Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
டிசம்பர் - பிப்ரவரி 2007


ஒரு வனத்தின் நடனம்

சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற இந்திரா ராஜனுடன் ஓரு நேர்காணல்

சந்திப்பு: மாலதி மைத்ரி

புதுவை மிஷன் வீதியில் ஷெவாலியே ரகுநாத் மனேவால் ஆரம்பிக்கப்பட்ட தாள சுருதி நாட்டியப் பள்ளியில் மாணவிகளுக்கு பரதம் பயிற்றுவித்து வரும் இந்திரா ராஜனை அணங்குக்காக சந்தித்து உரையாடியபோது நான் அவரையே பிரமித்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரின் குரலும் முகமும் உடலும் தொடர்ந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்க நான் எதை தொடர்ந்து சென்று பதிவு செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்றுவிட்டேன். அச்சிறிய உடலோ பேராற்றலையும் திறமையும் சேமித்து வைத்துள்ள நடமாடும் வனமாயிருந்தது. வார்த்தையால் தீண்டியவுடன் தென்றலும், புயலும் சூறாவளியும் அவ்வறையில் வீசத் தொடங்கின. கடந்த 60 ஆண்டுகளாக கட்டிய சலங்கையின் ஜதியுடன் இன்றும் மேடையில் ஆடிவருகிறார். இளம் வயதிலேயே நட்டுவாங்கம் செய்த முதல் பெண் கலைஞராகவும் இருக்கிறார்.

புதுடில்லி சங்கீத நாடக அகாடமியில் முதன் முதலில் நடன கலைஞர்களுக்கு நட்டுவாங்கம் பயிற்சியளிக்க நியமிக்கப்பட்ட பெருமை பெற்றவர். அரசு இசை கல்லூரியில் சில ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 17 இசை கல்லூரிகளில் தேர்வுக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்துள்ளார். தஞ்சை தென்னக கலைப் பண்பாட்டு நிறுவனத்தில் குரு-சிஷ்ய பாரம்பரிய பாடத்திட்டத்தில் இருவருடம் கற்பித்துள்ளர். நாட்டிய கலா ரத்தினம் விருதை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் நாட்டிய கலா பூஷன் விருதை துணை குடியரசு தலைவர் பி.டி. ஜாட்டியிடமிருந்தும் 1976ல் பெற்றுள்ளார். தண்டாயுதபாணி நாட்டிய கலாலயம் 1986ல் நாட்டிய போதக அரசி விருது அளித்துள்ளது. தமிழக கலைமாமணி விருதை 1991ல் முதல்வர் கருணாநிதி அளித்து சிறப்பித்துள்ளார். 1997ல் சங்கீத் நாடக அகாடமி விருதளித்து கௌரவித்துள்ளது. இந்திய அளவில் பல விருதுகள் பெற்று உலகமெல்லாம் சென்று பல நிகழ்ச்சிகள் நிகழ்த்தி இருந்தாலும் தனது வாழ்க்கை சீரானாதாக 68 வயதிலும் அமையவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். இக்கலை ஞானம் எனக்கு ஒரு வரமாக இருந்து என் வாழ்க்கைக்கு பேரரத்தத்தை கொடுத்துள்ளது என நெகிழ்ந்தார்.

உங்கள் கலைப் பாரம்பரியத்தை பற்றிச் சொல்லுங்கள்?

என் பாட்டி சுந்தராம்பாள் காரைக்காலில் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர். அவர்கள் அப்போது கோயில்களிலும் திருமண விழாக்களிலும் ஆடி புகழ் அடைந்தவர். என் பாட்டியோட சித்தப்பா ராமசாமிப் பிள்ளையும் அக்காலத்தில் பேர்பெற்ற நட்டுவானர். அம்மா சுந்தர காமாட்சி மிகச்சிறந்த பாடகி. அவர் கோயில்களிலும் திருமண விழாக்களிலுமே பாடி வந்தவர். என் தாய்மாமன் பாலசுப்ரமணியன் மிருதங்க வித்வான். என் சித்தப்பா தண்டாயுதபாணி பிள்ளை உலகப் புகழ் பெற்ற நட்டுவனார். இவர் ஆடற்கலைன்னு அப்போதே புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகத்தை இப்போது ஆங்கிலத்தில் வெளியிடப் போகிறார்கள். அவருடைய பிறந்த நாளான வரும் ஜுலை 14ந் தேதி இந்த விழா நடக்க இருக்கிறது. என் அத்தை சரசாவும் உலகப் புகழ்பெற்ற கலைஞர்தான். இப்படி எனக்கு தெரிந்து ஒரு ஐந்து தலைமுறையாக நாங்கள் கலைஞர்களாகவே வாழ்ந்து வருகிறோம். இசையும் நடனத்தையும் தவிர வேறெதும் எங்கள் குடும்பத்துக்கு தெரியாது.

சிறுவயதிலேயே இத்துறைக்கு வந்துவிட்டீர்கள். நடனத்தின் மீது அந்த வயதில் ஆர்வமும் ஈர்ப்பும் மதிப்பும் இருந்ததா?

சின்ன வயசிலேயே எனக்கு நடனத்தின் மீது ஒரு வெறித்தனமான ஆர்வம் இருந்தது. 5 வயசிலேயே வீட்டில் நடனம் பழக ஆரம்பிச்சேன். ஆறு வயசில் என்னைக் குத்தாலம் ‘கலைக்கொண்டல்’ கணேச பிள்ளையிடம் பாடம் கத்துக விட்டுட்டாங்க. அவர் வீட்டிலத் தங்கி கத்துக் கிட்டேன். குருகுல வாசம்தான். சின்னத் தப்புப்பண்ணாலும் அடிப்பாரு. ஒன்பது வயதில் தியாகராய பாகவதர் தலைமையில் என் அரங்கேற்றம் நடந்தது. பதிமூணு வயசிலிருந்து தனியா நிகழ்ச்சி நடத்த ஆரம்பிச்சாச்சு. இதன் கூடவே பனிரெண்டு வயசிலேயே நட்டுவாங்கம் செய்யத் தொடங்கினேன். நட்டுவாங்கத்தில் குருன்னு எனக்கு யாருமில்லை. நானே அப்படியே பழகிக்கிட்டேன். வைஜயந்திமாலா பாலி, யாமினி கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சித்தரஞ்சன், அலர்மேல் வள்ளி, ரகுநாத் மனே - இவர்களுக்கு பல ஆண்டுகள் நட்டுவனாராக இருந்து உலகமெல்லாம் போயிருக்கேன். இவர்கள் வேறு வேறு குருவிடமிருந்து கற்று வந்தவர்கள் என்றாலும் என்னிடமிருந்தும் சில வர்ணங்களைக் கற்றுக்கொண்டனர். இவர்களின் நிகழ்ச்சிக்கு சில வர்ணங்களுக்கு நடனமைத்தும் கொடுத்துள்ளேன். இப்போதும் நான் ஆடிக்கிட்டும் மாணவர்களுக்கு கத்துக்கொடுத்துக்கிட்டும் நட்டுவனாராக நிகழ்ச்சிகளுக்கு போய்கிட்டுயிருக்கன்.

நீங்கள் உங்கள் நடன நிகழ்ச்சிகாக பல வெளிநாடுகளுக்கு போயிருக்கிங்க. உங்கள் முதல் வெளிநாட்டுப் பயணம் எப்போது. நினைவிருக்கிறதா?

1958ல் எனது 18வது வயதில் எனது முதல் வெளிநாட்டு நடன நிகழ்ச்சிக்காக இலங்கைக்குப் போனேன். அதற்கடுத்து மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன், ரோம் அமெரிக்கான்னு ஏறக்குறைய பல நாடுகளுக்கு நடன நிகழ்ச்சிக்காகவும் நட்டுவனாராகவும் போயிருக்கிறேன். டிசம்பரில் 11வது முறையாக பாரிஸுக்குப் போய் ஆடிவிட்டு ரகுநாத்க்கு நட்டுவாங்கமும் செய்துவிட்டு வந்தேன். இதை எல்லாவற்றையும் எனக்கு ஒரு அனுபவமாகத்தான் எடுத்துக்கொண்டேன். அதுபோல இந்தியாவின் பல பகுதிகளில் கலாச்சார நிகழ்ச்சிகாக சென்று ஆடியிருக்கிறேன்.

நிறைய தமிழிசை பாடல்களுக்கு ஆடியிருக்கிங்க. இந்த ஆர்வம் எப்படி உருவானது?

அண்ணாமலை மன்றத்தில் ஓதுவார் தண்டபாணி சுவாமிகள் தேவாரம் இசைக்க முதன் முதலில் ஆடினேன். இது எனக்கு தமிழிசை மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. கோகுல கிருஷ்ணன், சண்முக சுந்தரம் போன்றவர்களெல்லாம் அன்று கண்ணீர் உதிர உணர்ச்சி பொங்க பாராட்டினார்கள். அரங்கமே உணர்ச்சி வசப்பட்டுப்போயிருந்தது. அதன் பிறகு திருப்புகழ், திருவாசகம், திவ்யபிரபந்தப் பாடல்களுக்கு ஆடியிருக்கிறேன். முருகனை குறித்து ஒரு நாட்டிய கோவையையும் உருவாக்கி ஆடியிருக்கிறேன். இந்நிகழ்ச்சிகள் நாட்டிய உலகிலும் நடன ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேரை வாங்கித் தந்தவை.

பால சரஸ்வதி மற்றும் பிற கலைஞர்களும் உங்கள் ரசிகர்களாமே?

நல்லி ஜெயலஷ்மிக்கு அண்ணாமலை மன்றத்தில் நட்டுவாங்கம் செய்து முடித்தவுடன், பால சரஸ்வதியம்மா நல்லாயிருக்குன்னு விரலபிடித்துக்கொண்டு கையை உயர்த்திக்கிட்டு அரங்கிலிருந்து எங்கிட்ட வந்தாங்க. “ரொம்ப நல்லாயிருக்குது. உன் நட்டுவாங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டத்த பாக்கவிடாம செய்ஞ்சுட்ட’’ எனப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம். சாதாரணமா அவங்க யாரையும் பாராட்டிட மாட்டாங்க. அவங்க வாயால ஒரு வார்த்த கேட்க மாட்டாமான்னு எல்லோரும் அப்போ காத்துகிடப்பாங்க. அதன் பிறகு பால சரஸ்வதியம்மா மியூசிக் அக்டாமியில் நந்தினி ரமணி மற்றும் பிற மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கும்போது சொல்லுவாங்களாம்.

‘இந்திரான்னு ஒருத்தி நட்டுவாங்கம் பண்றா, மொதல்ல அதப் போய் பார்த்துவிட்டு வாங்கன்னு’ அடிக்கடி உங்களைப்பற்றி குறிப்பிடுவாங்கன்னு நந்தினி ரமணி என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். அதே நிகழ்ச்சியில வீணை பாலசந்தர் என்னிடம் வந்து ‘அட அட என்ன மாதிரி செஞ்சுட்ட, ஐஞ்சு ஜதியில இன்னும் ஒண்ணு இருக்கனுமே. ஒன்ன ஏன் விட்டுட்ட’ ன்னார். சுதுஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீர்னம் - இந்த ஐஞ்சு சாதி கொண்ட ஆனந்த பைரவி வர்ணத்தை நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து குதுகலப்பட்டு மெய்சிலிர்த்துப் போனதாக வந்து பாராட்டினார். பஞ்ச நட ஜதி முடிக்க நேரமானதால் ஒரு ஜதியைக் குறைச்சுட்டேன் என்றேன். சங்கீர்தனம் இப்ப போடவான்னு கேட்டேன். ‘வேணாம் வேணாம் இந்த நாலு ஜதியிலே உன் திறமையை பார்த்துட்டேன்’னார்.

திருவிழை மலை நாதசுர வித்வான் சுப்ரமணிய பிள்ளை சில மாதம் கழித்து அண்ணாமலை மன்றத்தில் சுஜாதா ராஜனுக்கு நட்டுவர்த்தனம் செய்யும் போது அதே சங்கீர்த்தன வர்ணம் பார்த்துட்டு என்னைப் பாராட்டிவிட்டுப் போனார். சில நாள் கழித்து குமாரி கமலா நிகழ்ச்சியில் என்னைப் பார்த்தவுடன் ‘வாம்மா வா உன் ஜதி இன்னும் என் காதுல ஒலிச்சிக்கிட்டுயிருக்கு. உன்னப்பத்தித்தான் இந்த மூணு நாளா எந்த கச்சேரி போனாலும் பேசிகினு இருக்கேன்’ன்னார். இதுவும் என் வாழ்வின் பேராக நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து கற்றுக்கொண்ட என் மாணவி சாவித்திரியின் அரங்கேற்றம் வாணிமகாலில் நடந்தது. சிறப்பு விருந்தினரா ஜெமினி கணேசன் வந்திருந்தார். அவர் பேசும்போது “அர்ஜுனன் கிளியை அம்பெய்தும்போது எப்படி கவனம் சிதறாமல் இருந்தானோ. அதுமாதிரி உங்க கவனம் முழுவதும் நடனத்தின் மீதே இருந்தது. அர்ஜுனன் மாதிரியே குறி தவறாமல் நட்டுவாங்கம் செய்றீங்க”ன்னுப் பாராட்டினார்.

மிருதங்க வித்வான் குருவாயூர் துரையின் மகள் உஷாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். அவள் அரங்கேற்றத்துக்கு, ஒரு வருஷமா செம்மக்குடியை தலைமைக்கு அழைத்துக் கொண்டேயிருந்தார் துரை. அவர் கடைசியா ‘ஒரு வருஷமா தொந்தரவு செய்றயே யார்டா வாத்தியாருன்னு’ கேட்டுயிருக்கிறார். இவர் ‘வாத்தியார்யில்லணா, டீச்சர்ன்னு’ சொல்லியிருக்கார். ‘பொம்பள நட்டுவாங்கம்னா, நா வரம்மாட்டன்டா. யாரு உன்ன பொம்பளக்கிட்ட விடச் சொன்னான்னு’ கேட்டுருக்கார். ‘இல்லன்னா நீங்க வந்து குழந்தையை மட்டும் ஆசிர்வாதம் பண்ணிட்டு வாங்க. வேற ஒன்னும் பேச வேண்டாம்’ன்னிருக்கார். அன்று அரங்கத்துல்ல எம்.எஸ், பட்டம்மா, உமையாள்புரம், மிருதங்க மூர்த்தி, செம்மங்குடின்னு எல்லா மேதைகளும் இருந்தாங்க. என் ஜதியை பார்த்துட்டு வர்ணம் முடிஞ்சதும். செம்மங்குடி பேசினார். துரை கேட்ட கதையெல்லாம் சொல்லிட்டு. ‘பொம்பள நட்டுவாங்கம் பண்ணி எனக்குப் பிடிக்காது. அது நட்டுவாங்கமாவா இருக்கும்ன்னு நான் கேட்டேன். ஆனா நான் இங்க வந்து பாத்தப்பத்தான் தெரியுது, இந்திரா ரெண்டு ஆம்பள பண்ண முடியாதத இவா பண்றான்னார். நட்டுவாங்கத்துல பெண்களை ஏத்துக்க முடியாத அந்தக் காலத்துலேயே நான் என் திறமையை நிருபிச்சேன்.

அதுபோல சுப்புடு அவர்கள் “மரத்தக்கூட உயிர்கொடுத்து ஆட்டி வச்சுடுவா இந்திரான்னும்” பரத நாட்டியத்துக்கு குரு ‘பெண் சிங்கம் இந்திரா ராஜன் இல்லையா?’ என சங்கீத நாடக அகாடமி விருது சர்ச்சையின் போதும் எழுதியுள்ளார். குன்னக்குடி வைத்தியநாதன், சித்ரா விஸ்வேஸ்வரன், பத்மா சுப்ரமணியன், வைஜயந்திமாலா பாலி, சுதாராணி ரகுபதி போன்றோர் என் நட்டியத்தை ரசித்து பாராட்டத் தவறியதில்லை. சோம்நாத் சட்டர்ஜி அந்தமானில் என் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பராட்டினார். அதுபோல் பரத நாட்டிய ரசிகர்களும் விழா ஏற்பாடு செய்யும் நிர்வாகிகளும் அதன் தலைவர்களும் எப்போதும் பாராட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

நீங்கள் நடனமாடும்போது எப்படி உணர்வீங்க?

ஆடும்போது ஏதோ ஒரு சக்தி எனக்குள் ஐக்கியமாவதா நினைப்பேன்.

“சிவகாம சுந்தரி’’ என்ற கோபால கிருஷ்ணபாரதி பாடலுக்கு ஆடும்போது நான் சிதம்பர சிவகாமசுந்தரியாகவே மாறி விடுவேன்.

“வருகலாமோ ஐயா உந்தன் அருகில்
நின்று கொண்டு பாடவும் ஆடவும்
வருகலாமோ”

என்ற நந்தனார் பாடலுக்கு நான் நந்தனராகவோ ஆகி அப்படியே உருகி விடுவேன். எனக்குப் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அதன் சாகித்தியங்களும் என் உயிரை உருக்கிவிடும்.

“செந்தில் மாநகர் வாழும் சிங்கார வேலவரை
என் சிந்தையில் வைத்து சித்தம் கலங்குதடி”

அப்போ நான் நாயகியாகவே மாறி சித்தம் கலங்கி நிற்பேன்.

“பதறி வருகுது உருகுது என்
ஆவி பதைக்குது வகை சொல்லடி
சற்று நில்லடி கல்லோடி அடி
தளுக்கு குலுக்கு மினுக்குக்கென்னடி போடி”

இந்த சிருங்கார ரச பதத்துக்கு பலமுறை ஆடி உள்ளம் உருகி சிந்தை கலங்கி அப்பாடல் போலவே என்னை மறந்து என் நாமத்தை மறந்து நிற்பது போல் நின்றுவிடுவேன்.

“ஸகியே இந்த ஜாலம் ஏனடி
எந்தன் ஸ்வாமியை வர சொல்லடி
இது சமயம்”

சங்கராபரணம் தண்டாயுதபாணியின் இந்த வர்ணத்தில் ஒரே வார்த்தையை பல விதமா கொண்டு வருவார். அதற்கு எத்தனை விதமாக பாவம் பிடிக்க வேண்டும் தெரியுமா? இதுவே ஒரு சவால் மாதிரி இருக்கும். இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் எனக்கு பிரமிப்பை கொடுக்கும். இந்த நடன உலகமே வினோதமானது. விசித்திரமானது. என் உயிர் மூச்சு எல்லாம் நடனத்தின் மேல்தான். அதனால் தான் இன்றும் ஆடிக் கொண்டிருக்கிறேன். எனக்குத் திருமணம் என்பது ஏதோ விதிப்படி நடந்தது. ஆனால் முழுமையாக திருமண வாழ்வில் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது கிடையாது. நடனம் தான் எனது வாழ்க்கை.

உங்கள் ஆட்டத்துக்கு சவாலான ராகங்கள் அல்லது வர்ணம் ஏதாவது உண்டா?

எனக்கு எல்லா வர்ணமும் ஒரே மாதிரிதான் இருக்கும். எதைக் கொடுத்தாலும் உடனே கற்றுக் கொள்கிற ஞானம் பகவான் எனக்கு கொடுத்துள்ளார். பிறருக்கும் அதை எளிதா கத்துக்கொடுக்கிற திறமையும் என்கிட்டயிருக்கு. உசேனி ராகத்தில் ரூபக தாளத்தில் ஸ்வர ஜதின்னு ஒன்னுயிருக்கு. இந்த ஸ்வர ஜதியை நினைச்சாலே எல்லாருக்கும் ஒரு பயம் வந்திடும். இந்த வர்ணத்தை யாமினி கிருஷ்ணமூர்த்திக்கு நான் கற்று கொடுத்தேன். டெல்லில 55 நிமிசம் என் அடிக்கு சளைக்காமல் ஆடினார். அன்று அரங்கமே எழுந்து நின்னு அவரை பாராட்டியது. நடனமும் இசையும் பாரம் பரியமா என் இரத்ததிலும் சுவாசத்திலும் கலந்துயிருக்கு. இந்த ஞானம் எதையும் எளிதாக்கிடுது.

உங்களுடைய பாணி என்ன?

குத்தாலம் கணேசம் பிள்ளைக்கிட்ட கத்துக்கிட்டாலும், என்னுடைய பாணி காரைக்கால் பாணியின்னு சொல்லிக்குவேன். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருந்தாலும் 108 அடவுதான் இருக்குது. நானே பல அடவுகளை என் பாணியில் இணைத்துக் கொண்டுள்ளேன். அதை என் மாணவி களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். பந்தநல்லூர், தஞ்சாவூர், வழுவூர் பாணியிருந்தாலும் நான் என் தலைமுறை சார்ந்து காரைக்கால் பாணியில்தான் ஆடிவருகிறேன்.

என்ன மாதிரி அடவுகளை புதிதாக உருவாக்கியிருக்கிங்க?

தட்டடவு, மெட்டடவு, மீட்டடவு, நாட்டடவு, குந்தளடவு, குதித்தளடவு, பாய்தலளடவு இப்படி பேர் உள்ளது. இதற்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு சொற்கட்டு உள்ளது. உதாரணமா தா தை தித் தா, தி தை தை தா என்ற சொற்கட்டுக்கு அதனுடைய பழைய அடவை விட்டுட்டு புதுசா செய்வேன். பாரம்பரியமான அடவுகள் ஒரு ஆலம் மரம்ன்னு எடுத்துக்கிட்டா அந்த பெரிய உருவத்திலிருந்து புதிய கிளைகளை உருவாக்குகிறேன். அதே சொற்கட்டுகளுக்கு அடவுகளை மாற்றி மாற்றி அமைத்துத் தருவேன். இப்படியே ஒரு நடனக்கோவையை உருக்கிவிடுவேன். இதைக் கத்துக்கிட்டு என் நட்டுவாங்கத்துல நிறைய பேர் ஆடியிருக்காங்க. என் உறக்கத்திலும் கனவிலேயும் நான் ஆடிக்கிட்டேயிருக்கேன். நடனத்துக்குள்ளேவே நான் வாழ்ந்து வர்றதால புதிய அடவுகளை சேர்த்துக் கொண்டேயிருப்பது எனக்கு மிக இயல்பாக வருது.

பாராம்பரியமான இசைவேளாள குடும்பத்திலிருந்து வந்த உங்களை போன்றவர்களால்தான் தமிழின் செவ்வியல் இசையும் நடனமும் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. உங்கள் சமூகம் இல்லாமல் போயிருந்தால் தமிழரின் கலாச்சார அடையாளம் என்னவாகயிருந்திருக்கும். உங்கள் தலைமுறைச் சேர்ந்த கலைஞர்கள் நலிந்த கலைஞர்களாகி விட்டார்களே ஏன்? ஆனால் கடந்த நூற்றாண்டிலிருந்து இக்கலையை பிற சமூகத்தினர் கற்றுக்கொண்டு உலகளவில் மிகப் பிரபலமடைந்தனர். அவர்கள் சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் முன்னேறி உயர்ந்திருக்கிறார்கள். உங்கள் சமூகத்தை சார்ந்த ஒரு சிலரைத் தவிர யாரும் உலகளவில் பிரபல மடையவோ நிலையான வாழ்வு வசதியுடன் இல்லையே ஏன்?

உண்மைதான். பால சரஸ்வதி அம்மாவுக்குப் பிறகு சரசா உலகளவில் பேர் பெற்றார். அடுத்த தலைமுறையை சார்ந்த நாங்கள் சில விருதுகள் பெற்றிருந்தாலும் திறமையிருந்தும் கவனிக்கப்படுவதில்லை. எங்களை யாரும் நினைவுவைத்துக் கொள்வ தில்லை. எங்களுக்கான உரிய இடமும் கிடைப்பதில்லை. தேசிய விருதுகள் வழங்குவதில் கூட சில பாரபட்சங்கள் இருக்கிறது. இசையிலும் அப்படித்தான். எம்.எஸ் அம்மாவுக்கு அடுத்து எங்கள் சமூகத்திலிருந்து உலக அளவில் வெளியே தெரியும்படியாக யாரும் வரமுடியல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணியும் மீடியா அங்கீகாரமும் தேவையிருக்கிறது. அது எங்களுக்கு தொடர்ந்து கிடைப்பதில்லை. இருந்த வீட்டைக்கூட எனக்கு பாதுகாத்துக் கொள்ள தெரியவில்லை.

உங்க வாதினி நாட்டியாலா பற்றி சொல்லுங்க?

வாதினி மைலாப்பூர்ல ஆரம்பிச்சு 30 வருடமாகிறது. மொதல்ல சொந்த வீட்டுல நடத்திக்கிட்டுயிருதேன். இப்ப வாடக வீட்டுல்ல எல்லா பிரச்னையையும் பொறுத்துக்கினு தொடர்ந்து நடத்திக்கிட்டுயிருக்கேன். என் முதல் மாணவி தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மனோண்மணி அடுத்து சாவித்திரி. என் மாணவிகள் இன்று உலகமெல்லாம் நடனம் சொல்லித்தராங்க. ராஜேஸ்வரி சாய்நாத், நல்லி ஜெயலஷ்மி, மைதிலி குமார், கிருஷ்ணகுமாரி நரேந்திரன், சுபா ரமேஷ், வனிதா, உஷா, சாருலதா ஜெயராமன் இவர்களெல்லாம் என் மாணவிகள். சாருலதா மட்டும் இங்கேயே திருச்சியில் 25 வருஷமா நடனம் சொல்லிக் கொடுக்கறா. ரகுநாத் மனேயின் தாள சுருதியில புதுவைக்கு வந்து வாரம் ரெண்டு வகுப்பு எடுத்துக் கொடுக்கறேன். நிறைய நிகழ்ச்சிக்கு அவருக்கு நட்டுவனாராக தொடர்த்து சென்றுகொண்டிருக்கிறேன். திருச்சி பெல்லில் மாதம் நாலு வகுப்பு போய் தங்கியிருந்து எடுத்துட்டு வரறேன். மாதம் முழுக்க சென்னை, புதுவை, திருச்சின்னு கத்துக்கொடுக்க இந்த வயசிலேயும் அலைஞ்சுகிட்டேதான் இருக்கேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com