Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
ஜூன் - ஆகஸ்ட் 2006


புறக்கணிப்பின் கருநிழல்
உணர்வும் உருவமும்

தேவமைந்தன்

அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்
தொகுப்பாசிரியர்: ரேவதி.
வெளியீடு: அடையாளம் & சங்கமா,
1205/1 கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் - 621 310.
பக்: 115. விலை: ரூ. 65.

சகமானுட வாழ்வில், நெடுங்காலமாக ஆவணப்படுத்தாதிருந்த, அதனால் அறிதலுக்கும் புரிந்து கொள்ளப் பெறுதலுக்கும் மறைக்கப்பட்டிருந்ததொரு வாழ்க்கை, இந்தப் புத்தகத்தின் மூலம் முதன்முதலாக, அத்தகையதொரு வாழ்க்கைக்கு உட்பட நேர்ந்த ஒருவரின் விடாமுயற்சியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பறவைகளிடையே குயில்கள் போல, மனிதர்களிடையே வெளிப்பட்டும் வெளிப்படாமலும் தங்கள் இருத்தலை மட்டும் உணர்த்திக் கொண்டு வாழ்ந்த அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஒரு சராசரி மனதுக்கும் புரியும் வகையில் மனிதநேயமும் தோழமையும் கொண்டு ஒன்பது இயல்களில் புலப்படுத்தியிருக்கிறார் ரேவதி.

‘குழந்தைப் பருவமும் பள்ளிப் பருவமும்’ தொடங்கி - பெற்றோரும் சமுதாயமும், தொழில் அனுபவங்கள், காதலும் குடும்ப வாழ்வும், தாய்நிலை, கலாச்சாரம், விழாவும் வழிபாடும், ஆக்டிவிஸம் என்ற சமூக நிறுவனக் கட்டுமானங்களின் மூலம் விளக்கி - அரவாணிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் எவ்வாறு சிந்தனையிலும் தொழில் முறையிலும் சமூக - ஊடகப் போக்கிலும் இடம் பெற்று வருகின்றன என்பது முடிவாக, அர வாணிகள் அவரவர் சொல்லும் மொழி வழியாக, புத்தக வடிவில் தொகுத்து வழங்கி யிருக்கிறார் ரேவதி. முதன் முதலாக அர வாணி யொருவரா லேயே அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் ஆவணப்படுத்தப் பெற்றிருப்பது - இந்தப் புத்தகத்துக்குக் கிடைத் துள்ள பதிப்பு வரலாற்று முக்கியத்துவம்.

ஆராய்ச்சிக்கே உரிய அடிப்படைகள் பல (அடிக்குறிப்புகள் உட்பட) இந்நூலில் அமைந்திருந்தாலும், ‘என்னுடைய இந்த நூலைப் பெரும் ஆராய்ச்சி நூலாக அல்லாமல் நாங்கள் பட்ட வேதனைகளை, சந்தோஷங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதைப் போல் கொண்டு சென்றுள்ளேன்’ என்று ‘என்னுரை’யில் ரேவதி குறிப்பிடுவதுபோல், வறட்டுத் தனமில்லாமல் செயல் சாத்தியத்துக்குரியதாகத் தன் நூலை அமைத்துக் கொண்டதற்காகவே அவருக்கு நன்றி கூறத்தான் வேண்டும்.

பாலியல் ரீதியாக மட்டுமல்லாமல் பன்முகமாகவும் ஒடுக்கப்பட்டவள் பெண். வயலில் சேற்றில் இறங்கி, கொடிய வெய்யிலிலும் சில சமயம் இடிமின்னலின்பொழுதும் வேலை செய்ய வேண்டிய நிலையிலிருக்கும், பிறப்பை வைத்தும் ஒடுக்கப்பட்ட பெண் களைக் காட்டிலும் இந்து வருண சாதி என்கிற பாதுகாப்புக்கு உட்பட்டு வாழும் பெண்கள் பாதுகாப்பில் எத் துணையோ மேலானவர்கள் அல்லவா? இந்த இரண்டு சமூகக் கட்டங்களுக்கும் வெளியே விளிம்பில் பல்வேறு பயங்களுடனும் அன்றாடங்களைக் கழித்துக் கொண்டு (என்னுரை, ப.7), பற்பல கேள்விகள் அவ்வப்பொழுது அடிமனத்தைக் கலக்கிச் சங்கடப்படுத்த, சமூகச் சட்டங்களாலும் அதை நிறைவேற்றப் பணியேற்றவர்களின் அடக்குமுறையாலும் இன்னும் பல அக-புற அழுத்தங்களாலும் நொந்திருக்கையில், ‘ஒன்பது’ (இந்த எண் படுத்தும் கொடுமை - ப.26) என்று விடலைகளாலும் சமூகப் பொறுப்பற்றவர்களாலும் கொச்சைப் படுத்தப் படும்பொழுது தன்னளவில் பொறுத்துக் கொண்டு போனாலும்(ப.47), மற்ற அரவாணியைக் கேவலப்படுத்திப் பேசினால் பொங்கியெழுவது(ப.48) அவர்களுக்குள்ளே ஊடுருவியிருக்கும் மெய்யான நேசத்தை நிரூபிக்கிறது. அரவாணிகளுள் விதிவிலக்காக அம்மாவின் அடர்ந்த பாசமும், மூன்றாவது அக்காவின் தொடர்ந்த ஆதரவும் கிடைக்கப் பெற்ற ராஜத்தின் கதையும் இதில் உண்டு.(ப.26-27)

தான் அரவாணியென்பதால் சொத்திலும் தனக்குத் துரோகம் பண்ணிய தந்தையை எதிர்த்து கிராமபஞ்சாயத்தில் போராடியவர் (ப. 30-31), தான் அரவாணியாக இருந்தாலும் - தன் சொந்த ஊரிலேயே ‘கையளவு வீடு, சொந்தவீடு’ வேண்டுமென்று ‘ஆம்பள வேஷம்’ போட்டுக்கொண்டு போராடுபவர்(ப.34-38), ‘அரவாணிங்களே ஊருக்குள்ள வரக் கூடாதுன்னு’ நிலவிய நிலையை மாற்றியதுடன் ஊர்விசேஷத்தின்பொழுது ‘ஐநூறு ரூபாய்க்கி ஒரு கேன் சாராயம் வாங்கி ஊத்தி ஜெனங்கள குஷிப்படுத்தி’ தானும் ஊரில் ஒரு மனுஷியாக ஆனவர்(ப.39), ‘ரவுடிகளுக்குப் பயந்துபயந்து வாழ்ந்தாலும்’ அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் மரியாதையையும் ஆதரவையும் பெற்றவர்(ப.44), கரகாட்டக் கலையின்மேல் கவனம் மிகவைத்து ஏழைகள் கலைரசிகர்களாக இருந்தால் அவர்களுக்காக இலவசமாகவும் ஆடுபவர்(ப.53), மாறாக வயதாவதற்குள் சம்பாதித்துவிடவேண்டும் என்று எப்படியும் ஆடுபவர்(ப.56), மும்பையிலுள்ள அரவாணிகள் கூட்டமைப்பு ஒன்றை நம்பமுடியாமல் தமிழகத்திலுள்ள தன்னூருக்கு வந்துவிட்டு இங்கே வீட்டிலேயே சிறைப்பட்டு ‘ஏண்டா பம்பாயிலிருந்து வந்தோம்?’ என்று குமைபவர்(ப. 58), ‘கெட்டவங்க மத்தியில நல்லவங்களும் இருக்கத்தான் செய்றாங்க’ என நல்லவரை இனங்கண்டு அவரிடத்தில் பணிபுரிபவர்(ப. 60) என்று பலவிதமான தளங்களில் அரவாணிகள் இந்நூலில் நம்முடன் தங்கு தடையில்லாமல் தங்கள் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வைத்திருப்பவை தொகுப்பாசியரின் நேர்மையும் திறமையுமே. அரவாணிகளின் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியிருப்பது இதற்குச் சான்று(ப.51, 54-56, 60). ‘கேவலத்துக்கு நாம ஏன் இடம் குடுக்கணும்? நம்ம உரிமைகளை அரசாங்கத்துக்கிட்டே கேட்டு வாங்கணும். சொந்தமா தொழில் செய்யனும். பொறாமை, சண்டை, சச்சரவு இல்லாம நாம ஒத்துமையா இருந்து நம்முடைய உரிமையைப் பெறணும். . . ஜெனங்களும் பாதி பேருதிருந்திட்டாங்க’ என்று மனம் திறந்து நம்பிக்கையுடன் பேசும் அரவாணியின் ஆரோக்கியம் மனநிறைவு தருகிறது (ப. 105-106).

சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழ வேண்டிய நிலையிலிருந்த அரவாணிகள் போல் அல்லாமல் இன்றைய அரவாணிகள் கல்வி பெறுகிறார்கள். ஊரையும் வீட்டையும் விட்டுப்போனவர்கள் முன்பெல்லாம் திரும்ப வரவே முடியாமல் பிழைப்புக்குப் போன இடத்திலேயே தங்கள் வாழ்க்கையையே முடித்துக்கொண்ட நிலை இன்று மாறிவிட்டது. சிலர் இப்பொழுது தாங்கள் பிறந்த வீட்டுடனேயே இருந்துகொண்டு நிர்வாணம் (ஆணுறுப்பை வெட்டியெடுத்து விடும் நிகழ்வு) பண்ணிக் கொண்டும் பண்ணாமலும் வாழ்கிறார்கள். முன்பெல்லாம் தம்மை அரவாணிகள் என்றே காட்டிக் கொள்ள விரும்பாத நிலை, இப்பொழுது மாறிவிட்டது. உரிய படிப்பு வாய்ப்பும், சமூக அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அரவாணிகளின் அறியாமைகளும் சடங்கு சம்பிரதாயங்களில் பிடிப்பும் முற்றாக அகன்று போகும். சாதாரணமாகக் கடன் படுவதுகூட அரவாணிகளின் கூட்டமைப் பில் சடங்காகவும் சட்டதிட்டமாகவும் கட்டமைக்கப்பட்டிருப்பது வியப்புத்தான்(ப.88-89).

காதலையும் குடும்ப வாழ்வையும் அரவாணிகள் நேசிக்கிறார்கள்.

ஆணினத்தின் மீது ஆசைப்பட்டால்தான் புதியவர்களைத் தங்கள் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள்(ப.87: ஆசை வரக்கூடாத நேரம் - ப.95). ‘அரவாணிகங்கதான் என்னைத் தேடிவர முடியும். ஆம்பளைங்களா வர முடியும்?’ (ப.51) என்ற ஏக்கம் இவர்களை விட்டு முற்றிலும் மறைய, உரிய அறிவியல் பார்வையை இவர்கள் பெற்றாக வேண்டும். கணவனை விட்டுக் கொடுக்கும் அளவு நேசிக்கும் இவர்கள்(ப.65), அந்தக் கணவன்மாரின் மறைப்பு வேலைகளுக்கு(ப.67) எதிர்வினை ஆற்றாமல் முடங்குதற்குக் காரணமும் அவர்கள் ஆண்களுக்குத் தரும் அளவு மீறிய அந்த முக்கியத்துவம்தான்.

மிகவும் பொறுப்பான தாயாக அரவாணி இருக்கிறார்(ப.82). அத்தகைய ராஜம் என்பவர் சொல்பவை, தான் இயல்பான பெண் என்பதாலேயே குழந்தைகளின்மேல் போதிய கவனம் செலுத்த வேண்டுவதில்லை என்ற நம்பிக்கையில் அவர்களின் எதிர் காலத்தைப் பாழடிப்பவர்கள் சிலருக்குப் படிப்பினை தருபவை. பாலினம் என்று வரும்பொழுது (நல்ல) ஆணை நேசிக்கும் அரவாணி, குழந்தை என்று வரும்பொழுது மட்டும் பெண் குழந்தையைத்தான் தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன(ப.81-82).

மிகவும் விவரமாகவும், முந்திய காலகட்டத்திலேயே அரவாணிகளிடையே தன்னுரிமையுடன் வாழ்ந்த பூக்கார ஆயா சொல்லும் செய்திகள் (ராஜாஜி கவர்மெண்ட் வந்தபிறகு சட்டத்தின் மூலம் கோயில் தாசிகள் படிப் படியாகச் சீரழிக்கப்பட்ட நிலை உட்பட) சமூகநோக்குச் சிந்தனையாளர்களுக்கு வேதனையையே ஏற்படுத்தும். தென்னாட்டில் ஜமாதி கூடுவது பற்றி வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கும் சாந்தி அம்மாவும் இங்கே குறிப்பிடத்தக்கவர்.

அரவாணிகளின் சடங்குகளில் மிக முக்கியமானதாக தாயம்மா செய்யும் நிர்வாணத்தைப் பற்றி வாசிப்பதே கூட இத்தனைத் துன்பம் தருமென்றால் அதற்கு உட்படுபவர்கள் நிலை எப்படிப்பட்டது?(ப.90-97) டாக்டர் நிர்வாணமோ சட்டவிரோதமானதால் அதிலும் தனியாரின் சுரண்டல். இவ்விரண்டுக்கும் 40 நாள் கழித்து ஒரே மாதிரித்தான் சடங்கு என்றாலும் தாயம்மா செய்யும் நிர்வாணத்துக்குத்தான் அரவாணிகளிடையே பெருமையும் அங்கீகாரமும்(ப.97-99).

சாதி மத வேறுபாடுகள் அற்றவர்கள் அரவாணிகள்(ப.100-101). ஆக்டிவிஸ்ட் அரவாணிகளின் தொடர்ந்த முயற்சியால் பொதுமக்களுக்கு அரவாணிகள் மீதிருந்த தவறான அபிப்பிராயங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. தங்கள் கூட்டமைப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாமல் இருப்பவர்களை விட(ப.89), அந்தக் காலத்திலிருந்தே அரவாணிகளால் உருவாக்கப்பட்டுவரும் கலாச்சாரத்தில் நிலவும் அடிமைத்தனத்துக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பும் இளைய தலைமுறை அரவாணிகள் பாராட்டுதற்குரியவர்கள்(ப.100)

இப்பொழுது அரவாணிகள் தமக்கென்று நல்வாழ்வுக்கான ஆதாரங்களை உருவாக்கிக் கொள்ள சங்கங்களை அமைத்து வருகிறார்கள்(ப.107). இவையெல்லாம் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் நல்லவிதமான மாற்றங்களின் தொடக்கம்தான் என்ற அவர்களின் நம்பிக்கையை நாம் அன்புடன் வாழ்த்துவோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com