Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

தேவதாசி ஒழிப்பு சட்டத்துக்காக குரல் கொடுத்த பெண்மணி!
சின்னக்குத்தூசி

சொல்வதை சொன்ன மாதிரியே செய்து காட்டுபவர் யாரோ அவரே பெரியார் என்றார்கள் தமிழ் பெருமக்கள். இன்று மதவாதத்தை எதிர்ப்பதாக பலபேர் வீரமுழக்கம் செய்வதைப் பார்க்கிறோம். இவர்களிலே சிலபேர் சென்ற ஆண்டு வரையில் மதவாதத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு அவர்களது கூட்டணியிலும் இடம்பெற்று அவர்களோடு ஆட்சியிலும், பதவி பங்கீடு செய்து கொண்டவர்கள்.

இன்றைக்கு 72ஆண்டுகளுக்கு முன்பு சில ஏடுகளில் “பள்ளிக்கூடங்களில் மதக்கல்வி கற்பிக்க வேண்டும்”. என்று சட்டசபையில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் ஒரு தீர்மானம் கொண்டு வரப்போகிறார் என்பதாக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரே வாரத்தில் ‘குடியரசு’ ஏட்டில் தந்தை பெரியார் ஒரு துணைத் தலையங்கம் எழுதினார்.
“திருமிகு முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் ‘பள்ளிக் கூடங்களில் மதக்கல்வி போதிக்கப்பட வேண்டும்’ என்று ஒரு தீர்மானம் கொண்டுவந்திருப்பதாய் பத்திரிகைகளில் பார்த்தோம். இது ஒரு பைத்தியக்காரச் செயல் என்பதே நமது அபிப்பிராயம். அம்மையார் மதம் என்பதற்கு என்ன பொருள் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு விளங்கவில்லை. அம்மையார் இஷ்டபடி நமது ஆண்-பெண் மக்களுக்கு நமது மதம் என்று சொல்லப்படுகிற இந்து மதப்படிப்பை சொல்லி வைப்பதாயிருந்தால் அந்த மதப்படிப்புப்படி அவர்கள் நடப்பதாயிருந்தால் திரு. முத்துலட்சுமி அம்மையார்- டாக்டர் வேலையையும், சட்டசபை அங்கத்தினர் வேலையையும் விட்டுவிட்டு சட்டி கழுவப்போக வேண்டும் என்பதை அம்மையார் அறிந்திருக்கிறாரோ இல்லையோ! நமக்குத் தெரியவில்லை.

அல்லது நாம் தான் மதக்கொள்கைக்கு மீறி, சட்டசபை உபதலைவராகக் கூட உயர்ந்து விட்டோமே, இனிமேல் நமக்கு என்ன குறை என்றும், ‘இனி எந்தப் பெண்மணியும் நமது பதவிக்கு வராமல் சட்டிகழுவுகிற வேலையிலேயே இருக்கட்டும்’ என்கிற எண்ணம் கொண்டும் மதத்திற்கு திரும்பி விட்டார்களோ என்றும் எண்ண வேண்டியிருக்கிறது” என்பதாக எழுதி டாக்டர் முத்துலட்சுமியின் தீர்மானத்தை கேலியும் கிண்டலும் பொங்கிட கடுமையாகக் கண்டித்தார் அய்யா, டாக்டர் முத்துலட்சுமி மீது பெரியாருக்கு அளப்பரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. காரணம்- அவர்தான் இந்தியாவிலேயே முதன்முதலில் டாக்டரான பெண்மணி; அவர்தான் இந்தியாவிலேயே முதன்முதலில் சட்டமன்றத்து உபதலைவர் ஆனவர்; இப்படி முதன் முதலாக என்ற பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் . அத்தனைப் பெருமைக்குரியவர் டாக்டர்.முத்துலட்சுமி. அவர்தான் தமிழகம் கண்ட பெண்ணுரிமை போராளிகளிலும் முதல் வரிசையில் நிற்பவர். பெண்களைக் கோயில்களில் பொட்டு கட்டிவிட்டு தேவதாசிகளாக்கும் கொடுமைக்கு- அவர்தான் தமது தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.

பால்யவிவாகம் என்ற பேரில் 7வயது சிறுவனுக்கும் 5வயதுச் சிறுமிக்கும் திருமணம் செய்து வைப்பது; அந்தச் சிறுவன் திடீரென்று மரணமடைந்து விட்டால் அந்தச் சிறுமியை விதவையாக்கி அவளது வாழ்நாள் முழுவதும் “பூ வைக்கக் கூடாது; பொட்டு வைக்கக் கூடாது; நல்ல புடவை கட்டக் கூடாது” என்று கொடுமைப் படுத்துவார்கள். அவள் வயதுக்கு வருவதற்கு முன்பே அவளுக்கு செய்து வைக்கப்பட்ட இந்த கட்டாயக் கல்யாணம் அவள் வாழ்நாள் முழுவதும் இறக்கைகள் வெட்டப்பட்ட கிளி போலவும், கால்கள் ஒடிக்கப்பட்ட மான் போலவும் அவதிப்பட்டாள். இந்தக் கொடுமையை ஒழிக்கவும். பாடுபட்டார் முத்துலட்சுமி அம்மையார். இதனால் எல்லாம் பெரியாருக்கு டாக்டர் முத்துலட்சுமி மீது மிகுந்தளவில் மதிப்பு உண்டு. ஆனாலும் இவ்வளவு பெரிய சீர்த்திருத்தக்காரரும், சமூக நீதிக்கண் ணோட்டம் படைத்தவருமான முத்துலட்சுமி யே பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு மதபோதனை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது அய்யாவால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவி ல்லை. குழந்தைகளுக்கு மதக்கல்வி அளிப்பதா? மதம் சொல்கிறபடி பெண்கள் டாக்டர் ஆக முடியுமா? உத்தியோகத்துக்கு போகமுடியுமா? சட்ட சபைக்கு செல்லமுடியுமா? கல்லா னாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற அடுப்பங்கரையில் சட்டி கழுவும் வேலையிலேயே உழல வேண்டியவர்கள்தாம் பெண்கள் என்பதுதானே மதம் பெண் களுக்குக் காட்டும் வழியாக தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. அதனால் தானே அடுப்பூதும் பெண்களுக்கு படிப் பெதற்கு என்ற பழமொழியே உருவாயிற்று..? இத்தனையும் தெரிந்திருந்தும் குழந்தைகளுக்கு மதபோதனை நடத்தப்பட வேண்டும் என்கிறாரே முத்துலட்சுமி அம்மையார் என்ற ஆதங்கத்திலும், வருத்தத்தி லும் கடுமையாகச் சாடி எழுதினார் பெரியார். பெரியாரின் துணைத் தலையங்கம் தொடங்குகிறது.

பெண்களை சாமி பேரால் பொட்டு கட்டி விபச்சாரியாக்கும் வழக்கத்தையும் சிறு குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து 10 அல்லது 12 வயதில் குழந்தைப் பெறும் படியான வழக்கத்தையும் நிறுத்த வேண்டு மென்று அம்மையார் சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானங்களை எதிர்த்தவர்கள் விரோதமாகப் பேசியவர்கள் எல்லாம் மதத்தையே முக்கியமாக வைத்து கூட்டு சேர்ந்ததை அதற்குள்ளாக மறந்து விட்டார்களா? அல்லது அம்மையாராவது அம்மதத் தொடர்பான ஆட்சேபணைகளுக்கு ஏதாவது சமாதானம் சொன்னார்களா என்று கேட்கிறோம். இப்பேர்பட்ட ஒரு ஒழுக்கமான காரியங்களை செய்வதற்கு அனுமதி இல்லாத மதத்தைக் கட்டிக்கொண்டு அழ வேண்டிய அவசியம் அம்மையாருக்கு ஏற்பட்டதின் இரகசியம் நமக்கு விளங்கவில்லை. அது எப்படியோ போகட்டும். இச்சமயம் அம்மையின் நிலைக்கு நாம் வருந்துவதோடு இதுகொண்டு, மற்ற சட்டசபை அங்கத்தி னர்கள் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவது மனிதத் தன்மைக்கும், சுய மரியாதைக்கும் ஆபத்து என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார் பெரியார். தீமையை எதிர்ப்பதில் பெரியார் யாருக்கும் இரக்கம் காட்டியதே இல்லை. தமக்கு வேண்டியவர் என்பதற்காகக்கூட அது தீமைதான் என்று சுட்டிக் காட்ட ஒருபோதும் தயங்கியதே இல்லை.

ஏட்டைத் தொடங்கி அதன் முதல் இதழிலேயே இதுபற்றி பெரியார் திட்டவட்டமாக கொள்கைப் பிரகடனம் வெளியிட்டிருக்கிறார். முதல் இதழ் தலையங்கத்தில்.. “மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும்.உயர்வு-தாழ்வு என்ற உணர்ச்சி ஒழிந்து, அனைத்துயிரும் ஒன்றெண் ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச் சாக்கடைகள் ஒழிய வேண்டும்.இந்நோக்கங்கள் நிறைவேற உண்மைநெறிபற்றி இவர் எமக்கு இனியர். இவர் எமக்கு மாற்றார் என்கிற விருப்பு வெறுப்புகளின்றி.. நண்பரே ஆயினும் ஆகுக... அவர்தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வது ஆயின், அஞ்சாது கண்டித்து ஒதுக்கப்படும்“ என்று விளக்கியிருந்தார்.அதன்படிதான் முத்துலட்சுமியே ஆயினும் குழந்தைகளுக்கு மத போதனை செய்ய வேண்டும் என்று சொன்னால் அது கேடு சூழ்வது,தீதி விளைவிப்பது என்ற கருத்தில் அம்மையாரின் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து எழுதினார் தந்தை பெரியார். பெரியாரின் இந்த தயவுதாட்சண் யமற்ற தீமைக்கு எதிரான அருங்குணம் பற்றி நாவலர் எஸ்.சோமசுந்நர பாரதியார் கீழ்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.“பெரியார் கருத்துகளை இக்கால மக்கள் எல்லோரும் உடன்பட்டு ஏற்பாரென நம்புதற்கில்லை. பெரியாரோடு நெருங்கிப் பழகும் பேறுபெற்றோருக்கு மட்டும்தான் பெரியாரின் பண்புகளை உள்ளவாறறிந்து பாராட்டுதல் கூடும். எனினும் பெரியார் தன் புற பொதுவாழ்வில் தன்னலம் நாடிப்புரியும் தொண்டில் தன்னிகரற்ற தலைவர் என்பதில் யாரும் வேறுபட முடியாது.உண்மையை அஞ்சாது உரைக்கும் உறுதியை படைத்தவர் பெரியார் என்பது எல்லோரும் ஒப்பமுடிந்ததாகும். கருத்து வேறுபாடுகளை உண்மை பிறழாதொழுகும் யாரிடமும் பெரியார் நன்கு மதிப்பவராவர். தமிழிளைஞர் முழு உணர்வையும் திரை கொள்ளும் திறனும், உற்ற சுற்றத்தாரும் சூழுமாறு நடக்கும் வெற்றியும் இப்பெரியார் பால் இருப்பதனால் இவரிடம் பல அரும்பெரும் சால்புகள் இருத்தல் வேண்டு மென்பதொரு தலை” தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழர் தலைவர் என்ற தலைப்பில் எழுதிய சாமி சிதம்பரனாரும்; சொல்வதை தமது சொந்த வாழ்க்கையில் நடத்திக் காட்டுவார் பெரியார் என்பதற்கு ஒரு சான்று காட்டியுள்ளார். அது என்ன? “பெரியார் தம்மனதில் நினைத்ததை மறைப்பதில்லை. அப்படியே வெளியிடுவார் அதன் பலனைப்பற்றிய கவலை அவருக் கில்லை”. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எனும் தமிழ்மறைக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எவர் சொல்வதையும் உற்றுக்கேட்பார். உண்மையுணர்வார். எந்தெந்தச் செயல்கள் நன்மையாக காணப்படு கின்றனவோ அச்செயல்களை நடத்துவதற்கு பின்வாங்கார்.

பெரியார் தமது மனைவி நாகம் மையார் இறந்தபோது அவரை அடக்கம் செய்த முறையே இவருடைய சொல்லுக்கும், செயலுக்கும் சான்றாகும். அம்மையார் இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்துகொண்டவிதம் பலருக்கும் வியப்பைத் தந்தது. அவர்தம் கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொன்டார். துக்கத்துக்கு வரும் பெண்களிடம் அழாமல் சடலத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம். அழுவதாயிருந்தால் உள்ளே செல்ல வேண்டாம். இப்படியே திரும்பி விடுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். சடலம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடுகட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டில் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மதவழக்கம், வண்டியில் கொண்டு செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு, சுடுவது இந்துமதக் கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்தபின் பெரியார் நடத்திக்காட்டிய நன்முறையாகும்., என்கிறார் சாமி சிதம்பரனார்!. பெரியார் யார்? சொல்வதை செய்து காட்டுபவர் அல்லவோ!

நன்றி : சின்னக்குத்தூசி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com