Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - நவம்பர் 2006


நிற் தகைக்குநர் யாரே?

மாலதி மைத்ரி

சங்கப் பெண் கவிஞர்களின்
கவிதைகள்
தொகுப்பாளர் : ந. முருகேச பாண்டியன்
வெளியீடு: மருதா, விலை. ரூ. 80.
226 (188), பாரதி சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14.


மொழிச்செழுமையும் நிலச்செழுமையும் நிறைந்த சங்கப்பாடல்களை வாசிக்கும்தோறும் அல்லது நினைவுபடுத்தப்படும் போதும் அதன் சொல்வளமும் ஒசை நயமும் ஒருவித போதையை கிளர்த்துகின்றன. வார்த்தைகள் நிலமாகி என்னை ஏந்திக்கொள்கின்றன. குறிஞ்சியின் இளங்குளிர் என்னைத் தழுவுவதை உணர்கிறேன். அடர்வனத்தின் மெல்லிய இருள் சூழ மெல்லோடையின் சலசலப்பை கேட்கிறேன். கொக்குகள் கெளூத்தி மீன்களைக் கவ்விப் பறக்கும் ஆற்றங்கரையில் பசுமை அலையடிக்கும் வயல்கள் பார்வையைக் குளிர்த்துகின்றன. இரவில் சிற்றொலியுடன் மணலில் விழும் புன்னைக்காய்கள் உறக்கம் கலைக்க உடலெல்லாம் உப்புப்பாரிக்க கடற்கரையில் உலாப்போகிறேன்.

சங்கக் கவிதைமொழி தன்னைச்சுற்றி வசீகரமான மாயச் சக்கரத்தை உருவாக்கி ஐந்திணையையும் அதனுள் சுழலவிடுகிறது. அச்சுழல் நமக்குள் கரைகாண முடியாத பிரமையை கட்டிஎழுப்புகிறது. ஒவ்வொருமுறையும் இப்பாடல்களை அணுகும்போது நிராயுதபாணியாக நிற்கச் சொல்லும் ஒரு குரலை நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். அதன் அழகின் முன் என்னை மண்டியிடச் சொல்கிறது. புனிதமான கவிதையின் சடங்கியல் நாடகத் தன்மை என் ஐயங்களை தன்னுள் ஈர்த்துக் குலைத்துவிடுகிது. அதிகாரத்தின் குரல் அய்யாயிரம் ஆண்டுகளாகப் பழுத்து கனிந்தக் வசியக் குரலல்லவா?

இது யாருடைய குரல். கவிஞரின் குரலா, அச்சமூகத்தின் குரலா, அரசின் குரலா? கவிஞரின் குரல் வழியாக அரசும், சமூக அமைப்பும் மக்களுடன் உரையாடுகிறது. இந்த உரையாடல் மனிதரை சமூக மனிதராக்குகிறது. அரசதிகாரத்துக்குப் பணியும் பணிபுரியும் ஊழியராக்குகிறது. வேந்தனின் எல்லையற்ற அதிகாரத்துக்கு அடங்கும் மனவொழுங்கை உருவாக்கும் இலக்கியங்கள் புறமாகவும், ஆணின் எல்லையற்ற அதிகாரத்துக்கு அடங்கும் மனவொழுங்கை உருவாக்கும் இலக்கியங்கள் அகமாகவும் தொகுக்கப்பட்ட பாடல்களில் மிகச்சில கவிஞர்களே எதிர் உரையாடலை சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தியிருப்பதை காணக் கிடைத்துள்ளது (காலத்தில் இவைகள் தப்பிப்பிழைத்தது பேரதிர்ஷ்டமே).

மருதா வெளியீடாக 41 சங்கப் பெண்கவிஞர்களின் 181 கவிதைகள் மொத்தமாக முருகேசபாண்டியனால் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. பெண் மொழி, பெண்ணியம் பற்றிய பேச்சுக்கள் அதிகரித்துள்ள இன்றையச் சூழலில் இத்தொகுப்பு முயற்சி பாராட்டத்தக்கதாகும். ஒரு சில பெண்கவிகளைத் தவிர தனித்தனியே அறியப்படாமல் சிதறி கிடந்த பலரின் பாடல்கள் ஒரே நூலுக்குள் கையடக்கமாக வந்துவிட்டன. இதனால் இத்தொகுப்பு, சங்க பெண் கவிஞர்களுடன் தமிழ் வாசகரை உரையாட அழைப்பு விடுக்கிறது.

சங்க இலக்கியப் பாடல்களான 2384 -ல் 181 பாடல்கள் மட்டுமே பெண்கள் எழுதியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 432 ஆண்கவிஞர்களும் 41 பெண்கவிஞர்களும் என மொத்தமாக 473 சங்கக் கவிஞர்களின் பெயர்கள் நமக்கு தெரிய வருகிறது. ஆசிரியர் பெயர் தெரியாத பலப் பாடல்களும் இதில் உள்ளன. இதுபோல் ஆசிரியர் பெயர் தெரியாத நிறையப் பாடல்களுக்கு ஆண் கவிஞர்களின் பெயரடையாளம் கொடுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. உதாரணமாக செம்புலப்பெயல்நீராரின் பெயரால் அடையாளப் படுத்தப்படும்

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயநீர்ப் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

இக்குறுந்தொகை கவிதையை படிக்கும் தோறும் அல்லது கேட்கும் தோறும் ஒரு பெண்ணின் குரலே எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இக்கவிதையை ஒரு பெண்ணால் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்பதை நிரூபிக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன. அந்நிய ஆணின் மீதான காதலை வெளிப்படுத்தும் பல கவிதைகள் பெண்கவிகளிடம்தான் காண முடிகிறது. தாய் காவல், ஊர்க்காவலை மீறி அந்நிய ஆடவனை நேசிக்கும் பாடல்களும் பெண்களுடையதே.

இதுவரை ஒற்றைவாசிப்பு முறையில் நமக்கு விளக்கமளிக்கப்பட்ட சங்கப் பெண்கவிஞர்களின் பாடல்களை நாம் ஆழ்ந்து படிக்கும்போது, நமக்கு சொல்லப்பட்டவைகள் போக மீதி சொல்லாமல் விடப்பட்ட ஏராளமான தகவல்கள் அதனுள் அமிழ்ந்துக் கிடப்பதை புரிந்துகொள்ள முடியும். அவை பல நுணுக்கமான சமூக விதிகளைப் பேசுவதையும் அதற்கு எதிரான மாற்றுக் கருத்துகளும் விமர்சனங்களும் தமக்குள் மறைபொருளாகப் புதைத்து வைத்திருப்தையும் பன்முக வாசிப்பு மூலம் நாம் அடையாளம் காண முடியும். உதாரணமாக:

நன்முல்லையாரின் 12 பாடல்களில் அன்றையச் சமூகத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றிய சித்தரிப்பின் மூலம் அவர்களின் நசிவையும் அவல இருப்பையும் நாம் அடையாளம் காணமுடிகிறது. இப்பாடல்களை ஒரு வசதிக்காக ஒழுங்குப்படுத்தி வரிசைப்படுத்தினால் 15ந்து வயதிலிருந்து 35ந்து வயதுடைய பெண்களின் இருப்பைப் பற்றிய பதிவுகளாக இக்கவிதைகளை நாம் கொள்ள முடியும்.

அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக்
குரல்அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மா மகள்..
..ல் என வினவுதி, கேள், நீ:
எடுப்பவெ..
..மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
சுரந்தைஅம் செறுவின் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.”

என முடியும் இப்புறநானூற்றுப் பாடல்(340) குன்றிமணிகளை பொறுக்கித் திரியும் சிறுமியைப் பற்றியது. அந்நியன் ஒருவனின் பார்வையில் பட்ட இப்பெண்ணின் பெருமையை பேசும் இப்பாடல் இவள், பனை போன்ற துதிக்கையுடைய யானைப்படைகளை தனியே வெற்றிக்கொண்ட மன்னனுக்கு மணம் பேசப்பட்டவள் என்கிறது. இது ஒரு அரச குடும்பப் பெண்ணைப் பற்றிய பாடல்.

அடுத்து, ஒரு மறக்குலப் பெண்ணைப் பற்றிய புறநானூற்றுப் பாடல்(306)

களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அம்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒள்நுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்துஎதிர் பெறுகதில் யானே; என்னையும்
ஓ.. ... .... வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே

வெற்றி பெற்று வேந்தனோடு நலமாக அவள் கணவன் வீடு திரும்பவேண்டி நடு கல்லை வழிபடும் பெண்ணைப் பற்றி சொல்கிறது. இந்த இரண்டு கவிதைகளும் அரசு, அரசு சார்ந்த வாழ்வியலை பேசும் நன்முல்லையாரின் புறத்திணைக் கவிதைகள். இதைத் தவிர்த்து, அவரின் பிற கவிதைகள் சராசரிப் பெண்ணின் சமூக வாழ்நிலை குறித்த அகத்திணைச் சித்தரிப்புகள். இவைதாம் இவரின் மிக முக்கியமான கவிதைகள். ஒளவையையும் வெள்ளிவீதியையும் தொடர்ந்து நாம் அதிகமாக விவாதித்து வந்துள்ளதால் இவர்களுக்கு அடுத்து அதிகம் கவனம் பெறாமல் போன நன்முல்லையாரின் கவிதைகளை இங்கு வாசிப்புக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டேன். காக்கைப்பாடினியார் 12 கவிதைகளை கொடுத்திருந்தாலும் அரசு, அரசமைப்புக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதன் புகழ் பாடுவதால் அவை பெரிதாக சிறப்பம்சம் அடையவில்லை. ஆனால் நன்முல்லையாரின் 12 பாடல்களில் 10 பாடல்கள் பெண்களின் இருத்தலியல் பிரச்சினைகளில் கவனம் கொள்வதால் இவை பற்றி பேச வேண்டிய அவசியத்தை கோருகின்றன.

இப்பத்துப் பாடல்களை வரிசைப்படுத்தி பொருள்கொண்டால் சங்ககாலப் பெண்ணின் வாழ்நிலைப் பற்றிய ஒரு முழுமையான பார்வை நமக்குக் கிடைக்கிறது. காதல், காமம், ஊடல், பிரிவு இந்த நான்கு தளங்களுக்குள் ஒரு சராசரி பெண்ணின் பொதுவாழ்க்கை மற்றும் அகவாழ்க்கை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இன்றுள்ள நிலையிலேயே இருப்பதை நாம் காண முடியும். சங்ககாலத்திலேயே பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தார்கள் என்றாலும் அவர்களின் சமூக வாழ்க்கை ஆணைச் சார்ந்த வாழ்க்கைதான். அவர்களை விட்டுப் பிரிந்த கணவனுக்காக காலம் முழுதும் வருந்தும் பெண்கள். பரத்தை நோக்கிச் சென்றதால் கணவன் தன்னை வந்துசேர தூதுவிடும் பெண்கள். இப்படியான சித்தரிப்புகளே அதிகம். ஆனால் கடைசியில் இதை பொறுக்க முடியாமல் நன்முல்லையார் ஊரை எதிர்த்து முணுமுணுப்பதும் சாடுவதும் சற்று கூர்ந்து கவனித்தால் கேட்கிறது.

காதல் வசப்பட்ட பெண்ணைப் பற்றிய குறுந்தொகைப் பாடல்(157)

குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென் றன்றது என் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

கோழி கூவியதும். வைகறை என்னும் வாள் வந்து காதலனை தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என அஞ்சுகிறாள் காதலி. இப்போது இவன் போனால் மறுபடியும் எப்போது சந்திப்போமோ என்ற அச்சத்தையும் இப்பாடல் உள்ளடக்கியுள்ளது. வேலை நிமித்தப் பிரிவென்றால் இவ்வளவு அச்சம் தேவையில்லை. சமூகத்துக்கு அஞ்சி பிறர் அறியாமல் சந்தித்துக்கொள்ளும் உறவென்பதால் அப்பெண் வைகறையைக்கண்டு அஞ்சுகிறாள். அல்லது வைகறை என்பதை ஊராகவும் கருத இடமுண்டு. உயிரறுக்கும் வாளாக வைகறை மாறக் காரணம் என்ன?

பூழ்க்கால் அன்ன செங்கால்உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர்மணந்த மார்பே.

இக்குறுந்தொகை(68) குறிஞ்சிப்பாடலில், வாடையில் தான்படும் துன்பத்தைப் போக்கும் மருந்து, நான் மணந்த அவர் மார்பேயன்றி வேறு எதுவும் இல்லை என்கிறது. காமம் என்பது புணர்ச்சி சார்ந்த உணர்வாக குறுக்கப்பட்ட நிலையில் அவன் உடல் அணுக்கமே என் துன்பத்தை போக்கும் என்கிறது. வேறு சில பாடல்களில் தலைவனை பார்த்தாலே போதும் என் உடல் வருத்தம் தொலையும் என்பதும் பெண்ணின் உடல் வேட்கை உளவியல் ரீதியாக பல தளங்களில் ஆணின் இருப்பைக் கோருவதாக இருக்கிறது. ஆனால் இதற்கு எதிராக ஆணின் உடல் வேட்கை என்பது உடலுறவு என்ற மைய நிகழ்வை நோக்கிய பாய்ச்சாலாக இருக்கிறது. இப்பாடல் பெண்/ஆண் இருவருக்கும் இடையிலான காம வெளிப்பாடு மற்றும் துய்ப்பு அதிக வித்தியாசங்களைக் கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதன் தொடர் பாடலாகக் கொள்ளத்தக்க வகையில் பிரிவால் காத்திருத்தலையும் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்வதையும் சில பாடல்களில் காணலாம்.

நல் நலம் தொலைய, நலம்மிகச் சாஅய்,
இன்உயிர் கழியினும் உரையல்; அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங் கடையே?

குறுந்தொகைப் பாடலில்(93), நான் ஊடல் கொண்டாலும் அவர்தான் என்தாய் தந்தை என்று தன்னை ஆற்றுபடுத்திக் கொள்கிறாள்.

உள்ளார்கொல்லோ - தோழி! கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புது நாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்
நிலம்கரி கள்ளிஅம் காடு இறந்தோரே
- குறுந்தொகை (67)

கவிதையில் தங்கக்காசு போல பூத்திருக்கும் கள்ளிப் பூக்களைப் பார்க்கும்போது தன் நினைவு வரும். அதன் நிமித்தம் தன்னை நோக்கி அவன் வரக்கூடும் என கனவு காண்கிறாள் அப்பெண்.

ஆனால் நிலமை கைமீறி போய்விட்டது.

நோம்என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன்பலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட்பயந்தா அங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே!
- குறுந்தொகை (202)

பிதற்றுகிறாள் அவள். முன்னர் அவன் இனியவனாக இருந்தாலும் இப்போது எனக்கு செய்யத் தகாத காரியத்தை செய்து நெருஞ்சி முள்ளென என்னைக் குத்திக் காயப்படுத்தி விட்டான். இது எனக்கு மேலும் மனவேதனையைத் தருகிறது என்கிறாள்.

ஆனாலும் என்னை கேலி செய்யாதே, அவன் மனதை மாற்ற முடியும். அவன் மனம்மாறி வந்துவிட்டால் உன்நிலைதான் பழிக்கத்தக்கதாகும் என தோழியை எச்சரிக்கிறாள். இக்குறுந்தொகைப் பாடலில்(96),

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யான்எவன் செய்கோ? என்று; யான் அது
நகை என உணரேன் ஆயின்,
என்ஆ குவைகொல்? - நன்னுதல்! நீயே.

இந்நம்பிக்கை எந்தவிதப் பலனையும் அப்பெண்ணுக்கு கையளிக்கவில்லை.

அஞ்சுவது அறியாது, அமர்துணை தழீஇ,
நெஞ்சுநப் பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கைபிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக்கடல் திரையின் முழங்கி, வலன்ஏர்பு,
கோட்புலி வழங்கும் சோலை
எனைத்துஎன்று எண்ணுகோ - முயங்கிடை மலைவே?
- குறுந்தொகை(237)

இக்கவிதையில் இருவருக்குமிடையே இடைவெளி மிகப் பெரிதாகிவிட்டதையும் அவன் கடந்துவர முடியாத தூரத்தில் இருப்பதையும் கூறுகிறாள்.

இப்பிரிவு நீண்ட பிரிவாகி நிலைத்து விட்டதால் இதை வெளிப்படுத்திக் கொள்வது தனக்குத்தான் பழி என எண்ணி அஞ்சுகிறாள்.

காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர்துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்;
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே - பிரிவு தலைவரினே.
- குறுந்தொகை(32)

அவன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டான் எனப் புலம்பி தெருவில் நின்றாலும் எனக்குத்தான் பழி. நான் அப்படியே இந்த அவலத்தில் உயிர் வாழ்ந்தாலும் எனக்குத்தான் பழியைத்தரும் என்கிறாள்.

காற்றுக்கும் காது உண்டு என்பதுபோல் இவளது நிலை ஊராருக்கும் தெரிந்து விட்டதை எண்ணிப் புலம்புகிறாள் குறுந்தொகைப் பாடலில்(140).

வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புள்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்குயான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று - இவ் அழுங்கல் ஊரே?

தன்னிலையை வெளிப்படுத்தாமல் வாழ்ந்தும் எப்படியோ ஊராருக்குத் தெரிந்துவிட்டதை எண்ணி வருந்துகிறாள்.

அவளின் கடைசி கவிதை எல்லா துயரையும் பொறுத்துக் கொண்டு வாழும் பெண்ணின் மனம் கசந்த நிலையைச் சொல்கிறது. இவ்வூரில் உள்ள அயலூரார் உன்னைப் பற்றி தெரிந்துகொண்டு, நீண்ட மழைக்கால்களின் அழகையும் கடந்து திகழும் கூந்தலையுடைய பரத்தையை மணந்து கொண்டதாக சொல்கிறார்கள். நீ எனக்கு யார்? நான் ஊடல் கொள்வதற்கு நீ என்ன உறவு? நான் மெலிந்து என் கைவளையல்கள் நெகிழ்ந்து வீழினும் வீழ்க. நீ பரத்தையிடம் செல்க! உன்னைத் தடுப்பவர் யார் உள்ளார்? என்கிறாள். ஊர், உலகம் ஆணின் தவறுகளை தட்டிக் கேட்பதோ தண்டனை அளிப்பதோ இல்லை. ஆணின் முறையற்ற வாழ்வினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் இது.

சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து,
கூர்முள் வேலிகோட்டின் நீக்கி,
நீர்முதிர் பழனத்து மீன்உடல் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டுஊது பனிமலர் ஆரும் ஊர!
யாரை யோ?நிற் புலக்கேம். வாருற்று,
உறைஇறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
கூறேம் வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ, பெரும! நிற் தகைக்குநர் யாரே?
- அகம்(46)

ஒளவையின் ‘பெருநகை கேளாய், தோழி!” என்ற பாடலும் “மூட்டு வெண்கொல்லு”டனும் வெள்ளிவீதியின் “இடிக்கும் கேளிர்” பாடலுடனும் ஒப்பிடும் போது இப்பாடல் ஊரொழுங்குக்கு எதிரான கலகக்குரலை கொண்டிருக்கவில்லை எனினும் பெண்ணின் விரக்திநிலையை கையறுநிலையை பேசுகிறது. தமிழ்ச் சமூகத்தின் மீது தனது குற்றச்சாட்டை இக்கவிதை பதிவு செய்வதன் மூலம் நீதி கேட்கும் பெண்களின் குரலாக இதை நாம் அடையாளம் காணலாம்.

இப்பாடல் சங்கத்தமிழ்ச் சமூக வாழ்வறத்தை எதிர்த்து கேள்வி கேட்கிறது. சங்ககாலத் தமிழர் வாழ்க்கை; தமிழர்களின் பொற்காலம் என்று பறைச்சாற்றித் திரியும் ஆணாதிக்க சமூகத்தை நோக்கி எழுப்பப்பட்ட வினா. சங்ககாலம் தொட்டு தமிழர் பண்பாடு ஆணாதிக்கப் பண்பாடு என்பதும் தமிழ்ச் சமூக அமைப்பு ஆணின் நலனுக்கான அமைப்பு என்பதையும் இப்பாடல் உறுதிப்படுத்துகிறது. “சங்க காலத்தில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பு முறையானது, பின்னர் வந்த பக்தி இயக்க காலகட்டத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது” என்கிறார் தொகுப்பாசிரியர். இது முற்றிலும் தவறான கருத்து. சங்ககாலம் என்பது தந்தைவழிச் சமூக அமைப்பை உறுதிப்படுத்திய காலம். மேலும் பரத்தைகளை உருவாக்கிவிட்ட சமூகம் எப்படி தாய்வழிச் சமூக அமைப்பாக இருக்க முடியும்.

அதற்கான சான்றுகள் இப்பாடல்களே. சில குலக்குழுக்கள் தாய்வழிச் சமூக அமைப்பாகத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கலாம். சங்ககாலத்தில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூக அமைப்பு மையப்பட்ட அதிகாரத்தோடு வடிவமைக்கப்பட்ட சாதிய படிநிலையுடைய அரசியல் அமைப்பு நிலையைத்தான் இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. சங்ககாலம் தந்தைவழிச் சமூக அதிகார அமைப்பால் ஆளப்பட்டகாலம் என்பதை சங்கப்பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழர்கள் காதலைப் போற்றியவர்கள் என்ற வலிமையான கருத்து நம்மிடையே நிலவுகிறது. இப்பாடல்கள் அதை பொய்யாக்குகின்றன. தன்னுடன் பழகிபின் கைவிட்ட ஆண் மகனை நோக்கி இப்பெண்கள் தங்கள் சுயத்தை இழந்து இரைஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை காதல், தெய்வீகக் காதல் என்பதெல்லாம் பெண்களுக்கானது. ஆண் இந்த கடப்பாட்டில் இருந்து நீதி வழுவியது எப்படி? காதல், கற்பு ஒழுக்கம் பெண்கள் சார்ந்தும், காதல், களவு ஓழுக்கம் ஆண்கள் சார்ந்தும் அக்காலத்திலேயே நடைமுறையாகி இருக்கிறது. தமிழர் கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற அறம் சார்ந்த கலாச்சாரம் என்று, ஏன் தொடர்ந்து பொய்ச் சொல்லி பல தலைமுறைகளாக பெண்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தன் விந்தால் உருவான தன் வாரிசை, தன் சாதியை, இந்த அமைப்பை குலையாமல் பாதுகாத்து காப்பாற்ற குடும்பம் அவசியம். இக்குடும்ப அமைப்பை கட்டியெழுப்ப பெண் அவசியம். சமூகம், பெண்ணுக்கு பல வாக்குறுதிகளை அளிக்கிறது. காதல் புனிதமானது. காதல் தெய்வீகமானது. அக்காதலை வாழவைக்க பெண் கற்பு நெறியுடன் வாழ வேண்டும் என்கிறது. பெற்று புறந்தருதல் பெண்ணின் கடமையாகவும், போரிட செல்வது, ஆட்சியதிகாரம் ஆணின் கடமையாகவும் மாறுகிறது. பெண்ணின் சமூகப் பங்களிப்பு என்பது குடும்பம், குடும்ப உறவுகளை பேணுதல் என்ற நிலையில் நிற்க வைக்கப்படுகிறது. மேலும் இவ்வகையான வாழ்வறம்தான் பெண்ணின் வாழ்வியல் நெறியென அடுத்த தலைமுறை பெண்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. காலம் காலமாகத் தொடரும் இச்சமூக வழக்கம் இயல்பானது, இயற்கையானது என்ற கருத்தை தொடர்ந்து பரப்ப இலக்கியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு சீரழிந்த அநீதியான கலாச்சார மரபு தொன்மையானது என்பதால் அதை தொடர்ந்து பின்பற்றி ஒழுகவேண்டும் என்ற நிர்பந்தம் இன்றைய தமிழ்ப்பெண்களின் மீது திணிக்கப்படுகிறது.

வெளியுலக புழக்கம் மறுக்கப்பட்ட தங்கள் எல்லைகளை கடக்க முடியாத சங்ககாலப் பெண்கள், தன்னை துறந்து வேறு பெண்களை நாடிச் சென்ற தலைவனின் வருகைக்காக தங்கள் ஆயுள் முழுதும் காத்துக்கிடக்கும் நிலையை நிறைய கவிதைகள் பேசுகின்றன. 181 கவிதைகளில் பிரிவை மட்டும் கிட்டத்தட்ட 90 கவிதைகள் பேசுகின்றன. வெளியுலகில் ஆயுளின் பெரும்பகுதியை கழிக்கும் ஆண்களுக்கு குடும்பம் என்பது தங்களின் வாரிசுகளை உருவாக்கும் பண்ணையாகத்தான் அக்காலத்திலும் இக்காலத்திலும் இருந்து வருகிறது.

களத்தில் வீரமரணம் அடைந்த மகனைக் கண்ட விடலைத் தாய்க்கு வாடியமுலைகள் ஊறிச் சுரப்பதாக சொல்கிறார் ஒளவை. ஒரு முதியவள் தன் மகன் புறமுதுகிட்டான் என்ற செய்தி அறிந்து அவன் பால் அருந்திய முலையை அறுத்தெறியத் துணிந்து போர்களம் செல்கிறாள். அங்கு தன் மகன் வீரமரணம் எய்தியதை கண்டு இந்த நாளே என் வாழ்நாளில் இனிய நாள் என மகிழ்கிறாள் காக்கைப்பாடினியின் பாடலில். தொடர் போரில் தன் உறவுகளை இழந்த இளம்பெண் தன் பாலகனுக்கு தலைவாரி வெள்ளாடை உடுத்தி போருக்குப் போ! பகைவனை அழித்துவிட்டு வா! என்று வாழ்த்தி அனுப்பி வைக்கிறாள் ஒக்கூர் மாசாத்தியார் பாடலில். தன் சமூகத்தைக் காப்பாற்ற தன் அரசைக் காப்பாற்ற துணிவுடன் தியாகங்களை செய்யும் தம் பெண்களுக்கு சமூகம் செய்யும் கைமாறு என்ன? அவர்களை சமூகக் கைதியாக்கி ஆயுள் தண்டனையைதான் கொடையாக அளிக்கிறது. பூதப்பாண்டியன் தேவி புலம்புகிறார்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
‘செல்க’ எனச் சொல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்எட் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுகதில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் நீயும் ஒரற்றே; - புறம் (246)

பொல்லாத சூழ்ச்சி செய்யும் சான்றோரே, போரிட்டு தன் மன்னன் மாண்டப்பின் தன்னை கைம்பெண்ணாக்கி நீர்சோறும், எள் துவையலும், புளிச்சேர்த்த வேளைக்கீரையையும் உண்டு, கல் மேல் படுத்து, தான் துன்பப்படுவதைவிட, அந்த ஈமத்தீயே தனக்கு தாமரை மலர்ந்த பொய்கை போல் இன்பம் அளிப்பதாகச் சொல்கிறாள். கைம்பெண்களை நம் சமூகம் போற்றிய விதத்தினால் அவள் இந்த கொடிய முடிவுக்கு வருகிறாள். சிறுகச் சிறுக சாவதைவிட இன்றே உடன்கட்டை ஏறி மாய்ந்துப் போகிறேன் என்கிறாள்.

என்னை மார்பில் புண்ணும் வெய்ய;
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்!
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல்? அளியிர்; நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே; யானும்
மண்ணுறு மதித்தலைத் தெண்நீர்வார,
தொன்றுதாம் உடுத்தஅம் பகைத் தெரியற்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந் திருத்தல், அதனினும் அரிதே!
- புறம்(280)

மாறோக்கத்து நப்பசலையார் பாடலில் வரும் பெண்ணோ, போரில் மார்பில் அடிப்பட்டு ரணமாகி மரணப்படுக்கையில் இருக்கும் வீரனின் மனைவி. ஆறாத ரணத்தில் வந்து மொய்க்கும் பூச்சிகளால் வீட்டில் வைத்த விளக்கும் அணைகிறது. புண்ணின் தன்மையை நமக்கு எளிதாக புரிய வைத்துவிடுகிறார்.

சூழ்நிலைகள் அவன் இறப்பை உறுதிபடுத்துகின்றன. அப்படி அவன் இறந்துவிட்டால், நான் மயிர் மழித்து, அல்லியரிசி உண்டு வாழும் கைம்மை கொண்டு இறுதி காலத்தை நோக்கியிருத்தல் என்னால் முடியாது. அவன் இறக்கப்போகிறான், நானும் இறக்கப் போகிறேன் என்கிறாள். கைம்மை விரதம் என்பது எவ்வளவு கொடிய தண்டனை என்பதை சமூகத்துக்கு புரிய வைக்க இப்பாடல் முயற்சிக்கிறது. இவைதாம் தமிழ்ச் சமூகம் நம் மற மங்கைகளுக்கு நாம் எண்ணி எண்ணி பெருமைக் கொள்வதற்காகச் செய்த தனிச்சிறப்புகள்.

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் வளம்கெழு திருநகர்!
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.
- புறம்(250)

தாயக்கண்ணியாரின் இக்கவிதை கைம்பெண்ணின் நேரடியான துன்பத்தை பேசவில்லை என்றாலும் போருக்குப்பின் நிறைய வீரர்களை இழந்த நகர் பொலிவிழந்து மயிர் மழிக்கப்பட்டு, வளையல் களைந்து, அல்லியரிசி உண்ணும் பாழ்பட்ட கைம்பெண்போல் தோற்றம் தருவதாக சொல்கிறார். பால் குடிக்கும் பாலகர்கள் ஈமக்கடன் செய்ய சுடுகாட்டுக்கு சென்றுள்ளனர் என்கிறார். இப்பாலகர்களின் தாய்மார்கள் கைம்பெண்ணான செய்தியும், இனி இவர்கள் இக்கதிக்கு ஆளாகப் போகிறார்கள் என்ற செய்தியையும் உள்ளடக்கியே இப்பாடல் இருக்கிறது.

காக்கைப்பாடினியின் பாடலில் வரும் முதியவள் தன் மகன் புறமுதுக்கிட்டான் என்ற செய்தி கேட்டு தனது முலைகளை அறுத்தெறியத் துணிகிறாள். பொன்முடியார் பாடலில் வருவதுபோல் ஈன்று புறந்தருதல் மகளீர் கடன் என்பது நமது தமிழர் பண்பாட்டின் கொள்கை. அதனால் ஈன்று புறந்தந் இம்மகளீரை இழிநிலையில் நிறுத்திய ஆணாதிக்கச் சமூகத்தை ஊட்டி வளர்த்த பழிகளைய பெண்கள் தங்கள் முலைகளை அறுத்தெறியத் துணிந்திருக்கலாம்.

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
- புறம்(187)

நாடாக இருக்கட்டும், காடாக இருக்கட்டும், பள்ளமாக இருக்கட்டும். இடம் எப்படியிருந்தால் என்ன? எந்த இடத்தில் ஆடவர் நல்லவராக உள்ளாரோ, அந்த இடமே நல்ல நிலமாக வாழும். பெண்களுக்கான வாழ்வியல் விதிகளை வகுக்க, கண்காணிக்க தண்டிக்க அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆண்களை நோக்கிப் பாயும் ஒளவையின் குரல் மட்டுமல்ல இது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்களின் கூட்டுக்குரல் இது. இன்னும் நம்மை நாம் தற்காக்க, எதிர்த்தாக்குதல் தொடுக்க ஒளவையையே தொடர்ந்து துணைக்கழைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?

(நிற் தகைக்குநர் யாரே? - உன்னைத் தடுப்பவர் யார் உள்ளார் - நன்முல்லையார்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com