ஆகஸ்ட் 15 -இந்திய நாடு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை அடைந்த நாள். இந்த ஆண்டு இந்தியாவிற்கு 69-வது சுதந்திர தினம். வழமைப் போலவே, பள்ளிகளில் கொடியேற்றப்பட்டு, பள்ளிச் சிறார்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டிருக்கும். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த் துகளைப் பகிர்ந்து மெய் சிலிர்த்துப் போயிருப்பர்.

modi 329தில்லியில் உள்ள செங்கோட்டையில் 69-வது சுதந்திர நாள் உரையாற்றினார் பிரதமர் மோடி. இது அவருடைய இரண்டாவது சுதந்திர நாள் உரை.

பிரதமர் மோடியின் சுதந்திர நாள் உரையில் ஆயிரம் மாற்றங்களை எதிர் பார்த்து இருந்திருப்பான் வளர்ச்சியை நம்பிவாக்களித்த சாமானியன். கால அளவில் குறைவைக்காது 90 நிமிடங்கள் உரையாற்றினார் பிரதமர். ஆனால், இந்த 90 நிமிட உரையால் இந்திய சாமானியனுக்கு என்ன பயன் என்கிற கேள்வி நம்மை நெருடலாக தொடர்கிறது.

இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் சொல்ல வந்த முக்கியமான விடயம் யாதெனின், "மோடி தலைமை யிலான பாரதிய சனதா அரசு அமைந்த கடந்த 15 மாதங்களில் எந்தவொரு ஊழலும் இந்த அரசில் நடக்கவில்லை. மக்கள் எனக்கு கொடுத்த பணியினை பல்வேறு தடைகளைத் தாண்டி செய்து கொண்டிருக்கிறேன்” என்று திறந்த மேடையில் நின்று முழங்கி இருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா வெளியே வர மோடி உதவினார் என்பது இன்று ஊரறிந்த இரகசியம், வியாபம் ஊழல், கறுப்புப் பண மோசடி பேர்வழி லலித் மோடிக்குக் காட்டப் பட்ட மனிதநேயம், பள்ளியில் சத்துணவிற்கு கடலை மிட்டாய் வாங்கியதில் ஊழல் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக் கால கூட்டத் தொடர் முழுக்க செயல்படாமல் முடக்கிய ஊழல்கள் எல்லாம் மோடியின் நினைவில் மட்டும் இல்லை என்பதுதான் வியப்பு. இதற்கும் பிரதமர் மோடிக்கு ’செலெக்டிவ் அம்நீசியாவெல்லாம்’ இல்லை.

பிரதமர் பதில் கூற வேண்டும் என்று இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கிய போது, மௌன வேடம் தரித்த மோடி, சுதந்திர உரைக்கு மட்டும் தனது 56 அங்குல நெஞ்சு புடைக்க கர்ஜித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பிரதமர் மோடிக்குப் போட்டியாக இருந்து பின்னர் அவரது ரசிகர்களாகக் காட்டிக் கொள்ளும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரைக் காப்பாற்றவே பிரதமருடைய மௌனம் என்பதை நாடறியும்.

ஊழலற்ற அரசு என மார்தட்டும் பிரதமர், தன்னுடைய ஆட்சியின் வெற்றி பெற்ற திட்டங்களாக முன்னிறுத்துவது, பிரதான் மந்திரி ஜன தன் யோஜனாவையும், தூய்மை இந்தியா திட்டத்தையும் தான். ஜன் தன் திட்டம் மூலம் 17 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடைத்துள்ளது. வங்கிக் கணக்கு கிடைத்த அடித்தட்டு மக்கள் முதலீடு செய்த பணத்தின் அளவு 20,000 கோடி ரூபாய். கடந்த சுதந்திர தின உரையில் மோடி அறிவித்த, "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை. அதற்கு முக்கியமான காரணம், நாட்டின் உள்கட்டுமானத்தை உயர்த்தினால்தான் முதலீடு செய்ய முடியும் என்று பெருமுதலாளிகள் தரப்பு சொல்லிவிட்டது. அதுவும் அரசின் செலவில் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. அரசின் பணம் என்றால் மக்களின் வரிப் பணம்தானே. காப்பீடு தொகை, ஓய்வுக் கால சேமிப்பு போன்றவற்றை முதலாளிகள் கேட்ட உள்கட்டுமானத்திற்காகத் திருப்பிவிட்டுள்ள மோடி அரசு, அடித்தட்டு மக்களின் சேமிப்பையும் விட்டுவிடாது என்பது திண்ணம்.

ஜன் தன் திட்டம் எப்படி காங்கிரசிடம் இருந்து எடுக்கப்பட்டதோ, அதே போல "தூய்மை இந்தியா" திட்டம் என்பது நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட "நிர்மல் குஜராத்" திட்டத்தின் தொடர்ச்சியே.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஆயுட்காலம் என்பது பாரதிய சனதா கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் குப்பை இல்லாத இடத்தில் துடைப்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட போதே முடிந்துவிட்டது. தெருவில் இறங்கி தூய்மை செய்த பிரதமர் என்ற ஒரு மாத விளம்பரத்துக்கு மட்டும் பயன்பட்டது ’தூய்மை இந்தியா’ என்பது பிரதமர் அறியாததல்ல. ஆனால், இன்றும் குஜராத்தின் வாபி, அங்கலேஷ்வர் ஆகிய தொழிற்சாலை பகுதிகள்தான் இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த இடங்கள். இந்தியாவின் தலைநகர் தில்லிதான் சுவாசிக்க முடியாத அளவிற்கு மாசடைந்துள்ள காற்றுப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.

அது மட்டுமின்றி இதுவரை வெறும் விளம்பரங் களுக்கு மட்டுமே பல நூறு கோடிகள் இந்த திட்டத்தின் கீழ் செலவழிக்கப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி கங்கையைச் சுத்தப்படுத்துகின்றேன் என்று காங்கிரசு பல நூறு கோடிகளை கொட்டி வீணாக்கியது போலவே, தாங்களும் செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார் மோடி. உண்மையாகவே இந்தியா தூய்மையான இந்தியாவாக மாற வேண்டும் என்றால் முதலாம், இரண்டாம் உலக நாடுகளெல்லாம் குப்பை என ஒதுக்கி தள்ளிய நிறுவனங்களையும், செயல்பட்டு வரும் அணு உலைகளையும் நிறுத்திவிட்டு, புதிதாக இதுபோன்ற குப்பைகள் வராமல் தடுப்பதன் மூலமே அது நடக்கும். ஆனால் ஒவ்வொரு நாடாக சென்று எங்கள் நாட்டில் வந்து உங்களது நிறுவனங்களைத் தொடங்கி குப்பைகளை எங்கள் மண்ணில் கொட்டுங்கள், எங்கள் தொழிலாளர்களின் இரத்தத்தை எவ்வளவு வேண்டுமே அவ்வளவு உறுஞ்சிக் கொள்ளுங்கள், அதற்கான சட்ட வழிமுறைகளை நாங்கள் செய்கின்றோம் என கூவி அழைக்கின்றார் திருவாளர்.மோடி.

காங்கிரசுக் கட்சியை விமர்சித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, காங்கிரசுப் பயணித்த அதே பாதையில் வேகமாகப் பயணிப்பது என்பது நாட்டின் பயணத்தை அதன் தொடக்கப் புள்ளிக்கே இட்டுச் செல்லும் என்று சிறுபிள்ளையும் அறிந்த ஒன்றுதான். 

Pin It