இக்கதைக்கான முதல் ஓவியத்தை வரைந்தவர் ந.ஸ்ரீதர்ராஜ், பிற ஓவியங்கள் சென்னை, ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட புகழேந்திப் புலவர் எழுதிய நல்லதங்காள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

ஒன்று

am_00முனியின் தீர்த்தம் சுமந்த கலசத்தோடு அவன் சொல்லிக்கொடுத்திருந்த மந்திரத்தின் புதிரான வாக்கியங்களை முணு முணுத்தபடி குன்றிமணிகள் சிதறிக் கிடக்கும் வனத்தின் புதர் மண்டிய ஒற்றையடிப் பாதைகளின் வழியே மூச்சிரைக்க நடந்தான் நல்லான். நல்லவேளையாக மழை பெய்திருக்கவில்லை. பெய்திருந்தால் வெள்ளம் குன்றிமணிகளை அடித்துக் கொண்டு போயிருந்திருக்கும், வழியைத் தவறவிட்டிருப்பான் நல்லான். தன் ஏழு பிள்ளைகளோடு கானகத்துக்குள் சென்றிருந்த தங்கை நல்லாள் வழி நெடுகவும் குன்றிமணிகளைத் தூவிப் போயிருந்தாள்.

அண்ணனுக்கும் தங்கைக்கும் அது பால்யத்தின் ஒரு விளையாட்டு.

எண்ணற்ற நாவல் மரங்களும் பட்டாம்பூச்சிகளும் வாழும் காடு. பட்டாம்பூச்சி பிடிப்பதற்காகவும் நாவல் பழம் பறிப்பதற்காகவும் வனத்தின் அடர்ந்த பகுதிகளுக்குள் பொழுதெல்லாம் சுற்றித் திரிவார்கள் இருவரும். பல தருணங்களில் தன்னந்தனியளாகக் காட்டுக்குள் போய்விடுவாள் நல்லாள். வழி யெங்கும் அடிக்கொரு குன்றிமணியைத் தூவிச் சென்றிருப்பாள். கருத்த தலையும் சிவந்த உடலும்கொண்ட குன்றிமணிகள். அவற்றைக்கொண்டு காட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அவளைக் கண்டுபிடித்துவிடுவான் நல்லான். அவள் தூவிச்சென்ற குன்றிமணிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி மடியில் சேர்த்துக்கொண்டே அவை அழைத்துச் செல்லும் பாதையைப் பற்றி நடப்பான். குன்றிமணிகள் முடிவுறும் இடத்தில் நாவல் பழத்தின் ஊதா நிறச் சிரிப்புடன் தென்படுவாள் நல்லதங்காள். சில தருணங்களில் ஏதாவதொரு புதருக்குள் பதுங்கி நின்று பறவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் நெருஞ்சிக் காட்டுக்குள் தும்பைச்செடிகளை அரிசேர்த்துப் பட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருப்பாள். சமயங்களில் நல்லானுக்குக் கோபம் வந்துவிடும். தேடித் திரிந்த அலைச்சலின் விளைவாயிருக்கலாம். அவள் உருவம் தென்பட்டதும் பதுங்கிப்பதுங்கிப் பின்னால் போய் ஊஞ்சவிளாறால் அவள் முதுகில் ஒரு வீசு வீசிவிடுவான். தப்பியோடுபவளின் மடியிலிருந்து கனிந்த நாவல் பழங்களும் குன்றிமணிகளும் சிதறும். வானவில்லின் நிறங்களோடு பட்டாம்பூச்சிகள் பறந்து செல்லும்.

அழுதபடி வீட்டுக்கு வந்து வெகுநேரம் சிணுங்கிக்கொண்டிருப்பாள். பிறகு அவள் சிதற விட்டுவிட்டு வந்த நாவல் பழங்களையும் பட்டாம்பூச்சிகளையும் அவளுக்குத் தருவான் நல்லான். காட்டிலிருந்து அவற்றைத் திரும்பச் சேகரித்துத் தன் மடியில் கட்டிக்கொண்டு வீடு திரும்பியிருப்பான் அவன். பார்த்ததும் அழுகை பறந்தோடிவிடும் அவளுக்கு. “நல்ல அண்ணன்'' எனக் கழுத்தைக் கட்டிக்கொள்வாள். தான் சேகரித்த குன்றிமணிகளை மண்கலயமொன்றிலிட்டு வேடுகட்டி யாராலும் கண்டுபிடிக்க முடியாத ரகசிய இடங்களில் பத்திரப்படுத்தி வைத்திருப்பாள்; மறைவிடங்களை அடிக்கடி மாற்றியும் விடுவாள். அவளுக்குக் கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குப் போனபின்பு தன் வீட்டிலிருந்த அப்படியொரு மண்கலயத்தைக் கண்டெடுத்திருந்தான் நல்லான். பிறகு அம்மண்கலயத்தையும் அவற்றிலிருந்த குன்றிமணிகளையும் பத்திரப்படுத்தி அவள் நினைவாக வைத்துக்கொண்டான்.

வருடங்களுக்குப் பிறகு தன் ஏழு பிள்ளைகளோடு தங்கை நல்லாள் பிறந்தகம் வந்திருந்ததையும் அலங்காரி அவளை உள்ளேவிட மறுத்துக் கதவைத் தாளிட்டுக்கொண்டதையும் கொடிய வார்த்தைகளால் அவளையும் பிள்ளைகள் எழுவரையும் நிந்தித்துத் துரத்தியதையும் அண்ணன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் கொசுக்களின் தீராத பிடுங்கலைச் சகித்துக்கொண்டு தன் பிள்ளைகளை அணைத்துப் போர்த்தியவளாய்த் தொழுவத்தில் இரவைக் கழித்ததையும் சூரியோதயத்தில் கண்ணீரும் கம்பலையுமாய் ஊரைவிட்டு நீங்கி மிக நிராதரவானவளாகக் கானகத்திற்குள் போனதையும் வேலையாட்கள் சொல்லக் கேட்டிருந்தான் பயணம் முடிந்து ஊர் திரும்பியிருந்த நல்லான். வாசலில் உடைந்த பச்சை மண் பானையும் அவள் அடுப்பெரிக்கப் பயன்படுத்திய பச்சை வாழைத் தண்டின் கரிந்த துண்டுகளும் கிடந்தன. வெந்தும் வேகாமலும் இரைந்துகிடந்த சோற்றுப் பருக்கைகளைக் கொத்திப் பசி தீர்த்துக்கொண்டிருந்தன சில காகங்கள்.

தங்கையின் குன்றிமணிகளுள்ள மண்கலயத்தைத் தேடினான் நல்லான். தலைகீழாகக் கவிழ்ந்துகிடந்த கலயத்தினருகே சில குன்றிமணிகள் சிதறிக்கிடந்தன. பிறகுதான் கானகத்துக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதைக்கு வந்தான். பால்யத்தின் நினைவுகளோடு குன்றிமணிகள் காட்டிய திசையில் ஒற்றையாக நடந்தான். கடைசியில் வந்து நின்ற இடம் ஒரு பாழுங்கிணறாயிருந்தது. பாழுங்கிணற்றையும் சிதைந்த அதன் கற்களாலான மதிலையும் மதிலைச் சுற்றிப் பதிந்திருந்த எண்ணிரண்டு கால்களின் பதற்றமான தடங்களையும் கண்டான் நல்லான். அடி வயிறு குலுங்கக் கிணற்றை எட்டிப் பார்த்தான். கிணற்றின் தெளிந்த அடிப்பரப்பில் பளீரென மின்னிற்றுத் தங்கை நல்லாளின் தாலிக்கொடி. அலையடிப்புக்கூட இன்னும் ஓய்ந்திருக்கவில்லை. கொஞ்சம் நம்பிக்கை உருவாயிற்று அவனுக்கு. காலம் கடந்திருக்க வாய்ப்பில்லை. மறுயோசனையில்லாமல் கிணற்றுக்குள் குதித்தான். தன் வலிய புஜங்களால் பற்றியிழுத்து எட்டு உடல்களையும் வெளியில் கொண்டு வந்து கிடத்தினான். உடல்களில் இன்னும் வெதுவெதுப்பு எஞ்சியிருந்தது. வெகு பிரயாசையுடன் உள்ளங்கால்களைத் தேய்த்துச் சூடாக்கவும் குடித்திருந்த நீரை அழுத்தி வெளியேற்றவும் காற்றை ஊதிச் சுவாசத்தை மீட்கவும் அவன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. துக்கம் மேலிட அப்பாழுங்கிணற்றின் சிதைந்த மதிலின் மேல் சாய்ந்து குலுங்கிக்குலுங்கி அழுதான்.

அழுது தீர்த்தவன் பிறகு சிதறிக்கிடந்த உடல்களை மலர்த்தி வரிசையாக அடுக்க முற்பட்டான். தங்கை நல்லாளைப் புரட்டியபோது அவளுடைய வீங்கிய கை தென்பட்டது. தாளிடப்பட்ட கதவைத் தட்டித் தட்டி வீக்கம் கண்ட கைகள். அவனுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. “நல்லா, எந்தங்கமே...'' எனத் திசைகளதிரக் கதறினான். பிறகுதான் அவனுக்கு முனியின் நினைவு வந்தது. உயிரியக்கத்தின் ரகசியங்களை அறியும் முனைப்போடு வனங்களுக்குள் அலைந்து திரியும் முனியோடு அவனுக்கு வெகு காலமாகவே தொடர்பு இருந்தது. அவனைச் சந்தித்துவிட்டால் இக்கொடிய துக்கத்திலிருந்து விடுபட்டுவிட முடியும் எனத் தோன்றியது அவனுக்கு. எட்டு உடல்களையும் தாழை மடல்களால் போர்த்தி மூடிவிட்டு முனியைத் தேடிப் புறப்பட்டான். குன்றிமணிகளைத் தூவியபடி கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளில் அலைந்து திரிந்தான். நிலா வெளிச்சமுள்ள இரண்டு இரவுகளுக்கும் ஒரு பகல் பொழுதுக்கும் பிறகு அவன் முனியைக் கண்டுபிடித்தான். மூப்புற்று, நரைதட்டிச் சுருங்கிய தேகத்துடன் ஒரு பாறையிடுக்கில் சம்மணமிட்டிருந்தான் முனி. கண்களில் நீர் தளும்பத் தன் முன் வந்து மண்டியிட்டவனிடம் எதுவுமே கேட்காமல் கணப்பொழுதுக்குள் அவனுடைய செவிகளில் உயிர்ப்பிக்கும் மந்திரத்தை உபதேசித்தான் முனி. புனித நீர் அடங்கிய கலசத்தைக் கொடுத்து உடனடியாகத் திரும்பச் சொல்லி உத்தரவிட்டவனை வணங்கி விடைபெறக்கூடத் தோன்றாமல் திரும்பினான் நல்லான். முன்னிலும் வேகம் கொண்ட நடை. தேகமெங்கும் முட்கள் கீறிய ரணம். உடல்கள் சிதைந்திருக்குமோ என்னும் கவலை அவனை அரித்தது. தீராத அச்சத்தோடு விரைந்தோடிக் கிணற்றை அடைந்தபோது உச்சிப் பொழுதாகியிருந்தது. உடல்களைச் சுற்றி லேசான துர்நாற்றம் பரவத் தொடங்கியிருந்தது. தங்கை நல்லாளின் வலப்புற நாசியினுள்ளிருந்து வெகு சிரமப்பட்டு வெளியேறி றெக்கைகளை உதறிப் பறந்தது ஒரு கருவண்டு.

உயிர்ப்பறவையோ?

பதற்றம் மேலிட எல்லா உடல்களின் மீதும் புனித நீரைத் தெளித்தான். பிறகு எட்டு உடல்களையும் வலம் வந்து முனி சொல்லிக்கொடுத்திருந்த மந்திரங்களை ஓயாமல் உச்சரித்துக்கொண்டிருந்தான். வெகு நேரமாயிற்று. உடல்களில் அசைவில்லை. பூமி சுழன்றுகொண்டிருந்தது. தன் இயல்பான வேகத்தைக் காட்டிலும் பன் மடங்கு அதிக வேகமாய்த் தட்டாமாலை சுற்றிற்று. நொடிக்குள் பகல் மறைந்து இரவாயிற்று. இரவும் ஒரு நொடியே. மற்றொரு நொடி மறு நாளின் சாயங்காலமாயிருந்தது. மனதிற்குள் மூர்க்கமாகப் புரண்டன அவனது பால்யத்தின் நினைவுகள். தங்கையுடன் வனத்தில் அலைந்து திரிந்த நாட்களை நோக்கிச் சுழன்று சென்ற நினைவுகளுக்குள் மூழ்கியவன் முனியின் மந்திரங்களையும் மறந்தான். பிறகுதான் அவனுக்குத் தங்கையின் அழைப்புக் குரல் கேட்டது.

“அண்ணா!''

“அண்ணா... அண்ணா!''

கண் திறந்து பார்த்தபோது தங்கை நல்லாளும் அவளுடைய ஏழு பிள்ளைகளும் தன்னைச் சூழ்ந்து நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். பால்யத்தின் பேதமையும் குதூகலமும் நிரம்பிய முகத்துடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். “நல்லா, என் தங்கமே, உனக்கும் பிள்ளைகளுக்கும் ஒண்ணும் ஆகலியே?'' கண்களில் நீர் பெருக அவர்களை ஒரு சேர அணைத்தான்.

“கொஞ்சம் இரு அண்ணா வர்றேன்!'' என அவன் கைகளை விலக்கித் தன்னை விடுவித்துக்கொண்டு ஓடைக்கரையை நோக்கிக் குதூகலத்துடன் ஓடினாள் தங்கை. குழந்தைகள் ஆரவாரக் கூச்சலிட்டு அவளைப் பின்தொடர்ந்தனர். தானும் அவர்களைப் பின்பற்றி ஓடைக்கரைக்கு வந்தான் நல்லான். ஓடையின் தெளிந்த நீரைக் குடித்துத் தாகம் தீர்த்துக்கொண்டார்கள் எல்லோரும். அதன் கரையோரப் புதர்களெங்கும் விதவிதமான நிறங்களில் பறந்து திரிந்துகொண்டிருந்தன சின்னஞ்சிறிய வண்ணத்துப்பூச்சிகள். “அம்மா எங்களுக்குப் பட்டாம்பூச்சி புடுச்சுத் தா!'' எனத் தாயின் கால்களைக் கட்டிக்கொண்டனர் பிள்ளைகள்.

தும்பைச் செடி பிடுங்கி அரி சேர்த்துப் பட்டாம்பூச்சி பிடிக்கும் சிறுமியானாள் தங்கை நல்லாள். பாறையொன்றின் மேலமர்ந்து அவர்களை வேடிக்கை பார்க்கும் சிறுவனானான் நல்லான்.

மடி நிறைந்த பட்டாம்பூச்சிகளுடன் அவனருகே வந்தாள் தங்கை. பிள்ளைகளுக்குச் சந்தோஷம் தாளவில்லை. ஒவ்வொரு வரும் கைக்கிரண்டு பட்டாம்பூச்சிகளைப் பிடித்துக்கொண்டனர். பட்டாம்பூச்சிகளைப் பிணைத்து விளையாடுவதற்காகத் தன் சேலைத் தலைப்பிலிருந்து நூல்களைப் பிரித்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தாள் நல்லதங்காள். மீதமிருந்த வண்ணத்துப் பூச்சிகள் பூவென நினைத்து அவளது உடலை மொய்த்தன. நீண்ட கூந்தலில் ஒரு பூச்சரம் போல் ஒட்டிக்கொண்டன. நாசிகளின் மீதும் காது மடல்களிலும் ஊர்ந்து திரிந்தன. கூச்சம் தாளாமல் சிரித்தாள் நல்லாள். நல்லானுக்கோ பதற்றம்.

“நேரமாச்சு! புறப்படு நல்லா போகலாம்.''

“எங்க அண்ணா?'' என ஏதுமறியாதவளாய்க் கேட்டாள் தங்கை.

“வீட்டுக்குத்தான் நல்லா, வேறெங்க?''

“யாரோட வீட்டுக்கு அண்ணா?'' “இதென்ன கேள்வி நல்லா? நம்மோட வீட்டுக்கு'' என்றான் குழப்பத்துடன். அவளுடைய கேள்வியின் அர்த்தம் புரிய வில்லை அண்ணனுக்கு. தங்கையோ மௌனமாக நின்றாள். அவளுக்கு முகம் இருண்டது. நெடிய பெருமூச்சொன்றும் வந்தது. பிறகு சொன்னாள்.

am_01“என்னுடையதும் உன்னுடையதுமெனப் பொதுவான அடையாளமுள்ள வீடு இப்போது எதுவுமில்லை அண்ணா'' சொல்லி முடித்தபோது அவளுக்குக் கண்கள் பனித்திருப்பதைப் பார்த்தான் அவன். அதற்குள் அவளுடைய ஏழு பிள்ளைகளும் வந்திருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல் மிக ரகசியமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள்.

“விளையாட்டெல்லாம் முடிஞ்சுதா?''

“அம்மா எங்களுக்குப் பசிக்குது'' என்றனர் பிள்ளைகள்.

“நா உங்களுக்கு நவாப்பழம் பறிச்சுத் தாறேன்'' என எல்லோரையும் அப்பாழுங்கிணற்றை ஒட்டியிருந்த முதிர்ந்த நாவல் மரத்துக்கு அழைத்துச் சென்றாள். பிள்ளைகளுக்குத் தாளாத உற்சாகம். ஒருவன் மரத்தின் மீதேற முயன்றான். “பொறுங்க'' எனத் தடுத்து சேலையைச் சுருட்டித் தார்பாய்ச்சு கட்டிக்கொண்டு தானே மரத்தில் ஏறினாள் நல்லதங்காள். நல்லான் பயந்தான். “தங்கா இரு, நான் பறிச்சுத் தாறேன்'' என ஓடி வந்தான். “கீழ விழுந்துருவே சாமீ...''

தங்கை நல்லாள் சிரித்தாள். அதற்குள் மரத்தின் மீதேறிக் கனிகள் அடர்ந்து தொங்கும் கிளைகளை எட்டியிருந்தாள்.

“இது என்னோட மரமாக்கும் அண்ணா. இதனோட முதல் பழங்கள நான் பறிச்சுத் தின்னிருக்கேன்'' பிறகு அவள் அடிமரத்தைச் சூழ்ந்து நிற்கும் தன் பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டாள், “உங்களுக்கெல்லா சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? சொல்லுங்க கண்ணுகளே!''

“சுட்ட பழமே வேணும்!'' எனக் கத்தினார்கள் பிள்ளைகள்.

கிளைகளை மிதித்து உலுக்கினாள். பொலபொலவென்று உதிர்ந்தன கரிய நிறம்கொண்ட நாவற்பழங்கள். “எனக்குச் சுடாத பழம் வேணும் நல்லா!'' எனத் தானுமொரு பிள்ளையாய் மாறிக் கத்தினான் நல்லான். துவர்ச் சுவைகொண்ட சிவந்த பழங்களைப் பறித்து மடியில் கட்டிக்கொண்டு கீழே குதித்தாள் நல்லாள். பிறகு அண்ணனும் தங்கையும் பாறையின் மேல் கால் நீட்டி உட்கார்ந்தபடி நாவல் பழம் சாப்பிட்டார்கள்.

“உனக்கு ஞாபகமிருக்கா அண்ணா நம்மோட பால்யம்?''

“நம் பால்யம் சம்பந்தப்பட்ட எதையுமே எனக்கு மறக்க முடியாது நல்லா!''

“அதிகாலை நேரங்கள்ல ரண்டு பேரும் நம் தகப்பனாரோடு வயலுக்குப் போவோமே அண்ணா''

“தகப்பனார் காளைகளைப் புடுச்சுக்கிட்டு முன்னால் போவார். அவரோட காலடிச் சுவடுகளப் பிடிச்சுக்கிட்டு நாம பின்னால நடப்போம். எனக்கு ஞாபகமிருக்கு நல்லா...'' என்றான் நல்லான். அவனும் பால்யத்தின் நினைவுகளில் மூழ்கிப் போனான்.

“அவரோட தோள்கள்ல கலப்பை இருக்குமே அண்ணா!''

“விதைக்கூடயச் சொமந்துக்கிட்டு பின்னால வருவா நம் அம்மா. அதுல நம் எல்லோருக்கமான உணவு இருக்கும். பிரிய மனமில்லாம கூடவே நடந்துவரும் நம்மோட நாய்க்குட்டி. ஞாபகமிருக்கா உனக்கு அந்த நாய்க்குட்டியெ?''

“வயல்ல நம்ம ரண்டு பேருக்கும் சண்டை வரும்''

“ஒவ்வொண்ணுலயும் உனக்கு என்கூடப் போட்டி. கலப்ப பிடிக்கறதுலகூட உனக்கு விருப்பம் நல்லா. அம்மா தடுப்பாள். அதெல்லாம் பெண் பிள்ளைகளோட வேலையில்லையென்பாள். நீ கேக்க மாட்டே. கழனி அடிக்கறதுலயிருந்து கதிரறுக்கறது வரைக்கும் எல்லாத்திலேயும் உன்னோட பங்கிருக்கணும்னு நெனைப்பே. இந்த மண்ணோட ஒவ்வொரு துகள்லயும் உன் வேர்வை இருக்கு நல்லா''

“நம் இருவருடையதுமான வேர்வை அண்ணா!''

“உன்னோட ரத்தமும் கலந்த பூமி இது நல்லா. பல சமயங்கள்ல உனக்குக் காயம் பட்டிருக்கே!'' “நம் இருவருடையதுமான ரத்தம் அண்ணா. உனக்கும் காயம் பட்டிருக்கு''

“இது நம்மோட நிலம்!'' என்றான் அண்ணன். அவனுக்குக் குரல் தளும்பிற்று.

“ஆனா அப்படியில்லையே அண்ணா! இப்போ இது உனக்கு மட்டுமேயான நிலம். அதைத்தான் நேத்து எனக்குச் சொன்னா உன் மனைவி. இந்த நிலத்தோட ஒரு தானிய மணிகூட எனக்கு உரிமையில்லாததாப் போச்சே அண்ணா. நான் பொறந்து, தவழ்ந்து, நடைபழகி வளர்ந்த வீடு அது. அதுக்கு ஏழு கதவுகள். ஏழுல ஒண்ணுகூட எனக்காகவும் என் கொளந்தைகளுக்காகவும் தெறக்கலியே. பசித்த வயிறுகளோட நா என் கொளந்தைகளக் கூட்டிக்கிட்டு இந்தப் பாழுங்கெணத்தத் தேடி வரும்படி ஆயிடுச்சே அண்ணா!''

தாள முடியாமல் குலுங்கியழுதாள் தங்கை. நல்லான் தவித்தான். அவனுக்கும் கண்ணீர் தளும்பிற்று. ரத்தம் கொதித்தது, “நா அவளப் பழி தீர்ப்பேன்!'' என எழுந்து நின்றான்.

“யார, யார அண்ணா நீ பழி தீர்க்கப் போறே? தொட்டுத் தாலி கட்டுன உன்னோட பெண்டாட்டியையா?''

“அவ காரணம், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம்!''

“அவ செஞ்ச தப்பென்ன அண்ணா?'' எனக் கேட்டுச் சிரித்தாள் தங்கை.

“அவளுக்கு அது அவளோட வீடு. பாவம், பேதை அவ. உலக நியதி அதுதானே? பெண்ணுக்குப் பிறந்த வீடு சாசுவதமில்லைங்கறதுக்கு நான் சாட்சி. புகுந்த வீடும் சாசுவத மில்லைங்கறதுக்கு சாட்சியா அவள உருவாக்கிடாத அண்ணா! தன் கற்பனைகளோட வாழ்ந்துட்டுப் போக அவள விட்டுடு.''

குரலில் சொல்ல முடியாத தெளிவு, நம்ப முடியாத தீர்மானம். உயிர்த்தெழுந்ததன் விளைவோ?

“சரி புறப்படு நல்லா, வீட்டுக்குப் போகலாம். நீ வந்தா எனக்குப் பால்யம் திரும்பும். எனக்குமொரு உயிர்த்தெழுதலாயிருக்கும் நல்லா அது. வீட்டுக்கு வா. உன் பிள்ளைகள் விளையாட புள்ளி மான் பிடிச்சுத் தாறேன். பேசி மகிழப் பைங்கிளிகள் கொண்டு வாறேன்'' எனத் தன் துக்கம் மறந்து பால்யத்திற்குத் திரும்பினான் அண்ணன்.

“ஆச காட்டிப் பாக்கறயா?'' எனச் சிரித்தாள் தங்கை.

“எந்த உரிமையோட நா அங்க வருவேன்? எத நெலநாட்டறதுக்காக நா அங்க திரும்பட்டும்? கேக்கறவங்களுக்கு நானோ நீயோ என்ன பதிலச் சொல்ல முடியும்? அவமானம் எனக்கு மட்டுமா இருக்கப் போறதில்ல. தீராத குற்ற உணர்வுக்கு நானும்கூட இரையாகும்படி நேரலாம் அண்ணா. என்ன மன்னிச்சுடு!''

துக்கம் தொண்டையை அடைத்தது தமையனுக்கு.

“இந்த வனத்துல உன்னையும் கொளந்தைகளையும் நிராதரவா விட்டுட்டுப் போகச் சொல்றயா நல்லா? அது எனக்கு எப்படி முடியும்?''

தங்கை புன்னகைத்தாள்.

“நா நிராதரவா இல்ல அண்ணா! எனக்கு என்னோட ஏழு பிள்ளைகள் இருக்காங்களே! எங்களுக்கு இனிச் சாவும் இல்ல. முனி உனக்குச் சொன்ன மந்திரத்தின் ரகசியம் எனக்கும் தெரியும். பொளச்சு வந்தா மறுபடிச் சாவு கெடையாது. அது தெரிஞ்சும் நீ எங்கள உயிர்ப்பிச்சே. இது எங்களுக்குத் தீராத சாபம். இந்தச் சாபத்தச் சொமந்துக்கிட்டு எங்களத் தனியே அலைய விடு அண்ணா.''

பிறகு தன் ஏழு பிள்ளைகளோடும் வனத்தின் அடரிருளுக்குள் சென்று மறைந்தாள் நல்லதங்காள். அவன் மன்றாடினான்; கதறினான். எதற்கும் இரங்காத மனம் கொண்டவளாயிருந்தாள் அவள். போகும்போது அவள் தன் அண்ணனிடம் தானும் குழந்தைகளும் உயிர்த்தெழுந்ததைக் குறித்து உலகுக்குச் சொல்லிவிடாதிருக்க ஒரு வரம் பெற்றாள்.

“இந்த மரணங்கள் வீணாயிரக் கூடாது அண்ணா. உலகம் இத நெனச்சுக்கிட்டே இருக்கட்டும். அவமானப்படட்டும்! குற்ற உணர்வால தவிக்கட்டும்! எங்களோட இந்த வாழ்வையும் மரணத்தையும் வெச்சுப் பல கேள்விகள் உருவாகட்டும் அண்ணா! பிறகு இந்தக் கொடிய துன்பங்களுக்கு ஒரு முடிவு கிட்டும். அப்பக் கூப்பிடு, வாறேன். யாருக்கும் சொல்லீடாத அண்ணா!''

வரமோ, சாபமோ!

சித்தம் கலங்கியவனாய் ஊர் வந்து சேர்ந்தான் நல்லான். அவள் கேட்டுக்கொண்டபடி யாருக்கும் எதையும் சொல்லவில்லை. ஆனால் தன் சபதப்படி மனைவியைக் கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றான். அலங்காரிக்கும் அது ஒரு விடுதலை. நல்லதங்காளும் அவளுடைய ஏழு பிள்ளைகளும் பாழுங்கிணற்றுக்குள் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார்கள் என்பதை இடையர்கள் சொல்லக் கேட்டு தீராத குற்ற உணர்வுக்கு இரையாகித் துன்பப்பட்டுக்கொண்டிருந்தாள் அவள்.

இரண்டு

அவளது சாபம் பிறகு பலித்தது. பல வருடங்களுக்கு மழையே இல்லை. நதிகளும் குளங்களும் வறண்டன. ஒரு துளி நீர் காணாமல் நிலம் பாலையாயிற்று. அப்பாழுங்கிணறுங்கூட வற்றிவிட்டது. ஊர் படும் துன்பத்தைக் காணச் சகிக்கவில்லை. முன்பு அவளையும் அவளது ஏழு பிள்ளைகளையும் புக்ககத்திலிருந்து பிறந்தகத்திற்குத் துரத்தியதைவிடக் கொடியதாயி ருந்தது இந்தப் பஞ்சம். அவளது சாபத்தின் விளைவு. சினம் தணிந்து அவள் இரக்கம் கொண்டாள். வனத்தில் தென்பட்ட இடையனொருவனை அழைத்து அவனுக்குத் தன் சாபம் குறித்துச் சொன்னாள்.

பிறகு விழித்துக்கொண்டது மளமளவென்று பரிகாரத்தில் இறங்கியது ஊர். ஊர் எல்லையில் அவளுக்கொரு கோயில் கட்டினார்கள். அவளுக்கும் அவளுடைய ஏழு பிள்ளைகளுக்கும் உருக்கள் செய்துவைத்துக் கும்பிட்டார்கள். உலகம் அப்பாழுங்கிணற்றுக்கு அவள் பெயரைச் சூட்டியது. ஒரு புலவன் அவளுடைய கதையைப் பாடல்களாக வடித்தான். ஊர் ஊராகப் போய் அவளுடைய கதையைச் சொல்லிப் பிழைப்பைத் தொடங்கினான் அதைப் படித்த ஒரு நாவிதன். விடியவிடியக் கேட்டு ஓயாமல் அழுது தீர்த்து சாபத்திலிருந்து தப்பியது உலகம். மழை பெய்தது. வருடங்களுக்குள் தன் செழிப்பை மீட்டுக்கொண்டது பூமி. பிறகு ஒவ்வொரு ஊரிலும் அவள் நினைவாக ஒரு கோயிலையும் அதனருகில் ஒரு பாழுங்கிணற்றையும் உருவாக்கி வழிபட்டது உலகம்.

பத்தினிப் பெண்கள் எல்லோருக்கும் அவள் ஒரு தேவதையானாள். பஞ்சத்தையும் பசியையும் பட்டினியையும் தாள முடியாத துயரங்களையும் சகித்துக்கொள்ள வரம்கொடுக்கும் தேவதை. கொடிய பஞ்சங்களுக்கு நல்லதங்காள் பஞ்சம் எனப் பெயர் சூட்டினார்கள். பாசமுள்ள அண்ணன்மார்களை நல்லானெனவும் அவர்களது பெண்டாட்டிகளை மூளி அலங்காரி எனவும் அழைத்தார்கள். இவை எதையும் அறியாதவளாய்த் தன் பிள்ளைகளோடு கவலைகளற்று வனத்தில் திரிந்துகொண்டிருந்தாள் நல்லதங்காள். பிள்ளைகள் புள்ளிமான்களோடு விளையாடிக் களித்தனர்; பைங்கிளிகளோடு பேசிச் சிரித்தனர்.

மூன்று

யுகங்களாயிற்று.

நல்லதங்காளுக்குக் காடு சலித்தது. மனிதர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று அவளுக்கு. எத்தனை யுகங்களுக்குத்தான் கிளிகளோடு பேசிக்கொண்டிருக்க முடியும்? தவிர யுகங்களுக்குப் பிறகு உலகம் எப்படியிருக்கிறதெனப் பார்க்கவும் ஆசை. அவள் கற்பனையில் உலகம் வேறுவிதமாக உருவாகியிருந்தது. தன் வாழ்வு இப்போது யாருக்கும் நம்ப முடியாததாயிருக்கும் என நினைத்தாள். முதலில் அவள் அப்பாழுங்கிணற்றையும் ஊர் அவளுக்காகக் கட்டிவைத்த கோயிலையும் பார்க்க விரும்பினாள். பிறகு தாய் வீட்டையும் பார்க்க வேண்டும். யுகங்கள் கழிந்தாலும் சொந்தம் சொந்தம்தானே! ஒரு சாயங்காலத்தில் தன் ஏழு பிள்ளைகளோடு வனத்தைவிட்டு வெளியே வந்தாள். அப்போது அவள் மனத்தில் ஒரு குறையுமில்லை. பதற்றமோ அச்சமோ இன்றி மிகச் சுதந்திரமானவளாகத் தான் வாழ்ந்த ஊரை நோக்கி நடந்தாள்.

அப்பாழுங்கிணற்றை அவளால் பார்க்க முடியவில்லை. அது இருந்த இடத்தில் ஒரு குடியிருப்பு இருந்தது. அதனால் என்ன? பழையவற்றின் தடயங்களை அவள் பார்க்க வேண்டியதில்லை. ஊர் முற்றாக மாறியிருந்தது. உள்ளுணர்வின் துணையில்லாமலிருந்திருந்தால் அவளால் அதை அடையாளம் கண்டுபிடித்திருக்கக்கூட முடியாதுதான். ஆனால் ஊருக்கு வெளியே கைவிடப்பட்டு உருக்குலைந்து கிடந்த ஒரு துண்டு நிலத்தில் அவள் அக்கோயிலைக் கண்டுபிடித்தாள். கோயிலும் உருக்குலைந்திருந்தது. புதர் மண்டிய கோயிலுக்குள் சிதறிக்கிடந்த அவளுடையதும் அவளுடைய ஏழு பிள்ளைகளுடை யதுமான மண் உருக்களை அவள் பார்த்தாள். பிள்ளைகளில் இருவருக்குச் சிரசே இல்லை. பிள்ளைகளை அணைத்துக்கொண்டு அவள் நடுவில் நின்றாள். ஒவ்வோர் உருவத்தையும் எதிரில் நிற்க வைத்துக்கொண்டு செய்ததைப் போல மிகச் சிரத்தையாக வடித்திருந்தான் குயவன். அவளுடைய உருவில் ஒரு கை இல்லை. அவிழ்ந்து தொங்கும் கூந்தல்; விரிந்தகன்ற கண்களில் நிராதரவின் துக்கம்; இடக்கையின் அணைப்புக்குள் மூன்று பிள்ளைகள். மற்ற நால்வரையும் அணைத்திருந்த வலக்கையைத்தான் காணவில்லை. அவளுக்கு அதைக் காண வேண்டுமென்ற விருப்பமுண்டாயிற்று. அவளும் பிள்ளைகளும் சேர்ந்து புதர்களுக்குள்ளிருந்து அதை மீட்டெடுத்தார்கள். பிள்ளைகள் அதைத் தொட்டுப் பார்த்தார்கள்; ஆசையாக வருடிக்கொடுத்தார்கள். ஒருவன் தன் தாயின் கரத்தோடு உடைந்த அத்துண்டைப் பொருத்திப் பார்த்தான். அச்சில் வார்த்தெடுத்தது போல் கச்சிதமாகப் பொருந்தியது. எனினும் ஒரு சிறு குறை. அதன் பாதம் பெருத்திருந்தது. அறியாமல் செய்த பிழையாயிருக்க முடியாது. வேறெதுவாயிருக்கும் காரணம் என யோசித்தாள். பிறகே அவளுக்கு யுகங்களுக்கு முன்பு தன் தாய் வீட்டின் கதவுகளைத் தட்டித்தட்டித் திறக்கக் கேட்டபோது வலக்கையில் ஏற்பட்ட வலியும் வீக்கமும் நினைவுக்கு வந்தன. வீங்கிய கை பின்பு ஆறிவிட்டது. ஆனால் குயவன் அதை மறக்கவில்லை. அண்ணன் சொல்லியிருப்பானோ? மறுபடியும் பழையவற்றின் நினைவுகளா? வேண்டாம்!

ஊர் தலைகீழாக மாறியிருந்தது. மிக நாகரிகமான தெருக்கள். அதைவிடவும் நாகரிகமான வீடுகள். ஆனால் கதவுகளின் அமைப்பில் ஒரு மாற்றமும் இல்லை. எல்லாக் கதவுகளுக்கும் தாழ்ப்பாள்கள். அது ஒரு கொண்டாட்டங்களுடைய நாளாயிருக்க வேண்டும். வீதிகளில் தாள முடியாத நெரிசல். எங்கும் புத்தாடைகளால் வனப்பூட்டப்பட்ட உடல்கள். சந்தோஷத்தால் பூரித்த முகங்கள். திசைகளெங்கும் குதூகலத்தின் முழக்கம்; சிரிப்பின் எக்காளம். எவரொருவரின் கண்களிலும் சோகத்தின் நிழல் தென்படவில்லை.

யுகம் முடிந்துவிட்டது. கொடிய துயரங்களின் யுகம். அப்பாழுங்கிணற்றுக்குள் அவளோடு மூழ்கிவிட்டது மனித குலத்தின் துயரம். சாபம் நீங்கிப் பொலிவுபெற்ற ஒரு யுகத்தினுள் அவள்தான் புதிதாக நுழைந்திருக்கிறாள். அவளும் அவளுடைய ஏழு பிள்ளைகளும். நல்லதுதான். உலகம் இனி அவளை நினைக்க வேண்டாம். கதவடைத்து அவர்களைப் பாழுங்கிணற்றுக்குத் துரத்திய அலங்காரியை நினைக்க வேண்டாம். துயரத்தின் ஒரு சின்னமான அந்தப் பாழுங்கிணற்றையும் நினைக்க வேண்டாம். சிதிலமடைந்த அவளுடைய கோயிலுக்கும் உருக்குலைந்து கிடக்கும் அவளுடைய சிற்பங்களுக்கும் இனி ஒரு தேவையுமில்லை. எல்லாம் கதை, பழங்கதை. அதையுங்கூட இனி யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

ராட்டினங்கள் சுழன்றுகொண்டிருந்தன.

சுழலும் மரக் குதிரைகளின் மீது சவாரி செய்துகொண்டிருந்தனர் குழந்தைகள். பார்த்துக்கொண்டிருந்த தாய்மார்களின் உடல்களில் பூரிப்பின் துள்ளல். அவளுடைய ஏழு பிள்ளைகளும் அதை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தார்கள். ராட்டினத்தில் சவாரி செய்ய அவர்களுக்கும் ஆசை போலிருக்கிறது. பிறந்ததிலிருந்து கானகத்தில் அலைபவர்களாயிற்றே! அண்ணன் இருந்திருந்தால் பொன்தூரி கட்டியிருப்பான். “கொளந்தைகளுக்கு ராட்டினத்துல சுத்தணும்னு ஆச போல இருக்குது. உக்கார வெய்யி தாயி!'' என்றான் ராட்டினக்காரன். அவள் தயங்கினாள். ஆனால் அவன் அழைப்பை ஏற்றுப் பிள்ளைகள் தொற்றிக்கொண்டார்கள். ராட்டினம் சுழன்றது. அதன் அச்சில் இணைக்கப்பட்ட பிரும்மாண்டமான குடை மெள்ள அசைந்தது. பிள்ளைகள் சிரித்தார்கள். இளையவனின் முகத்தில் லேசான மருட்சி. மூத்தவன் தைரியமூட்டினான். குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்திருந்த பாங்கில் ஒரு வீரன் தென்பட்டான். பால்யத்திலேயே குதிரையேற்றம் பழகியவனாயிற்றே! பிள்ளைகளை அப்பாழுங்கிணற்றுக்குள் ஒவ்வொரு வராகத் தூக்கிப்போட்டபோது அவன்தான் தடுத்தான். “நா உங்க எல்லோருக்கும் சோறு போடுவேன். எனக்கு உழைக்க முடியும், தைரியமா இரு அம்மா. இந்தப் பாவத்தச் செய்யாதே!'' என அப்போது கதறியவன் அவன்தான்.

“நீயும் வந்து உக்காரு அம்மா...'' என அழைத்தார்கள் குழந்தைகள். அவள் வெட்கினாள். கண்களில் ஆவல் மின்னியது. அச்சைக் கைப்பற்றி நிறுத்தினான் ராட்டினக்காரன்.

“வா அம்மினி, வந்து உக்காரு''

“நா குழந்தையில்லையே!''

“ராட்டினத்துல உக்காந்தா எல்லோருமே கொளந்தைங்கதான் அம்மினி!''

மிகத் தயக்கத்துடன் அவள் ஒரு குதிரையின் மேல் ஏறி அமர்ந்தாள். சுமை தாளாமல் குதிரை திணறியது. கழுத்தைத் திருப்பி அவளைப் பரிதாபமாகப் பார்த்தது. அசைவற்று நின்றது ராட்டினம். சுழற்ற முடியாமல் ராட்டினக்காரனும் திணறினான். பிணங்களைப் போலல்லவா கணக்கிறார்கள்! வேடிக்கை பார்க்கத் திரண்டு நின்றவர்களுக்கு விழி பிதுங்கி நின்ற ராட்டினக்காரனைப் பார்க்கச் சிரிப்புத் தாளவில்லை.

“நா எறங்கிக்கிறேனே?'' என்றாள் வெட்கத்துடன்.

“வேண்டாம், எனக்குப் போதிய வலுவிருக்கு!''

தோள்களைத் தட்டிக்கொண்டான். அது அவனுக்கு ஒரு சவாலாயிற்று. மூச்சைப் பிடித்து விசையை இழுத்தான். அச்சு நடுங்கியது. அவனுக்குப் புஜங்கள் இறுகின. கண்கள் கூர்ந்தன. நரம்புகள் புடைத்தன. “ஹோவ்!'' எனக் கூச்சலிட்டுக்கொண்டே கால்களால் தரையை உதைத்தான். ராட்டினத்தின் மரக்குதிரைகள் பாரம் தாளாமல் கனைத்தன. பிறகு ராட்டினம் பணிந்தது. பிரும்மாண்டமானதொரு பல்லியைப் போல அசைந்தது. பிள்ளைகள் குதூகலமிட்டுத் துள்ளினர். மரக்குதிரையின் முதுகிலமர்ந்து அவளும் தன் பால்யத்தை நோக்கிச் சுழன்றாள். விர்ரென்று குடை விரித்துச் சுற்றத் தொடங்கியது ராட்டினம். களி தாளாமல் பிள்ளைகள் ஊளையிட்டார்கள்.

பால்யத்தில் அவளும் இதேபோல் ராட்டினம் சுற்றியிருக்கிறாள். இதனின் மூன்றில் ஒரு பங்கு பெறாத வடிவம். அதற்கே அவளுக்குத் தலை கிறுகிறுத்துப் போய்விடும். வேண்டாமென அழுவாள். அண்ணன்தான் கட்டாயப்படுத்தி ஏற்றிவிடுவான். ராட்டினம் சுற்றத் தொடங்கியதும் அவளுக்கு உற்சாகம் பிறந்துவிடும். அண்ணன் கீழே நின்று அவள் ஒரு பறவையைப் போலச் சிறகு விரித்துப் பறப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். குதிரையிலிருந்து அவள் சிரிப்பாள். சர்ரென்று சுற்றிவந்து தன்னை மோதுவதுபோல் சரிந்து செல்லும் பெட்டிகளைக் கண்டு அண்ணன் பதற்றமடைவான். பிறகு அது பைத்தியமாகிவிட்டது. வனத்தின் மீதும் பட்டாம்பூச்சிகளின் மீதும் கொண்ட பைத்தியத்தைப் போல் ராட்டினத்தின் மீதும் பைத்தியம் கொண்டவளானாள் அவள்.

பிள்ளைகளின் ஆரவாரம் காதைப் பிளந்தது.

யுகங்களாய் வனங்களுக்குள் அலைந்து திரிந்த பிள்ளைகளுக்கு அது தாள முடியாத சந்தோஷம். பிள்ளைகளிடமிருந்து அவற்றின் குழந்தைமையைப் பறித்துக்கொண்டுவிட்ட குற்றத்தைத் தான் இழைத்துவிட்டதாக அவளுக்குத் தோன்றியது. கானகத்திற்கு அப்பாழுங்கிணற்றை நோக்கிச் சென்றதற்குப் பதில் ஒரு தாயாக வேறு முடிவை எடுத்திருக்க வேண்டுமோ என யோசித்தாள். கண்காணாத இடத்துக்குப் போய் எப்பாடு பட்டாவது அவர்களை வளர்த்து ஆளாக்கியிருக்கலாம்.

am_03அவர்கள் ராட்டினம் சுற்றுவதைப் பார்க்கப் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. “இந்தப் புள்ளைங்களப் பாரு, கண்ணுப் பட்டுடுமாட்ட இருக்குது!''

“இதுங்களோட தாய் இன்னைக்கு இதுகளுக்குச் சுத்திப் போடுவா!''

“ஏழும் ஒண்ணக் கண்டாப்பல! ஒரு தாய் வயித்துப் பிள்ளைங்க போல இருக்குது!''

“அதோ, அந்தக் குதிரை மேல உக்காந்திருக்கறாளே, அவதான் தாயா இருக்கும். புள்ளைங்களப் பார், அவள அச்சுப் புடுச்சாப்பல பொறந்திருக்குது!.''

“இதுகளப் பாத்தா இந்தப் பக்கத்தச் சேந்ததுகளாத் தெரியல. நெறமுங்கூட இங்கத்த நெறம் இல்ல.''

“அந்தப் புள்ள குதிரைல உக்காந்திருக்கற தினுசப் பாரு! தேசிங்கு ராசாவாட்டம். இருக்கான். மொகத்துல ராஜ கள வீசுது.''

“அவுளுமொரு ராணி மாதிரிதானிருக்கா...!''

“வனராணியாயிருக்கும். போட்டிருக்கற உடுப்புகளப் பாரு!''

“அவ ஒடம்புல காட்டு மிருகங்களோட வாசன வீசுது!''

“இல்ல, கிளிகளோட வாசனை!''

“புறாக்களோட வாசன வீசுது, இந்தப் புள்ளைங்ககிட்ட!''

“யாராயிருக்கும்?'' அவள் பதற்றமடைந்தாள். தன்னையும் தன் ஏழு பிள்ளைகளையும் ஊர் அடையாளம் கண்டுகொள்ளுமோ?

“புள்ளைங்கள எறக்கிவிடு அம்மினி. ராட்டினம் நின்னு ஒரு நாழியாச்சு. அடுத்த சுத்துக்குச் சனம் காத்திருக்குது.''

மூத்தவனின் உதவியோடு மற்ற பிள்ளைகள் குதிரையிலிருந்து இறங்கினார்கள். அவளை இறக்கிவிடக் கைகளை நீட்டினான் ராட்டினக்காரன். அவற்றைப் புறக்கணித்து அவள் கீழே குதித்தாள். ராட்டினக்காரனுக்கு முகம் சுருங்கியது.

“தீட்டொண்ணும் ஆகாது அம்மினி...! ராட்டினக்காரன் தெய்வத்துக்குச் சமம்!. சரி, காச எடு. புள்ளைங்க ஏழு, நீயொண்ணு எட்டு. எட்டுப் பேருக்குத் தலைக்கொரு அணான்னா மொத்தமா எட்டணா!''

சொல்லிவிட்டு அடுத்த சுற்றுக்கான ஆட்களைக் கைப்பிடித்துக் குதிரையில் ஏற்றத் தொடங்கினான்.

அவள் கலங்கினாள்.

“எங்கிட்டக் காசொண்ணும் இல்லயே!''

சிரித்தான்.

“ராட்டினக்காரன் தெய்வத்துக்குச் சமம்னு சொன்னதுனால காசு வேண்டாம்னு முடிவு பண்ணீட்டியா அம்மினி? ஆனா ராட்டினக்காரனுக்கும் வயிறிருக்குது. வெறுங்கொடலோட இதச் சுத்த முடியாது அம்மினி. வெளையாடாமக் காசக் குடு. சனம் காத்திருக்குது!''

“இல்லையே! வெளையாட எனக்குத் தெரியாது. வெறுங்கையோட நா இங்க வந்து நிக்கறேன்..!'' அவள் பரிதவித்தாள். முகம் மாறிக் கோபம்கொண்டான் ராட்டினக்காரன். “அப்ப ஏறாம இருந்துருக்கோணும். கொளந்தைகளக் கூட்டிக்கிட்டுப் பிச்சயெடுக்க வந்தியோ? பிச்ச போட எனக்கு வக்கில்ல அம்மினி, உசுரக் குடுத்து அச்சச் சுத்திப் பாத்தா அரும தெரியும். வந்து இந்த விசையப் புடுச்சு ஒரு சுத்துச் சுத்து. சுத்தி முடிச்சாக் கடனுங்கழியும், வா அம்மினி...!''

அவள் தார்பாய்ச்சு கட்டிக்கொண்டு குடைக்குக் கீழே போனாள். விசையைப் பற்றியபோது மூத்தவன் வந்து நின்றான்.

“நாஞ் சுத்தறனே அம்மா...!''

“வேண்டாஞ் சாமீ, உனக்கு வலுப் பத்தாது''

பிள்ளை சிரித்தான்.

“யாரு சொன்னா? சோதிச்சுப் பாத்திருக்கறயா நீ? உனக்கு நா இன்னும் கொளந்தைன்னு நெனப்பு, ஒரு வாய்ப்புக் குடு. அப்பிடி வெளிய நின்னு என்னோட பலத்தப் பாரு! உங்களையுந்தான் ராட்டினக்காரரே, விசைக்குப் பக்கத்துல வேற ஆரும் நிக்கக் கூடாது!'' எனப் புஜங்களைத் தட்டிக் காட்டினான்.

ராட்டினக்காரனின் முகத்தில் சொல்ல முடியாத ஏளனம். குடையை விட்டு வெளியே வந்து கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். அவளும் குடையை விட்டு வெளியேறினாள். பிள்ளை சிரித்துக்கொண்டே விசையைப் பற்றினான். விசை அவன் கைக்கு அடங்கவில்லை. அவள் பரிதவித்தாள். கண்களில் நீர் முட்டிற்று. ஒரு மரப்பாச்சியைத் தழுவுவது போலப் பிள்ளை ராட்டினத்தின் அச்சைத் தழுவினான். குடையின் ஆரத்தைப் பற்றி விசைத்தடியின் மேல் ஏறி நின்றான். விசை நடுங்கியது. தன் பூப்பாதங்களால் விசையை உதைத்தான். ராட்டினம் சுழலத் தொடங்கியது. குதிரைகளின் மேல் உட்கார்ந்திருந்தவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ராட்டினக்காரனுக்குக் கண்கள் விரிந்தன. ஒரு நீரோடையைப் போலச் சலசலத்துச் சுழன்ற ராட்டினம் பிறகு வேகமெடுத்தது. குழந்தைகள் ஓங்காரமெழுப்பினார்கள். சூழ்ந்து நின்ற முகங்களில் சொல்ல முடியாத கலவரம்.

“நெசந்தானா? நம்ப முடியலையே!''

“பால்குடிகூட மறந்திருக்காதே இந்தப் புள்ளைக்கு!''

“எனக்கென்னமோ அந்தப் பழனியாண்டவஞ் சாயலே தெரியுது. வெறும் பொறப்புக்கு இதெங்க முடியப்போவுது?''

சுழற்சியின் வேகம் தாளாமல் குதிரைகள் மௌனமாயின. குதிரைகளில் உட்கார்ந்திருந்தவர்கள் கண்களை இறுக மூடிக்கொண்டனர். நல்லதங்காளுக்கோ தாளாத பெருமிதம். திகைத்து நின்ற ராட்டினக்காரன் பிறகு சுதாரித்துக்கொண்டான்.

“போதுமப்பனே, கணக்கு நேராயிருச்சு. அடுத்த சுத்துக்கு ஆளு நிக்குது!''

சிரித்தபடி குடையை விட்டு வெளியில் வந்தான் பிள்ளை.

“என்ன கணக்கு ராட்டினக்காரரே?''

“பட்ட கடன் தீந்து போச்சு!''

சொல்லிவிட்டுக் குடையைச் சுழற்ற முற்பட்டான் ராட்டினக்காரன். அவனுக்கு மூச்சிரைத்தது.

“வேணும்னா நா கைகொடுக்கறேனே!'' எனப் பிள்ளை முன் வந்தான், “நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க ராட்டினக்காரரே!''

ராட்டினக்காரன் வியந்தான்.

“உன்ன மாதிரி எனக்கொரு பிள்ளையிருந்தா'' எனப் பெருமூச்சுவிட்டபடி விசையைக் கைவிட்டு வெளியே வந்தான்.

“ராட்டினம்... ராட்டினம்...'' எனத் தேர்ந்த தொழிற்காரனைப் போல் கூவிக்கொண்டே அச்சில் ஏறி மிதித்தான். அதற்குள் சூட்சுமம் கைகூடிவிட்டதே என அவன் தாய்க்குப் பெருமிதம்.

“பசிக்குதே அம்மா, இங்க பழங்கள் ஒண்ணும் இல்லையோ?'' எனக் கேட்டனர் பிள்ளைகள். அவளுக்கும் தெரியவில்லை. பக்கத்தில் நின்ற ராட்டினக்காரனின் முகத்தில் கருணை ததும்பியது.

“இதோ வர்றேன்!'' எனச் சொல்லி நகர்ந்தவன் பலகாரங்களோடு திரும்பினான்.

“கண்ணுகளா சாப்பிடுங்க, எல்லாம் உங்களுக்குத்தான்!''

பிள்ளைகள் ஆசையாய்ச் சாப்பிட்டார்கள்.

“நீயுஞ் சாப்பிடு அம்மினி, பசிக்குமல்ல? சாமமாயிடுச்சு!''

“இருக்கட்டும்!'' அவள் மறுத்தாள்.

“கூச்சப்படாமச் சாப்பிடு அம்மினி, மொகம் வாடிக்கெடக்குது உனக்கு!''

பிறகு அவனுடைய தீராத வற்புறுத்தலுக்குப் பணிந்து அவற்றை எடுத்துக்கொண்டாள்.

நான்கு

பிறகு அவள் ராட்டினக்காரியானாள். ராட்டினத்தைச் சுமக்கும் ஒரு வண்டியும் இரண்டு மாடுகளும் அவர்களுக்கிருந்தன. பறவைகளைப் போலத் திருவிழாக்கள் நடக்கும் ஊர்களின் திசைகளையும் பருவங்களையும் தெரிந்து வைத்திருந்தான் ராட்டினக்காரன். அவனுக்கு வீடெனவும் சொந்த ஊரெனவும் எதுவும் இருந்திருக்கவில்லை. சோறு போடும் ராட்டினத்தையும் ஒரு சிறிய உடுக்கையையும் தவிர வேறு சொத்துகளும் அவனுக்கு இல்லை. பால்யத்திலிருந்து பழகிய தொழிலாம் அது. அதைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை; அவளுக்கும் வேறு கேள்விகள் எழவில்லை. திருவிழா முடிந்து புறப்படத் தயாரானபோது அவளையும் அவளுடைய ஏழு பிள்ளைகளையும் தன்னுடனேயே வந்துவிடுமாறு அவளை அவன் அழைத்தான். அவள் முதலில் சினந்தாள்.

“நானொண்னும் தப்பிதமாக் கேக்குலியே அம்மினி, இந்தப் புள்ளைங்களோட ஒரு ஒறவில்லாம நிக்கறயேன்னு கேட்டேன்!.''

அவளுக்கு வேறு போக்கிடமும் இல்லை. வனத்துக்குத் திரும்பிச் செல்வது பற்றிய யோசனையும் இருந்தது. பிள்ளைகளுக்கு அதில் விருப்பமில்லை. உலகம் அவர்களுக்குப் பேரதிசயமாய்த் தென்பட்டது. மனிதர்களேகூட அதிசயமாய்த்தான் தென்பட்டார்கள். யுகங்களுக்கு முன்பு அவள் பார்த்திருந்த மனிதர்களின் சாயல் ராட்டினக்காரன் ஒருவனிடமே இருந்தது. அவளைப் போலவே அவனும் ஒரு புராதன மனிதனாய்த் தென்பட்டான். பறவையைப் போலவே மெலிந்த தேகம்; கைகள் சிறகுகளாய் விரிந்திருந்தன. ரோமம் அடர்ந்த அவனுடைய உடலில் செம்போத்தின் நெடி வீசிற்று.

மிகத் தயங்கியவளாய் அவள் வண்டியில் ஏறிக்கொண்டாள். மூத்தவன் ராட்டினக்காரனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சாட்டையைக் கையில் வாங்கிக்கொண்டான். மற்ற பிள்ளைகள் குதிரைகளை அணைத்துக்கொண்டு அவளருகே படுத்துக்கொண்டனர். விடிந்தபோது வண்டி அடையாளங்காண முடியாத ஒரு புதிய ஊரில் நின்றது. அந்த ஊரில்தான் அவள் ஒரு ராட்டினக்காரியாய் வாழத் தொடங்கினாள். என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான் ராட்டினக்காரன். வெகு சீக்கிரத்தில் அவள் கற்றுக்கொண்டாள்.

திருவிழா தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே போய்ச் சேர வேண்டும். ராட்டினம் அமைக்கும் இடத்தைச் சுத்தப்படுத்தவும் பிள்ளைகள் உறங்குவதற்கான கூடாரம் அமைக்கவும் அவர்களுக்கு ஒரு நாள் பிடிக்கும். அவள் அவனுக்காகவும் பிள்ளைகளுக்காவும் சமைத்து வைத்துவிட்டு மாடு களுக்குப் புல் தேடி காடு கரைகளைச் சுற்றி வருவாள். பிள்ளைகளுக்குக் குதிரைகளைப் பராமரிக்கும் பொறுப்பு. ஒரு திருவிழாவுக்கும் மற்றொரு திருவிழாவுக்குமான இடைநாட்களில் குதிரைகளைக் கழுவி அவற்றுக்குச் சாயம் தீட்ட வேண்டும்; உடைந்த சேனங்களைச் செப்பனிட வேண்டும்; வண்ணம் பூச வேண்டும். பிள்ளைகள் எல்லாவற்றையும் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பர். பிறகு அண்டையில் உள்ள காடுகளுக்குப் போய்த் தம் பிரியமான குதிரைக் குட்டிகளுக்குப் புல் அறுத்துக்கொண்டு வந்து தின்னச் சொல்லி வற்புறுத்துவர்.

ஐந்து

ஒரு நாள் மாலையில் ராட்டினக்காரன் ஊரின் எல்லையிலிருந்த காட்டிலிருந்து பிள்ளைகள் விளையாடுவதற்காக இரண்டு முயல் குட்டிகளைக்கொண்டு வந்தான். பிள்ளைகள் களி தாளாமல் கூச்சலிட்டனர். நாள் முழுவதும் கள் குடித்துக் களித்துக் கிடந்தான் ராட்டினக்காரன். அவள் அவனுக்காக முயல் கறி சமைத்துத் தந்தாள்.

“கொஞ்சம் குடி அம்மினி...!''

“வேண்டா...!'' சினம் கொண்டு மறுத்தாள் நல்லதங்காள்.

“இதுல என்ன இருக்குது அம்மினி? நானொண்ணும் தப்பாச் சொல்லீரலியே!''

பிறகு அவன் தன் உடுக்கையை எடுத்துக்கொண்டு கூடாரத்தைவிட்டு வெளியே போய்விட்டான். உடுக்கையை இசைத்தபடி அவன் பாடிக்கொண்டிருந்ததை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பாட்டின் பொருள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அந்த ராகம் மனதைப் பிசைந்தது. கேட்டுக் கண்ணீர் உகுத்தபடி அவள் தூங்கிப்போனாள். கனவில் அவளுக்குப் பழையவற்றின் நினைவுகள். அவற்றின் சுமை தாளாமல் அவள் பெருங்குரலெடுத்து அழுதாள். உடுக்கையை வீசியெறிந்துவிட்டு ஓடி வந்த ராட்டினக்காரன் திகைத்து நின்றான்.

“என்னாச்சு அம்மினி?''

மிகத் தணிந்த குரலில் அவள் அவனுக்குப் பதிலளித்தாள்.

“ஒரு கெனாக் கண்டேன், பழைய கெனா...!''

அருகிலமர்ந்து அவளது கன்னங்களில் வழிந்தோடிய நீரைத் துடைத்துவிட்டான்; மிக ஆறுதலாகச் சிகையை வருடிவிடவும் முற்பட்டான். சினம்கொண்டவளாய் அவள் அவனது கைகளைத் தட்டிவிட்டாள். ராட்டினக்காரன் திகைத்துப் போனான்.

“எதுக்கு அம்மினி இவ்வளவு கோபம்?''

மூத்தவன் ராட்டினக்காரனைப் பிரியாதவனாயிருந்தான். ராட்டினத்தின் நுட்பங்களைப் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுத்தான் அவன். மிக விரைவில் முழுப் பொறுப்பையும் அவனிடமிருந்து கைமாற்றி வாங்கிக்கொண்டான் பிள்ளை. அவன் ராட்டினம் சுற்றும் நேர்த்தியைக் கண்டு அவள் வியந்து போவாள். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து அவன் கூடாரத்துக்குத் திரும்பிவரும்வரை அவள் தூங்காமல் காத்திருப்பாள். சாப்பிட்டுவிட்டுப் படுத்தவுடன் அவன் கால்களைப் பிடித்துவிடுவாள். அவள் மனதில் அவன் மீது எல்லையற்ற கருணையும் அன்பும் சுரக்கும். “பிள்ளைக்குக் கஷ்டமொண்ணுமில்லையே?'' என அவனது பால் வண்ணமுடைய முகத்தைத் தன் கைகளால் வருடியபடி கேட்பாள், “எனக்கென்ன கஷ்டம் அம்மா? என்னோட வாழ்க்கை இப்போ அர்த்தமுள்ளதா மாறியிருக்குது! உனக்காகவும் குழந்தைகளுக்காகவும் என்னால எதாவது செய்ய முடியுதே! உண்மையில் இது எனக்கு வரம்!'' எனப் பிள்ளை சிரிப்பான். பிள்ளைகளுக்காவும் அவளுக்காகவும் புத்தம்புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்தான் ராட்டினக்காரன். பிள்ளைகளின் உடல்களில் செழுமை படரத் தொடங்கியிருந்தது. மெல்ல மெல்ல அவ்வுடல்கள் பூரித்து வளர்ந்தன. மூத்தவன் ஒருவனைத் தவிர மற்றவர்கள் பழைய ஞாபகங்களை இழந்திருந்தார்கள். ஒரு பிள்ளை ராட்டினக்காரனைத் தகப்பனென முறை சொல்லி அழைத்ததைக் கேட்டு அவள் பதறிப்போனாள். தன் உடுக்கையிலிருந்து பல வேடிக்கையான சத்தங்களை எழுப்பி, கதைகள் சொல்லி அவர்களைச் சந்தோஷப்படுத்திக்கொண்டிருந்தான் ராட்டினக்காரன்.

கழைக்கூத்தாடிகள் கூட்டமொன்று அவர்களோடு ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருந்தது. பாம்பின் உடலையுடைய பெண், கயிற்றின் மீது நடக்கும் சிறுவன், நெருப்பை விழுங்கும் கிழவன், பற்களால் பாறையைக் கட்டி இழுக்கும் இளைஞன், ஒரே நேரத்தில் நூறு வாழைப்பழங்களையும் ஒருபடி அரிசிச் சோற்றையும் விழுங்கி ஏப்பம்விடும் சாப்பாட்டு ராமன் எனப் பலவிதமான ஆட்கள் அவர்களோடு பயணம் செய்தனர். பிள்ளைகளுக்குச் சாப்பாட்டு ராமனை மிகப் பிடித்திருந்தது. அவன் அவர்களைத் தன் முதுகிலேற்றி உப்பு மூட்டை சுமப்பான். அதற்காக ராட்டினக்காரன் அவனுக்குப் பலகாரங்களைத் தின்னக்கொடுத்துக் கொண்டிருந்தான். பிள்ளைகளின் குதூகலத்தைப் பார்த்து ஒரு தாயாக அவள் பூரித்துப் போனாள்.

ஒருநாளிரவு, கூடாரத்திற்கு வெளியே தன் உடுக்கையை இசைத்தபடி பாடிக்கொண்டிருந்தான் ராட்டினக்காரன். கதை கேட்கும் ஆவலில் தானும் கூடாரத்திலிருந்து வெளியே வந்தாள் நல்லதங்காள்.

ஆச்சரியம் தாளாதவனாய்த் தன் உடுக்கையிலிருந்து குதூகலிக்கும் புதிய இசையொன்றை எழுப்பி அவள்மீது படரவிட்டான் அவன். அதன் வசீகரம் தாளாமல் அவள் தவித்தாள். யுகம்யுகமாய் உறைந்து கிடந்த தன் இதயம் விம்முவதைக் கண்டு அவள் பதற்றமுற்றாள். அவளது நாளங்கள் புடைத்தன. மூச்சுக் கொந்தளிக்கத் தொடங்கியது. வியர்வை ஊற்றெடுத்துப் பெருகியது. தாள முடியாதவளாய் am_002எழுந்து கூடாரத்திற்குள் திரும்பினாள். பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு கிடந்தனர். மிகப் பயந்து போனவளாய் மூத்தவனை இறுகத் தழுவிக்கொண்டு படுத்தாள். அவள் உடலின் நடுக்கத்தை உணர்ந்த மூத்தவன் விழத்துக்கொண்டான். சிம்னி விளக்கின் மெலிந்த வெளிச்சத்தில் பிள்ளையின் கண்களில் இரக்கம் ததும்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள் தாய். அவற்றை நேராகப் பார்க்க அஞ்சித் தலைகுனிந்தாள். அவளது உடல் குலுங்கிக்கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த பிள்ளை எழுந்து அவள் முகத்தை நிமிர்த்தினான். “அழாதே அம்மா'' எனக் கண்களைத் துடைத்துவிட்டவன், “எல்லாத்தையும் மறந்துடு அம்மா...! பழையவற்றின் ஞாபகங்கள் எதுவுமே நம் யாருக்குமே வேண்டாம்...!'' எனச் சொல்லி அவளைத் தன் மார்பில் சரித்துக்கொண்டான்.

கூடாரத்திற்கு வெளியே “அம்மினீ...அம்மினீ...!'' என அவளை ஓயாது அழைத்துக்கொண்டிருந்தது ராட்டினக்காரனின் உடுக்கை.

ஆறு

ஒரு திருவிழாவில் அவள் தன் பிள்ளைகளோடு சிறிய மிருகக் காட்சிச் சாலைக்குப் போயிருந்தாள். அதிலிருந்த புலி அவளையும் பிள்ளைகளையும் அடையாளம் கண்டுகொண்டது. கூண்டுக்குள்ளிருந்து அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த புலி தருணம் பார்த்து வெளியில் பாய்ந்துவிட்டது. பார்வையாளர்கள் அலறி ஓடினார்கள். புலி யாரையும் தொந்தரவு செய்யாமல் நேராக அவளிடம் வந்தது. ஒரு நாய்க்குட்டியைப் போல அவள்மீதும் பிள்ளைகள்மீதும் தாவியது. அவர்களது கைகளை நக்கியது. பிள்ளைகள் அதனிடம் விளையாடலானார்கள். இருவர் அதன் முதுகில் அமர்ந்தார்கள். வெகு சந்தோஷமாக வலம் வந்தது புலி. சிதறி ஓடிய கூட்டம் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தது. செய்தி கேள்விப்பட்டு ராட்டினக்காரனும் வந்தான். மிரட்சியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் இரவு கூடாரத்தில் அவளிடம் மிகத் தயக்கத்தோடு அதைப் பற்றிப் பேசினான்.

“நீ யாரு அம்மினி? அந்தப் புலி யாரு?'' எனக் கேள்விகளால் துளைத்தெடுத்தான்.

அவள் ஏதோ சொல்லிச் சமாளித்தாள். மிகப் பயந்துபோனவனாய்த் தென்பட்டான் அவன்; நான்கைந்து நாட்கள் வரை யாரிடமும் பேசவில்லை; அவளோ பிள்ளைகளோ அருகில் வந்த தருணங்களில் பதற்றத்தோடு விலகினான். அவள் கவலையடைந்தாள். தான் யாரென்பதைச் சொல்லிவிடலாமா எனவும் யோசித்தாள். உலகம் நம்புமா என்பது குறித்து அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. ராட்டினக்காரன் தன்னையும் தன் பிள்ளைகளையும் விட்டுவிட்டுப் போய்விடுவானோ எனக் கவலைப்பட்டாள். மீண்டும் வனத்துக்குத் திரும்ப முடியுமா என்பது குறித்தும் சந்தேகமாக இருந்தது. முன்பு போல் பிள்ளைகள் தொடர்ந்து வருவார்களா? அவர்களிடத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் அவளுக்குச் சந்தோஷம் தருவதாகவே இருந்தது. அவர்கள் இந்த உலகைப் புரிந்துகொள்ளவும் அதனோடு போராடவும் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

பழையவற்றின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டிருந்த தருணத்தில் வந்திருந்தது புலி. மறு நாள் இரவில் கூண்டைவிட்டுத் தப்பி அவர்களுடைய கூடாரத்திற்கே வந்துவிட்டது. அதன் வாசனையை உணர்ந்து அவள் கூடாரத்தை விட்டு வெளியே வந்தாள். புலி அவள்மீது தொற்றியது. மிக ஆதுரமாக அவள் அதை வருடிக்கொடுத்தாள். பின் மிகத் தணிந்த குரலில் திரும்பிப் போய்விடுமாறு அதனிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டாள். துக்கத்தோடு அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றது புலி.

பிறகொருநாள் திருவிழாக் கூட்டத்தினிடையே அவள் தன் சகோதரனின் தோற்றங்கொண்ட பாட்டுக்காரன் ஒருவனைப் பார்த்தாள். அவளைக் கண்டதும் பாட்டுக்காரன் திகைத்தான். பாட்டு நின்றது. சொல்லிவந்த கதையின் தொடர்ச்சி அறுபடத் தன் கையிலிருந்த உடுக்கையைக் கீழே வைத்துவிட்டுப் பந்தங்களின் ஒளியில் அவளைக் கூர்ந்து பார்த்தான். அவன் கண்களில் பேராசை மின்னியது. அவனுக்குங்கூட உயிர்த்திருத்தல் ஒரு சாபமாய் இன்னும் நீடித்திருக்கிறதோ? அவளைத் தேடி அலைகிறானோ? மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறானோ? மிகப் பதற்றம்கொண்டவளாய்க் கூட்டத்திலிருந்து எழுந்தாள். அவள் எழுந்ததைக் கண்டதும் அவளுடைய ஏழு பிள்ளைகளும் எழுந்தனர். அவளையும் அவள் பாதம்பற்றி வரிசையாய்ப் பின்தொடரும் பிள்ளைகளையும் பார்த்து மூச்சடைத்து நின்றவன் பிறகு வெகு உக்கிரமாய்த் தன் உடுக்கையை இசைத்தான். உடுக்கை “வா...வா...!'' என இழைந்தது; “நல்லா, என் தங்கமே...!'' எனக் கதறியது; பிறகு, “நல்லா, பத்தினித் தங்கமே! அந்த ராட்டினக்காரனுடன் போகாதே, உலகம் உன்னப் பழிக்கும்!'' என்றொரு பெருத்த ஓலம் அவனது உடுக்கையிலிருந்து எழுந்து அவள் செவிகளைத் துளைத்தது.

அவள் தன் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு தலை தெறிக்க ஓடினாள்.

கூடாரத்தை அடையப் பாதி தூரம் இருக்கையில் மழை பிடித்துக்கொண்டது. பெருமழை. அவளுக்கு மூச்சிரைத்தது. மனம் தவித்தது. “கடவுளே, நா என்ன செய்யட்டும்?'' என வாய்விட்டு அரற்றியவளாய்த் தன் கூடாரத்திற்கு வந்து நின்றாள். மழையைப் பொருட்படுத்தாதவனாய்க் கூடாரத்திற்கு வெளியே தவித்து நின்றான் ராட்டினக்காரன்.

“என்னாச்சு அம்மினி? இந்த மழைல இப்பிடி ஓடி வராட்டி என்ன?'' எனக் குழந்தைகளை அணைத்துக்கொண்டான். “வா அம்மினி, சளி புடுச்சுக்கப் போவுது''

“ராட்டினக்காரா, எனக்கொரு உதவி செய்வியா?''

“என்ன அம்மினி, என்ன வேணுஞ் சொல்லு; இதுல கேள்வியென்ன?''

“எனக்கு இப்பவே இந்த ஊர விட்டுப் போகணும்''

“எங்க அம்மினி, என்னாச்சு உனக்கு? யாரென்ன சொன்னா?''

“எனக்கு இப்பவே இந்த ஊர விட்டுப் போயிரனும் ராட்டினக்காரா''

“எங்க அம்மினி?''

“எங்கயோ! நீ யாரு, நா யாருன்னு தெரியாத ஒரு ஊருக்கு...! கடல் தாண்டி, மல தாண்டி என்னக் கூட்டிக்கிட்டுப் போயிரு ராட்டினக்காரா!'' என அவள் வாய்விட்டுக் கதறி அவன் பாதங்களைப் பற்றினாள்.

பிறகு ஒரு பேச்சுப் பேசாமல் மழையில் நனைந்தபடியே ராட்டினத்தைப் பிரிக்கலானான் ராட்டினக்காரன். மூத்தவன் துணைக்கு வந்தான். அவள் கூடாரத்திலிருந்த சாமான்களை எடுத்து மூட்டை கட்டினாள். பாட்டுக்காரன் மிக வன்மமாகத் தன் உடுக்கையை இசைத்துக்கொண்டிருந்தான். “நல்லா என் பேச்சத் தட்டிப் போகாதே, பழி வந்து சேரும் நல்லா! பிள்ளைகளைக் கொண்டு போய்ப் பாழுங்கெணத்துல தள்ளீராத நல்லா.'' சத்தம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. தன் உடுக்கையை இசைத்தபடி துரத்தி வருகிறான் நல்லான். எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி வண்டியில் ஏற்றினார்கள். அவளுக்குக் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. ராட்டினக்காரனின் முகத்திலும் பீதி. உடுக்கையின் சொற்களுக்குப் பொருள் புரியாதவனா அவன்? பிள்ளைகளைக் கைகொடுத்துத் தூக்கி மின்னல் வேகத்தில் வண்டியில் ஏற்றினான். அவள் தாவி ஏறி அவனது தோள்களுக்குப் பின்னே பதுங்கிக்கொண்டாள். சாட்டையைச் சுழற்றி வீசிக் காளைகளை விரட்டினான் ராட்டினக்காரன். காடுகள் தாண்டி, மலைகள் தாண்டி, எதிர்பட்ட ஊர்களைத் தாண்டி விரைந்தன மாடுகள். பாட்டுக்காரனின் உடுக்கடி நெடுந்தொலைவுக்கு விரட்டி வந்தது. ஏழு நாட்கள். சோறு தண்ணி எதுவுமில்லை. ஆளரவமற்ற வனாந்தரங்களில் நிறுத்தி அங்கு கிடைத்த பழங்களையும் கிழங்குகளையும் சாப்பிட்டுப் பசியாற்றிக்கொண்டார்கள்.

பிறகு அவர்கள் வெகு தொலைவிலுள்ள ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு நதி இருந்தது. நதியையொட்டி ஒரு மலை இருந்தது. கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லாத ஒரு நகர் அது. நதிக்கரையில் எண்ணற்ற ராட்டினக்காரர்கள். வணிகர்களும் செல்வந்தர்களும் கூடிக் களித்துக்கிடந்தனர். அது பொருத்தமான இடமாயிருக்கும் என்றான் ராட்டினக்காரன். அவளும் அதற்கு இசைந்தாள். நகரின் ஒதுக்குப் புறத்தில் அவளுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் மிக அழகிய கூடாரம் ஒன்றை அமைத்தான் அவன். பிறகு ராட்டினம் அமைக்கப் பொருத்தமான இடத்தைத் தேடி மூத்தவனை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். நள்ளிரவில் இருவரும் திரும்பி வந்தார்கள். மிகக் களைத்துப் போனவனாய்த் தன் வழக்கப்படிக் கூடாரத்திற்கு வெளியே தாளம் பாயை விரித்துப் படுத்தவன் நொடிப் பொழுதில் தூங்கிவிட்டான்.

அந்த நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கியது.

மழையின் சத்தத்தைக் கேட்டு விழித்தவளுக்கு ராட்டினக்காரனின் நினைவு. மிகப் பதற்றம் கொண்டவளாய் எழுந்து வெளியே வந்தவள் மழை நீரில் நனைந்து கிடந்தவனைப் பார்த்துத் தாள முடியாத துக்கம் கொண்டாள். “அய்யோ ராட்டினக்காரா, என்ன இது?'' எனக் கேட்டுக்கொண்டே ஓடிச் சென்று அவனை எழுப்புவதற்கு முற்பட்டாள். ஒரு சவம் போல் அசைவற்றுக் கிடந்தான் அவன். பிரயாணத்தின் களைப்பும் கள்ளின் போதையுமாயிருக்கலாம். மறு யோசனையின்றி அவனைத் தோள்களில் ஏற்றிக் கூடாரத்திற்குக் கொண்டு வந்தாள். நனைந்த உடலைத் தன் முந்தானையால் துடைத்துவிட்டாள். பிறகு எல்லையற்ற கருணையோடு அவன் விழித் தெழுவதற்காகக் காத்திருந்தாள். அதற்கு மூன்று நாட்கள் ஆயின. அதுவரை உணவும் உறக்கமும் இல்லாமல் அவள் அவனருகில் காத்திருந்தாள். மூன்று நாட்களுக்குப் பிறகு மலங்க மலங்க விழித்தபடி எழுந்து உட்கார்ந்தவனுக்கு அவள் தன் விலை மதிப்பில்லாத முத்தமொன்றைக் கொடுத்தாள். இப்படியாக அவள் ராட்டினக்காரியானாள். அவளுடைய ஏழு பிள்ளைகளும் ராட்டினக்காரனின் பிள்ளைகளானார்கள்.

ஏழு

வாழ்க்கை அவளுக்கு மிக எளிமையானதாகத் தென்பட்டது.

மூத்தவனின் முகத்தில் மீசை அரும்புவிடத் தொடங்கியிருந்தது. மற்ற பிள்ளைகளுங்கூட வளரத் தொடங்கியிருந்தார்கள். யுகம் யுகமாக உறைந்து கிடந்த உடல்கள் இப்போது துளிர்விடத் தொடங்கியிருந்தன. ஒரு நாள் தன் கூந்தலில் சில நரைமுடிகள் தென்பட்டதைப் பார்த்து அவள் திடுக்கிட்டுப் போனாள். ஒருவகையில் அது பெரும் நிம்மதி. உயிர்த்திருத்தல் என்னும் சாபத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறதல்லவா? யுகம்யுகமான ஞாபகங்களிலிருந்துங்கூட விடுபட்டுக்கொண்டிருந்தாள். நல்லானின் உருவம் நினைவிலிருந்து மங்கிக்கொண்டிருந்தது. புருஷனின் முகத்தை முற்றாக மறந்துவிட்டிருந்தாள். இப்போது அவர்கள் வந்து நின்றால் தன்னால் அடையாளங் காணக்கூட முடியாது என நினைத்தாள். வன உயிர்களின் வாசனை வீசிய அவளது உடலில் ராட்டினக்காரனின் வியர்வை நெடி அடிக்கத் தொடங்கியிருந்தது.

ராட்டினக்காரனுக்கோ இளமைகூடிக்கொண்டிருந்தது. ஒரு வகையில் அவள் அவனுக்கு வரம். சில வாரங்களில் அவள் அவனுக்காகக் கருத்தரித்தாள். ஏழு பிள்ளைகளோடு அதைத் தன் எட்டாவதாக எண்ணி அவளும் மகிழ்ந்திருந்தாள். அது ஒரு பெண்பிள்ளையாயிருக்க வேண்டுமென்றான் ராட்டினக்காரன், “ஆசைக்கொரு பெண்பிள்ளை வேணுமில்லையா?'' பத்து மாதங்களின் கடைசியில் அவர்களுடைய விருப்பம் நிறைவேறியது. பெண்பிள்ளை பிறந்தவுடன் அவன் மிகப் பொறுப்பான வனானான். பிள்ளைகள் எழுவருக்கும் தாளாத சந்தோஷம். ஒருவர் மாற்றி ஒருவர் அதைத் தோளில் சுமந்தார்கள். ராட்டினக்காரன் அதைச் சுமந்துகொண்டு காடுகரையெல்லாம் அலைந்து திரிந்தான்.

சீக்கிரத்திலேயே ஒரு ராட்டினக்காரியாய் வாழவும் பழகிக்கொண்டிருந்தாள் அவள். ஊர்க்காரர்கள் ராட்டினக்காரனை நேசித்தது போலவே அவளையும் நேசிக்கத் தொடங்கியிருந்தார்கள்; திருவிழாவுக்கெனச் செய்த பலகாரங்களை ராட்டினக்காரிக்கும் அவளுடைய ஏழு பிள்ளைகளுக்கும் பிரியமாக அள்ளிக்கொடுத்தார்கள். முந்தானையை விரித்து அவற்றை வாங்கி மடியில் கட்டிக்கொள்ளவும் நன்றி சொல்லி விடைபெற்றுக்கொள்ளவும் பழகியிருந்தாள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் கூடாரத்திலிருந்து வெளியேறி யாருடைய தொழுவத்துக்கும் சென்று தன் பெண் குழந்தைக்காக ஒரு ஆழாக்குப் பசும்பால் கேட்டு நிற்பதில்கூட அவளுக்கு வருத்தமேதுமிருக்கவில்லை. நதியோரத்தில் செம்படவர்களின் குடி யிருப்பில் அவளுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஒரு சிறிய வீட்டைக் கட்டித் தந்திருந்தான் ராட்டினக்காரன். பிள்ளைகள் விளையாடப் போயிருக்கும் தருணங்களில் இருவரும் குழந்தைகளாய் மாறிவிடுவார்கள். அவள் ஓயாமல் சிரித்துக் கிடப்பாள். சிரித்துச் சிரித்துப் புரையேறிவிடும். எட்டுப் பிள்ளைகள் பெற்றும் கட்டுக்குலையாத தன் ராட்டினக்காரியைக் காணும்பொழுதெல்லாம் அவனுக்குப் பித்தேறும்.

“இன்னொரு பெண்பிள்ளை வேணுமாக்கும் உனக்கு?''

எனக் குறும்பாகக் கண் சிமிட்டுவாள் அவள்.

“ஆமா, இன்னும் ஆறு பெண்பிள்ளைகள். ஆணேழு, பெண்ணேழு!.''

“தாங்குவமா நாம்?'' அவள் சிரிப்பாள்.

விளையாட்டெல்லாம் ஓய்ந்து நிச்சலனமாய் அவள் உறங்குகையில் அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான் ராட்டினக்காரன். ஒருநாள் அவள் விழித்துக்கொண்டாள்.

“என்ன ஆச்சு ராட்டினக்காரா உனக்கு?

தூக்கம் வரலியா?''

அவன் பெருமூச்செறிந்தான்.

“ராட்டினக்காரீ, நீ என்கூடக் கடைசிவரையிலும் இருப்பியா?''

“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி ராட்டினக்காரா? பேசாமத் தூங்கு.''

“நீயோ பிள்ளைகளோ இல்லாம எனக்கு வாழ்க்கையில்லயே ராட்டினக்காரீ, மனசு தவிக்குது...!''

“அதிலென்ன சந்தேகம் ராட்டினக்காரா? இருப்பேன், ஆயுசுள்ளவரையிலும் நா உங்கூட இருப்பேன்!''

சொன்னபடி எவ்வளவோ கஷ்டங்களைக் கடந்து வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருந்தாள் அவள். ஆனால் யுகங்களுக்குப் பிறகு அப்பஞ்சம் திரும்பி வந்தது. வானம் பொய்த்தது, வற்றி உலர்ந்தது நதி, வறண்டு பாலையாயிற்று நிலம். புற்களும் கருகிப்போயின. தம் மரக் குதிரைகள் பட்டினியால் இளைத்துப் போனதைப் பார்த்து அவளுடைய பிள்ளைகள் கண்ணீர்விட்டு அழுதார்கள். அவள் தவித்துப் போனாள். கொண்டாட்டங்கள் அழிந்துபோய்விட்ட அந்நதியின் கரையிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிப் போய்க்கொண்டிருந்தனர். அவர்களுடைய ராட்டினம் வெயிலில் உலர்ந்து அச்சு முறிந்து கிடந்தது. நதிக்கரையோரத்தின் உலர்ந்த பூமியைக் கிளறி அவளுடைய பிள்ளைகளுக்காகக் கொஞ்சம் கிழங்குகளைத் தோண்டியெடுத்துக்கொண்டு வருவான் ராட்டினக்காரன். மூத்தவன் வறண்ட மலையின் பாறையிடுக்குகளுக்குள் பதுங்கியிருக்கும் எலிகளையும் எந்தப் பஞ்சத்தையும் தாக்குப் பிடித்து நிற்கும் உடும்புகளையும் பிடித்துக்கொண்டு வருவான். அரை வயிறும் கால் வயிறுமாக உயிரைப் பிடித்து வைத்திருந்தார்கள் எல்லோரும். யுகங்களுக்கு முன்னால் அவள் செய்ததைப் போல ஒருத்தி வற்றிய கிணற்றுக்குள் தன் நான்கு குழந்தைகளோடு வந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டாள். அவளைத் தேடிக்கொண்டு யாரும் வரவில்லை. வறண்ட கிணற்றுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்த, அவ்வுடல்களைத் தின்று பசியாறிக் கொண்டிருந்த மிருகங்களின் ஓயாத உறுமல்களால் ஊரின் அமைதி குலைந்தது. தீராத துயரத்துடன் எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டிருந்தாள் நல்லதங்காள்.

“ராட்டினக்காரா நாம தாக்குப்பிடிப்பமா?''

“நீ மனசு விட்டுடாத ராட்டினக்காரீ, மழ பெய்யும், பஞ்சந் தீரும். என் தோள்களுக்கு இன்னும் வலுவிருக்கு...!''

அன்றிலிருந்து வேலை தேடித் தொலைதூரங்களுக்குப் போய் மண் வெட்டியும் பாறைகளைப் பிளந்தும் கிடைத்த கூலியில் கொஞ்சம் தானியங்களைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டிருந்தான் ராட்டினக்காரன்; தீராத பதற்றத்தோடு இரவுகளில் விழித்திருந்து அவளை ஓயாது கண்காணித்துக்கொண்டிருந்தான். ஏதாவதொரு காரணம் பற்றி அவள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பின்தொடர்ந்து சென்றான். அவ்வூரின் அரசனும் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தான். தண்ணீர் பந்தல்களையும் அன்னச் சத்திரங்களையும் திறந்துவைத்துக் குடிமக்கள் கால் வயிற்றுக் கஞ்சியேனும் குடிப்பதற்கு வழி செய்திருந்தான் அரசன். தன் எட்டுப் பிள்ளைகளோடும் கஞ்சித் தொட்டிக்கு முன்னால் காத்திருக்க நேர்ந்ததைப் பற்றியுங்கூட அவள் கவலைப்படவில்லை. ஒரு தாயாகத் தனது இருப்பு அர்த்தமுள்ளதாகிவிட்ட திருப்தியுடன் அந்தப் பஞ்சத்தை உறுதியாக எதிர்த்தே நின்றாள். அப்படிப்பட்டவளுக்குத்தான் பிறகு ராட்டினக்காரன் சொன்ன ஒரு வார்த்தையின் இம்சை தாளாமல் மீண்டும் அப்பாழுங்கிணற்றைத் தேடிப் போக நேர்ந்தது.

எட்டு

அப்போது பஞ்சம் நீங்கிக் கொண்டாட்டங்கள் திரும்பியிருந்தன. ராட்டினத்தைச் சுழற்ற மூத்தவனுக்குத் துணையாக மற்றொரு பிள்ளையும் வந்திருந்தான். மற்ற பிள்ளைகள் அச்சிறு பெண்பிள்ளையோடு விளையாடிக் களித்துக்கொண்டிருந்தனர். மழலை கொஞ்ச அவள் ஓடியாடித் திரிந்துகொண்டி ருந்ததைப் பார்த்து அவள் பூரித்துக் கிடந்தாள். ராட்டினக்காரனின் உடுக்கை களிதாளாமல் துள்ளிக்கொண்டிருந்தது. இராக் காலங்களில் இருவரும் நதியின் கரையில் சிறு பிள்ளைகளாய் மாறி விளையாடுவார்கள். கள் வெறி தாளாமல் அவன் பிதற்றுவான்.

“இன்னொரு பெண் பிள்ளை வேணும் ராட்டினக்காரீ...!''

“பேசாம இரு ராட்டினக்காரா, இருக்கிற எட்டுப் பிள்ளைகள் போதாதா நமக்கு? வயசும் கூடிப்போச்சு!''

“போதாது! இன்னும் கணக்கு நேராகலியே!''

“என்ன கணக்கு ராட்டினக்காரா?''

“சொன்னதுனக்கு மறந்து போச்சா? ஆணேழு, பெண்ணேழு, இன்னும் ஆறு மிச்சமிருக்குதே!''

“அய்யோ, என்னால முடியாது ராட்டினக்காரா, எனக்குத் தெம்பில்ல!''

“இதுல கொஞ்சம் குடிச்சுப் பாரு, தெம்பு தானா வரும்!'' எனக் கள்ளுள்ள கலயத்தை அவளுக்குத் தருவான்.

அவர்களுக்குள் எப்போதாவது சண்டை வரும். சில தருணங்களில் அவன் அவளைக் கை நீட்டி அடித்துவிடுவான். அவள் கடுங்கோபம் கொள்வாள். கோபம் தீரும்வரை அவனிடம் ஒரு வார்த்தை பேசமாட்டாள். நீ யாரோ என்பது போல முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வாள். ராட்டினக்காரனுக்கோ அவளுடைய கோபத்தை ஒரு பொழுதுக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாது. கெஞ்சுவான், மன்னிப்புக் கேட்பான். அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பான். அவள் மசியமாட்டாள். பிறகு அவன் கண்ணீர் விடுவான். கள் தன் அறிவை மழுங்கடித்துவிட்டதாய்ச் சொல்லிக் கன்னத்தில் அறைந்துகொண்டு அழுவான். பிள்ளைகள் சமாதானம் செய்து வைக்க முயல்வார்கள். அண்டை வீடுகளில் வசிக்கும் செம்படவப் பெண்களைத் தூது விடுவான்.

“போச்சாதெடு அம்மினி, பாவம் ராட்டினக்காரன் மூணு நாளாப் பச்சத் தண்ணி குடிக்கலெ!'' என அவனுக்காகப் பரிந்து பேசச் செம்படவப் பெண்கள் இருந்தார்கள். அவனது தவிப்பைப் பார்த்து அவளுக்குச் சிரிப்புப் பொங்கும். சிரமப்பட்டு அதை மறைத்துக்கொள்வாள். பிறகு ஏதோ ஒரு கணத்தில் சமாதானமுண்டாகிவிடும். ஆனால் ஒரு சண்டையின்போது அவள்மீது அவன் பிரயோகித்த ஒரு வசைச் சொல்லின் தீவிரத்தைத் தாள முடியவில்லை அவளுக்கு.

அவனுக்குக் கள் வெறி மீதூறியிருந்த ஒரு தருணம், எதற்காகவோ அவளை வேசி என்றான். அவள் திடுக்கிட்டுப் போனாள். எதிர்த்து மிகப் பலவீனமான ஒரு வசைச் சொல்லால் அவனைத் திருப்பித் தாக்க முயன்றாள். அவன் மீண்டும் அதே வசைச் சொல்லால் அவளை அடித்தான்.

“வேசி, வேசிதானே நீ? யாருக்கோ ஏழப் பெத்துட்டு எட்டாவதா எனக்கொண்ணப் பெத்து வெச்சுருக்கறயே!'' எனச் சொல்லிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினான். அந்தத் தருணத்தில் அவளுக்குத் தன் கழிந்த யுகம் நினைவுக்கு வந்தது. பால்யத்தில் தன் அண்ணனோடு வனத்தில் துள்ளி விளையாடிய தருணங்கள் நினைவுக்கு வந்தன. ஊரே அதிசயிக்கும்படி கோலாகலமாக நடந்த அவளுடைய கல்யாணம் ஞாபகத்துக்கு வந்தது. புகுந்த வீட்டில் புருஷனின் அன்பில் தோய்ந்துகிடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. பிறகு அக்கொடிய பஞ்சமும் அப்பாழுங்கிணறும் நினைவுக்கு வந்தன. புனித நீர் தெளித்து நல்லான் அவளை உயிர்ப்பிக்கிறான். அவளையும் குழந்தைகளையும் தன்னோடு அழைக்கிறான். சாபம் அண்ணா இது, வெறும் சாபம்!

பிறகு அவள் எதுவும் பேசவில்லை.

மளமளவென வீட்டை நோக்கி நடந்தாள். வாசலில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். தொட்டிலில் எட்டாவதான பெண் குழந்தை. மற்ற குழந்தைகள் மரக் குதிரைகளோடு விளையாடிக்கொண்டிருந்தனர். தலைவிரி கோலமாக வந்து தன் பிள்ளைகளிடம் சொன்னாள்.

“பொறப்படுங்க எல்லோரும்''

பிள்ளைகள் புரியாமல் விழித்தார்கள்.

மூத்தவன் கேட்டான்.

“எங்க அம்மா?''

அவளுக்குக் கண்ணீர் பொங்கிக்கொண்டிருந்தது.

“வனத்துக்கு...''

“வனத்துக்கா பாழுங்கிணத்துக்கா அம்மா?''

அவள் பிள்ளைகளைக் கைப்பிடித்து நின்றாள். மூத்தவன் குழந்தையை எடுத்துக்கொண்டான். எந்தச் சலனமுமில்லாமல் நடந்தார்கள் எல்லோரும். போகும் வழியில் கொடிகளில் தென்பட்ட குன்றிமணிகளைப் பறித்தெடுத்துக்கொண்டான் மூத்தவன். காட்டின் எல்லையிலிருந்து அதைத் தூவிக்கொண்டு நடக்கலானான்.

“இதென்ன காரியம்?''

“இந்தப் பிள்ளைக்குரியவனுக்கு வழி தெரிய வேண்டாமா அம்மா?'' எனத் தன் தோளில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காட்டிக் கேட்டான். பிறகு மவுனமாக நடந்தார்கள். வனத்தில் திரிந்துகொண்டிருந்த இடையர்களின் முகங்களில் அவர்களைப் பார்த்ததும் நடுக்கம்.

“கொளந்தைகளக் கூட்டிக்கிட்டு இங்க எங்க அம்மினி போறே? ராட்டினக்காரன் எதாவது சொன்னானோ?''

அவள் யாருக்கும் பதிலளிக்கவில்லை. வனத்தில் மிகச் சுதந்திரமாகத் தென்பட்ட பறவைகளைப் பார்த்ததும் குழந்தைகளுக்குத் தாள முடியாத சந்தோஷம். இரவும் பகலும் இடைவிடாத நடை. மூத்தவன் எல்லோருக்கும் நாவல் பழங்கள் பறித்துக்கொடுத்தான். “உனக்குச் சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?'' என மர உச்சியிலிருந்து தாயைப் பார்த்துக் கேட்டான்.

“சுட்ட பழமே வேணும்!.'' எனப் பிள்ளைகள் சத்தமிட்டார்கள். பொலபொலவெனப் பழங்கள் உதிர்ந்தன. பேராசையுடன் பொறுக்கி மடியில் கட்டிக்கொண்டனர் பிள்ளைகள். அவள் சாப்பிட மறுத்தாள்.

கடைசியில் அந்தப் பாழுங்கிணறு தென்பட்டது. தண்ணீர் ததும்பி நின்றது.

“முதலில் நான் குதிக்கட்டுமா அம்மா?'' எனக் குழந்தையுடன் சிதைந்த மதிலின் மீது ஏறி நின்றான் மூத்தவன்.

“வேண்டாம், எல்லோரும் ஒண்ணாவே குதிப்போம்!''

ஒவ்வொருவராக மதிலின் மீது ஏறி நின்றார்கள். அவள் கடைசியானவளாய் ஏறி நின்றாள். தெளிந்து கிடந்த நீர்ப்பரப்பில் அவர் களுடைய உருவங்கள் தென்பட்டன. ஒரு கணம் கண்களை மூடினாள். அந்தத் தருணத்தில் ராட்டினக்காரனின் குரல் கேட்டது.

“அய்யோ என்ன காரியம் செய்யப் பாக்கறே ராட்டினக்காரீ? குடி வெறியில தெரியாம ஒரு வார்த்த சொன்னதுக்கு இந்தக் கோபமா? அதுக்காகக் கொளந்தைகள இழுத்துக்கிட்டு நல்லதங்காளாட்டம் இங்க வந்து நிக்கலாமா?''

தாள முடியாதவளாய் அவனை நோக்கித் திரும்பினாள் நல்லதங்காள். பிறகெப்போதும் ராட்டினக்காரனால் அந்தப் பார்வையை மறக்க முடிந்ததில்லை.

Pin It