Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
டிசம்பர் - பிப்ரவரி 2007


காந்திய ஒழுங்கமைவின் பாசிச அலகுகள்

பொதிகைச்சித்தர்

“தனது நிலையான சுயம்/மனம் என்ற செயல்பாட்டு இயந்திரத்திற்கு இணையாகவன்றிப் புறப் பொருட்களின் வடிவங்களும் அவற்றின் இயக்க வேகங்களும் மாறுபட்டு இயங்கும்போது அதன் போக்கில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் தனது தர்க்கத்திற்கு உட்படுத்த முயலும்போது, அவற்றின் பல்வேறுபட்ட இயக்கப் போக்கின் விதிகளை மறுத்து ஒற்றைத் தன்மையின் இலக்கத்தைத் தான் உருவாக்குவதில் ஏற்படும் மனநிலையை paranoia என வரையறுக்கலாம்... ஹிட்லர், காந்தி இவர்களின் நிலைபாடுகளை paranoiaயாகவும் நிரூபித்துக் காட்டலாம்... இதுவே பாசிசத்தின் அடிப்படை அலகாகும்”.

                                                                                                                                                                    பிரேம் – ரமேஷ்


ஏலவே அம்ருதா' இதழில் காந்தியார் குறித்த கலந்துரையாடலை வாசித்த அளவிலேயே விரிவான என் எதிர்வினைக் கட்டுரையினை எழுதத் தொடங்கியாயிற்று. (மகாத்மாவின் புன்னகையிலும்... கோட்சேயின் தொழுத கையிலும்... பகவத் கீதையின் முரண்நகை) இதற்கிடையே அ.மார்க்ஸின் அக்.2. காந்தி ஜெயந்திக் கட்டுரை (தினமணி இதழில்... இன்னும் வாசிக்க வாய்க்கவில்லை). அடுத்து பிரேமின் இனியான மாற்று அரசியல் குறித்த கட்டுரை வாசிப்பின் மீதான என் கேள்விகளையும் பதிவுகளையும் மட்டுமே இங்கே மையங் குவிக்கின்றேன்.

பிரேம்-ரமேஷின் "சிதைவுகளின் ஒழுங்கமை' வினை வாசித்த பின்புதான் காந்திய ஒழுங்கமைவின் பாசிச அலகுகளை நான் இனங்காணத் தலைப்பட்டேன். ‘அணங்கு' இரண்டாமிதழில் பிரேம், “மாற்று அரசியலின் வழிகாட்டிகளாக அறிவுத்தளத்தில் பெரியார்; பொருளாதாரம் சமூக அறம் என்பவற்றிற்குக் காந்தியார்; சமத்துவம் சமூகநீதி என்பதற்கு அம்பேத்கர் என்ற மூன்று சிந்தனையாளர்கள் நம்முன் இருக்கிறார்கள். இந்த இணக்கம் மிக ஆக்கபூர்வமான பல புரிதல்களுக்கு வழிவகுக்கும். மூவருமே வன்முறையை ஏற்காதவர்கள், அடிப்படை மாற்றங்கள் பற்றிச் சிந்தித்தவர்கள். இந்த முப்பெரும் சிந்தனையாளர்களைத் தொடக்கமாகவும் வழிகாட்டிகளாகவும் கொண்ட புதிய அரசியல் இங்கு உருவாக வேண்டும் எனத் தம் மாற்று அரசியல் குறித்த வரைவினை முன்வைக்கின்றார்.

இங்கேதான் எழுகின்றன சில கேள்விகள். பிரேம் முன்னிறுத்தும் மாற்று அரசியலில் வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியத்திற்கு அறவே இடம் இல்லையா? திரு. வி. க. மார்க்சிய உடலி என்றார். கோரா தம்மைக் "காந்திய நாத்திகர்' என்றார். எனவே, “கம்யூனிச சமூக அரசியல் சட்டகத்தின் உள்ளீடாக பௌத்தப் பண்பாட்டை நிறைத்துப் பார்க்கிறார். கம்யூனிச சமூகத்தில் ஏற்படும் வெற்றிடம் பற்றி அதிக கவனம் கொள்ளும் அம்பேத்கர் அந்த வெற்றிடத்தில் பௌத்தத்தை நிரப்பிப் பார்க்கிறார்” என்றெல்லாம் தம் "சிதைவுகளின் ஒழுங்கமைவில்' பிரேம் : ரமேஷ் முன்வைத்தனரே. அந்த அரசியல் சட்டகம் தானும் இப்போதைய பிரேமின் மாற்று அரசியலில் உதிர்ந்து போனதேன்?

மூவருமே வன்முறையை ஏற்காதவர்கள், அடிப்படை மாற்றம் பற்றிச் சிந்தித்தவர்கள் என்கிறபோது பெரியார், அம்பேத்கரைப் பொறுத்தவரை மட்டுமே இவை பொருந்துவனவாகிக் காந்தியாரிடம் கேள்விக்கு உள்ளாகிவிடவில்லையா? எனவே பாசிசத்தின் அடிப்படை அலகான paranoiaவாக ஹிட்லர், காந்தி இவர்களின் நிலைப்பாடுகளை பிரேம் இனங்காணவில்லையா? பூனா ஒப்பந்தத் தருணத்தில் காந்தியார் பூண்ட உண்ணாவிரதம் அவரது pherenetic விடாப்பிடி வெறியின் வெளிப்பாடுதானே? அதனை ஓஷோ ‘அகிம்சையின் வன்முறை' எனச் சுட்டவில்லை? ("கிருஷ்ணா' வரிசை நூலில்.)

“ஐரோப்பியர்களின் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தபோது சாத்வீக எதிர்ப்பு என்பதற்கு மிகக் குறுகிய பொருள்களே உண்டு என்பதைக் கண்டேன். மேலும் அது பலவீனங்களின் ஆயுதமாகவும் கருதப்பட்டது. முடிவில் அதுவே பலாத்காரமாக வளர்ந்து விடக்கூடும் என்பதையும் அறிந்தேன்” எனக் காந்தியாரே தம் "சத்திய சோதனை'யில் (பக்.383) ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றாரே.

முஸோலினி பாசிசம் என்ற சொல்லோசையைக் கட்சியின் ஒருங்கிணைந்த சக்தியின் ஆட்சி என்ற பொருளில் பயன்படுத்தி வந்தார். அந்த சொல்லோசையின் சரியான பொருளில் காந்திஜிதான் பாசிஸ்டு ஆதரவாளராக இருந்தார். சோஸலிசம்தான் எங்கள் கொள்கை பயங்கரவாதமல்ல என்பர் யஷ்பால் (‘சூறைக்காற்று வீசிய நாட்கள்') காந்தியாரின் அணுகுமுறையிலும் தெலுங்கானாவில் போராடிய விவசாயிகளை நேருவும் படேலும் கையாண்ட விதத்திலும் வெளிப்பட்ட பாசிசத்தை வெளிப்படுத்துவார் மேளூர் ஜெய்பால்சிங் (‘நாடு அழைத்தது')

“உலகு முழுமைக்குமான ஒவ்வொரு மனிதனையும் மிக எளிதாக எந்தவித குற்றவுணர்வுமற்று ஒரு வன்முறையாளனாக மாற்றி விடும் சாத்தியம் இந்து மதத்திற்கு உண்டு. சமூக தண்டனைகள் பற்றிய கருத்தாக்கங்களையே தனது நெறியாகக்கொண்டு உருவான இந்து மதப் பண்பாட்டு வடிவம் என்பதிலிருந்து மீளுவதே இந்தியத் தலித்துக்கான முதல் விடுதலை என்பதை அம்பேத்கர் தமது இறுதி நிலையில் உரக்கவே கூறிச் செல்கிறார்” என்றனரே பிரேம் - ரமேஷ் ("சிதைவுகளின் ஒழுங்கமைவு').

தலித் மக்கள் இன்னல் தீர மதமாற்றத்தை வலியுறுத்தியதே பெரியார், அம்பேத்கர் நெறி. எனவே அவற்றை மட்டுமே அடிப்படை மாற்றம் என்பது பொருந்தும். தலித் மக்கள் தாக்கப்பட்ட தருணங்களில் மூவரும் எதிர்கொண்ட விதமே அவர்களை நமக்கு அடையாளம் காட்டும். காந்தியம் இத்தகைய நெருக்கடித் தருணங்களில் இடத்தைவிட்டுத் தப்பிப்போங்கள் என்று உற்சாகப்படுத்துகிறது. ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும் என்றது (முற்சுட்டிய நூல் பக்.317,318).

பெரியாரியமோ முடிந்தவரை போராடு முடியாதபட்சத்தில் இடத்தைவிட்டு மட்டுமல்ல மதத்தை விட்டோ, நாட்டையே விட்டுத் தப்பிப்போ என வழிகாட்டுகின்றது (பெரியார் சிந்தனைகள் பக்.58).

அம்பேத்கரியமோ ஆடுகளைத்தான் பலியிடுவார்கள் சிங்கங்களை அல்ல எனப் போராடத் தூண்டுகின்றது. மத மாற்றத்தையும் பரிந்துரைக்கின்றது. அணி திரட்டுகின்றது. காந்தியாரின் சமூக அறம் என்பதன் மூலம் பிரேம் சுட்டுவது எதனை? காந்தியார் வர்ண தர்மத்தில் ஊன்றி இந்து மதம் பற்றிநின்றார். தமது ஒழுக்க நெறி அகராதி ஆகவும் தமக்கு வழிகாட்டும் தவறாத் துணையாகவும் பகவத் கீதையைத்தான் கொண்டாடினார். இந்து மதத்தையும் ஏன் இந்து மகா சபையையும் சுத்திகரிக்கவே முயன்றார். பகவத் கீதையின் வழி தர்மகர்த்தா சோசலிசத்தை பிர்லாக்களின் அரவணைப்போடு வலியுறுத்தி நின்றார். ஆகக் காந்தியமும் காங்கிரஸும் இந்து மதத்தையும் இருப்பையும் தக்க வைக்கும் சேப்டி வால்வ் சிஸ்டமாகத்தான் இயங்கின. இத்தகு காந்தியம் எவ்வாறு அடிப்படை மாற்றத்திற்கு அடிகோலும்?

“போட்டிகளையும் வர்க்கப் போராட்டங்களையும் வர்க்கப் போர்களையும் தவிர்க்கவே வர்ணாசிரமம். மக்களுடைய வேலைகளையும் கடமைகளையும் வர்ணாசிரமம் நிர்ணயம் செய்கிற காரணத்தால் அதன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு” என்பார் காந்தியார் ("மனிதம்' பக்.191).

“கட்டுத் திட்டங்களுக்கு உட்பட்டு ஒழுங்கான முறை பின்பற்றப்படுமாயின், சாதி பயன் தரத்தக்க ஒரு ஏற்பாடு என்பதே எனது கருத்தாகும். சாதிமுறையை நான் தூய்மைப்படுத்த விரும்புகிறேன்... சாதிமுறையில் உள்ள அழுக்காறுகளை நீங்கள் களைந்து விடுவீர்களாயின் அது (சாதி) ஹிந்து மதத்தின் ஒரு கோட்டை என்பதையும் அதன் வேர்கள் மனித இயற்கையில் ஆழ்ந்து ஊடுருவி இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்” எனக் காந்தியார் தாம் தீபைந்து ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார் (மகாத்மா காந்தி நூல்கள் 14 பக்.592,593).

தலித்திய மற்றும் பெண்ணிய நோக்கில் காந்தியத்தின் அறவியல் அதிகாரங்களை அம்பலப்படுத்துவார் வ. கீதா, “அவரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய வரலாற்றுத் தகுதியை அவர் களுக்கு வழங்க முடியவில்லை. சாதி இந்துக்களின் இருப்பைச் சோதிக்கும், அவர்களது அற வுணர்வை மதிப்பீடு செய்யும் உரைகல்லாக அம்மக்களை அவர் பாவித்தார்” எனவும்; “தொடர்ந்து அவருடைய ஒவ்வொரு பிடி வாதமான சோதனைக்கும் அவருடைய அறவியல் ரீதியான அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு இருக்கத் துணிந்த ஆபா காந்தி, சுஷிலா நய்யார் போன்றவர்களது மனநிலை சந்தித்த குழப்பங்களையும் சிக்கல்களையும் காந்தியின் பரிசோதனைகள் ஏற்படுத்திய சேதாரங்களில் முக்கியமானவை களாகக் கொள்ளவேண்டும்” (காந்திய அரசியல் பக்.13,38). இப்படிச் சாதி இந்துக்களின் இருப்பைச் சோதிக்கும் உரைகல்லா தலித் மக்கள்? அண்ணலின் பிரம்மச்சரியப் பேராண்மையை நிரூபிக்கப் பயன்படுத்தும் பரிசோதனை எலிகளா பெண்கள்? இதுதானா காந்திய சமூக அறத்தின் லட்சணம்? இவற்றிற்கு ஊடாகவும் வெளிப்படுவது காந்திய paranoiaவின் நீலம்பாரிப்பல்லாமல் வேறென்னவாம்?

காந்தியாருக்கும் படேலுக்கும் இடையில் அம்பேத்கரைக் கையாளுவது குறித்து நிகழ்ந்த கடிதப் போக்குவரத்திற்கு ஊடாகப் புலனாகும் உண்மைகளை இனிக் காண்போம். “அவரது கொள்கை ஒன்றுதான், அதவாது தமது நோக்கம் நிறைவேற எத்தகைய முறையாயினும் அதை மேற்கொள்வதேயாகும். கிறிஸ்தவராகவோ, முஸ்லீமாகவோ அல்லது சீக்கியராகவோ தமது மனம் போனவாறு மதம் மாறவும், பின்னர் மறுபடியும் ஹிந்து மதத்துக்கு மாறவும் தயாராக இருக்கும் ஒரு மனிதரிடம் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதே ரீதியில் அவரைப் பற்றி என்னால் எவ்வளவோ எழுத முடியும். அவரது கூற்றெல்லாம் ஒரு வலையாகவும், வஞ்சகமாகவும் எனக்குத் தோன்றுகிறது” (பக்.390).

“என்னைத் திட்டாமல் அவரால் இருக்க முடியாது. லண்டனைப் போல இங்கேயும் அவருக்குப்பின் பல சக்திகள் வேலை செய்து வருகின்றன. தீண்டாமையை ஒழிப்பதற்குப் பதிலாக மக்கள் இப்போது அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்” (பக்.319).

“முஸ்லீம்லீக்கிற்குப் பயந்து நாம் அம்பேத்கருடன் சமரசம் செய்துகொள்ள முற்பட்டால் இருமுனைகளிலும் நாம் தோல்வியுறும்படி நேரலாம்” (பக்.391). இவை காந்தியார் படேலுக்கு எழுதிய கடித வாசகங்கள்.

“முஸ்லீம்களிடம் பயந்து கொண்டு நான் அம்பேத்கருடன் சமரசத்திற்கு முயலவில்லை. காங்கிரஸை ஆதரிக்கும் ஹரிஜனங்களே பின்னர் ஒருநாள் கேட்கப்போகும் சலுகையை இப்போதே அம்பேத்கருக்கு அளித்துவிட்டு அவரை நம்பக்கம் சேர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனமாகும்” என "இரும்பு மனிதர்' படேல் பதில் எழுதுகின்றார்.

இக்கடிதங்கள் வாயிலாக இவர்களின் மந்திராலோசனைகளையும் தந்திரோபாயங்களையும் நாமும் புரிந்துகொள்ளத் தலைப்படுகின்றோம். இதனையே மற்றவர்கள் செய்வதற்கு மட்டுமே இவர்கள் அகராதியில் "வஞ்சகவலை' என்று பெயர் என்பது உட்பட. நகரியல் வாழ்க்கையின் இயந்திரமயமாதல், உலகமய மாதல், நவீன தொழில்முறைகள், சூழல் மாசுபடல் என்கிற ரீதியில் காந்தியார் முன்னிறுத்திய இயற்கை வேளாண்மை, சுதேசியத் தொழில்முறை, கடையனுக்கும் கடைத்தேற்றம் குறித்த இன்றைய பொருத்தப் பாட்டிலிருந்து பிரேம் வலியுறுத்தும் இயற்கை மையப் பொருளாதாரம், கிராமியத் தன்னிறைவு, வேளாண் துணைத் தொழில்கள் ஏனையப் பிற சிறு, குறுந்தொழில் வளர்ச்சி என்பனவெல்லாம் நாம் கவனங்கூறவேண்டிய மாற்றரசியலுக்கான ஆக்கநலக் கூறுகளே.

ஆனால் காந்தியாரின் சுதேசியக் கோட்பாடே இன்னொரு பக்கம் "நடிப்புச்சுதேசி'களான இந்துமகா சபையினரிடம் "நேசனல் சாவனிச'மாக வெளிப்பட்ட பாசிசத்தின் இன்னொரு முகத்தையும் இங்கே நாம் ஒருசேர நோக்க வேண்டியுள்ளது. இந்திய சாதிய வாதத்தின் நமைச்சல்களிலிருந்து வெளிவரும் கருக்களின் ஊற்று இன்னதென ஜான்வைஸ் நூலில் (The Fascist Tradition - John Wise)கூறுவதன் சாரமாகப் பிரேமிள் சுட்டிக்காட்டுவது இதனைத்தான் : “சமதர்ம சித்தாந்தங்கள், சுதந்திரார்த்தமான கொள்கைகள், நகரியல் வாழ்க்கை வளர்ச்சிகள், நவீன தொழில்முறைகள் ஆகியவற்றின் மூலம் அழிக்கப்படுகிற தங்களது வாழ்க்கைமுறை களையும் சலுகைகளையும் வர்க்க மதிப்பு களையும் எடுக்கும் அதி தீவிர முயற்சியின் பெயரே பாசிசம்”.

இத்தகைய இந்துமகா சபையினரிடம் காந்தியார் மேற்கொண்ட அணுகுமுறை நமக்கு அதிர்ச்சி ஊட்டுகின்றது. சாலியன் வாலா பாக்கைப் பற்றியோ டயரைப் பற்றியோ பேசவே இந்துமகா சபையினர்க்கு அருகதை கிடையா தென்ற காந்தியாரே, “இந்துமகா சபையைப் பற்றியும் ராஷ்ட்ரிய சேவசங்கத்தைப் பற்றியும் குறைகூற வேண்டியிருக்கிறதே என்று வருந்து கிறேன். அவர்களிடம் என்றும் குறைகள் இல்லாதிருப்பின் நான் சந்தோஷமே அடைவேன். நான் ராஷ்ட்ரிய சேவசங்கத் தலைவரைச் சந்தித்தேன் அந்தச் சங்க அங்கத்தினர் கூட்டத்துக்கும் போயிருந்தேன்” என்கிறார். "தமிழ் ஹரிஜன்' 30.11.47 இதழிலிருந்து இதனைச் சுட்டிக்காட்டுவார் தேவ. பேரின்பன் (காந்தி அடிகளின் இறுதிச் சோதனை பக்.98). இப்படி இந்துமகா சபையைக் குறைகூற வேண்டி யிருக்கிறதே என வருந்திச் "செல்லக்கடி' கடிக்கும் காந்தியாரே அம்பேத்கரையோ "நவஜவான் பாரத் சபா' போலும் புரட்சிகர இயக்கச் செயற்பாடு களையோ கடுமையாகத் தாக்குகின்றார்.

“சாவை முகத்துக்கு நேர் சந்தித்த பிறகும் அஞ்சாத புரட்சியாளர்களைத்தான் வைஸ்ராய் இர்வின் பிரபிற்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மான வாசகத்தில் கோழைகள் நீசச் செயல் புரிந்தவர்கள் என்று காந்திஜி ஏசியிருக்கிறார்” எனச் சுட்டிக்காட்டும் யஷ்பால் 1113 பேர் கூடிய மாநாட்டில் 81 பேர் மட்டுமே ஒப்பிய அத்தீர்மானம் "ஏகமனதாக' நிறைவேறிய லட்சணத்தையும் முன்வைப்பார் ("சூறைக்காற்று வீசிய நாட்கள்').

“காங்கிரஸ் முத்திரை வைத்துவிட்டதென்றால், அதை நாடு முழுவதும் அங்கீகரித்துவிட்டது என்றாகும்” என்பார் காந்தியார் (சத்திய சோதனை பக்.276). ஆம் காங்கிரஸ் முத்திரை வைத்து விட்டால் அதை நாடே அங்கீகரித்ததாக அர்த்தம். காந்தியார் தீர்மானித்து விட்டால் காங்கிரஸே "ஏகமனதாக' நிறைவேற்றிவிட்டதாக அர்த்தம். எல்லாமே காந்தியாரின் ஏகமனத்தின் ஏகாதி பத்தியம்தான்.

“ஓருமுறையை எதிர்ப்பதும், அதைத் தாக்குவதும் முற்றும் சரியானதே, ஆனால் அம்முறையை உண்டாக்கிய கர்த்தாவையே எதிர்த்துத் தாக்குவது என்பது தன்னையே எதிர்த்துக்கொள்வதற்கு ஒப்பாகும்” என்பார் காந்தியாரே (சத்திய சோதனை பக்.330).

காந்தீயத்தை எதிர்க்கும், தாக்கும் பெரியாரிய, அம்பேத்கரிய மற்றும் எம்மனோர் கேள்விகள் யாவும் காந்தியத்தைக் கேள்விக்குள்ளாக்கு வனவே அல்லாமல் காந்தியாரைத் தாக்குவன ஆகமாட்டா. ஆனால் காந்தியாரின் அம்பேத்கர் மற்றும் நவஜவான் பாரத் சபா புரட்சியாளர் மீதான தாக்குதல்கள்யாவும் காந்தியத்தையே தகர்ப்பனவே.

“இச்சபர்மதி ஆசிரமவாசி
அவருக்கே எல்லாம் ஆகவும்
அவரே எல்லாம் ஆகவும்
வளர்ந்தவரே
இனியும் ஒருமுறை
ஏமாற்றப்படக் கூடாது இத்தேசம்”
             -செரபண்டராஜு (Sword Song)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com