மானுடம் வாசகர்களுக்கு வணக்கம்!
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நுழைவு மிக நீண்டகாலமாக அவரது திரைப்படங்களில் பூடகமாகவும் அவரது இரசிகர்கள் எனப்படுவோர்களால் வெளிப்படையாகவும் அறிவிக்கப்பட்டு வந்த பரபரப்பு அடுத்த ஆண்டில் முடிவுக்கு வரும் எனத் தோன்றுகிறது.
2021 இல் ரஜினிகாந்த் ஒன்று நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்குவார் அல்லது அதிலிருந்து பின்வாங்குவார் என்பது இறுதியாகிவிடும். அதிக பட்சமாக அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில் வருமானவரித் துறையினரால் ஏற்படப்போகும் அனர்த்தங்களை விட அரசியல் கட்சி தொடங்குவதே தனது முதுமைக்கும் தனது புகழுக்கும் சொத்துக்களுக்கும் சரியானதும் இலகுவானதும் என்றே ரஜினி முடிவெடுக்க முடியும். தன்னை இயக்கும் சக்திகளுக்குப் பணிவதைத் தவிர வேறு தேர்வுகள் அவருக்கில்லை.
ரஜினிகாந்த் அவர்கள் தமிழரல்லாத தென்மராட்டியர் என்பதும் தமிழக நலன்சார்ந்த கோரிக்கைகளில் அவர் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக முடிவு எடுக்கக் கூடியவர் என்றும் அவரது ஆன்மீக அரசியல் என்பது பாரதிய ஜனதாவின் கொள்கைகளோடு பெரிதும் ஒத்துப் போகக் கூடியவை என்றும் பொதுமக்களின் உரிமைப் போராட்டங்களில் அரசின் குரலாக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு நியாயம் கற்பிப்பவராக அரசியலற்ற அரசு எந்திரத்தின் ஆளாக குரல் கொடுப்பவர் என்ற விமர்சனங்கள் தமிழ்த்தேசிய அரசியல் பேசுபவர்கள், மனித உரிமையாளர்கள், மாநில உரிமை பேசுபவர்கள், அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் போன்ற பல பிரிவினரால் அவர்மீது நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
இக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொய்யானவை என்று கூறிவிட இயலாது. அவரது தனிப்பட்ட அரிதான இயல்பண்பை அளவீடாக வைத்துக் கொண்டு சமூகம், அரசியல், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் முற்போக்கான அம்சங்களை அவர் கொண்டிருப்பார் என்று பாமரத்தனமாக நம்பிவிட முடியாது.
பெரிதும் அரசு எந்திரத்தின் முக்கிய பகுதியான காவல்துறை, இராணுவம் போன்றவற்றின் செயல்பாடுகளை புனிதத்தன்மை மிகுந்ததாக கேள்விக்கிட மற்றதாகக் கொள்ள வேண்டும் என்பது போன்ற அவரது கருத்துக்கள் பாசிசத்துடன் நெருக்கம் கொள்வதை கவனிக்க வேண்டும்.
தனது இரசிகர்களில் மிகப் பெரும்பான்மையினர் அரசியலற்ற உதிரி வர்க்கத்தினர்களாக இருப்பது மேற்சொன்ன கருத்துக்கு இணக்கமாகச் செல்கிறது.
ரஜினியின் அரசியல் வருகை உறுதியானால் அவரது ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தின் பின்னே ஒழிந்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் ‘ஏக இந்தியா’ என முன்மொழியப்பட்டு தமிழகம் இதுவரை கொண்டிருந்த பிராமண எதிர்ப்பு, வேதமத எதிர்ப்பு, தமிழ் மொழி, இனம், பண்பாடு, தொன்மை, மரபு போன்றவற்றுக்கும் மாநில உரிமைகள், சுற்றுச் சூழல், இயற்கை வளச் சுரண்டல் எதிர்ப்பு கருத்துக்களுக்கும் மிக நெருக்கடிகளை இனிவரும் காலங்களில் கொடுக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.
அவரே முடியாது என்றாலும் தமிழகத்தில் காலூன்ற ரஜினிபோன்ற சக்திகளை முன்னிருத்துவதைத் தவிர வேறு வழியேதும் பாரதிய ஜனதாவுக்கு இல்லை என்பதால் முதுகில் கத்தியை வைத்துக் கொண்டேனும் ரஜினியை தள்ளிக் கொண்டுவந்து அரசியல் அரங்கில் தள்ளி விட்டுவிடுவதில் அக்கட்சி உறுதியாக இருப்பது தற்சமயம் அவரது அரசியல் கருத்துக்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றி மாற்றிப் பேசுவதிலிருந்து அவதானிக்க முடிகிறது.
எம்.ஜி. ஆர். போன்றவர்கள் சினிமாவினால் ஏற்பட்ட கவர்ச்சி, வசீகரம் போன்றவற்றை தனது அரசியல் பிரவேசத்துக்குப் பயன்படுத்தினார் என்றாலும் அவர் திராவிட அரசியல் சார்ந்தவராகவே சினிமாவிலும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
திராவிட அரசியலின் சினிமா திருவுருவாக அவர் இருந்தார். எனவே அவரது இரசிகர்களும் அரசியல் ரசிகர்களாகவே இருந்தனர். எனவே அவர் அரசியல் கட்சி தொடங்கியதும் இரசிகர்கள் அப்படியே கட்சித் தொண்டர்களாக மாறினார்கள்.
ரஜினிகாந்தோ எவ்வித கொள்கை கோட்பாடுகளுமற்ற திரைப்படங்களைத் தந்தவராக தன்னை முன்னிருத்தும் ‘சூப்பர்மேன்’ போன்று செயல்பட்டு சூப்பர் ஸ்டார் ஆனவர். எனவே அவரது இரசிகர்கள் என்பவர்கள் வெறும் ரஜினியின் சினிமா இரசிகர்கள்தான்.
வெறும் சினிமா ரசிகர்களை தான் உருவாக்கும் கட்சிக்கு தொண்டர்களாக ஆக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பணத்தைப் பெற்றுக் கொண்டு நடித்துவிட்டு தான் கொண்டிருக்கும் அரசியல் கருத்துக்களை இதுவரை வெளிப்படையாகச் சொல்லாமல் வைத்திருந்து நடிப்பினால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களைத் தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்குத் தொண்டர்களாக மடைமாற்றுவது எங்கும் இல்லாதது. அறம் மீறிய அரசியல் நடவடிக்கை. தவறான முன்னுதாரணம் கொண்டது.
தமிழகத்தை தமிழரே ஆளவேண்டும் என்ற குரல்கள் பரவலாக உரக்க ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் ரஜினியின் அரசியல் நுழைவு செய்திகள் இன்னமும் முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளது. எனவே அக்குரல்களுக்கு பரவலாக எதிர்ப்புகளும் உள்ளன.
தமிழகத்தை தமிழரே ஆளவேண்டும் என்பதை ஓர் இனவாத குரலாகக் கொள்ளமுடியாது. அது மண் நலன்சார்ந்த கோரிக்கையாக சனநாயகக் குரலாகத்தான் கருதவேண்டும். ஆனால் தமிழகத்தின் ஆகப் பெரும்பான்மை மக்களின் ஏற்பைப் பெற்ற கோரிக்கையாக அது பரிணமித்தால்தான் தமிழகத்தின் குரலாகக் கருதமுடியும்.
அதே நேரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என்றோ அரசியலில் நுழையக் கூடாது என்றோ கூறுவது சரியான கருத்தா என யோசிக்க வேண்டும். யாரும் அரசியல் கட்சி தொடங்கலாம்.
ஆட்சியைப் பிடிக்கலாம். தமிழகத்தின் முதல்வராகலாம். அது சட்டப்படியும் நியாயப்படியும் சரியானதே. அவரை ஏற்பதாக மறுப்பதா என்பதை பெரும்பான்மைத் தமிழக மக்களே முடிவு செய்யப் போகிறார்கள் என்பதால் அதை யாரும் தடுக்க முடியாது.
ரஜினிகாந்த் அவர்களின் சமூக, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் பற்றிய கண்ணோட்டத்தில் இருக்கும் பிற்போக்கு, மத, பாசிச் கருத்துக்களை அபாயங்களை பரப்புரை செய்து அவரைக் களத்தில் தோற்கடிப்பதே அவரை எதிர்ப்பவர்களின் மக்கள் நலனில் அக்கறை கொள்பவர்களின் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
இதுவே அறம் சார்ந்த அரசியல். ஆட்டத்திற்குள் நுழையவிடாது தடுப்பது அவருக்குச் சாதகமான பரப்புரையாக மாறி வெற்றியைப் பெற்றுத்தரக் கூடிய வாய்ப்புகளை அரசியல் சூழல் ஏற்படுத்திவிடக் கூடும். எச்சரிக்கையாகச் செயல்படவேண்டிய தருணமிது.
மானுடம் உரிய பருவ காலத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. வாசகர்கள் தொலைபேசி வாயிலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதங்கள் வாயிலாகவோ தங்களது விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். செழுமை மிக்க மானுடமாக வளர ஆதரவு தரக் கோருகிறோம். படியுங்கள், பரப்புங்கள்.
நன்றி !
தோழமையுடன்,
‘மானுடம்’ ஆசிரியர் குழு.