்ளமும் முரட்டுத்தனமான வேலைகளில் அல்லது போர் போன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்து வராது. அதனால்தான் பணக்காரர்கள் அடியாட்களையும் ரௌடிகளையும் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பணக்காரனும் தனித்தனியே ரௌடிகளை வைத்துக் கொள்வது, சொத்துக்கே, அதாவது தேசத்துக்கே ஆபத்தாகி விடக் கூடும் என்பதால்தான் அரசாங்கம், போலீஸ் இராணுவம் என்கிற பெயரில் அரசாங்க ரௌடிகளை ஆயிரக்கணக்கில் பயிற்சியளித்து வளர்த்து வருகிறது. அரசாங்கம் என்பது என்ன? அதுவும் பணக்காரர்களின் நிர்வாகப் பிரிவுதான்.

சீருடை அணிந்து இராணுவப் பயிற்சி பெற்ற ஒவ்வொரு இராணுவத் தடியனும் மூளைச் சலவை செய்யப்படுகிறான். தாய் நாட்டுக்காகத் தனது உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பதாக அவன் வைராக்கியம் பூணுகிறான்.

தேசபக்தியின் பெயரால் அவன் - உபநயனம், சுன்னத், ஞானஸ்நானம் செய்விக்கப்படுவது போல் விசுவாசியாய் அங்கிகரிக்கப்படுகிறான். அதனால், இவன் ஒரு வேட்டை நாய் என்பது அவனுக்கும் தெரிவதில்லை; ஊருக்கும் தெரிவதில்லை.

இவ்வாறு ஒரு பெரிய - வலிமை வாய்ந்த இராணுவம் உருவாககப்படுகிறது. எந்த அளவுக்கு ஒரு நாட்டின் இராணுவம் பெரிதாகவும் வலிமை வாய்ந்ததாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த நாட்டின் `தேச பக்தர்கள்’ ஆசை கொண்ட வர்களாகவும் அச்ச முற்றோராகவும் இருக்கிறார்கள்.

உள்ளூர் `தேசபக்தன்’ உறக்கம் பக்கத்துத் தேச பக்தனால் கலைந்து விடுகிறது. நிம்மதியற்றுப்போன இரு தேச பக்தர்களும் மோதிக் கொள்ளும்போது போர் வெடிக்கிறது. பயிற்சி பெற்ற ரௌடிகள் களமிறக்கப் படுகிறார்கள். இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். வெற்றி பெற்ற ரௌடிகள் வெல்லப்பட்ட ரௌடிகளும், தங்களைப்போல் யாருக்காகவோ போரிட்டு வீழ்ந்தவர்கள்.

இன்று இவனைப் போலவே நாளை நானும் வெல்லப்படலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தம்மைப் போலவே மிருகமாக்கப்பட்டு கைதியாகிவிட்ட இராணுவ வீரர்களிடமே அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். போர்க்கைதியை நிர்வாணப்படுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள். தண்ணீர் என்று அவன் புலம்பித் தவிக்கும்போது அவன் வாயிலே சிறுநீர் கழிப்பதிலே எத்தனை மகிழ்ச்சி. கைதிகளாகிவிட்ட ஈராக் இராணுவ வீரர்களிடம் அமெரிக்க - பிரித்தானியப் போர்வீரர்கள் நடந்து கொண்டமுறை `தேசபக்தி’ யின் சுயரூபத்தை அம்மணமாய்க் காட்டியது. மனித நாகரிகம் வெட்கித் தலை குனியும் இந்தக் கேவலமான காரியங்களைப் `பெண் வீரர்’கள் செய்தார்கள் என்றறிருந்தபோது....

தேசபக்தியின் பெயரால் `கருணை வடிவான `தேவதைகள்’ கூட அருவெறுப்பான இழிபிறவிகளாகி விட்டார்களே என்று ஈரமுள்ள இதயங்களெல்லாம் கசந்துருகிக் சபித்தன.

தேசபக்தர்களே, செல்வந்தர்களே, உங்கள் தேசத்தையும் மத்தையும் பாதுகாக்கும் வேட்டை நாய்களாய் போக்கிரிகளாய் உருவாக்கும் ராணுவப் பயிற்சி ஆண்களோடு நிற்கட்டும். `மலர்களை’ நசுக்கி நஞ்சாக மாற்றாதீர்கள். என்பதுதான் நேர்மையாளர்களின் உரத்த சிந்தனை.

கொல்லப்பட்ட தனது கணவனின் மேல் கொண்ட காதலால் போருடை அணிவேன் என்று பெண் புறப்படுவது அன்னையின் மடியே ஆயுதக்கிடங்காக மாறும் அவலம் அல்லவா?

கொலை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் பதக்கம் அணிவித்துப் பாராட்டுவது தேசபக்தியின் அழுகிய பக்கம். அந்த அழிவுக் குவியலில் பெண்களும் இடம் பெறலாமா?

பெண்ணின் வணக்கத்துக் குரிய வீரம் போர்க் கருவிகளையே பொசுக்கிப் போடும் ஆற்றல் வாய்ந்தது. காருவகி, மேரிகியூரி, கல்பனாதத், நாகம்மை, அன்னை தருமாம்பாள், அருந்ததிராய், மேத்தா பட்கர் என்று புகழ் மணக்கும் பெண்மலர்கள் பூத்துக் கொண்டே இருப்பதால் தான் பூமி இன்னும் அழகானதாக இருக்கிறது!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com