Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - டிசம்பர் 2007

அர்ஜூன்: மகாஸ்வேதா தேவி
தமிழில் பிரேம்

அக்ரயன் மாதம் முடிந்து பௌஷ் மாதம் தொடங்க இருந்தது. சூரியனின் வெப்பத்தைச் சுகமாக வரவேற்கும் அளவுக்கு போதுமான குளிர் இன்னும் தொடங்கவில்லை.

பிஷால் மகாதோவின் வயலில் விளைந்த நெல் முதல் நாள்தான் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்பவர்களுடனும் உதிரி நெல் பொறுக்குபவர்களுடனும் சேர்ந்து கேது ஷாபாரும் நாள் முழுக்க வயலில் உதிர்ந்த நெல்லைச் சேமித்துக் கொண்டிருந்தான். இப்போது பனி படர்ந்த பகல் நேரத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்கவும், உடல் வலியைத் தணிக்கவும் அவனுக்கு கொஞ்சம் சாராயம் தேவைப்பட்டது. அது நிச்சயம் நிறைவேறாத ஆசை என்று தெரிந்தபோதும், கொஞ்சம் கனவு காண்பதில் ஒன்றும் தப்பில்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனுடைய மனைவி மொஹோனி அவனுடன் வாழவில்லை. அவன் அந்தப் பக்கம் வராத பொழுதுதான் அவள் வயல்வெளி பக்கம் வருவாள். கேது அடிக்கடி ஜெயிலுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். நெல் பயிரிட காட்டை அழித்தது தான் அவனுடைய குற்றம்.

இதற்காக கேது ஷாபாரைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ராம் ஹல்தார் அவனைச் செய்யச் சொன்னான் கேது அதைச் செய்தான். வெட்டப்பட்ட மரங்களிலிருந்து கிடைத்த பணம் எல்லாம் ஹல்தார் பெற்றுக் கொண்டான். கேதும் அவனைப் போன்ற மற்றவர்களும் ஜெயிலுக்குப் போனார்கள். ஆனால் அவனால் வேறு என்ன செய்திருக்க முடியும்? ஒரு மரத்தை வெட்டிச் சாய்ப்பதாக இருந்தாலும் அல்லது ஒரு ஆளை வெட்டிச் சாய்ப்பதாக இருந்தாலும் சாயங்காலம் நாலு ரூபாய் கைக்கு வரவேணும் அதுதான் முக்கியம். சொல்லப் போனால் ஆளை வெட்டுவது இன்னும் சுலபமாக இருக்கலாம். ஏன் யாரும் அவனிடம் இதைச் செய்யச் சொல்லி கேட்கவில்லை? கேதுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வழியில் இன்னும் முழுசாக நான்கு ரூபாய் கிடைத்திருக்கும், ஆனால் உடனே ‘இதை நிஜமாகவே ஒன்னும் நான் எதிர்பார்க்கலே' என்று தன்னைத்தானே திருத்திக் கொண்டான்.

அவனுக்கு நேர்ந்த இக்கட்டைப் பற்றி அவன் ஒரு நாளும் ஏன் என்று நினைத்ததில்லை. புருளியாவின் ­பார் ஆதிவாசியாக நீங்கள் பிறந்திருந்தால் நீங்களும் மரத்தை வெட்டியாக வேண்டும். நீங்கள் ஜெயிலுக்குப் போகவேண்டும். வேறு வழியே இல்லை. கேது ஜெயிலுக்குப் போனால், செய்ய வேண்டியதைச் செய்ய ஹல்தார் இன்னொரு கேதுவைக் கண்டுபிடிப்பான். ஒன்றும் நஷ்டம் இல்லை, வீட்டிலுள்ள பொம்பிளை வேலை தேடிப் போகவேண்டும் அவ்வளவுதான்.

காட்டிலாக்காவிற்கு சொந்தமான மரங்களை வெட்டியதற்காக சென்றமுறை கேது ஜெயிலுக்குப் போனபோது மொஹோனி வேலை தேடிப் போனாள். என்ன நடந்ததோ யாருக்குத் தெரியும்... அந்தச் சூழ்நிலை தவிர்க்க முடியாதது என்ற போதும், கேதுவால் காலியாகக் கிடந்த குடிசையைப் பார்க்க நேர்ந்தது தாள முடியவில்லை. உடம்புக்கும் மனசுக்கும் சாராயம் தேவையென்பதில் ஆச்சரியம் இல்லை. கொஞ்சம் போதை, கொஞ்சம் மறதி.

பகல் கனவில் மூழ்கியிருந்த கேது முன்னால் பிஷால் மஹாதோ திடுக்கென்று வந்து நின்றான். “உனக்காக கொஞ்சம் வேலை வச்சிருக்கேன்'' என்றான்.

“ஓட்டு வாங்கற வேலையா எசமான்?''

“இல்ல இல்ல, அதப்பத்தி எனக்கு என்ன கவல. நான் சொல்லற ஆளை ஜெயிக்க வைக்கனும் ஜெனங்க, செய்ய மாட்டாங்களா என்ன?''

"அதுதான் எசமான்”.

சரி ராம் ஹல்தார் என்ன சொன்னான் உங்கிட்ட.

“நீங்க சொன்ன மாதிரியே சொன்னாரு''.

“நீ என்ன பதில் சொன்ன?''

“உங்ககிட்ட என்ன சொன்னேனோ அதேதான் சொன்னேன்''.

“என்னடா நீ பதில் சொல்றது?''

“நான் ஒரு முட்டாளுங்க எசமான்'' என்றான் கேது.

“கவலைப்படாத. நீ சிலது செய்ய வேண்டியிருக்கு, இஷ்டமா?''

ராம் ஹல்தாரும், பிஷால் மகாடோவும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் கேதுவுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் ஒரே மாதிரியான இரண்டு பேர். அவர்கள் அந்தப்பக்கம் வரும் போதெல்லாம் ஒவ்வொருவரும் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். இந்த பக்கத்தில் ஒருவர் வாழ வேண்டுமென்றால் இந்த இரண்டு சாமிகளுக்கும் படையல் போட்டாக வேண்டும். இந்த கட்சிக்கார ஆட்களிடம் முடியாது என்று சொல்ல யாருக்கு தைரியம் இருக்கிறது. ஹால்தாருக்கும் மஹாடோவுக்கும் கூடத் தெரியும், ­பார் சனங்களை ஒதுக்கிவிட்டு இருக்க முடியாது என்பது, அதைவிட இந்த சனங்கள் சிறைக்குச் செல்வதில் உலக சாதனை செய்தவர்கள்.

இப்போது பிஷால் மஹாடோ உண்மையில் கேதுவின் ஆசையைச் தூண்டி விட்டுவிட்டான். பிஷால் முதலாளிக்கு கூட்டம் போடுவது, பிரசங்கம் செய்வது என்று எப்போதும் பரபரப்பு. எனவே ஓட்டு விசயம் இல்லையென்றால் வேறு என்ன விசயமாக இருக்க முடியும்? என்னவாக இருந்தாலும், ஏதோ வில்லங்கமான வேலையாகத் தான் இருக்க வேண்டும்.

“அந்த அர்ச்சுனன் மரத்தை வெட்டிச் சாய்க்க வேண்டும்'' என்றான் பிஷால்.

"ஏன் எசமான்?' கேது திடுக்கிட்டு கேட்டான்.

“நான் சொல்லறத செய் அவ்வளவுதான்''.

“கருண காட்டுங்க எசமான். இப்பத்தான் ஜெயில்ல இருந்து வந்திருக்கேன் எசமான்''.

“உன்ன மறுபடி அங்க அனுப்ப நான் முடிவு பண்ணிட்டா உன்னால தடுக்க முடியுமா?'' பிஷால் மஹாடோ கேட்டான்.

“முடியாது எசமான்''.

“ராம் ஹால்தார் தர்ற வேலை மாதிரி இல்ல இது. சட்டத்துக்கு எதிரான அவனுடைய வேலையாலதான் நீ ஜெயிலுக்கு போற. அந்த அரசாங்க ரோட்டுச் சந்தியில இருக்கிற மரத்தை வெட்டச் சொல்லி நான் உத்தரவு போட்ட பிறகு உன்ன கைது பண்ண யாருக்கு துணிச்சலிருக்கு?''

கேதுவின் மூளை மங்கிப் போனது. இதைப் பற்றி அவன் ஒருபோதும் யோசித்ததில்லை, ஆனால் அது உண்மை. ராம் ஹால்தாருக்காக உழைச்சா கட்டாயம் மாட்டிக்க வேண்டியது தான். நேரா இன்னொரு தடவை ஜெயில் பிரயாணம்தான். ஆனால் பிஷால் முதலாளி சொன்னதுதான் சட்டம். அவர்தான் இந்த நாட்டையே ஆட்டிப் படைக்கிறாரு தெரியுமா! அரசாங்க சாலையில அந்த மரம் அவர் சொல்லி காணாமப் போனா உன்ன யாரு ஜெயில்ல போட முடியும்?

கேதுவின் மனதில் ஒரு யோசனை மின்னியது, “எசமான், ஓட்டு வாங்கணும்னு இந்த முறை பக்கா ரோடு போடப் போறீங்களா?''

பக்கா ரோடா? இங்கயா? கேது உனக்கு பயித்தியம் தாண்டா! முப்பது வருஷமா நடக்காதது அது. இப்பவும் நடக்காது. அதில்ல, "எனக்கு அந்த மரம் வேணும்'.

“அப்படி பெரிசா வளர்ந்த மரமா?''

“ஆமாம் முழு அர்ச்சுனன் மரமும்''.

“எப்படி அதை கொண்டு போவீங்க?''

“ராம் முதலாளியோட வண்டியிலதான், வேற!''

தெளிவான வானம், சுத்தமான குளிர்ந்த காற்று கேசர் பிளேரிலிருந்து ஒலித்த சந்தோஷ மாதா பஜனை எல்லாம் சேர்ந்து பிஷால் மஹாடோவை உண்மையை சொல்லிவிட வைத்தது போல் தோன்றியது.

அந்த மாயத் தருணத்தில் தான் பூமி பகலுக்கு விடை கொடுத்து, வெளிச்சம் இரவின் கைகளுக்குள் ஒடுங்கி மறைந்தது. பாந்திகியின் வயல்களிலிருந்து காற்று விளைந்த நெல்லின் மணத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இதெல்லாம் கேதுவின் கவனத்தில் படவில்லை. மஹாடோவின் வேண்டுகோள் அவனை உறைய வைத்துவிட்டது. அவன் மார்பு மீது பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வைத்தது போல் இருந்தது. அறுவடைப் புரட்சியின் போது சந்திர சந்தால் இதே போன்ற பாரத்தைத்தான் உணர்ந்திருக்க வேண்டும். அரைவீசை எடையை வைத்து அவனைக் கட்டி விட்டார்கள். அந்த பாரம்... பயங்கரமானது.

பிஷால் மஹாடோவும் ராம் ஹால்தாரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் வெளி வார்த்தைக்குத்தான் அவர்கள் எதிர் எதிர் அணியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பஞ்சாயத்தைப் பார்த்துக் கொள்கிறார், மற்றவர் மாவட்ட எல்லைக்கு அருகில் மரப்பட்டறை நடத்துகிறார். ஒருவர் அர்ச்சுனன் மரத்தை வெட்ட உத்தரவிட்டால் மற்றவர் சந்தோஷமாக அதை ஏற்றிச் செல்ல வண்டியனுப்புவார்.

ஐயோ! அந்த மரத்தை காப்பாற்ற முடியாது. பந்தினி காட்டு மரங்களில் ஜமீந்தார் காலத்திலிருந்து இன்று வரை மீந்து நிற்கும் ஒரே நினைவுச் சின்னம் அதுமட்டும்தான். கடந்த காலத்தின் நினைவுகளை கேதுவுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் இப்போது கூட அந்த மரம் தூண்டிவிட்டது.

காடுகள் பெயருக்கு மட்டும் காடுகளாக இல்லாத காலத்தில் ­பார் இனமக்கள் காட்டுவாசிகளாக இருந்தார்கள். அந்தக் காலம் போனபின் அந்நியர்கள் யாராவது வருவதை அறிந்தாலோ பார்த்தாலோ முயல்களைப் போல காட்டின் இருண்ட பகுதிகளை நோக்கி ஓடி மறைந்தார்கள். அதனால் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அவர்கள் கேடியா ­பார்கள் என்று குறிப்பிடப்பட்டார்களா?

அவ்வினத்தின் வயதானவர்கள் இன்னும் அர்ச்சுனன் மரத்தை வணங்கினார்கள். அது கடவுளின் உருவம் என்று நம்பினார்கள். இப்போது அதன் சாவுக்கு கேது பொறுப்பாகப் போகிறான்.

“சரி எசமான் நான் மரத்தை வெட்டுறேன்'' கேது ­பார் சொன்னான். பத்து ரூபாய் கேட்டு அவன் கையை நீட்டினான்.

“போ, போய் தண்ணி சாப்பிடு'' என்றான் மஹாடோ. “தனியா அந்த வேலையை முடிக்க முடியாது, அதனால ஜெயிலிருந்து இப்ப வெளிய வந்த எல்லாரையும் கூட வச்சிக்கோ. உங்க எல்லாரையும் நான் நல்லா கவனிச்சிக்கிறேன்''.

ராம் ஹல்தாரின் கைவரிசை ஒன்று இரண்டு மரங்களோடு நிற்கவில்லை. முதலில் அவன் ‘காட்டைக் காப்போம்' என்று போஸ்டர் ஒட்டினான், பிறகு காட்டைக் கொள்ளையடித்தான். கோடாரியை எடுத்த கைகள் அனைத்தும் டார்ச் லைட், கைக்கடிகாரம், பளபள ரேடியோ, கேசட் பிளேயர், சைக்கிள் அப்புறம் அளவுக்கு மீறிய சாராயம் என்ற பரிசுகளால் நிரம்பின. அவரவர் சக்திக்கும் தகுதிக்கும் ஏற்ப. ஆனால் விளைவு ­பார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தப்பு செய்தவர்கள் செய்யாதவர்கள் என எல்லோரும் காட்டிலாகாவாலோ, போலிஸாலோ மறுபடி மறுபடி கைது செய்யப்பட்டார்கள்.

இதில் மஹாடோ கொடுத்த கூலி இன்னும் மிக அதிகம். அவர்களுக்கு வேறு யார் அவ்வளவு தருவார்கள்?

“சரி, நான் இப்போ டவுனுக்குப் போறேன், ஒரு கூட்டம் இருக்கு... போஸ்டர் கொஞ்சம் அடிக்கனும். போஸ்டர் இல்லாம எப்படி பிரச்சாரம் பண்ண முடியும்?''

“எனக்கும் கொஞ்சம் குடுங்க எசமான்''.

“எதுக்கு, ஒட்டி வைக்க உனக்கு சுவர் இருக்கா?''

“இல்ல இல்ல எசமான், தூங்கும் போது தரையில போட்டு படுத்துக்குவேன். குளுரு கொஞ்சம் எலும்பைக் குத்தாம இருக்கும்''.

“சரி சரி. இரண்டு மூணு நாளுல மரத்தை வெட்டிடனும். நான் திரும்பி வந்தவுடனே அத எடுத்துப் போகணும்''.

“அர்ச்சுனன் மரத்தையா எசமான்?''

“ஆமாம் அந்த மரம்தான். அந்த நல்ல மனுசன் மகாபாத்ராவுடைய சாவு போலத்தான் இதுவும் இருக்கும்''. மங்கி குல்லா போட்டு சுவட்டர் மூடிய மஹாடோ பனிப் படர்ந்த இருட்டில் சென்று மறைந்தபோது தனக்குள் சொல்லிக் கொண்டான். கேது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். ஏதாவது வழி சொல்லுவார்களா என்று பார்க்க அவனுடைய நண்பர்கள் பனாமலி, திகா, பீதாம்பர் மூவரையும் தேடிச் சென்றான்.

அவன் தன்னுடன் சாராயத்தைக் கொண்டு சென்றதால், அவர்கள் அன்போடு வரவேற்றார்கள். அவர்கள் எல்லோரும் கோடாரியைப் பயன்படுத்தியவர்கள். இப்போது தான் எல்லோரும் ஜெயிலிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். கோடாரி பிடிப்பவர்கள் எல்லாம் ஜெயிலுக்குப் போகிறார்கள், இதுதான் இந்த நாட்டின் சட்டம். எல்லாருக்கும் தெரிந்தது போலவே, ராம் ஹல்தார் புரூளியாவிலும், பங்கூராவிலும் அரண்மனை போன்ற வீட்டைக் கட்டுவான். அதுதான் விதி. அதனால் அவர்கள் இருக்கும் நிலையை மாற்ற என்ன செய்ய இருக்கிறது?

“யோசிச்சிப் பாக்கிறேன்'' திகா சொன்னான். அவர்களில் திகா கொஞ்சம் மரியாதையுடன் நடத்தப்பட்டான். அவன் முறைசாரா கல்வி மையத்தில் முழுசாக நான்கு நாள் படித்திருக்கிறான். எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டான்.

அந்த நான்கு ­பார்களும் சாராயத்திலும் யோசனையிலும் மூழ்கிப் போனார்கள். பண்டிகைக் காலத்திலும், கல்யாண சமயங்களிலும் அவர்கள் மேளம் அடித்தபடி மரத்தை வலம் வருவதுண்டு. அவர்களுடைய வேண்டுதல் ஏதும் நிறைவேறிவிட்டால், அந்த இன மக்கள் தங்கள் முடியைக் காணிக்கையாகத் தந்து அந்த மரத்தடியில் நல்ல புண்ணியம் கிடைக்க புதைத்து வைப்பார்கள். திகாவுடைய அப்பா அந்த மரத்திற்கு மூலிகை சக்தி இருப்பதாக சொல்லவில்லையா என்ன?

குடிபோதையில் பீதாம்பர், “அந்த ­ந்தால் ஜனங்கள் கூட பத்னா ஜகோரன் பண்டிகையின் போது பசு ஆட்டத்திற்காக இங்க வருவாங்களே'' என்று ஆச்சரியத்துடன் சொன்னான்.

என்ன கஷ்டகாலம்! மரத்தை வெட்டினா ஜெயிலுக்குப் போகணும், மரத்தை வெட்டலன்னாலும் ஜெயிலுக்குத்தான் போகணும். ­பார் ஜனங்கள் என்ன செய்வது? வளர்ந்து கொண்டிருக்கும் பந்திகி கிராமம் முன்பு காடு இருந்த இடத்திலேயே இருக்கிறது. இப்போது வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அதில் ­பார் ஜனங்களுக்கு ஒன்னும் உரிமை கிடையாது.

நீண்ட யோசனைக்குப் பிறகு, திகா சொன்னான், “நாம மட்டும் தனியா எதுக்குப் பழியை சுமக்கணும்? ­பார் ஜனங்க மட்டும் எதுக்கு பொய் கேசுல மாட்டிக்கணும்? மத்தவங்களுக்கும் இதைச் சொல்லப் போறேன். அவங்களும் அர்ச்சுனன் மரத்தை கும்பிடறாங்கதானே. என்ன சொல்லறீங்க?''

அந்தச் சந்தியில் அர்ச்சுனன் மரம் எவ்வளவு காலமாக இருக்கிறது என்று யாருக்குத் தெரியும். இவ்வளவு காலமும் அதை யாரும் கவனித்துப் பார்த்ததில்லை. நினைவுக்கு எட்டாத காலத்திலிருந்து அங்கே இருந்து வருவது போலவும் இன்னும் காலங்கடந்தும் அது அங்கு இருக்கும் என்பது போலவும் அது தோற்றம் தந்தது. ஆனால் இப்போது திடீரென்று எல்லாருக்கும் அது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அவர்கள் வாழ்க்கையின் ஒரு குறியீடு போல தோன்றியது.

வனத்துறை காட்டை மட்டும் பராமரிக்கவில்லை, தரிசு நிலங்களுக்கும் அதுதான் பொறுப்பு. அதனால் ­பார்கள் எங்கு போக முடியும்? அவர்கள் அங்கும் இங்கும் அலைபாயத் தொடங்கினர். எங்கே கொஞ்சம் பச்சையான காடு தென்படுகிறதோ அங்கே அவர்கள் குடியேறுவார்கள். பிறகு காடு கொஞ்சமாக மறையத் தொடங்கும். தரிசு நிலங்கள் பிறருக்கு விற்கப்படும். மறுபடியும் ­பார்கள் இருக்க இடமற்று தெருவில் நிற்பார்கள்.

அர்ச்சுனன் மரம் இளசாக இருக்கும் போது ­பார்கள் வேட்டைக்குக் கிளம்பும் முன் அதற்கு பூசை செய்வார்கள். இப்போது அது வளர்ந்துவிட்டது, எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. பளபளக்கும் பட்டைகளுடன், வனைத் தொடும் உச்சியுடன். பௌர்ணமி நாளில் நிலா வெளிச்சமும் மரமும் ஒன்றாகக் கலந்தது போல தோற்றம் தரும். சைத்திர மாதத்திலும் பைஷாக மாதத்திலும் அதன் கிளைகள் அவ்வளவு பரந்த நிழலைத் தரும். அது அவர்கள் வாழ்க்கையில் பிணைந்திருந்தது. சந்தியில் நின்ற அந்த அர்ச்சுனன் மரம்...

“எவ்வளவு காலமா இந்த அர்ச்சுனன் மரம், நம்மள காப்பாத்தி வருது? இந்த ஒரே மரம் நமக்கு ஒரு முழு காடு போல. கொஞ்சம் மீந்து இருக்கிற நம்ம குடும்பம் எல்லாம் காட்டோட பிள்ளைங்க. இப்போ மஹாடோவுக்கு அந்த மரம் தான் வேணுமாம்?''

“நாம என்ன செய்ய முடியும்? எல்லாமே பிஷால் முதலாளிக்கும், ராம் முதலாளிக்கும் தான் சொந்தம்''.

“நாம வீடு கட்டறதுக்கு முன்ன வரைக்கும் நாம அர்ச்சுனன் மரத்தடியிலதான் வாழ்ந்தோம். பிறகுதான் மஹாடோ நாம குடிசை கட்ட இடம் கொடுத்தாரு...” பீதாம்பர் பேசிக்கொண்டு சென்றான்.

திகா இடையில் புகுந்து, “ஹால்தார் அவங்க குடிசைகளை எரிச்சப்போது, ­ந்தால் ஜனங்கள் நம்ம மரத்தடியில தானே அடைக்கலம் தேடி மனசு ஆறினாங்க இல்லையா?'' என்று கேட்டான்.

ஒருவர் பின் ஒருவராக அர்ச்சுனன் மரத்தைப் பற்றிய கதைகளை நினைவுபடுத்தத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையும், கதியும் பிரிக்கமுடியாத அளவுக்கு அர்ச்சுனன் மரத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்ந்தார்கள். சமூகமும், அமைப்பும் இந்த மிகச் சொலபமாக ஆதிவாசிகளை தொடர்ந்து துன்புறுத்தி, சுரண்டி ஏறக்குறைய இந்த மண்ணிலிருந்தே துடைத்தழித்து விட்டது. இப்போது அதே கதி அவர்களுடைய இருப்பின் கடைசி மெளனக் குறியீடான இந்த அர்ச்சுனன் மரத்திற்கு ஏற்பட இருக்கிறது.

“பிஷால் முதலாளி டவுனுக்கு போகப் போறார், அவர் போறதுக்குள்ள பணத்தை வாங்கிடனும்'' என்றான் திகா.

“அப்படின்னா நீங்க மரத்தை வெட்டப் போறீங்களா?''

“அதுக்கு அஞ்சு பேர் போதும். நாம்ப நூறு ரூபா கேப்போம், என்ன சொல்றீங்க?''

“நீ ஜெயிலுக்குத் தான் போக வேண்டியிருக்கும்''.

தொடர்ந்து ஜெயிலுக்குப் போய் வரும், தொடர்ச்சியாக சமூகத்தால் சுரண்டப்படும் ­பார் மக்களுக்கு தங்களுடைய உண்மையான எண்ணங்களையும், உணர்வுகளையும் பொத்தி மறைத்துக்கொள்ள பழக்கி விட்டிருந்தது. ஒரு முகம் மட்டும் மஹாடோகளுக்கு காட்டப் பட்டபோது இன்னொரு முகமோ மறைக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது போலிஸ் ஸ்டேஷனுக்கும், செக் போஸ்டுகளுக்கும் தீ வைக்கும் வேலையை நம்பி ஒப்படைக்க உகந்தவர்களாக இருந்தவர்கள் இந்த ­பார் மக்கள்தான்.

இன்றும் எஜமானர்கள் நிலங்களை ஆக்கிரமித்தல், விளைச்சலைக் கொள்ளை அடித்தல், பிணங்களை வெளியே தெரியாமல் மறைத்தல் போன்ற முக்கியமான செயல்களுக்கு அதே ­பார்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். அதனால் ஒரே ஒரு மரத்தை வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகும் அளவுக்கு யார் அவ்வளவு முட்டாளாக இருப்பார்கள்?

திகா கவனம் நிரம்பிய சூழச்சியுடைய சிரிப்பைக் காட்டினான். "நீங்க அதைப்பத்தி கவலை படாதீங்க” என்றான் அவன். என்ன இருந்தாலும் இவனுக்கு எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியும். ஜாம்ஷெட்பூர், சைபாஸா, மேதினிபூர், பங்கூரா மாவட்ட சிறைகளில் இருந்திருக்கிறான். பிஷால் முதலாளியிடம் அவன் டவுனிலிருந்து திரும்பி வருவதற்குள் வேலை முடிந்திருக்கும் என்று உறுதி கூறப்பட்டது. “போய் நிம்மதியா எலக்ஷன் கூட்டத்தை நடத்துங்க. எங்களுக்கு பணத்தை குடுத்துடுங்க. நீங்க திரும்பி வரும்போது அங்க மரம் இருக்காது''.

“ராம் முதலாளிக்கு இதப்பத்தி சின்ன தகவல் கூட கிடைக்காம பாத்துக்கணும்''.

“ஏன், அவர்தானே உங்களுக்கு டிரக் கொடுக்கிறாரு?''

“ஆமாம், இருந்தாலும் அந்த ஆள் ஏதாவது குழப்பம் பண்ணுவாரு. அதோட வெளியூர்க்காரங்க யாருக்கும் செய்தி பரவாம பாத்துக்கணும்''.

“நாங்க பாத்துக்கறோம் எசமான்''

மேல் பார்வைக்கு அரசியல்வாதிகள் விதவிதமான கொடிகளை ஏற்றினார்கள், ஆனால் உள்¼ள பாலில் போட்ட சர்க்கரை போல இருந்தார்கள். எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்போது எதுவும் ஒரு பிரச்சினை என்று வரக்கூடாது.

பிஷால் பாபு அந்த முட்டாள் ­பார்களுக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தீர்கள், இல்லையா! அது என்ன சொல்வார்கள் முறைசாரா கல்வி! இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களும் பொது மேடையில் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்தார்கள். கட்சித் தொண்டர்களுக்கு இது எதுவும் புரியவில்லை. திட்டுவது, கைகலப்பு, எப்போதாவது ரத்தக்களரி எல்லாம் அரசியலில் அவசியமானது. அர்ச்சுனன் மரம் பற்றியும் சில சச்சரவுகள் ஏற்படப் போகிறது. ஆனால் அப்போது ராம் ஹல்தாரை எவ்வளவு பேர் ஆதரிப்பார்கள்? முழு கிராமமுமே பிஷால் மஹாடோ சொன்னபடி ஆடியது.

நகரத்திற்கு ஒரு தடவை போய் வருவது பைத்தியம் பிடிக்க வைத்துவிடும் என்று பிஷால் மஹாடோ நினைத்தான். அந்தப்பக்கம் பொது மேடையில் கூட்டம், பேச்சு; இன்னொரு பக்கம் கடைத்தெருவுக்குப் போகவேண்டும். நகரத்தில் நிறைய வேலைகள் முடிக்க வேண்டி இருந்தது. வண்டியுடைய விளக்கை சரி செய்ய வேண்டும், புது லாந்தர் விளக்கு வாங்க வேண்டும், வீட்டுக்காரிக்கு போர்வை வாங்க வேண்டும், மருந்து கொஞ்சம்...

பயணத்தில் திருப்தியுற்ற பிஷால் மஹாட்டோ பந்தினிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். இந்த ஓட்டுப் பிரச்சினைகள் ஒரு வழியாக தீர்க்கப்பட்டுவிட்டது. அட கடவுளே! ஊருக்குப் போக சரியான ரோட்டை எப்போது தான் போடுவார்கள். நெங்ஷாய், தேட்கா அப்புறம் ஓடைக்கு மேல் ஓடைகள் பிறகு மூங்கில் பாலம் வழியாக போகவேண்டும். அதற்குப் பிறகு வழுக்கக்கூடிய மேடுபள்ளமான அந்தக் கொடுமையான பாதை.

ஆனால் கிராமத்தை நெருங்கிய போது அவனுக்குத் தலை சுற்றியது. நீலவானப் பின்னணியில் அர்ச்சுனன் மரம் அந்த கிராமத்தைத் தன் காவல் மேடையிலிருந்தபடி காவல் காத்து நிற்பதுபோல கம்பீரமாக தோற்றமளித்தது. ஒரு காலத்தில் இந்த நிலம் நூற்றுக்கணக்கான இலை நிறைந்த படை வீரர்களால் காவல் காக்கப்பட்டதுண்டு. ஒவ்வொன்றாக அவர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள். அர்ச்சுனன் மட்டுமே தனித்து விடப்பட்டான். நாசமடைந்த, புறக்கணிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட அவனது மண்ணில் தன்னந்தனியாக.

பிஷால் மஹாடோவின் மனதில் தானாகவே ஒரு பழமொழி தோன்றி மறைந்தது, “அர்ச்சுன மரத்தின் இலைகள் மனிதனின் நாக்கு போன்றவை''. சுற்றிலும் இருந்து டோல், தம்ஸா, தமக், மேளங்களும் நக்ராவும் ஒலியை எழுப்பின. கலவரமடைந்த பிஷான் மஹாடோ கிராமத்தை நோக்கி விரைந்தான். அர்ச்சுனன் மரத்தைச் சுற்றி பெருங்கூட்டம் கூடியிருந்தது. அதன் அடிமரம் மலர் மாலைகளால் மூடப்பட்டிருந்தது. ஹல்தார் தன் சைக்கிளைப் பிடித்தபடி கூட்டத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சி?'' மஹாடோ கேட்டான்.

“கிராம தேவதை இதைச் செய்யச் சொல்லியிருக்கு'' ஹல்தார் சொன்னான்.

“என்? எந்த நாசமாப் போன பையன் அப்படி சொன்னான்?''

“திகாவுக்கு ஏதோ கனவு வந்திருக்கு. அவன் கனவுல பணம் கொடுத்து இந்த மரத்தைச் சுத்தி கல்மேடை கட்டணும்னு நீ சொல்லியிருக்கு. ­ந்தால், கேடியா, ஷோகிஷ், பூமிஜ் எல்லா ஆதிவாசி ஜனங்களும் பூஜை செய்ய கூடியிருக்காங்க''.

“கிராம தேவதைக்கா?''

“ஆமாம், கூட்டம் வர்றது இன்னும் நிக்கல. உண்மையில ஒரு பெரிய திருவிழா தான் நடக்குது. நாம இந்த பசங்களை முட்டாளுங்கன்னு நினைச்சோம். ஆனா அவனுவ நம்மள முட்டாளாக்கிட்டானுவ மஹாடோ''

தனக்கு நேர்ந்த தோல்வியை முழுசாக பார்க்க பிஷால் இன்னும் முன்னோக்கிச் சென்றான். எவ்வளவு பெரிய கூட்டம்! கேது தனது டோலக்கை அடித்தபடி வெறி பிடித்தவன் போல சுற்றிச் சுற்றி ஆடிக் கொண்டிருந்தான். பிஷாலுக்கு திடீரென அச்சம் தோன்றியது. இந்த மரம், இந்த ஜனங்கள் எல்லாரையும் அவனுக்கு தெரியும். நன்கு தெரியும். இருந்தாலும் அப்போது வேறு யாரோ போல தோன்றினார்கள். பயம். ஒரு இனம் தெரியாத பயம் அவனைப் பற்றிக் கொண்டது.

ஆங்கிலத்தில் மிருதுலாநாத் சக்ரபர்த்தி