Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - டிசம்பர் 2007


தரிசு நிலத்தில் நங்கூரமிடப்பட்ட தோணி
மாலதி மைத்ரி


மீனவ மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சுனாமி வாரி சுருட்டிக்கொண்டு போய் மூன்றாண்டாகப் போகிறது. அரசும் தொண்டு நிறுவனங்களும் சுனாமியை காட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கான கோடிகளை நிதியாக பெற்றனர். அந்நிதி முறையாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர பயன்படுத்தப்பட்டதா? கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி, விழா எடுத்து பொதுமக்களுக்கு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்துவிட்டதாக அரசும், தொண்டு நிறுவனங்களும் தம்பட்டம் அடித்துக்கொண்டன. மீனவர் சமூதாயத்தில் தங்கள் பணி முடிந்து விட்டது என்று அரசும் தொண்டு நிறுவனங்களும் கடற்கரைக் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டன.

ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சாலைமறியல் என்ற செய்தி தற்போது தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அரசு அவர்களுக்கு சில வாக்குறுதிகளை தருகிறது. அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென மீண்டும் மீனவர்கள் சாலைமறியல் செய்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்கதையாக போய்க் கொண்டிருக்கிறது மீனவர்களின் போராட்டங்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரை மாவட்டங்களில் ஆகஸ்டு - அக்டோபர் மாதங்களில் வாக், மும்பை சார்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. சுனாமிக்குப்பிறகு தற்காலிக முகாம்களிலும் சுனாமிப் புதுக்குடியிருப்புகளிலும் வாழும் பெண்களின் நிலை பற்றிய ஆய்வறிக்கையின் ஒரு பகுதி இது.

தமிழகத்தில் முதல் தவணையாக 54,667 வீடுகள் 31 ஜூலை 2007க்குள் கட்டித்தரப்படுமென அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் 33,226 வீடுகளை தொண்டு நிறுவனங்களும் 22,002 வீடுகளை அரசும் வழங்குவதாக இருந்தது. இந்த ஆண்டு ஜூலை முடிவில் தொண்டு நிறுவனங்களால் 24,544 வீடுகளை மட்டுமே தர முடிந்திருக்கிறது. அரசால் 22,002 வீட்டில் வெறும் 5,346 வீடுகளை மட்டுமே கட்டித்தர முடிந்திருக்கிறது. 9,331 வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதல் தவணைக்குத் தேவைப்படும் இன்னும் 16,007 வீடுகளைக் கட்டித்தருவதற்கான எந்த அறிகுறியும் கடற்புரத்தில் தென்படவில்லை.

அதே போல் புதுச்சேரி மாநிலத்தில் முதல் தவணையாக 7000 வீடுகளும் இரண்டாம் தவணையாக 7000 வீடுகளும் கட்டித்தரப்படுமென வாக்குறுதி தரப்பட்டது. இரண்டாவது கட்ட தவணையை அரசு தொடர இப்பொழுதுதான் நிலம் வாங்கப்பட்டுள்ளது. மிக அதிகமான உயிர்பலி கொண்ட காரைக்கால், பட்டினச்சேரி கிராமத்தில் கூட இன்னும் பெண்கள் தற்காலிகக் குடியிருப்பு களிலேயே வாழும் அவலம் தொடர்கிறது.

கட்டி முடிக்கப்பட்ட பல தொகுப்பு வீடுகளுக்கு மின் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, வெள்ளவடிகால் வசதியில்லை. கடற்கரையிலிருந்து மீனவர்களை அள்ளிவந்து வெட்டவெளியில் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர். இங்கு காக்கை அமரக்கூட நிழலில்லை. எச்சித்துப்பினால் கூட அடுத்த வீட்டுக்குள் தான் போய் விழும். அடுத்தடுத்த வீடுகளுக்கிடையே பகைமை இப்போதே மூண்டுவிட்டது.

இறந்தவர்களுக்கான இழப்பீடு


பல இடங்களில் இறந்தவர்களுக்கான இழப்பீடு மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து இரண்டு லட்சம் வழங்கப்பட்டாலும் சில இடங்களில் மத்திய அரசின் இழப்பீட்டுத் தொகையான ஒரு லட்சம் இன்னும் வழங்காமல் மீனவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். கடலூர் சொத்திக்குப்பம் கிராமத்தில் மட்டும் 23 குழந்தைகள் சுனாமிக்கு பலியாயினர். அதில் 22 குழந்தைகளின் சடலங்கள் கிடைத்தன. கவியரசன்(8) என்ற சிறுவனின் உடல் கிடைக்கவில்லை. அதனால் அக்குடும்பத்திற்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இரண்டு வருடம் போராடி வழக்கில் வெற்றி அடைந்து அந்நிதியை பெற்றுள்ளனர். மரணச்சான்றிதழும், காணாமல் போன சான்றிதழும் தர கிராம நிர்வாகி, போலீஸ் அதிகாரி, தாசில்தார் அலுவலக ஊழியர், வருவாய்த்துறை அதிகாரி இப்படி அனைவரும் இவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு வருடமும் ஒழுங்காக வேலைக்கு போகாமல் அதிகாரிகளிடமும் கோர்ட்டுக்கும் நடந்து கிட்டதட்ட 45 ஆயிரம் கடன் வாங்கி செலவு செய்துதான் 2 லட்சம் கிடைத்திருக்கிறது. அக்குழந்தையின் தாயும் பாட்டியும் இதற்காக அலைந்த அலைச்சலும் பட்டத் துன்பமும் ஏராளம். அவர்களின் குழந்தை இழந்த துயரம் ஒரு புறம். தாங்கள் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற விரக்தி ஒரு புறமாக இந்த இரண்டு வருடத்தை கழித்துள்ளனர். தற்போது அவர்கள் ஆரோக்கியமான மனநிலையிலும் உடல்நிலையிலும் இல்லை. கண்ணீர்வற்றிய முகத்துடனும் சருகான உடல் தோற்றத்துடனும் இருக்கின்றர்.

உறவுகளை இழந்த வளரிளம் பெண்கள்

சுனாமிக்கு தாயை அல்லது பெற்றோரை பலிகொடுத்த வளளம் பெண்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் வளரிளம் பருவ மனச்சிக்கல்களுடன் கல்வியையும் தொடர வழியற்று வீட்டில் முடக்கப்பட்டுள்ளனர். திருமணமாகாத இளம் பெண்கள் மீன் விற்க செல்லும் வழக்கம் இல்லை என்பதாலும் வேறு வேலைகள் எதுவும் தெரியாது என்பதாலும் பிற உறவினரை சார்ந்து வாழும் நிலையில் தவிக்கின்றனர். இப்பெண்கள், தங்கள் உறவினருக்கு இரண்டாம் மனைவியாக்கப்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. சில இளம் பெண்கள் தங்கள் தாய் மாமனுக்கோ அல்லது அக்காவின் கணவனுக்கோ இரண்டாம் மனைவியாக்கப்பட்டுள்ளனர்.

சுனாமியில் மனைவியை இழந்த ஆண்கள் பெரும்பாலும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டனர். கணவனை இழந்த நடுத்தர வயது பெண்கள் தங்கள் வளர்ந்த குழந்தைகளுடன் துணையின்றி வாழப் பழகிவிட்டனர். ஆனால் கணவனை இழந்த இளம் பெண்களுக்கு இச்சமூகமோ அவர்களின் குடும்பமோ வாழ்க்கை துணையைத் தேடித் தரவில்லை. அவர்களுக்கு கல்வியறிவும் இல்லை. எந்த தொழிலும் தெரியாது. தனது சிறு குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் - இப்பெண்களும் அவர்களின் குழந்தைகளும் உறவினரை சார்ந்து அவர்களின் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்காலிக குடியிருப்பில் பெண்கள்

600க்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய காரைக்கால், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் தற்காலிக குடியிருப்பில் வசிக்கும் பெண்களின் நிலை மிக பயங்கரமான அவலத்தில் காட்சியளிக்கிறது. மிகச்சிறிய டெண்டில் இந்த இரண்டரை வருடங்களாக மழையிலும் வெய்யிலிலும் அல்லலுறும் துன்பம். மழைக்காலங்களில் கோயில் அல்லது பொது இடங்களில் இருப்பதை வாரிச்சுருட்டிக்கொண்டு தங்க வேண்டியிருக்கிறது. இóத சிறிய டெண்டுக்குள்ளேயே சமைத்து, உண்டு, உறங்கும் நிலை. குழந்தைகள் படிக்கவோ அவர்களின் புத்தகங்களை வைக்கவோ கூட அங்கு இடமில்லை. குழந்தைகளின் கற்கும் சூழல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்கள் குளிக்க, உடைமாற்ற, உடல் உபாதைகளை போக்க பொது இடங்களை இரவு நேரங்களில் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. பகல் நேரங்களில் மலம் கழிப்பதை தள்ளிப்போடுவதால் அவர்கள் மலச்சிக்கல் தொடர்பான உடல் நலக்குறைவுக்கு ஆட்படுகிறார்கள். இந்த கட்டுப்படுத்தப்பட்ட வாழ்நிலை அவர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது. மீன் வியாபாரம் செய்த பெண்கள் சுனாமிக்குப்பிறகு மீன் வியபாரத்தை தொடர முடியவில்லை. கதவுகளற்ற டெண்டில் இருக்கும் சொச்ச பாத்திரப்பண்டங்களை பாதுகாக்கவோ அல்லது சமைத்த உணவை பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்காக நாய்களிடமிருந்தும் காப்பாற்றவோ வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கிறது.

குடும்ப பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் கணவன் குடித்துவிட்டு வருவதும் அது தொடர்பாக சண்டை நிகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது. அதிக உயிழப்பு நிகழ்ந்த கிராமங்களில் ஆண்கள் பழையபடி மீன் பிடிக்கச் செல்வது வெகுவாக குறைந்துவிட்டது. இதனாலும் குடும்ப வருமானம் பாதிக்கப்படுகிறது. பெண்கள் கடன் வாங்கி குடும்பத்திற்கு உணவளித்தல் குழந்தைகளின் கல்விச் செலவு, உறவுகளின் சடங்கு மற்றும் விழாக்கான செலவு என எல்லா செலவுகளுக்கும் பெண்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. இந்த பொருளாதார சிக்கல், கணவன் மனைவி உறவுக்கிடையே மேலும் விரிசலை அதிகப்படுத்தியிருக்கிறது. சுனாமியில் தங்கள் குழந்தைகளையும் உறவுகளையும் இழந்து பொருளாதாரமும் சீர்குலைந்து பொதுவாக ஒரு பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட மனநிலையுடனும் நிம்மதியற்றும் கண்களில் கலக்கத்துடனும் பெண்கள் காணப்படுகின்றனர்.

இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் பாதிக்கப்பட்ட மீனவர் அனைவருக்கும் சுனாமி வீடுகள் கட்டி தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தவிர்ப்பதற்காக, சில தற்காலிக குடியிருப்புகளை அரசே பலவந்தமாக நீக்கியிருக்கிறது. சில கிராமங்களில் தற்காலிக முகாம்கள் அப்படியே தீக்கு இரையாகியுள்ளன. இதை மீனவர்கள் விபத்து என்று எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அக்குடும்பங்களை அவர்களின் உறவினர் குடும்பங்களுடனோ அல்லது வாடகை வீட்டிலோ தங்குமாறு நிர்பந்தித்துள்ளனர். அதனால் ஒரே வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் வாழ வேண்டிய சூழலும் தொடர்கிறது.

சுனாமி புதுக்குடியிருப்பில்
பெண்களின் நிலை


பேரிடர் மேலாண்மையை நினைவில்கொண்டு, சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளை தாங்கும் சக்தி கொண்டதாக சுனாமிக் குடியிருப்புகள் கட்டப்படுமென அரசும் தொண்டு நிறுவனங்களும் வாக்குறுதி அளித்தன. ஆனால் சுனாமிக்கு கட்டப்பட்ட 60 சதவீத வீடுகள் தரமற்று உள்ளன. இடிச் சத்தத்துக்கே இடிந்துவிழும் நிலையில் உள்ளன. பெரும்பாலான வீடுகளின் தரை, சுவர், தளம் இப்போதே விரிசலும் வெடிப்புமாக காணப்படுகிறது. பலவீடுகளில் கதவுகளும் சன்னல்களும் நெளிந்து சட்டத்துடன் பொருத்தி பூட்ட முடியவில்லை. வெயிலும் மழையும் உள்வராமல் தடுக்க எந்த தடுப்பும் வீட்டுக்குள் இல்லை.

சில குடியிருப்புகளில் பிளாஸ்டிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் ஆணிகள் பெயர்ந்து சட்டமும் கதவுகளும் கையோடு கழன்று வருகின்றன. இக்கதவுகளையும் சட்டத்துடன் பொருத்தி பூட்ட முடியவில்லை. சில பகுதிகளில் கழிப்பறைக் கோப்பைகளை மட்டும் பதித்துவிட்டு கழிவுநீர்த்தொட்டி கட்டாமல் விட்டுவிட்டனர். குடியிருப்புகள் பள்ளமான பகுதியில் கட்டித் தரப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் வெள்ளம் சூழும் அபாயமும் உள்ளது.

325 சதுர அடிவீட்டில் மூன்று நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு படுக்க, சமைக்க, வலைகளை வைக்க இடமில்லாமல் அவதிபடுகின்றனர். சமையல் செய்ய எந்தவிதமான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. சமையல் மேடை மற்றும் பாத்திரம் வைப்பதற்கான அடுக்கு பலகைகளோ பரணோ இல்லாமல் வீடு முழுவதும் பொருட்கள் சீர்படுத்தபட முடியாமல் இரைந்து கிடக்கிறது.

நிறைய இடங்களில் கழிப்பறைக் கோப்பையை மட்டும் பதித்துவிட்டு கழிவுநீர்த் தொட்டிக் கட்டாமல் போய்விட்டனர். கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. கடலூர் முழுக்குத்துறை கிராமத்தில் சுனாமிக் குடியிருப்பு கட்டுவதற்காக அந்த இடத்தைச் சுற்றியுள்ள முள்புதர்களையும் செடிகளையும் வெட்டி அழித்துவிட்டனர். பெண்கள் பகலில் மலம் கழிக்க மறைவிடங்களைத் தேடி பல மைல்கள் செல்ல வேண்டியிருக்கிறது. இருட்டிய பிறகோ அல்லது கருக்கலிலோ வெட்டவெளியில் மலம் கழிக்க வேண்டும். பெண்களுக்கு பகல் முழுவதும் இயற்கை உபாதைகளை தாங்கிக்கொள்ள பழக வேண்டியிருக்கிறது. இதன் தொடர்பான உடல் நோய்களால் கஷ்டப்படுகிறார்கள்.

சுனாமிக்கு பிறகு கடற்கரைக் கிராமங்களில் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் சொத்திக்குப்பம், முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் குடிநீர் குடிக்க முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது. சில கிராமங்களில் ஒரு பானை நீர் இரண்டு ரூபாய் என ஒரு குடும்பத்திற்கு சமைக்கவும் குடிக்கவும் பத்து பானை குடிநீருக்காக இருபது ரூபாய் தினமும் செலவு ஏற்படுகிறது. செலவை ஏற்க முடியாத மிகவும் வறிய குடும்பங்கள் கடற்கரையில் ஊற்று தோண்டி கையளவு சுரக்கும் கெட்டுப்போன நிலத்தடி நீரையே சேகரித்து குடிக்கின்றனர். நீரால் உருவாகும் அனைத்து வியாதிகளும் இவர்களின் உடல்நிலையை மோசமாக்குகிறது. காசு போட்டு தண்ணீர் வாங்குவதால் சிக்கனம் கருதி பெண்கள் மிக குறைந்த அளவே தண்ணீரை பயன்படுத்த நேர்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார குறைவு, ஆரோக்கிய குறைவு பெண்களின் மன, உடல்நிலைகளை பாதிக்கிறது.

சுனாமியில் அடிபட்ட பெண்களும் அவர்களின் குழந்தைகளும் இப்போதுகூட தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுனாமிக்கு பிறகு மீனவக் குடும்பங்களில் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் குடும்பச் செலவுகள் அதிகத்துள்ளன. குறிப்பாக மருத்துவச் செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான பொருளாதார நிர்பந்தம் அதிகத்துள்ளது. குறிப்பாக எண்ணூர் மீனவப் பெண்கள் சுனாமிக்கு பிறகு தனது குடும்ப செலவுகளை ஈடுகட்ட அதிக அளவில் சிறுநீரகங்களை விற்ற கதை நமக்குத் தெயும்.

மீனவச் சமூகத்தின் மிக சிறந்த அம்சம் தங்கள் வயதான பெற்றோரை பிற சமூகத்தினரை போல் அனாதையாக கைவிட்டுவிட மாட்டார்கள். சிறிய குடிசையாக இருந்தாலும் சமையல் கொட்டாய் என்று ஒன்று இருக்கும், முதியவர்கள் பகலில் மரத்தடியில் பொழுதைக் கழித்தாலும் இரவில் சமையல் கொட்டாவில் உறங்குவர். புதிய சுனாமிக் குடியிருப்புகளில் வீட்டைச் சுற்றி போதுமான இடமில்லாததால் வயதான பெற்றோரை சமையல் கொட்டா கட்டி அதற்குள்ளும் வைத்துக்கொள்ள இடமில்லை.வீட்டுக்குள்ளும் வைத்துக்கொள்ள இடமில்லை.

இப்புதிய வீடு இவர்களின் உறவுகளை பிரிந்தும் கைவிட்டும் வாழும் நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது. வயதானவர்கள் கடற்கரையோரம் சிறிய குடிசை போட்டுக்கொண்டு தனிமையில் வாழும் நிர்கதிநிலை உருவாக்கப்பட்டுள்ளது. சீர்காழி, தொடுவாய் கிராமத்தில் தாயை கடற்கரையில் ஒரு குடிசையில் தனியே விட்டுவிட்டு நான்கு கிலோ மீட்டர்கள் தள்ளியுள்ள சுனாமி குடியிருப்பில் அவள் மகளும் மருமகனும் வாழ வேண்டியிருக்கிறது. தன் தாயை வைத்துக்கொள்ள இடமில்லை. வயதான பெண்கள் பெரும்பாலும் மீன், கருவாடு விற்பதால் அவர்கள் கடற்கரை அருகில் இருந்தால்தான் பிழைக்க முடியும். அரசின் தவறான முடிவால் கடற்கரையைவிட்டு பல கிலோ மீட்டர் தொலையில் சுனாமிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

புது இடத்திலிருந்து பெண்கள் கடற்கரைக்கு தினமும் காலையில் நான்கு, ஐந்து கிலோ மீட்டர் நடக்க வேண்டிய நிர்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. மீன், கருவாடு விற்க தெருத்தெருவாக தினமும் ஒரு பத்து கிலோ மீட்டர் நடக்கும் இப்பெண்கள் இப்பொழுது பதினாறு அல்லது பதினெட்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இச்சிரமத்தை கருதி நடுத்தர மற்றும் வயதான பெண்கள் தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து கடற்கரை அருகிலேயே குடிசை போட்டுக்கொண்டு வாழ்கின்றனர். தாய் ஒரு பக்கமும் பிள்ளைகள் ஒரு பக்கமுமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி வீடுகள் ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்படாமல் 80 சதவீத குடும்பங்களுக்கு கொடுத்துவிட்டு 20 சதவீத குடும்பங்களை நிர்கதியாக்கியுள்ளனர். இதனால் ஒரே கிராமத்திற்குள் மீனவர்களிடையே சண்டையும் சச்சரவும் பெருகியுள்ளது. சில கிராமங்களில் சண்டைகள் முற்றி கொலையிலும் போய் முடிந்துவிட்டன.

இச்சண்டைகளால் உருவாகும் உயிழப்பு பொருளிழப்பு என ஏற்படும் நெருக்கடிகள் அரசின் நெருக்கடி, சமூக நெருக்கடி, குடும்ப நெருக்கடி என எல்லா திசைகளிலிருந்து எழும் பிரச்சினைகள் மீனவப் பெண்களைப் பெரிதும் பாதித்துள்ளது. எரிகிற வீட்டில் பிடிங்கியது லாபம் என்ற கணக்கில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் இன்னுமொரு பேரழிவு வராதா என்று கனவில் உள்ளனர். வரும் நிதியில் கணிசமாக கொள்ளையடிக்க.

பேரழிவு நெருக்கடியில் வாழும் மீனவ சமூகத்தை ஒட்டுமொத்தமாக நாடோடிகளாக்க பன்னாட்டு முதலாளிகளும் உள்நாட்டு முதலாளிகளும், அரசியல் கைகூலிகளும் - மனித குல துரோகி எம்.எஸ். சாமிநாதன் தயாரித்து வழங்கிய கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த அசுர தீவிரம் காட்டிவருகின்றனர். மீனவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கடற்கரையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டு, கடற்கரையை ஒட்டு மொத்தமாக பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு விற்கவும் பன்னாட்டு சுற்றுலாத்தலமாக்கவும் உல்லாச விடுதிகளை நிறுவவும் முனைகின்றனர்.

சுனாமிக்கு பிறகு மீனவர்களின் வாழ்வில் விழுந்த பள்ளம் நிரந்தரமாக தூர்க்கப்படாமலும் சமன்படுத்தப்படாமலும் இருண்டு கொண்டிருக்கிறது.தரிசில் தோணியை கொண்டு நிறுத்தி மீனவர்களை வலையை வீசுங்கள் என்கிறது அரசு. மீனவர்களை, நாடோடிகளாக அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து தூரத்திவிட்டு, கடற்கரையில் அணு உலைக் கூடங்களும், பெரிய பெரிய பிரமாண்டமான ரசாயன தொழிற்சாலைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன - அவ்விடுதிகளில் தங்க வரும் விருந்தினர்களின் எச்சில் தட்டை, கழிப்பறையை கழுவவும், மேசையை துடைக்கவும் நம் மக்கள். இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது. நம் இளைஞர்கள் மீன் பிடிக்க பழகவேண்டாம், கழிப்பறை கழுவவும் எச்சில் தட்டை சுமக்கவும் தெரிந்தால் போதும் என்கிறது வல்லரசாகப் போகும் இந்தியா.

ஆய்வு குழு

வாக் - மும்பை, சார்பாக ஆகஸ்டு-அக்டோபர் மாதங்களில் பிரிதிவிராஜ், மோகன் தாஸ், மெல்வின், மோதி ராஜ், சரவணபவன், மாலதி மைத்ரி ஆகியோர் அடங்கிய குழுவினரால் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரியில் சுனாமிக்குப் பிறகு மீனவர்களின் வாழ்நிலைக் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.