உலகளாவிய மனித இனங்களில் செழுமையான வளமையான மொழியையும், செம்மாந்த தனித்ததொரு பண்பாட்டையும் கொண்டது நம் தமிழ் இனம். ஆதி ஆதிக்க முதலாளியமும், அதன் சுரண்டலுக்கான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் உலகந்தழுவி மனித குலம் எதிர்கொண்டாலும், சாதியும் அதன் படிநிலைக் குருரங்களும், நம் தமிழ் இனம் உள்ளிட்ட பிற இந்திய ஒன்றிய இனங்களும் உள்ளடக்கம் என்றாலும், நாம் களமாடும் மண் இந்தத் தமிழ் மண்.

நாம் நம் நிலத்தில் வலுவாகக் காலூன்றி நின்று, தோழமை ஒருமைப்பாட்டுக் கரங்களை விரியத் திறந்து, அனைவரையும் ஆறத் தழுவி அணைத்துக் கொண்டு, உலகு தழுவிய மனித குல விடுதலைக்காய் களமாட வேண்டியவர்கள் நாம்.

அதற்காக இத்தமிழ் மண்ணில் எழுந்த செங்கொடி இயக்கம் உள்ளிட்ட பிற விடுதலை இயக்கங்களின் கலை இலககியப் பண்பாட்டுப் பெரு வெளியின் வரிசையில் புதிய விடுதலைச் கீற்றாய்... மக்கள் விடுதலைச் சிந்தனைக் கருக் கொண்டு, செயல்வடிவ உருவெடுத்து எழுச்சியோடு இன்று புதிதாய்ப் பிறறந்திருக்கும் மக்கள் விடுதலை பண்பாட்டுப் பேரியக்கத்தை புதிய மனிதன் தோழமைக் கரமுயர்த்தி வரவேற்கிறான்.

புதிய மனிதனின் தாகமும்... இலக்கும்... மக்கள் விடுதலை பண்பாட்டுப் பேரியக்கத்தின் தாகமும் இலக்கும் ஒன்றே.

அது சாதி ஒழிந்த தன்னாட்சி கொண்ட சோசலிசத் தமிழ்நாடு.

அஞ்சலி

செ.க என்கிற செ. கணேசலிங்கன் (1928 - 2021)

தமிழீழ மற்றும் தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் தமது கதைகள், கட்டுரைகள், நாவல்கள் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தவர் தோழர் செ.க என்கிற செ. கணேசலிங்கன் அவர்கள். படைப்பிலக்கியத்தைப் போலவே பொதுவுடைமைத் தத்துவக் கருத்துக்களை மிக எளிமையாக கடித வடிவில் எழுதி எல்லோரையும் கவர்ந்தவர். குமரன் என்கிற பெயரில் இதழையும், குமரன் பதிப்பகம் மூலமாக காத்திரமான பலப்பல படைப்புகளையும், படைப்பாளிகளையும் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு, தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர்.

ஆற்றல் மிகுந்த மூத்த முன்னோடிப் படைப்பாளி செ.க என்கிற செ. கணேசலிங்கன் அவர்களின் மறைவிற்கு புதிய மனிதன் தனது புகழஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It