நம்மைச் சுற்றி காணப்படும் செடி,கொடிகள் மற்றும் புதர்களில் காணப்படும் பூண்டு செடிகள்,தாவரங்கள்,மரங்களின் பெயர்கள் கூட தெரியாத நிலையில் தான் இன்றைய தமிழர்கள் வாழ்கின்றனர்.ஆனால், தொல் தமிழர்கள் ஒவ்வொரு தாவரத்தையும், அதன் சமூக பங்களிப்பையும்,இலைகள்,பூக்களின் தன்மைகள் மற்றும் அவற்றின் பயன்களை நன்குணர்ந்தவர்களாகவே வாழ்ந்துள்ளனர்.அடுத்தடுத்த தலைமுறை கற்றுணர பாடல் களாகவும் பதிவு செய்துள்ளனர்.

பண்டையத் தமிழர்களுக்கும்,தாவரங்களுக்கும் இருந்த உறவையும்,தமிழகத்தில் இயற்கையாக வளரக்கூடிய தாவரங்கள், வெளியில் இருந்து இங்கு வந்துள்ள அயல் தாவர இனங்கள் குறித்தும்,உணவிலும்,மருந்திலும் தாவரங்களை எப்படி பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும் சங்க நூல்களின் வழியாக,அறிவியல் பார்வையோடு,பல்வேறு ஆய்வறிஞர்களின் மேற்கோள்களோடு விளக்கிக் கூறும் நூல் தான் "தமிழரும் தாவரமும்'.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தாவர அறிவியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்தில், தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான ஆவணமாக "தமிழரும் தாவரமும்' நூல் வெளிவந்திருக்கிறது.

வரலாற்றுப் பின்னணியில் தமிழகம்,தமிழர்கள் தமிழ்,தமிழகத்தின் இயற்கைச் சூழல், தமிழரின் தாவர அறிவியல் புலமை,தமிழகத்தின் இயல்,அயல் தாவரங்கள்,உணவு, மருத்துவம், வணிகம் என பதினோரு தலைப்புகளில் தாவரங்ளோடு தமிழர்களுக்கு இருந்த அறிவியல் பூர்வமான பார்வையை,ஒத்திசைந்த வாழ்வை நம் கண் முன்னால் விவரிக்கிறார்.

இயற்கை வளங்களான நிலம், தீ, நீர், வளி, விசும்பு (காற்று) என ஐந்தும் காக்கப்பட்டால் தான் தாமும் காக்கப் படுவோம் என்பதை தமிழர்கள் முழுமையாக உணர்ந்திருந்தனர்.

தமிழர்களுக்கு தாவரங்களின் மீதிருந்த அறிவை,புலமையை மிகச் சிறப்பாக பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி பதிவு செய்திருக்கிறார்.

மகளிரின் பல்லுக்கு முல்லைப் பூவை ஒப்பிட்ட புலவர்கள்,மற்ற உயிரினங்களோடும் பூக்களை ஒப்பிட்டு பாடியுள்ளனர். நண்டின் கண்ணுக்கு நொச்சி அரும்பையும், வயல் நண்டின் கண்ணுக்கு வேப்பம் பூவையும், மயில் தலையில் நீண்டு வளரும் முடிக்கற்றைக்கு வாகைப் பூவையும், பாம்பின் பல்லுக்கு குரவின் அரும்பையும், பல்லி முட்டைக்கு புன்னை அரும்பையும், மீன்கொத்தி பறவையின் வாய்க்கு தளவ மலரையும் ஒப்பிட்டு பாடியுள்ளது அவர்களது கூர்ந்தாயும் திறனை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

பண்டைய சமூகத்தில் பூக்கள் என்பது,போர்க்களத்திலும்,போர்ச் சின்னமாகவும் மட்டுமல்லாது, அன்றாட செயல்பாடுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பூக்களின் பெயரில் இசைக் கருவிகளும் (குறிஞ்சி யாழ், மருத யாழ்), மருத்துவத்திலும் பூக்களை பயன்படுத்தி இருந்ததை சங்கப் பாடல்களின் வழியே அறிய முடிகிறது.

தாவரங்களின் பயன்பாடு பற்றிய நுண்ணறிவும், பூக்களின் தன்மை, அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் முதிர்ந்த அறிவை தமிழர்கள் பெற்றிருந்தனர்.

தமிழகத்தில் ஏறத்தாழ 4850 தாவரச் சிற்றினங்கள் இயல் தாவரங்களாகவும், 1150 தாவரச் சிற்றினங்கள் அயல் மற்றும் அயலியல் தாவரங்களாகவும் காணப் படுகின்றன. தமிழர்களின் பழமையான நூலாகிய தொல்காப்பியத்தில் ஆம்பல், ஆயிரை, உமிஞை, கரந்தை, காஞ்சி, காந்தள், குவளை, மருதம், பாலை, நெய்தல், வெட்சி என 53 தாவரங்களின் பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன. இவற்றில் 31 மரங்களும் அடங்குகின்றன.

நமது உணவில் இன்று அதிகம் இடம் பிடிக்கும் "புளி',இந்தியாவிற்கு,குறிப்பாக தமிழகத்திற்கு கி.பி.14-ம் நூற்றாண்டில் வந்தடைந்தது.புளியின் இயல்பான வாழிடம் ஆப்பிரிக்கா என்பதையும் அறிய முடிகிறது.

ஆலமரம் நமது தமிழகத்தைச் சார்ந்ததல்ல.வடநாட்டிலிருந்து அசோகர் காலத்திலோ, அதற்குச் சற்று முன்போ புத்த மதத்தோடு தமிழகத்தை அடைந்திருக்க வேண்டும். தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழகத்தை வந்தடைந்த அயல் தாவரமாக ஆலமரம் உள்ளது.

வடநாட்டில் இருந்து தமிழகத்தை வந்தடைந்த மற்றொரு தாவரம் "பவழ மல்லிகை'.பக்தி இயக்க காலமான கி.பி.7ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகம் வந்து சேர்ந்தது இது.

இன்று தமிழகத்தில் பணப்பயிராக வளர்க்கப்படும் தென்னை,பிலிப்பைன்ஸ்,பசிபிக் தீவுகளில் தோன்றி இலங்கை வழியாக கேரளாவையும், தமிழகத்தையும் வந்தடைந்திருக்க வேண்டும் என்ற கூற்றையும் பேராசிரியர் முன் வைக்கிறார்.கி.பி.7-ம் நூற்றாண்டு வரை கோயில்களுக்கு தேங்காய் உடைத்தல் பற்றிய குறிப்புகளும்,கி.பி.10-ம் நூற்றாண்டு வரை தேங்காய் கடவுளுக்கு படைக்கப்பட்டதாக எந்த இலக்கிய குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இஞ்சியும், மஞ்சளும் கூட தமிழக தாவரமல்ல. வட இந்தியாவில் இருந்து சங்க காலத்தின் ஆரம்பத்திலோ அதற்கு முன்போ இஞ்சியும்,சீனாவில் இருந்து மஞ்சளும் தமிழகம் வந்திருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

செவ்வந்தி, கேழ்வரகு, ஆமணக்கு, இன்று நம்முடைய உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கடலைப் பருப்பு போன்றவைகளும் தமிழகத்திற்கு வந்த அயல் தாவரங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

16-ம் நூற்றாண்டில் பெரு நாட்டிலிருந்து ஸ்பெயின் வழியாக இந்தியாவை வந்தடைந்தது தான், இன்று நாம் சுவைத்து மகிழும் கொய்யாப்பழம். 16-17-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் களால் இந்தியாவில் நுழைந்த மற்றொரு முக்கிய பயிர்த் தாவரம் உருளைக்கிழங்கு ஆகும். வேர்க்கடலையும் மத்திய அமெரிக்கப் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு கி.பி.1825முதல் 1850-ம் ஆண்டுக்குள் வந்தடைந்தது.

இந்த வகையில் தக்காளியும் இந்தியாவில் நுழைந்த ஒரு பயிர்த் தாவரமாகும். காப்பியும், தேயிலையும் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்களால் நம் நாட்டில் நுழைந்தது நாமறிந்ததே.

பாதாம் பருப்பும், மரவள்ளிக் கிழங்கும், கிராம்பும் இந்தியாவில் நுழைக்கப்பட்ட தாவரங்கள் தான். கற்பூரம் சீனாவிற்கும், சப்பானின் ஒரு சில பகுதிகளுக்கும் இயல்பான தாவரமாகும். 20-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் கேரளா மற்றும் நீலகிரியின் ஒரு சில பகுதிகளிலும் இது நுழைக்கப்பட்டது.குங்குமப்பூ காஷ்மீரப் பகுதியில் இருந்து கி.பி.10-ம் நூற்றாண்டு வாக்கிலும்,வெங்காயம் பெர்சியா மற்றும் ஆப்கானிஸ் தானில் இருந்தும், பூண்டு சுங்காணி பாலைவனத்திலிருந்தும்,சேனைக்கிழங்கு சப்பானியப் பகுதியிலிருந்தும், முள்ளங்கி மற்றும் ஆரஞ்சு சீனாவிலிருந்தும், முட்டைக்கோஸ், காலிபிளவர், டர்னிப், காரட், சிக்கரி போன்றவை ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,பீட்ரூட் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்தும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு தென்அமெரிக்கா விலிருந்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் கடந்த மூன்று நூற்றாண்டு களுக்குள் தான் நுழைந்தன எனும் போது நமது இயற்கை யமைப்பிலும்,உணவு பழக்கத்திலும் இயல்பாக உள்ள தாவரங்கள் எது? என்ற கேள்வி எழுவது இயல்பானதே.

அவரை (மொச்சை), உழுந்து (உளுந்து), எலுமிச்சை, நெல், கரும்பு, மா, பலா, மாதுளை, முருங்கை,வாழை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இயல்வகை தாவரங்களைப் பற்றிய குறிப்புகளை சங்கப் பாடல்களில் காணமுடிகிறது.

பண்டைய தமிழ்ச் சமுதாயத்திலும்,பண்பாட்டிலும் "சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல' என்ற கருத்து வேரூன்றி இருந்தது.கி.பி.15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, விஜய நகர மன்னர்களின் காலம் தொடங்கி,சத்திரங்களில் சோறு விற்கப்பட்டதற்கான ஆதாரங்களை கல்வெட்டுக்களின் வழியே அறிய முடிகிறது.

வரலாற்றுக்கு முந்தையை காலத்தில் தமிழகத்தில் மதங்கள் இல்லை.தாவரங்கள் பரிசுத்தமானவை,கடவுள் தன்மை பெற்றவை என்பது போன்ற தங்கள் கருத்துக்களை ஆரியர்கள் தமிழக ஆன்மீகக் கருத்துக்களில் கலந்தனர். இது "பெரு மரபு சார்ந்த வழிபாடாக' மாறியது.

கோயில்களில் காணப்படும் தாவரங்கள் மட்டுமல்லாது,தாவரங்கள் சூழ்ந்த காடுகளிலும் கோயில்கள் அமைக்கப்பட்டன.அது போல்,இந்தியா முழுவதும் ஏறத்தாழ 50,000-மும், தமிழகத்தில் மட்டும் 448 கோயில் காடுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நெடு மூக்கன், மூக்கன் சம்பா, மூக்கன் நெல், ஆனைக் கொம்பு சம்பா, கார் நெல் என 150-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்கான தொழில் நுட்பங்களை அறிந்து, பயன்படுத்தியதை சங்க நூல்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இன்று உழைப்பின் கூலிக்கு ஈடாக "சம்பளம்' பெறப்படுகிறது. செய்த வேலைக்கு ஈடாகச் சம்பாநெல்லும்,அளத்தில் விளைந்த உப்பும் கொடுத்த வழக்கத்தினால் தான் "சம்பளம்' (சம்பா + அளம்) என்ற சொல் பிறந்தது. தமிழ் மொழியின் வளமையும், தமிழர்களின் கூர்ந்தாய்வு செய்யும் பண்பும் இதன் மூலம் நன்கு விளங்குகிறது.

பண்டைய காலத்தில்,தமிழர்கள் பனை மரங்களை விரும்பி வளர்த்தனர் என்பதை சங்க நூல் (புறநானூறு)மூலம் அறியும் போது,இன்று பணப்பயிர் மீதிருக்கும் மோகம் வருத்தத்தையே அளிக்கிறது.

தாவரங்களுக்கு ஊறுவிளைவிப்ப வர்களுக்கு அரசு தண்டனை கொடுத்த கல்வெட்டு குறிப்புகள், செய்திகள், தாவரப் பாதுகாப்பில் அரசர்கள் எவ்வளவு முனைப்போடு இருந்தனர் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

தாவரங்களின் பாதுகாப்பிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நீருக்கும் தமிழர்கள் அளித்திருந்தனர்.கீழமை பாசனதாரர்களின் "முன்னுரிமை'என்ற உரிமை பற்றி அன்றே கூறியிருப்பது தமிழர்களின் தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது.

அதற்கு ஆதாரமாக, தொண்டை மண்டலத்து பகுதியில், விதியை மீறிய அரசு அதிகாரியின் செயலை, அரசருக்கு தெரியப்படுத்தி விட்டு, ஊர் மக்களே தடுத்து நிறுத்தினர். (கோமதி நாயகம், 2010) இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்னும் அளவிற்கு அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன.

பீட்சா, பர்கர் உள்ளிட்ட பல பெயர்களில் துரித உணவுகளை உண்டு, உடல் நலம் சீர்கெட்டு மருத்துவமனை வாசல்களில் காத்துக் கிடக்கும் நிலையில் இன்றைய தமிழ்ச் சமூகம் உள்ளது.

பண்டைய தமிழர்கள் "உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற கொள்கையையும் தீவிரமாக கடைபிடித்தனர். பூ, காய், பழம், விதை, குருத்து, கிழங்கு, தழை (கீரை) போன்ற வற்றையும், இளநீர், நுங்கு, தேன், தயிர், மோர், கள், கரும்புச்சாறு, பானகம் போன்ற இயற்கை பானங்களையும், நெல், வரகு, தினை, சாமை, மூங்கிலரிசி போன்ற தானியங்களையுமே உணவாகக் கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தனர்.

குழந்தை உணவு, நோயாளி உணவு, கருவுற்ற பெண் உணவு, முதியோர் உணவு, காலமும் பொழுதும் சார்ந்த உணவு, சடங்கு சார்ந்த உணவு, இடஞ்சார்ந்த உணவு, பொருள் சார்ந்த உணவு என பல்வேறு வகை உணவு பழக்கங்களையும் கடைப்பிடித்தனர்.

தமிழகத்தில் இன்று,திரும்பிய பக்கமெல்லாம் பிரியாணி கடையை காண முடிகிறது. தமிழர்களின் உணவிலும் பிரியாணி முக்கிய பங்கு வகிக்கிறது. பிரியாணி என்பது பெர்சியா நாட்டில் முதன் முதலில் தோன்றியது.இதன் வேர்ச்சொல் "பிரியண்'என்பதாகும். "சமைப்பதற்கு முன்பு வறுத்தல்' என்பது இதன் பொருளாகும். இந்தியாவிற்கு ஏறத்தாழ கி.பி.1398-ம் ஆண்டு தைமூர் என்பவரால் டெல்லியைக் கைப்பற்றிய போது இது வந்ததாக நம்பப்படுகிறது.

இந்த பிரியாணியையும் "ஊன் சோறு'என்ற பெயரில் பண்டைய காலத்தில் தமிழர்கள் உணவாகக் கொண்டனர். இதுவே பிரியாணிக்கு மூலவடிவம் எனக் கூறலாம்.

இன்றைய தமிழ்நாட்டின் உணவில் முக்கிய இடம்பிடித்திருக்கும் இட்லி,15ம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் உணவு பழக்கத்தில் இல்லை. இந்தோனேசியா நாட்டிலிருந்து அவிக்கும் பாத்திரமும், அதை பயன்படுத்தும் முறையும், அம்மன்னர்களின் இந்திய வருகையின் போது, தமிழகத்தை அடைந்திருக்கலாம். புளித்த உணவையும், குழைத்த உணவையும் அன்றைய தமிழர்கள் விரும்பி உண்டனர். கள்ளும் தமிழர்கள் விரும்பிக் குடித்த பானம். புளித்த மோர், நாள்பட்ட தேன் போன்றவற்றையும் விரும்பி உண்டனர்.

உணவைப் போலவே மருத்துவமும் தாவரங்களைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய மருத்துவ முறையாக விளங்கும் சித்த மருத்துவமே,"தமிழ் மருத்துவம்'என்றும் அழைக்கப் படுகிறது.சித்தர்கள் மிகச் சிறந்த அறிவாளிகளாக திகழ்ந்துள்ளனர்.தமிழகத்தில் பல சித்தர்கள் வாழ்ந்திருந் தாலும் 18சித்தர்களே மிகவும் முக்கிய மானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.திருமூலர்,தமிழ்ச்சித்த முறையை நிறுவியவராக கருதப்படுகிறார்.

சித்தர் வளர்த்த அருங்கலைகளுள் குறிப்பிடத்தக்கது மருத்துவக் கலை.தமிழகத்தில் இயல்பான வாழ்வில் முகிழ்த்த சித்த மருத்துவக் கலையைப் பேணிக் காத்தவர்கள் சித்தர்களே. சித்த மருத்துவத்தின் முக்கிய குறிக்கோள், "இயற்கை தான் மனிதன், மனிதன் தான் இயற்கை' என்பதாகும்.

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் ஏறத்தாழ 1120 தாவரங்களில், தமிழகத்தின் மற்ற மருத்துவ முறைகளான ஆயுர்வேதத்தில் 745-ம்,நாட்டு மருத்துவத்தில் 730-ம் யுனானி மருத்தவத்தில் 485-ம் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோலவே, பல மருத்துவப் பொருட்கள் இந்தியாவிற்கு குறிப்பாக பண்டைய தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களிலிருந்து பெறப்பட்டன என்று டீயாஸ்கோரிடீஸ்  என்பவரின் மிகப் பண்டைய கிரேக்க மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதியியல் சாயங்களால் திருப்பூரைச் சுற்றியுள்ள ஆறு, ஏரி, குளங்கள், கால்வாய்கள், கண்மாய்கள் யாவும் கழிவு நீர்க் குட்டைகளாக மாறி,மண்ணுக்கும்,மனிதனுக்கும் சொலொண்ணா துன்பம் தந்து நிற்கிறது.நன்னீராக ஓடிக் கொண்டிருந்த நொய்யல் இன்று சாயக் கழிவுகளை சுமந்து செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது.பண்டைய தமிழர்கள் இதிலும் பக்க விளைவு,பாதிப்புகளை ஏற்படுத்தாத நுட்பங்களின் மூலம் சாயத்தை பெற்றனர். தாவரங்களின் இலைகள், வேர், பூ, பட்டை போன்றவற்றின் சாறில் இருந்து வெளிப்படும் நிறங்களை முன்னுணர்ந்து அதற்கேற்றப்படி துணி,பட்டு,பாய்கள்,ஓவியங்களுக்கு நிறமேற்றியிருக்கிறார்கள்.

தாவரங்கள் மற்றும் மற்ற பொருட்களின் வணிகத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். கனி, காய்கள், இலைகள் உள்ளிட்ட தாவரங்களின் பாகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியேயும், தரை மூலமாகவும் பண்டைய தமிழர்கள் வணிகம் செய்து வந்துள்ளனர்.

தொல் தமிழர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை,உணவிலிருந்து மருத்துவம் வரை, வேளாண்மை முதல் வணிகம் வரை இயற்கையை குறிப்பாக தாவரங்களைச் சார்ந்தே வாழ்ந்துள்ளனர்.

இதில் எந்த ஒரு கட்டத்திலும் மரங்களோ, காடுகளோ அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் மட்டும் 50%-க்கும் மேற்பட்ட இயற்கை வளங்களை நாம் தான் (இன்றைய தமிழர்கள்) அழித்துள்ளோம்.

தனது 25 ஆண்டு கால உழைப்பில் வரலாற்று ஆவணமாக, "தமிழரும் தாவரமும்' என்ற அறிவியல்பூர்வமான,மிகச் சிறந்த நூலை பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ளார். "இலக்கண, இலக்கியங்கள் பலவற்றைத் திறமையுடன் படைத்த தமிழர், தம்முடைய வரலாறு கூறும்,அறிவியல் நோக்கத்திலமைந்த நூல் ஒன்றை எழுதாதது ஒரு பெரிய குறையே' - என்ற தனது ஆதங்கத்தை முன்னுரையில் வைத்து, அதனை நீக்கும் முயற்சியாக தானே முன்னோடியாக இருந்து அந்தக் குறையை தனது "தமிழரும் தாவரமும்' நூல் மூலம் மாற்றியிருக்கிறார்.

இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்நூல் ஒரு வழி காட்டியாக அமையும். தமிழ் இனம், மொழி, நிலம் காக்க போராடும் அறிஞர்களின் கையில் "தமிழரும் தாவரமும்' நூல் ஒரு அறிவாயுதமாக விளங்கும்.

நூலின் பெயர்
தமிழரும் தாவரமும்
ஆசிரியர்
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
விலை ரூ.200/-

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.