watermelonவெள்ளைப் பூசணிக்காய்க்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதேபோல் தர்பூசணியில் சிவந்த சதைப்பாகம் மட்டுமல்லாது தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப்பாகத்துக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.

வெள்ளைப் பூசணிக்காயை ஜூஸாக்கி வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்றுப்புண் தீரும். அதுமட்டுமல்லாமல், பெண்களின் வெள்ளைப்போக்கு, ரத்தம் – சீழுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற வியாதிகளையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் குணப்படுத்தும்.

தர்பூசணியில் வெள்ளை நிற சதைப்பாகம் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது. மேலும், உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கக் கூடியது.

ரத்தக்குழாய்களில் படியக்கூடிய கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்யும். உயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கக்கூடிய தன்மை கொண்டது. மற்ற பழங்களில் இல்லாத சத்துக்கள் பலவும் தர்பூசணியில் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவக்கூடியது தர்பூசணி.

- மஞ்சை வசந்தன்

Pin It

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். சிலருக்குக் காலையில் பசி எடுப்பதில்லை. பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசரத்தில் காலை உணவைத் தவிர்ப்போர் பலர். பெண்களில் பலருக்கு காலையில் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லத் தயார்ப்படுத்துவது, சமையலை முடித்து கணவருக்குக் கொடுத்து அனுப்புவது போன்ற வேலைகளில் மூழ்கிவிடுவதால் காலை உணவுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.

Fruits 213காரணங்களை அடுக்குவதை விடுத்து எப்படியாவது காலை உணவை எடுத்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒருவர் வந்துவிட்டால் அவருக்கு அது சாத்தியமே. காலை உணவைத் தவற விடுபவர்கள் மதிய நேரத்தில் ஒரு பிடி பிடித்துவிடுவது வழக்கம். அல்லது இடையில் பசியைச் சமாளிக்க கேக், பிஸ்கெட் என ஏதாவதொரு நொறுக்குத் தீனி அல்லது காபி, டீ, குளிர்பானங்களை உட்கொண்டு பசியைச் சமாளிப்பதும் உண்டு. உடல்நலத்திற்கு உதவாத நொறுக்குத் தீனிகளோ பானங்களோ நீடித்த ஆற்றலைத் தர பயன்பட மாட்டா.

நமது மூளை செயல்பட குளூகோஸ் அவசியம். நமது உடலுக்குத் தேவையான குளூகோசைத் தரவல்லது மாவுச்சத்து. இரவு உணவுக்கும் அடுத்த நாள் மதிய உணவுக்கும் உள்ள இடைவேளை நேரம் மிக அதிகம். உணவுக்குப் பிறகு அதிலிருந்து கிடைக்கும் குளூகோஸ் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைகொஜனாக சேமித்து வைக்கப்படுகிறது. காலையில் இந்த சேமிப்பு அநேகமாகக் கரைந்துவிடும். இழந்த சக்தியை மீண்டும் பெற காலையில் மாவுச்சத்தும் பிற ஊட்டச்சத்துக்களும் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அன்று நாம் ஈடுபட உள்ள நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆற்றல் இந்த உணவிலிருந்தே கிடைக்கும். அது மட்டுமல்ல, ஊட்டச்சத்துள்ள காலை உணவு உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் , தாதுப்பொருட்கள் கிடைக்கவும் உதவிடும்.

காலை உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக மாற்றிக் கொண்டவர்கள் நாள் முழுதும் ஆற்றலுடன் இருப்பதோடு மனஅழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. மதிய உணவை அதிக அளவில் உள்கொள்ளும்போது உபரியாகக் கிடைக்கும் கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் நடக்க வேண்டிய வேதியியல் மாற்றங்களை தாமதப்படுத்தி விடும். எனவே, அதிக அளவில் மூன்று வேளைகள் உண்பதைவிட, முறையான இடைவேளைகளில் சிறிதளவு சத்தான உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

நல்ல காலை உணவு என்பது அதிக அளவில் இட்லி, தோசை, பூரி வகையறாக்களை உட்கொள்வது என்பதல்ல. அவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொண்டால் அது உடனே செரிமானம் ஆகிவிடாமல் நீண்ட நேரத்திற்கு சக்தியைத் தரக்கூடியதாக இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துப் பொருட்களை விட நார்ச்சத்து மிகுந்த மாவுச்சத்துப் பொருட்கள் நல்லது.

பதப்படுத்தப்பட்ட ரவை, மைதா, ஒயிட் பிரெட், தீட்டப்பட்ட வெள்ளை அரிசி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்துவிட வேண்டும். தானியங்களால் ஆன சிற்றுண்டிகள், கோதுமைக் கஞ்சி அல்லது கூழ், ஓட்ஸ் தவிடு, பிரெட் சான்ட்விச் போன்றவை காலை உணவுக்கு ஏற்றவை. உப்புமா எனில் அதோடு வெங்காயம், பட்டாணி, காரட், கருவேப்பிலை போன்றவற்றைச் சேர்க்கலாம். ரொட்டியோடு வெண்ணையை மட்டும் சேர்க்காமல், வெள்ளரி, தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து சான்ட்விச் தயாரிக்கலாம். மாவுச் சத்துப் பொருட்களோடு கொழுப்புச் சத்து குறைந்த பால், முட்டை, பதநீர், தயிர், மோர், பழங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது சிறந்த காலை உணவாக அமையும்.

(நன்றி : மார்ச் ட்ரீம் இதழில் ரிச்சா சாக்சேனா எழுதிய கட்டுரை).

Pin It

நமது சுற்றுச் சூழல் மிகவும் மாசுபட்டிருப்பதே இப்பிரச்சனைகளுக்குப் பெரிதும் காரணமாய் அமைகின்றன. எனவே,

1.   sinusசுற்றுச்சூழலை தூய்மையாய் தூசு சேராமல் வையுங்கள்.

2.   தலையணை உறையை அடிக்கடி தூய்மை செய்யுங்கள்.

3.   தூசு உள்ள இடங்களில் முக்கில் துணி கட்டிக் கொள்ளுங்கள்.

4.   கை நகங்களை அழுக்கின்றி தூய்மையாய் வைத்திருங்கள்.

5.   கொழுப்புப் பொருட்களை குறைவாய் உண்ணுங்கள்.

6.   துளசி இலைகளை தினம் சாப்பிடுங்கள்.

7.   தினம் காலையில் 10 மிளகு சாப்பிடுங்கள்.

8.   தூதுவளைப் பொடியை தோசையில் சிறிது கலந்து சாப்பிடுங்கள்.

9.   மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்

10. பேருந்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யுங்கள் சிறுவர்கள் முதல் வயதடைந்தவர்கள் வரை இவற்றைப் பின்பற்றலாம். மிகக் குளிர்ச்சியான சூழலை, பொருட்களைத் தவிர்த்து விடுங்கள்.

- மஞ்சை வசந்தன்

Pin It

ஒவ்வொரு இனமும் தனக்கென தனித்துவமான பாரம்பரியம் கொண்டுள்ளது. மொழி, கலைகள், பண்பாட்டு கூறுகள் மற்றும் மருத்துவம் இவை தான் பெரும்பாலும் ஒரு  இனத்தின் அடையாளங்களாக உள்ளன...

Siddha Vaidya

மொழியை அழித்து விட்டால் இனத்தின் வரலாற்றை எளிதில் அழித்து விடலாம்... ஏனென்றால் மொழி என்பது தொடர்பு கருவி... வரலாற்றின் நீட்சி...... அது சார்ந்த இனத்தின் ஆவணம் .... .

தமிழின் [ திராவிடத்தின்] தனிச் சிறப்பு என்று எங்கும் பார்க்க முடியாத சூழல்.... . கலைகள்,  பண்பாடு , மருத்துவம் என எதிலும் ஆரிய சமஸ்கிருத கலப்பு.... இதனை தமிழன் உள்வாங்கிய கூறுகள் என்று கூறுவதை விட திராவிடத்தை, [தமிழை] அழிக்க திட்டமிட்டு திணிக்கப் பட்ட கூறுகள் என்று சொல்வதே மிகச் சரியானது....... அது ஆரியத்தின் உள்வாங்கி அழிக்கின்ற தத்துவமோ, இல்லை அடிப்படையை அசைத்துப் பார்க்கின்ற வன்மமோ... எதிலோ இழந்தோம் இருந்தவற்றை எல்லாம் தமிழர்களாகிய நாம்  .... .

நோயை விடக் கொடிய துன்பம் ஏது? என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் நமக்கென்று பொக்கிஷமாக ஒரு மருத்துவ முறையை விட்க்ச் சென்றுள்ளனர்.  தாது [minerals,  metals], தாவர [herbs], ஜீவப் பொருள்கள் என அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தி உள்ளனர்.

நோய் நாடி – pathology

நோய் முதல் நாடி – etiology

அது தணிக்கும் வாய்நாடி  – treatment

என அனைத்தையும் பேசி உள்ளான் ...

உடம்பை பாதுகாக்கும் அத்தனை வழிமுறைகளையும் [காய கற்ப முறைகள், யோகம் ] வந்தால் நோய் நீக்கும் வழிகளையும் வகுத்து உள்ளனர் ....

இன்னமும் தமிழ் மண்ணின் மருத்துவர்களான சித்தர்கள் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர்களாகவோ அல்லது வழிபாட்டு முறைகளை விமர்சிப்பவர்களவோ தான் இருந்து உள்ளனர்.

உதாரணமாக ‘ நட்ட கல்லை தெய்வம் என்று

நாலு புஷ்பம் சாத்தியே ...

...............

நட்ட கல்லும் பேசுமோ

நாதன் உள் இருக்கையிலே

-சிவ வாக்கியார் சித்தர்

பாடல் மூலம் அறியலாம்.

‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ‘ – என அணுவையும் துளைக்க முடியுமென சொன்னது நம் அறிவியல் ....

கடினமான இரும்பு, காந்தம் போன்ற உலோகங்களை நீரில் மிதக்கும் பற்பங்கள் ஆக்கியது நம் மருத்துவ  அறிவியல்...

கண்ணில் காணும் பச்சை எல்லாம் நோய் தீர்க்கும் மருந்துகள் என phyto chemicals பாடம் நடத்தியது நம் மருத்துவ அறிவியல்.....

4448 நோய்கள் என வகுத்து நுணுக்கமான pathology சொல்லித் தந்து இன்றைக்கும் உள்ள நோய்களுக்கும் தீர்வாய்,  தீர்க்கமான அறிவியலாய் நிமிர்ந்து நிற்கிறது....

அன்றைக்கு இருந்த சித்தர்கள் ஆன்மாவுக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு என்று உளறி வைக்க வில்லை ....

இன்றைக்கோ சித்த மருத்துவத்தின் இடைச் செருகலாய் , ஜோதிடம் , பஞ்ச பட்சி,  சரநூல்... என்ற கேவலங்கள்.........

மூட நம்பிக்கையின் புதர்களாக மண்டி கிடக்கிறது  நம் அறிவியல் மருத்துவம் ....

எதையெல்லாம் புனிதம் என்றார்களோ ,  அவற்றை எல்லாம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாய் விளக்கி வைத்த  மூடத்தனம் இதிலும் உள்ளது.

ஆராய்ச்சிக்கு  உட்படாததை அறிவியல் உலகம் என்றைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது?....

சித்தர்களின் முதல் கோட்பாடாய் சைவ சித்தாந்தை போதிக்கும் அவலம்... இதுவே சித்தத்தின் முதல் சறுக்கல் .......  

இந்திய மருத்துவத்துறையின் ஒரு அங்கமாக 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், சில தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

5  ½  ஆண்டுகால பட்டப்படிப்பு [B. SM. S] மேலும் 3 ஆண்டுகால பட்ட மேற்படிப்பு M. D[S] என ஏறத்தாழ 8 ½  ஆண்டுகள் படிக்க வேண்டி உள்ளது...... அதன் பாடத்திட்டம் திட்டமிட்டு திணிக்கப் பட்ட ஆரிய கூறுகள் அடங்கியது...... அறிவியலுக்கு எதிரானது....... ஆரியத்தின்  தாக்கம் நிறைந்தது........ இன்னமும்,  65 ஆண்டுகளாக மாறாத ஒரே  பாடத்திட்டம் கொண்டது....

ஆரியர் என்பவர் அரியர் , மேன்மையானவர் , தமிழ்ச் சமூகத்தில் மேம்பட்டோர் என்ற தவறான வரலாறும் , பிராமணர் என்றால் ஒழுக்கமானவர் என்றும் [ பாடநூல்- தோற்ற கிராம ஆராய்ச்சி ] சக்கிலியர் , பறையர் இருக்கும் இடத்தில் வீடு கட்டக்கூடாது என்றும் [பாட நூல் – நோய் இல்லா நெறி பக்கம் 48] என இன்றைக்கும் சட்டத்திற்கு முரண் பட்ட,  மனு தர்ம மொழிகளை போதிப்பதாக உள்ளது....

பாடத் திட்டம் வகுத்தவர்கள் மற்றும் எழுதியவர்கள்  மிகச் சிறந்த ஆரிய அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை இதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்....

இன்றைக்கு தமிழ் மருத்துவம்,  septic tankல் தவறவிடப்பட்ட புதையல் மாதிரி மூட நம்பிக்கைகளோடு மூழ்கி கிடக்கிறது....

அடுத்த தலைமுறைக்கு இந்த மருத்துவத்தை நாம் விட்டுச் செல்லும் போது,  

   திருத்தப் பட்ட தத்துவங்கள்

   முழுமையாக்கப் பட்ட அறிவியல்

நிறைந்ததாக முழுக்க முழுக்க அறிவியல் சார்பு உடையதாக மாற்றப் படவேண்டும்.

மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும்,  இந்திய மருத்துவத்துறையில் [AUYUSH] ஆயுர்வேதத்திற்கே முன்னுரிமை என்பது எழுதப் படாத இந்திய அரசியல் விதி...... ஏனென்றால் அது ஆரிய மருத்துவம்.......... . பாற்கடலை திருமால் கடைந்த போது கலசத்தோடு வந்த தன்வந்திரியால் இயற்றப்பட்டது [என்ன ஒரு கட்டுக்  கதை]

இதற்கு, கோடி , கோடியாக செலவழிக்க அரசு எப்போதும்  தயாராக இருக்கும்.... அது கடவுளின் மருத்துவம் அன்றோ [?]....

ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் ஒன்று என்று பொதுப்படையாக அறியப்பட,  இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் அது ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் உள்ள வித்தியாசம் என தெளிவு படுத்தப் பட வேண்டும்......

இரண்டும் ஒன்றுபோல் இருக்கக் காரணம் ,  திராவிட மருத்துவத்தை சிற்சில மாற்றம் செய்து உருவானதே ஆயுர்வேதம்.... . அது முழுக்க முழுக்க இந்துத்துவ மருத்துவம் .... இந்து கடவுள்களோடு சேர்த்து பரிமாறப்படுவதால் தான் அது இந்திய மருத்துவம் ஆக உயர்ந்து உலகம் முழுக்க அடையாளப் படுத்தப் படுகிறது...

கலப்பு செய்யப்பட்ட தமிழ் மருத்துவத்தில் இருந்துச் சாயத்தை நீக்கினால் தான் முழுமையான மருத்துவ அறிவியல் பெற முடியும்......

எப்படி தமிழ் சமுதாயத்தின்  பண்பாட்டுடன் ஆரியம் கலந்ததோ, இன்றைக்கும் பிரிக்க முடியாததாக இருக்கின்றதோ ,  அது போன்றே தமிழ் மருத்துவத்திலும் ஆரியம் கலந்துள்ளது ....

மீட்டெடுப்பு பணி என்பது தமிழ் மருத்துவத்திலும் அவசியம்.........

-       Dr. C. கவுதமி தமிழரசன் M. D (S)

Pin It

nila vembu

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.

நிலவேம்பு காய்கள் வெடிக்கும் தன்மையானவை. விதைகள் சிறியவை; மஞ்சள் நிறமானவை. நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.

நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.

காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

5 கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.

நிலவேம்புச் செடியை வளர்த்தால் அந்த வளர்ப்பிடத்திற்கு பாம்புகள் வருவதில்லை. பாம்புக் கடி விஷத்தை இந்தச் செடி முறிக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் கிராம மக்களிடம் பரவலாக காணப்பட்ட போதிலும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது உண்ணமையில்லை என்பது தெரியவந்துள்ளது.

விஷப் பாம்புகளினால் கடி பட்டவர்கள் நிலவேம்புச் செடியை உபயோகித்து குணம் காண முடியாது. இருப்பினும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை இந்த தாவரத்திற்கு உண்டு.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Pin It