வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள எவ்வ ளவோ உண்டு; வரலாற்றைக் கற்காதவன் வரலாறு படைக்க முடியாது என்பார் மாமேதை அம்பேத்கர். வரலாறு மட்டு மல்ல இலக்கியங்களும் நமக்கு எவ்வளவோ கற்றுத் தருகின்றன.

paari_2சங்க காலம் என்று குறிப்பிடப்படுகிற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு, கடந்துபோன தமிழர்களின் பன்மைத்துவ வாழ்க்கையைப் பறை சாற்றி நிற்கிறது. சங்க இலக்கியங்களும் அப்படித்தான். இலக்கியங்களை அப்ப டியே வரலாற்றுத் தரவாகக் கொள்ளும் முறை ஆய்வுத் துறையில் மதிப்பிழந்து விட்டது. அதாவது   “ இலக்கியம், வாழ்க் கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி'' என்ற குரலை இப்போது ஆய்வுத் துறையில் கேட்கமுடிவது இல்லை. இலக்கியம் என்பது வரலாறல்ல; முற்றுமுழுதான உண்மை அல்ல. அதன் அடிப்படை மட்டுமே உண்மையானது.

சங்க இலக்கியங்களில் புறப்பாடல்கள் புனைவுகள் குறைந்த பாடல்களாக, பெரும்பாலும் வரலாற்றுக் குறிப்புகளாக அமைகின்றன. அவைதான் பண்டைய வரலாற்றைக் கட்டியெழுப்ப முயலும் ஆய்வாளர்களுக்கு அரிய கொடையாக விளங்குகின்றன. வரலாற்றாய்வாளர்கள் பண்டைய தமிழ்ச்சமூகம் அரசமைப்பு வாழ்நிலை குறித்த ஆய்வுகளுக்கு புற நானூறு முதலான புறப்பாடல்களையே மிகுதியும் கையாளுவதை நாம் மிக எளிதாகவே அறிந்துகொள்ள இயலும். புறப்பாடல்களில் புனைவுகள் இருப்ப தில்லையா? இருக்கின்றன; ஆனால் குறைவு. புனைவுகளைக் கண்டறிந்து அவற்றைத் துணைக்கொண்டு உண்மை வரலாற்றை அறிவதுதான் ஆய்வாளன் முன்னுள்ள சவால்.

வரலாற்றை, இலக்கியங்களை மறு வாசிப்புச் செய்வது என்பது அண்மைக் காலத்தில் மிகுதியாக நடைபெற்று வருவதைக் காணமுடிகிறது. இந்த மறு வாசிப்புகளும்கூட, காலத்தின் தேவையை ஒட்டியே மேற்கிளம்பும் என்பது வரலாற்று விதி. மகாபாரதத்தின் திரௌபதி வஸ்திராபரணம் பகுதி, பாஞ்சாலி சபதமாகப் பாரதியிடமிருந்து வடிவெடுக்க, இந்திய சுதந்திரப் போர் ஒரு காரணமாக அமைந்தது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தேசிய இன, மொழி அடை யாளங்களை அழிக்க உத்வேகத்துடன் செயல்படும் உலகமயமாக்கலும் அதை எதிர்த்த தேசிய இனங்களின் தன்னு ரிமைப் போராட்டங்களும் மறுவாசிப்புகளைப் புதிய கோணங்களில் வழி நடத்திச் செல்லுகின்றன.

தமிழைப் பொறுத்தவரை, புராண இதி காசங்களை மறுவாசிப்புச் செய்தல் என்ற நிலையிலிருந்து செவ்வியல் இலக்கியங் களை மறுவாசிப்புச் செய்தல் என்ற புதிய நிலைகளில் வாசிப்பு இயங்குகிறது. அரங்கத்துறையில் அண்மைக்கால வாசிப்புகள் குறிப்பிடத்தக்கன. எஸ்.எம்.ஏ.ராமின்   “ மணிமேகலையின் கண்ணீர்'',   “ ஆபுத்திரனின் கதை'', மு.ராமசாமியின்   “ ஆபுத்திரன்'', இன் குலாபின்   “ மணிமேகலை'',   “ குறிஞ்சிப் பாட்டு'' ஆகியன குறிப்பிடத்தக்கன வாகும். அந்த வரிசையில் பிரளயனின்   “ பாரி படுகளம்'' புதிய வரவு. ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட கதை, வெளிப் படுத்தப்பட்ட வரலாறு ஆகியவற்றை மறுவாசிப்புச் செய்வதற்கு அரசியல் தெளிவும் புரிதலும் இருந்தாலே போதும். ஆனால் இன்னும் முழுமையாக வெளிப் படுத்தப்படாத களத்தில் துண்டு துக்காணிகளாகக் கிடக்கும் பாடல்களின் வழியாக வரலாற்றைத் தொகுத்துக் கொண்டு வாதிடுவது மிகக் கடினமான பணியாகும். வரலாற்றில் முன்னோக்கிப் போகப் போக, இந்தச் சிரமங்கள் கூடுதலாக ஆகும் என்பது வெளிப்படை.

2381 சங்கப் பாடல்களில் பாரி மன் னனைப் பற்றியவை, பாரியைப் பெயரள வில் குறிப்பிடுபவையுடன் சேர்த்து 24 பாடல்கள் மட்டுமேயாகும். பாரி, வேளிர் குலத்தைச் சேர்ந்த மன்னன். பறம்பு மலையையும் அதைச் சுற்றியிருந்த முந்நூறு ஊர்களையும் ஆட்சி புரிந்தவன். பறம்புமலை என்பது இன்றைய பிரான் மலையே என்கிறார்கள் வரலாற்றாய் வாளர்கள். (இன்றைய பிரான்மலையின் வறண்ட மலைமுகட்டை நினைவு படுத்தி,   “ இலக்கியத்தில் குறிப்பிடப் படுவதுபோல அந்த மலை அவ்வளவு வளம் மிக்கதாகவா இருந்திருக்கும்?'' என்று ஐயம் எழுப்பினார் ஒரு தமிழ்ப்பேராசிரியர். அந்த அளவிற்கு நாம் இயற்கை வளங்களை நாசப் படுத்தியிருக்கிறோம் என்பது வேறு விடயம்.) முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் என்று கடையெழு வள்ளல் களில் பாரியையும் குறிப்பிடுகிறது சிறுபாணாற்றுப்படை. புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர்களாலேயே புகழ்ப்பெற்ற பெரும்புலவர் கபிலர், வேள் பாரியின் அவைக்களப் புலவர்; அவனது நண்பர்.

பறம்பு மலையின் வளமும் வேள்பாரி யின் நல்லிசைப் புகழும் மூவேந்தர் களையும் உறுத்துகிறது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக, ஒரே ஒரு முறை மூவேந்தர்களும் ஒருங்கே கூடியது வேள்பாரியை அழிக்கவேயாம். அதிலும் மூவேந்தர்களும் பாரியுடனான முதற் போரில் தோற்கடிக்கப்பட்டு விரட்டப் பட்டுள்ளனர். அதற்குப்பிறகு பறம்பு நாட்டிலிருந்த முந்நூறு ஊர்களையும் பரிசிலர்க்கு வழங்கிவிட்டான் பாரி. பறம்பு மலையை வெற்றி கொள்ள மூவேந்தர்களும் முயன்றபோது,   “ வாளிற் தாரலன்; நீர் ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே'' என்று கபிலர் பாடினார். போரின் மூலமாக நீங்கள் பெறமுடியாத பறம்புமலையை, உம் நாட்டிலுள்ள கிணைமகளிர் மிக எளிதாகப் பெறுவர் என்கிறார் கபிலர். கபிலரின் பாரி குறித்த பாடல்களில் மிகை இருக்கலாம்; ஆனால் அப்பாடல்களின் மூலம் பாரி மிகச்சிறந்த வீரன் என்ற செய்தி பெறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான குறுநில மன்னர்கள் வாட்படை, வேட்படை மட்டுமே கொண்டிருக்க, அத்துடன் தேர்ப்படையும் உடையவனாக வேள்பாரி மட்டுமே இருந்தான்.

பறம்புமலை வெகுகாலம் மூவேந்தர் களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. பறம்புமலையை, பாரியை வெல்லுவது என்பது அவர்களுக்கு எளிதாக இருக்க வில்லை. பரிசிலர்களுடன் இணைந்து சென்று பாரியை வஞ்சகமாகக் கொன்றனர் மூவேந்தர் என்று புறநானூற்று உரையாசிரியர் குறிப்பிடுகிறார். அதை அடிப்படையாக வைத்து பாரிகாதை எழுதிய ரா.ராகவையங்காரும் பாரி, சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்று குறிப்பிடுகிறார். பாரி, சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்பதற்கான அகச் சான்றுகள் ஏதும் கிட்டவில்லை என்பதை அடிப்படையாகக்கொண்டு, இக்கருத்தை மறுத்திருக்கிறார் வ.சுப.மாணிக்கனார் (சங்கநெறி: 1987). வஞ்சகத்தால் அல்லவென்றாலும் வெகுநெடுங்காலம் போரில் தாக்குப்பிடிக்க முடியாமல்கூட, வேள்பாரி இறந்திருக்கலாம்.

குறுநில மன்னர்கள், நிலத்தலைவர்கள், குடித்தலைவர்கள் மக்களோடு நெருக்க மாக இருந்தவர்கள். அவர்கள், அரசர்கள் போலச் சமூகத்தின் சாதாரண மக்களிட மிருந்து அந்நியமாகாத வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். புரவலர்களாகவும் பரிசில் வாழ்க்கையை ஆதரிக்கும் விரிந்த மனம் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்தனர். இனக்குழுக்களின் பண்பாட்டு அடையாளங்களைக் கட்டிக்காக்கும் தன்மையுடையவர்களாக விளங்கிய அவர்களைப் பேரரசுகள் விழுங்கி ஏப்ப மிட்டது என்பது தமிழக வரலாறு. அவ்வாறு அழிக்கப்பட்ட மன்னர்களில், வேள்பாரியின் அழிவு பேரவலம் மிக்கதாகும்.

அந்த வேள்பாரியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பிரளயன் எழுதி, இயக்கி, அண்மையில் மேடையேறி யுள்ளது   “ பாரிபடுகளம்''. பிரளயன், சென்னைக் கலைக்குழுவின் நிறுவனர். கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வீதிநாடக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்பவர். தனித்த அடையாளங்களோடு தமிழ் அரங்கத்துறையில் இயங்குபவர். பண்பாட்டு ஊழியர். சொல்லப் போனால், தனது வீதி நாடகங்களின் மூலம் தமிழ் நாட்டில் மிகுதியான பார்வையாளர் களைச் சந்தித்த பெருமைக்குரியவர். அண்மைக்காலங்களில் அவர் கவனம் செலுத்தி வரும் மறுவாசிப்பு முயற்சி களில், சில ஆண்டுகளுக்கு முன் மேடையேறிய   “ உபகதை'', புராண, இதிகாச, வரலாற்று மறுவாசிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அதைத் தொடர்ந்து சங்ககால வரலாற்றை, இலக்கியத்தைச் சமகாலத் தேவைகளின் அடிப்படையில் பாரி படு களம் மூலம் மறுவாசிப்புச் செய்துள்ளார்.

paari_2நச்செள்ளை என்னும் பாடினியின் இசையில் மயங்கி சோழப்பெருவேந்தன் பரிசளிக்கும் காட்சியுடன் தொடங்குகிறது நாடகம். பாடினியரும் பாணர்களும் இசைவாணர்களும் வேள்பாரியின் புகழையே பாடுகிறார்கள். சோழன் முகம் பொறாமையினால் பொசுங்கு கிறது. பறம்பு நாட்டிற்கு உளவறியப் போன அந்துவன் சாத்தன் என்பவனைச் சந்திக்கப் போகிறான் மற்றொரு உளவாளி. அந்துவன் சாத்தன் உளவுக் காரியங்களை முடித்துக்கொண்டு சொந்த நாடாகிய சோழநாட்டிற்குத் திரும்பா மைக்கான காரணத்தை அறிய முற்படு கிறான். அந்துவன் சாத்தன் பறம்பு மலையின் வேளிர்குலப் பெண் ஆதிரை என்பவளின் மீது காதல் கொண்டு அங்கேயே தங்கிவிட எண்ணுகிறான். தனது சக உளவாளியுடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டுவிடுகிறாள் வேளிர்குலப் பெண். முன்பு இன்ப மளித்த தனது காதலன் அந்துவன் சாத்தனின் மெய்தீண்டல் இப்போது தீப்பட்டாற்போல் எரிகிறது அவளுக்கு. அவனை வெறுத்தொதுக்கிப்போகிறாள்.

காதலியோடு உறவாடியமையைக் கண்டு கொண்ட சக உளவாளி தனது தோழனின் உதவியோடு அந்துவன் சாத்தனைத் தீர்த்துக் கட்டுகிறான்.

பாடினியின் இசையில் மயங்கித் தன் மகள்களான அங்கவை, சங்கவையுடன் மகிழ்ந்திருக்கும் வேள்பாரியைச் சந்திக்க வருகிறார்கள் யவனநாட்டு வணிகர்கள். பறம்புமலையின் சந்தனங்களை வெட்டி, யவனநாட்டிற்குக் கொண்டுபோக வியாபாரம் பேச வருகிறார்கள் அவர்கள். சந்தன மரங்களுக்கு ஈடாகப் பொன்னும் மணியும் கிடைக்கும் என்றும் யவன நாட்டு இளம்பெண்கள் பறம்புமலை யின் அந்தப்புரங்களை அலங்கரிப்பர் என்றும் ஆசைகாட்டுகிறார்கள். பாரி அவர்களைக் கடிந்து வெளியேற்று கிறான். பறம்பு மலைப் பயிர்களை நாசம்செய்யும் யானைகளை விரட்டி யடிக்கப் புறப்படுகிறான் பாரி. தனது நாட்டின் மீது வந்து கவிந்துள்ள மூவேந்தரின் பொறாமை மேகங்களை அறிந்தவனாகத் தமது மூதாதையரின் நடுகல் வழிபாட்டை நடத்தி முடிக்கிறான். மூவேந்தர்களும் ஒருங்கே கூடி, போர்தொடுக்கிறார்கள். கபிலர் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்திப் போரைக் கைவிடுமாறு மூவேந்தர்களை வேண்டுகிறார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

பாரி மகளிர் அங்கவையும் சங்கவையும் தப்பிச் செல்லுகின்றனர். பாரி இறுதியில் மூவேந்தர்களால் கொல்லப்படுவதுடன் முடிகிறது நாடகம்.

நாடகக் கதைக்களம் சங்ககாலம் என்றா லும் அது சமகாலத்திற்கும் பொருத்தப் பாடுடையதாக மாற்றியதில் நாடகாசிரி யரின் வெற்றி அடங்கியிருக்கிறது. சேர சோழ பாண்டிய மன்னர்களில் வேள்பாரியின் புகழைக் கேட்டு மனம்புழுங்கு பவனாகச் சோழ மன்னனைக் காட்சிப் படுத்தியிருக்கிறார் பிரளயன். நாகரிக மடைந்த சமூகத்தில்தான் அரசு முதலில் தோன்றியிருக்கக் கூடும். நாகரிகமடை தல் என்பது தமிழின் நானிலங்களில் மருதநிலத்திலேயே முதலில் நடைபெறுகிறது என்ற சமூக மாறுதல் வரலாற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், சோழப் பகுதியிலேதான் வலுவான முதல் பேரரசுக்கான அடித்தளம் அமைந்திருக் கும். எனவே, இந்தப் போருக்கு முன் கையெடுப்பவனாகச் சோழமன்னனைப் படைத்திருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பாண்டிய, சேர மன்னர் களையும் துணைக்கழைத்துக் கொண்டு போர் தொடுப்பவனாகச் சோழ மன்னன் சித்திரிக்கப்படுகிறான். போரின் உச்ச கட்டத்தில் இன்னும் பாரி தோற்கடிக்கப் படாத நிலையில், போருக்குப் பிந்தைய பங்கீடு பற்றிப் பேச்சு வருகிறது. பறம்பு நாடு பாண்டிய நாட்டோடு இணைக்கப் படட்டும் என்கிறான் பாண்டியன். பறம்புநாட்டு வளங்களும் பெண்களும் சேர நாட்டை அலங்கரிக்கட்டும் என் கிறான் சேரன்.   “ பிறகு முதியவர்களை யும் நோயாளிகளையும் வைத்துக் கொண்டு, சோழநாட்டில் முதியோர் இல்லமா நடத்த?'' என்கிறான் சோழன். போரின் இலக்கு நாடுகளை சந்தைகளை வளத்தைப் பங்கிட்டுக் கொள்வதுதான் என்பதை அப்பட்ட மாகத்தோலுரிக்கிறது இந்தப் பகுதி. நடந்து முடிந்த உலகப்போர்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான பங்கீட்டுப் பிரச்சினையே என்பதை நினைவில் எழுப்பிக் காட்டுகிறது. அதிலும் தோற்கடிக்கப்படும் நாடுகளைப் பங்கிடுவதில் பேரரசர்கள் காட்டும் ஆர்வத்தையும், பந்திக்கு முந்தும் பேராசையையும் அழகுற எடுத்துக்காட்டுகிறார் பிரளயன். மூவேந்தர் பெருங்குடிப் பெருமை பேசுமிடங் களும் ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்திப் பேசுமிடங்களிலும் கொஞ்சங் கொஞ்ச மாய்த் தமிழர்களிடம் வந்து புகுந்து விட்ட வருணப்பாகுபாட்டை அடை யாளங்காட்டுகிறார் பிரளயன்.

போர் மற்றும் போர் அவலம் குறித்த பதிவுகள் நாடகத்தில் சிறப்பாக உள்ளன. மூவேந்தரின் படை, பறம்புமலையைக் கைப்பற்றுகிற தருணத்தில் கண்ணில் படுகிற அத்தனை பேரையும் கொன்று குவிக்கிறது. மடியில் குழந்தையை அணைத்துப்பிடித்தபடி, தப்பித்து ஓடும் ஒரு பெண்ணை மடக்குகிறார்கள், இரு சிப்பாய்கள். குழந்தையைக் கொல்லப் பணிக்கிறான் ஒரு சிப்பாய். காலை யிலிருந்து தொடர்ந்து கொலைகள் செய்வதால் இரத்தக் கவுச்சி வாடை பொறுக்கமாட்டாது வாந்தி எடுக்கிறான் மற்றொரு சிப்பாய். குழந்தையைக் கொல்லுவது போர் அறத்தை மீறுவ தாகும் என்று தனது செயலுக்கு அறத்தைத் துணைக்கழைத்து வாதிக்கி றான். அப்போது அவர்களுக்கிடையில் நடைபெறும் விவாதம், போர் மற்றும் போரின் அவலத்தை இரத்தமும் சதையுமாய் அடையாளப்படுத்துகிறது. குழந்தையைக் கொல்ல மறுக்கும் சிப்பாய் மற்றொரு சிப்பாயால் கொல்லப்படுகிறான். போர்க்களத்தில் தர்மம் நியாயம் நேயம் பேசுவது எவ் வளவு தவறானது என்பதை விரிவாகப் பேசுகிறான் மற்றொரு சிப்பாய். அந்த இடத்தில் தவிர்க்க இயலாமல் அர்ச்சு னனின் தயக்கமும் போரை, கொலை களை நியாயப்படுத்துகிற பகவத்கீதை சாரமும் நம் நினைவில் அசைகிறது. குழந்தையைக் கொல்லப்போகும்போது தான் தெரிகிறது, மடியில் மறைத்துக் கொண்டு பறம்புமலைப் பெண் பாதுகாத்தது, குழந்தையை அல்ல ஒரு ஆட்டுக்குட்டியை என்பது. "பறம்பு மலையில் உள்ள ஒவ்வொரு உயிருமே எனது குழந்தைதான்'' என்கிறாள் அப்பெண். பறம்புமலைப் பெண்களிடம் கூட வீரம் இருப்பதையும் அந்த மலை மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தையும் நினைவுகூரும்போது,   “ நாம் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காகப் போராடுகிறோம்; அவர்கள் தமது தாய் மண்ணைக் காப்பாற்றுவதற்காகப் போராடுகிறார்கள்'' என்கிறான் சிப்பாய்.

“  தமிழராய் ஒன்று கூட முடியும்'' என்று முற்றுகையிட்ட மூவேந்தர்களிடம் வாதிடுகிறார் பெரும்புலவர் கபிலர். புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று அழைக்கப்பட்டதும் இந்த மண்ணில் பார்ப்பனீயம் சமூகப்பாகுபாட்டிற்கு ஏற்றத்தாழ்விற்குக் காரணமாக இருந்தது என்பதையும் எடுத்துக்காட்டித் தாங்கள் குடிப்பெருமை, ஏற்றத்தாழ்வு பேசுவது சரிதான் என்று வாதிடுகிறார்கள் மூவேந்தர்கள். மார்பில் வேல்பாய்ந்து மரணத்தைத் தழுவும் போது கபிலரைப் பார்த்துப் பேசுகிறான் வேள்பாரி.   “ தன் குடிப் பெருமை பேசாத, மற்ற குடிகளை விடத் தன் குடியே உயர்ந்தது என்று பேசாத தனக்கு ஏன் இந்த வீழ்ச்சி என்று வினாவெழுப்புகிறான். பேதமற்ற தமிழராய் ஒருங்கிணைய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத் துகிறான். நாடகத்தின் கடைசிக் காட்சி அறத்தின் வீழ்ச்சியை அழுத்தமான சோகத்துடன் வெளிப்படுத்துகிறது.

சங்க இலக்கியங்கள் போன்ற தொன்மை இலக்கியங்களைப் பயன்படுத்தி நாடகம் உருவாக்கப்படும்போது சில இடர்ப் பாடுகள் இருப்பதைப் போலவே சில வசதிகளும் இருக்கின்றன. சங்கப் பாடல் களுக்கிடையே இருக்கும் இடை வெளிகள், வரலாற்று இருண்மைகள் புதிய ஆக்கத்திற்குப் பல வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.

piralayanகபிலர் பாரி என்ற சட்டகத்திற்குள் பிரளயன் தனது நாடகத்திறனைக் காட்டி யுள்ளார். சங்க இலக்கியப் பிரதிகளை அவ்வாறு வாசிக்க அவருக்கு உரிமை இருக்கிறது; அதை யாரும் மறுக்க இயலாது. ஆனாலும் அந்த இடை வெளியை நிரப்பும்போது, அவை சமகாலத்திற்குப் பொருத்தமுடையதாக இருக்க வேண்டிய அதேவேளை, இலக் கியம் எழுந்த அல்லது வரலாறு நிகழ்ந்த அந்தக் காலப்பகுதிக்கு நியாயம் செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கபிலர் அந்தணர் என்பதும் சங்கப் புலவர்களில் நக்கீரர் உள்ப்பட நான்கு புலவர்களால் பாடப்பெற்ற பெருமைக் குரியவர் என்பதும் (சங்கப் புலவர் களிலேயே அதிகமான புலவர்களால் புகழப்பெற்ற புலவர் கபிலர்) வரலாறு. ஆரியம் தமிழோடு வந்து கலக்கத் தொடங்கிய காலப்பகுதியில் அந்தணராக அறியப்பட்ட கபிலரின் மீது, பிற்காலப் பார்ப்பனியச் சுமையைச் சுமத்துவதற்கான அடிப்படை இருக்கிறதா என்ற வினாவெழுகிறது. கபிலரின் பார்ப்பனக் குடிப்பிறப்பு அளவுக்கு அதிகமாகக் கருத்தியல் ரீதியாக வற்புறுத்தப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. பிரளயனின் இவ்வாறான வாசிப்பு உரிமையை நாம் மறுக்க வில்லை; அவ்வாறெனில், வேளிர் குடியைச் சேர்ந்த பாரிக்கும் பார்ப்பனக் குடியைச் சேர்ந்த கபிலருக்கும் இடையில் கனிந்து மணம் வீசிய நட்பின் அடிப்படை விவாதிக்கப்படவில்லையே என்று கேட்கத் தோன்றுகிறது.

அதைப்போலவே நாடகத்தில் காட்சிப் படுத்தப்படும் சிறுகுடி X பெருங்குடி முரண் என்பது உண்மையில் அக்காலத்தில் ஏற்றத்தாழ்வு அடிப்படையிலான முரணா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அது பிறப்பின் அடிப் படையிலான வருணப்பாகுபாட்டைப் போல நாடகத்தில் முன்வைக்கப்படுவது சரிதானா என்பது ஆய்விற்குரியது. பிற்காலத்தில் நிலைபெற்ற ஒரு மரபை, அதன் காலத்தை விட்டு முன்தள்ளிக் கொண்டு போவது சரிதானா என்ற ஐயம் எழுகிறது. இவை வரலாற்று அடிப் படையில் நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் விவாதிக்க வேண்டியவை.

நாடகத்தில் சங்கக்கவிதை முதல் சம காலக்கவிதை வரை, பொருத்தமான இடங்களில் எடுத்துக் கையாண்டி ருக்கிறார் பிரளயன். அதிலும் நாடகத்தில் வரும் நடுகல் வழிபாட்டுக் காட்சி, பொருத்தமுடையதாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நடுகல் வழிபாட்டில் வரும் பாடல் இன்றைய ஈழத்தின் மாவீரர் நாளில் பாடப்படும் கவிஞர் முருகையன் கவிதையாகும். வழிமறிக்கும் சிப்பாய்களிடம் வார்த்தைக் கனலை உமிழ்ந்திடும் பறம்பு மலைப் பெண்ணின் வாயிலிருந்து பாரதிதாசன் கவிதை பொருத்தமாய்ப் புறப்பட்டு வருகிறது. நாடகத்தை இரு இடங்களில் பார்ப்ப தற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. திருவண்ணாமலை தமுஎகச சார்பில் நடத்தப்பெற்ற நிகழ்விலும் இராணிப் பேட்டை பெல் தமிழ்மன்றம் சார்பில் நடத்தப்பெற்ற நிகழ்விலும் நாடகத்தைக் கண்டேன்.

நாடக அரங்காற்றுகை (performance) தனித்துக் குறிப்பிடத்தக்கது. நடித்த நடிகர்கள் அனைவருமே பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ் கலைப் பள்ளி மாணவர்கள். மத்தியப் பல்கலைக் கழகம் என்பதால் தெற்காசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் மாணவர்கள் அங்கு படிக்கிறார்கள். எனவே தமிழீழ, சிங்கள நடிகர்களையும் அஸ்ஸாமிய ஆந்திர கர்நாடக மாணவர்களும் இந் நாடகத்தில் பங்குபெற்று நடித்திருந்தனர். அந்நடிகர்களை மிகச் சரியான பாத்திரங்களில் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார் இயக்குநர் பிரளயன். அவர் களின் தமிழ் உச்சரிப்பு வித்தியாசமாகத் தோன்றுகிறது; ஆனாலும் அவர்கள் தமிழ் நாடகத்தில் தமிழ்பேசி நடிப்பதைப் பாராட்ட வேண்டும். சங்க கால களத்தைக் கொண்ட இந்த நாடகத்தில் இந்த நடிகர்களை நடிக்க வைத்த பிரளயனின் துணிச்சலைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

பாரி மன்னனாக நடித்த கோபி தமிழ் அரங்கத்தின் மிக முக்கியமான ஆளுமையாக வளருவார் என்பதற்கான அறி குறிகள் அவரது நடிப்பில் தெரிகின்றன. அங்கவை, சங்கவையாக நடித்த பெண்கள் இருவரில் ஒருவர் சிங்களப் பெண் என்றார்கள். பறம்புமலைப் பெண்ணாக நடித்த ஆரோக்கியமேரி ஸ்டெல்லாவின் நடிப்பும் பார்வையாளர்களின் கரவொலியைப் பெற்ற அவரது வாள் வீச்சும் தனித்துக் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கது. கபிலராக நடித்த நடிகர் இசை பயின்றவர். ஆர்ப்பாட்டமில்லாமல் பாத்திரத்திற்குப் பொருந்த நடித்தார்.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நிகழ்கலைப்பள்ளி புலமுதன்மையர் பேரா சிரியர் இரா.இராஜூவையும் பள்ளியின் துறைத்தலைவர் பேராசிரியர் வ.ஆறுமுகத்தையும் பாராட்டியே ஆக வேண்டும். பல்கலைக்கழக நாடகத் துறை களின் நாடகத்தயாரிப்புகள் பல்கலைக் கழக வளாக அரங்குகளைத் தாண்டி வெளியே வருவதேயில்லை என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் வகை யில் இந்த முயற்சியை அவர்கள் மேற் கொண்டுள்ளனர். அதிலும் பல்கலைக் கழகத்திற்கு வெளியே உள்ள அரங்க ஆளுமையாகிய பிரளயனை அழைத்து, தங்கள் மாணவர்களை வைத்து நாடகத்தை உருவாக்கச் செய்திருக்கும் இவர்களின் இப்புதிய முயற்சி, தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு முன்மாதிரி.

தங்களின் வரிப்பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் முதலான உயர் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு விளங்காத மர்மமாகவே இருந்து வருகிறது. அவ்வாறன்றி, இதைப் போன்ற முயற்சிகள் மக்களை ஈடுபடுத் தும் என்பது உறுதி. வருடத்தில் இதைப் போன்ற ஒரு நாடகத் தயாரிப்பும் அதை யொட்டிய மக்களைச் சந்திக்கும் பயண மும் தொடர வேண்டும் என்பதே தமிழ் நாடக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

பேராசிரியர் சி.இரவீந்திரனின் ஒளி யமைப்பு நாடகத்திற்குப் புது அர்த்தச் செறிவை வழங்குவதாக அமைந்தது. ஒளி அமைப்பின் அழகுக்காகவே சில காட்சிகளில் பார்வையாளர்களின் கரவொலி எழுந்தது.

காட்சி அமைப்புகளிலும் கூட பிரளயனின் தனித்துவம் வெளிப்பட்டது பாராட்டிற்கு உரியது. ஆனாலும் சில நெருடல்கள் இல்லாமல் இல்லை. பொதுவாகவே நாடகம் மிக மெது வாகவே நகர்ந்தது. சில இடங்களில் வசனம், காட்சியமைப்பு தேவைக்கு அதிகமாக நீட்டித்துச் செல்வதாகத் தோன் றியது. அங்கவை சங்கவை பறம்பு மலைப் பெண்களுடன் இளைஞர்கள் முழவுகளுடன் அடவுகளிட்டபடி வரும் நடனக்காட்சியில் நடனம் பொருத்தமில் லாததாக இருந்தது. கடைசிக் காட்சியில் வேல்பாய்ந்து பாரி, கபிலருடன் உரையாடும் காட்சி மிக நீளம். ஆனால் பாரிக்கு அமைக்கப்படும் வேல், வாள்களால் உருவாக்கப்பட்ட பாடை, புதிய பொருளை வழங்கி, காட்சியின் நீளத்தைப் பொருட்படுத்தவிடாமல் செய்துவிட்டது என்பது வேறு விடயம். வேல், வாள்கள் ஏந்திவரும் பறம்புமலை வீரர்கள் அதையே பாடையாக்குகின்றனர். அதன் மீது பாரியின் உடலைச் சுமந்து செல்கிறார்கள். அக்காட்சி, புதிய அர்த்தங்களை வழங்குவதாக அமைந்திருந்தது. நாடகத்தின் வசனங்கள் ஏற்படுத்திய தாக்கங்களை விட, ஒரு வரிகூட வசனமற்ற அந்த மௌனக்காட்சி ஏற்படுத்திய தாக்கம் அழுத்தமானது. வாழ்க்கை குறித்தும் வாழ்வியல் அறம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது அக்காட்சி. ஓர் இயக்குநர் என்ற முறையில் பிரளயன் வெற்றியடைந்த இடம் அது.

பாரி படுகளம், பிரளயனின் நாடகச் செயல்பாட்டில் மிக முக்கியமான மைல்கல் என்றே சொல்ல வேண்டும். தமிழ் நாடகச் செயல்பாட்டிற்கும் அப்படித்தான்.

Pin It