Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - டிசம்பர் 2007

தேவதாசிகளும் இராமாமிர்தத்தின் போராட்டங்களும்
அ.வெண்ணிலா

தாசிகள் அல்லது தேவதாசிகள் தமிழ் நாட்டுக் கோயில்களைச் சார்ந்த நாட்டியமாடும் மகளிர். “தேவ” அல்லது “தேவர” என்பதற்கு “தெய்வம்” என்று பொருள் கொள்ளலாம். “தேவதாசி”, என்பதற்கு தெய்வங்களுக்கு சேவகம் செய்வோர் அல்லது தெய்வங்களின் அடிமைகள் என்ற பொருளில் இச்சொல் வழங்கி வருகிறது. புனைவால் உருவாக்கப்பட்ட ஒரு தெய்வத்திற்கு சேவகம் செய்வது என்பதும் புனைவாகவே இருக்க முடியும். சேவகம் செய்ய வைத்தல், சேவகத்தைப் பெறுதல் என்ற ஆதிக்க மனோபாவத்தின் ஏற்பாடாகவே தேவதாசி முறை உருவாகி இருக்கக்கூடும்.

பெண்ணுடனான பாலியல் இன்பத்தை பொதுவில் பெறுவதற்கான ஏற்பாடு நம் சங்க இலக்கிய காலம் தொட்டே ஆகி வருவதைக் காண முடியும். காமக்கிழத்தி, பரத்தையர், பொதுமகளிர் போன்ற சொல்லாடல்கள், பெண்ணின் பாலியல் தொழிலைச் சுட்டுவனவே. மாதவி சிலப்பதிகார உதாரணம். சமூகம் சார்ந்த வாழ்வியலில் ஆங்காங்கே சின்ன சின்ன ஏற்பாடுகளாக இருந்த “பொது மகளிர்” பழக்கம் ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில் மதம் சார்ந்த செயல்பாடாக, கடவுளின் நாமகரணத்தோடு முன்மொழியப்பட்ட நிறுவனமயமான செயல்பாடாக மாறியது. சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அரசவை நாட்டிய மகளிரும், பிரகதீஸ்வரர் கோயிலில் நியமிக்கப்பட்ட தேவதாசிகள் முதல், விஜய நகரப் பேரரசு கால குறிப்புகள் சொல்வது வரை, மதம் சார்ந்திருந்த இவ்வேற்பாடு அரசின் ஏற்பாடாகவும் இருந்துள்ளதை சுட்டுகின்றன.

சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுவதுபோல், “இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே ஏற்படும் முறையில்லாத உறவு வழிப் பிறந்தவர்களே தேவதாசிகளாகக் மாற்றப்பட்டிருப்பார்கள்” என்றும் பின் ஒவ்வொரு இனக்குழுவிலும், குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த பெண்களையே தேவதாசிகளாக்குவதும் தொடர்ந்துள்ளது. உலக அளவில் மனிதர்களுக்கான வாழ்வியல் நல்வழிகளை மதம் காட்டுவதாக நம்பப்படுகிறது. மத நிறுவனமே கடவுளின் பெயரால் முன்னின்று நடத்திய பாலியல் தொழில் நம் புண்ணிய பூமியில்தான் நடந்துள்ளது. இந்து மதம் தேவதாசிகளின் தொழிலை ஒருபக்கம் கண்டித்துக் கொண்டிருந்தாலும் மற்றொரு புறம் தேவதாசிகளின் உயர்வுக்கும் புகழுக்கும் சமய நிறுவனங்களே காரணமாயிருந்திருக்கின்றன என்பதும் முரணான உண்மை.

தமிழகத்தில் இசைவேளாளர் சமூகத்தை சார்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர். “பொட்டுக் கட்டுதல்”, “நித்ய சுமங்கலி சடங்கு” போன்ற சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாகுகிறாள். கோயிலின் நாட்டியப் பெண்ணாகவும், தெய்வத்தின் முன்னால் இசைப்பாடல்களை இசைப்பவளாகவும், பூசைக்குத் தேவையான பணிகளைச் செய்பவளாகவும் தேவதாசிப் பெண்களின் முக்கியப் பணிகள் இருந்துள்ளன. ஆனால், கடவுளின் தாசிகளை தன்னுடைய தாசிகளாக, தன்னுடைய பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கான கருவியாகவும், பிராமணர்களும், நிலப்பிரபுக்களும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தேவதாசிப் பெண்ணொருத் திக்குத் தன்னுடைய பாலியல் துணையை சுதந்திரமாகத் தேர்வு செய்து கொள்வதற்கான உமைகள் மறுக்கப்பட்டதோடு தனக்கான புரவலர்களை மட்டுமே நம்பி வாழவேண்டிய நெருக்கடி நிலையும் இருந்துள்ளது. தான் விரும்பும் ஒரு புரவலருடன் தன் வாழ்க்கையை வாழ ஒரு தேவதாசி நினைத்தாலும், அவளுக்கான சமூக அந்தஸ்தென்பது மறுக்கப்பட்ட ஒன்றே.

தேவதாசிப் பெண்களின் வாழ்வியல் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்காவிடினும், இப்பெண்களுக்கென சில பிரத்யேகமான சட்ட திட்டங்களை சமய நிறுவனங்கள் உருவாக்கியிருந்தன. முதலாவது இந்துமதம் அதிகம் வலியுறுத்தாத பெண்களின் சொத்துமை. தேவதாசிப் பெண்ணுக்கும் மகனைப் போல் சொத்தில் சமபங்கு உண்டு. தாசிப் பெண்கள், ஆண் குழந்தை பிறக்கும் பொழுது பெரிய அளவிற்கு மகிழ்ச்சிக்கு ஆளாவதில்லை. ஆண் குழந்தை பிறந்தால் விளக்கு மங்கலாகவே ஏற்றி வைக்கப்படுமாம்.

இரண்டாவதாக அக்காலப் பெண்களில் தாசிப் பெண்களே படிப்பறிவும் பல்வகைத் திறமைகளும் பெற்றவர்களாக இருந்துள்ளனர். அழகியல் சார்ந்த ரசனையும் (வேறொருவரை மகிழ்விக்க வேண்டும் என்ற கோணத்தில் இருந்தாலும்) தம்மை மகிழ்ச்சியுடனும், இளமைத் துடிப்புள்ளவராகவும் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஒரு தேவதாசி என்றுமே விதவை ஆவதில்லை. கடவுளின் துணைவி, அடிமை என்ற பொருளில் நித்ய சுமங்கலியாகக் கருதப்படுகிறாள். இக்காரணத்தினாலேயே விசேஷ நாட்களில் தேவதாசிப் பெண்கள் பல சடங்குகளை செய்வதற்கு முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தேவதாசியின் கழுத்து மணியிலிருந்து காசோ, மணியோ எடுத்து தாலியில் கோர்த்துக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களும் இருந்துள்ளனர்.

தேவதாசியின் இறப்பிற்கு உயர்ந்தபட்ச மரியாதையாய் அவள் சார்ந்திருந்த கோயில் தெய்வத்தின் மேலுள்ள புதுத்துணியும், ஈமச்சடங்கிற்கு வேண்டிய பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவதாசியின் மரணம் அக்கோயிலின் துக்கமாக் கருதி, இறுதிச் சடங்கு நடக்கும் வரை கோயிலில் வழிபாடு நடைபெறாது.

இந்துப் பெண்களுக்கென்று அனுமதிக்கபடாமல் இருந்த தத்தெடுக்கும் உரிமை, தேவதாசிப் பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது.

சமய நிறுவனங்களின் அங்கீகாரத்துடன், ஆடம்பரமாகவும், சுதந்திரமாகவும் தங்கள் விருப்பப்படியும் ஆடல் - பாடல்களுடன் ரசனையான ஒரு வாழ்வு வாழ்பவர்களாவும் தேவதாசிகளின் வாழ்வு சமூகத்தினை நம்ப வைத்திருந்தது. குடும்பங்களைக் குலைப்பவர் களாகவும் ஆண்களை மயக்க வைத்து சீரழிப்பவர் களாகவும் பல ஆண்களுடனான பாலியல் உறவு வைத்திருக்கும் அருவெறுப்பானவர்களாகவும் மற்ற பெண்களின் பார்வை இருந்தது. ஆனால், தேவதாசிப் பெண்களோ இருதரப்பு பார்வைநிலைகளையும் கடந்து, நிலையற்ற பொருளாதார வாழ்வு, வாழ்நாள் முழுதும் புரவலர்களைத் தேடி அலையும் இழிநிலை, உடல் தளர்ந்தபின் நிகழும் சமூகப்புறக்கணிப்பும், கவனிப்பின்மையும் என கீழான வாழ்நிலையிலேயே இருந்துள்ளனர். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த இழிநிலையை அகற்றுவதற்காக முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலுமே துவங்கப்பட்டன.

பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றுவது, சுயராஜ்ஜியத்தைக் கொணர்தல் என நாடே தீப்பற்றியெரிகிறாற் போல் சுதந்திர முழக்கத்தில் இருந்த நேரத்தில், தமிழகத்தில் சமூக விடுதலைக்கான மாற்றங்கள் விதைபோடப்பட்டுக் கொண்டி ருந்தன. காங்கிரஸ் தலைவர்கள் பலடம் இல்லாத, அவர்கள் ஏற்றுக் கொள்ளாத சீர்திருத்தங்களை பெரியாரும், பெரியாரைப் பின்தொடர்ந்த தலைவர்களும் மக்களிடம் கொண்டு சென்றனர். தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கான முன்னோடிக் களப்பணியாளராகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முன்னணித் தலைவராக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம்.

இவர் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பம் வறுமையில் வாடும்பொழுது, நளமகாராஜனைப்போல் இராமாமிர்தத்தின் தந்தை தன் மனைவியையும் மகளையும் விட்டுச் செல்கிறார். (ஆண்களுக்கு எவ்வளவு வழிமுறைகள் குடும்பச் சுமையில் இருந்து தப்பிக்கங; துறவறம் உள்ளிட்ட நாகரீகமான வழிமுறைகள் உள்ளன.) இராமமிர்தத்தின் தாய் அவரை ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாய்க்கும், ஒரு பழம் புடவைக்கும் விற்று விடுகிறார். இராமாமிர்தத்தை வாங்கிய தேவதாசியே அவரை வளர்த்து ஆளாக்குகிறார். “ஆச்சிக்கண்ணு” என்னும் அந்த தாயின் பெயரையே தன் தலைப்பெழுத்தாகக் கொண்டு “ஆ. இராமாமிர்தம்” என்றே தன் பெயரை எழுதியுள்ளார் மூவலூரார். தன்னை பொறுப்புடன் வளர்த்தெடுக்காத தந்தையின் முதலெழுத்தைப் புறக்கணித்ததுடன், பெண் ஒருவன் முதலெழுத்தை, தன் தலைப்பெழுத்தாக்கும் முற்போக்குச் சிந்தனை இருந்தததையும் கவனிக்க வேண்டடியுள்ளது.

காங்கிரஸ் தன் போராட்டங்களில் பெருமளவிற்குப் பெண்களை இணைத்துக் கொள்ளாத காலக்கட்டத்திலேயே இராமாமிர்தம் காங்கிரஸின் முன்னணி பேச்சாளராகவும், பெண் விடுதலை செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவராகவும் இருந்துள்ளார்.

காங்கிரஸ் இயக்கத்துடன் தம்மை முழுமையாக ராமாமிர்தம் இணைந்துக் கொண்டதற்கான காரணமே காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தேவதாசிமுறை ஒழிப்பிற்கு ஆதரவாக இருந்ததுதான். பெரியார், திரு.வி.க., வரதராஜுலு போன்ற தலைவர்கள் இவருக்குப் பெரும் ஆதரவளித்தார்கள். திரு.வி.க. தனது “நவசக்தி” இதழில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டியதின் அவசியத்தைத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் அநேகர் இந்து மதத்தில் தீவிரப் பற்றாளராகவும் பெயரளவிற்கே சீர்த்திருத்தங்களைப் பேசுபவர்களாகவும் இருந்ததை இராமாமிர்தம் உணர்ந்து கொண்டார். மதமும் பெண்ணடிமைத்தனமும் (குறிப்பாக தேவதாசி முறை ஒழிப்பு) பிரிக்க முடியாத அம்சங்களாக உள்ள நிலையில் இவர்களிடமிருந்து தனக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காது என்ற அதிருப்தியில் காங்கிரஸ் செயல்பாடுகளை விமர்சித்தார். காங்கிரஸில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்ட போதிலும் தன் இலட்சியத்திற்கு உதவாது எனத் தெரிந்தவுடன் பெரியாருடன் இணைந்து காங்கிரஸ்- விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார்.

இசைவேளாளர் குலத்தில் பிறந்ததால், தேவதாசிகள் வாழ்ந்த புரையோடிய வாழ்வை இராமாமிர்தம் முழுமையாக அறிந்திருந்தார். எங்காவது ஒரு தேவதாசி கண்ணில் பட்டால் போதும், அவருடன் நட்புணர்வை வளர்த்துக் கொண்டு, அவரை தேவதாசி முறையிலிருந்து வெளிக் கொணர்வதற்கான பணிகளைத் துவக்கி விடுவார். பல பெண்களை தன் பேச்சுத் திறமையால் வெளிக் கொண்டுவந்த பொழுதும், தன் சமூகத் தினன் மிகப்பெய எதிர்ப்பை சமாளிக்க வேண்டி இருந்தது அவருக்கு. பொதுக்கூட்ட மேடையொன்றில் அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்து சனாதனவாதிகள் அவர் கூந்தலை அறுத்து அவரை அவமானப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் கோபத்தின் உச்சிக்கே சென்று அவரை விஷம் வைத்துக் கொல்லவும் முயன்றுள்ளனர். இராமாமிர்தத்தின் போராட்ட குணத்தை இச்சம்பவங்களால் ஒரு துளியும் குறைக்க முடியவில்லை.

தேவதாசிப் பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக, அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்ட “நாகபாசத்தார் சங்கம்” என்றொரு அமைப்பை உருவாக்கினார். பின்னர் இச்சங்கமே “இசை வேளாளர் சங்கம்” என பெயர் மாற்றப்பட்டு, இசை வேளாளர் மாநாடு, தேவதாசிகள் ஒழிப்பு மாநாடு போன்றவற்றை முன்னிற்று நடத்தியுள்ளது. தேவதாசிப் பெண்களை அம்முறையிலிருந்து விடுவித்து அவர்களை திருமண வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளார். சுயமரியாதைத் திருமணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த நேரமது. புரோகிதர்களற்ற திருமணங்கள், விதவை மறுமணம், கலப்புத் திருமணங்கள் என சமூக மாற்றங்களை முன்வைத்து புதுவிதமான திருமண முயற்சிகள் நடத்தப்பட்டன. இராமாமிர்தம் சமஸ்கிருதம் அறிந்தவர் என்பதால், திருமண வீடுகளில் சொல்லப்படும் சமஸ்கிருத ஸ்லோகங்களை உடனுக்குடன் மொழிபெயர்த்துக் சொல்வாராம். பெண்களைப் பற்றிய மோசமான சித்தரிப்புகளைக் கொண்ட இம்மந்திரங்களுக்கு, பெண்களிடம் இருந்து ஒருமித்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் இருவன் தொடர் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கப்பட்டன.

நாட்டின் கலை, கலாச்சாரத்தினை பேணிக்காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையை தக்க வைத்திருப்பதே என பல பெருந்தலைவர்கள் முட்டுக் கட்டைகளாயினர். “இத்தனை காலம் எங்கள் வீட்டுப் பெண்கள் கலையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும், இனி கொஞ்சம் காலத்திற்கு உங்கள் வீட்டுப் பெண்களை தேவதாசிகளாக்குங்கள்” என முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேச வைத்தவர் மூவலூர் இராமாமிர்தம். கலையும், கலாச்சாரமும் ஆதிக்கவாதிகளின் ஆயுதங்களாகத் தானே நம் மரபுவழி வந்துள்ளது.

இராமாமிர்தத்தின் லட்சியக் கனவு 1929-ம் ஆண்டு போடப்பட்ட அரசாணையின் மூலம் நிறைவேற்றப்பட்டாலும், முழுமையாக நடை முறைக்கு வந்தது 1947-ம் ஆண்டே. களப்பணியாளராக இராமாமிர்தமும், இராமாமிர்தத்தின் போராட்டத்திற்கு உருக்கொடுத்த சமூகச் சீர்திருத்தவாதியாக முத்துலட்சுமி ரெட்டியும் இருந்துள்ளனர். இருப்பினும், இன்றைக்குள்ள வரலாற்றில் முத்துலட்சுமி ரெட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரமும் முக்கியத்துவமும் கூட இராமிர்தத்திற்கு இல்லை. 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், பதவிகளை குறி வைத்தோ, பொறுப்புகளை நோக்கியோ தன்னை நகர்த்திக் கொள்ளாமல், மக்கள் மத்தியில் செயலாற்றும் சாதாரண சேவகியாக தன்னை உருவகித்துக் கொண்டதே இம்மாதியான இருட்டடிப்புகளுக்கு காரணமாயிருந்திருக்க முடியும்.

வரலாற்றில் இடமில்லாமல் போனது ஒருபுறம்; மறுபுறம் தம் குலப் பெண்களிடம் கிடைத்த “குலத்தை அழிக்கப் பிறந்தவள்” பட்டம். அரசு ஒரு அரசாணையின் மூலம் கோயில்களில் இருந்து தேவதாசிகளை விலக்கி வைத்து, “தேவதாசிகளுக்குச் சொந்தமான நிலங்களைக் கட்டாயம் தேவதாசி களிடம் வழங்க வேண்டும்” என்றும் அரசாணை சொல்லியது. அரசாணை நடைமுறைப்படுத்தபட்டதா என்பதை கவனிக்கும் கண்காணிப்புகளும், தேவதாசிகளின் நல்வாழ்வை உறுதி செய்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் இல்லாமல் போனது. கோயில் நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பிராமணர்களும், பிறசாதியினரும் தேவதாசிகளுக்கு நிலங்களை வழங்கவில்லை; நிலவருவாய் அளிப்பதையும் நிறுத்தி விட்டனர். பிழைக்க வழியின்றி, சமூக புறக்கணிப்போடு பல தேவதாசி களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டது. “ராமாமிர்தமும், முத்துலட்சுமி ரெட்டியும்” தேவதாசிகளின் முன் குற்றவாளி யாயினர். முன்னின்று ச செய்ய வேண்டிய அரசு, அரசாணை போட்டு அமைதியாய் இருந்துவிட்டது.

சமூகப் போராளியாக இருந்த இராமாமிர்தம் எழுத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தன் போராட்டத்திற்குத் துணை செய்யும் விதத்தில், தன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு, ஏறக்குறைய “சுயசரிதை”ப் போன்ற புதினமே மதி பெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை. திராவிட நாடு இதழில் “தமயந்தி” என்ற குறுநாவலும், “இஸ்லாமும் திராவிட இயக்கமும்” என்ற நூலையும் எழுதியுள்ளார். “இஸ்லாமும் திராவிட இயக்கமும்” என்னுடைய கடந்த ஐந்தாண்டு காலத் தேடலில் இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை.

ராமாமிர்தத்தின் இந்நாவல் சமூக ஆவணம் என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தேவதாசிகளாய் வாழ்ந்த பெண்களைப் பற்றியும், அவர்களின் மனோபாவங்கள், தங்களை நிலைப்படுத்திக் கொள்ள ஆண்களை பகடைக்காய்களாக்கி உருட்டுதல், வஞ்சகமும் சூழ்ச்சியும் நாட்டியத்திற்கும் இசைக்கும் முன் விஸ்வரூபமெடுப்பது என தேவதாசிப் பெண் களின் மன உலகங்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளும், இச்செயல்பாடுகளின் வழி தீயவர்களைத் திருத்துதலும் நல்லவர்களைக் கொண்டாடுதலும், உபதேசித்தல், பகுத்தறிவு கருத்துகள் கூறல் என நாவல், தன் படைப்பு எல்லையை சில இடங்களில் மீறி செல்கின்ற கணத்திலும், நாவலின் நோக்கம் இம்மீறல்களை நாம் கண்டு கொள்ளாமல் செல்லச் சொல்கிறது.

இரு தாசிப் பெண்கள், அவர்களின் வலையில் விழத் துடிக்கும் ஆண்கள், புதியதாக திருமணமான ஒரு ஜமீன்தார். தாசிகளிடமிருந்து தன் கணவனைக் காப்பாற்றி நல்வழிப்படுத்தும் ஒரு துணிச்சலான மனைவி என நாவலின் கதைப்போக்கு சென்றாலும் என்னுடைய கவனத்தைக் கவருபவை நாவல் கதாபாத்திரங்களின் உரையாடலும், உரையாடல் களில் தூக்கலாக வரும் சமூக அக்கறையும் தான்.

நாவலின் முன்னுரையில், “பிரிட்டானியத்தையும் பார்ப்பனீயத்தையும் கூட எளிதில் எதிர்க்கலாம். இந்தத் தேவதாஸி முறையை எதிர்ப்பது சாமானிய வேலை அன்று என்ற முடிவுக்கு வந்தோம்” என்கிறார் ராமாமிர்தம். சாமானியமற்ற சாதனையை அவர் சாதித்திருக்கிறார் என நாம் மறுமொழி கூறலாம். “தாஸிகள் சங்கீத ஞானம் தேடுவது எதற்கு? தாஸித் தொழிலுக்கு விளம்பரம் செய்யத்தானே ஒழிய வேறில்லை” என தலைவர்கள் புலம்பி, கலையை காப்பாற்ற முனையும் காரணங்களை புரட்டித் தள்ளுகிறார். இங்கொன்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். இராமாமிர்தத்திற்கு இசையில் நல்ல தேர்ச்சி இருந்த பொழுதிலும், அவர் எங்குமே தன் இசையை வெளிப்படுத்தியதில்லை. தாசித் தொழிலுக்கான எதிர்ப்பு, இசைக்கான எதிர்ப்பாகவும் அவடம் வேர் விட்டிருக்கலாம்.

“எப்போது காதலோடு கூடிய திருமணங்கள் நம் நாட்டில் சாதாரணமாக நடைபெறுகிறதோ, அப்பொழுதுதான் சொந்த சம்சாரத்தை வெறுப்பது, தாஸியை விரும்புவது போன்ற இழி தொழில்கள் ஒழியும்” எனக் கருத்தொருமித்த திருமணத்தை ஆதத்து 1936-லேயே பேசுகிறார். பகுத்தறிவான பதில் ஒன்றையும் முன் வைக்கிறார், காதல் திருமணத்திற்காக. “பசி வந்தால் ஐயரைக் கூப்பிட்டு பொருத்தம் பார்த்தா சாப்பிடுகிறோம்?” என்று தேவதாசிப் பெண்களுக்கான சுதந்திரமான வாழ்வை உறுதிப்படுத்த சில கருத்துக்களை முன் வைக்கிறார். “இனிமேல் தேவதாஸிப் பெண்கள் எல்லோருக்கும் கலியாணம் செய்ய வேண்டும். அச்சமூகத்தில் கல்யாணமாகாத பெண்களே இருக்கக்கூடாது” என்பதோடு கோவிலுக்குப் பொட்டுக்கட்டி பின் வீட்டிலிருக்கும் பெண்களும் கட்டாயம் கலப்புத் திருமணங்கள் செய்ய வேண்டும்” என்கிறார். திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் பெண்ணின் மீது சுமத்தும் நுகத்தடிகள் பற்றி இராமாமிர்தம் உணர்ந்திருந்தாரோ இல்லையோ, பெண்கள் பாலியல் தொழில் செய்து பிழைக்கும் பிழைப்பிலிருந்துத் தப்பிக்க திருமண பந்தமே பாதுகாப்பானது எனக் கருதினார்.

கடவுளுக்கு அடுத்த நிலையில் தங்களை வைத்துக் கொள்ளும் பார்ப்பனர்களின் நிலை, தாசிகளிடத்தில் கேள்விக்குரியதாகவும் இருந்துள்ளது. நட்டுவனார்ளாகவும், மாமாக்களாகவும் நிறைய ஆண்கள் இருந்துள்ளனர். ஆனால், தாசிப் பெண்களுக்கான சாந்தி முகூர்த்தத்தை கடவுளின் நிலையில் இருந்து செய்பவர்களாகவும் பிராமணர்களே இருந்துள்ளனர். நாவலில் தாசித் தொழிலை மறுக்கும் சிறு பெண் ஒருத்தி, “கடவுளின் பெண்டாட்டியாகிய நான் மனிதரிடம் விபசாரம் செய்தால்தானே பிழைக்க முடியும்? உண்மையாக நான் கடவுள் பெண்டாட்டியாயிருந்தால் கடவுளிடத்திலேயே இருந்து விடுகிறேன். வேறு மனிதனை ஏன் இச்சிக்க வேண்டும்” என கேட்கிறாள்.

கடவுள் மறுப்பு, சாதிய உயர்வு-தாழ்வு நீக்குதல் அனைவருக்கும் கல்வி போன்ற சமூக மறுமலர்ச்சிக் கான அடிப்படைகளை நாவல்களில் உரையாடலாக்கியிருக்கிறார். “கைலாசம்” என ஒன்றை கடவுள் உருவாக்கியிருந்தால் இந்நேரம் வெள்ளையர்கள் கண்டுபிடிக்காமலிருப்பார்களா? என நகைச்சுவையையும் ஆங்கிலேயே சுரண்டலையும் முன்னிறுத்துகிறார். “தாசி, வேசி, வேதியர், குருக்கள், புரோகிதர் என்ற கூட்டத்தினர்க்கே கடவுள் என்று ஒன்று வேண்டியிருப்பதாகவும், உழைக்கின்ற மக்களுக்கு கடவுளைப் பற்றிய கவலையில்லை என்றும் நாவல் பாத்திரங்கள் பேசுகின்றன.

“எழுத்து ஓர் ஆயுதம்” என்ற சமூகப் புதலில் தன் போராட்டக் கருவியாக இராமாமிர்தம் எழுதிய நாவல் 75 ஆண்டுகளைக் கடந்தும் ஒரு குலத்தைப் பற்றிய புதலுக்கான ஆவணமாக இருந்து வருகிறது. நாவலின் இலக்கிய முக்கியத்துவம் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளதாகக் கவனப்படுத்த இயலவில்லை. உயர்சாதிப் பெண்கள் பலகாரம் சுடுதலையும், பூத்தையல் வரைவதையும் இலக்கியமாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இராமாமிர்தம், தமிழகத்தில் நடந்த ஓர் பெண்ணடிமைத் தன இழிவு சீர்குலைந்து, பெண் விடுதலைக்கான வித்தூன்றிய வரலாற்றில் தன் கதராடையைப் போன்ற எளிமையான வார்த்தைகளால் நூலாக்கியுள்ளார். பெண்ணியச் சிந்தனையின் தீவிரம் அதிகரிக்கும் இவ்வேளையில் இராமாமிர்தம் நம்மின் துவக்கப் புள்ளியாய் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இக்கட்டுரையை நிறைவு செய்ய நினைக்கும் தருணத்தில் முளைத்தெழுகிறது கேள்வியொன்று. இசை வேளாளாப் பெண்களின் தொழிற் கருவியாகச் செயல்பட்ட நாட்டியமும், இசையும் பிற்காலத்தில் எவ்வாறு பார்ப்பனர்களின் கலையாக, மேல்தட்டு மக்களின் அறிவுஜீவித்தனத்துடன் பிணைக்கப் பட்டது? மிச்சசொச்சம் வாழ்ந்து கொண்டிருக்கும் இசைவேளாள மரபினர் இம்மாற்றத்தை எவ்விதம் உணர்கின்றனர்?