Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
மார்ச் - ஆகஸ்டு 2007


ஒப்புதல் வாக்குமூலம்

லலிதாம்பிகா அந்தர்ஜனம் / தமிழில் - பிரேம்

சோரம் போனதாகக் குற்றம் சாட்டப்பட்டு தனிமையில் அடைக்கப்பட்ட அந்தப் ‘பொருள்' அச்சமூகப் பெரியவர்களால் நடத்தப்பட்ட பஞ்சாயத்தின் முன் அழைக்கப்பட்டது. அவள் தனது வாக்குமூலத்தில், “நான் குற்றவாளி. வேண்டுமென்றால் என்னை பகிஷ்காரம் செய்யுங்கள். ஆனால் நடந்தது முழுதுக்கும் நான் தான், நான் மட்டும்தான் பொறுப்பு. என்னுடைய குற்றத்தில் வேறு யாருக்கும் பங்கில்லை'' என்று சொன்னாள்.

கூட்டத்தில் ஒரு சலசலப்பு எழுந்தது. என்ன வெட்கக்கேடு! கருவுற்றிருக்கும் ஒரு விதவை தன் பாவத்தில் வேறு ஒருவருக்கும் பங்கில்லை என்று வலியுறுத்துகிறாள். பிறகு எப்படி அந்த பாவத்தை இழைத்தாள்?

“வேசி! நீ முறைகேடா நடந்தது எங்களுக்குத் தெரியும். நீ ஏன் இப்போது உண்மையைச் சொல்லமுடியல?''

அழுகையில் நனைந்த ஒரு குரல் அஞ்சம்புரை அறையிலிருந்து வெளிவந்தது.

“கடவுள் சாட்சியாக நான் சொல்கிறேன் யாரைக் குற்றம் சுமத்துவதென்று எனக்குத் தெரியவில்லை. அந்த இரவின் தனிமையா? அல்லது என் இளமையா? அதுவரை நான் அறிந்து கொள்ளாத அனுபவிக்காத ஒருவகை உணர்வின் தூண்டும் சக்தியா? உங்களுக்கு எல்லாம் தெரியும் நான் ஒரு பால்ய விதவை. எனக்கு பதினாறு வயதாயிருந்த போது அவர்கள் என் தாலிக்கயிற்றை அறுத்தார்கள். இருபது வருஷத்துக்கு முன்பு. இன்று வரை என் நடத்தையில் ஒரு சிறு களங்கமும் இல்லை. திங்கள் கிழமை விரதத்தை ஒருமுறை கூட நான் கைவிட்டதில்லை. மக மாதத்து புனித ஸ்நானத்தையும், வைசாக மாதத்து பூஜைகளையும் சிறிதும் பிசகாமல் அனுஷ்டித்து வருகிறேன். திரிப்பரங்கோட், குருவாயூர் கோயில்களுக்குச் செல்லும் மாத பூசைகளை எப்பொழுதும் தவறவிட்டது இல்லை. பிறகு ஏன் தெய்வம் இந்த துஷ்ட எண்ணத்தை அந்த ஒரு இரவு மட்டும் என் மனதில் உண்டாக்கியது? என் தந்தை உட்பட எந்த ஆணிடமும் நான் பேசியது இல்லை. ஆண்களைப் பற்றிய எண்ணமே என்னை பயங்கொள்ள வைத்தது. பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரே ஒரு ஆண், எனக்கு அதுவும் இல்லை''.

“என்னுடைய உலகம் சமயலறைக்கும் உள் அறைக்கும் உள்ளேயே அடங்கிவிட்டது. முற்றத்துக் கதவை வெளியே பார்ப்பதற்காகக் கூட நான் ஒருமுறையும் கூட திறந்ததில்லை. இருந்தாலும் எனக்கு இது நடந்துவிட்டது. ஏன் இது நடந்தது. நான் உங்களுக்கு அந்தக் கதையைச் சொல்லுகிறேன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை''.

அது திகைப்பை உண்டாக்கிய அறிமுக வார்த்தை. சபை செயலற்றுப் போனது. அவள் மீதான குற்றம் இவ்வeவு வெளிப்படையாக உள்ளபொழுது இந்த சீரழிந்த பெண் எப்படி அவளுடைய நடத்தையை நியாயப்படுத்த முடியும்? வைதிகர் சீற்றக் குரலில் வெறுப்புடன் தனது அனுமதியை வழங்கினார். “சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லி முடியட்டும்''.

அறைக்கதவு சற்றே திறக்க கட்டுப்படுத்த முடியாத நீரோட்டம் சிறிய பிளவின் வழியாக வடிவதுபோல ஓசையின் பெருக்கு வெளியே பாய்ந்தது.
என் கதையைக் கேட்பதை; என் குரலைக் கேட்பதைக்கூட பாவம் என்று நீங்கள் கருதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு காலத்தில் நினைத்தது போல குல பகிஷ்காரம் செய்யப்பட்ட ஒரு பிராமண விதவை ஒரு அரக்கியைவிட அவமானத்திற்கும் வெறுப்புக்கும் உரியவள் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். அதுபோன்ற கதைகளும் அது உருவாகும் இடத்திலிருந்து வீசும் சிறு காற்றும் கூட என்னை எப்பொழுதும் தொட்டுவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். தாத்ரி எடத்தி தனது மரணப் படுக்கையில் இருந்தபோதுகூட போய்ப்பார்க்க நான் மறுத்து விட்டேன். அந்தக் கொடிய பாவத்திற்காகத்தான் இப்போது...

“மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே நான் செல்லத் தேவையில்லை. நீங்கள் அனைவரும் அந்தத் திருமண விருந்தில் இருந்தீர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக. அந்த நேரத்தில் என்ன மங்களகரமான மூகூர்த்தத்தை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? எனக்கு கணவனாக வரவிருந்த மூத்த தம்பூதிரியின் முப்பது வயது மகள் எங்கள் குடும்பத்திற்கு வந்தாள், நான் பதிலுக்கு மணம் முடித்துத் தரப்பட்டேன். அப்போது எனக்கு வயது பதினொரு வருஷம் மூணு மாதம். இரண்டு தகப்பன்மார்கள் ஒருவருடைய மகளை மற்றவர் மணம் முடித்துக் கொண்டார்கள். நல்ல பரிமாற்றம். முத்தாசி சொல்வதுண்டு, “ஏதோ இந்தக் குழந்தையை பூம்படையும் முன்னேயே வேறிடத்துக்கு அனுப்ப முடிஞ்சது, இருந்தாலும் அந்த கொடுமக்காரங்ககூட அவ எப்படி வாழப்போறான்னு எனக்குத் தெரியல''.

“நீண்ட காலத்திற்கு நான் அவர்களுடன் இருக்க வேண்டி நேரவில்லை. என் அப்பாவின் மனைவி என்னுடைய புதிய தாய் ஒரு நோயாளி. விரைவாக அவள் இறந்துபோனாள்''.

எனது கணவரான அந்த முதியவருக்கு நான் ஒரு பாரமாக மாறிவிட்டேன். அதுபோல் ஏதாவது நடந்தால் சாதாரணமாக பெண்கள் தமது அப்பா வீட்டிற்குத் திரும்பிப் போவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய அம்மா அப்போது கூட என் அப்பாவின் ஆசைக்குரிய மனைவியாக இருந்ததால் நான் வீட்டில் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.

என் கணவரின் முகத்தை நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். அவருக்கு வெளுத்த தாடி மீசையும் குடவயிரும் இருந்தது. நான் அவரைப் பார்த்தபோது பயத்தைவிட அதிகமாக மிரட்சியைத்தான் உணர்ந்தேன். அவருடைய அறைக்கு என்னைப் போக வைக்க முத்தாசி எவ்வeவோ முயற்சி செய்தும் நான் போகவில்லை. அதனால் நான்கு நம்பூதிரி மனைவிகளை மணந்து கொண்டதுடன் நாற்பது நாயர் பெண்களுடன் வாழ்ந்த அந்த ஆண் எங்கள் வீட்டிற்கு மறுபடி ஒருபோதும் வரவே இல்லை. அவருடைய சாபமாகத்தான் இருக்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் தான் கழிந்தன-

ஓணம் பருவத்தின் ஒரு மாலை நேரத்தில் வீட்டின் வேறு பகுதியிலிருந்து ஒரு வேலைக்காரன் உள்ளே வந்ததைக் கேட்டபோது நான் என் தோழிகளுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பா அம்மாவிடம் ஏதோ முணுமுணுத்தார்.

“அய்யோ! என் பிள்ளை, கடவுளை எனக்கு மோசம் செய்துட்டியே!''

அம்மா மார்பில் அடித்தபடி தரையில் விழுந்தாள். அவளைச் சுற்றி எல்லோரும் கூடினார்கள். அங்கே சின்ன குழப்பம். என் தோழிகளோடு சந்தோசமாக விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து நான் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டேன். சமையலறையில் உரத்த அழுகை. இருந்தும் நான் அழவில்லை. அழுவதற்கு காரணத்தை நான் எண்ண முடியவில்லை.

குளத்தில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட வந்து இருட்டறையில் படுத்துக் கொண்டேன். என் சலங்கையையும் தங்க வளையல்களையும் நீக்கினேன். நெற்றித் திலகத்தை கலைத்தேன். அவர்கள் சொன்ன அனைத்தையும் நான் செய்தேன். ஆனால் சம்பிரதாயப்படி வீட்டின் மூத்த மருமகள் கருப்பு மாங்கல்ய கயிறை என் கழுத்திலிருந்து அறுக்க வந்தபோது நான் தடுத்தேன். “அதை நான் தரமாட்டேன். என் தாலியை நான் எடுக்கமாட்டேன். அம்மாவிடம் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் ஆயிரத்தெட்டு திருநாமங்களை நான் ஜபிக்கும்போது அந்தக் கயிறைக் கையில் பற்றிக் கொள்ளுவேன்''.

என் பிடிவாதமான எதிர்ப்பு அப்பாவின் காதிற்கு எட்டியது. அவர் என் அறை வாசலுக்கு வந்தார். முதுமை படிந்த அவர் முகத்தில் துக்கம் தெளிவாகத் தெரிந்தது. “அதை அவளிடம் கொடுத்துடு குழந்தை. அப்பா தன் மகளுக்கு இதைவிட அழகான சங்கிலியை பத்து நாளில் வாங்கி தருவார்.''

அப்பா சொன்னதைக் காப்பாற்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஈமச் சடங்குகள் முடிந்தபோது நீக்கப்பட்ட தாலிக்கு பதிலாக தங்கத்தில் செய்த துளசிமாலை எனக்குத் தரப்பட்டது. எப்படி அது ஜொலித்தது. எவ்வeவு அழகு அது! என் ஆசை நிறைவேறியது. தாலிக்கும் சங்கிலிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அப்போது இருந்தது போலவே அப்பாவியாகவே நான் இருந்துவிட்டிருந்தால்-

என் தினசரி நடவடிக்கைகளில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களுக்கு கொஞ்சம் சொஞ்சமாக நான் பழகினேன். இனிமேல் அஷ்ட மாங்கல்யத்தையோ விளக்கையோ தொடக்கூடாதாம். இனிமேல் என் கண்ணில் மையோ என் நெற்றியில் திலகத்தையோ இடக்கூடாதாம். ஒரு நாளுக்கு ஒரு வேளை மட்டும் சாதம் சாப்பிடலாமாம். நான் எப்படி துணி உடுத்த வேண்டும், எப்படி என்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்லித் தந்தது முத்தாசிதான். அவள் கையில் படுத்தபடி அவள் சொல்லும் பழைய கதைகளை நான் கேட்பேன்.

அப்படித்தான் நான் முதன் முதலில் கிருஷ்ணனின் கதையையும் கோபியர், பிருந்தாவனம் பற்றிய கதைகளையும் தெரிந்து கொண்டேன்.

ஒவ்வொரு கதை முடியும் போதும் துக்க உணர்வுடன் முத்தாசி சொல்வாள், பகவான்! குருவாயூரப்பன்! கிருஷ்ணனின் நாமத்தைத்தான் நீ ஜபிக்க வேணும். அதுதான் இப்போ உன் வாழ்க்கையின் கடமை.

நான் கேட்டேன், “முத்தாசி பகவான் எங்கே இருக்கார்?''

“எல்லா இடத்திலும் அவன் இருக்கிறான். மனசுல தியானிச்சா நீ அவனைப் பாக்கலாம்''.

“பார்ப்பதா? நான் ஆசையுடன் கேட்பேன். நீ அவனைப் பார்த்திருக்கிறாயா முத்தாசி?''

நானா? எனக்கு அவ்வளவு பாக்கியம் இல்லை குழந்தை. ஆனா பத்தேரிபாடு பாகவதத்தை படிச்சபோது அவரும் அவரைப் போன்ற மத்தவரும் மஞ்சள் பட்டாடையும் மயிலிறகும் அணிந்த குழல் கொண்ட அவனை பார்த்ததாக சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ணா! ஹரி கிருஷ்ணா! கிருஷ்ண, கிருஷ்ணா!

ஜபமாலையின் மணிகளில் தன் நடுங்கும் விரல்களை வருடியபடி முத்தாசி பக்திப் பரவசத்தில் தன் கண்களை மூடுவாள். அவள் பகவானை நேருக்கு நேர் பார்ப்பதாக ஒருவர் நினைக்ககூடும். நான் பத்தேரிபாடு பற்றியோ அவருடைய படிப்பு பஜனை பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் மீது எனக்கு ஆழ்ந்த காதல் தோன்றியது. எந்த இளம் பெண்தான் பாடி ஆடிய அந்த இடையச் சிறுவன் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியும்?

வீட்டின் தெய்வங்களுக்கு தினசரி பூஜை செய்வதற்கு வேண்டிய அனைத்தையும் செய்யவேண்டியது என்னுடைய பொறுப்பு. நான் விடிகாலையில் எழுந்திருக்க வேண்டும். குளித்துவிட்டு பூமாலை தொடுக்க வேண்டும். விளக்கேற்றி வைத்து தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். நூற்றுக்கணக்கான சிலைகளுக்கு நடுவே எனக்குப் பிடித்தது லக்ஷ்மியுடன் நிற்கும் விஷ்ணுவின் சிலைதான். சங்கும் சக்கரமும் தாங்கிய அதே கைகளால் தேவியை தன் நெஞ்சோடு அணைத்து அவன் செய்கிற புன்னகை காதலின் முழு வடிவம். என்னைத் தூண்டிய எதோ ஒன்று அவனது பாவனையில் இருந்தது. அந்தச் சிலையை தினமும் துடைத்து சுத்தம் செய்வேன். அதன் நெற்றியில் ஒரு திலகம் இடுவேன். நான் விரும்பியதும், இழந்து போனதுமான எல்லா அலங்காரங்களுக்கும் பூசையறை இடமளித்தது. இருந்தும் காலையிலோ மாலையிலோ தூபத்தாலும் விளக்காலும் கதகதப்பாகி பூக்களின் மணத்தால் நிரம்பி வழியும் அந்த சொப்பனம் போன்ற நேரங்களில் எல்லையில்லாத அழகு கொண்ட அங்கங்களையுடைய அந்த தெய்வத்தின் சிலைமுன் நான் மண்டியிட்டு இருக்கும்போது ஒரு சிறு ஏக்கம் என்னைத் தொல்லைப் படுத்தும். நேற்று பூசைக்குப் பயன்படுத்தி இன்று தூக்கியெறிய இருக்கும் அந்த மாலையைக்கூட நான் அணிந்து கொள்ளக் கூடாதா? என் நெற்றியில் சந்தனத்தால் சிறுபொட்டு இட்டுக் கொள்ளக் கூடாதா? இல்லை, முடியாது. என் நெற்றியில் என் எரிந்துபோன ஆசைகளின் சாம்பலைத் தவிர வேறு எதையும் பூசக்கூடாது.

முத்தாசியுடைய எண்ணமெல்லாம் அவளது கடைசி மூச்சுவரை என்னைப் பற்றியே இருந்தது.

“உண்ணி, மகனே, குழந்தையை கவனிச்சிக்கோ, அவ ரொம்ப சின்னப் பிள்ளை''. விதி அவள் மூலம் பேசியது என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் ஆபத்தைப் பற்றிய உணர்வு என்னை பயமுறுத்தியது. கூச்சம்நிறைந்த தவறுசெய்யாத என்னைப்போன்ற ஒருத்திக்கு என்ன நடந்துவிட முடியும்?

காலம் வேகமாகக் கழிந்தது. ஆனால் நான் வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொள்ளவில்லை. நாட்கள் ஸ்நானம், ஸ்தோத்திரம், ஜபம் என சம்பிரதாயங்களால் கழிந்தன. என் அண்ணன் கல்யாணம் முடித்து தன் மனைவியை இல்லத்திற்கு அழைத்து வரும்வரை உண்மையாக நான் என்னைப் பற்றி நினைத்துப் பார்த்ததே இல்லை. அண்ணி ஏன் அவ்வeவு லட்சணமாக இருக்க வேண்டும்? ஏன் அவர்கள் இருவரும் திடீர் திடீரென்று உரக்க சிரிக்கவேண்டும்? அண்ணி தினம் மாலையில் குளித்து கூந்தலில் மல்லிகை சூடிக்கொள்வாள். தங்கச் சரிகைக் கறை வைத்த முண்டை எவ்வeவு அழகாக அவள் கட்டிக் கொள்வாள்.

நான் ஒருக்காலும் அறிந்துகொள்ளாத ஒரு வாழ்க்கை என் கண் முன்னாலேயே வாழப்பட்டது. ஒவ்வொரு இரவும் அந்தக் கதவு சாத்தும் ஓசை என் காதுகளைத் தாக்கியது. என்மேல் கோபம் கொள்ள வேண்டாம்! என் துக்கத்தால் பேசுகிறேன். நான் யார் மீதும் பொறாமைப்படவில்லை. ஆனால் வாழ்க்கை அனுபவம் எந்த அeவுக்கு வித்தியாசப்பட முடியும் என்று நினைக்குபோது என் நெஞ்சம் உடைகிறது. அவள் என்னைவிட ஆறு மாதம்தான் மூத்தவள். ஒரு கைம்பெண் கண்ணீரை விட சிரிப்பையும் சந்தோசத்தையும் கண்டுதான் பயப்படுகிறாள். அது யாருடையதாக இருந்தாலும் அவளை அது துன்புறுத்துகிறது. தனக்கு எப்போதும் மறுக்கப்பட்ட வாழ்க்கையின் இன்பம் மற்றவரால் அனுபவிக்கப்படுவதை இருந்து கவனிக்கும் ஒருத்திக்கு எவ்வeவு ஆழமாக அந்த வலி தாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா கனம் பொருந்திய வைதீகர்களே?

இந்த வலியால் தூண்டப்படும் நெருப்புதான் நம்பூதிரி இல்லங்களின் அந்தப்புரங்களில் குமைந்து கொண்டிருக்கிறது. அண்ணி என்னை தொடர்ச்சியாக சீண்டிக் கொண்டே இருந்தாள். என் ஆசைக்குரிய மல்லிகைப் புதரில் பூஜைக்காக ஒரு மொட்டுகூட எனக்குக் கிடைக்கவில்லை. நான் அளவில்லாத அக்கறையுடன் போற்றி வளர்த்த செண்பக மரத்தின் முதல் மொட்டு காணாமல் போனது. துயரத்தையும் பொறாமையையும் அடக்க முடியாத நான் முணகினேன். “எந்த மாயக்காரி என் தெய்வத்துக்கான பூவை தான் சிங்காரித்துக் கொள்ள களவாடியது? இதற்காக நான் என் தோட்டத்தை வளர்க்கல''.

“கல்யாண வாழ்க்கையின் சந்தோஷத்தை அனுபவிக்க பாக்கியம் செய்த பெண்களுக்கு இல்லையென்றால் வேறு எதுக்கு இந்த பூவெல்லாம்? இத நீ வச்சிக்க முடியல என்பதுக்காக இப்படி கோபப்படவோ இதுபோல பேசவோ தேவையில்லை புரியுதா?''

அவளுடைய பதில் என்னை ஆழமாகக் காயப்படுத்தியது. உள்வீட்டுப்பகையின் விதை தூவப்பட்டுவிட்டது. அற்ப விஷயங்களுக்காக எல்லாம் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டோம். நாங்கள் சப்தமிட்டு திட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொண்டோம். எப்போதும் நான் தான் வெற்றியடைந்தேன். ஒருவருடைய தாய் தந்தை உயிரோடு இருக்கும் வரைக்கும் அப்படித்தான் நடக்கும். தோல்வி அடைந்த அண்ணி தன் பற்கçளைக் கடித்தபடி நறநறப்பாள். சரி இருக்கட்டும் ஒரு நாளைக்கு எல்லத்தையும் நான் திருப்பித்தர சமயம் வரும்''. அதுவரைக்கும்-

அதுபோன்ற பழி நிறைந்த எண்ணங்கள் எவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவை எனக்கு ஏற்படுத்த முடிந்ததைவிட அதிகமான வலிகளை நான் தாங்கி இருந்திருப்பேன். நம்பூதிரிகளான உங்களுக்கு நம் வீடுகளில் பிறந்த பெண்களுக்கான கௌரவம் என்ன என்பது தெரியும். எங்கள் புருசன்மார்கள் தங்களுடைய குடும்பத்தை கவனிப்பதற்கே சிரமப்படுவதால் எங்களைப் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் அதிக காலங்கள் நாங்கள் பிறந்த வீடுகளில்தான் வாழவேண்டி இருக்கிறது. பெற்றோர்கள் உயிர்வாழும் காலம்வரை எங்களுக்கு கவலையென்பது தெரியாது. உண்மையில் எங்கள் வீடுகளுக்கு மணம் முடித்து வரும் பெண்களை மிரட்டி வைக்கக்கூட எங்களால் முடியும். ஆனால் தந்தை இறந்து அவருடைய தம்பி வீட்டுப் பொறுப்பை ஏற்கும்போது நிலைமை மாறுகிறது.

அதற்குப்பிறகு அவருடைய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள். சமையல்கட்டின் அற்ப சண்டைகளில் பலியாகும் எங்களைப் போன்ற அனாதைகள் இங்கும் அங்கும் அலைகிறார்கள். தரையைத் துடைக்கும் ஒரு வேலையாள் கூட பொருத்தமான பொய்யைச் சொல்லி எங்களைத் தொல்லையில் மாட்டிவிட முடியும் அல்லது திட்டித் தீர்க்க முடியும். நான் எல்லாவற்றையும் பார்த்து துன்பப்பட்டுவிட்டேன். என் அம்மாவுக்கான துக்கநாளின் போது கண்ணீரோடு அந்த வீட்டைவிட்டுச் சென்றேன்.

என் கணவரின் மூன்று திருமணங்கள் மூலம் வந்த ஏழெட்டு பெண் பிள்ளைகள் வயது வந்து கல்யாணத்திற்காக காத்திருந்தார்கள். இவர்களில் நான்கு பேர் என்னை விட மூத்தவர்கள், இதோடு பத்துக்கு மேல் குழந்தைகளும் இருந்தார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். ஓட்டையான சிதைந்து போன அந்த பழைய வீட்டிற்குள் பசியிலும் துயரத்திலுமான அழுகை தொடர்ந்து ஒலித்தது. ஆனால் அதை கவனிக்க யாரும் அங்கு இல்லை. எங்களை நாங்க¼e காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். இருந்தும் அங்கே இருப்பதில் ஒரு ஆறுதல் இருந்தது. அது என் சொந்த வீடு. யாரும் என்னைப் போகச்சொல்ல முடியாது. யாராவது சொன்னால் நான் கட்டுப்படத் தேவையில்லை.

அந்த சமயத்தில் என்னுடைய இதயம் இறுகிப்போயிருந்தது. என் கணவரின் மற்ற மனைவிகளின் கேலிகள் கூட என்னைப் பாதிக்கவில்லை. என்னாலும் கடினமான சொற்களைப் பேச முடிந்தது. எனக்குக் குழந்தைகளும் இல்லை. வேறு பொறுப்புகளும் இல்லை. குழந்தையற்ற விதவைக்கு மென்மையாக இருக்கத் தெரியாது. நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் வாழ சபிக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் எங்களால் சாக முடியாது.

உரிய விரதங்கள் அனைத்தையும் நான் அனுஷ்டித்தேன். விளக்கு ஏற்றப்பட்ட பொழுது உபவாசம் இருந்தேன். அந்த காலத்தில் ஜனங்கள் என்னை தெங்கு வீட்டு சன்யாசினி என்று பேசிக் கொண்டார்கள். எவ்வளவு சீக்கிரமாக அதெல்லாம் மாறிப் போனது. ஏமாற்றுக்காரி என்று என்னை நீங்கள் குற்றம் சாட்டலாம். அப்படியென்றால் செய்யுங்கள், உங்களுக்கு சந்தோஷம் உண்டாக்கும் வரை என்னை அவமானப்படுத்துங்கள். ஆனால் உங்களை நான் சில கேள்விள் கேட்க அனுமதியுங்கள். கற்புக்கும் புண்ணியத்தின் பாதைக்கும் பாதுகாவலர்களான நீங்கள், வாழ்க்கை என்றால் என்ன என்று கூட தெரியாத பரிதாபத்திற்குரிய எங்களைப் போன்ற பிறவிகளைப் பாதுகாக்க எப்போதாவது உங்களுடைய விரலையாவது அசைத்திருக்கிறீர்களா? இந்த உலகம் எங்களுக்காக இல்லை என்று விதி முடிவு செய்துவிட்டது.

அதனால் அடுத்த உலகத்திலாவது காணமுடியும் என்று அவர்கள் சொல்லும் அமைதியையும் நிம்மதியையும் தேடி வாசலுக்கு வாசல் அலைந்து கொண்டிருக்கிறோம். உடலின்பம் என்னும் பாசிமீது காலடிகள் வழுக்கிச் செல்வதுபோல நாங்கள் எங்களால் அடக்கமுடியாத ஆசைகளுடனும் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளுடனும் போராடுகிறோம். நாங்கள் சற்றே தடுக்கி விழுந்தாலும் வைதீகர்களும் ஸ்மார்த்தர்களுமான நீங்கள் எங்களை கொடுமையான கேள்விகளுக்குள்ளாக்குவீர்கள். எல்லை காணமுடியாத நரகத்தின் குழிக்குள் தள்ளி எங்களைத் தண்டிப்பீர்கள்.

தெய்வமே! குருவாயூரப்பனோ வடக்குநாதனோ ஏகாதசி விரதமோ பிரதோஷ விரதமோ அதுபோல சமயத்தில் எங்களைக் காப்பாற்ற முடியுமா?

ஒரு அனல்காற்று திறந்திருந்த கதவின் வழியாக வீசியது - அல்லது அது திணறலான பெருமூச்சா? வைதீகர்களின் கூட்டம் இரக்கமற்ற அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குள் மனிதத் தன்மையின் சிறுதுண்டுகூட இல்லையா? யாரும் பேசவில்லை. சிறு இடைவெளிக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட அவள் தன்னுடைய வாதத்தை முன்னைவிட அதிக உறுதியுடன் தொடர்ந்தாள்.

நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இது என்னுடைய தலைவிதி. நிறைய அந்தர்ஜனங்கள் பாகவதம் படிப்பதை சென்று கேட்கிறார்கள். அவர்களில் யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. எங்களுடைய கோவிலில் வருஷம் தோறும் பாகவதம் படிப்பது வழக்கம். பல அந்தர்ஜனங்கள் அதைக் கேட்கச் சென்றார்கள். பகவானுடைய கதையைக் கேட்க வேண்டும் என்ற ஆசையில் மட்டுமோ அல்லது பக்தியின் காரணமாக மட்டுமோ அல்ல. எங்கள் குடையோடும் முக்காட்டுடனும் வெளியே போக நாங்கள் மிகவும் ஏங்கிக் கொண்டிருப்பதால் வெளியே சென்றோம். யாரும் பார்க்காதபடி நாங்கள் இருக்க வேண்டும் என்றாலும் ஒரு ஆண் குரலை கேட்கும் இன்பத்தை அனுபவிக்க ஆசை கொண்டு நாங்கள் சென்றோம். அதோடு அந்த புராணக் கதையைப் படிக்கக் கேட்பதன் மூலம் எங்களுக்கு விமோசனமும் கிடைக்கும். எங்களைப் போன்ற அந்தர்ஜனங்களைப் பொருத்தவரை புராணம் படிப்பதும் பஜனை பாடுவதும் யாருக்கும் மனக்கஷ்டம் உண்டாக்காமல் வெளியே செல்லுவதற்கு எங்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய சமயங்கள். அதனால் ஏமாற்றமடைந்த விதவைகளும் மனக்கசப்படைந்த மறுதார மனைவிகளும் நித்திய கன்னிகளும் எங்கள் கண்ணீரையும், இதயச் சுமைகளையும் பெருமூச்சுகளையும் பங்கிட்டுக்கொள்ள கோவிலின் பண்டகசாலைக் கதவுக்குப் பின்னே கூடுகிறோம்.

எங்கள் வீடு கோவில் குளத்துக்கு அடுத்து உள்ளதால் மிகவும் வசதியாக இருந்தது. சீக்கிரமாக எழுந்து குளித்து பூசையையும் சடங்குகளையும் முடித்துவிட்டு பிரசங்கத்திற்குச் செல்ல நேரம் பார்த்து காத்திருப்பேன். முத்தாசி என்னிடம் வர்ணிப்பது போல அது உணர்வை மிகவும் தூண்டுவதாக இருந்தது. மேப்பத்தூரும் சுவாமிகள் போன்றவர்களும் அழைக்கும்போது பகவானே முன்னே தோன்றுகிறார். நினைத்துப்பார் குழந்தை! அந்த நிலையை அடைய ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும். அதுபோன்ற மகானுபாவர்கள் நமக்காக பாகவதம் வாசிக்க உரியவர்களாக நம்மை நினைத்துக்கொள்ள அதைவிட நாம் எவ்வளவு புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.

எங்களுடைய பாகவதர் சன்னியாசி இல்லை, அல்லது இன்பத்தைத் துறந்து முதிர்ச்சியடைந்ததால் பக்திமார்க்கத்தை கைக்கொண்ட முதியவர்களில் ஒருவரும் இல்லை. இருந்தாலும் புதிதாய் குளித்து கஞ்சிபோட்ட வேட்டி உடுத்தி நெற்றியில் சந்தனமும் கையில் புத்தகமும் பலகையுமாக அவர் நுழைந்தபோது சனங்கள் தங்களை அறியாமல் எழுந்து நிற்பார்கள். அவருடைய முகத்தில் அருளின் பிரகாசம் இருக்கும். ஒளிரும் விளக்கின் முன் சம்மணமிட்டு அவர் உட்காருவார். அவருக்கு முப்பத்தைந்து வயது இருக்க வேண்டும். அவர் பெருத்த சருமமும் விரிந்த மார்பும் ஆகிருதியான உடலும் கொண்டிருந்தார். இடுப்பைச் சுற்றி மஞ்சள் பட்டு அணிந்து பூஜைக்காக வைத்த பூக்களில் சிலவற்றை காதுக்குப் பின் சொருகியிருப்பார். வாசிக்கும்போது ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்களுக்கு வியாக்கியாணம் கூற அவர் தலையை உயர்த்தும் போது கண்களின் பிரகாசம் காதுகளில் உள்ள வைரக் கடுக்கன்களுக்கு இணையாக இருக்கும்.

அந்தர்ஜனங்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் அவரை உண்மையான ஸ்ரீ கிருஷ்ணனின் அம்சமாக தொழுதோம். அவருடைய வாசிப்பில் அப்படி ஒரு சங்கீதம், அப்படி ஒரு பரவசம், ஒரு லாவண்யம் இருந்தது. அம்படியில் சின்னஞ் சிறு தங்கக்கண்ணன் செய்த குறும்புகளைக் கேட்டு அப்பொழுதுதான் தன் ஒரு மகனை இழந்திருந்த தாய் விம்மி அழுதாள். பிரம்மா பசுக்களைத் திருடிச் செல்ல அதைக் கண்டுபிடித்த மணமான பிராமணப் பெண்ணை கிருஷ்ணன் ஆசிர்வதிக்கும் கதையைக் கேட்ட ஒரு பாட்டி பூரிப்பில் கண்ணீர் சிந்தினாள். பகவான்! ஸ்ரீ கிருஷ்ணா! பாகவத வத்சலா!

வயதானவர்களும் படித்தவர்களும் சந்தோஷத்தில் தலையாட்டினார்கள். இவர் வழக்குன்னத்தை விட பிரமாதம். பால கிருஷ்ணணின் லீலைகளில் எனக்கு ஆர்வம் இல்லை. சிறுபிள்ளையின் குறும்புச் செயல்களில் மனக்கிளர்ச்சி அடைய என்ன இருக்கிறது? எனக்கு குழந்தை இல்லை, எப்பொழுதும் நான் பெறப்போவதும் இல்லை. பிறகு எதற்கு இதையெல்லாம் கவனிப்பது? பாகவதத்தை கேட்பதைவிட அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்குப் பிடிக்கும்.

எனவே நாங்கள் பாகவதத்திலேயே மிக அழகான பாகமான உங்களுக்குத் தெரிந்த ராசக்கிரிடை பகுதிக்கு வந்தோம். அறைகளில் உள் பகுதிகளில் கூட்டம் கூடக்கூட பாகவதரின் உற்சாகம் தீவிரமடைந்தது. அவர் கண்கள் விரிந்து நாக்கு உயிர்த் துடிப்பு கொண்டு அவரே கிருஷ்ண பகவானாக மாறிவிட்டது போல் தோன்றியது. மாடுமேய்க்கும் மாயக்காரன் பெண்களின் ஆடைகளைத் திருடுவது அர்த்த புஷ்டி நிரம்பியதாகத் தோன்றியது. எல்லோரும் உறங்கும் நீண்ட இரவுகளில் யமுனைக் கரைக் காட்டில் பகவான் ஆயிரம் கோபியர்களுடன் குலாவி இருந்ததாக அவர் எங்களுக்குச் சொன்னார். அவர் ஒவ்வொரு வரியையும் படித்துப் பிறகு அதன் பொருளை விவரித்தார். அவருடைய விரிவான விளக்கம் கன்னிப்பெண்களை வெட்கத்தில் தலைகுனிய வைத்தது. மனைவிகளை புன்னகை புரிய வைத்தது. விதவைகள் பழைய நினைவில் பெருமூச்சு விட்டு தோத்திரத்தை முணங்கினார்கள். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, எந்த அனுபவமும் இல்லை, நினைவுகளும் இல்லை. விரும்பினால் சலனமின்றி உணர்வின்றி என்னால் அதை கவனிக்க முடிந்தது. வேறு பிறவிகளில் இதைக் கேட்டபோது நான் பெற்ற உணர்ச்சிகளின் புண்ணியத்தை பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் பிறகு அதையெல்லாம் எனக்குள் பதியவைக்க முடிந்தது. அவ்வளவுதான்.

கோபிக கீதத்திலிருந்து அவர் ஒரு பாடலைப் பாடி விளக்கம் சொன்னார். “ராதா எவ்வளவு புண்ணியம் செய்தவள். தங்கக் குழலின் அழைப்பிற்கு பதில் சொல்ல அவள் தன் கணவனை, குழந்தைகளை தன் கடமைகளையெல்லாம் விட்டுவிட்டு வரவில்லையா? காதலே தனது மோட்சம் என்பதை அறிவிப்பதில் அவள் பேரின்பம் அடையவில்லையா? பகவானே! குருவாயூரப்பா! உனது கேலியையும் விளையாட்டையும் யார் பொருள் உணர்வது? பாவமும் விமோசனமும், நீதியும் கடமையும் எல்லாம் உனது முடிவில்லா சங்கீதத்தின் முன் வெறும் மாயங்கள் தானே. பத்து அவதாரங்களையும் கிருஷ்ணன் கதையின் மற்ற பகுதிகளையும் நாம் மறந்து போகலாம். ஆனால் மயக்கும் இந்த பிருந்தாவனக் காட்சிகள் பல யுகங்களுக்கு தொடர்ந்து நம்மை பேரின்பத்தில் ஆழ்த்தும்...

“காதலே பக்தி, காதலே மோட்சம் காதல் இன்பமே கடவுளுடன் நிகழும் உண்மையான ஐக்கியம்''.

“வார்த்தைகளுக்கு அப்பாலும் சில விளக்கங்களுக்கு ஏங்கியபடி அந்த முகத்தையே உற்றுப் பார்த்தேன்''.

“காதலே மோட்சம், காதலே பரவசம் இதற்கு என்ன அர்த்தம், காதலின் மனநிறைவா?''

விளக்கொளியின் மங்கeகரமான வட்டத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். பாகவதம் அவருக்கு முன் திறந்திருந்தது. பாதிக் கண்கள் மூட கைகள் கும்பிட்டு இணைந்திருந்தன. அவரே காதலின் முழு வடிவமாக தோன்றினார். சில நொடிகள் அவரின் ஒளிரும் கண்கள் நாங்கள் இருந்த அறையை நோக்கியது. அப்பொழுதான் நான் முதல் வரிசையில் கதவருகில் நின்று கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. உடல் நடுங்க தலையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டேன். நான் அதிசயமான ஒரு உணர்வை அடைந்தேன். அது வெட்கமா, சங்கோஜமா, அல்லது சங்கட உணர்வா? நான் அஞ்சினேன். சீவப்படாத தலையுடனும் மங்கிய கன்னத்துடனும் எவ்வளவு அருவருப்பான பிறவியாக நான் தோன்றி இருக்க வேண்டும்.

என் கணவரின் மூத்த மனைவிகளின் மகன்களில் ஒருவனிடம் கண்ணாடி ஒன்று இருந்தது. அன்று மாலை ரகசியமாக எடுத்து அதில் பார்த்தேன். என் முகத்தைத் தெளிவாகப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. சோகமான அந்த பிம்பத்திற்கு உள்ளே மங்கிப்போன ஒரு அழகு பதுங்கி இருந்ததா? பிரிவுத் துயரில் கலைத்து சோகமான ராதாவின் அழகிய முகத்தைப்போல அது இருக்கமுடியுமா?

மறுநாள் காலை குளித்தபின் என் முடியை சுத்தமாக சீவிக்கொள்வதில் கவனம் செலுத்தினேன். வழக்கமாக இட்டுக் கொள்ளும் விபூதிக்குப் பதிலாக என் நெற்றியில் சந்தனத்தால் சிறு பொட்டு இட்டுக் கொண்டேன். புதிதாக பறிக்கப்பட்ட பத்து மங்கள புஷ்பங்களை சரமாகக் கட்டி என் கூந்தலில் சொருகிக் கொண்டு குடையையும் மேல் துணியையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போனேன். வெளிப்பிரகாரத்திற்கு முன் யாரோ ஒருவர் இனிய குரலில் துதிப் பாடலை இசைத்துக் கொண்டிருந்தார். என் குடையைச் சிறிதே சாய்த்து ஜாக்கிரதையுடன் அது யார் என்று பார்த்தேன். அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் எப்பொழுதும் நானடையாத ஒரு சங்கட உணர்வு என்னை ஆட்கொண்டது. என் கால்கள் நடுங்கின. என் கண்கள் மங்கின. கோயிலை வலம் வரும் சம்பிரதாயத்தை முடிக்காமலேயே சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.

அதற்குப் பிறகு எப்பொழுது நான் பாகவத வாசிப்புக்குச் சென்றாலும் பின் வரிசையில் உட்காருவதில் கவனமாக இருந்தேன். நான் யாரையும் முகத்திற்கு முகம் பார்க்க விரும்பவில்லை. இருந்தும் என்னால் விலகிப்போக முடியவில்லை. அந்த வார்த்தைகளை அவர் பேசக்கேட்பதும் அவர் இருந்த இடத்திற்கு அருகே அமர்வதும் எனக்குத் தெளிவான ஒரு ஆறுதல் உணர்வைத் தந்தது. எங்களுக்காக அவர் படித்த காவியத்தின் மகிமையினால்தான் நான் அப்படி உணர்ந்தேனா?

சாப்பிடும்போதோ அல்லது உறங்கும்போதோ நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நான் யமுனையின் கரையையும் பூத்துக் குலுங்கும் கடம்ப மரத்தையும் காதலில் பித்தேறிய ராதாவையும் விளையாட்டுத்தனமான காதல் நிரம்பிய பகவானையும் கண்டேன். அட இது யாருடைய உருவம்? மஞ்சள் பட்டு, வைரக் கடுக்கன், அந்தப் புன்சிரிப்பு இதுதான் பகவானின் உண்மைத் தோற்றமா? ஆனால் பகவான்தான் எந்த வடிவமும் எடுக்க முடியுமே.

மக மாதம் முழுமையும் ஒவ்வொரு பனி நிறைந்த விடிகாலையும் கோயில் குளத்தில் குளித்து நாளின் முதல் பூசைக்காக கோயிலுக்குப் போவது வழக்கம். நீண்ட நாட்களுக்கு முன்பே நான் தொடங்கிய பழக்கம் இது. இந்த பழக்கம் என் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றும் என்று நான் சின்னப் பெண்ணாய் இருந்தபோது யாரோ என்னிடம் சொன்னார்கள். எனக்கு எந்த ஆசையும் கிடையாது. ஆனாலும் அந்த சடங்கை நான் தொடர்ந்து நிறைவேற்றி வந்தேன். பின்னால், மகிழ்ச்சித் துடிப்பில் என்னை ஆழ்த்தும் ஒரு பாடலை அந்த குளிர்ந்த காலை நேரத்தில் கேட்பதுண்டு. நீரில் வளையங்கள் உருவாகியிருந்தன. யாரோ குளித்துக் கொண்டிருக்க வேண்டும் என்னைப் போல் தனிமைப்பட்ட யாரோ என நினைத்துக் கொண்டேன்.

“என்னுடைய மாய ஆசைகளுடனான முடிவற்ற போராட்டத்தில் உணர்ச்சியளவில் நான் வலிமையிழந்து விட்டேன் என்பது எனக்குத் தெரிகிறது. என்றாலும் உண்மையில் நடந்த அது நிகழ முடியும் என்று நான் ஒருக்காலும் கற்பனை கூட செய்ததில்லை என்று உறுதியாகக் கூறமுடியும்''.

மகரகால நிலா வெளிச்சத்தை தவறுதலாக விடியல் வெளிச்சமென்று நினைத்துக் கொண்ட நான் என் தோழியை என்னுடன் வரச் சொல்வதைக் கூட மறந்துவிட்டு குளத்தை நோக்கி வேகமாக போனேன். காலைப் பூசையை நான் தவற விடுவது பயங்கரமான ஒன்று என்பதை மட்டுமே நான் நினைக்க முடிந்தது. கோயிலுக்குப் போகும் அவசரத்தில் குளத்தில் வெறுமனே முழுகி எழுந்து கோயில் பிரகாரத்தின் அசோக மரத்திலிருந்து ஒரு ராத்திரிப் பறவை கீச்சிட்டதை கேட்டபோது வேகமாக துடைத்துக் கொண்டேன். இரவு நேரப் பூக்களின் மணத்தைச் சுமந்த குளிர்ந்த காற்று வீசியது. மேற்கு வானத்தில் முழு நிலா கீழிறங்கிய போது எனக்குப் பின்னிருந்த குeத்தின் நிழல் விரிந்து முழுமையாகத் தோன்றியது. நிலா வெளிச்சத்திற்கும் நிழலுக்கும் இடையில் அந்த பெரிய குளம் உணர்ச்சிகளால் மெளனமடைந்த ஒரு பெண்ணின் இதயம் போலக் கிடந்தது.

பல நாட்களாக நான் கேட்டிருந்த புராண வாசிப்பு என்னிடம் கவிதையைத் தூண்டிவிட்டதுபோல தோன்றியது. யமுனை நதிக்கரையின் அந்த இனிய இரவுகள் இப்படித்தான் இருந்திருக்குமா? பட்டுப் போன்ற பசுமை போர்த்திய நிலா வெளிச்சத்தில் ஒளிர்ந்தபடி இளம் வசந்தத்தின் குதூகலத்தில் விளையாடும் மெல்லிய காற்று வீசும் கோவர்த்தன மலை ஒரு புறம்... மறுபுறம் யாதவ இல்லங்கள் இருளால் போர்த்திக் கிடக்கும். கடின வாழ்க்கையால் இறுகிய இதயங்கள் உறக்கத்தால் அமைதியுற்றிருக்கும்.

இந்த இரண்டு வித்தியாசமான காட்சிகளுக்கு நடுவில் தனது மேற்பரப்பில் தாமரைகளும் அல்லிகளும் இதமாக விரிந்திருக்க தனது தெளிவான ஆழத்தில் கருநீல வானமும் கோடிக்கணக்கான கண்சிமிட்டும் நட்சத்திரங்களும் பிரதிபலிக்க மெல்ல நகரும் நதி ஒரு கனவைப் போல பாய்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணனின் புல்லாங்குழலில் உருவான இனிய பவித்திரமான இசை இந்த நதிக் கரையிலிருந்து மேல் நோக்கி எழுந்தது.அந்த கீதத்தின் எதிரொலிகள் என்னைப் போன்ற உலர்ந்த இதயங்களில் கூட நம்பிக்கையின் அமுதத்தைப் பாய்ச்சியபடி காலங்களைத் தாண்டியும் நம்முடன் தங்கிவிட்டது.

அந்நினைவுகளில் மூழ்கி நின்ற நான், குழந்தையாக இருந்தபோது நான் கற்ற அஷ்டபதியிலிருந்து ஒரு கீதத்தை என்னையறியாமல் முணங்கினேன். சில சமயங்களில், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மனித மனம் தன்னைத் தான் கட்டுப்படுத்த முடிவதில்லை, மனிதப் பிறவிகளுக்கு தீர்க்க முடியாத ஒரு பலகீனம் இருக்கிறது. உண்மையில் உங்களைப் போன்ற அறிவாளிகள் கூட அதற்குப் பலியாக முடியும் என்பது நிச்சயம். பிறகு எப்படி என்னைப் போன்ற ஒரு பெண் மீது குறை காண முடியும்? இருந்தும், நான் இருந்த அந்த அரைமயக்க நிலையில் கூட சூடான இரு கைகள் என்னை வளைத்த போது உண்மையில் பயமடைந்தேன். யார் அது? அது பகவானேதானா? பிரபோ, உனது பக்தர்களுக்கு முன் இதுபோல பலமுறைகள் நீ தோன்றியிருக்கிறாய்.

கற்பனை உலகத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த எனது இயல்பான கவன உணர்வு மீண்டது. இல்லை அது முடியாது, கலியுகத்தில் தெய்வத்தை நேரடியாக காணமுடியாது.

அய்யோ! பிறகு இது யாராக இருக்கமுடியும்?

என் உடலின் உள்ளிருந்து ஒரு கூச்சல் எழுந்தது, ஆனால் மெல்லிய ஒரு முத்தத்தால் அது அடங்கிப் போனது. ஒரு பயனற்ற திமிறல், வலிமையான ஒரு அணைப்பிற்குள் அடங்கிப்போக நேர்ந்தது. உணர்ச்சிகளின் எழுச்சியில் என் தடுப்புணர்வு வடிந்து போனது. நான் முன்னெப்போதும் அறியாத அல்லது அனுபவிக்காத இன்ப உணர்வு உயிர்ப்பெற்றது.

அல்லது நான் சக்தியிழந்துவிட்டேனா, நான் மயக்கமடைய இருந்தேனா? அது ஒரு கனவு அல்ல; அல்லது உறக்கமும் அல்ல என்று எனக்குத் தோன்றியது. எனது இயற்கையான உள்ளுணர்வுக்கு எதிரான போராட்டத்தில் எல்லோரையும் போலவே தோல்வியை நானும் கூட ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. அது ஒரு பாவம் என்றால் அதற்காக என் ஆன்மாவைத் தருவேன்.

“அது மீண்டும் எப்போதாவது நிகழ்ந்ததா என்று கேட்காதீர்கள். அல்லது அந்த தெய்வம் யார் என்று கண்டுபிடிக்க முயலாதீர்கள். நான் குற்றவாளி. நீங்கள் என்னைத் தண்டிக்க முடியும். எனது குற்றத்தில் யாருக்கும் பங்கில்லை''.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com